உடைபடும் சங்கிலி

0
192

எல்லாக் கதைகளும் சொல்லியாகிவிட்டன. புதிதாய் இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. துயரங்கள் அனைத்தும் இன்று காலாவதியாகிவிட்டன. அமெரிக்கா மாற்றம் கொள்ளத் தொடங்கிவிட்டது. ஒரு கறுப்பர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகவே ஆகிவிட்டார்..எல்லாம் மாறிவிட்டன இனி பழைய பாணியில் அடிமைகளாக இருந்த கதையை சொல்லும் நிலையில் இல்லை என்பது தான் ஆப்ரிக்க அமெரிக்கப் படங்கள் குறித்த பேச்சாக இருந்தது. அப்போது தான் இந்தப் படம் வெளியாகிறது – Django Unchained.

இதனை இயக்கியவர் க்வெண்டின் டாரண்டினோ. 1858ஆம் வருடம் மிஸிஸிப்பி மாகாணம் ஆப்ரிக்க அடிமைகளை விற்பதிலும் பெறுவதிலும் பரபரப்பாக இருந்த காலகட்டம். ஜாங்கோ என்பவன் பண்ணை முதலாளிகளுக்கு விற்கப்படுகிறான். அவனை அவர்களிடம் இருந்து விடுவிக்கும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவரான ஸ்கல்ட்ஸ் என்பவர் அவனைத் தனனுடைய உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். ஜாங்கோவை அவனுடைய மனைவியுடன் சேர்ப்பதற்கு உதவுகிறார். ஜாங்கோவின் மனைவி ஏற்கனவே ஒருவருக்கு அடிமையாக விற்கப்பட்டவர். ஜாங்கோவின் மனைவியை விலைக்கு வாங்கியவர் சற்று ஆபத்தான மனிதர். அவரிடமிருந்து சாதுரியமாக ஜாங்கோவின் மனைவியை விடுவிக்க வேண்டும் என்பது இருவரின் திட்டம். அந்தத் திட்டம் நிறைவேறுவதற்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்பது டாரண்டினோ நமக்குச் சொன்ன கதை. இதோடு அடிமை ஒருவன் எப்படி வெள்ளை இன குற்றவாளிகள் வேட்டையாடும் ஒருவனாக மாறினான் என்பதும்தான்.

அமெரிக்காவில் 245 வருடகாலமாக ஆப்ரிக்க வம்சாவளியினர் அடிமைகளாக நடத்தப்பட்டனர். கொத்தடிமைகளாக அவர்கள் வாழ்ந்த காலத்தின் பதிவுகளும், அவர்கள் சட்ட உரிமை பெற்ற காலத்தைச் சொல்லும் படங்களும் வெளிவந்தபடி இருக்கின்றன அவற்றிலிருந்து இந்தப் படம் வித்தியாசப்படுவதற்கு காரணம் கதை சொன்ன விதமும், டாரன்டினோவின் இயக்கமும் தான்.

பொதுவாக டாரண்டினோ படங்களைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும் அவர் எந்தக் காட்சியில் அல்லது காட்சியின் எந்த மடிப்பில் நமக்கு திகைப்பை வைத்திருப்பார் என்பது யூகிக்க இயலாது. இரண்டு பெண்கள் மிக வன்மையாக இரத்தம் வருமளவு ஒரு வீட்டிற்குள் குத்துச்சண்டை, கத்திச்சண்டை எல்லாம் போடுவார்கள். உக்கிரமான அந்த சண்டை எப்படி முடியப்போகிறது, யார் இதில் வெற்றிப் பெறப்போகிறார்கள் என்று நாம் யோசிக்கையில் அந்தக் காட்சி இப்படியாக முடியும் – அந்த வீட்டின் வாசலில் ஒரு பேருந்து வந்து நிற்கிறது. அந்தப் பள்ளிக்கூட பேருந்தில் இருந்து ஒரு சிறுமி இறங்குகிறாள். அந்த சிறுமி கையில் கத்தியோடு ஒருவரையொருவர் கொல்லத் துடிக்கும் நிலையைப் பார்த்துவிடப்போகிறாள் என நமக்கு பதற்றமாகிவிடும், ஏனெனில் சண்டை போடும் பெண்களில் ஒருவர் அந்த சிறுமியின் அம்மா. என்ன நடக்குமோ என நாம் பார்க்கையில் சட்டென்று இரு பெண்களும் பல நாட்கள் பழகியது போல சிறுமி முன்பாக தோழிகளாகிவிடுவார்கள்.  சிறுமியிடம் அம்மா , ‘ஆன்ட்டிக்கு ஹாய் சொல்லு’ என்பதாக  காட்சி முடிந்துவிடும்.

ஒரு உணவகத்தில் எல்லோரும் அவரவர் மேஜையில் அமர்ந்து தங்களுக்குள் தத்துவத்தையும், இறையியலையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் பேசிக்கொண்டிருப்பார்கள், சட்டென்று ஒரு நொடியில் ஒருவர் துப்பாக்கி எடுத்து  சுடுவார். அவர் தான் சென்ற நொடி வரை இறையியலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருப்பார். அங்கிருந்து காட்சிகள் சடசடவென்று மாறும். இப்படி ஒருவிதமான காட்சிப் பிறழ்வுகளை நமக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பவர் டாரண்டினோ.

Django Unchained படத்திலும் இது போன்ற எதிர்பாராத காட்சிகள் ஏராளம் உண்டு. 

டாரண்டினோ இயக்குனர் மட்டுமல்ல, திரைப்பட விமர்சகராகவும் எழுதி வருபவர். செர்ஜியோ கார்புக்கி என்கிற இத்தாலிய அமெரிக்க இயக்குனரின் படங்கள்  குறித்து டாரண்டினோ விமர்சனைக் கட்டுரை ஒன்றை எழுதுவதற்காக அவரின் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். செர்ஜியோ கார்புக்கி, செர்ஜியோ  லியோன் இவர்கள் எல்லாம் அமெரிக்கத் திரைப்படங்களில் தனியொரு வகைமையை உருவாக்கியவர்கள். இவர்களின் படங்களை ‘Spaghetti Westerner’ என்பார்கள். கௌபாய் வகைப் படங்களை அமெரிக்க திரையுலகத்துக்கு கொண்டு வந்தவர்கள். Good Bad Ugly போன்ற படங்கள் இன்றளவும் இந்த வகைப் படங்களுக்கான மரியாதையை பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற படங்களின் தீவிர ரசிகர் டாரண்டினோ. அது குறித்து எழுதுவதற்காக செர்பியோ கார்புக்கி படங்களைப் பார்க்கையில் டாரண்டினோவுக்கு ஜாங்கோ கதாபாத்திரத்தின் மீது ஈர்ப்பு வருகிறது. இந்த ஜாங்கோ கதாபாத்திரம் செர்பியோ கார்புக்கி உருவாக்கியது. கார்புக்கி இந்தப் படத்தின் தணிக்கை சான்றிதழுக்காக 16 முறை விண்ணப்பம் செய்தும், ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டது. காரணம் இதில் காட்டப்பட்ட வன்முறை. படம் வெளிவந்தபின் பலரின் விருப்பத்துக்கு உகந்த கதாபாத்திரமானான் ஜாங்கோ.

டாரண்டினோ தன் மனதில் எட்டு ஆண்டுகளாக அடைகாத்து வைத்திருந்த கதையின் நாயகனுக்கு ஜாங்கோ என பெயர் வைத்தார். படத்தின் தலைப்பை Django Unchained என இறுதி செய்தார். கார்புக்கியின் பிரபலமான கதாபாத்திரத்தின் பெயரை டாரண்டினோ தன்னுடைய படத்துக்கு பயன்படுத்துகிறார் என்றதும் ஒரு எதிர்பார்ப்பாய் மாறியது. அதோடு டாரன்டினோவின் வன்முறைக் காட்சிகளை அறிந்தவர்களுக்கு கார்புக்கி இயக்கிய ஜாங்கோவின் இரத்தம் தெறிக்கும் காட்சிகளும் தெரியுமாகையால், Django Unchained வெளிவருவதற்கு முன்பே இதில் எந்த மாதிரியான காட்சிகள் வைக்கபப்ட்டிருக்கும் என யூகித்து விட்டார்கள்.

