ஏக்நாத் அவர்கள் எழுதிய ‘வேசடை’ நாவல் படித்து முடித்திருக்கிறேன். ஏக்நாத் அவர்களின் படைப்புகள் எனக்குப் பிடிக்கும். அவர் திருநெல்வேலியைப் பற்றி எழுதுகிறார் என்பது தொடக்கக் காரணமாக இருந்தாலும் ஒரு வசதிக்காக அவர் தான் வாழ்ந்த அம்பை, பாபநாசம் பகுதிகளை எடுத்துக் கொள்கிறார். அது அவர் வாழ்ந்த நிலம். அவர் காட்டுகிற மனிதர்களும் அவர்களது கதைகளும் நிலம் கடந்தவை.
மேய்ச்சல் நிலங்கள் குறித்தும் கால்நடைகளோடு மனிதர்களின் ஒட்டுதலும் உணர்வுகளையும் குறித்தும் என் வாசிப்புக்கு உட்பட்டு வேறு யார் எழுதியும் வாசித்ததில்லை. இவரது ‘கெடைகாடு’ நாவல் காட்டுக்குள் ஓட்டிச்செல்லும் மாடுகளின் மந்தையையும் அதுசார்ந்த வாழ்க்கையும் பற்றிப் பேசுவது.
வேசடை..ஒரு முதியவரின் கதை..அது மட்டுமல்ல, அவர் வழி அந்த நிலத்தைப் பற்றிய கதை. இப்படியான நாவல் ஒரு ஆவணம் என்றே சொல்லமுடியும்.
என்னுடைய வீடு சென்னை நகருக்குள் இருக்கிறது. தெரு முழுவதுமே அடுக்கக குடியிருப்புகள். லாரிகள் அடிக்கடி பயணிக்கும் தெரு. ஒருநாள் காலை எதிரில் உள்ள காலிமனை முழுக்கவும் ஆடுகள். பார்க்கையில் பரவசமான மனநிலை வந்துவிட்டது. அங்கு ஓரமாக ஒரு பாட்டி கையில் குச்சியுடன் தூக்குச்சட்டியுடன் அமர்ந்திருந்தார். அவர் கையிலொரு குட்டி ஆடு. யார் அந்தப் பாட்டி, இந்த நகரத்துக்குள் அவர் இத்தனை ஆடுகளை எங்கு அடைத்து வைத்திருகிறார், எப்படி இந்த சாலையின் நெருக்கடிக்குள் அவற்றை பத்தி கொண்டு போவார்..?? குழந்தைகளிடம் அழைத்துக் காட்டினேன். அவர்களைப் பொறுத்தவரைர ஆடு என்பது புத்தகத்தில் ஆ..ஆடு என்பதில் வரும் ஒரு விலங்கு.
பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த காலி மனை வீடுகளாக மாறும். அந்த ஆடுகள் எங்கு போகும் தெரியாது. இதற்கு முன்பு என் வீடு இருந்த நிலம் ஒரு வயக்காடு. பழக்கத்தின் காரணமாக அவ்வபோது பாம்புகளும் தவளைகளும் வந்துவிடுகிற இடம் தான்.
இந்த நிலத்திலும் ஆடு மாடு மேய்த்திருப்பார்கள்…அவர்களில் ஏதேனும் முதியவருக்கு இந்த இடத்தின் கதைகள் தெரிந்திருக்கும். அது போல வேடசையில் பனஞ்சாடிக்கு தான் அந்த நிலத்தின் கதை தெரியும்.. அவர் மறையும்போது தன்னுடைய ஒரே சாட்சியையும் நிலம் இழக்கிறது. பணஞ்சாடி அந்த நிலத்தில் தனக்கு இருக்கும் சிறு உரிமையையும் போராடிப் பெற்ற பிறகே நிலத்தை விட்டு நீங்குகிறார்.
‘என் மண்ணு..எவனுக்கு காசு கொடுத்து பட்டா வாங்கணும்” என்கிற வீம்பு அவர் அந்த நிலத்தின் மீது கொண்ட உறவினால் ஏற்படுவது..
வேசடை வாசித்து முடித்ததில் இருந்து பனஞ்சாடி சொல்கிற ஊர்க்கதைகளும் மனிதர்களும் எங்கு போனாலும் கூடவே திரிந்து என்னுடன் வம்பளந்து கொண்டிருக்கிறார்கள்.