காற்றில் எழும் கடல்கள்

0
13

கிறிஸ்டோபர் நோலனின் படங்களின் பிரம்மாண்டம் கதைக்குள் ஒன்றியது, சாத்தியமற்ற கனவை நம் முன் நிகழ்த்திக் காட்டுவது. நோலன் தன்னுடைய கற்பனையின் எல்லையை எத்தனைத் தூரம் கடந்தாலும் அவருக்கு உறுதுணையாக இருப்பவர் அவருடைய கலை வடிவமைப்பாளர் நாதன் க்ரௌலி.

க்ரௌலியின் அப்பாவும் தாத்தாவும் கட்டட வடிவமைப்பாளர்கள். க்ரௌலியின் அப்பா அவருக்காக கட்டித் தந்த கண்ணாடியிலான மாளிகையிலேயே இளமைக் காலத்தைக் கழித்தவர் க்ரௌலி. ஒரு சிறந்த கட்டட வடிவமைப்பாளராக வேண்டும் என்றிருந்தவரை திரைப்படத் துறை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது. கலை வடிவமைப்பு ஓவியராக ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின்Hook’ படத்தில் தனது பணியைத் தொடங்கியவர். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களுக்கு கலை இயக்குநராகவும், வடிவமைப்பாளராகவும் முன்னேறினார்.

கிறிஸ்டோபர் நோலனின் மூன்றாவது படமான Insomnia (2002) படத்தில் அவருடன் இணைந்தவர். Dunkirk  வரை அவருடனான பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். வேறு ஒரு படத்தில் பணி செய்ய ஒப்புக் கொண்ட காரணத்தால் மட்டும் Inception படத்தில் பணியாற்றவில்லை. க்ரௌலி பற்றி நோலன் சொல்வது, “அவர் நுணுக்கம் கொண்டவர்என்பது.

நோலனுடனான தனது படங்களின் சிலவற்றில் பணி செய்த அனுபவத்தை நாதன் க்ரௌலி பகிர்ந்து கொண்டவற்றிலிருந்து ஒரு தொகுப்பு.

DUNKIRK

Dunkirk (2017)

இது க்றிஸுடன் எனக்கு ஏழாவது திரைப்படம். க்றிஸ் மிகவும் புத்திசாலி. சிறந்த இயக்குர். எந்த மாதிரியான மனிதருடன் வேலை செய்ய வேண்டுமென்று நான் நினைத்தேனோ அப்படிப்பட்டவராக க்றிஸ் எனக்கிருந்தார். நான் டேவிட் லீனின் மிகப் பெரிய ரசிகன். அதனால் எதையும் பெரிதாகவே கற்பனை செய்து கொள்வேன்.

Dunkirk பற்றி க்றிஸ் என்னிடம் சொல்லியபோதுவாவ்என்றேன். ஒரு ஆங்கிலேயேனுக்கு இது மிகப்பெரிய நிகழ்வு. அதற்கு முன்பு வரை நான் போர்ப்படங்களில் பணியாற்றியதில்லை. Dunkirk பொறுத்தவரையில் நவீன பாணியில் எதையும் காட்டி விடமுடியாததொரு படம்.

Dunkirk ஒரு ஆங்கிலேயப் படம். ஐக்கிய நாடுகளுக்கு வெளியே டங்கிர்க்கைப் பற்றி யாரும் கவலைப்படுவார்கள் என்று   நான் நினைத்ததில்லை. க்றிஸ் இதனை மாபெரும் படமாக, உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வகையில் படமாக்க வேண்டும் என்று நினைத்தார். அவரால் எதையும் ஆர்வமிக்கதாக சொல்ல முடியும்.

இந்தப் படத்திற்காக நிறைய புத்தகங்களை வாசித்தேன். நான் நியூயார்க்கில் வசிக்கிறேன். பாதாள ரயில்களில் பயணம் செய்யும்போதெல்லாம் புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். அனேக ஆய்வுகளைச் செய்தேன். வேலையைத் தொடங்குவதெல்லாம் க்றிஸின் வீட்டில் தான். அவரது வீட்டில் ஒரு பழைய கார் ஷெட் ஒன்று உண்டு. அதை அவர் எனக்காக ஒதுக்கி வைத்திருந்தார். அங்கே தான் நாங்கள் டங்கிர்க்கான வேலைகளைத் தொடங்கினோம். அங்கே தான் டங்கிர்க்கை என்னைச் சுற்றிலும் உணர்ந்தேன்.

நாங்கள் குழுவுடன் டங்கிர்க் சென்றோம். பதினெட்டு கிலோமீட்டர் நடந்தோம். அங்கேயே தான் படமெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அது ஒரு தனித்துவமான இடம்.

அங்கே படமெடுப்பதில் எங்களுக்கிருந்த சவால்கள் இங்கிலீஷ் கால்வாயில் 21 அடிக்கு வருகிற அலை, அந்த கற்பாலத்தை மறுகட்டுமானம் செய்வது உண்மையான கப்பல்களைக் கொண்டு வருவது இவையெல்லாம் தான்.

எல்லாமே பார்ப்பதற்கு உண்மையானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவோம். இதற்கு முன்பு நான் க்றிஸுடன் வேலை செய்த படங்களில் எல்லாவற்றிலும் அதற்காகத் தான் மெனக்கிட்டிருந்தோம். 

கப்பல்களுக்கிடையிலான பகுதிகள், கற்பாலம், பறக்கும் போர்விமானங்கள், பழைய ரஷிய விமானங்கள், கப்பல்களுக்கு மேல் பறக்கும் போர் விமானங்கள் என இவையெல்லாவற்றுக்கும் மிகுந்த உடலுழைப்புத் தேவைப்பட்டது.

இவற்றோடு வானிலையும் எங்களுக்கு சவாலாக அமைந்திருந்தது. ஆனால் ஒவ்வொரு படத்தின் போதும் நாங்கள் வானிலையினால் சிரமப்படுவோம். இதில் நாங்கள் துரதிருஷ்டமானவர்கள் என்றே பலரும் சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தின்போது மோசமான வானிலை படத்துக்கு அற்புதமான காட்சியினைக் கொடுத்திருந்தது.

கற்பாலத்தின் மீது நாங்கள் நின்றுகொண்டிருந்தபோது புயல் வந்தது. எங்களுடைய படகுகளை இழுத்துச் சென்று விட்டது. கடற்கரையெங்கும் நுரையாலானது போல இருந்தது. ஆனால் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருந்தது.

நாங்கள் கட்டிய கற்பாலம் உடைந்து போனது. மீண்டும் அதனைக் காட்டினோம். இப்படித்தானே ஆங்கிலேயே ராணுவமும், கப்பற்படையும்  செய்திருக்கும்.

அந்தக் கற்பாலம் முன்னூறு அடி நீளத்துக்கு இருந்தது. அதற்குப் பிறகிருந்த மரம் மற்றும் கான்கிரீட் இணைப்பு 1937ல் கட்டப்பட்டிருந்தது. அவையெல்லாம் அரித்துப் போயிருந்தது. அதன் அடித்தளம் மட்டும் எஞ்சியிருந்தது. அங்கே நான் க்றிஸுடன் நின்றிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. அங்கே சில பிரெஞ்சு மீனவர்கள் நின்று கொண்டிருந்தனர். ‘இதனை நாங்கள் மறுபடியும் கட்ட்ப்போகிறோம் என்று சொன்னேன். ஆனால் நாங்கள் நினைத்தைவிடவும் மறுகட்டுமானம் செய்வதென்பது கடினமாகவே அமைந்திருந்தது.

க்றிஸுடன் நான் வேலைப் பார்த்த படத்திலேயே அதிக உழைப்பை எடுத்துக் கொண்டது இந்தப் படம் தான்.

BATMAN BEGINS

BATMAN BEGINS (2005)

BATMAN BEGINS படத்தைப் பொறுத்தவரை ஏற்கனவேBatman வரிசைப் படங்கள் வந்திருக்கின்றன. காமிக்ஸ் வாசகர்கள் இடையே பிரபலமான கதைக் களம் வேறு. ஆனால் இவற்றைத் தாண்டி படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் க்றிஸ் என்னிடம் விவரித்தார். அந்தப் படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை நான் பணி செய்தேன். படத்தில் வருகிற ‘பேட்மொபைல்’ தான் முதலில் நான் வடிவமைத்தது. மற்றப் படங்களில் வருவது போல வெகு வேகமாக செல்லக்கூடிய ஒரு கார் போல் இருக்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தோம். ஒரு ரேஸ் கார் போல இருக்கும் அதே சமயம் வேறு பல அம்சங்களும் இருக்க வேண்டும் என்று க்றிஸ் விரும்பினார். காரைப் பொறுத்தவரை எல்லாமே நிஜமாக இருக்க வேண்டும், எந்த ஒரு கிராபிக்ஸும் பயன்படுத்தப் போதில்லை என்பது என்னுடைய பணியை மேலும் கூட்டியது. கதைப்படியே பேட்மேன் என்பவன் சூப்பர் ஹீரோ கிடையாது. அவனிடம் ஏராளமான பணம் இருந்தது. அதைக் கொண்டு அவன் என்னவெல்லாம் சாத்தியங்கள் செய்யக்கூடும் என்பது தான் எங்கள் மனதில் கொண்டிருந்தோம்.

க்றிஸ் தன்னுடைய படத்தில் எவையெல்லாம் யதார்த்ததை மீறலாம் என்பதில் தெளிவாக இருப்பவர். அதனால் எங்களுக்கு இந்தக் காரை வடிவமைப்பது தான் சவாலானதாக இருந்தது. முதலில் அதற்கு முற்றிலும் புதிய வடிவமைப்பைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இதற்கே மூன்று மாத காலங்கள் எடுத்துக் கொண்டன. ஒரு வடிவத்தைக் கண்டுகொண்டதும் அதை சிதைக்காமல் அப்படியே கொண்டு வரக்கூடிய ஒரு கார் வடிவமைப்பாளர் தேவைப்பட்டார். நாங்கள் க்றிஸ் வீட்டிலிருந்த பழைய கார் நிறுத்துமிடத்தை ஒரு குட்டித் தொழிற்சாலையாக மாற்றினோம். நாங்களே காரினை வடிவமைக்கத் தொடங்கினோம். காரின் பின்பகுதி சரியாக அமைந்தால், முன்பக்கம் சரியாக வராது..நிறைய கண்டுபிடிப்புகள் தேவைப்பட்டன. நாங்கள் இறுதி செய்திருந்த வடிவத்தைக் கொண்டு வருவதற்குள் பல புதுவிதமான கார் வடிவமைப்புகளை கண்டுபிடித்துவிட்டோம்.

இதை இறுதி செய்துவிடலாம் என்று நினைத்தே ஐந்து விதமான கார்களை செய்து பார்த்தோம். ஒரு நாளைக்கு பத்துமணி நேரம் க்றிஸ் என் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்வார். க்றிஸ் ஒரு கார் ரசிகர். அதனால் தொடங்குகையில் மிக உற்சாகமானதாக இருந்தது. முதலில் நாங்கள் வடிவமைத்திருந்தது அப்படியே ஹம்மரையும், லம்போகினியையும் கலந்து உருவம் பிடித்தது போல இருந்தது. அதன் தோற்றமே கொஞ்சம் பயங்கரம் தான். ஆனால் அதிலிருந்து தான் எங்களுக்கான வடிவத்தை உருவாக்கத் தொடங்கினோம். எங்களுடைய கடைசி வடிவமைப்பிறகு நான் MARK V என்று பெயரிட்டேன். காரின் பின்புறத்திலிருந்து பார்த்தால் இரண்டு இறக்கைகளுடன் கொண்ட பேட்மேன் அடையாளத்தைப் பார்க்கலாம். அனால் இது திட்டமிட்ட வடிவம் அல்ல. எங்களையுமறியாமல் அது அமைந்துவிட்டது. தரையில் ஓடும் ஜெட்விமானங்களை ஒத்து அமைந்திருந்தது. இந்த வடிவமைப்பை நாங்கள் அப்படியே ஒரு சூட்கேசில் வைத்து இலண்டனுக்கு எடுத்துச் சென்றோம். அங்கே க்றிஸ் கால்பர்ட் மற்றும் ஆன்டி ஸ்மித்திடம் இதனை முழு வடிவமாக மாற்றச் சொல்லி ஒப்படைத்தோம்.

INTERSTELLER

Interstellar (2014)

படத்தில் வருகிற தண்ணீர் கிரகத்திற்காக நாங்கள் அர்ஜென்டினா மற்றும் சிலியின் உப்பு படிம நிலங்களுக்கு சென்று பார்த்தோம். அவை அனைத்துமே பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. ஆனால் காட்சியாக படம்பிடிக்கும் போது அழகாக இருக்குமா நேரெதிராக மாறுமா என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுந்தது.

ஆனால் அழகற்றதாக தெரிந்தால் தான் ‘நம் வீடு போல் அழகானது எதுவும் இல்லை’ என்கிற எண்ணம் ஏற்படும் என்று க்றிஸ் விரும்ம்பினார்.

தீவுப்பகுதியியை படம்பிடிப்பதற்கான இடத்தேர்வுக்காக நானும் க்றிஸும் ஐஸ்லாந்து சென்றிருந்தோம். அங்கிருந்த பனிப்பாறையில் நடந்து கொண்டிருந்தோம். அங்கிருந்த எரிமலையின் மிக அருகில் வரை சென்றிருந்தோம். எரிமலை வெடித்து சிதறும்போது கருந்துகள்கள் பனிப்பாறையின் மீது வெகுதூரத்துக்கு படியும்போது அந்த இடம் நாம் கற்பனையில் கூட கண்டிராத வேறொரு நிலக்காட்சி போல அமைந்திருக்கும் என்பதில் எங்கள் இருவருக்கும் சந்தேகம் இல்லை. ஆனாலும் அந்த இடத்தில் நானும் க்ரிஸும் வெகுநேரம் வாதித்தோம். கருந்துகள்கள் படிமம் பார்பதற்கு நம் கண்களுக்கு அழகாய்த் தோற்றமளிக்கும். ஆனால் கேமராவில் எப்படித் தெரியும் என்பதில் உறுதியில்லை என்றேன் நான். க்றிஸ் சரியாக வரும் என்றார். அதற்கு அவர் சொன்ன காரணம் என்னைக் கடைசியில் சமாதானப்படுத்தியது காற்று அடிக்கையில் அங்குள்ள வானிலை மிக மோசமானதாக மாறும். அப்போது அந்த இடம் படுபயங்கரமானதாகத் தோற்றமளிக்கும். இந்த இடமும் கூட ‘நம் வீடு போல அழகானது எதுவும் இல்லை’ என்கிற தோற்றம் தரும் என்றார். நான் சமாதானமடைந்தேன்.

பிரமாண்டமானதொரு தூசுப்புயல் ஒரு அமெரிக்கப் பண்ணையினை துவம்சம் செய்திருந்ததை ஆண்ட்ரூ வாயத்தின் ஓவியம் ஒன்றில் பார்த்தோம். அதே போன்றதொரு வட அமெரிக்கத்தனமான நிலவியலையும், மேகங்களையும் பார்க்க விரும்பினோம்.

நாங்கள் கால்கரி பகுதியின் தெற்குப்பகுதியில் அது போன்றதொரு இடம் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டோம். அங்கே ஒரு குழுவை அனுப்பி புகைப்படங்களைப் பெற்றோம்.

அங்கேயிருந்த சோள வயல் தெற்குப்பகுதியில் அமைந்திருந்தது. எங்களுக்குத் தேவைப்படுகிற  நிலப்பகுதியாகவும் இல்லை. அதன்பிறகு அங்கிருந்த ஒருவிவசாயி சில இடங்களைக் காட்டினார். அங்கே ஒரு இடம் சரியாக அமையும் என்று தோன்றியது. பண்ணை வீட்டுக்கான செட் போடவேண்டிய இடத்தையும் அந்த விவசாயி தான்  தேர்வு செய்தார். நாங்கள் அங்கே ஒரு இடத்தைக் காட்டி ‘இந்த இடத்தில் சோளத்தை  பயிரிட்டு தர முடியுமா?’ என்று கேட்டோம்.

வடக்குத் திசையில் சோளம் பயிரிடப்படுவதில்லை ஆனால் முயற்சிக்கிறேன் என்றார். சேர்ந்து முயற்சிப்போம் என்றோம் நாங்கள். 

வடக்குப் பக்கம் குளிர்காற்று மலையில் இருந்து வீசுமென்பதல் நான்கடி உயரம் மட்டுமே சோளம் வளருமென்றார் வேளாண் விஞ்ஞானி ஒருவர். எங்களுக்கு அத்தனை அடி வளர்ந்தாலே போதுமானது என்று சொல்லிவிட்டோம்.

சோளம் ஆறு அடி வரை வளர்ந்திருந்தது. வீடும் சோள வயலும் முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

கென் பர்ன்ஸின் ‘Dust Bowl of the 1930s’ என்கிற ஆவணப்படம் எங்களுக்கு பேருதவியாக இருந்தது. அதை நாங்கள் பலமுறை பார்த்தோம். வீட்டுக்குள் புயல் நேரத்தில் அடைத்துக்கொள்ளும் மணல்களையும், தூசுகளையும் அவர்கள் எப்படி வெளியேற்றுகிறார்கள் என்பதை நாங்கள் அந்தப் பகுதி மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

இந்தப் படம் எடுக்கும்போது நாங்கள் வானிலையால் மோசமாக பாதிக்கப்பட்டோம். ஆல்பர்தாவில் அப்போது ஏற்பட்ட வெள்ளம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளதாக சொன்னார்கள். ஊரே காலி செய்து போய்விட்டது. ஆனாலும் மக்கள் எங்களுக்குக் கொடுத்த ஒத்துழைப்பு நன்றிக்குரியது.

அந்த விண்கலகப்பலும் கூட மிகுந்த மன, உடல் உழைப்புக்கு பிறகு உருவாக்கபப்ட்டது தான். பார்ப்பதற்கு புதிய பாணியிலானதாக இருக்க வேண்டும் என்று முடிவ செய்திருந்தோம். நாங்கள் அதை ‘ஃபெராரி’ என்றே அழைத்தோம். இதனை வடிவமைத்து அப்படியே ஐஸ்லாந்தில் கடலில் இறக்கினோம். எங்களுக்குத் தெரியும் இதனை டிஜிட்டலில் செய்து விட முடியும். எத்தனை சிரமப்பட்டு கிராபிக்ஸ் இல்லாமல் செய்தாலும் கூட பார்வையாளர்கள் இதனை கிராபிக்ஸ் என்றே நினைப்பார்கள் என்று. ஆனால் என்ன தான் இருந்தாலும் அசலாக அப்படியே எடுக்கப்படுவதென்பது அலாதியானது தான். கடலுக்குள் எங்களது ‘ஃபெராரியை’ இறக்கியது சாதரணமான காரியமாக இல்லை. ஆனால் அதனை சாதித்தோம்.

கலை வடிவமைப்பு என்பது இல்லாத ஒன்றை நம்பும்படியாக காட்ட வேண்டும், இருப்பவற்றை அப்படியே கொண்டு வர வேண்டும். க்றிஸுக்கு காகிதத்தில் எழுதப்பட்டது எப்படி நிஜமாக மாறமுடியும் என்பதில் தெளிவிருந்தது. அதனை நம்மிடமிருந்து பெறக்கூடிய தன்னம்பிக்கை அவருக்குண்டு. ஒரு இயக்குநர் தான் நினைப்பதை வெளிக்கொண்டு வருவதோடு புதிதான சிந்தனைகளையும் வரவேற்க வேண்டும். இதற்கு எங்களுக்கு மிகுந்த சுதந்திரம் தேவை. இதனை புரிந்து கொள்ளக்கூடிய இயக்குநர் தேவை. க்றிஸ் எனக்குக் கிடைத்த அப்படியானதொரு இயக்குநர்.

TENET

Tenet (2020)

க்றிஸ்சின் உலகத்துக்கு நுழைந்ததுமே இதற்கு முன்பு செய்திடாத புதிதாக ஏதோ செய்யப்போகிறோம் என்கிற உற்சாகம் ஏற்பட்டுவிடும். 240அடி பாய்மரக் கப்பலையும், Boeing 747ரக விமானத்தின் அசல் மாதிரியையும் க்றிஸ் வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தான் செய்து பார்த்தோம். எங்களுக்கே அது எப்படியாக வரப்போகிறது என்று தெரியாததால் அவை முழு வடிவம் பெற்று எங்களுக்குத் திருப்தி ஏற்படும் வரை யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என்று ரகசியம் காத்தோம். இந்தப் படத்தினைப் பொறுத்தவரை ஸ்கிரிப்ட்டினை வாசிக்கும்போது ஒரு பார்வையாளர் மனதில் என்னவெல்லாம் சந்தேகம் தோன்றுமோ அதேல்லாம் எனக்கும் இருந்தது. முதலில் இது எது மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்ககூடிய படம்? என்ன மாதிரியான ‘அல்காரிதம்’ கொண்டது போன்ற கேள்விகளுக்கெல்லாம் எனக்குத் தெளிவான விடை தெரிய வேண்டியிருந்தது. இந்தப் படத்திற்காக க்றிஸ்சின் The Prestige திரைப்படத்தின் பொருட்களைப் பயன்படுத்தினோம். இதில் இடம்பெற்ற ரகசியக் கதவுகள் எல்லாமே The Prestige படத்தில் மேஜிக்கிற்கு பயன்படுத்தபப்ட்ட தடுப்பு அறைகள் தான். 747 Boeing ரக விமானம் கட்டடத்தைத் தகர்ப்பதை விஷுவல் எஃபக்ட்ஸில் காட்ட வேண்டாம் என்று க்றிஸ் விரும்பினார். பார்வையாளர்களை நாம் ஏமாற்றக் கூடாது என்றார். அதனால் ஒரு கட்டடத்தை உருவாக்கி அதில் 747 Boeing ரக விமானத்தை மோதவிட்டோம். க்றிஸ்சினுடைய கற்பனையை ஊடுருவிப் பார்பதென்பது ஒரு சவால் தான்.

1 COMMENT

  1. கட்டுரை சீக்கிரம் முற்றுப் பெற்றுவிட்டதே என்று நினைத்துக் கொண்டேன். சுவாரஸ்யமான கட்டுரை தோழர்.

    நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here