மரி என்கிற ஆட்டுக்குட்டிகள்

0
19

நெட்ஃப்ளிக்சில் unbelievable என்கிற தொடர் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், குற்றவாளி யாரென்று தெரியவில்லை. காவல்துறை குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது. மேலோட்டமாய்ப் பார்க்கையில் இது தான் தொடரின் ஒன்லைன். நாம் கேட்டுப் பழகிய கதை தான்.

இந்தக் கதை இரண்டு கோடுகளில் பயணிக்கிறது. கலிபோர்னியாவில் லின்வுட் பகுதியில் பதினாறு வயதே ஆன மரி என்கிற ஒரு பெண் யாருமற்ற அவளுடைய வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத ஒரு நபரால் நடு இரவில் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். இதை அவள் காவல்துறையினரிடம் கொண்டு செல்கிறாள். அவர்கள் உடனடியாக இதனைக் கையிலெடுக்கிறார்கள். எதனைத் தடயமும் கிடைக்காத நிலையில் மரி சொன்னது ஒரு கட்டுக்கதை என்று முடிவெடுக்கிறார்கள். அந்த முடிவுக்கு மரியையும் வரவழைக்கிறார்கள். பிறகு மரியை அவர்கள் மறந்தும் போகிறார்கள்.

இன்னொரு பக்கம் இதே ரீதியில் இரவுகளில் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் இந்தச் சம்பவம் நடக்கிறது. ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்து தனிமையில் இருக்கும் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறான் அடையாளத்தை வெளிப்படுத்தாத ஒருவன். இந்தத் தொடர் சம்பவங்களை இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றனர். பெருமுயற்சிக்குப் பிறகு அவர்கள் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இதனை பரபரப்பாக எடுத்திருக்கலாம், அந்தக் குற்றவாளி எதற்காக இப்படிச் செய்தான் என்று உளவியல் ரீதியாக திரைக்கதை அமைத்திருக்கலாம், காவல்துறையின் புத்திசாலித்தனத்தை எடுத்துச் சொல்லியிருக்கலாம்..ஆனால் இவை எதையும் முன்னிலைப்படுத்தாமல் இந்தக் கதை சொன்ன செய்தி தான் இதனை அவசியமானத் தொடராக மாற்றியிருக்கிறது.

நாம் கடக்க விரும்புகிற அல்லது அதீத உணர்ச்சியை ஏற்றுகிற ஒன்றாய் எப்போதும் இருக்கின்றன பாலியல் வன்புணர்வு குற்றங்கள். ஏனெனில் பாதிக்கப்பட்டவரின் பார்வையில் நாம் இதனைப் பார்க்கிறோம். இந்தத் தொடரும் பாதிக்கப்பட்ட பெண்களின் பார்வையையே முன்வைக்கிறது. அதை விட முக்கியமாய் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களை கையாளும் காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகளின் தீவிரமான மனதையும், உழைப்பையும் சொல்கிறது. திரைக்கதை கனம் கொள்ளத் தொடங்குவது இதனால் தான்.

இந்தத் தொடர் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ‘ப்ரோ பப்ளிகா’ என்கிற பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடர் இது. இந்தக் கட்டுரைக்காக கட்டுரையாளர்கள் கென் ஆர்ம்ஸ்ட்ராங் மற்றும் கிறிஸ்டியன் மில்லர் இருவருக்கும் புலிட்சர் விருது கிடைத்தது. விருதுக்கு இந்தக் கட்டுரைத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக விருது கமிட்டி இப்படி அறிவித்திருந்தது. “பாலியல் குற்ற வழக்கை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்தமைக்காக இந்த விருது” என்றிருந்தது.

அந்த நேர்மையையும், கவனத்தையும் சுசன்னா கிரான்ட் தனது திரைக்கதையிலும், இயக்கத்திலும் கொண்டு வந்திருந்தார். இந்தக் கட்டுரை சொல்ல வருவதை ஒரு உரையாடலாக மாற்ற வேண்டும், அதுவும் தனது மொழியான காட்சி ஊடகத்தின் வழியாக என்று சுசான்னா கிரான்ட் முடிவெடுத்ததன் காரணம் அவர் ஒரு பெண் படைப்பாளி என்பதனாலேயே என்றும் சொல்லமுடியும்.

கட்டுரை மிக விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. மரி சொன்னதெல்லாம் பொய் , காவல்துறையின் நேரத்தை வீணாக்கியிருக்கிறாள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள் காவல்துறையினர். அதற்காக நீதிமன்றத்துக்கு ஆதரவு யாருமின்றி தனியாளாய் மரி வந்து நிற்பதில் தொடங்குகிறது கட்டுரை.

சரி, எப்படித்தான் மரி பொய் சொல்லுகிறாள் என்று போலிஸ் முடிவு செய்தது? அவர்கள் வைத்திருந்த காரணம் மிக எளிது தான். “நாங்கள் மரியை விசாரித்தபொழுது அவளுடைய பதில்களையும், உடல்மொழியையும் கவனித்தோம், அவற்றை வைத்து நாங்கள் அவள் பொய் சொல்லுகிறாள் என்று சந்தேகித்தோம்” என்று பின்னாட்களில் அவர்கள் வாக்குமூலமாக தந்திருந்தனர்.

அதாவது ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டால் அந்தப் பெண் அழுது ஒப்பாரி வைக்க வேண்டும், அல்லது தற்கொலைக்கு முயலவேண்டும், இல்லையெனில் யாரையும் பார்க்கவிரும்பாது முகத்தை மூடி தனிமையில் அழ வேண்டும், இதனை எதிர்பார்த்திருக்கிறார்கள் காவல்துறையினர். அவர்கள் மட்டுமல்ல, மரியின் வளர்ப்பு அம்மாவும் இதனையே போலிஸ் விசாரணையின் போது தெரிவிக்கிறார். “நான் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘லா அண்ட் ஆர்டர்’ தொடரின் பெரிய ரசிகை. அதனை வைத்து சொல்லுகிறேன்.. மரியின் முகத்தைப் பார்த்தீர்களா? எவ்வளவு சாதாரணமாக இருந்தது என்று….இப்படியான அனுபவத்தை எதிர்கொண்ட பெண் இப்படியா இருப்பாள்..அதனால் அவள் பொய் தான் சொல்லுகிறாள்” என்று சொல்லியிருந்தார். பெண்ணின் அம்மாவே சொன்னபிறகு நமக்கென்ன என்று காவல்துறையும் வழக்கினை இழுத்து  மூடிவிட்டது.

அதோடு, ‘நான் சொன்ன அனைத்தும் தவறு தான்’ என்று மரியிடமும் எழுதி வாங்கிக் கொண்டது காவல்துறை. அதன்பின்பு மரிக்கு நிகழ்ந்தது குறித்து மரியைத் தவிர யாரும் கவலை கொள்ளவில்லை. வளர்ப்பு அப்பா அம்மா, நண்பர்கள் எல்லோரும் அவள் பொய் சொன்னால் என்கிற காரணத்தால் அவளை விட்டு விலகுகிறார்கள். புகைப்படக்கலையைக் கற்றுக்கொள்ள விரும்பியிருந்த மரிக்கு பள்ளிக்கால நண்பன் உதவி செய்திருக்கிறான். கற்றும் தந்திருக்கிறான். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவனும் ஒரு முடிவுக்கு வந்து “பொய்சொல்லி மரி’ என்று இணையதளம் ஒன்றை உருவாக்கி தனது தோழியான மரியின் புகைப்படத்தையும் பதிவேற்றி விடுகிறான். மரிக்கு உள்ளதிலேயே பேரதிர்ச்சியாக இது அமைகிறது. ஆனாலும் போராட்டத்தை அவள் பழகிக்கொள்கிறாள். என்றேனும் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று அவள் நம்பவில்லை. ஆனால் ஒருவருக்கேனும் நடந்தது உண்மை என்று புரியவைத்துவிட முடியும என்று உள்ளுக்குள் ஏங்குகிறாள். அந்த ஒருவர் யாரென்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லோர் மீதும் அவநம்பிக்கையை விதைத்த சம்பவமாக அது அவளுக்கு மாறியிருந்தது.

பாலியல் தாக்குதலை மேற்கொண்டவன் ஒவ்வொரு முறையும் பெண்களிடத்தில் பாலியல் தாக்குதல் சமயத்தில் அவர்களைப் புகைப்படம் எடுக்கிறான். போலிசில் சொன்னால் இந்தப் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டுகிறான். அதையும் மீறித்தான் மரி போன்ற சில பெண்கள் முன்வந்து காவல்துறையினரிடம் புகாரளிக்கிறார்கள். ஆனால் அந்தப் புகைப்படங்கள் வெளிவந்தால் என்ன பாதிப்பு இருக்குமோ அதைவிட அதிக வலியை அவளது நண்பர்களும், காவல்துறையும், குடும்பமும் மரிக்குத் தந்திருந்தது.

மரிக்கு நடந்தது அந்த இரண்டு பெண் காவல் அதிகாரிகளுக்கும் தெரிந்திருந்தால் மரிக்கு அது மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்திருக்கும். ஏனெனில் இந்த இரண்டு பெண் காவல் அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பெண் ஒவ்வொருவரையும் அத்தனை அணுசரனையாக விசாரிக்கின்றனர்.

இதில் நம்மை ஆச்சரியப்படுத்துவது அமெரிக்க காவல்துறையினர் இது போன்ற வழக்கினை எந்தளவுக்கு உணர்வுப்பூர்வமாகவும் கவனமாகவும் கையாள்கிறார்கள் என்பது தான். ஒருபக்கம் மரியின் வழக்கினை விசாரித்த அலட்சியம் கொண்ட காவல்துறை அதிகாரிகள் இருந்தாலும், இனியொரு குற்றம் இது போல் நடந்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த காவல்துறையும் எடுத்துக் கொண்ட அக்கறை பிரமிக்க வைப்பது.

காவல்துறைக்கு கிடைத்ததெல்லாம் குற்றவாளி அணிந்திருந்த ஷூவின் மாடல் அடிடாஸ் zx700 mesh என்பதும் மார்ச் 2005க்கு பிறகு தான் அந்த ஷூ மாடல் சந்தை விற்பனைக்கு வந்திருக்கிறது என்கிற தகவல்களும் தான். பிறகு பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் சொன்ன தகவலின் பேரில் அவனது உடல் எடை, உயரம், அவன் கண்களின் நிறம், அவனது நேர்த்தியான  பழக்கங்கள், குரல், பல மொழிகள் தெரிந்தவன், அவனது இடது காலில் உள்ள மச்சம் போன்றவற்றைத் தகவலை பெறுகிறார்கள். பிறகு சம்பவ இடங்களில் சிலவற்றில் குற்றவாளியின் டிஎன்ஏ அபூர்வமாய்க் கிடைக்கிறது.

இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும் என்று ஒட்டுமொத்த காவல்துறையும் யோசிக்கும் நேரத்தில் சிறு சிறு வெளிச்சங்கள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து குற்றவாளியைக் கண்டுகொள்கின்றனர். ஆனால் அது சுலபமானதாக இல்லை. குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடந்து கொண்ட விதத்தினை வைத்து இராணுவத்தைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடும் அதனால் தான் போலிஸ் எதைக் கொண்டெல்லாம் குற்றவாளியை கண்டுபிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறான் என்ற முடிவுக்கு வருகிறார்கள். பின்னாளில் அவனைக் கைது செய்து அவன் வீட்டை சோதனை செய்த பெண் அதிகாரி, “தான் சோதனை செய்த வீடுகளிலேயே மிகுந்த ஒழுங்குடன் இருந்த வீடு அது தான். அது சாதாரண ஒழுங்கு இல்லை. இராணுவ ஒழுங்கு” என்று சொல்லியிருந்தார்.

இந்த புலனாய்வின்போது இரண்டு காவல்துறை பெண் அதிகாரிகளுக்கும் ஏற்படுகிற மனஉளைச்சலை சொன்ன விதம் தான் முக்கியமானது. இரண்டு பேரில் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா. இரவு குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு  இந்த வழக்குக்காக வீட்டில் தகவல்கள் சேகரிக்கிறார். ஒரு குழந்தை ‘அம்மா பயமாயிருக்கிறது’ என்று வந்து நிற்கிறது. குழந்தையைத் தட்டி உறங்க வைத்துக் கொண்டே தனது பணியைத் தொடர்கிறார்.

மிகச் சாதாரணமாக கடந்துவிடுகிற ஒரு காட்சி தான் என்றாலும் அது ஏற்படுத்துகிற பாதிப்பு அசாதரணமானது.

அந்தக் குழந்தை பயமாயிருக்கிறது என்று எப்போதும் சொல்வதற்கும் இப்போது சொல்வதற்குமான வேறுபாட்டினை ஒரு போலிசாகவும், தாயாகவும் அந்த அதிகாரி உணர்கிற தருணம் அது.

மற்றொரு பெண் அதிகாரி மேம்போக்காகப் பார்க்கையில் இந்த வழக்கினை அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றச் செய்கிறது ஆனால் “ஒன்றுக்கும் உதவாத வெறும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் என்ன கிழிக்கப்போகிறோம்..?இதற்குள் அவன் வேறு ஏதாவது பெண்ணுக்கு இதை செய்துவிட்டுப்போவான்… நாம் இங்கு உட்காந்து நாசமாய்ப்போன காப்பியையும், செரிக்காத உணவையும் தின்று பேசிக்கொண்டே இருக்கப்போகிறோம்” என்று தன்னை மீறி கோபத்தில் அலுவலகக் கூட்டத்தில் கத்துகிற போது தான் எவ்வளவு தூரம் உள்ளுக்குள் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிகிறோம்.

ஒருநாள் இரவு முழுவதும்  காருக்குள் அமர்ந்து உளவு பார்க்கும் போதும் குற்றவாளி என்று நினைத்து ஒருவனிடம் பேசுகையில் அவன் அந்த அதிகாரியின் முகத்தில் எச்சிலை உமிழும்போதும் அவர் கடைபிடிக்கிற பொறுமையும், உறுதியும் பார்க்கிற நமக்குத் துயரமானது. அவரைப் பொறுத்தவரை அது ஒரு குற்றத்தைத் தடுக்க எடுத்த நடவடிக்கையின் ஒருபகுதி.

இந்த இரண்டு காவல் அதிகாரிகளும் உரையாடலிலும் ஒட்டுமொத்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனை இடம்பெறுகிறது. “இந்தப் பெண்கள் வாழ்நாள் முழுக்க இந்த பாலியல் தாக்குதலை சுமந்து கொண்டிருப்பார்கள், முதுகெலும்பில் துளைக்கப்பட்ட தோட்டாவினைப் போல” என்கிறார் ஒரு அதிகாரி.

அப்படித்தான் கடைசியில் அமைகிறது பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் சொல்லும் வாக்குமூலங்களும். “ஒரே ஒரு நாள் நடந்த சம்பவம் தானே என்று எங்களுக்கு நடந்ததை நீங்கள் நினைத்து விட இயலாது. அந்த ஒருநாள் சம்பவம் எங்களது நம்பிக்கையைக் குலைத்திருக்கிறது, வெறும் நடைபிணமாக வாழ வைத்திருக்கிறது. வீட்டின் பால்கனியில் வந்த நிற்பதற்கான தைரியத்தைக் கூட நாங்கள்  இழந்து நிற்கிறோம். தூக்கம் வராத இரவுகள் தான் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன” என்று சொல்கிறார்கள். உண்மையிலேயே இந்த வலியை நமக்குக் காட்டுவதற்குத் தான் சுசான்னா இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார்.

மரியும் கூட கட்டுரையாளர்களிடம் இதனையே தெரிவிக்கிறார். “இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் கட்டிலில் தூங்குவதை வெறுத்தேன்..இரவு முழுவதும் லைட்டை எரியவிட்டு நாற்காலியில் அமர்ந்து தூங்குவதற்குப் பழகிக்கொண்டேன். அருகில் உள்ள கடைக்குப் போகும்போது கூட யாரோ என்னைத் துரத்துவது போல் நினைத்து ஓடியே வீட்டுக்கு வந்திருக்கிறேன்” என்றார்.

நாம் உரையாடலை இங்கிருந்து தான் தொடங்க வேண்டும். கடந்த வருடங்களில் மீ டூ பிரச்சனை எழுந்தபோது தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவற்றை பெண்கள் பொதுவெளியில் சொல்லள முன்வந்தபோது அவர்கள் எதிர்கொண்ட கேள்வி “இத்தனை நாட்கள் ஏன் சொல்லாமல் இருந்தீர்கள் ?” என்பது தான். நடந்த ஒன்றை வெளியில் சொல்லாமல் இருந்ததாலேயே நடக்கவே இல்லை என்று அர்த்தமாகி விடுமா? அதனாலேயே குற்றம் சாட்டுபவர் பொய் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா?

நம்முடனேயே வாழ்க்கையில் பயணிக்கிற பெண்களிடமும் பாலியல் ரீதியிலான தாக்குதல்களும், சுரண்டல்களும் நடைபெற்ற சம்பவங்கள் இருக்கும். நாம் அதனை கேட்க மறுக்கிறோம், அச்சப்படுகிறோம். மீறி வெளிவந்தால்.. அதைக் கடக்கவே விரும்புகிறோம் ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை என்று கேட்கிறோம்.. சொல்லாததற்கான் காரணத்தை பாதிக்கப்பட்டவர்களால்  விளக்க முடியாத்து என்பதே யதார்த்தம். மரி நமக்கு சொல்வதும் இதையே தான்.

மரி மட்டுமல்ல, இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவருமே விசாரணையின்போது காவல் அதிகாரிகளிடம் தங்களுக்கு நடந்ததைக் கோர்வையாக சொல்கிறார்கள், நிதானமாக கையாளப் பார்க்கிறார்கள். உடல் பரிசோதனையின் போது திரும்பத்திரும்ப நிர்வாணமாக நிற்கும்போதும் அழுதுவிடக்கூடாது என்கிற கட்டுபாட்டுடன் இருக்கிறார்கள், இது ஒரு விபத்து என்பதை மனதளவில் ஏற்க நினைக்கிறார்கள். இவை அனைத்தையும் செய்த மரி மட்டும் காவல்துறையின் கண்களுக்கு ‘கதைக் கட்டியவளாக’ தெரிகிறாள். இதற்குக்காரணம் இந்த வழக்கை விசாரித்தது ஆண் காவலர்கள் என்பதையும் ஒரு காரணமாக சொல்லியாக வேண்டியிருக்கிறது.

ஏனெனில் மரி தனக்கு நேர்ந்ததை முதற்கட்ட விசாரணையில் சொல்கிறபோது முதலில் வருகிற காவல் அதிகாரி அதனை கடமைக்குக் கேட்கிறான். பிறகு வரும் ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப அவளிடம் நடந்ததைக் கேட்கும்போதும் அவள் எதையாவது முன்பின் முரணாக சொல்கிறாளா என்கிற ரீதியிலேயே விசாரிக்கிறார்கள். அவள் தவறவிடும் இடங்களைக் கெட்டியாகப் பிடித்து கொள்கிறார்கள். ‘நீ மாற்றி மாற்றி சொல்கிறாய்” என்கிறார்கள். ஆறுமணிநேரம் ஒரு பெண் தொடர்ந்து துப்பாக்கிமுனையில் பாலியல் வன்புணர்வினை அனுபவிக்கையில் அவள் மனநிலை சமநிலையற்றதாகவே இருக்கும் என்பதை அறியாத காவல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். “ஒவ்வொரு முறையும் விசாரணை என்கிற பெயரில் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டே இருந்தேன்” என்கிற மரியின் வாக்குமூலம் முக்கியமானது.

“இதுபோன்ற பாலியல் தாக்குதல் வழக்குகளில் உள்ள பிரச்சனையே போலியாக குற்றம் சாட்டப்படுவது அல்ல, மாறாக பெண்கள் முன்வந்து தங்களுக்கு நடந்ததை சொல்லாதிருபப்தே காரணம். ஏனெனில் தங்களை காவல்துறையினர் நம்பப்போவதில்லை என்றே பாதிக்கப்பட்ட பெண்கள் நம்புகின்றனர். அதனால் பெண்களுக்கு எதிரான வன்முறை எத்தனை சதவீதம் நடைபெறுகிறது என்கிறர புள்ளிவிவரம் நமது எஃப்பிஐடம் இல்லை” என்கிறது கட்டுரை.

முன்னேறிய நாடென்று நாம் சொல்லுகிற அமெரிக்காவில் இந்த நிலை என்றால் மற்ற தேசங்களின் பெண்கள் நிலை என்னவாக இருக்கும் என்கிற இயல்பான கேள்வி எழுகிறது.

விருது பெற்ற கட்டுரையில் இந்த தகவல்களும் வரிகளும் எங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது முக்கியமானது. மரி போலியான குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறாள் என்று காவல்துறை அதிகாரிகள் வழக்கினை மூடுமிடத்தில் இந்தத் தகவல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

குற்றவாளியைப் பிடித்த பெண் அதிகாரி பின்னாட்களில் பத்திரிகையில் இபப்டி பேட்டி அளித்திருந்தார், “அவனது முகத்தை பார்க்க வேண்டும் என்று காத்திருந்தேன், அவன் கண்களை சந்திக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே என்னை செலுத்தியது” என்றிருந்தார். குற்றவாளியை பெண் அதிகாரி பிடித்து விலங்கிடும் காட்சியில் எந்த துரிதமும் இன்றி நிதானமாக காட்சியைத் தந்திருந்தார் சுசான்னா.

குற்றவாளியின் வீட்டில் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்கினைக் கைப்பற்றுகிறார்கள். அதில் உள்ள சில படங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அதை நமக்குக் காட்டுவதை தவிர்த்திருக்கிறார்கள். ஆனால் அதன் வலியையும், பாதிப்பையும் இரண்டு அதிகாரிகளின் பார்வை வழியாக நாம் உணருகிறோம். இந்தப் புகைப்படங்கள் தவிர ஹார்ட் டிஸ்க்கின் ‘கேர்ள்ஸ்’ என்ற பெயரில் ஃபோல்டர்கள் உள்ளன என்பதை காவல்துறையின் டெக்னிகல் குழு கண்டுபிடிக்கிறது. எவ்வளவு முயற்சி செய்தும் பாஸ்வோர்ட் இன்றி அதனைத் திறக்க முடியவில்லை என்கிறார்கள். அதனுள் இருக்கும் புகைப்படங்களைக் கொண்டு புகாரளிக்காத மற்றப் பெண்களைப் பற்றிய தகவலையும் சேகரிக்கலாம், வழக்கு சமயத்தில் அதை ஆதராமாக முன்வைக்கலாம் என்று இரண்டு அதிகாரிகளும் விரும்புகின்றனர்.

குற்றவாளிக்கு சார்பாக வழக்காடும் வழக்கறிஞரிடம் குற்றவாளியிடம் அதன் பாஸ்வர்ட் கேட்டுச்சொல்லுங்கள் என்கிறார்கள். குற்றவாளியோ, பாஸ்வேர்ட்டினைத் தருவதாக இல்லை என்றும், அப்படித் தருவதாயிருந்தால் நீதிமன்றத்தில் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றும் வழக்கறிஞரிடம் சொல்லி விடுகிறான். அவன் தன் தவறை ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் வழக்கு இன்னும் சில வருடங்கள் நீடிக்கும். வழக்கு நீர்த்துப் போகும் வாய்ப்பும் உண்டு என்பதால் அவனுக்குத் தண்டனை தான் முக்கியம் என்று முடிவுசெய்து இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு வழக்கினை நடத்த முடிவு செய்கின்றனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரின் சார்பாகவும் வழக்குத் தொடர முடியாத வேதனை இரு அதிகாரிகளிடத்திலும் இருக்கிறது.

குற்றவாளிக்கு அமெரிக்க நீதிமன்றம் 327 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை தந்து உத்தரவிட்டது. இதனைக் கேட்டதும் சந்தோஷமாகிறார்கள் அனைவரும். வழக்கு பற்றி அனைத்தையும் கேள்விப்படும் மரி தனக்கு மிகப் பிடித்தமான கடற்கரையில் நின்றுகொண்டு கடலைப் பார்த்தபடி காவல் வழக்கை புலனாய்வு செய்த பெண் அதிகாரி ஒருவருக்கு போன் செய்கிறாள். ‘இத்தனை நாள் தன்னுடைய அலைக்கழிப்புக்கு இருவரும் நியாயம் செய்திருக்கிறீர்கள்’ என்கிறாள். அது ஒரு உணர்ச்சிகரமான உரையாடல். இப்படி மரி போன் செய்த பேசியதையும் அவள் இனி தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழப்போவதாக சொன்னதையும் கேட்டு இரண்டு பெண் அதிகாரிகளும் நெகிழ்ச்சி கொள்கின்றனர். ஏனெனில் வெளியில் சொல்லாத பல பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வினை அவர்கள் மரியின் குரலில் பார்க்கின்றனர்.

பிடிபட்டதும் குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டது. “முதன் முதலாக வீடு ஏறிக் குதித்து இப்படி செய்கிறபோதே நான் பிடிபட்டுவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் போலிஸ் என்னைத் தேடி வரவில்லை. பிறகு முன்னிலும் துல்லியமாக திட்டம் போட்டேன். தனிமையில் இருக்கும் பெண்களாகத் தேர்ந்தெடுப்பேன், அவர்களை கண்காணிப்பேன், மரங்கள் அடர்ந்த பகுதியில் அவர்கள் அபார்ட்மென்ட் இருக்க வேண்டும், இரவு ஜன்னலை மூடாதவர்களாக இருக்க வேண்டும், வெவ்வேறு மாகணங்களில் இருந்தால் போலிஸ் கண்டுபிடிக்காது. தனித் தனி வழக்காகத் தான் பார்க்கும்…டிஎன்ஏ மூலமாக கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக எந்த பொருளையும் நான் தொட மாட்டேன், பெண்களையும் அரைமணிநேரம் குளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவேன். அப்போது தான் அவர்களிடமிருக்கும் எனது டிஎன்ஏ மறைந்துபோகும்..அவர்களிடம் நான் மோசமாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை..நாகரீகமாகத் தான் பேசுவேன்” என்றிருந்தான்.

இது போன்ற குற்றங்களை திட்டமிட்ட ஒரு சாகசமாக செய்யக்கூடிய, அதன் மூலம் தன ஆண்மையைத் தனக்குத் தானே நிரூபித்துக் கொள்ள முற்படுபவர்களின் பதில் இது. அவன் அளித்த மற்றொரு பதிலையும் கவனிக்க வேண்டும்.

“ஒவ்வொரு முறையும் குற்றத்தை செய்து முடிக்கையில் எப்படித் தோன்றும்” என்கிற விசாரண அதிகாரியின் கேள்விக்கு அவன் அளித்த பதில், “நன்றி நவிலுதல் விருந்தில் (Thanksgiving feast)
கலந்து கொண்டது போன்ற உணர்வை அடைவேன்” என்றிருக்கிறான் நிதானமாகவும், புன்சிரிப்புடனும்.

இவனுடைய இந்த பதிலை உள்வாங்கி மீண்டுமொரு முறை தொடரைப் பார்க்க வேண்டும். அப்போது நாம் அந்த பெண் அதிகாரிகளாகவோ, பாதிக்கப்பட்ட பெண்களாகவோ மாறுவதை உணர முடியும்.

இந்தத் தொடர் நம்மிடம் வேண்டுவதும் அதையே தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here