எப்போதுமே டாரண்டினோ மற்றவர்களின் யூகத்தைக் கடந்து ஏதேனும் செய்வார் என்பதால், எல்லோரும் எதிர்பார்த்திருந்ததை விட கூடுதலான யாரும் நம்ப முடியாத அளவுக்கு வன்முறைத் தெறிக்கும் காட்சிகளைப் தந்து படத்தில் இடம் பெற வைத்தார். படம் பார்க்கும் நாமே நம்மையறியாமல் முகத்தில் இரத்தம் தெறித்திருக்குமோ என துடைத்துக் கொள்வோம்.. மாற்றி மாற்றி சுட்டுக் கொள்ளும்போது சதை நம் கண்முன்னால் தெறிப்பதை பார்ப்போம். குதிரைகள் சுடப்பட்டு மடங்கி விழும். பெண்கள் சுடப்பட்டு இறந்து போவார்கள். இது அமெரிக்க திரைப்பட விமர்சகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. “இத்தனை வன்முறைக் காட்சிகளை இப்படி அப்பட்டமாக காட்ட வேண்டிய அவசியம் என்ன?’ என்பது தான் அவர்களது கேள்வியாக இருந்தது.

இதற்கு டாரண்டினோ அவர்களுக்கு சொன்ன பதில் முக்கியமானது. முதலில் அவர் சொன்னது, “நான் இப்படித் தான படம் எடுப்பேன்..என்னுடைய  படம் இப்படித் தான் இருக்கும்..விருப்பமல்லை எனில் பார்க்காதீர்கள்’ என்றார். பிறகு அவர் சொன்ன பதில், “245 வருடங்களாக அமெரிக்க மண்ணில் ஆப்ரிக்கர்களை கொத்தடிமைகளாக நடத்தும்போது அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைக் காட்டிலும் நான் ஒன்றும் அதிகம் காட்டிவிடவில்லை” என்றார். இந்தப் படத்தினை அவர் எடுத்தக் காரணமே தனது மூதாதையர்கள் ஆப்ரிக்கர்களுக்கு செய்த கொடுமைகளின் பரிகாரமாகத் தான் என எடுத்துக் கொள்ளலாம்.

அதனாலேயே ஜாங்கோவை எவரும் அசைக்க முடியாத ஒரு கதாநாயகனாக காட்டினார். முதல் காட்சி நினைவிருக்கிறதா? டைட்டில் தொடங்கி ஒரு நீண்ட பயணக்காட்சி காட்டபப்டும். காலில் கட்டப்பட்ட சங்கிலியோடு மரமற்ற, கடினப் பாறைகள் கொண்ட சாலையில் ஆப்ரிக்கர்கள் சிலர் அடிமைகளாக நடத்திக் கொண்டு வரப்படுவார்கள். அவர்களை அழைத்து செல்லும் இருவர் குதிரையின் மீது இருப்பார்கள். ஆப்ரிக்கர்கள் முகத்தில் தெரியும் அந்த வெறுமையும், இயலாமையும், சோர்வும் நமக்கு காட்டபப்ட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் அதில் ஒருவனாக ஜாங்கோ இருப்பது நமக்குத் தெரியாது. மற்றவர்களே நமக்குக் காட்டப்படுவார்கள். ஜெர்மானிய பல் டாக்டரும் ‘Bounty hunter ஆன ஸ்கலட்ஸ் பார்வையில் தான் ஜாங்கோ நமக்குத் தெரிவான். அடிமைகளாக ஆக்கப்பட்ட மற்ற அடிமைகள் அச்சத்துடன் தலை குனிந்திருக்க, ஜாங்கோ நிமிர்ந்து ஸ்கல்ட்சின் கண்ணோடு கண் பார்ப்பான். “நீங்கள் தேடி வந்த ஆள் நான் தான்” என்பான். அவ்வளவு தூரம் நடந்து வந்தும், தன்னுடைய எதிர்காலம் மோசமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தும் அவனுடைய அந்தப் பார்வையில் தடுமாற்றம் இருக்காது. அந்தப் பார்வை தான் ஸ்கல்ட்சை ஈர்க்கும், நம்மையும்.

ஜாங்கோ கதாபத்திரம் மூலமாக டாரண்டினோ தன்னுடைய குற்றஉணர்வுக்கு பதில் சமன் செய்திருக்கிறார் என்று சொல்லலாம். அடிமை வரலாறுகளை வாசிக்கிறபோது அவருக்குள் இருந்த அழுத்தம், துயரம், தனது மூதாதையர்கள் மீதிருந்த கோபம் எல்லாவற்றுக்கும் வடிகாலாக அவர் ஜாங்கோவை உருவாக்கிவிட்டார். ‘எனது மூதாதையர்கள் உங்கள் நிலத்தில் இருந்து பிரித்து கொண்டு வந்து மனிதாபிமானம் இல்லாமல் கொத்தடிமைகளாக நடத்தினார்கள் இல்லையா..? எத்தனை பேர் உங்கள் இனத்தில் கேட்க நாதியற்று மரணமடைந்திருப்பார்கள். துயர்களை அனுபவித்திருப்பார்கள்.. திருப்பி அவர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா..வரலாறைத் திருப்பி நடத்த இயலாது..ஆனால் என்னால் திரைப்படத்தில் எழுத முடியும். தாக்கியவர்களை நீ தாக்கு…நீ யாரென்று உலகத்துக்கு காட்டு’ இது தான் டாரண்டினோ ஜாங்கோ வழியாகச் சொன்னது. அதனால் தான் வன்முறை அதிகமுள்ள படம் என முகம் சுளிப்பவர்களைப் பார்த்து தெளிவாக, “நீ பாக்கலைனா போ’ என்றார்.

ஜாங்கோவும் ஸ்கல்ட்சும் சகோதரர் இருவரைத் தேடி எஸ்டேட்டுகளுக்குப் போவார்கள். அங்கெல்லாம் கறுப்பின  மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது காட்டப்படுகிறது. அதில் பருத்தி விவசாயம் செய்யும் எஸடேட்டில் அந்த சகோதரர்கள் இருக்கிறார்கள் என்கிற தகவல் தெரிய வரும். அவர்களை பார்த்த இடத்தில் கொல்ல வேண்டும் என்பது தான் ஸ்கல்ட்ஜுக்கு அரசாங்கம் தந்திருக்கிற ஆணை. இவர்கள் போன சமயம் அந்த சகோதரர்கள் அங்கிருக்கும் பண்ணை அடிமைகளை மிகக் கேவலமாக நடத்திக் கொண்டிருப்பார்கள். ஜாங்கோ அவர்களை அடையாளம் காட்டத் தான் ஸ்கல்ட்ஸுடன் பயணித்துக் கொண்டிருப்பான். அந்த சகோதரனில் ஒருவன் ஒரு கறுப்பினப் பெண்ணை மரத்தோடு கட்டி சாட்டையால் அடிக்க இருப்பான்..அந்தப் பெண் பசியின் காரணமாக சமையலறையில் ஒரு முட்டையை எடுத்திருப்பாள்..அடிக்கப் போகையில் அந்தப் பெண்ணின் கண்ணில் தெரிகிற பயமும், அவளது அலறலும்..அது அங்கே சாதாரணம் தான் எனபது போல மற்ற அடிமைகலானவர்கள் தங்களது வேலைகளை செய்வதுமாக.. என இயல்பாக நடப்பவற்றை எல்லாம் காட்டிக் கொண்டிருக்கிறது காட்சி. ஆனால் பார்க்கும்  நமக்கு அது ஒரு அநியாய செயல் எனத் தெரிகிறது. ஜாங்கோ அங்கு வருகிறான். தனது துப்பாக்கியால் அந்தப்பெண்ணை அடிக்கப்போகும் வெள்ளையனை சுட்டு விடுகிறான். மற்றொரு சகோதரனையும் பருத்தி வயலில் சுட்டு வீழுத்துகிறான். இரத்தம் வெடித்து பரவியிருக்கும் வெள்ளைப் பருத்தியில் தெறிக்கிறது. இந்த வன்முறைக் காட்சிக்கு நாம் கைத் தட்டுவோம்.. ஏனெனில் அந்தக் காட்சிக்கு பின்புலமாக இருக்கிற ஆழம் தான் நம்மை கைத் தட்ட வைக்கிறதே தவிர, இரு உயிர்கள் மடிந்ததற்காக அல்ல… அது தான் டாரண்டினோ விரும்பியதும்..

ஜாங்கோ ஆர்வமிக்கவன், எதையும் கற்றுக்கொள்ளும் துடிப்பு கொண்டவன். தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதைச் சரியாகப் பிடித்துக் கொண்டவன். இதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தபோது தன்னுடைய சுயமரியாதையை அவன் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான். அதையே தன் அடையாளாமாக மாற்றுகிறான். அதற்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் மேற்கொள்கிறான். தெருக்களில் நிமிர்ந்து நடக்ககூட அனுமதி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு கருப்பன் குதிரை மீது நல்ல உடையணிந்து நேர் கொண்ட பார்வையோடு வருகிறான் என்பதே யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும். இப்படி ஜாங்கோ குதிரை மீது வருகிற காட்சி படத்தில் பல இடங்களில் உண்டு. முக்கியமாக அவன் அப்படி வரும்போது நமக்குக் காட்டப்படுகிற ஒவ்வொருவரின் கண்களிலும் தெரியும் காழ்ப்பும், வஞ்சமும், நம்ப முடியாத தன்மையும், எரிச்சலும்…அதை ஓரக்கண்ணால் கவனித்தபடி வருகிற ஜான்கோவும்…அதற்கு கொடுக்கபப்ட்ட இசையும்…இவையெல்லாம் தான படத்தின் தன்மையை உயர்த்துகின்றன.

இப்படியான ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட எத்தனை இலட்சம் பேர் அடிமைகளாக கடைசி வரை வாழ்ந்து செத்திருப்பார்கள்..ஜாங்கோவிற்கு கிடைத்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கப் பெற்றிருக்குமேயானால்..என்பதும் இந்தப் படம் நமக்கு ஏற்படுத்துகிற கேள்வி.

நாய்களால் கடித்து குதறப்பட்டு இழுத்து செல்லப்படும் மனிதன்,,அவனுடைய கெஞ்சல்..அவனுடைய கதறல்கள்..அவனுடைய இயலாமை..அவனுடைய அச்சம் நிரம்பிய கண்கள்.. தன் கண் முன்னே நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தப்படும் மனைவி,,அத்தனை பேருக்கும் முன்பாக மனைவியின் ஆடை விலக்கப்படுவது, இரு கறுப்பினத்தவர்களை மோதவிட்டு ஒருவன் மற்றவனை அடித்தேக் கொள்வதை குரூரத்துடன் ரசிப்பது … இப்படி ஒவ்வொன்றும் ஜாங்கோவின் பார்வையில் இருந்து பார்க்கும்போது இறுதிக் காட்சிகளில் அவன் ஒவ்வொருவரையும் கொல்வதும் சரியான நீதி தானே என்பது போல தோன்றிவிடும்.

இதில் மற்றொரு கதாபாத்திரம் குறித்து சொல்லியாக வேண்டும். ஸ்டீபன் என்கிற கதாபத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை டாரண்டினோ உருவாக்கியதற்கு மிகுந்த துணிச்சல் இருந்திருக்க வேண்டும். ஒரு கறுப்பின அடிமை கதையில் ஒரு அடிமை கதாநாயகனாகிறான் என்பதைச் சொல்வதற்கு இருந்துள்ள அதே துணிச்சல் ஸ்டீபன் கதாபாத்திர வடிவமைப்பிற்கும்   இருந்திருந்தது.

ஸ்டீபனுக்கும் ஜாங்கோவிற்கும் உள்ள ஒரு வேறுபாடு..கதையின் மற்றொரு விடுபடக்கூடாத அம்சம். ஜாங்கோவிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது, அவன் தன் மக்களை அடிமைப்படுத்துபவர்களுக்கு எதிராக செயல் புரிகிறான்..அவனுக்கு அதில் நீதி நியாயம் எதுவுமில்லை..நீ எங்களுக்குத் தந்ததை நான் திருப்பித் தருகிறேன் என்கிறான்.

..

ஸ்டீபனோ தான் ஒரு கருப்பினத்தவன் என்பதை மறந்து அல்லது மறக்கும்படி செய்வதற்காகவும், தன்னை மிகுந்த கொடுமைக்காரர்களாக ஆக்கிக் கொண்டவன். அதையே தனது இயல்பாகவும் மாற்றிக் கொண்டவன். என்ன செய்தால் வெள்ளை முதலாளிகளுக்குப் பிடிக்கும் எனபதை அறிந்து அதன்படி வாழ்பவன். அவனுடைய முதலாளியிடம் இருக்கும் சிறிதளவு கருணை கூட இல்லாமல் போனவன். கறுப்பின அடிமைகளை தான் வெறுப்பதின் மூலம் முதலாளிக்கு  விசுவாசமானவன் என்று காட்டிக்கொள்ள மிக வக்கிரமாக தன்னை வடிவமைத்துக் கொண்டவன்.

இறுதிக் காட்சியில் அந்தப் பண்ணையில் உள்ள அத்தனை வெள்ளை இனத்தவரையும் ஜாங்கோ சுட்டுக் கொன்று கொண்டே இருக்கிறான். “இங்குள்ள கருப்பு மக்கள் மட்டும் வெளியே சென்றுவிடுங்கள்” என்று ஜாங்கோ அறைகூவும்போது, தானும் ஒருவனாக ஒன்றும் அறியாதது போல வெளியேற நினைக்கிறான். சரியான சந்தர்ப்பவாத செயல் அது. ஆனால் ஜாங்கோ அவனை சுட்டு விடுகிறான். காலில் சுடப்பட்டு விழுந்தபோதும் ஸ்டீபன் கதறிக்கொண்டே இருக்கிறார்.. “உன்னால் இந்த சாம்ராஜ்யத்தை அழிக்க முடியும் என்று நினைக்காதே…அது நடக்காது” என்று அரற்றிக் கொண்டே இருக்கையில் அவர் சாம்ராஜ்யம் என்று சொல்லப்பட்ட மாளிகை வெடித்து சிதறுகிறது. அதன் பின்னணியில் ஜாங்கோவும் அவனது மனைவியும் விடுவிக்கப்பட்டவர்களாக சுதந்திர வாழ்வை நோக்கி மகிழ்ச்சியாக செல்கிறார்கள்.

இது ஒரு கனவு போன்றதான படம். இப்படி நடந்திருக்குமா என்று கேட்டால், நடந்திருக்காது என்றும் சொல்லவியலாது. இயல்பிலேயே மனிதனுக்குத் தன் சுதந்திரத்தின் மீது வேட்கை உண்டு. அடிமையாக இருப்பதை ஒருபோதும் விரும்பாதவன் மனிதன். அவனுடைய வேட்கையை அழுத்திவைக்கும்போது எவரேனும் கிளர்ந்து எழுந்திருப்பார்கள்…அப்படி எழுந்தவனின் ஒரு கதை இது..

“நீங்கள் உங்கள் சங்கிலியை உடைக்க வேண்டும். அந்தத் துப்பாக்கியை எடுங்கள்..அவர்களது தலைக்குள் குண்டைத் துளை. இருவரையும் மண்ணுக்கு அடியில் ஆழப் புதையுங்கள். பிறகு இந்த நாட்டின் அறிவார்ந்த பகுதிக்கு சென்று விடுங்கள். இனி உங்கள் விருப்பம். ம்…பிறகு..உங்களில் வானியல் ஆர்வலர் எவரேனும் இருப்பீர்கள்…அவருக்கு சொல்கிறேன்..இதோ இது தான் வடக்கு நட்சத்திரம்” என்று ஸ்கல்ட்ஸ் பேசுகிறார்.

இந்த மனநிலை தான் ஒட்டுமொத்த படத்தின் அடிநாதம். டாரண்டினோ தனது மூதாதையரின் ஆதிக்க போக்கிற்கு திரைப்பட வரலாறில் எழுதிய பதிலும் தான்.  

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments