என் அம்மாவுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அது அவர் பள்ளிக் காலத்தில் இருந்தே தொடங்கியிருக்கலாம் அல்லது கல்லூரி படிக்காமலேயே திருமணமான பின்பு ஏதேனும் ஒரு கணத்தில்…. நான் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. ‘பெண்’ படத்தில் வைஜெயந்தி மாலா அஞ்சலிதேவியுடன் ‘அசால்டாக’ கார் ஒட்டிக் கொண்டு போவாரே, அந்தக் கணத்தில் கூட அம்மாவுக்குத் தோன்றியிருக்கலாம். ஏனெனில் அம்மா பார்க்கிற படங்கள் மிகக்குறைவு. அந்தக் குறைவான படங்களில் இந்தப் படமும் உண்டு.
வயதாக ஆக, நான் எனது அப்பா போல மாறிக்கொண்டிருப்பதாய் நினைத்திருந்தேன். ஆனால் , அம்மாவாகவே ஆகிக்கொண்டிருக்கிறேன். அம்மாவுக்கு கார் ஓட்ட ஆசையிருந்ததை, நான் என்னுடைய விருப்பமாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். கடைசி வரை வெறும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இந்த ஆகஸ்ட் மாதத்தோடு சரியாக இரண்டு வருடங்கள் ஆகின்றன. என்னுடைய காரின் மாதத் தவணைகளை முடித்துவிட்டேன்
முதல் நாள் கார் ஓட்டச் சென்றபோது ஒரு பெண் எனக்குக் கற்றுக்கொடுத்தார். சில பெண்களைப் பார்த்தவுடன் எனக்கு சிநேகம் வந்துவிடும். இந்தப் பெண்ணிடம் வந்தது. முதல் நாள் முழுவதும் HALF CLUTCH சொல்லிக் கொடுத்தார். இருபது முறையும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. அணைந்துவிடும். உடனே தோற்றுப்போன மனநிலையும் வந்துவிட்டது. அந்தப் பெண் தனக்கான அனுபவத்தினை சொன்னார். அதுவும் தோற்ற வரலாற்றில் இருந்தே தொடங்கியதால், ஒரு தன்னம்பிக்கை வந்தது. “நல்லா கார் ஓட்ட கத்துகிட்ட பிறகும் அது என்னவோ ஒவ்வொரு முறையும் ஜெமினி ஃப்ளை ஓவர் சிக்னல்ல வண்டி ஆஃப் ஆகி ஸ்டார்ட் ஆகாது. எல்லாரும் ஹார்ன் அடிப்பாங்க..இன்னும் டென்ஷனாவும்..” என்றார். தோற்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு ஜெயித்த கதையை விட மற்றொரு தோல்வி கதையே நம்பிக்கைத் தருகிறது.
எனக்கு 22வது முறை வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. இரண்டு நாட்கள் அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார். சீக்கிரம் கற்றுக் கொள்வேன் என்கிற தைரியம் வந்தது. மறுநாள் அவர் வரவில்லை. முதுகுவலி காரணமாக வேறொரு நபரை அனுப்பியிருந்தார். அவர் என்னை முதல் பார்வையிலேயே ‘வெளங்காத கேசு’ என்பதாகப் பார்த்தார். தொடர்ந்து வந்த நாட்களில் அவர் எனக்கு கார் ஒட்டவே வராது , உன்னையெல்லாம் யார் வரச் சொன்னது என்று சொல்லவில்லை, ஆனால் உடல்மொழியிலும் அடிக்கடி உச் உச் என்பதிலும் காட்டிக் கொண்டிருந்தார். “எட்டாவது நாளில் காலையில் முடிவெடுத்தேன். இனி இவர் வந்தால் நான் கற்றுக்கொள்ள வரப்போவதில்லை என்று உரிமையாளரிடம் சொல்ல வேண்டும் என்று. அந்த மனநிலையில் கார் ஓட்டும்போது “ப்ச்..மேடம்…” என்று அவர் தொடங்க, பின்னால் வண்டி வருகிறதா என்று பார்த்துவிட்டு காரை நிறுத்தினேன். “மேடம்…என்று ஆரம்பித்தார். “மாஸ்டர்..என்ன பிரச்சனை உங்களுக்கு..? க்ளட்சை மிதிச்சிகிட்டே கியர் மாத்தனும்னு என் மூளைக்குத் தெரியுது, ஆனா பழக்கத்துல வரல..அதுக்குத் தான் ட்ரெய்னிங் எடுக்கறேன்..ஹாரன் அடிக்கறதுக்கு கைய எடுத்தா, ஸ்டியரிங் கண்ட்ரோல் போயிடும்னு பயப்படறேன்.. ரைட்டுல கண்ணாடி பாக்கும்போது லெஃப்ட்டுல இடிச்சிருவேனோனு டென்ஷனாகுது ..இவ்வளவு பயம் வர்றதுனால தான் நீங்க இங்க உக்காந்துருக்கீங்க..நான் இங்க உக்காந்துருக்கேன்..என்ன சொல்லணுமோ அதை மட்டும் சொல்லுங்க..” என்று ஆவேசமாக சொல்லிவிட்டேன். அவர் உடனே “சரி..ஸ்டார்ட் பண்ணுங்க” என்றார். அன்று பார்த்து உடனே ஸ்டார்ட் ஆக, அவர் எந்த உத்தரவும் தராமலேயே பூங்காவை சுற்றிச் சுற்றி வந்தேன். எங்குமே வண்டி ஆஃப் ஆகவில்லை. நானே தைரியமாக அவரிடம் கேட்காமல் இரண்டாவது கியர் மாற்றினேன். அவர் மெதுவாக “என்ன வேலை பாக்கறீங்க?” என்று கேட்டார்
“ரைட்டர்”
“போலீசா நீங்க?”
அந்தக் குரலில் தெரிந்த பவ்யத்தில் ஒரு சலனம் ஏற்பட்டு ஆமாம் என்று சொல்லிவிடுவேனோ என நினைத்து “இல்ல..நான் ரைட்டர்” என்றேன்.
அவர் ஒன்றும் சொல்லவில்லை.
பிறகு கொஞ்சம் சமாதானமாகி, தேவைப்படும் நேரத்தில் மட்டும் பேசினார். உச் கொட்டுதலை மொத்தமாக நிறுத்தி கொண்டார்.
ரிவர்ஸ் எடுக்க, மேட்டில் ஏற்றி ஹாஃப் க்ளட்சில் நிறுத்தச் சொல்லித் தந்தார். நிறைய திணறினேன். ஆனால் பிடிபட்டது. லைசன்ஸ் வாங்குகிறபோதேல்லாம் நன்றாகப் பேசத் தொடங்கியிருந்தோம்.
இப்படியாக பதினைந்து நாட்கள் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு SECOND HAND கார் வாங்கினேன். முதலில் அவருக்குத் தான் சொன்னேன். ஆசரியர் அல்லவா ! தொடர்ந்து ஒரு மாத காலம் உறவினர் பையன் ஒருவரின் உதவியால் ஓட்டிக்கொண்டே இருந்தேன். மழை, இருள், பைபாஸ், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று எதெல்லாம் சவாலாக அமையுமோ அங்கெல்லாம் ஓட்டினேன். ஒருநாள் ஒட்டிக் கொண்டே இருக்கும்போது அந்தப் பையனிடம் இருந்து சத்தமே வரவில்லை. திரும்பிப் பார்த்தால் தூங்கிக் கொண்டிருந்தான். முதலில் பயம் ஏற்பட்டாலும், என்னை நம்பி தூங்குகிறானே என்று மகிழ்ச்சியாக இருந்தது. அன்றைய தினம் தான் இன்னும் நம்பிக்கையுடன் ஓட்டினேன். சமீபத்தில் மெட்ராஸ் மேட்னி படத்தில் இதே போன்ற காட்சியைப் பார்த்ததும் காளி வெங்கட்டிடம் மானசீகமாக SAME PINCH சொல்லிக் கொண்டேன்.
தனியாக கார் ஓட்டும் காலத்தில் விபத்து நடந்திருக்கிறது. எனக்கும் யாருக்கும் அடிபடவில்லை. ஒரு காம்பவுண்டு சுவற்றை இடித்துக் கொண்டு போய் மைதானத்தில் நிறுத்தினேன். சுவற்றின் கற்கள் கார் மீது விழுந்து முன்பக்க கண்ணாடி நொறுங்கி என் மேல் கண்ணாடித்துகள்கள் விழுந்தன. அந்த நொடியில் நான் பதறவில்லை, நான் செய்கிற தவறு என்ன என்பதை யோசித்தேன், பிரேக்கை மிதிக்காமல் ஆக்ஸிலேட்டரை மிதித்திருக்கிறேன். சுற்றிலும் ஆட்கள் கூடி விட்டார்கள். நான் வண்டியை நிறுத்த கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. நான் என் சீட்டுக்கு அடியில் கீழே விழுந்து கிடந்த லாப்டாப் பேக்கினை எடுத்து மீண்டும் சீட்டில் வைத்தேன். கொஞ்சமும் பதறவில்லை என்பது இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. சத்தம் கேட்டு ஆட்கள் கூடி விட்டார்கள். எனக்கு நிச்சயம் அடிபட்டிருக்கும் என்று நினைத்து ஒருவர் அதற்குள் ஆம்புலன்சிற்கு முயற்சி செய்து கொண்டிருக்க, நான் ஃபோனை எடுத்துக் கொண்டு இறங்கினேன். சரியாக என் அம்மா அப்போது போன் செய்தார். கட் செய்தேன். மீண்டும் அழைத்தார். என் நிலைமையை விட அவசரம் போலிருக்கிறது என அட்டென்ட் செய்தேன்
”எங்க இருக்கே?”
