உள்வயம்

0
397

கடல் பார்த்து உட்கார்ந்திருந்தாள் நந்தினி. முதுகில் சுள்ளென்று எதுவோ பட்டது. திரும்பிப் பார்க்கையில் அவள் நிழல் மட்டுமே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது. வலது புறத்தில் ஒரு வெள்ளைக் குதிரை. அதன் முதுகில் கறுப்பு நிறத்தில் ஒரு கனத்த சால்வை. அதன் மூக்கில் இருந்து முதுகு வரை தடித்த வார்ப்படங்கள். அதில் உருளையான சிறு மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தக் குதிரை அவள் பார்த்த சில நொடிகளில் அவளுக்குள் தன்னை பதியவைத்திருந்தது. நந்தினி  திரும்பவும் கடல் பார்த்தாள். செழியனின் வருகைக்குள் யோசித்துவிட வேண்டும். தொடரலாம்..வேண்டாம். இரண்டே சொற்கள். ஆனால் ஒன்று தான் நிச்சயம். சுள்ளென்று மற்றொரு சின்னஞ்சிறு அறை பட்டது போல முதுகு காந்தியது. இப்போது குதிரை அவளது இடது புறத்தில் மிக அருகில் நின்று கொண்டிருந்தது. நந்தினி அதையே முறைத்துப் பார்த்தாள். நந்தினி  இத்தனை அருகில் ஒரு குதிரையின் கண்களைப் பார்த்ததில்லை. அந்தக் கண்களில் கடலும், அவளும் தெரிந்தார்கள். மிக துல்லியமான அடர் பழுப்பு நிற தேங்கிய தண்ணீரில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. “உன் கண்களில் கடல் தெரிகிறது..குழம்பிய குட்டையில் தெரியும் உப்பு நீர் போல” என்றாள். அது நந்தினிக்கு இன்னும் அருகில் வந்தது. மூச்சுக் காற்றுடன் அதன் மூக்குத் துவாரங்களில் இருந்து மிக மெலிதாய் நீர் தெளித்து கடல் காற்றில் பறந்தது. நந்தினி எழுந்து தள்ளி அமர்ந்தாள்.

அது இன்னும் அருகில் வந்து நின்றது. கால் மடித்து அமர்ந்தது. யானை போல உன்னால் இதை செய்ய முடிகிறதே என்றபடி எழுந்து இன்னும் சற்றுத் தள்ளி நகர்ந்தாள். அது எழுந்து மீண்டும் அவளருகில் வந்து தலையைக் குனிந்தது. காலை மடக்கியது. மூச்சின் ஓசையை அலைக்கு நிகராக அருகில் கேட்டாள் நந்தினி.

அதன் கால்களைத் தடவினாள். அது இன்னும் தலையைத் தாழ்த்தியது. அதன் தலையைத் தடவிக் கொடுத்தாள். அதன் கண்களில் இருந்து அவளால் தன்னை மீட்டிக் கொள்ள முடியவில்லை. அது புரிந்து குதிரை கழுத்தை கீழே தாழ்த்தியது. தன் நாவினால் அவளது உடையை முகர்ந்தது. அவள் அதன் கழுத்தைத் தூக்கி மீண்டும் அதன் கண்களைப் பார்த்தாள். அவள் மட்டுமே தெரிந்த கண்கள். கைகளை மணலில் பின்னால் ஊன்றித் தலையை சாய்த்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரை எந்தவொரு சிறு அசைவுமின்றி அவளையேப் பார்த்தபடி இருந்தது. நந்தினி குதிரையின் கண்களை விட்டு மீள முடியாமல் அதில் தெரியும் தன்னைப் பார்த்துக்கொன்டிருந்தாள். ‘ம்’ என்று தன்னிச்சையாக அவளிடமிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து உட்கார்ந்து கிடக்கும் அதன் முதுகில் அமர்ந்தாள். மிக மெதுவாக எழுந்து நின்றது. அவள் அலுங்கவே இல்லை. ஒரு காலால் மணலை பின் தள்ளியது.

“போகலாம்” என்றதும் அது தன் கால்களை மணலில் இருந்து எடுத்து முன்வைத்தது.

நந்தினி அசைந்தபடி கடலைப் பார்ப்பது இது முதன்முறை. கடலுக்கு அப்போதும் எந்த வித்தியாசமும் இல்லை.

குதிரை மெரினாவின் கடற்கரைத் தாண்டி சாலைக்குள் வந்தது. நந்தினி குதிரையின் கழுத்தினை மெதுவாக நீவிவிட்டாள். முடிவெனில், தொடங்கிய இடத்துக்கு போக வேண்டும் என்றாள். குதிரை அவளை சாந்தோம் சாலைக்குள் அழைத்துச் சென்றது.

சாந்தோம் தேவாலயத்தின் பின்பக்கம் உள்ள கடற்கரையில் போய் நின்றது. அது நின்ற தோரணையில் உள்ள உறுதியை நந்தினி ரசித்தாள்.

அவள் அங்கிருந்தபடி தேவாலயத்தின்  வெண்ணிற ஊசி கோபுரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால்என் கற்பனைகளைக் கைகொள்ளுங்கள்

புனித யோவான் 14:15

இந்த வசனத்தில் தான் நந்தினிக்கு முன்பொரு முறையும் பார்வை  நிலைத்திருந்தது. அவளுக்கு பைபிள் மனனமாய்த் தெரியாது. ஆனால் வாசிக்கத் தெரியும். அதன் அர்த்தத்தை உள்வாங்கத் தெரியும். சில வார்த்தைகள் அவளை சுண்டியது போல நிறுத்தியிருக்கின்றன. ஆனால் இந்த ஒரு வசனம் பைபிளில் இருந்திருக்குமா என்கிற சந்தேகம் நந்தினிக்குத் திரும்பத் திரும்ப வந்து போனது.

யாரிடம் கேட்பது என்கிற குழப்பம். அவள் அறிந்த கிறித்தவர்கள் யாவரும் பைபிளைக் கட்டி அழுபவர்களாகவே இருந்தார்கள். இந்த ஒரு வசனம் ஒரு பெண் மூலம் தான் சொன்னவருக்கு வந்தடைந்திருக்க வேண்டும். இதைச் சொன்னால் ஏசப்பா என்று நெஞ்சில் கைவைத்து சிலுவை குறி இடுவாள் ஸ்டெல்லா. அவளுக்கு இயேசுவும் அவரைச் சார்ந்தவர்களும் பெண்களை அண்டவிடாத புனிதர்கள். ‘பெண்களை கண்டுகொள்ளாதவர் எப்படி புனிதராக இருக்க இயலும்அதிலும் உங்கள் இயேசு சாந்தமான முகத்துக்காரர்..பெண்களை அருகில் சேர்க்காதாவர்களுக்கு இத்தனை சாந்தம் முகத்தில் ஏற்படாது ஸ்டெல்லா’ என்று சொன்ன நாளிலும் அவள் இப்படித் தான் சிலுவைக் குறி இட்டுக் கொண்டாள். கடவுள்களை புனிதராக்கும் பேரில்நீங்கள் அவரை மறுத்துக் கொண்டே விலகுகிறீர்கள் என்று கூட வாதம் செய்திருக்கிறாள்.

இந்த வசனம் நிச்சயம் ஒரு பெண்ணால் மட்டுமே சொல்லியிருக்க முடியும். அப்படிஎனில் அந்தப் பெண்ணின் கற்பனைகள் என்னவாக இருந்திருக்கும்

இப்படியெல்லாம் சாந்தோம் தேவாலயத்தின் பின்புறம் உள்ள கடற்கரைச் சுவற்றில் அமர்ந்து யோசிக்க ஏதுவான இடம் நந்தினிக்கு அன்றைய தினம் கிடைத்திருந்தது.. ‘ஏசுவே..இதனைப் பகிர்ந்து கொள்ள நல் ஆத்மாவை எனக்கு அனுப்புவாயாக..ஆமென்’ என்று நந்தினி சொல்லி முடிக்கும்போது செழியன் போன் செய்தான். அட ! இயேசு படு கில்லாடியான ஆள் தான் என நினைத்துக் கொண்டே நந்தினி போனை அட்டென்ட் செய்தாள்.

“எங்க இருக்கீங்க?”

“ஒரு குட்டி சுவத்துல உக்காந்து ஏசுவையும் பொண்ணுங்களையும் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்”

“புரியல”

“சாந்தோம்ல இருக்கேன் செழியன்”

“உங்களைப் பார்க்கணும். கிளம்பி வாங்க”

அன்று உடனே அவள் அங்கிருந்து புறப்பட்டாள்.

செழியன் இப்படி அவசரகதியாய் அழைப்பவன் அல்ல. அவள்குக்கு அன்று அலுவலக விடுமுறை தினம் என்று தெரிந்தும் அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறான் என்றால் ஏதேனும் முக்கிய விஷயமாய்த் தான இருக்கும் என நந்தினி நினைத்திருந்தாள்.

