Homeகட்டுரைகள்மௌன ஆயுதம்

மௌன ஆயுதம்

தமிழின் அழகான வார்த்தைகளில் ஒன்று மௌனம். சொல்லும்போதே ஒரு அமைதி வந்துவிடுகிறது. ஆனால் என்னவோ மௌனம் என்பது ஆன்மிகத்துடனும், பெண்களுடனுமே அதிகம் தொடர்புகொள்ளப்படுகிறது. ஆனால் இரண்டுக்கும் இடையில் தான் எத்தனை பெரிய வேறுபாடு!! நிறைவே மௌனம் என்கிறது ஆன்மிகம். மனப் போராட்டத்தையும் எதிர்ப்பையும் காட்டுவதற்கு பயன்படுத்தும் ஆயுதமாய் மௌனத்தைக் கொண்டிருக்கின்றன பல பெண்களின் மனநிலை.

மௌனம், அமைதி, அடக்கம் போன்றவையெல்லாம் பெண்களோடு பிறந்தேயாக வேண்டிய குணங்களாக மாறிப் போய்விட்டன. பிரசவ அறைக்குள் வீரிட்டழும் குழந்தையை ஆண் என்றும், சன்னமாய் அழுவதைப் பெண் என்றும் அறையின் வாசலில் காத்திருப்பவர்கள் தரம் பிரிக்கிறார்கள். அவ்வளவு ஏன் பிரசவ வலி என்பது வலிகளின் உச்சம் இல்லையா!! அப்போதும் கூட பெண் அலறுதல் கூடாது என்பது இங்கு பொது விதி..பிரசவத்தின் போதே குரலைத் தழைத்துக் கொண்ட ஒரு பெண் வேறு எப்போது வாய்த் திறந்திருப்பாள்?

அப்போதும் இப்போதும் கூட பெண் பார்க்கிற சடங்குகளில் பெண்ணுக்குத் தரப்படும் தரச்சான்றிதழ் ஒன்றுண்டு. “பொண்ணு ரொம்ப அமைதி..அதிர்ந்து ஒரு வார்த்தை பேசமாட்டாஎன்பது. அப்படியெனில் என்ன அர்த்தம் என்று யோசித்துப் பார்த்தால், “எங்கப் பொண்ணை நீங்க என்ன செஞ்சாலும் சரி..எதிர்க்க மாட்டாஎன்பது தானே அர்த்தமாகிறது. எப்படியான ஒரு சான்றிதழை வலிந்து ஒரு பெண்ணின் மீது ஏற்றுகிறோம்

நாம் நமது அனுபவத்தில் சடசடவென்று பேசிக்கொண்டிருக்கும் அடைமழை போன்ற பெண்களைக் கண்டிருப்போம். என்ன நடந்தாலும் காட்டுக்குள் பெய்கிற மழை போல அமைதி காக்கும் பெண்ணையும் பார்த்திருப்போம். இருவரும் அவர்கள் மொழியினாலேயே நம்மை ஈர்ப்பவர்களாக இருப்பார்கள். ‘பேசிட்டே இருக்குமே அந்த வாயாடிப் பொண்ணு தானேஎன்றும, ‘அமைதியா இருக்கற இடம் தெரியாம இருக்குமே அந்தப் பொண்ணா என்றும் தரம் பிரிப்பதற்கு வசதியாய் இப்படியான பெண்களைக் கடந்து வந்திருப்போம்

பெண்கள் பேசப் பிறந்தவர்கள். உதாரணத்துக்கு சும்மாவேனும் விசேஷங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆல்பத்தினை எடுத்துப் பாருங்களேன். ஆண்கள் பெண்கள் அமர்ந்திருக்கும் காட்சியை எப்படியும் எடுத்திருப்பார்கள். அதில் ஆண்கள் இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள். ஒரே மாதிரியான முகபாவங்கள், உடல்மொழி என்று அச்சு வார்த்தாற்போல் சுவாரஸ்யமற்று இருக்கும். அப்படியே திருப்பிப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள், எத்தனை விதமான முகபாவங்கள், நளினங்கள், கம்பீரங்கள், புன்முறுவல்கள், பக்கத்து இருக்கையினுடனான பேச்சுகள்இது தான் பெண்களின் இயல்பு.

சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சீராக இருக்கிற தண்டவாளம் ஒன்றின் புகைப்படம்..அதில் இது ஆண்களின் மனநிலை என்றும், குறுக்குவெட்டாகவும், வளைந்து நெளிந்தும் சிக்கலாக இருக்ககூடிய தண்டவாளப் புகைப்படத்தில் பெண்களின் மனநிலை என்றும் சொல்லப்பட்டிருந்தது.. மேம்போக்காக பார்க்கையில் இது பெண்களைக் கிண்டல் செய்கிற ஒரு புகைப்படமாகத் தோன்றும். ஆனால் உண்மை இது தான். ஒரே நேரத்தில் பல விஷயங்களை எண்ணிக் கொண்டிருக்கும் இயல்பு பெண்களுடையது. அந்த மனது ஓயாமல் இரைந்தபடி தான் இருக்கும். அதற்கு வடிகால் தான் பெண்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்துவது.

எனது பதின்பருவத்தில் என் வீட்டு அருகில் நல்லமங்கை என்று ஒரு பாட்டி குடியிருந்தார். வாய் ஓயாமல் பேசக்கூடியவர். பக்தி சொற்பொழிவுகள் எங்கு நடந்தாலும் முதல் ஆளாய் போய் அமர்ந்து விடுவார். ஒருநாள் தொலைகாட்சியில் மகாபாரதம் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று அவருக்கு ஆவேசம் வந்துவிட்டது. ‘எல்லாம் இந்த பாஞ்சாலியால் தான்….வாய மூடிட்டு இல்லாம பேசப்போய் தான இத்தனைக் கஷ்டமும்என்று மகாபாரதத்தின் நடுமுடிச்சினைத் தொட்டார். பிறகு அவரே சமாதானமும் பெற்று, “அவ பாவம் என்ன பண்ணுவா..?பெண்ணாப் பிறந்து என்ன பேச முடியும்சாபம் தான் இட முடியும்..பெண் பாவம் பொல்லாததுஎன்று முடித்தும் வைத்தார்.

இங்கு மட்டுமல்ல உலகம் உழுவதுமே புராணங்களும், இதிகாசங்களும் பெண்களின் சாபத்தினாலும், கோபத்தினாலும் விளைந்தவையாகேவே இருக்கின்றன. பெண் தன் மௌனம் கலைக்கும்போதெல்லாம் சமூகத்தினால் பதில் சொல்ல முடியாமல் சுருண்டிருக்கிறது. அவையே இதிகாசமாகவும் மாறியிருக்கின்றன. சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியை புலராத ஒரு காலைப்பொழுதின் இருளில் யார் கண்ணிலும் பாடாமல் ஊர்விட்டு அகன்று போகிறான். செல்கிற வழியில் கவுந்தியடிகளை சந்திக்கிறார்கள். பூம்புகாரில் இருந்து மாமதுரை நோக்கி வருகிறார்கள். வழியில் தெரியும் காட்சிகளும், உணவுகளும், ஊர்களும், நீர்நிலைகளும், கோயில்களும்,  மனிதர்களும் என சிலப்பதிகாரம் விவரிக்கிறது. எங்குமே கண்ணகியின் மனநிலை அவள் மொழியில் இல்லை. இது கண்ணகியின் மௌனப் போராட்டம் என்றும் கொள்ளலாம். ‘என்னுடன் வாஎன்று கோவலன் அழைத்ததும் மறுபேச்சு சொல்லாது அவனுடன் கைகோர்த்திருந்தவள் கண்ணகி. தன்னுடைய ஒரே பற்றுக்கோடாக கோவலனையே நினைத்திருந்தாள். அவன் பார்வையில் கண்ணகி உலகைக் கண்டிருக்கலாம். ஆனால் கோவலன் இறந்தபிறகு அவளுடைய மௌனம் உடைகிறது. அகத்தின் கோபமெல்லாம் வெளிவருகிறது. இத்தனை தூரம் நடந்து வந்த நம்பிக்கை சிதைகிறது.   நடு சபையில் நின்று கொண்டு பாண்டியனிடம் கேட்கத் தொடங்குகிறாள். அவள் வார்த்தைகளில் நெருப்பு மழை பொழிகிறது. இந்தக் கண்ணகியா அத்தனை சாதுவாக கணவனோடு புறப்பாடு வந்தவள் என்று எண்ணம் தோன்றும்படியான பேச்சுகள் அவை.

மௌனம் கலையும்போது அதுநாள் வரை அடித்தேக்கத்தில் இருந்த புனலையும், நெருப்பையும் சேர்த்துக் கொண்டு புறப்படும். உண்மையில் மௌனம் ஆபத்தானது. அடக்கி வைக்கப்பட்டிருக்கும் மௌனம் மற்றவர்களிடம் கேள்விக் கேட்டுக் கொண்டே இருப்பதற்கு சமமானது.

சில வருடங்களுக்கு முன்பு எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி இறந்து போனார். அவரின் குணம் என்பது எப்போதும் வீட்டு வேலைகளை செய்து கொண்டே இருப்பது. அதிகம் யாரிடமும பேசிக்கொள்ள மாட்டார். விசேஷ நிகழ்வுக்கோ, கோயில்களுக்கோ வந்தாலும் கூட யாரிடமும் அதிகமும் எதையும் பகிராத மனுஷி அவர். நன்றாகப் பாடக்கூடியவர். கோயில்களில் பாடுவதற்கு மட்டுமே குரல் திறக்கும். அவர் மீது எல்லோருக்கும் மரியாதை இருந்தது. அவர் வீட்டில் இருந்து ஏதேனும் தின்பண்டம் வந்திருந்தால் அந்தப் பாத்திரத்தை உடனே கொடுத்து விட வேண்டும் என்பது ஒரு விதியாக இருந்தது. அவர் மனதில் நற்பெயர் தங்களுக்கு ஏறபட வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. அந்தப் பெண்மணி அபூர்வமாய் யாரையாவது பாராட்டினலோ, புன்முறுவல் செய்தாலோ அதை பெரும் பரிசாக நினைத்துக் கொண்டனர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதிலும் இந்த எண்ணம் இருந்ததை இப்போது யோசித்தால் புரிந்து கொள்ளமுடிகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்ததுண்டு. நாம்  மௌனங்களை புதிராகப் பார்க்கிறோம். மௌனம் கொண்ட மனதின் ரகசியங்களை அறிய நினைக்கிறோம். அந்த மனதில் நம்முடைய இடம் என்னவாக இருக்கும் என யோசிக்கிறோம். அந்தப் பெண்மணி இறந்தப் பிறகு அவரவர் இப்படி சொல்லிக் கொண்டனர் ,” நல்ல மனுஷி..கடைசி வரை மனசுல உள்ளதை வெளிக்காட்டமா அமைதியா போயிட்டா..’ இந்த வார்த்தைகள என்னை அதிகம் சிந்திக்க வைத்திருக்கின்றன. ஏன் அந்தப் பெண்மணி எதையும வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அது அவரது இயல்பு என்று எடுத்துக் கொண்டாலும் கூட, மனிதனின் தன்மைக்கும் ஒரு அளவுகோல் உண்டு இல்லையா? ஒரு மனுஷியால் கோபத்தையும், துக்கத்தையும், மகிழ்ச்சியையும் எப்படி வெளிகாட்டிக் கொள்ள முடியாமல் இருந்திருக்க முடியும்? இந்த மௌனம் என்னும் கவசம் எதற்காக அவர் வலிந்து அணிந்து கொண்டார்? இந்தக் கேள்விகள் என்னைத் துரத்திக் கொண்டிருந்தன. ஒருகட்டத்தில் அவர் தன் மரணத்தின் மூலமாக பதில் சொல்லியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொண்டேன்.

அவரது கணவர் வாயைத் திறந்தால் மூடவே தெரியாத ஒரு சவடால் பேர்வழி. தன்னால் இந்த உலகத்தை வளைக்க முடியும் என்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர். இப்படியான் ஒரு கணவனிடம் பேசிப் பயனில்லை என்றோ, தன அமைதியின் மூலமாக தன் கணவனுக்கு சிறிதேனும் பெருமை பெற்றுத் தரலாம் என்றும் தொடக்கத்தில் நினைத்திருக்ககூடும். காலப்போக்கில் அவர் அமைதியையும், மௌனத்தையும் ஆயுதமாக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் ஆயுதம் அவர் மரணித்தப் பிறகே தன வேலையைக் காட்டியது. அவருடைய கணவர் தன மனைவி இறந்தபிறகு பேசுவதை நிறுத்திக் கொண்டார். வீட்டில் தங்கப் பிடிக்காமல் ஊர் ஊராகச் சுற்ற்னார். தனியாகவே பயணம் போனார். ஆயுதம் அவரைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அந்த ஆயுதத்தையே அவர் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

சமீபத்தில் எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத காசுநாவலை வாசித்தேன். இந்த நாவலுக்கு இமையம் அவர்களுக்கு சாகித்ய அக்காடமி விருது கிடைத்திருந்தது. இது மௌனத்தின் வலியைப் பேசுகிற நாவல் என்றே தோன்றியது.

ரேவதி என்கிற ஒரு பெண். மிக செல்லமாக வளர்க்கப்படுகிறாள். அப்பா தலைமைஆசிரியர். அத்தனை வசதி வீட்டில். ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் காத்துக்கொண்டிருக்க, அவள் ஆட்டோ ஓட்டுனர் ஒருவனைக் காதலிக்கிறாள். ரேவதி காதலில் விழும் அளவுக்கு அவனிடம் விசேஷ குணங்கள் இல்லை. அவனை ஏன் காதலித்தாள் என்பது வீட்டார் போல நமக்கும் ஒரு புதிர். ரேவதியின் அம்மாவும் அவளது அண்ணியும் இது குறித்து கேட்கையில் அவள் அமைதியாகிறாள். அவளுடைய மௌனம் வீட்டாரை பயமுறுத்துகிறது. அவள் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது. அழ வைக்கிறது. கெஞ்சச் செய்கிறது. மௌனம் என்பது ரேவதிக்கு வசதியான ஒரு முகமூடியாக மாறுகிறது. ரேவதிக்கு அவளுடைய காதலனுடன் திருமணமும் ஆகிறது. ஒருநாள் ரேவதிக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வருகிறது. அவளது அம்மாவும், அப்பாவும் சொந்தங்களும் மருத்துவமனையே கதியாக கிடக்கின்றனர். அவர்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ரேவதிக்கு நிகழ்ந்தது தற்கொலையா, விபத்தா என்பது தான். கணவனின் அத்தனைக் கொடுமைகளையும் அவள் தாங்கியிருக்கிறாள் என்பது கதையின் ஊடாகத் தெரிகிறது. ஆனால் எதுவுமே ரேவதியின் மொழியில் அல்ல, அவள் வாயில் இருந்து ஏதேனும் வார்த்தைகளைப் பெற்றுவிட முடியுமா என்று வீட்டார் தவிக்கின்றனர். வெந்து போன வாயினையும், குரலையும் கொண்டு அவளால் பேச இயலவில்லை. ஆனால் ரேவதி பேசப் பிரியபப்டுகிறாள். தன் அம்மாவையும், அப்பாவையும், அண்ணனையும் காயப்படுத்தியதை அவள் கதறியபடி சொல்ல நினைக்கிறாள். ஒவ்வொரு நாளும் மூன்று நிமிடங்கள் மட்டும் அனுமதி தருகிற அந்த மருத்துவமனை சூழலில் வெந்து தணியாத தன் உடலோடு அவள் போராடுகிறாள். அவள் உடலே அவளின் மொழியாகக் கருகிக் கிடக்கிறது. “இப்பப் பேசணும்னு நினைக்கறேன்மா..முடியலியேஎன்று கதறுகிறாள். அந்தக் கதறல யாருக்கும் கேட்கவேயில்லை.

இந்த ரேவதி போல சொல்லத் தெரியாமல், சொன்னால் தன் மதிப்பு போய்விடுமோ என்று துக்கத்தை அழுத்திக் கொண்டு வாழும் பெண்கள் ஏராளம். உடல் வலியோடு வீட்டு வேலை செய்ய இயலவில்லை என்று சொல்வது பலவீனம் என்று சகித்தபடி வாழும் பெண்கள் இன்னும் நம்முடன் இருக்கிறார்கள். இத்தனை நூற்றாண்டுகளுக்கான பெண்களின் மௌனம் இப்போது மெல்ல உடையத் தொடங்குகிறது. அவர்கள் பேசத் தொடங்கும்போதே வாய் மூட வைக்கிற சங்கதிகளும் நடக்கின்றன. இதற்கு சரியான உதாரணமாய் சமூக வலைத்தளங்களை சொல்ல இயலும். ஆனாலும் குரல்கள் ஒருமுறை வெளிப்பட்டுவிட்டால், அவை எதிரொலிக்கவே செய்யும்..அல்லது வார்த்தைகள் மற்றவர்களின் மௌனத்தை கிளரும்.. மௌனம் எப்போதும் அணிகலன் அல்ல, அது உடைக்கப்பட வேண்டியதும் தான்..  அது ஒரு ஆயுதம் என்றால் காலத்திற்கு ஏற்ப கூர்த்திட்டப்படவும் வேண்டும்..

படம் : மார்டின் டான்ராஜ்

Subscribe
Notify of
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

வெகு சுவாரஸ்யமான மொழி நடை. நுட்பமான அவதானிப்புகள். மன மொழியை பேசும் மிகச் சிறந்த கட்டுரை.

I could totally relate to ur writing . Wonderfully written Deepa . Regards