“நடுரோட்டுக்கு பக்கத்துல”
“ஓ..சரி..கேது பெயர்ச்சியாம்..உன் ராசிக்கு இனிமே அமோகமா இருக்கும்னு தினமலர்ல போட்டுருக்கான்..கோயிலுக்குப் போய்…நவகிரகத்துக்கு”
“அம்மா. திரும்பக் கூப்படறேன்..”
“இல்லேனா ஒண்ணு பண்ணு..சிவன் சன்னதியில”
“சரிம்மா..திரும்பக் கூப்படறேன்” என்று எனது கேது பெயர்ச்சியினை திரும்பிப் பார்த்தேன். அது முன்பக்கம் உடைந்து கண்ணாடியை முற்றிலும் இழந்திருந்தது. பின்னாட்களில் இதை என் அம்மாவிடம் சொன்னபோது அசராமல் சொன்னார், “நல்ல காலம். அதனால தான் உனக்கு ஒண்ணும் ஆகல..வாகனத்தோட போச்சு”
உடைந்த காம்பவுண்டைக் கட்டிக் கொடுத்து 25,000 ரூபாயும், கார் இன்சூரன்ஸும் காலியானது. கேது வாழ்க !
அதன்பிறகு நவக்கிரகங்கங்களும் அங்கங்கு பெயர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இருக்கும் வேலை நெரிசலில் என்னைக் கண்டு கொள்ளவில்லை.
எனக்கு டூவீலர் ஓட்டக் கற்றுக் கொடுத்தது எனது அப்பா. ஒரே நாளில் கற்றுக்கொண்டேன். மறுநாள் கல்லூரிக்கு எடுத்துச் சென்றேன். அப்பாவை டூவீலரில் உட்கார வைத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு எக்மோரில் இருந்து தாம்பரம் வரை முதன்முறை சென்னைக்குள் அழைத்து சென்றபோது அவர் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தார். உலகத்தின் அத்தனை பாதசாரிகளும், ஓட்டுநர்களும் தன்னுடைய மகளுக்கு குறுக்காக வருவதற்கே அன்றைய தினம் முடிவு செய்திருக்கிறார்கள் என்பதாக அலுத்துக் கொண்டே வந்தார். ஆனால் குரலில் பெருமை இருந்தது. அன்றைய தினம் அம்மா என்னிடம் “உங்கப்பாவை இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தியா..போச்சு..மனுஷன் உன்னை பேசிப் பேசி டென்ஷன் ஆக்கியிருப்பாரே” என்றார்.
காரில் எனதருகில் உட்கார்ந்து கொண்டு “ஒழுங்கா போறானா பாரு..இடிக்கற மாதிரியே வர்றான்..இந்த இடுக்குக்குள்ள நுழையலைனாத் தான் என்ன” என்று கச்சேரிக்கு நடுவே நானும் இருக்கறேன் என்று காட்டிக்கொள்ளும் கஞ்சீரா போல ஓயாத பேச்சுக்கு இடையில் சொல்லிக் கொண்டே வந்தார்.
அப்பா இருந்த காலத்தில் கற்றுக்கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறபோது அதை ஈடு செய்வதைப் போல அம்மா அன்று இருந்தார்.
இந்த இரண்டு வருட காலங்களில் கார் ஓட்டும்போது கிடைத்த அனுபவங்கள் ஏராளம். இன்று காலை சாலையில் நான் ஓட்டக் கற்றுக்கொண்ட பயிற்சி வகுப்பில் கார் சென்று கொண்டிருந்தது. தள்ளாடித் தள்ளாடி செல்ல, என் வண்டியின் வேகம் கூட்டி அருகே சென்று பார்த்தேன். என் வயது கொண்ட ஒரு பெண் அச்சத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தார். வேறு யாரோ சொல்லித் தந்து கொண்டிருந்தார். வண்டி நிற்க, நான் குனிந்து அந்தப் பெண்ணிடம் “பயப்படாதீங்க..சீக்கிரம் கத்துக்குவீங்க..நானும் இந்த ட்ரெய்னிங் ஸ்கூல்ல தான கத்துகிட்டேன்” என்றேன். அந்தப் பெண் ‘தாங்க்ஸ்’ என்றார். இதெல்லாம் நடந்தது, சரியாய் நான் கார் ஏற்றி உடைத்த காம்பவுண்ட் சுவற்றின் அருகில். அம்மா சரியாக அதே நேரத்தில் போன் செய்தார்.
ஏங்க.. இப்படியாங்க ட்விஸ்ட் வைப்பீங்க. ஆனா செம மேம்.
இனி கேதுபெயர்ச்சி என்ன எந்த பெயர்ச்சியானாலும் ஜா.தீபாவும் காரும் நினைவுக்கு வருவார்கள்.
அந்த காம்பவுண்ட் சுவர் கண்ணிலேயே நின்றாலும் 25,000 மனதை விழுங்குகிறது. ரைட்டர் என்று தெரிந்திருந்தால் 1 லட்சம் வாங்கியிருக்கூடும்.
ரைட்டர் என்றதும் போலீஸா என்ற மிரட்சியான கண்களும் மாடுலேஷனும் காட்சிகளாகவும் குரலாகவும் தெரிகிறது உங்கள் எழுத்தில்.
சீரியலில் தொடரும் என்று வைத்து
மக்களையே திரைக்கதையை யோசிக்க வைத்து அழகு பார்க்கும் வித்தையைப்போல… அம்மாவின் அடுத்த கால் வந்தது என்று சொல்லி.. அடுத்த பெயர்ச்சி பலன் என்ன சொல்லியிருப்பார் என்றெல்லாம் யோசிக்க வைத்துவிட்டீர்கள்.
நிஜமாகவே குறும்படமாக எடுக்கலாம். அவ்வளவு அருமை.
உங்களோடு நீங்கள் ஓட்ட நானும் உங்கள் காரில் பயணித்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும், நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மகிழ்வுந்து பயணம் மகிழ்ச்சியையே தருகிறது.
Oru Malayala Cinema Paatha maathiri Iruku Enaku
ரைட்டர்னாலே இங்கே ரொம்பப் பேருக்கு போலீஸ்தான். செம ரைட்(டர்)அப். 1992-ல் தஞ்சாவூர் சுதா டிரைவிங் ஸ்கூல்ல கத்துகிட்டு லைசென்ஸ் எடுத்தேன். அதையும் காணாடிச்சுட்டு தேமேன்னு இப்ப வரைக்கும் இருக்கேன். எதுலயும் நிர்விசாரம்தான் எனக்கு.
இந்த கார் ஓட்டும் ஸ்டைலுக்கு ஹாலிவுட் படத்துல ஒரு சீன் கன்ஃபார்ம்!
//ஓ..சரி..கேது பெயர்ச்சியாம்..உன் ராசிக்கு இனிமே அமோகமா இருக்கும்னு தினமலர்ல போட்டுருக்கான்..கோயிலுக்குப் போய்…நவகிரகத்துக்கு”//
தினமலரில்தானே அது உண்மையின் உரைகலாச்சே ஹீஹீ
நானும் என் மனைவியும் அமெரிக்கா வரும் போது சென்னையில் கார் ஒட்டக் கற்றுக் கொண்டு லைசன்ஸ் வாங்கினோம்.. அதில் என்ன ஆச்சிரியம் என்றால் என் மனைவி லைசன்ஸ் வாங்கும் போது ஆர் டி ஓ முன்னால ஒட்டிக் காட்டனும் அப்ப அவர் ஓட்டிக் காட்டும் போது ஒரு கார் மேல் மோதிவிட்டார் ஆனாலும் அவர் நீங்க அமெரிக்கதானே போரீங்க என்று சொல்லி லைசன்ஸ் கொடுத்துவிட்டார்…
Iam a 26 still struggling with bike last 4month starting to drive it …i facing. 2accident on the bike I have a fear came when drive. A bike …hope I will achieve it and get licence quickly both 2 and 4 wheeler …and also nice article
உங்க விவரிக்கும் பாணி மென்மையாக சுவாரஸ்யமாக நதி ஓட்டம் போல செம பொதுவாக பெண் எழுத்தாளர் கதைகளில் புலம்பல் பெண்களுக்கே உரிய எமோஷ்னல் குழப்பங்கள் கலந்த வீடு உறவுகள் சார்ந்த விரிப்புகள் தான் அதிகமாக இருக்கும் அந்த எழுத்துக்கள் அதிகமாக ஆண்களை கவராது ..
ஆனால் உங்கள் எழுத்தில் அது இல்லை தேவையான இடத்தில் அளவான சொற்கள் அதிலும் இன்ட்ரஸ்ட்டாக விவரிக்கும் பாணி அருமை சிறப்பு 👌🏻🙂👍🏻🙂🙏🏻 மேடம்…. (சுஜாதா கதையில் வருவது போலவே)
வாழ்த்துக்கள் 💐💐💐💐💞🦋👍🏻