இப்போது குதிரை நந்தினியிடம் கேட்காமலேயே சாந்தோமிலிருந்து புறப்பட்டது.

குதிரையின் நடையில் துள்ளல் தெரிந்தது.

சாந்தோம் சாலையில் இருந்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் இருபது நிமிடங்கள் ஆகும். குதிரை சில நொடிகளில் அந்த நேரத்தைக் கடந்தது. நந்தினி அதன் தலையை வருடி கொடுத்தாள். “இது தான் எனது அலுவலகமாக இருந்தது..எங்கள் இருவருக்குமே இது தான் அலுவலகம். நாங்கள் என்றைக்குமாய் சேர்ந்தே இருக்கப் பணிக்கப்பட்டிருக்கிறோம் என்று முதல் பார்வையில் இருவருமாகக் கண்டு கொண்ட இடம்”. குதிரை தலையைத் திருப்பி நந்தினியைப் பார்க்க முயற்சி செய்தது. பார்த்திருந்தால் “நீ ஒரு முட்டாள்” என்று சொல்வதை புரிந்து கொண்டிருக்கமுடியும். நந்தினிக்கு இது தெரியுமாகையால் அவள் குதிரைக்கு மீண்டும் தடவிக் கொடுத்தாள். “முட்டாளாகவே இருப்பது ஒண்ணும் பிரச்சனையில்லையே. எப்போதும் புத்திசாலியாக இருப்பதற்கு நான் ஒன்றும் உன்னைப் போன்ற குதிரை இல்லையே!” குதிரைக்கு பெருமையாக இருந்திருக்க வேண்டும். ஒருமுறை நின்ற இடத்தில் இருந்து இரண்டு அடி பின்னால் நகர்ந்து தனது நிழலைப் பார்த்தபடி அலுவலக சுற்றுச்சுவற்றின் அருகே போய் நின்றது. அங்கிருந்து அலுவலகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றைய தினத்தில் செழியன் நிதானமாக நடந்து வருவது இப்போது தெரிந்தது. நந்தினிக்கு தனது படபடப்பை மறைத்துக் கொள்ள போதிய நேரத்தை அவன் தனது நிதானத்தில் தந்திருந்தான்.

வந்தவன் “டீ சாப்பிடலாமா?

“எதுக்கு இப்ப ஆபிஸ் வரச் சொன்னீங்க செழியன். யாராவது பார்த்துடப் போறாங்க. ஏற்கனவே நம்ம ரெண்டு பேர் பத்தியும் ஆபிஸ்ல கிண்டல் பண்றாங்க. அதுக்கு ஏன் வாய்ப்பு குடுக்கறீங்க”

“இதெல்லாம் தெரிஞ்சும், நான் கூப்ட்டதும் ஏன் வந்தீங்க?

“அவசரமா பாக்கனும்னு சொன்னீங்களே”

“அவசரம்னு நான் சொல்லலியே”

“சரி செழியன். நான் கிளம்பறேன்”

“போயிடாதீங்க. நில்லுங்க. சொல்லனும்னு தோணிச்சு. உடனே சொல்லலைனா அதையே நினைச்சிட்டு இருப்பேன்”

“ம்..சொல்லுங்க. சர்க்கரை அதிகமா போட்டுட்டாங்க..டீ குடிக்க முடியல”

இது தன்னை சமன் செய்வதற்காக சொல்லப்பட்ட வாக்கியம் என நந்தினிக்குத் தெரியும்.

“நாம கல்யாணம் செய்துக்கலாமா?”

“ம்.. என்ன?”

“உங்களுக்கு இஷ்டம்னா சொல்லுங்க..”

“இதைச் சொல்றதுக்கு இத்தனை நாள் ஆச்சா இடியட்?”

“ஏன் சொல்லணும். உனக்கேத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்”

“தெரியும்..தெரியும்”

நந்தினியின் பெருமூச்சு குதிரையைத் தீண்டியிருக்க வேண்டும். அது நகராமல் அதே இடத்தில் நின்றது. சிறு அசைவும் தரலாகாது என்கிற வைராக்கியத்துடன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. “போகலாம்” என்றாள்.

குதிரை இலக்கில்லாமல் அதே சாலையில் இடதும் வலதுமாக அலைந்து கொண்டிருந்தது. வண்டிகள் குதிரையைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தன. 

குதிரை சாலையை சுற்றிக் கொண்டு டீக்கடைக்கு வந்து நின்றது. நந்தினி டீக்கடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரையின் கழுத்தோடு சேர்ந்து சாய்ந்து கொண்டாள்.

“எனக்கு இங்கேயே நிற்க வேண்டும் போல இருக்கிறது. நன்றாக இருக்கிறது இல்லையா?”

குதிரை கால்களை அழுத்திக் கொண்டு நின்றது. நந்தினி சாய்ந்தபடி கண்களை மூடினாள்.

போயாக வேண்டும் அடுத்தடுத்து என்றபோது கால்களை மிக மெதுவாக எட்டி வைத்தது குதிரை.

நந்தினிக்கு அதன் அசைவு பிடித்திருந்தது. கண்களைத் திறந்து பார்த்தாள்.

கண்களைத் திறந்து பார்க்கையில் பீச் ஸ்டேஷன் எதிரில் நின்றிருந்தது.

“எவ்வளவு நேரமா காத்துட்டு இருக்கறது? வர முடியாதுன்னு சொல்லியிருந்தா நான் வேற ஏதாவது வேலைப் பார்க்கப் போயிருப்பேன் செழியன்”

செழியன் ஒன்றும் பேசவில்லை. தண்டவாளத்தில் இப்போதே குதிக்கப்போகும் தீவிரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இப்படி அமைதியாக இருப்பவன் இல்லை. நந்தினிக்கு எரிச்சல் எரிந்தது. தாமதமாக வருவதென்பதை அவன் உரிமையைப் போல மாற்றிக் கொண்டிருந்தான். நந்தினி அவன் நாசியைப் பார்த்தாள். அவன் கண்களின் தீவிரத்தன்மையை விளக்கிக் கொள்ளும்போதெல்லாம் அவனது நாசியையே அவள் பார்க்க பழகியிருந்தாள். அது சற்றுக் கூர்த்தன்மை கொண்டது. முகத்தின் சதுரத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத கூர் நாசி. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். எதற்காக இப்படி இரைந்து நிற்கிறோம்? எழுந்து போய்விடலாமா என்று தோன்ற ஒரு வீம்பும் வந்தது. நேரம் கழித்து வந்த அவன் பேசட்டும்.

செழியன் இன்னும் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தான்.

“தண்ணி குடிக்கிறியா செழியன்?”

“ம்…வேண்டாம்…இல்ல குடு”

“எதாவது பிரச்சனையா?”

“ஆமாம்..”

“என்ன”

“ப்ச். நை நைங்காத..மண்டைக்குள்ள ஓராயிரம் விஷயம் ஓடிட்டு இருக்கு..கிளம்பறேன்..வேலை  இருக்கு. உனக்குத் தான் வேலை எதுவும் இல்ல. அவசரப்பட்டு வேலையை விட்டுட்டு நீ கூப்பிடும்போதெல்லாம் வரணும்னு ஏன் எதிர்பார்க்கற?” என்றவன் எதற்காக அழைத்தாள் என்பதைக் கேட்காமல் எழுந்து நின்றான்.

எப்படி அவனால் அப்படி சொன்ன அடுத்த நொடி எழுந்து போக முடிந்தது என்று இப்போதும் நந்தினியால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அன்று அமர்ந்திருந்த அதே பெஞ்சின் அருகில் அதை முகர்ந்துகொண்டு நின்றிருந்தது குதிரை. நந்தினிக்கு இப்போதும் அன்றைய தினத்தின் கண்ணீர் வந்தது.

குதிரை அசையவேயில்லை. ஒரு சிலையின் கண் கொண்ட கூர்மையை உடல் முழுவதும் கொண்டு வந்திருந்தது.

“இங்கேயே நின்று கொண்டிருந்தேன்..திரும்ப அவன் வரவில்லை. ஏன் அப்படி நடந்து கொண்டான் என்பதற்கான விளக்கமும் இல்லை. ஓராயிரம் விஷயங்கள் கூடிக் கூத்தாடிய அவனது நினைவில் ஒன்றாய் நான் இல்லை. கண்டுகொள்ளாமல் இருப்பதை விடவும் அதை உணர்த்துவது பெரும் வலி”

குதிரையின் இடது காது ஒருமுறை வீசி நின்றது.

“நான் அன்று அழுவதற்கு இடம் தேடினேன். ரயிலில் ஏற பயந்தேன். ஏறினால் என் அழுகை எல்லோருக்கும் தெரிந்துவிடும். அழுவதற்கு என்று ஏன் ஒரு பொது இடம் இங்கில்லை?”

