உந்தன் தயவால் என்னை நடத்து..

0
219

இசையில் தொடங்குதம்மா – 1

ஒரு பேருந்து பயணம். குறிப்பிட்ட நேரம் கடந்தும் பேருந்து ஊர் போய்ச் சேரவில்லை. பயணிகளான எங்களுக்கு மிகுந்த சோர்வும் எரிச்சலும் ஏற்பட்டிருந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்த தம்பதியினர் எங்கள் பேரூந்தில் இருந்தனர். அவர்களுக்கு முகூர்த்த நேரம் முடிந்துவிடுமோ என்கிற தவிப்பு இருந்தது. ஓட்டுனர் எது குறித்த கவலையுமின்றி அவர் போக்கில் பேருந்தை நடக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு சாலையோர உணவு விடுதியில் நிறுத்தினார். யாருக்கும் உண்பதற்கான மனமோ பேருந்தை விட்டு இறங்குகிற மனநிலையோ இல்லை. அப்போது ஒரு பாடல் அந்த உணவகத்தில் இருந்து கேட்டது. அது ஜிக்கியின் குரலில் எழுபதுகளில் வெளிவந்த கிறித்தவ பாடல். ‘என்னை மறவா எசுநாதா..உந்தன் தயவால் என்னை நடத்து’ என்கிற பாடல் அது. ஜிக்கியின் மற்ற கிறித்தவ பாடல்களைக் காட்டிலும் இது அதிகம் பேரைச் சென்றடைந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த நேரத்தில் எல்லாருக்கும் அந்தக் குரலும், இசையும் தேவைப்பட்டது. அடுத்தடுத்து ஜிக்கியின் குரல் அங்கு நிறைந்திருந்தது. அதன் பின்பான ஒருமணிநேர பயணம் ஒருவித அமைதியுடனும், சமாதானத்துடனும் இருந்ததை உணர முடிந்தது.

இசைக்கு மாபெரும் வலிமை உண்டு. அதைவிட வலிமை அது நமக்குத் தருகிற நினைவுகளில் இருக்கிறது. சாலையில் நாம் சென்று கொண்டிருக்கும்போது தூரத்தில் கேட்கிற ஒரு பாடல் நம் நாளைத் தீர்மானிக்க கூடிய அளவுக்கு இருப்பதை உணர்ந்திருப்போம்.

எனது தோழிக்கு ஒரு குழந்தை இருக்கிறான். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை அவன். கோபம் வந்தால் அவனைக் கட்டுப்படுத்துவது கடினம். அவனை நல்ல இசை கேட்கும்படி செய்யவேண்டும் என மருத்துவர் சொல்லியிருக்கிறார். அதனால் வீட்டில் குறிப்பிட்ட நேரத்துக்கு மெல்லிய ஒலியில் இசை ஒலித்தபடி இருக்கும். அவன் அந்த நேரங்களில் அமைதியடைவதை அவன் அம்மாவும், அப்பாவும் கவனித்தனர். ஒருநாள் ஒரு தாலாட்டு பாடலை அவன் கேட்கிறான். எழுந்து போய் அவன் அம்மாவைக் கட்டிக் கொள்கிறான். இது அவனிடத்தில் இருந்து வெளிப்படுகிற அசாதரணமான செயல் என்று என் தோழி நினைத்ததாக சொன்னார். மறுநாளும் அந்தப் பாடல் ஒலிக்கும்போது மீண்டும் அதே போல் அவன் தன்னுடைய அம்மாவைக் கட்டிக் கொள்கிறான். ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலுக்கு மட்டும் அவன் இதை செய்வதை தோழியும் அவளது கணவரும் கவனிக்கின்றனர். பினனர் தான் தெரிய வந்திருக்கிறது அவன் கர்ப்பத்தில் இருந்தபோதும், அவன் பிறந்ததும் அவனைத் தூங்க வைக்கவும் இந்தப் பாடலை என் தோழி அதிகமும் பாடியிருக்கிறாள் என்பது.

ஒரு இசை இதைத் தான் செய்யும். உணர்வினை தகக் வைக்கும். அதனை உயிர்பித்துக் கொண்டே இருக்கும்.

அமெரிக்க சிறையில் ஒரு நபர் கொலைக் குற்றத்துக்காக தூக்கு தண்டனை தீர்ப்பு எழுதப்பட்டு அடைக்கப்படுகிறார். கடுமையான காவல் கொண்ட சிறை அது. அங்கிருந்து யாராலும் அவ்வளவு எளிதில் வெளிவர முடியாது. தூக்குத் தண்டனை பெறப்பட்ட கைதிக்கு அந்தக் கொலையை தான் செய்யவில்லை என்று தெரியும். அங்கிருந்து தப்ப வேண்டும் என்று முடிவெடுக்கிறார். ஆனால் கடுமையான காவல் கொண்ட சிறை. தப்ப வேண்டுமானால் அதற்கு தேவைப்படுவது நம்பிக்கை மட்டுமே என்று உணர்கிறார். அவர் அந்த நம்பிக்கையை சக கைதிகளிடம் பெற முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருமே கடுமையான மனநிலை கொண்ட குற்றவாளிகள். தனக்குள் இருந்து அந்த நம்பிக்கையை எப்படி உருவாக்குவது என்று யோசித்து அதற்கு இசையை ஒரு வழியாகத் தேர்ந்தெடுக்கிறார். தன்னை தனிமை சிறையில் அடைக்கும்போதும், சித்திரவதை செய்யும்போதும் மனதுக்குள் மீண்டும் மீண்டும் மொஸார்டையும், பீத்தோவனையும் இசைத்துக் கொண்டே இருக்கிறார்.

வருடங்கள் கடக்கின்றன. அங்கிருந்து சரியான திட்டமிடலோடு தப்பிக்கிறான். அந்த நம்பிக்கையை அவனுக்கு அளித்தது இசையா என்று கேட்டால், நேரடியாக ஆம் என்று பதில் சொல்லிவிட முடியாது. இசையை அங்குள்ள எல்லாக் கைதிகளுமே கேட்டிருப்பார்கள். ஆனால் அந்த இசையை அவன் நம்பிக்கையின் பற்றுக்கோலாக பிடித்திருந்தான் என்பது தான் முக்கியம். இது ‘The Shawshank Redemption’ என்கிற பிரபலமான திரைப்படத்தின் கதை.

எத்தனையோ இசை தொடர்பான திரைப்படங்கள் வந்திருந்த போதிலும் இந்தப் படத்தைக் குறிப்பிடும் காரணம், ஒருவரால் இசையோடு எப்படியும் இயைந்து கொள்ள முடியும் என்பதை சொல்வதற்குத் தான்.

இந்தத் தொடரும் கூட இசைக்கும் நமக்குமான இணைப்புப் பற்றியே பேசவிருக்கிறது. அது தரும் நினைவுகளை, உணர்வுகளை என பேசும் தொடர் இது.

அதிலும் தமிழ்சினிமாவின் இசை குறித்து வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது தான். உலகத்தில் வேறு எங்கும் திரைப்படங்களுக்கு நடுவே பாடல்களை சேர்ப்பதில்லை. இந்தியாவில் தான் இது பிரதானம். நாம் 75  பாடல்களுக்கு நடுவே போனால் போகிறதென்று ஓரிரு வசனங்களில் கதையை சொல்லி நகர்த்திக் கொண்டிருந்தோம். பின்னரே இந்திய சினிமா காட்சிக்கும், வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது.

இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும், பாடகர்களும், இசைக்கருவியினை இசைப்பவர்களும், ஒலிப்பதிவாளர்களும் என மேதைகளை நமக்குத் தந்திருக்கிறது இந்திய சினிமா. ஒரு படத்துக்கு கதை முக்கியம், திரைக்கதை அவசியம். எல்லாம் கடந்து இசை முன்னிலை வகித்த காலகட்டமும் எப்போதும் உண்டு.

மனிதமனம் இசைக்கு அடிமையானது. ஒரு பாடல் நம்மை அழ வைத்துவிடும். உருக வைக்கும். களி கொள்ள வைக்கும். இதற்கு பயந்து தான் சில மதங்களில் இசை கேட்பது என்பது பாவமான காரியம் என்று போதிக்கப்பட்டது. அதை எதிர்த்து இசையால் கடவுளை நெருங்க முடியும்..கடவுளும் இசையும் வேறல்ல என்று தாய் மதத்தில் இருந்து பிரிந்த மதங்கள் உண்டு.

தொல்குடியினர் பற்றி வாசிக்கும்போதெல்லாம், அவர்கள் இயற்கையையும் அதில் கண்ட இறைவனையும் இசையாலே ஆராதிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கடவுளை ஆராதிப்பவர்கள் பாக்கள் தான் பாடியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் சொல்வதற்கு காரணம் கூட இசையின் மகத்துவத்தினை சொல்ல அல்ல, அது சொல்லில் அடங்காதது. ஆனால் அதை புரிந்த கொள்கிறோம் என்கிற வெளிப்பாடு தான் இது.

நான் சிறுவயதில் கர்நாடக இசை கற்றுக் கொண்டேன். எனது குருவான சுப்பிரமணிய பாகவதர் கோபக்காரர். தாளத்திலோ, ஸ்ருதியிலோ பிசகு நேர்ந்தால் சட்டென்று அடித்து விடுவார். கல்லூரி படிக்கும்போது கூட அவரிடம் அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அது உரைத்ததேயில்லை. எங்களுக்கு பதிலுக்கு கோபம் கூட வந்ததில்லை. அவரால் இசையில் ஏற்படுகிற தவறினை ஒப்புக் கொள்ள முடிந்ததில்லை. அவர் தன்னுடைய குருநாதர் வீட்டிலேயே தங்கி குருகுலமாக இசையைக் தன்னுடைய வறுமையைப் போக்கியது இசை தான் என்பது அவரின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படும். இத்தனைக்கும் வறுமையைத் தான் விரட்டியதே தவிர அவருக்கான அங்கீகாரத்தையோ, புகழையோ, நிலையான வருமானத்தையோ இசை மூலமாக அவர் பெறவில்லை. அப்படி இசை மூலமாக கிடைக்கும் எதையும் அவர் தவறு என்று நினைத்திருந்தார் ஒருநாள் அவருடன் பேசிக்கொண்டே இசை வகுப்பில் இருந்து வீடு வரை வரவேண்டியிருந்தது. அன்று அவர் பேசியது அந்த வயதின் பக்குவத்தோடு பொருத்திப் பார்க்கையில் என்னால் உள்வாங்க முடியவில்லை. ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கும்போது அதன் ஆழம் புரிகிறது..

அவர் எந்தக் கச்சேரிக்கும் பணம் வாங்கியதில்லை என்றார். யாரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. கோயில்களில் பாட அழைத்தால் பாடுவார். இசையை அவர் வருமானம் தரும் தொழிலாகப் பார்க்கவில்லை. தன் வித்தையை மற்றவர்களுக்கு கற்றுத் தருவதில் கிடைக்கும் ஊதியம் கூட அவருக்கு பாரமாக இருந்திருக்கிறது. நம்புவீர்களா? மாதாமாதம் நாங்கள் அவருக்கு கொடுத்தது வெறும் பதினைந்து ரூபாய் தான். வாரத்துக்கு மூன்று நாட்கள் வகுப்புகள். வகுப்புக்கு வரவில்லை என்றால் ஏன் வரவில்லை என்று கேட்டு மறுநாள் வீடு தேடி வந்துவிடுவார். அதோடு முந்தைய நாள் எடுத்த பாடத்தை பாடிக் காட்டி, ‘பிராக்டிஸ் செய்’ என்று சொல்லிவிட்டு செல்வார்.

அவருக்கு சாமர்த்தியம் இல்லை என்றும், பிழைக்கத் தெரியாதவர் என்றும் கூட சொல்ல முடியும். ஆனால் அவர் மனமானது, எப்போதும் ஒன்றை மட்டுமே நினைத்திருக்கிறது. இசை என்பது ஒரு வித்தை, ஒரு கலை அதைத் தான கற்றுக்கொண்டதைப் போல விருப்பம் உள்ளவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். இதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? என்பது தான் அவருக்குத் தோன்றியது எல்லாம்.

 அவரை நாங்கள் வேதனைப்படுத்திய சம்பவம் உண்டு.

எம்.எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பிரபலபடுத்திய ‘குறையொன்றும் இல்லை’ பாடலை கற்றுத் தரச் சொல்லி ஆசிரியரிடம் கேட்டோம். ஆச்சரியம், அவர் அபபடியொரு பாடலே கேள்விப்பட்டதில்லை” என்றார். நாங்கள் அவருக்கு எங்களுக்குத் தெரிந்ததை பாடிக் காட்டினோம். அதில் அவருக்கு உவப்பில்லை. ‘இல்லை வேற சொல்லித் தர்றேன்’ என்றார். நாங்கள் விடாப்பிடியாக இருந்தோம். சட்டென்று எழுந்து “சுப்புலட்சுமி கிட்டே கத்துக்கோங்க’ என்று போய்விட்டார். மறக்கவே முடியாத சம்பவம் அது.

ஏன் அவருக்கு அவ்வளவு கோபம் வருகிறது? என்று அப்போது எங்களுக்கு புரியவில்லை. ஆனால் அவரை நாங்கள் வேதனைப்படுத்தியிருக்கிறோம் என்று மட்டும் புரிந்தது. வயது ஆக, ஆக நமக்கான அனுபவங்கள் நம்மைச்  சேரும்போது சில விடைகள் கிடைக்கும் இல்லையா..அது போல என்னால் ஒருகட்டத்தில் அவரையும், அவர் மனநிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது.

நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்கிற எண்ணம் வந்தது. ‘எங்களுக்கு ஒருநாள் புரியும் என்று அவருக்கும் தெரியும். அவரைப் பொறுத்தவரை இசை என்பது ஒரு வித்தை..ஒரு கலை. எல்லாவற்றுக்கும் மேலாக அது ஒரு மரியாதை.

இப்படியாக சொல்வதற்கு இருக்கிற நிகழ்வுகளும் உணர்வுகளும் இசை குறித்து ஏராளம் உண்டு. அடிப்படையில் தமிழ்சினிமா பாடல்களின் ரசிகை நான். ஒரு பாடலை என்னால் ஆராய்ச்சி, ஆய்வு செய்து எழுத இயலாது. அந்தளவுக்கான இசைநுணுக்கம் தெரியாதவள் நான்., ஆனால் பாடல்களை எல்லோரையும் போலவே ரசிக முடியும்., எனது ரசனையை பகிர்ந்து கொள்வதன் மூலமாக உங்களுக்குள் ஏதோ ஒரு நினைவை, உரையாடலை, புரிதலை, மகிழ்ச்சியை தொடக்கி வைக்கக முடிந்தால் அதுவே இதை எழுதுவதற்கான சரியான காரணமாக அமையும்.

‘இசையில் தொடங்குதம்மா’ என்கிற இந்தத் தொடர் வழி நாம் மானசீகமான உரையாடலைத் தொடங்கலாம்..

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments