நினைவோ ஒரு பறவை – ஏ. பி நாகராஜன்

0
13

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களின் பெயர்கள் காலங்கள் கடந்தாலும் நினைவில்
கொள்ளப்படும். மீண்டும் மீண்டும் பேசப்படும். ஏ.பி நாகராஜன் அப்படியான இயக்குநர்.
பிரம்மாண்டப் படங்களின் காரணகர்த்தா.

இருபது வருட காலம் இவர் தொடர்ந்து இயக்கியப் படங்கள் அனேகமும் வெற்றிப்
படங்கள். நவராத்திரி, திருவிளையாடல், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம், கந்தன்
கருணை, தில்லானா மோகனாம்பாள், திருமலை தென்குமரி, ராஜராஜ சோழன்,
கண்காட்சி என்று இவரது படங்கள் ஒவ்வொன்றும் எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவை.
ஏ.பி. நாகராஜன் பெயர் எப்போதும் புராணப்படங்களோடே தொடர்பு
கொள்ளப்படுகிறது. பல பரீட்சார்த்த முயற்சிகளையும் திரைப்படங்களில் அவர்
எடுத்திருக்கிறார். சொல்லப்போனால் அவர் எடுத்த அத்தனைப் புராணப்படங்களுமே
பரீட்சார்த்த முயற்சிகள் தான்.
இவர் இயக்குவதற்கு முன்பும் இந்தியாவில் புராணப்படங்கள் வெளிவந்து
கொண்டிருந்தன. அவை எல்லாமே புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும்
அப்படியே எடுத்தாளப்பட்டு திரைவடிவமாக மாற்றப்பட்டவை. அவை யாவற்றிலும்
இருந்து ஏ.பி நாகராஜன் தன்னுடைய பாணியை முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்
என்பது தான் சிறப்பு. ஏபிஎன்னின் காலகட்டத்திற்கு முன்பு புராணப்படங்கள்
பாடல்களால் நிரப்பப்பட்டிருந்தன. நாம் புராணத்தில் என்ன வாசிக்கிறோமோ அதையே
காட்சி வடிவமாகத் தந்திருந்தனர். கடவுள்கள் மிக நேர்த்தியுடனும், அருளாசி
தருபவர்களாவும், வரங்கள் அளிப்பவர்களாகவும் அரக்கர்களை வதம் செய்பவர்களாகவும்
காட்டப்பட்டனர். ஏ.பி என் இவை எல்லாவற்றையும் கடந்து பல கோணங்களில்
புராணங்களை அணுகுகிறார்.

1960 , 70கள் ஏபிஎன் இயக்கிய படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவை வெளிவந்த
வருடங்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சமூகப் படங்களும், குடும்ப
உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை சொல்லும் திரைப்படங்களும் வெளிவந்து
கொண்டிருந்தன. அவற்றில் இருந்து மாறுபட்டு ஏபிஎன் புராணத்தை நோக்கி தன்
கவனத்தைத் திருப்பியிருந்தது அவரை தனித்துக் காட்டியது.

ஏபிஎன்னிடம் வியக்கவைக்கூடிய பல அம்சங்கள் உள்ளன. இராமாயணம், மகாபாரதம்
போன்றவை கதைகளாக வந்து கொண்டிருந்த வேளையில் தமிழ் மக்களிடம் செல்வாக்கு
பெற்றிருந்த கடவுள்களையும் தமிழ் பக்தி இலக்கியத்தில் உள்ளவற்றையும்
காட்சிபடுத்தினார் ஏபிஎன். உதாரணமாக திருவருட்செல்வர், கந்தன் கருணை,
காரைக்கால் அம்மையார் போன்ற படங்களை சொல்லலாம்.

1965ஆம் ஆண்டு அவர் இயக்கிய திருவிளையாடல் இன்றளவும் புராணக் கதைகளின்
முன்னோடி என்று சொல்ல இயலும். சிவனின் திருவிளையாடல்கள் என்பது தான்
கதையின் மையம். இதில் அவர் எடுத்துக் கொண்ட கதைகள் யாவும் தமிழ்’ மக்கள்
கேள்விப்பட்ட கதைகளும், செவிவழி வந்த கதைகளுமே. முருகன் தன் குடும்பத்திடம்
கோபித்துக் கொண்டு போய் பழனிமலையில் அமருகிறார் என்பது இங்குள்ள அனைவரும்
அறிந்த கதை. இதனைக் கதையின் முதல் பாகமாக மாற்றுகிறார். முருகனிடம் பார்வதி

சிவனின் விளையாடல்களை சொல்கிறார் என்பதாகத் தொடங்கி வைக்கிறார் கதையை.
அனைவருக்கும் தெரிந்த ஒரு கதையை சொல்லிவிட்டு பின்னர் செவிவழிக் கதைகளை
இணைக்கிறார். இதற்கு காரணம் அவருக்குள் இருந்த அற்புதமான திரைக்கதையாசிரியர்.
மக்களுக்கு எது சுவாரஸ்யம் தரும் என்பதை அறிந்தவர் அவர். அதை சரியான
கலவையில் சேர்க்கத் தெரிந்தவர்,
தனித்தனியாய் திருவிளையாடலில் காட்சிகளைப் பார்த்தாலும் நம்மால் ஒன்ற
முடிவதற்கான காரணம் அவர் திரைக்கதையில் ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கிற
முக்கியத்துவம்.

அவர் படத்தைத் தொடர்ந்து பார்த்தோமானால் நம்மால் ஒன்றை விளங்கிக் கொள்ள
இயலும், ஒவ்வொரு காட்சித் தொடரையும் அவர் தனியான திரைப்படமாக
கருதியிருப்பது தெரியும். அதில் ஒரு நகைச்சுவை காட்சி, மயக்கும் பாடல்கள், உணர்வுக்
கொந்தளிப்பு அதற்கொரு முடிவு இப்படியான காட்சிகளை ஒன்றடக்கிய காட்சித்
தொடர்கள் கொண்ட படத்தைத் தருவதற்கு அசாத்தியமான படைப்பூக்கம் வேண்டும்.
உதாரணமாக ‘திருவிளையாடல்’ தருமி காட்சித் தொடரை எடுத்துக் கொள்ளலாம்.
தருமியின் அப்பாவித்தனத்தில் நமக்குத் தரப்பட்டிருக்கும் நகைச்சுவை உணர்வு,
‘பொதிகை மலை உச்சியிலே’ பாடல், நக்கீரனுக்கும், சிவனுக்கு இடையிலான விவாதம்,
செண்பகபாண்டியன் சிவனிடம் மன்றாடுகிற உணர்வுக் கொந்தளிப்பு என்று இருபது
நிமிடங்களில் நமக்குத் தந்திருக்கிற விருந்து இது. இதனை ஏபிஎன் தொடர்ந்து
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

சிறு வயதிலேயே நாடக உலகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஏபிஎன்னுக்கு மக்களின்
ரசனை நாடி தெரிந்திருந்தது. எதற்கு கைத் தட்டுவார்கள் எதில் தன்னை மறப்பார்கள்
என்பது அத்துபிடியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு படத்தின் தொடக்கத்தையும்
பாடலில் இருந்தே தொடங்குகிறார் அல்லது ஒரு இசைக்கோர்வையுடன். இது
ரசிகர்களைத் தயார் செய்யும் யுத்தி. சிவன் வாழும் கைலாயம் எனும்போது அங்குள்ள பூத
கணங்கள், நந்தி, ரிஷிகள் , அப்சரஸ்கள் என ஒரு பிரமாண்டக் காட்சியை நம்மிடம்
காட்டுவதற்கு இசையுடன் சேர்ந்து சில நிமிடங்களை எடுத்துக் கொள்கிறார். ரசிகரை
முழுவதுமாக அதோடு தன்னை ஒப்புக் கொள்ள வைக்கிறார்.. சரஸ்வதி வாழும்
சத்தியலோகம் எனில் மென்மையான இசையுடன் கூடிய இசைக்கோர்வையை நமக்குத்
தந்துவிட்டு ‘சரஸ்வதி சபதம்’ கதைக்குள் செல்கிறார். முருகனின் கதை சொல்லப்போகும்
படமான ‘கந்தன் கருணை’யில் ஔவையின் பாடலோடு தொடங்குகிறார். இவர் இயக்கிய
படங்கள் அல்லாமல் இவர் திரைக்கதையில் K. சோமு இயக்கத்தில் வெளியான ‘சம்பூர்ண
இராமாயணம்’ படத்திலும் ராமாயணக் கதையின் முக்கிய கதாபாத்திரங்களை
தொடக்கத்தில் வருகிற பாட்டில் அறிமுகப்படுத்தும் யுத்தியை செய்திருக்கிறார். இதனை
அவர் மேடை நாடகத்தின் தாக்கத்தில் இருந்து பெற்றிருக்கக்கூடும்.

ஆயிரம் பக்கங்களுக்கு மேலான கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ஒரு பிரபலமான நாவலே
‘தில்லானா மோகனாம்பாள்’ ஆனது. சண்முகமும், மோகனாவும் எந்த மாதிரியான
குணாதிசயம் கொண்டவர்கள் எனபதற்கு பல பக்கங்களை சுவாரஸ்யமாக
ஒதுக்கியிருந்தார் சுப்பு. அதனை படத்தின் முதல் காட்சியிலேயே தொடங்கி விடுகிறார்
ஏபிஎன். தமிழ் சினிமா தொடக்கக் காலந்தொட்டே நாவல்களைத் திரைப்படமாகத்
தந்திருக்கிறது. அதிலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலுக்கு இருந்த வரவேற்பு மிகப்
பெரியது. அதனை இரண்டரை மணிநேர படமாகத் தருவதற்கு திரைக்கதை குறித்த
நுண்ணுணர்வு தேவைப்படும். படங்கள் இயக்குவதற்கு முன்பே வெற்றிப்படங்களுக்கு
திரைக்கதையாசிரியராக பணி செய்த ஏபிஎன் தன்னுடைய பலத்தை நம்பினார்.

சண்முகத்துக்கும், மோகனாவுக்கும் மோதல், காதல், ஈகோ, பிரிவு, எதிர்ப்பு, திருமணம்
அதன் பிறகான மனத்தாங்கல் என்று விரியும் நாவலில் எதைச் சொன்னால் கச்சிதமான
திரைக்கதையாக அமையும் என்கிற தெளிவு ஏபிஎன்னுக்கு இருந்தது. சண்முகம் மோகனா
திருமணம் வரை கதை சொன்னால் போதுமானது என்று முடிவெடுத்திருந்த அதே
வேளையில் நாவலில் அவர்கள் திருமணத்துக்குப் பிறகு வரும் சம்பவங்களை படத்தில்
சரியாக சேர்த்திருந்தார்.

நாவலில் ஒரு சவால் என்பது இரண்டு கலைஞர்களுக்குமான போட்டியைப் பற்றி எழுதிய
பகுதி. பத்து பக்கங்கள் வருகிற பகுதி இது. நாதஸ்வரத்தின் இசையையும், நடனத்தின்
வீச்சையையும் சரிசமமாக எழுத்தில் சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் போட்டி
முடியும் இடம் வருகிறபோது வாசிக்கிற நமக்கு நாமே போட்டியில் கலந்து கொண்டது
போன்ற உணர்வு ஏற்படும். இதனைக் காட்சியாகக் காட்டுவது எளிது. அதற்கும் தன்
மெனக்கிடலை ஏபிஎன் தந்திருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கிறபோது உணர்ந்து
கொள்ள இயலும்.

ஏபிஎன்னின் மற்றொரு பலம் அவரது வசனங்களாக இருக்கிறது. அவரது திரைப்பட
வசனங்களை கோயில் திருவிழாக்களின்போது ஒலிபெருக்கியில்
ஒலிக்கவிட்டிருக்கிறார்கள். அது திருவிழாவின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது.
வார்த்தை விளையாட்டுகளில் தேர்ந்தவராக இருந்திருக்கிறார். இதனை அவருடைய
எல்லாப் படங்களிலும் பார்க்க இயலும். தருமிக்கும் சிவனுக்கும் இடையில் நடைபெறும்
கேள்வி பதில் போன்றவை அவரது பல படங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. இருவர் ஒரு
விஷயத்தைக் குறித்து விவாதிக்கும்போது கேள்வி பதிலாக வருகிற காட்சியமைப்புகள்
இவரது படங்களில் பிரபலம். நகைச்சுவைக் காட்சிக்கு முக்கியமானது அதன் ‘டைமிங்’.
இதனை இவரது படங்களில் இயல்பாய் காண இயலும். கடவுள்களும் சாமானிய மொழி
பேசுவார்கள். கடவுள்கள் மனித உரு கொண்டு வருகையில் அந்தக்
கதாபாத்திரத்தன்மைக்கு ஏற்றாற்போல் வட்டார மொழி பேச வைத்திருப்பார். வட்டார
மொழியைத் தமிழ்ப்படங்களுக்குள் கொண்டுவந்ததில் ஏபிஎன்னுக்கு பெரும்பங்கு உண்டு.
இவரது கதை வசனத்தில் வெளிவந்த ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் கதாநாயகன்
சிவாஜி கணேசன் முழுக்கவுமே கொங்குத் தமிழில் பேசி நடித்திருப்பார்.

மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக சொல்ல வேண்டியது இவரது படங்களின் பெண்
கதாபாத்திரங்கள். கடவுளுக்கு இணையாக இருப்பினும் வாய் திறவாமல் வந்துபோகும்
பெண் கடவுள்களையே திரைப்படங்கள் காட்டிக் கொண்டிருந்தன. புராணப்படங்கள்
மட்டுமல்ல இவர் கதை வசனம் எழுதிய படங்களிலும் இயக்கிய மற்றப் படங்களிலும் கூட
அப்பெண் கதாபாத்திரங்கள் கம்பீரமானவர்களாக தங்களுடைய உரிமையை விட்டுக்
கொடுக்காதவர்களாக வருவார்கள். இதோடு பெண்களுக்கு உள்ள பிரச்சனைகளையும்
வாய்ப்பு கிடைக்குந்தோறும் காட்சிகளில் சொல்லியிருக்கிறார். சிவனின் மனைவி
சக்தியே ஆனாலும் தான் ஒரு பெண் என்பதால் சிவனுக்கு அடங்க வேண்டியதில்லை
என்று வாதாடும் இடமும், அடிமை வேலை செய்பவரின் பெண் என்பதால் அதிகாரத்தில்
உள்ளவர்களுக்கு கீழ்ப்படியும் அவசியம் இல்லை என்று ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின்
நாயகி பாத்திரமும், ராஜராஜ சோழனின் மகளாக குந்தவை வாதாடும் இடமும் என
ஒவ்வொரு படங்களிலும் சுட்டிக் காட்ட இயலும்.

அவர் துணிந்து எடுத்த மற்றுமொரு முயற்சி ‘நவராத்திரி’ படம். இன்று அந்தப் படத்தைப்
பார்க்கையில் கூட பிரமிப்பு தருகிறது. அந்தக் கதை சொல்லப்பட்ட விதமும், இறுதியில்
அத்தனை சிவாஜி கணேசர்களையும் ஃபிரேமுக்குள் கொண்டு வந்த விதமும்…அருமை.
வருடத்திற்கு மூன்று படங்கள் வரை கூட ஏபிஎன் அவர்கள் இயக்கியிருக்கிறார்.
அனைத்துமே அதிக உழைப்பை எடுத்துக் கொள்ளக்கூடிய மாபெரும் அரங்கு
நிர்மாணமும், நட்சத்திர நடிகர்களையும் கொண்டவை. இதனை சாத்தியப்படுத்தியிருக்க
வேண்டுமென்றால் சரியான திட்டமிடுதலும், உழைப்பும் தான் காரணமாக இருந்திருக்க
முடியும்.
கண்காட்சி என்றொரு படம். ஒரு கண்காட்சியில் தான் படம் தொடங்கி முடியும். நான்கு
பிரதான கதாபாத்திரங்கள். இதற்கிடையில் திரில்லிங்கான சில விஷயங்கள். முழுதும்
‘செட்’ போடப்பட்டு எடுக்கப்பட்டவை. இந்தப் படம் நிச்சயம் புதிய முயற்சி என்று
சொல்லலாம். அதே போல் நடிகர் குழுவினரை கொண்டு எடுக்கபப்ட்ட திருமலை
தென்குமரி. படத்தின் பெரும்பகுதி வெளிப்புறக் காட்சிகள். ஒவ்வொரு காட்சிக்கும்
ஒவ்வொரு ஊர். இதெல்லாம் அப்போதைய காலகட்டத்தில் சவாலை ஏற்படுத்தியிருக்கும்.
ஒரு குடும்பம் போல் இணைந்து படங்களை இவர் இயக்கியிருக்க வேண்டும். அநேகமாய்
இவரது படங்களில் சிவாஜி கணேசன் நடித்திருக்கிறார். நாயகிகளில் சாவித்திரி. இசை
கே.வி மகாதேவன்,
ஒளிப்பதிவு கே.எஸ் பிரசாத் ஒலிப்பதிவு டி.எஸ் ரங்கசாமி
எடிட்டிங் ராஜன் கலை கங்கா – இவர்கள் தான் ஏபிஎன்னின் மாபெரும் பலமாக
இருந்திருக்கிறார்கள். தான் கற்றுக்கொண்ட குருகுலமான சங்கரதாஸ் சுவாமிகளின்
பெயரை பல டைட்டில்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவரது சில வசனங்களையோ,
பாடல்களையோ பயன்படுத்துகையில் அதற்கான உரிய மரியாதையை தந்திருக்கிறார்ர்.
நவராத்திரி படத்தில் கூத்து மேடை பாடல் முழுக்கவுமே ஏபிஎன் தான் வளர்ந்த நாடகத்
துறைக்கு செய்த பெருமைமிகு சமர்ப்பணம்.

நாகராஜன் அவர்களின் புராண, வரலாற்று நாயகர்களின் படங்களின் நம்மை ஈர்ப்பது
அதன் வண்ணங்களும், அரங்க வடிவமைப்புமே. சிறு வயதிலேயே நாடகக் கம்பெனியில்
சேர்ந்து அங்கேயே வளர்ந்ததால் ஒரு காட்சியில் வண்ணத்தை சேர்ப்பதின் இலாவகத்தை
அவர் அறிந்திருந்தார்.

இதில் முக்கியமாக குறிப்பிடப்படபட வேண்டிய ஒன்று உண்டு.
நாடக மேடையின் திரைச்சீலைக்கு திரைக்கு ஓவியம் வரைபவர்கள் தான் காலண்டர்
ஓவியங்களை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

அவர்கள் தான் கடவுளர்களை ஒவ்வொரு இல்லத்துக்கும் இயல்பாக அறிமுகம் செய்து
வைத்தவர்கள். சிவன் சாம்பல் நிறத்திலும், பார்வதி எனும்போது பச்சை நிறத்திலும்,
கிருஷ்ணனின் உருவம் நீலமாகவும் நம்முடைய கற்பனையில் பதியக் காரணம் காலண்டர்
ஓவியர்களால் தான்.

நாடக மேடையில் இருந்து காலண்டருக்கு இடம்பெயர்ந்த கடவுளர்களை மீண்டும்
திரையில் பிரதி எடுத்தன ஏ.பி. நாகராஜன் அவர்களின் படங்கள்.
காலண்டர் கடவுள்களின் உருவ மாதிரியை வைத்தே ஒப்பனை செய்திருக்க வேண்டும்.
உதாரணத்துக்கு கந்தன் கருணை படத்தின் சிவகுமார் அவர்கள் முருகன் வேடம்
ஏற்றிருந்தார். இந்த முருகனை நாம் அதிகமும் காலண்டரில் பார்த்திருப்போம். காலண்டர்
ஓவிய மேதையான மு. ராமலிங்கம் அவர்களின் பாணியிலான ஒப்பனையே படத்துக்கும்
பயன்படுத்தியிருக்கக்கூடும்.

ஏ.பி நாகராஜன் என்றதும் ‘சாமி படமெல்லாம் எடுப்பாரே அவர் தானே’ என்று
இப்போதைய தலைமுறைக்கு பதிந்திருக்கிறது. சாமி படங்கள் தான் எடுத்தார் என்றாலும்,
ஒருபோதும் சாமி நேரடியாக வந்து கண்ணைக் குத்தும் என்றோ, பழிவாங்கும் என்றோ
அவர் எடுக்கவில்லை.

கடவுளர்களை இயல்பானவர்களாக அவர் காட்டியிருக்கிறார். அவர்களுக்குள் இருக்கும்
‘ஈகோவினை’ அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை நாம் யோசிக்காத அளவுக்கு
நேர்த்தியாக சொன்னதினாலேயே ஏ.பி நாகராஜன் எப்போதுமே பிரியமான இயக்குநராக
இருக்கிறார். மக்களின் பெருந்தன்மையும் குறிப்பிட வேண்டும். கடவுள்கள் சக
மனிதர்களைப் போலவே கோபம் கொள்வார்கள், குடும்ப சண்டையிடுவார்கள்
என்றெல்லாம் ஏபிஎன் திரைப்படங்களில் காட்டியபோதும் அதற்காக தடை போடும்
விதமாக வழக்குத் தொடுக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தவர்களாக இல்லை.
அத்தனை பக்குவமான ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஏபிஎன் படங்களை இயக்கியிருந்தால் படங்களை
வெளியிடவே பெரும்போராட்டமாக இருந்திருக்கும். மக்கள் கடவுளை எப்போதும்
தங்களுக்கு நெருக்கமானவர்களாகவே பார்க்கிறார்கள். அதனால் தான் ஏபி நாகராஜனின்

படங்களின் கடவுளர்களை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். ஏபி நாகராஜன்
அவர்களை கடவுள்களுக்கும் மனிதர்களுக்கும் பாலமாய் இருந்தவர் என்று சொல்ல
முடியும். இதில் அத்தனை மிகையிருக்காது என்றே தோன்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here