ஒரு நாவல் எழுதி அது திரைப்படமாகவும் மாற்றப்பட்டு வெற்றிப் பெற்றதால் கோடீஸ்வரர்களான எழுத்தாளர்கள் அமெரிக்காவில் உண்டு.கில்லியன்ஃப்ளின்அப்படிப்பட்டவர்.இவர் எழுதிய மூன்றாவது நாவல்‘Gone Girl’(2006).நியூயார்க் டைம்ஸில் தொடர்ந்துபல வாரங்களுக்கு அதிகமாய் விறபனையாகும் நாவல்வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. இயக்குநர் டேவிட் ஃபின்சர் உடனேயே அதைத் திரைப்படமாக்க முன்வந்தார். திரைக்கதையாசிரியராக அவர் வேறு யாரையும் தேடிக்கொண்டிருக்கவில்லை.கில்லியன்ஃப்ளின்னையே திரைக்கதையாசிரியராக்கினார். இவருக்கும் இது தான்முதல் திரைக்கதை என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
அத்தனை நம்பிக்கையோடு கில்லியனை,டேவிட்ஃபிஞ்சர் திரைக்கதையாசிரியராக்கியதற்குஒருமுக்கியக் காரணம் உண்டு.எழுபது தொடங்கி எண்பது வரை ஹாலிவுட்டில் பிரபலமடைந்திருந்த ‘National Lampoon’ வகைப் படங்கள் அவரை ஈர்த்திருந்தன. அந்தப்படங்கள் முழுவதுமே காமிக்ஸ் புத்தகங்களின் திரைவடிவம். காமிக்ஸை எழுதி வடிவமைத்தவர்களே படத்திற்கும் திரைக்கதை எழுதினார்கள்.அந்தப் பாணியை இந்தப் படத்திலும் முயற்சித்துப் பார்க்க விரும்பினார் ஃபிஞ்சர். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.‘Gone Girl’ படம் வெளிவந்த முதல் வாரத்திலேயே மில்லியன் கணக்கில் வசூல் பெற்றது. திரைக்கதையும் வெகுவாகப் பாராட்டுப் பெற்றது.
நாவலின் முதல் வரியில் தொடங்கும் சுவாரஸ்யமும்,பரபரப்பும் திகிலும் கடைசி வரை நம்முடன் வருவது போலவே திரைக்கதையையும் கில்லியன்ஃப்ளின்அமைத்திருந்தார்.
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிக்கல்களை வழக்கமான பாணியில் நிச்சயம் அவர் எடுத்தாளவில்லை.மனம் நிறைந்த வன்மத்தை மற்றவர் மேல் செலுத்தக்கூடிய தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தம்பதியினர் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் மற்றவர்களின் கண்ணோட்டத்தில் எப்படி பார்க்கப்படுகிறது என்பதுதான் எடுத்துக்கொண்ட மையம்.அதற்கு அவர் கட்டமைத்தவடிவம் கதையாய் வாசிப்பதற்கும், படமாய்ப் பார்ப்பதற்கும் ஆர்வமூட்டக்கூடியதாய் அமைந்திருக்கிறது.
கதையின் சுருக்கம் இது.நிக்கும், ஏமியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது ஐந்தாம் ஆண்டு திருமண நாளின்போது ஏமி காணாமல் போகிறாள்.ஏமியின் பெற்றோர் சிறுவயது ஏமியைப் பற்றி புத்தகத்தை எழுத அது அதிக விற்பனையானதால், ஏமி அமெரிக்காவின் தெரிந்த முகமாக இருக்கிறார். அதனால் ஏமி காணமல் போனது அமெரிக்கா முழுவதும் உடனடி கவனம் பெறுகிறது. ஊடகங்கள் இதை ஒரு தொடர் செய்தியாக்குகின்றன. காவல்துறையினர்நிக்கை சந்தேகம் கொள்கின்றனர். காணாமல் போனதாக சொல்லப்பட்ட ஏமி அமெரிக்காவின் மற்றொரு பகுதியில் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ்கிறாள். தன்னைத் திட்டமிட்டே ஏமி இக்கட்டினில் சிக்க வைத்திருக்கிறாள் என்று புரிந்து கொள்கிறான் நிக். ஒருகட்டத்தில் நிக் தான் ஏமியைக் கொன்றிருக்க வேண்டும் என காவல்துறையும், ஊடகங்களும், மக்களும் நம்புகின்றனர். கைது செய்யப்படுகிறான் நிக்.இப்போதுகாணாமல் போன ஏமி மீண்டும் திரும்ப வருகிறாள். திரும்பி வந்த அவளின் நிலை கண்டு எல்லோருமே பரிதாபப்படுகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஏமியைவேறு வழியில்லாமல் வாழ்க்கை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் நிக் என்பது படத்தின் முடிவு.
நாவலே கூட ஒரு தேர்ந்த திரைக்கதை வடிவில் இருந்ததாலேயே டேவிட் ஃபின்சர் இவரையே திரைக்தையாசிரியையாக நியமிக்கக் காரணமாய் அமைந்திருக்கக்கூடும். ஆனாலும் கூட காட்சிமொழிக்கு ஏற்ப மாற்ற வேண்டி பலமுறை திரும்பத் திரும்ப திரைக்கதை வடிவத்தை மாற்றி எழுதியிருக்கிறார் கில்லியன்ஃப்ளின்.
நாவலாக வாசிக்கப்பட்டபோது வாசகர்களிடம் எவையெல்லாம் வரவேற்பைப் பெற்றிருந்தன, விமர்சகர்களால் எது பாராட்டைப் பெற்றிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டதால் அவை யாவும் திரைக்கதையில் தவறாமல் இடம்பெற்றிருந்தன. நாவலின் முதல் வரி இப்படியாக இருக்கும், “ஏமி..உன் தலைக்குள் என்ன தான் இருக்கும்? அந்த மண்டையோட்டைத் திறந்து அதற்குள் என்ன இருக்கிறதென்று பார்க்க வேண்டும்” இதை அப்படியே படத்தின் தொடக்கத்துக்கும் பயன்படுத்திக் கொண்டனர். படத்தின் இறுதியிலும் இதே வசனத்தைக் கொண்டு முடிக்கும்போது இதே கேள்வியைத் தான்ஏமியிடத்தில் நாமும் கேட்டுக் கொண்டிருப்போம்.
நாவல் மற்றும் திரைப்படம் இரண்டுமே நிக்கிடமிருந்தே தொடங்குகிறது. ஏமியின் மனஓட்டத்தை அவளுடைய டைரி குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்கிறோம். கடந்த கால சம்பவங்கள் யாவும் ஏமியின் டைரி அவளுடைய பார்வையாக நமக்குச்சொல்கிறது. நிகழ்கால சம்பவங்கள் நிக்கின் வழியாக நமக்குக்காட்டப்படுகின்றன.
இது போன்ற ஒரு கதையை திரைப்படமாக்குவதென்பது கத்தி மேல் நடக்கும் முயற்சி தான். ஏனென்றால்படம் பார்ப்பவர்கள் தங்களின் முன்முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள நேரும். எது சரி, யார் பக்கம் தவறு என்பதெல்லாம் பார்வையாளர்கள்தங்களது பக்குவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டியதிருக்கும்.
நாவலாக வாசிக்கப்படும்போது நிக் என்ன நினைக்கிறான் என்பதை அவனுடைய பார்வையில் விவரிக்கிறான்.காட்சிமொழி எனும்போது அவன் தன்னுடைய செயல்கள் மூலமே நிரூபித்தாக வேண்டியிருக்கிறது. மார்கோ எனும் தன்னுடைய இரட்டை சகோதரியினுடனான தன்னுடைய அன்பையும் நெருக்கத்தையும் அவர்கள்எப்படியெல்லாம் வெளிப்படையாகப் பேசிக்கொள்வார்கள் என்பதையெல்லாம் நாவல் வார்த்தைகளாக விவரிக்கிறது. திரைப்படத்திலோ ஒரே காட்சியில் ஒரு நிமிடம் மட்டுமே வரக்கூடிய வசனங்கள் மூலம் அவர்கள் இருவரைப் பற்றியும் புரிந்து விடுகிறது.
அதே சமயம் கில்லியன் இயக்குநர் டேவிட் ஃபின்சருக்கு செய்த சகாயம் ஒன்றுண்டு. ஒரு கதாபத்திரம் எப்படி உட்காரும், அதன் சிரிப்பு எப்படியிருக்கும், மனநிலைக்குத் தகுந்தவாறு உடல்மொழி எப்படி மாறும் என்பது வரையிலான நுணுக்கமான தகவல்களை நாவலில் எப்போதும் தந்தபடி இருக்கிறார் கில்லியன். உதாரணத்துக்குகாவல்துறை பெண் அதிகாரியான ரோண்டாவின்உதவியாளர் வாலஸ்க்வஸ்நிக்கினைமுதன்முதலாகப் பார்க்கிறபோதுஅவனுடைய சந்தேகம் கொண்ட பார்வையை தெளிவாகவும் நுணுக்கமாகவும் வர்ணித்திருப்பார் கில்லியன். வால்ஸ்க்வஸ் நிக்கினையே கண்காணித்துக் கொண்டிருப்பான். வால்ஸ்க்வஸின் உடல்மொழியை அப்படியே திரையில் காட்டியிருப்பார் டேவிட்.
இந்தப் படத்தை வெற்றிப் பெறச் செய்ததில் நிச்சயம் திரைக்கதையின் பங்கு முக்கியமானது. இது போன்ற ‘த்ரில்லர்’ வகைப் படத்திற்கு முக்கியமே காட்சி எங்குத் தொடங்கி, எந்த இடத்தில் முடிகிறது என்பது தான். இதில் தான் படத்தின் வெற்றி சூட்சுமம் இருக்கிறது.
உதாரணத்துக்குஏமியை விவாகரத்து செய்யப்போவதாக முதல் காட்சியில் மார்கோவிடம் நிக் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் பார்வையின் வழியாகவே ஏமி நமக்கு அறிமுகமாகிறாள். அடுத்தக் காட்சியில் ஏமி காணாமல் போனது தெரிய வருகிறது.
இதற்கடுத்த காட்சியில் ரோண்டாநிக்கின்வீட்டை சோதனையிடுகிறாள். ரோண்டா நிக்கிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே ஒவ்வொரு அறையாக பார்வையிடுகிறாள். சில இடங்களை ‘மார்க்’ செய்கிறாள். சமையலறையில் ரத்தக் கறைப் பட்டிருக்கும் இடத்தை அவள் மார்க் செய்யும்போது அவளது புத்திசாலித்தனம் தெரிவதோடு அந்த ரத்தக் கறைஏமிக்கு என்னவாகியிருக்குமோ என்கிற கவலையும் நமக்கு ஏற்படுத்துகிறது. அதே சமயம் அந்தக் கவலை நிக்கிடமிருந்து வெளிப்படாததை வால்ஸ்க்வஸ் போல நாமும் கவனிக்கிறோம்.
ஏமியின்அறையை சோதனையிடும் ரோண்டா , அவள்தனக்குப் பிடித்தமான ‘Amazing Amy’ புத்தகத்தின் நாயகி என்பது தெரிய வந்ததும் இறுக்கத்தைத் தளர்த்தி தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படையாகக் காண்பிக்கிறாள்.இது நாவலில் இடம்பெறவில்லை.இந்தக் காட்சி இங்கே முடிகிறது. இப்படி முதலிரண்டு காட்சிகளிலேயே பல விஷயங்களை தந்துவிடுகிறது திரைக்கதை.
ஏமி காணமல் போனதும் நிக் நடந்து கொள்ளும் விதம் அவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சந்தேகத்தைத் தருகிறது. ஏமியின் பெற்றோர், காவல்துறை, ஊடகம், மக்கள் என அனைவருமே நிக்கினை சந்தேகிக்கத் தொடங்குகிறார்கள். ‘ஏமியின் சடலம் கிடைத்தால் உடனேயே நிக்கினை கைது செய்துவிடலாம்; என்றும்முடிவு செய்கிறது காவல்துறை. நிக்கிற்கு தன்னை விட இருபது வயது இளைய பெண்ணுடன் தொடர்பு இருப்பது மார்கோவிற்குத் தெரிய வருகிறது. நிக் எந்தவொரு சோக உணர்வும் இல்லாமல் இருப்பது ஏமியின் பெற்றோருக்கு உறுத்தலைத் தருகிறது.இப்படியாக ஒருகட்டத்தில் யாவருமே நிக்கினை நம்பாமல் போகிறார்கள்.பார்வையாளர்களும் கூட நிக்கினை சந்தேகம் கொள்கின்றனர்.பரபரப்பான இந்த நேரத்தில் தான் அடுத்த ஆச்சரியத்திற்குள் நம்மைத் தள்ளுகிறது திரைக்கதை.
ஒரு காரில் மிக சந்தோஷமாக சுதந்திரமாக ஏமி பயணம் செய்து கொண்டிருக்கிறாள். தன்னுடையஅடையாளத்தை மாற்றியிருக்கிறாள். நிக்கினைத் திட்டம் போட்டு எப்படியெல்லாம் இது போன்ற இக்கட்டில் மாட்டி விட்டாள் என்பதை அவளுடைய‘வாய்ஸ் ஓவரில்’ சொல்ல சொல்ல இதுவரை பார்வையாளர்கள் நினைத்து வைத்திருந்த அத்தனை கோணமும்மாறுகிறது. அடுத்து வரும் காட்சிகள் எல்லாமே திகிலூட்டுபவை.
ஏமிக்கு அடைக்கலம் கொடுக்கும் அவளது முன்னாள் காதலனைக் கொன்று விட்டு ஏமி திரும்பவும் நிக்கிடமே வந்துவிடுகிறாள். தன்னுடைய காதலன் தான் தன்னைக் கடத்தினான் என்றும் தொடர்ந்து தன்னை வன்புணர்வுக்கு உட்பட்த்தினான் பொய்சொல்லி காவல்துறையினரையும், ஊடகத்தையும் நம்பவைக்கிறாள். பிறகுநிக்கினை பலவந்தப்படுத்தி அவனோடு வாழ்கிறாள் என்பதாக படம் முடிகிறது.
இது மொத்தமாக ஏமி மேல் நமக்கு பயம் ஏற்படுத்தும் விதத்திலேயே முடிந்திருக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் நிக்கினை அவள் கொல்லக்கூடுமோஎன்கிற சந்தேகத்தி ஏற்படுத்துகிறது. எல்லா வாய்ப்பும் வசதியுமுள்ள ஏமி ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்கிற கேள்விக்கு படத்தில் தெளிவான பதில் இல்லை.
ஆனால் நாவலில் இதற்கெல்லாம் பதில் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே எல்லோருடைய கவனத்தையும் தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கும் ஏமி சட்டென்று ஒருநாளில் வேலை இழந்து தனக்குக் கொஞ்சமும் பிடிக்காத கிராமத்து வாழ்க்கையை தன கணவனுக்காக ஏற்றுக்கொள்வது அவளுக்கு அவனிடத்தில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நிக் தன்னை விட அவனது சகோதரி மார்கோ மேல் அன்பாக இருக்கிறான், அவனது அம்மாவை அவனுக்குப் பிடிக்கிறது என்பதெல்லாம் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாததாகிறது. இதோடு அவளை நேரடியாகக் கோபப்படுத்தும் விதமாக நிக் வேறொரு பெண்ணுடன் நெருங்கியத் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததும் அவள் மனதின் வன்மமான பகுதி முற்றிலும் திறந்து கொள்கிறது.
நாவலாகப் படிக்கும்போது இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. இதோடு ஏமி கொலை செய்த காதலனான தேசிக்கு ஒரு அம்மா இருப்பதாக நாவல் சொல்கிறது. தேசியின் அம்மாவுக்குத் தன்னுடைய மகனை ஏமி வேண்டுமென்றே கொலை செய்திருகிறாள் என்ற சந்தேகம் வருகிறது. அதனைக் காவல்துறையிடம் தெரிவிக்கிறாள்.
அதோடு நாவலின் முடிவில் எமியம், நிக்கும்குழந்தையின் வரவால் வேறுவழியில்லாமல் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தத் தொடங்குகிறார்கள் என்பது போன்று முடிந்திருக்கும்.
ஆனால் இது போன்ற எந்த முடிவுகளுமற்று படத்தை முடித்திருப்பது நாவலைப் படித்து விட்டு படம் பார்த்தவர்களால்ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.
இந்த நாவலைத் திரைப்படமாக்கவேண்டுமென்று முடிவெடுத்ததும் டேவிட்டுக்கு இருந்த ஒரு சிக்கல் எப்படி நாவலில் உள்ளது போல நிக் மற்றும் ஏமியின்‘வாய்ஸ் ஓவரில்’தனித்தனி ‘ட்ராக்கில்’ சொல்ப்போகிறோம் என்பது. இது நிச்சயம் பார்வையாளர்களைக் குழப்பிவிடும். இதற்குத் தீர்வுகில்லியனிடமிருந்தது. அவர் தான் ஏமியின் பகுதியை ‘பிளாஷ் பேக்’ ஆகவும், நிக்கிற்கு நடப்பவற்றை நிகழ்காலத்துக்குமாக மாற்றுகிறார்.
அதே போல் கில்லியனுக்கும், டேவிட்டுக்கும் இருந்த ஒரு சாவல் என்பது நாவலாக வாசிக்கப்படும்போதே வாசகர்கள் இரண்டு தரப்பினராக பிரிந்திருந்தனர். ஒருதரப்புஏமிக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பு நிக்கின் பக்கமுமாக தங்களை இணைத்துக் கொண்டனர். ஒரு திரைக்கதையாக மாற்றும்போது எவர் சார்பில் இயங்க வேண்டும் என்ற கேள்வி வந்தபோது, கில்லியன்அதை நாம் முடிவு செய்ய வேண்டாம், திரைக்கதைதானாகவே முடிவு செய்து கொள்ளும் என்றார். டேவிட்டுக்கும் அது சரியென்றே பட்டிருக்கிறது. அதனால் தான் படத்தின் இறுதிக் காட்சியில் எந்தவொரு நியாயமும் யார் பக்கமும் சேர்க்காமல் அப்படியே விடப்பட்டிருக்கிறது என்கிறார் இயக்குநர்.
சரி,டேவிட் ஃபின்சர் எதனால் ‘Gone Girl’ நாவலைத் திரைப்படமாக்க நினைத்தார்? இந்த நாவல் அதிகம் விற்பனையானது ஒரு காரணமே அல்ல என்கிறார். அந்த நாவலைப்படிக்கும்போது எனக்குள் அது திரைப்படமாகவே ஓடிக்கொண்டிருந்தது. அது மட்டுமே தான் காரணம் என்கிறார்.
(கதை to திரைக்கதை புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரை)