ஒற்றைத் துணை

0
19

திருநெல்வேலிக்கு வரும் வெளியூராட்களை அந்த ஊர்க்காரர்கள் பெருமையுடன் இழுத்துக் கொண்டு போவது பாபநாசத்துக்குத் தான்.. வளைந்த மலைப்பாதைகளில் ஏறினால் கீழே சுழித்தோடும் அகண்ட தாமிரபரணி மேல் பாபநாச சிவன் உட்கார்ந்திருப்பார். வாசலில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுவிட்டு மீண்டும் மலையேற்றம். காரையார் அணைக்கட்டு வரும். அந்த அணைக்கட்டின் மேல் படகில் ஏறி அந்தக்கரை சென்றால் ‘ரோஜா’ படத்தில் மதுபாலா குளித்த அருவி வரும். அதோடு ‘செண்பகம் அக்காவுக்கு கல்யாணம் ஆகணும்’ என்று மதுபாலா வேண்டிக்கொண்ட பிள்ளையாரும் அருவியின் முன் இருப்பார். காட்டுவிலங்குகள் சர்வசாதரணமாக நடமாடும் பகுதி அது. அதனால் இந்த அணைக்கட்டுக்கு ஆறு மணிக்கு மேல் அனுமதி கிடையாது. அதோடு அணைக்கட்டில் முதலைகள் மிதக்கும் என்பார்கள். இப்படியான ஒரு காட்டுப்பகுதியில் இரண்டு நாட்கள் கல்லூரி தோழர்கள், தோழிகளோடு தங்க நேர்ந்தது.

நாங்கள் தங்கியிருந்தது காட்டுக்குள் இருக்கும் ஒற்றை வீட்டில். அப்படியொரு வீடு அங்கு இருப்பதே பலமுறை அங்கு போய்வந்தவர்களுக்கும் கூட தெரியாது.  அந்த வீடு வயதான ஒரு தம்பதிக்கு சொந்தமானது. இருவருக்கும் பத்து வயது வித்தியாசம். காதல் திருமணம். திருமணமாகி ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டார்கள். ஆனாலும் இருவரின் பேச்சிலும் நக்கலும், இடக்கும், பரிகாசமும் களை கட்டும். அணை கட்டுவதற்கு வந்த கூலிகளில் இளைஞனாக வந்து சேர்ந்த ஆரோக்கியத்திற்கு ஒருநாள் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவுக்குப் போக ஆசை. அம்பாசமுத்திரத்து திருவிழாவில் தான் அற்புதம்மாளைப் பார்க்கிறார். நேராக அன்றிரவே போய் அற்புதம்மாளின் அப்பாவிடம் பெண் கேட்க, சிலபல பிரச்சனைகளுக்குப் பிறகு திருமணம் முடிந்தது. ‘கல்யாணத்துக்கப் பெறவு என் கூட மலையில தான் தங்கணும் ‘ என்று சொன்னதும் ஓவென அழுத அற்புதம்மாளை இப்போதும் கூட ஆரோக்கியம் கிண்டல் செய்து கொண்டிருந்தார். அற்புதம்மாளுக்கு இருட்டு என்றால் பயம். அதை விட பயம் பூனைகளின் மேல். வேறு வழியில்லை. கிளம்பி வந்தாயிற்று காட்டுக்கு.

அணை கட்டும் வேலை முடிந்து எல்லோரும் ஊருக்குப் போகலாம் என்று சொல்லும்போது காட்டு வாழ்க்கையோடு கலந்து போன இருவருக்கும் திரும்புவதற்கு மனமில்லை. அதனால் அங்கேயே இருவரும் தங்குவதற்கு காட்டு இலாகா அனுமதித்து ஒரு காவலாளி வேலையும் போட்டுக்கொடுத்தது. அன்று குடியேறியவர்கள் தான்.  நாற்பது ஆண்டுகள் கடந்த பின்னும் காட்டை விட்டு வெளியே வந்ததில்லை. குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார்கள். நாங்கள் போகும்போது அவர்களுடைய பேரன் தான் வழிகாட்டியாக எங்களுடன் வந்திருந்தார்.

நாற்பது வருடங்களாய் வெளியுலகைப் பார்க்கவில்லை என்பவர்களிடம் கேட்கவும், பேசவும், ஆச்சரியப்படவும், அவர்கள் சொல்லும் சம்பவங்களை அதிர்ச்சியுடன் கேட்கவுமே அந்த இரண்டு நாட்கள் போதுமானதாய் இல்லை. இருவருமாய் சேர்ந்து புலியை விரட்டியது தொடங்கி எந்த சமயத்தில் எந்த இடத்திற்கு கரடிகள் மீன் பிடிக்க வரும் என்பது வரை பக்கத்து வீட்டுக்கார்கள் நடமாட்டத்தை விவரிப்பது போல் சொன்னார்கள். எப்போதேனும் எங்களைப் போல் வருபவர்கள், பேரன் பேத்திகள், அரசு அதிகாரிகள் தவிர யாரையும் அவர்கள் பார்த்ததில்லை. அது அவர்களுக்கு ஒரு விஷயமாகவும் இல்லை.

அந்த வீட்டுக்கு கதவு கிடையாது என்பது மற்றுமொரு ஆச்சரியம். ஒரு அசகாய மழைநாளில் அடித்து செல்லப்பட்ட கதவை அவர்கள் சரிசெய்துகொள்ளவில்லை. அனாவசியமான பொருள் இருந்து எதற்கு என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

“ஏன் தாத்தா கதவ சரி பண்ணல?” என்றதும் ,

“ஆமா..அந்தாக்ல யவனும் வந்து இவளைத் தூக்கிட்டாப் போவப் போறான்.. போனவனும் ஒரு மணிநேரதுக்குள்ள கொண்டாந்து விட்டு என்னைக் கையெடுத்துக் கும்புட்டுட்டுலா போவான்” என்றார் தாத்தா அட்டாகாசமாய் சிரித்து.

கடைசியில் கதவில்லாத வீடு என்றும் நாகரீகம் பார்க்காமல் மரணம் வந்து தான் பாட்டியை அழைத்துப் போனது. ரொம்ப நாள் கழித்து தான் இதைக் கேள்விப்பட்டேன். விஷயம் தெரியவந்ததுமே தாத்தாவை பற்றித் தான் விசாரித்தேன். “பொறவும் அங்கேருந்து வாரதுக்கு அவரு விருப்பபடல..ஆனா அவரால அங்க தனியாவுமிருக்க முடியல. இங்க வந்து கொஞ்ச நாள்லேயே அவரும்…” என்றார் அவரது பேரன்.

ஆனால் தாத்தா இல்லாமல் பாட்டியால் அங்கே தனியாக இருந்திருக்கமுடியும் என்று தான் தோன்றியது. பெண்களின் சுபாவம் அப்படி. எதையும் மறக்காதிருக்கவும் முடியும். அதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவும் இயலும். அதனால் தான் தாத்தாக்கள், ‘அப்போல்லாம் நாங்க பியூசி படிக்கும்போது…” என்று சொன்னதையே பலமுறை சொல்லிக்கொண்டிருக்கும் போது பாட்டிகள் பள்ளி விட்டு வரும் பேரன் பேத்திகளுக்கு என்ன செய்து தரலாம் என்று யோசிக்கிறார்கள். வாழ்க்கை பெண்களுக்கென பிரத்யேகமாய் கற்றுக்கொடுத்த பயிற்சி இது.

வயதான பின் கணவர் இறந்துபோனது பெரிய துக்கமாகவே இருந்தாலும் பெண்களால் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பக்கூடிய பக்குவத்தை அந்த பயிற்சி தான் கொடுத்திருக்கிறது. போன வருடம் எங்கள் குடும்ப நண்பரின் அப்பா இறந்துபோனார். அவருக்கு வயது எண்பது. அவருடைய உடலை எடுத்துப் போகும்போது அவரது மனைவி குனிந்து அவரிடத்தில் சொன்னார், “போய் வாருங்கோ ஐயா..”.

என்னுடைய மாமனார் உடல்நிலை முடியாமல் இறந்துபோன நாளன்று என் மாமியார் திரும்பத் திரும்ப இப்படித்தான் சொல்லி அழுதார், “நெதமும் விடி காலையில காப்பிக்காக மினுக் மினுக்குன்னு என்னிய பாப்பேளே..நாளைக்கு என்னை யாரு பாப்பா..” மறுநாளிலிருந்து நாள் தவறாமல் காலையில் காபி போட்டு அவரது படத்திற்கு கீழே வைத்துக் கொண்டிருந்தார்.

மனைவியை இழந்த கணவனின் நிலை சொல்லித் தீராதது. அதிலும் இறுக்கமாகவே வாழ்ந்து பழகிய ஆண்களுக்கு மனைவி போன பின் தன்னுடைய மகன், மகளுடனும் அவர்களின் குழந்ந்தைகளிடமும் எப்படி ஒத்துப்போவதென்ற திணறல் வந்துவிடுகிறது. வீடுகளில் எப்போதுமே பெண்களின் தேவை நிரந்தரமானது. அவர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றமாதிரி இயல்பாக தங்களை உருமாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நாற்பது வருட காலம் அலுவலத்திற்கு போய் வந்து ஒய்வு பெற்றபிறகு தங்களின் இருப்பு குறித்து ஆண்களுக்கு இயல்பாக கேள்வி வந்துவிடுகிறது. ‘இனி நாம் இவர்களுக்குத் தேவையில்லையோ?’ என்று மனம் குறுக்குக் கேள்விகளை எழுப்பும். இந்தக் காலகட்டத்தில் தான் மனைவியின் ஆதரவும், பேச்சும் அவர்களுக்குப் பெருந்துணையாக இருக்கின்றன. இந்த சமயத்தில் மனைவியை இழப்பவர்களின் வலி இன்னும் கூடுதலானது.

நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற ஒருவர் சென்னை அண்ணாநகரில் இருக்கிறார். பதவி காலத்தில் கண்டிப்பானவர் என்று அறியப்பட்டவர். மூன்று மாடிகள் வைத்துக் கட்டப்பட்ட அவரது பங்களாவின் உள்சுவர் முழுக்க அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இருக்கும் மகள்கள், பேத்தி, பேரன்கள், பக்கத்துத் தெருவில் இருக்கும் மகனின் குழந்தைகள் என ஒரே புகைப்பட மயம். ஒருநாளின் பெரும்பான்மையான நேரத்தை அந்த புகைப்படங்களைப் பார்ப்பதிலேயே செலவழிப்பதாய் சொன்னார். ‘அவ இருந்திருந்தா ஊர்ல போய் இருந்திருப்பேன்..அவ போன வீட்டுல இருக்க என்னமோ மாதிரி  இருக்கு. அதான் இங்க வந்துட்டேன்” என்றார் துக்கத்துடன். பாவமாய் இருந்தது.

இதே நிலை பெண்களுக்கும் ஏற்படுகிறது. கணவனின் ஆதரவிலேயே இருந்து திடிரென அவர் போனதும் திணறித்தான் போகிறார்கள் . ஆனால் அதன் சதவீதம் குறைவு.

இன்னும் சொல்லப்போனால் மனைவி இழந்த கணவன்கள் வயதான பின் ஒரு சிறைக்குள் அடைபடுவது போல் வாழ்ந்து கொண்டிருக்க, பெண்களில் பலர் கணவன் மரணித்த பின் தன்னை பல கட்டுகளில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்கள்.

எனக்கு என் பெரியம்மாவைத்தான் இதற்கு உதாரணமாய் சொல்லத் தோன்றும். பெரியம்மாவின் ஒரு காது பெரியப்பா இடப்போகும் கட்டளைக்காகவும், மறு காது தொழுவத்தில் இருந்து மாடுகள் கேட்கப்போகும் தேவைக்காகவுமே காத்திருக்கும். அவர் மனம் சொல்வதை கேட்பதற்கென்று கூடுதலான ஒரு காது அவருக்குத் தரப்பட்டிருக்கவில்லை. வாரிசுகள் இல்லாத அந்த வீட்டின் குழந்தைகள் மாடுகளும், பத்திருபது பூனைக் குட்டிகளும் தான். என் பெரியம்மாவுக்கென்று செருப்பு கிடையாது.. அதெல்லாம் வெளியில் போய் வருபவர்களுக்குத் தான் வேண்டும். அதிகபட்சம் மாடுகளை மேய்த்துக் கொண்டு பக்கத்து கரைக்குப் போய் வரும் தனக்கு செருப்பென்பது ஒரு அனாவசிய செலவு என்று தான் நினைத்திருந்தார்.

கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய பெரியம்மா செருப்பு போடுகிறார். ஒவ்வொரு முறை ஃபோன் செய்யும்போதும் பெங்களூருவில் தம்பி வீட்டில் இருப்பதாகவும், சென்னையிலும், இராமேஸ்வரத்திலும் இருந்தும் தொலைபேசியில் அழைப்பார். காசிக்கும், மதுராவுக்கும் போய் வந்து புகைப்படங்களை ஆசையோடு காட்டினார். ஒருமுறை நான் என் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், “ பெரியப்பா போனதுக்கப்புறம் தான் பெரியம்மா உங்க முகமே தெளிவாயிருக்கு” என்று சொல்லிவிட்டேன். அவர் என்னிடம் கோபப்படவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. எனக்குத் தான் அப்படி சொல்லியிருக்க வேண்டாமோ எனத் தோன்றியபடி இருந்தது.

பெண்கள் இயல்பாக எதையும் எடுத்துக் கொள்வதற்கு வெளிப்படையாக பேசும் தன்மையும் ஒரு காரணமாக இருக்கிறது. அமாவாசை தோறும் வரும் காக்காவில் ஒன்றைப் பார்த்து, “இது உங்க தாத்தாவாத் தான் இருக்கணும். பாரு… இலையத் தள்ளிவிட்டு சாப்பாடை தரையில போட்டு சாப்புடுது. அந்த மனுஷனுக்குத் தான் இந்த கோண புத்தி உண்டு” என்று எங்கள் தெருவில் ஒரு பாட்டி பேரனிடம் ‘சீரியசாக’ சொல்லிக் கொண்டிருந்தார். இப்படி மனதிலிருப்பதை ஒவ்வொரு நேரத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பது போல் ஆண்களால் இருக்க முடிவதில்லை. அவர்களால் தன்னுடைய இறந்த மனைவி குறித்து எல்லோரிடமும் இப்படி சர்வ சாதரணமாக பேசி விட முடிவதில்லை. பேசிப் பேசி ஆற்றிக்கொள்ளும் பழக்கத்தையும் நாம் ஆண்களுக்கு இல்லை என முடிவெடுத்துவிட்டோம். பாவம் அவர்கள் என்ன தான் செய்வார்கள்?

1 COMMENT

  1. # கடைசியில் கதவில்லாத வீடு என்றும் நாகரீகம் பார்க்காமல் மரணம் வந்து தான்.. …#

    வார்த்தைக்கோர்வுகள் அருமை. ஒவ்வொரு தருணமும் காட்சிகளாக கண்முன்னே !

  2. ஆம், பெண்கள் தங்களை சரியாக தகவமைத்துக் கொள்கிறார்கள். அனுசரித்து போவதிலும், கடமை ஆற்று வதிலும் ஈடுபாடுள்ளவர்களாக பெண்கள் காலம், காலமாக கட்டமைக்கப் பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here