விஜயகாந்த் அவர்களுக்கும் என்னுடைய இப்போதைய வாழக்கைக்கும் ஓரு நேரடி தொடர்பு உண்டு. அதை விஜயகாந்த அறிந்திருக்கவில்லை. திருநெல்வேலியில் இருந்து வேலைக்காக சென்னை வந்திருந்த போது ஒரு ஊடக நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தின் அலுவலகம் ஜெமினி பார்சன் காம்ப்ளக்சில் இருந்தது. எனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. வெளியேறிவிடலாம் என்றால், அடுத்து என்ன செய்வது என்பது தெரியவில்லை. ஜெமினி பார்சனில் அப்போது ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. நான் பார்க்கும் முதல் படப்பிடிப்பு அது. நாள் முழுக்க வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சண்டைக் காட்சியைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் விஜயகாந்த் நடித்தார். அந்தக் காட்சிகளைப் படம்பிடிப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் திடிரென்று தோன்றியது நாம் ஏன் சினிமாவில் வேலை செய்யக் கூடாது? இப்படித் தோன்றியதும் அந்த எண்ணம் உடனே மறைந்துவிடவில்லை மனம் அதற்கான சாத்தியங்களை யோசிக்கத் தொடங்கியது. இப்படியாக எனக்கும் விஜயகாந்துக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சினிமா ஆர்வம் எப்படி வந்தது என்று யாரேனும் கேட்குந்தோறும், ஒரு கணம் விஜயகாந்த் முகமும் வந்து போகும்.
அவரைக் குறித்து யோசிக்கும்போதெல்லாம் ஆச்சரியம் ஏற்படும். சினிமாவில் ஒருவர் தான் நினைப்பதை நடத்துவது என்பது சாதாரணம் அல்ல. மதுரையில் இருந்து எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர். அவரே சொல்வது போல பல அவமானங்களை எதிர்கொண்டவர். அந்த அவமானங்கள் எல்லாமே அவருடைய தோற்றமும், நிறமும் சார்ந்ததாக இருந்திருக்கின்றன. அப்படியான ஒருவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமானார். சமீபத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா xxx படத்தில் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு நிற நாயகனாக வர வேண்டும் என்று ஆசை கொண்ட ஒருவராக ஒரு கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. ரஜினி பற்றி அதில் சொல்லியிருப்பார்கள். விஜயகாந்தையும் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. விஜயகாந்த் வந்த பிறகு ரஜினி புது நிறம் என்பதாய் மாறிப்போனார் என்பார் எனது நண்பரொருவர். விளையாட்டில்லை. அச்சு அசல் தமிழகத்தின் முகமாய் வெறும் நம்பிக்கையை மட்டும் கொண்டு ஒருவர் சினமாவில் கதாநாயகன் ஆவதென்பது இன்றும் கூட சாத்தியமற்றது. இத்தனைக்கும் அவர் வறுமைக்கு பயந்து வந்தவரில்லை. எல்லா வசதிகளும் இருந்து ஆர்வத்தினால் சினிமாவுக்கு வந்தவர். எந்தக் கணமும் திரும்பிப் போய்விடலாம் என்கிற சூழல் கொண்டவர். இப்படியான ஒருவர் நின்று நிலைத்து ஆடியிருக்கிறார் என்பது தான் எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் மீது கொண்ட ஆச்சரியம்.
நிறம் என்பதை முன்வைப்பதன் காரணம், ஒரு நடிகர் அல்லது நடிகையர் தேர்வின்போது புகைப்படங்களைப் பார்த்தபடி திரைப்படங்களில் பணியாற்றுபவர்கள் சொல்லும் ‘கமெண்டுகளை’க் கேட்டிருக்கிறேன். அது கேட்கும் யாரையும் உடைத்துவிடக்கூடியது. ஒரு கதாபாத்திரம் கருப்பாக இருக்க வேண்டும் என்கிற நிலை வந்தால் வெள்ளை நிறம் கொண்டவர்களுக்கு கறுப்பு மை பூசி நடிக்கச் செய்யும் நிலை இன்றும் உண்டு. கறுப்பு நிறத்தவர்களைக் கேலி செய்யும் நகைச்சுவை காட்சிகளும் நம்மிடம் உண்டு. இந்தப் பின்னணியில் பார்க்கையில் விஜயகாந்த் தன்னை ஒரு ஆளுமையாக உருவாக்கிக் கொண்டதின் உழைப்பையும் பொறுமையையும், விடா முயற்சியையும் தைரியத்தையும் வியக்கிறேன்.
வேறு எந்த நடிகர்களுக்கும் சாத்தியப்படாத ஒன்று விஜயகாந்துக்கு உண்டு. அவருடைய திரைப்படங்கள் மறு ரிலிஸ் செய்யப்பட்டாலும் நூறு நாட்கள் ஓடும். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. விஜயகாந்தினைப் பொறுத்தவரை எனக்குத் தெரிந்து எல்லா நடிகர்களின் ரசிகர்களும் அவருக்கும் ரசிகர்களாக இருந்தனர். இதன் காரணமாக நான் பார்ப்பது அவர் படங்களைத் தேர்ந்தெடுக்கும் விதத்தினைத் தான். எந்த நடிகர் தன்னை காலத்துக்கு ஏற்றது போல மாற்றி கொள்கிறாரோ தகவமைத்துக் கொள்கிறாரோ அவர் சினிமாவில் நிலைத்திருப்பார். அரசியலில் ஈடுபட்டதும், உடல் நிலையும் தான் விஜயகாந்தை சினிமாவில் நடிப்பதில் இருந்து விலக்கியிருந்தது. சினிமா மட்டுமே என்று அவர் இருந்திருந்தால், இப்போதும் அவர் தன்னை பரிட்சார்த்த ரீதியிலான படங்களுக்கும் புது இயக்குநர்களுக்கும் வாய்ப்புகளைத் தந்திருப்பார். ஏனெனில் கடந்த காலங்களில் அவர் அப்படித் தான் இருந்தார்.
தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருந்தவர், பெயர் பெற்ற பிறகும் கூட கதைக்கு முக்கியத்துவம் தந்த படங்களில் நடித்தார். அதோடு முக்கியமாக திரைப்படக் கல்லூரியில் படித்த மாணவர்களின் படங்களில் ஒரு பகுதியாகவே மாறியிருந்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் 3D படத்தில் நடித்தார். முதன்முறை படம் இயக்கும் இயக்குநர்களாக இருந்தாலும் அவர்களின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஒரு வருடத்தில் மட்டும் பதினெட்டு படங்கள் அவருக்கு ரீலிஸ் ஆகியிருந்தன. கோபக்கார இளைஞன் என்கிற கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வாக மாறியிருந்தார் விஜயகாந்த். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சிவப்பு மல்லி’ போன்ற படங்கள் அதற்கு உதாரணங்கள். இப்படி இருக்கும்போதே ஊரை விட்டு ஒதுங்கி இரவு நேரங்களில் பாட்டுப் பாடும் வெள்ளைசாமி கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இது தான் இவருடைய ‘இமேஜ்’ என்று நினைக்கும்போதே நானே ராஜா, நானே மந்திரி படத்தில் முட்டாள்தனமும் முரட்டுத்தனமும் கொண்ட ஒரு பண்ணையார் வேடம். விஜயகாந்தின் நகைச்சுவை நடிப்புக்கென ரசிகர்கள் உருவாவவதற்கு காரணமாக இருந்த படம் இது. வலிந்து வரவழைத்துக் கொண்ட உணர்வாக இல்லாமல் விஜயகாந்தால் இயல்பாக நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க முடியும். உடல்மொழியில் மட்டும் அல்லாமல், போகிற போக்கில் டைமிங்காக சொல்லப்படும் நக்கல்கள், நையாண்டிகள் இவருக்கு இயல்பாக கிடைக்கப்பெற்றிருந்தன. அதற்கு அவர் மதுரைக்காரராக இருந்ததும் காரணமென்று சொல்லமுடியும்.
போலிஸ், ராணுவ வீரர் போன்றவற்றுக்கு அளவெடுத்து வார்த்தது போல ஒரு பக்கம் இருக்கையில், பெரிய மனிதர், ஊருக்கே தலைவர் போன்ற சின்னக் கவுண்டர், தவசி படங்கள் இவருக்கென அமைந்தவையாக இருந்தன. இப்படித் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே ரமணாவில் எதிர்பாராத கதாபாத்திரத்தில் அமைதியாகவும் உறுதியாகவும் வந்து நின்றார்.
எங்கள் ஊரில் பேரின்பவிலாஸ் என்று ஒரு திரையரங்கம் உண்டு. அந்தத் திரையரங்கத்தில் ஒரு வழக்கத்தினை வைத்திருந்தார்கள். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் கைத் தட்டும் இடங்கள், ஆரவாரம் செய்வார்கள் என்று தோன்றும் இடங்களில் எல்லாம் திரையரங்குக்குள் சீரியல் லைட்டினை எரியவிட்டு அணைப்பார்கள். இப்படி ஒரு படத்துக்கு எத்தனை முறை சீரியல் லைட் எரிந்தது என்பது வைத்து அது எந்தளவுக்கான மாஸ் படம் என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். ஒரு படத்தில் விஜயகாந்த் எதிராளியை உதைப்பார். உடனே சீரியல் லைட்டினைப் போட்டார்கள். விஜயகாந்தின் சண்டைக் காட்சிகளில் பிரதானமே அவர் காலால் உதைப்பது தானே, அதற்கு ஏன் இந்த லைட் என்று யோசிக்கும்போது அவரது ரசிகர் ஒருவர் சொன்னார், எப்போதும் விஜயகாந்த் காலால் பின்னால் உதைப்பார். அபூர்வமாகத் தான் எதிராளியை முன்னால் நிற்கவைத்து உதைப்பார் என்றார். அப்படி முன்னால் நிற்பவரின் தோள் வரை காலைக் கொண்டு சென்று உதைக்கும் காட்சியில் தான் சீரியல் லைட் எரிந்தது என்றார். ‘அடடா’ என்றிருந்தது. அவருடைய ரசிகர்களால் மறக்கமுடியாத சண்டைக்காட்சிகளுள் ஒன்று கேப்டன் பிரபகாரன் படத்தில் போலிஸ் ஸ்டேஷனுக்குள் இடம் பெறுவது. காலை சுற்றி தனக்கு முன்பாக இருக்கும் மேஜையை உடைப்பது, அடுத்தடுத்து எதிராளிகளை அடுத்தடுத்து ஒரே ஷாட்டில் உதைத்துக் கொண்டே இருப்பது, நடந்து வரும்போதே இரண்டு கைகளாலும் அடிக்க வருபவர்களைத் தடுத்துக் கொண்டேபோவது, சண்டையிடும்போது முகத்தில் இலகுத்தன்மையைக் கொண்டு வருவது என அலட்டலில்லாமல் அவர் சண்டையிட்டது எல்லாரையும் ஈர்த்திருந்தது. சண்டைக்காட்சிகள் வந்தால் கண்ணை மூடிக் கொள்பவர்களும் கூட இவரது சண்டையைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள், நான் உட்பட.
33 வருடங்களுக்குப் பிறகு இப்போது பார்க்கையில் சத்ரியன் படம் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும். ஒருகட்டம் வரைக்கும் படத்தில் விஜயகாந்துக்கு வேலையே இருக்காது. கிட்டத்தட்ட தன தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கும் கதாபாத்திரம். அதன்பிறகு பழைய பன்னீர்செல்வமாக அவர் மாறுகிறார் என்பதெல்லாம் படத்தின் கடைசி சில நிமிடங்களுக்கு மட்டுமே. இப்படியான ஒரு ஸ்க்ரிப்ட் ஜெயிக்கும் என்பதற்கு இந்தப்படத்தின் கதையையே திரும்பத் திரும்ப எடுத்த மணிரத்னத்துக்கு நம்பிக்கை கொடுத்த படம். இந்தப் படத்தில் விஜயகாந்த் இரண்டு குழந்தைகளின் தகப்பன். அறிமுகக்காட்சி சமையலறையில். இதற்கு முன்பே கூட ஊமை விழிகள் போன்ற படங்களில் தன் வயதுக்கு மீறிய வயதானவர் தோற்றத்தில் நடித்திருக்கிறார். எந்த இமேஜை அவர் ஹீரோவாக நடித்து நிலைநாட்டினாரோ அதற்கு நேர்மாறாக இமேஜை அவருடைய மார்கெட்டின் உச்சத்தில் அடித்து வீழ்த்தி அந்தப் படத்தினை வெற்றியும் பெறச் செய்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி தெரிந்ததும் ஒருமுறை அவரை தள்ளி நின்றாவது பார்த்துவிடலாமா என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த மருத்துவமனையைக் கடக்கும்போது அவர் இங்கு தானே இருக்கிறார்…விரைவில் நமக்கு பழைய விஜயகாந்தாக கிடைக்க வேண்டும் என்று தோன்றியது. நிஜமாகச் சொல்கிறேன் என்னால் அவர் நலமாக இருக்கிறார் என்பதை நிரூபிக்க அவர் குடும்பத்தின் மூலமாக வெளியிடப்பட்ட காட்சிகளைப் பார்க்க முடியவில்லை.
அவர் ஒருகட்டத்தில் மீம் உருவாக்குபவர்களின்பிரதான நாயகனாய் மாறியிருந்தார். அப்போதும் கூட அவர் தன் இயல்பில் இருந்ததை அவர்கள் மீம்களாக மாற்றியிருந்தனர். அதைக் கூட ரசிக்க முடிந்தது..ஆனால், அவருடைய மனைவி வெளியிட்ட எந்த வீடியோக்களையும் பார்க்க முடியவில்லை. யாருக்காக எதற்காக அவர்கள் அதைச் செய்தார்கள்? அவர் அந்தக் குடும்பத்தின் தலைவர்..அதைக் கடந்து பல்லாயிரம் மக்களின் நாயகன். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவர் நம்பிக்கை நட்சத்திரம். கேப்டன் என்கிற பட்டத்தினை அவர் ஆளுமைக்காகத் தந்திருந்தனர். அவர் முகமும், செயல்பாடும், அந்த செயல்பாட்டின் வழியே அவர் தனது கொண்டிருந்த ஊக்கமும் மறுக்க முடியாதவை. அவர் ஓய்வில் இருக்கிறார் என்பதை மக்களும் ரசிகர்களும் புரிந்து கொண்டார்கள். அவர் ஓய்வில் இருக்கவே முடியாது என்பதை அவருடைய கடைசி கால வீடியோக்களில் உணர்த்திக் கொண்டிருந்தனர். அவர் மரணத்தைப் போலவே இது வலிமிக்கதாக இருந்தது.
மதுரையிலிருந்து கிளம்பி தமிழக அரசியலின் எதிர்சக்தியாய் உருவெடுத்தவருடைய பயணத்தில் அவர் தனிப்பட்டு செய்த சாதனைகள் அதிகம். அந்தச் சாதனைகளை இரண்டு வார்த்தைகளில் சொல்லலாம்..அவர் கேப்டன்…அவர் விஜி.
தாங்க முடியாத + ஏற்றுக்கொள்ள முடியாத இழபுதான். அந்த சீரியல் பல்ப் எரியவிடும் நிகழ்வை நினைவு கூர்ந்து சொல்லியிருந்தீர்கள். அப்படியெனில் அங்கு தியேட்டரில் இருப்பவர்கள் கூட எப்படி கொண்டாடியிருப்பார்கள் என கண் முன்னே நினைக்க தோன்றியது. ஒவ்வொன்றாக சொல்ல சொல்லத்தான், அட ஆமா ல்ல. … இப்படித்தான்ழ் இதுதான் நான்னு எதற்குள்ளும் ஆட்படாமல்ழ் விதவிதமாக தனக்கான, ஸ்பெஷலை கொடுத்திருக்கிறார் என உணரமுடிகிறது.
சிறப்பான அஞ்சலி.