குதிரை மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது.

வெண்வெளிச்சம் படர்ந்த ஒரு அறைக்குள் நின்று கொண்டிருந்தது குதிரை. கண்கள் கூச, கையால் கண்களை மூடிக்கொண்டாள். அறை மெல்லத் துலங்கியது. “இங்கிருந்து போக வேண்டும். என்னை சிக்க வைக்கும் பொறி இது. போகலாம்”. என்றாள். குதிரை தன் போக்கில் அசையாமல் நின்றிருந்தது. அதன் பிடிவாதத்தை நந்தினி அறிந்து கொண்டாள். அதனை மீற வேண்டும் என்று அவளுக்கு உறுதியாகத் தோன்றியது. “போகலாம்” என்றாள் அழுத்தி. அது தன் கால்களை மடக்கி அங்கேயே அமர்ந்து கொண்டது.  இந்த அறையை நோக்கி குதிரை வருமென அவள் அறிந்திருக்கவில்லை. இருளுக்குள் கிடந்ததெல்லாம் வெளிச்சத்தின் நடுவில் கவிழ்ந்திருப்பத்தை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரையிடம் கெஞ்சத் தொடங்கினாள். “நாம் போய்விடலாம்.” அவள் கெஞ்சக் கெஞ்ச அது தலை கவிழ்ந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த உறுதியில் அவள் வெலவெலத்துப் போனாள். உடலும் உள்ளமும் சோரக் கிடந்த அறை அது.

செழியனின் வருகையை அறிவிக்கும் கதவுகள் அவளுக்கு குதூகலத்தைக் கிளப்பிய சில காலங்களில் அவை பயத்தையும் தந்திருந்தது. திருமணத்துக்குப் பிறகான செழியனின் கோபத்தின் அத்தனைத் தணலையும் உள்வாங்கிய அறை. “என் மீதான தவறென்ன? இத்தனை கோபம் என் மீது எதற்காக” என்று கைகூப்பும் வேளைகளில் ஒரு கணமேனும் அந்த கூப்பிய கைகளை பிரித்து “என் முன் இப்படி இரைந்து நிற்காதே..அதற்கல்ல உன்னைத் திருமணம் செய்து கொண்டது” என்று சொல்லியிருக்கலாம். இல்லேயேல் திரும்பியேனும் பார்த்திருக்கலாம். பொருட்படுத்தத் தகுதியில்லாத கணங்கள் ஆகின அவை. கெஞ்சுதலின் கீழ்மையை அவள் கைவிடத் தொடங்கியபோது தான் அந்த உறுதி படர்ந்திருந்தது.

குதிரை மெதுவாக எழுந்தது. “அந்தக் கணத்தை நான் அறிவேன். எல்லாம் உடைந்து மனம் அமைதியான கணம். இறைஞ்சுதல் கூடாது என்று முடிவு கொண்ட கணம். நூலைப் பின்னிக் கொண்டே போவதில் உள்ள சிக்கல் போல அவள் மனதுக்குள் சிடுக்கிக் கொண்டிருந்த நூல்களை அவள் பிரிக்கவில்லை. வெட்டியிருந்தாள். ஆசுவாசத்தின் கணம் அது. மிக நீண்ட நாட்களுக்குப் பின் அவள் கண்ணாடியைப் பார்த்தாள். அவள் சிரித்துக் கொண்டிருப்பது அவளுக்கேத் தெரிந்தது. “இவ்வளவு தான்..இந்த நொடி தான்..இதற்கு இத்தனை சிகக்கல்கள், சிடுக்குகள்..” என்று மட்டும் எழுதி அவன் கண் படும் இடத்தில் வைத்துவிட்டு நந்தினி புறப்பட்டிருந்தாள். இந்த வீட்டுக்கு நான் மீண்டும் திரும்பவேயில்லை என்றாள் குதிரையிடம். அது ஒரு காலை ஊன்றி எழுந்தது. அங்கிருந்து அது செல்லத் தொடங்குகையில் , அந்த அறையில் வெளிச்சம் மூடிக்கொண்டதை நந்தினி உணர்ந்தாள்.

“நீ பொல்லாத குதிரை..எதை யோசிக்கக் வேண்டாமோ அதைக் கொண்டு வந்து நிறுத்தி சோதிக்கிறாய். போதும் திரும்பிவிடலாம். இன்று அவன் வந்து இரைஞ்சுவான். மீண்டும் என்னுடன் வந்துவிடு” என்பான்.

குதிரை கழுத்தைத் திருப்பியது. கடற்கரை நெருங்கிக் கொண்டிருந்தது. “என் மனதில் உறுதியில்லை. அவன் வந்து நின்று இறைஞ்சினால் நான் வீழ்ந்துவிடுகிறேன். என் பலவீனத்தின் மீது நானே என்னை முட்டிக்கொள்கிறேன். இனி எனக்கும் உனக்குமான உறவு முடிந்தது” என்று சொல்வதில் கொண்ட பெருந்தயக்கம் எதனால் என்று யோசித்தபடி இருக்கிறேன். பேசலாம் வா என்றழைக்கும்போதே உதறித் தள்ள ஏன் முடியவில்லை. மீண்டும் மீண்டும் வலியையும் அவமானத்தையும் தேடித் தேடி அவனிடத்தில் இருந்து சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அவனை விட்டு விலகுவதை விடவும் கொடுமையானதாக இருக்கிறது, பலவீனத்துடன் வாழ்வது. மனம் எந்த நேரமும் மனந்திரும்புதலை வேண்டிவிடக்கூடும் என பிடிவாதமாக அதனைக் கட்டியாள வேண்டியிருக்கிறது. இதெல்லாம் உனக்குப்புரிவதில்லை. நந்தினி அழுது கொண்டிருந்தாள். குதிரை அசையாமல் நின்றது. அவளது கண்ணீர் குதிரையின் பாதம் வரை நனைத்தது. அது இன்னும் கால் அழுத்தி நின்றுகொண்டது. புறக்கணிப்பை இனி ஏற்றுக் கொள்வதாயில்லை என்றாள். ஒருவேளை சரியாகிவிடலாம் என்றால் செழியனை ஏற்றுக்கொள்ளாலாம் என்றாள். குதிரை அசையத் தொடங்கியது. ஒரு எட்டு கூட வைக்காமல் இருந்த இடத்தில் தன அசைவை வெளிக்கொண்டு வந்தது,

எனக்கொரு வழி சொல் என்றாள். குதிரை அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தது. நந்தினி இறங்கினாள். அவளது முன்பாக அதே கடல் இருட்டின் நிறத்தை வாங்கியிருந்தது. என் கண்ணீரை விட உப்பு நீரைக் கொண்டிருக்கிறாய் என்றாள் கடலிடம். அபத்தமான சிந்தனை என்று உடனே நினைத்துக் கொண்டாள். அவள் மேல் இரவுக்கென விழும் நிழல் விழுந்தது. அவன் வந்துவிட்டான் என்பதை அறிந்தாள்.

ஒரு மணிநேரமாகிவிட்ட்டது. தாமதத்திற்கான எந்த மன்னிப்பு கோரலுமற்று பேசத்தொடங்குவான்.


அவன் அமர்ந்தான்.


“அப்புறம்..”

“சொல்லு செழியன்..கூப்பிட்டுருந்த”

“ம்…என்ன முடிவு பண்ணலாம்”

குதிரையின் நீண்ட நிழல் கடலுக்குள் விழுவதைப் பார்த்தாள். ஒரு நொடியில் நிழல் அலை மேல் எழுந்து மறைந்தது.

“வேண்டாம் செழியன்..என்னுடைய கற்பனைகளை உன்னால் ஒருபோதும் கைகொள்ள  முடியாது. உனது யதார்த்ததோடு கற்பனைகளை சேர்க்க முடியாது’

“அதாவது..நீ பிரிஞ்சு போகப்போற…”

“ஏற்கனவே அப்படிதானே இருக்கோம்..”

“கற்பனைன்னு எதோ சொன்னியே..என்னது அது?” என்று இரு கைகளிலும் உள்ள மணலைத் தட்டினான்.

“நான் இல்லாமல் உன்னால் வாழ முடியாது என்று தெரிஞ்ச பிறகு உன் அகங்காரத்தை விட்டுக் கொடுக்காம இங்க வந்து உன்னால சாதாரணமா பேச முடியுது..இது உன்னோட எதார்த்தம். “நீ இல்லாம என்னால வாழ முடியும்னு தெரிஞ்சு உன்னைப் பார்த்தா என்னாவேனோனு இன்னும் பயந்துட்டு இருக்கறது என்னோட கற்பனை”

செழியன் அமைதியானான். நந்தினி கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் குதிரையின் பெருமூச்சு கேட்டது. அது உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருப்பது நந்தினிக்கு புரிந்தது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments