Homeகட்டுரைகள்ஊர்க்காரர்

ஊர்க்காரர்

பள்ளிக்கூடம் படிக்கையில் தமிழில் துணைப் பாடநூல் என்று ஒன்றுண்டு. அதில் தான முதன் முதலாக நாஞ்சில் நாடன் அவர்களின் பெயரைத் தெரிந்து கொண்டேன். ‘ஐந்தில் நான்கு’ என்கிற அவருடைய ஒரு சிறுகதையை பாடத்தில் வைத்திருந்தார்கள். வாசிக்க சுவாரஸ்யமான கதை அது. அதன்பிறகு கல்லூரிக்குள் நுழைந்தபிறகு  நாஞ்சில் நாடன் புத்தகங்களை நூலக அடுக்குகளில் பார்க்கையில் ‘எஸ்.கே முத்து கதையை எழுதினவர்’ என்கிற அறிமுகத்தில் தான் மீண்டும் படிக்கத் தொடங்கினேன். எஸ்.கே முத்து என்கிற எஸ். காத்தமுத்து ஒரு கதாபாத்திரமாக இருந்த ‘ஐந்தில் நான்கு’ சிறுகதை என்னை மிகவும் ஈர்த்திருந்தது. மும்பையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வரும் எஸ்.கே முத்து செய்யும் பந்தாக்களும், காசினை இழந்து கடன்வாங்கிக் கொண்டு மும்பைக்கு அழுதுகொண்டே போவதும், ஹோட்டலில் வேலைப் பார்த்து சேர்த்து வைத்தக் காசும், கடன் வாங்கிய பணமும் வீண் பந்தாவில் கரைந்ததையும் கதை சொல்லும். இந்தக் கதையின் நீதி என்பது “தகுதிக்கு மீறி வீண்பெருமை கொள்ளக்கூடாது’ என்பதாக நான் பரிட்சையில் எழுதியிருக்கக்கூடும். அதன்பிறகு நாஞ்சில் நாடனின் கதைகளைப் படிக்கையில் வெறும் நீதிநெறிக்குள் அடக்கிவிடக்கூடியதாக இல்லை, ஆனாலும் அறம் ஓங்கிய குரலாக அவர் கதைகள் இருக்கின்றன.

ஒரு ஏக்கம் , எளிமை , அப்பாவித்தனம் இவை கொண்ட ஒரு மனது மற்றவர்களால் எள்ளலுக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும்போது படுகிற வேதனையை நாஞ்சில்நாடன் சொல்கிறபோது நம்மால் கலங்காமல் இருக்கவே முடியாது. ஒரு எழுத்தாளர் என்பவர் மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொல்வதைத் தன் கதைகளில் அவர் நிரூபித்துக் கொண்டே போகிறார்.

ஒரு கதை. விசாலம் என்பவளினுடையது. விசாலம் ஊரில் உள்ள எல்லாருக்குமாக உழைப்பவள். இருபத்திநான்கு வயதில் தான் பூப்பெய்துகிறாள். அடுத்த வருடமே திருமணமும் நடந்துவிடுகிறது. திருமணம் செய்தவர் பக்கத்து ஊரில் உள்ள தவசி. சமையல் தொழில் செய்பவர்களை தவசி என்பார்கள். கல்யாணம், சடங்கு, கொடை என விழாக்களுக்கு இரண்டாயிரம் அப்பளமும், ஆயிரம் இட்லிகளையும், மலைமலையாய் சோறும் செய்பவர். விசாலத்துக்கும் அவருக்கும் திருமணம் ஆகி பெண் குழந்தையும் பிறந்துவிடுகிறது. ஆனால் இருவருக்கும் ஒரே சண்டை. விசாலத்தை அவர் திரும்பிப் பார்ப்பதில்லை. பிறந்த ஊருக்கு கைப்பிள்ளையோடு வந்து நிற்கிறாள் விசாலம். முன்பு போல வேலைக்குப் போகலாம். ஆனால் குழந்தையை வைத்துக் கொண்டு அவளால் எப்படி வேலை செய்ய முடியும்? கொட்டாரம் போன்ற ஒரு வீட்டின் முன்பு போய் தினமும் நிற்கிறாள். இப்படி கதை சொல்லிக் கொண்டே வருகையில் ஒரு வரி வந்து விடுகிறது. நம்மை அங்கேயே நிறுத்தி கலங்க வைத்துவிடும் வரி அது, “பசித்திருக்கும் பிள்ளைக்குச் சோறு கேட்க வந்திருப்பவள் சத்தம் போட்டுக் கேட்பாளா? யாராவது தலை தட்டுப்படும் வரை நிற்பாள்”.

அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் சாப்பிட்டு முடிந்த பின் விசாலத்தின் கையில் உள்ள கிண்ணத்தில் குழம்போ, கூட்டோ வந்து விழுகிறது. இங்கேயே கதை முடிந்துவிடும். மீண்டும் இந்தக் கதையை நினைத்துப் பார்க்கையில், மலை போல சோறாக்கிப் போடும் ஒருவருடைய மனைவியும், குழந்தையும் ஒரு கிண்ணத்து குழம்புக்காக வெயிலில் நாள் முழுக்க நிற்க வேண்டியிருக்கும் அவலத்தைக் கடக்க முடிவதில்லை. விசாலத்தைப் பற்றிய கதைக்கு தலைப்பு வைத்திருக்கிறார் ‘தவசி’ என்று.

ஒரு எழுத்தளார் தன்னுடைய ஊரின் பெயரைத் தன்னுடைய புனைப்பெயராக வைத்திருக்கிறார் என்றால், அந்த ஊரில் மீது கொண்ட பற்று மட்டுமே காரணமாக இருக்க முடியாது, அந்த ஊரின் சாட்சியாகவும்தன் எழுத்தை நிறுவ முடியும் என்கிற நம்பிக்கை தான் பிரதானமாக இருந்திருக்க வேண்டும். அவருடைய கதையின் களமும், சொற்களும், மொழியும் நாஞ்சில் நாட்டினுடையது. கதைக்குள் வருபவர்களும், நிலவியலும் அந்தப் பிரதேசதுக்கானது. ஐம்பது வருட கால நாஞ்சில் நாட்டின் நிலவியலை இவருடைய கதைக்குள் பார்க்க முடியும் ஒருவேளை இன்று அவர் எழுதிய நிலங்கள் மாற்றம் அடைந்திருக்கலாம். ஆனால் ஒரு வரைபடம் போல இங்கு இது இந்தக் காலத்தில் இருந்திருக்கிறது என்று எழுத்தைக் கொண்டு சொல்லிவிட முடியும்.‘அம்மை பார்த்திருக்கிறாள்’; என்கிற ஒரு கதை. கதையின் தொடக்கம் சுப்பையா என்கிற சிறுவன் தூங்கி எழுந்து வெளியில் வருவது . அவ்வளவு தான். இந்த நான்கைந்து வரிகளில் அவர் காட்டியிருப்பது, தேரேகாலில் இறங்கி, கிழக்கு நோக்கி தாழக்குடிக்கு பிரியும் கப்பிச்சாலை ..நாச்சியார் புதுக்குளத்தில் இறங்கி , பாலுக்கலுங்கில் அமர்ந்து கொண்டான் சுப்பையா.  இப்படி அநேகக் கதைகளில் தாழக்குடியும், இறைச்சகுளமும், தேரேகால்புதூர், புதுகிராமம், வழியாக சுசீந்திரத்தில் நம்மைக் கொண்டு விடுவார்.

நாஞ்சில் நாடன் கதைகளின் ஒரு பொது அம்சம் என்னவெனில் கதை சாதாரணமான விவரணையுடன் அன்றாட விஷயங்களைப் பற்றி சொல்வது போலத் தொடங்கும். ஒருவர் காலையில் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்குப் போகிறார் என்பதாகக் கதைத் தொடங்கும். எந்த ஏற்ற இறக்கங்களும் கதைக்குள் இருக்காது. ஆனால் நுணுக்கங்கள் உண்டு. ஆறு என்றால், அது நம் காலடியில் ஓடுவது போன்றதான விவரணையையும், வெயிலென்றால், சுள்ளென்று நம் மீது சுடுமளவுக்கும் உணர்த்திவிடுவார். இப்படிப் போகிற கதை ஒரு கட்டத்தைத் தொடும், அந்தக் கட்டத்தில் கதாபாத்திரத்தின் மனநிலை நமக்குள் வந்துவிடும்.

கதையின் பல கருக்கள் இதெல்லாம் விஷயமா என்பது போலத் தோற்றம் தந்தாலும், மனித வாழ்க்கைக்கு எது தான் முக்கியமில்லை என்று தோன்றும்படியான கதைகள் எல்லாமே. ஒரு தகப்பன் மதுரையில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு வருகிறார். மாப்பிள்ளை சர்க்கார் உத்தியோகம் பார்ப்பவர், அதிகம் மாமனாரிடம் பேச மாட்டார். அன்று ஞாயிற்றுக்கிழமை. அப்பா இப்படி திடிரென வருவார் என மகள் நினைக்கவில்லை. அவளுக்கு இரே படபடப்பு. காரணம் சுத்த சைவமான உணவையே சாப்பிடும் குடும்பம். அவளது கணவனோ அசைவம் செய்து தரச்சொல்லி வறுபுறுத்தி மனைவியை பழக்கிவிடுகிறார். கணவனுக்கு மட்டும் சமைத்துக் கொடுக்கும் அவள் வழக்கம் போல ஞாயிறன்று அசைவத்தை சமைத்து வைக்க, அன்றைய தினம் தான் அவளது அப்பா வந்துவிடுகிறார். மகள் அப்பாவிடம் அழுதுகொண்டே உண்மையைச் சொல்லிவிடுகிறாள். அவருக்கு வெறுத்துப் போய்விடுகிறது. இது ஒரு சம்பவம். இதனை எப்படி முடித்திருக்கிறார் என்பது தான் முக்கியம். இன்று உணவு அரசியல் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தக் கதை வெளிவந்தது 1995ஆம் ஆண்டு. 27 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கதையில் ‘எல்லாம் மாற்றம் பெறும். காலத்தோடு இணைய வேண்டும்’ என்பதைத் தான் சொல்லியிருப்பார்.

ஒரு திருவிழா என்றால் நாஞ்சில் நாடனுக்கு அதை எழுத்தில் நிகழ்த்திக் காட்டிவிட வேண்டும். சுடலை மாடன் கொடை எனில் அங்கு என்னென்ன நடக்கும் என்பதை அடுக்கி விடுகிறார். ‘பேய்க்கொட்டு’ , கதையும் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ கதையையும் உதாரணமாகச் சொல்லலாம்.

நாஞ்சில் நாடன் கதைகளில் உள்ள மற்றொரு அம்சம், கிராமங்களைக் குறித்த கதைகளை அவர் அதிகம் எழுதியிருக்கிறார். கிராமம் எனும்போது சாதிய அடுக்குகளை எழுதாமல் கதைகள் அசலாகாது. அவருடைய கதைகளை ஆய்வு நோக்கில் எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் சில சாதிகளின் உட்பிரிவுகளையும், குறிப்பாக வேளாளர்களின் வாழ்வு முறையினையும் பழக்க வழக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும். திருவிழாக்களின்போது ஒவ்வொரு சமுதாயமும் அதை எப்படி எடுத்துக் கொண்டாடுகிறது என்பது பற்றிய பார்வையைத் தந்திருக்கிறார். இது போன்றவை கதைக்குள் வருகையில் ஒருவிதத்தில் ஆவணமாக மாறிவிடுகிறது.

நாஞ்சில்நாடன் கதைகள் குறித்து சொல்லும்போது அவருடைய உணவு ரசனையைப் பற்றி சொல்லாமல் விடுவது ஒரு குறையாகவே முடியும். அநேகமாக எல்லாக் கதைகளிலும் உணவு பற்றிய குறிப்பு உண்டு. பழைய சோற்றை ஒருவர் உண்கிறார் என்று சொன்னால், அந்த பழைய சோற்றின் மணம் நமக்கு வருமளவுக்கு அதன் அத்தனை ஐசுவரியங்களையும் சொல்லிவிடுவார். கஞ்சி என்றால் இத்தனை வகை உண்டா என்று வியக்குமளவுக்கு வெவ்வேறு கதைகளில் அதனைப் பற்றிய குறிப்புகள் வரும். ‘அம்மை பார்த்திருந்தாள்’ கதையில் சுப்பையா ஒரு பாத்திரத்தில் பால் வாங்கி வருவான். அவன் மனம் போடும் கணக்கில் பாலினை வைத்து அவளது அம்மை எதையெல்லாம் செய்வாள் என்று ஒரு படம் ஓடும். சுக்குப் பால் தொடங்கி உறைகுத்தி  மோர்க்குழம்பு வைப்பது வரை நீளும் பால் பதார்த்த பாட்டியல் அது.   அந்த பாலைத் தான கொட்டி விடுவார்கள். அப்போது வாசிக்கும் நமக்கு ஒரு வேதனை சூழும்.

“சுப்பம்மாள் உளுந்தஞ்சோறு பொங்குகிறாள் போலிருக்கிறது, வறுத்த உளுந்தும் வித்துச்சம்பா அரிசியும் சுக்கும் திருவிய தேங்காய் பூவும் வெந்தயமும் வெள்ளாய்ங்கமும் சேர்த்து கலந்து கொதிக்கும் மணம். அதன் கரங்கோர்த்து உலவிய முட்டை அவியலின் வாசனை, முட்டையோடு முருங்கைக்காயும் வடகமும் போட்டிருப்பாள் போலிருக்கிறது “ என்று எழுதி அடுத்த வரி இப்படி எழுதியிருக்கிறார் “செல்லையாவின் வயிறு புறுபுறுத்தது. கன்னத்துச் சதையை உறிஞ்சிச் சப்பி உமிழ் நீரை உள்விழுங்குகையில் தன் காதுக்கு மட்டும் கேட்கும் சன்ன ஒலித்துணுக்கு…”

இபப்டி ‘ஆங்காரம்’ கதையில்  நீண்டு கொண்டே போகும். நாஞ்சில் நாடன் மும்பையில் பல வருட காலங்கள் விற்பனைப் பிரதிநிதியாய் பணி செய்ததில், வடஇந்திய உணவுகளும் அவருக்கு அத்துபிடி. அவற்றைப் பற்றிய குறிப்புகளும் உண்டு. இவருடைய ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது.

கும்பமுனி என்கிற பெயரை எங்கேனும் கேட்டால், வாசகர்கள் நாஞ்சில் நாடன் என்று சொல்லிவிடுவார்கள். கும்பமுனி நாஞ்சில் நாடனின் கற்பனைப் கதாபாத்திரம். நாஞ்சில் நாட்டு குசும்பின் மொத்த உருவம் கும்பமுனி. அவர் யாரையும் கேள்வி கேட்பார். நக்கல் செய்வார், எதையும் பேசுவார். சில நேரங்களில் கும்பமுனி, நாஞ்சில் நாடனையே இடக்கு செய்வார். “அந்தப் பயலுக்கு என்ன தெரியும்? என்னமாம் சம்சயம் வந்தா எங்கிட்டே வந்து தொண்ணாந்துகிட்டு நிப்பான். அவன் வாறாம்ணாலே இருக்கப்பட்ட பொஸ்தகத்தை எல்லாம் எடுத்து ஒளிச்சு வைக்கணும்.. கள்ளவாளிப் பய….” இது கும்பமுனிக்கு நாஞ்சில் நாடன் மேல் இருக்கப்பட்ட எண்ணம்.

அரசியலையும், நாட்டுநடப்பையும், இலக்கியத்தையும் கும்பமுனியின் பார்வையில் வாசித்தால் வயிறு வலித்துப் போகும். அப்படி சிரிக்கலாம். 

நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டு எழுத முடிந்திருக்கிறது. அவரது தலை கீழ் விகிதங்கள் ,என்பிலதனை வெயில் காயும் மிதவை. சதுரங்க குதிரை, எட்டுத்திக்கும் மதயானை போன்ற நாவல்கள் குறித்தெல்லாம் எழுத வேண்டுமானால் தொடர் தான் எழுத வேண்டியிருக்கும். இவரது தலைகீழ் விகிதங்கள் நாவல் சொல் மறந்த கதை எனத் திரைப்படமாக வெளி வந்தது. எடலக்குடி ராசா சிறுகதையில் வரும் ராசா தான் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ கதாபாத்திரம்.

நாஞ்சில் நாடன் சிறந்த கட்டுரையாளர். கம்பராமாயணத்தின் மீது அவருக்கு இருக்கும் பற்றும் அறிவும், ஆழமானவை. கம்பனைப் பற்றி அவர் பேச, கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் அதை நினைவு கொண்டிருப்பார்கள். சங்ககால இலக்கியங்கள் மீது அவர் கொண்டிருக்கும் இலயிப்பை அவர் எழுதிய சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு எழுத்தாளர் மரபான இலக்கியங்களை ஏன் வாசிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி தனது உரைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சங்க இலக்கியங்கள் காட்டும் காட்சி மீது மிகுந்த ரசனை கொண்டவர். நாஞ்சில் நாடனின் உரையைக் கேட்டவர்களும், வாசித்த பலரும் சங்க இலக்கியம் நோக்கித் திரும்பியிருப்பதை கண்டிருக்கிறேன், நான் உட்பட.

ஒரு எழுத்தாளர் தனது எழுத்தின் மூலமாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அடிக்கடி உரையிட்டுக் கொண்டே இருப்பார்கள். நாஞ்சில் நாடனைப் பொறுத்தவரை அவர் தனது எழுத்தைக் குறித்து  என்ன நினைக்கிறார் என்பது தனி. ஒரு வாசகராக, நாஞ்சில் நாடன் இலக்கியத்துக்கும், சமூகத்துக்கும் செய்திருப்பதெல்லாம் பெரும் கொடை. எதைத் தொட்டாலும் அதன் ஆழத்தைக் காட்டிவிடக்கூடியவர்கள் எப்போதுமே உயரத்தில் நிற்கிறார்கள். அவர்கள் எதையும் போதிப்பதில்லை. காட்டிவிடுகிறார்கள். அப்படிக் காட்டுகையில் நம்மால் அதிலிருந்து கண்களையும் மனதையும் திருப்ப முடிவதில்லை.

நாஞ்சில் நாடன் நம்மைத் திரும்பவும் வைப்பதில்லை

புகைப்படம் நன்றி jeyamohan.in

(மல்லிகை மகழ் இதழில் எழுத்து வாசம் தொடருக்காக எழுதப்பட்ட கட்டுரை)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments