நாயகி 1947

6

நாயகி 1947 நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. குறித்த நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் என நாங்கள் நினைத்திருந்தோம். சரியாய் நான்கு மணிக்கு நிகழ்வைத் தொடக்கினோம். விடுமுறை நாள் நான்கு மணி என்பது சரியான நேரம் இல்லை என்கிற தயக்கம் இருந்தது. ஆனால், ஆச்சரியமாக நாங்கள் வருவதற்கு முன்பே சிலர் அரங்கத்தில் அமர்ந்திருந்தார்கள். பேச்சாளர்கள் மிகச்  சரியான சமயத்துக்கு வந்திருந்தனர். நான்கரை மணிக்கு அரங்கம் நிரம்பியிருந்தது. நிச்சயம் இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

பேச்சாளர்கள் ஒவ்வொருவருமே மிகச் சிறப்பான தயாரிப்போடு வந்திருந்தார்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் உரையை முடித்துக் கொண்டார்கள். அத்தனை உரைகளுமே கச்சிதம். காரணம், அவர்கள் எல்லோருக்குமே எதைச் சொல்ல வேண்டும் என்கிற தெளிவு இருந்தது. வ.உ.சி , வவேசு, பாரதியார், நாமக்கல் இராமலிங்கனார், வாஞ்சிநாதன், மாசிலாமணி இவர்கள் குறித்து பேசாமல் இவர்களுடைய மனைவியர் குறித்து உரையாற்ற இயலாது. இவர்களைப் பற்றிப் பேசுகையில் பின்புலமான அரசியல், விடுதலைப் போராட்ட வரலாறு, பண்பாடு போன்றவற்றைப் விட்டுவிடமுடியாது. எல்லாவற்றையும் ஒன்றிணைத்துப் பேசினார்கள்.

நேற்றிய தினம் இளம் தலைமுறையினரை அரங்கத்தில் அதிகம் பார்க்க முடிந்தது. அவர்கள் அத்தனை ஆர்வமாகக் கேட்டார்கள். திரும்பவும் சுதந்திரப் போராட்ட வரலாற்றினை மீள் வாசிப்பு செய்ய வேண்டும் என்று அவர்கள் பேசியது நிறைவு தந்தது.

பாக்கியலட்சுமி வவேசு பற்றிப் பேசிய கோமதிசங்கர் அவர்கள் பாக்கியலட்சுமி எதிர்கொண்ட தொடர் துக்கங்களை சொல்லி முடிக்கும்போது அதில் இருந்து அவர் தன்னை திசைத்திருப்பி சமூகப் போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டதை சொன்னபோது இது தானே நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்று தோன்றியது.

சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் செல்லம்மாள் பாரதி குறித்து பேசினார். பித்து பிடித்த கவிஞரின் மனைவியின் மனதை ஒரு பெண்ணாக உணர்ந்து அவர் பேசிய விதம் மிக அருமை. ஒரு புள்ளியேனும் பாரதியையும் விட்டுக் கொடுக்காமல் செல்லம்மாவையும் நமக்குள் கடத்திய அவரது பேச்சு சுவாரஸ்யமும், ஈர்ப்பும் கொண்டதாக இருந்தது.

வ.உ.சி அவர்களை பெரியவர் என்றே எப்போதும் ரெங்கையா முருகன் அவர்கள் சொல்வார். பெரியவரின் மனைவியரான மீனாட்சியம்மாள், வள்ளியம்மாள் குறித்துப் பேசினார். இவர் தான் இந்த நிகழ்வுக்கு முதல் அடி எடுத்துத் தந்தவர். மீனாட்சியம்மாளின் ஆளுமை தெரிந்த நாள் நேற்று. அவர் பேசப்பேச மீனாட்சியம்மாள் மீதான மரியாதையும் மதிப்பு கூடிக் கொண்டே இருந்தது. நீதிமன்றத்துக்கும், காவல்நிலையத்துக்கும், வீட்டுக்கும் அவர் நடந்து நடந்து சோர்ந்து போயிருகக் வேண்டும், ஆனாலும் கடைசி வரை தன் நிலைப்பாட்டில் மாறாமல் நின்றிருக்கிறார். உணர்வெழுச்சி கொண்ட உரை அது.

ஜெபமணி மாசிலாமணி குறித்து அவர்களது பெயரன் திரு.டொமினிக் பேசினார். ‘பேச்சாளர்கள் இருக்கும் அவையில் நான் எப்படிப் பேசுவது’ என்கிற தயக்கத்தோடு எங்களிடம் கேட்டார். உங்களது வருகையும், உங்கள் பாட்டி தாத்தாவைக் குறித்துப் பேசுவதும் எங்களுக்கு அவசியமானது என்று சொன்னோம். எழுதி எடுத்து வந்து வாசித்தார். மிக நல்ல உரை அது. அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர். அவர்களது தாத்தா, பாட்டி பற்றி பொது மேடையில் இப்போது தான் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது என்றார். அந்த வாய்ப்பு அமைந்தததற்கு நாங்கள் மிக நன்றியுடன் இருக்கிறோம்.

நாங்கள் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்களை அணுகிய போது நாமக்கல் கவிஞர் இராமலிங்கனாரின் மனைவியரைப் பற்றிப் பேசட்டுமா? என்று கேட்டார் கடற்கரய். பிறகே நாங்கள் நாமக்கல் கவிஞர் பற்றி இன்னும் தெரிந்து கொண்டோம். கவிஞரின் மனைவி முத்தம்மாள் போன்ற பெண்ணின் தாக்கத்தினை எத்தனை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது என்று தான யோசித்துக் கொண்டிருந்தேன்.  நாமக்கல் கவிஞருக்கும் அதிர்ஷ்டத்துக்கும் வெகு தூரம் என்று சொல்லி சில சம்பவங்களை கடற்கரய் சொன்னபோது இப்படி ஒரு மனிதருக்கு நிகழ்திருக்க முடியுமென்பதை நினைத்து வருத்தமாக இருந்தது. இதனிடையில் முத்தம்மாள் கவிஞரை எப்படி பார்த்துக் கொண்டிருந்தார் என்பது தான முக்கியம்.

வாஞ்சிநாதன் குறித்து சௌந்தர மகாதேவன் அவர்கள் பேசியிருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக அவரது குடும்பத்தில் ஒரு இழப்பு ஏற்பட்டதால், அவரால் வர இயலவில்லை. அந்த நிலையிலும்  ‘நான்  வருவதற்கு முயற்சி செய்கிறேன்’ என்று அவர் சொன்னது எங்கள் மீதான அவரது மதிப்பினைப் புரிய வைத்தது. பொன்னம்மாள் வாஞ்சிநாதன் குறித்து யாராவது பேச வேண்டும் என்கிற தடுமாற்றமும், தவிப்பும் எங்களுக்கு இருந்தது நான் பேசினேன். அரை நாளில் சேகரித்த, படித்தத் தகவலகள், ஏற்கனவே நான் தேடித் தெரிந்து வைத்திருந்தவை கொண்டு பேசியிருக்கிறேன். மற்றத் தோழிகள் ஏழு பேரும் கொடுத்த ஊக்கம் தான் காரணம். அவர்கள் உரை எப்படி இருந்தது என்று சொல்லும்வரை எனக்கு ஒரு பதற்றம் ஓடிக்கொண்டிருந்தது. வரலாற்றினை பதிவு செய்கிறபோது கூடுதல் கவனமும் பொறுப்புணர்வும் தேவை. அதில் என்னுடைய கருத்தும், சொல்லும் மாறுபட்டுவிடக்கூடாது என்பதில் தான் முழுக்கவனமும் இருந்தது. பொன்னம்மாள் அவர்களுக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருப்பதை நினைத்துக் கொண்டேன்.

சிறப்புரை எழுத்தாளர் திரு,எஸ். ராமகிருஷ்ணன். நிகழ்வில் பேசப்பட்ட அத்தனை பெண்களைப் பற்றியும் இதோடு சுதந்திர காலத்தில் அறியப்படாத பெண்களின் தியாகங்கள் குறித்தும் பேசினார். மன்மோகினி சாஹல் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதும் சிறப்பு.  நாற்பது நிமிட பேச்சில் எத்தனைத் தகவல்கள்..!!! அவர் சொன்ன ஒன்று முக்கியமானதும் சரியானதும். நிகழ்வில் பேசப்பட்டவர்களில் வ.உ.சி தொடங்கி மாசிலாமணி வரை ஒரு புள்ளியில் இணைந்து பணியாற்றியவர்கள். ஏறக்குறைய சமகாலத்தவர்கள். அவர்கள் சந்தித்திருக்கிறார்கள், உரையாடியிருக்கிறார்கள் என்பதை அறிவோம். ஆனால் அவர்கள் மனைவியர்கள்? அவர்கள் சந்தித்திருப்பார்களா? அப்படி சந்தித்திருந்தால் என்ன உரையாடியிருப்பார்கள்? இப்படியாக பலவற்றை யோசிக்க வைத்த பேச்சு அவருடையது.

இறுதியாக இந்த நிகழ்வு குறித்த ஒட்டுமொத்தத் பார்வையை அளிக்க திரு. பாஸ்கர் சக்தி அவர்களைக் கேட்டுக் கொண்டோம்.  அவர் அவர் பேச்சில் நெகிழ்ச்சி தெரிந்தது. எப்போதுமே எங்களுக்கு உறுதுணையாக நிற்பவர் அவர்.

நிகழ்வு 8.30 மணிக்குள் முடிந்ததால் எல்லோரிடமும் பேசி விடையனுப்ப முடிந்தது.

நாங்கள் எட்டு பேருமே வெவ்வேறு பணிகளைச் செய்கிறோம். ஒவ்வொருவருமே பரபரப்பான வாழ்க்கைக்குள் இருப்பவர்கள். நிகழ்வு குறித்து ஒரு வீடியோ கால் பேச வேண்டும் என்றால் கூட எட்டு பேரும் அதில் இணைவது அசாத்தியம். நேரில் சந்தித்துக் கொள்வதென்பது அபூர்வம். நேர நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டமிட்டு ஒவ்வொன்றையும் செய்தோம்.

ஒவ்வொரு நிகழ்வுமே பொருட்செலவு கொண்டது தான். இதனை நாங்கள் எங்கள் சொந்தத் தனிப்பட்ட சேமிப்பில் இருந்தும் , தானாக முன்வந்து ‘ஸ்பான்சர்’ செய்பவர்களிடமிருந்து மட்டுமே பெறுகிறோம். சிக்கனமும் நேர்த்தியும் தான் எங்களுக்கு பிரதானம். குடும்பத்தையும், வேலையையும் சமன் செய்யப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது கைவந்த கலை என்பதால் எங்களுக்கு இது சாத்தியமாகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள்., இது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டவர்கள், தொலைபேசி மூலமாக எங்களுக்கு உத்வேகம் அளித்தவர்கள். நேரில் வர முடியவில்லை ஆனாலும் நினைவு அங்கு தான் இருந்தது என்று சொன்னவர்கள் எல்லோருக்கும் எங்களது நன்றியும், வணக்கமும், உங்களது வார்த்தைகள் தான் எங்களது கிரியா ஊக்கி.

இந்த நிகழ்வினை சிறப்புடன் நடத்துவதற்கு முக்கிய காரணமாக நாங்கள் நம்புவது, பொன்னம்மாள், மீனாட்சியம்மாள், வள்ளியம்மாள், , முத்தம்மாள், சௌந்திரம்மாள், செல்லம்மாள், பாக்கியலட்சுமி, ஜெபமணி இவர்களது ஆசிர்வாதங்கள் தான்.

மீண்டும் நன்றி..

 நாயகி 1947 ஒருங்கிணைப்பு

ஜா.தீபா

பாலைவன லாந்தர்

தமிழ்பொன்னி

ரேவா

ஜெயஸ்ரீ

சவிதா

அகிலா

காயத்ரி. ஆர்

Subscribe
Notify of
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
குருசாமி மயில்வாகனன்
குருசாமி மயில்வாகனன்
12 days ago

வாழ்த்துக்கள். தொடக்கத்திலிருந்தே நிகழ்ச்சி குறித்து முருகன் சொல்லி வந்தார். உங்களின் பணி தமிழகமெங்கும் பரவும். தொடரும். மகிழ்ச்சி.

Elamparithi G
Elamparithi G
12 days ago

அருமையான நிகழ்வு… சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை மற்றும் அவர்களது இல்லத்தரசிகளின் பங்களிப்பையும் மீண்டும் வெளிச்சதுக்கு கொண்டு வந்த நிகழ்வு. அடுத்த தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவுகள், அவர்களுக்கு மட்டும் அல்ல கடந்த தலைமுறையினரும் படிக்க தவறிய வரலாற்று பக்கங்களை ஒவ்வொரு பேச்சாளரும் தெளிவாக எடுத்துரைத்து, நம்மை திரும்ப வரலாற்றை அலச ஆர்வம் தூண்டிய நிகழ்வாக அமைந்திருந்தது..

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும் 🙏🙏🙏

S. Muthamil
S. Muthamil
11 days ago

வணக்கம்.
இது போன்ற ஒரு தலைப்பில் ஒரு நிகழ்வினை நடத்தியதற்கு மிகுந்த பாராட்டுகள்.
நெல்லையிலிருக்கும் என்னால் , சென்னையில் நடக்கும் நிகழ்வினை காண வாய்ப்பில்லையே என்று வருத்தம் கொண்டிருந்தேன். நல்வாய்ப்பாக சுருதி டிவி எங்கள் ஏக்கத்தை தீர்த்திருக்கிறது. நன்றி.வாழ்த்துகள்.
ச.முத்தமிழ்