கதை சொல்லட்டுமா?”
“என்னப்பா?”
“ஒரு கதை சொல்லணும்”
இப்படி அப்பா என்னிடம் சொல்வார் என என்றுமே நினைத்திருக்கவில்லை. அன்றைய தினம் அலுவலக வேலையை அமைதியாய் அமர்ந்து முடிக்க வேண்டி அம்மா வீட்டிற்கு வந்திருந்தேன். வந்த நிமிடத்தில் இருந்து அப்பாவைக் கவனிக்கிறேன். அப்பாவுக்கு கால்கள் ஆடிக்கொண்டே இருந்தன. அவர் அமர்ந்திருந்தார். இதே பழக்கம் எனக்கும் உண்டு. அவர் பதற்றத்தில் இருக்கிறார். எழுந்து நடந்தார். சமையலறை வரை சென்று நின்று திரும்பி வந்தார். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். எப்போது வேண்டுமானாலும் அவர் என்னிடத்தில் பேச்சுக் கொடுக்கலாம். வேலையில் கவனம் செலுத்துவது போன்றதான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். அப்பா டீவி ரிமோட்டை எடுத்து எதையோ அழுத்தினார்.
“ஓ ..வேலை பாக்கறதுக்கு இடைஞ்சலா இருக்கும்” என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டு ரிமோட்டை கீழே வைத்துவிட்டு மீண்டும் நடந்தார். விளையாடப் போகட்டுமா என்று விடுமுறை நாளின் மதியத்தில் அம்மாக்களிடம் கேட்கப்போகும் சிறுவனின் உடல்மொழி அது. அம்மாவிடம் அப்பாவுக்கு எதோ கேட்கவோ பேசவோ வேண்டிய சமயத்தில் இப்படித் தான் மாறுவார். அம்மா வேலைகளை முடித்துவிட்டு அயர்ச்சியுடன் ஹாலுக்கு வந்தார். அப்பா அதற்கென காத்திருந்தது போல வந்து நின்றார். இப்போது அம்மாவிடம் கேட்கப்போகிறார். அம்மா நாளிதழைப் படிக்கத் தொடங்கினார். தொடர்ந்து ஐந்து நிமிடங்களாக அம்மாவை ஒன்றும் தொந்தரவு செய்யாமல் அப்பா இருப்பதே எனக்கு விசித்திரமாக இருந்தது. அப்படியெனில் வேறு எதோ தீவிர சிந்தனையில் இருக்கிறார்.
“டீ போடட்டுமா?” என்றார். என்னிடம் தான் கேட்கிறார். “இல்ல வேண்டாம்பா”
“ஆபிஸ் வேலை அதிகமா? ரொம்ப நேரம் ஆகுமா முடிக்கறதுக்கு?”
“இல்ல..இப்ப முடிஞ்சிடும்”
சாப்பிட்டு வைத்திருந்த மிக்சர் தட்டினை எடுத்தார். அதில் அங்கங்கு ஒட்டியிருந்த துணுக்குகளை சேர்த்தார். அடுத்து என்ன செய்வார் என்பது தெரியும். அதை எடுத்துப் போய் காம்பவுண்டில் எறும்புகளின் வழித்தடத்தில் வைப்பார். அத்தனை பெரிய சுற்றுச் சுவற்றில் எறும்புகளின் வழிப்பாதை இவருக்கு மட்டும் தான் தெரியும். எறும்புகளுக்கு இப்படி உணவைக் கொண்டு போய் கையில் கொடுப்பதால், அவை வீட்டுக்குள் வராது என்பது அவரது உறுதியான எண்ணம். எறும்புகளை சோம்பேறியாக்குகிறீர்கள் என்பார் என் அம்மா. “உதவி செய்கிறேன்” என்பார் அப்பா.
கையைத் தட்டிக் கொண்டே வீட்டுக்குள் வந்தார். “காலை மிதியடியில துடைச்சிட்டு வாங்க..செருப்பு போட்டுட்டு போகலாம்ல” அம்மாவின் நினைவும் கண்களும் நாளிதழில் இருந்தாலும் சொற்கள் அப்பாவுக்கானதாகவே இருக்கும். அத்தனை பெரிய உதவியை சக ஜீவராசிக்கு செய்துவிட்டுத் திரும்பும் தன்னை இப்படி எரிச்சல்படுத்தும் விதமாக சொன்னால், கோபப்படும் அப்பா இப்போது அமைதியாக இருந்தார். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது
நான் ஒருவரைக் காதலிக்கக் கூடும் என்று நம்பியிராத அப்பா அதனைச் சொன்னபோது உடைந்து போனார். சொன்ன அன்றைய இரவு அவர் தன் படுக்கையில் அமர்ந்து அழுததையும் அம்மா அவரை சமாதானப்படுத்தியதையும், தூங்காத நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அன்றைய இரவில் என்னாலும் தூங்கியிருக்க முடியும் என்று அப்பா எப்படி நம்பினார் என்று தெரியவில்லை. “அவளுக்குத் தெரியவேண்டாம்” என்றார். அவர் அழுததை நான் பார்த்ததாக இப்போது வரை காட்டி கொண்டிருக்கவில்லை. அதற்கு மறுநாள் அவர் இதே போன்ற உடல்மொழியைக் கொண்டிருந்தார். ஒரே இடத்தில் கட்டப்பட்ட கோயில் யானை முன்னும் பின்னுமாக நடப்பது போன்ற ஒரு உடல்மொழி. அது மெதுவாக கூண்டுக்குள் அலையும் சிங்கத்தினுடையதாக மாறும். பின்னரே அவர் பேசத் தொடங்குவார்.
அப்பாவிடமும், யாரிடமும் அனுமதி பெறாமல் நடந்த என்னுடைய திருமணத்துக்குப் பிறகு ஒரு வருட காலம் நான் அம்மா அப்பாவிடம் பேசவில்லை. தள்ளி நின்று அப்பாவைப் பார்த்திருக்கிறேன். செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டோ, வாசலில் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டோ அமர்ந்திருக்கும் அப்பவைப் பார்த்திருக்கிறேன். அது அவருக்குத் தெரியாது அல்லது என்னைப் போலவே அவரும் சிலவற்றைத் தெரியாதது போலக் காட்டிக் கொண்டிருக்கலாம். சில நேரங்களில் இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு காம்பவுண்டுக்குள் நடந்து கொண்டிருப்பார். அதைப் பார்க்கிறபோது தான் அழுகை வரும். அவர் எதையும் செய்யாமல் சிந்திக்கையில் அது என்னைக் குறித்தும் இருக்கக்கூடும்.
அவருடைய நடை தான் எனக்கும் வந்திருந்தது. ஒரு கால் நேராகவும், மற்றொரு பாதம் வலதுபக்கம் திரும்பியும் நடக்கும் நடை எனது அப்பாவிடமிருந்து பெற்றது. வாத்து போல நடக்கிறேன் என்று பள்ளிக்கூடத்தில் மற்றவர்கள் செய்த கேலியினால் நான் எனது நடையை மாற்றியிருந்தேன்.நான் என்னை மாற்றிக் கொண்டதைப் போல, அப்பாவையும் நடையை மாற்றச்சொல்ல நினைத்திருக்கிறேன். சொல்லாமல் விட்டிருந்ததே அந்த நடையின் மீதான எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அதே போன்ற நடை. அவரது ஒரு கை மற்ற கையினைத் தடவிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் ஏதோ சொல்லப் போகிறார்.
ஊறுகாய் ஜாடியைத் திறந்து பார்த்தார். “அது கெட்டுப் போயிடும்..மூடி வைங்க..” என்றதும் அம்மாவை ஒன்றும் சொல்லாமல் மூடி வைத்தார். அப்போது தான் அவருக்கேத் தெரிந்திருக்கும், ஊறுகாய் ஜாடியைத் திறந்தோம் என்று.
எனக்கு அப்பாவிடம் பேச வேண்டுமாய் இருந்தது. திருமணத்துக்கு முன்னும் பின்னும் எங்கள் இருவரிடையே எதையும் பேசிக்கொள்ளலாம் என்பதெல்லாம் இருந்ததேயில்லை. காற்றில் ஆடும் திரை போல எங்கள் இருவரிடையே அம்மா இருந்தார் காற்று விலகும் நேரம் மட்டுமே நாங்கள் பேசவும், கேட்கவும் செய்திருக்கிறோம். அந்தத் திரை எங்களுக்குத் தேவைப்பட்டது.
ஏதாவது பேசனுமாப்பா?
கேட்டுவிட்டு நான் தான் கேட்டேனா என்று தோன்றியது. அம்மா நிமிர்ந்து பார்த்தார். அந்த முகத்தின் ஆச்சரியம் நான் அப்படிக் கேட்டதை எனக்கே நம்ப முடியாமல் ஆக்கியது. மிகச்சாதாரணமான வார்த்தைகள். யாரிடம் கேட்கிறோம் என்பதைப் பொறுத்து கனத்தினை ஏற்றுக்கொள்கிறது.
“ம். எப்ப ஃபிரீன்னு சொல்லு..பேசலாம்”
என்னுடைய முப்பத்தைந்து வருட காலத்தில் இதற்கு முன்பு அப்பா இப்படி முகத்துக்கு நேராக பேசவேண்டும் உன்னிடம் என்று சொன்னதில்லை. புதிராக இருந்தது. ஆர்வமும், வேண்டாம் என்றும் தோன்றியது. இத்தனை நாட்களில் இரண்டு குழந்தைகள் எனக்கென்று ஆன பிறகு, “நீ நல்லா இருக்கேன்னு தெரியும்..சந்தோசம்” என்றார் வேறொரு பேச்சின் ஊடாக. திரும்ப அதை அழுத்திச் சொல்வார் என்று அவர் முகம் பார்த்திருந்தேன். அவர் நான் தான் சொல்லிட்டேனே என்பதாக இருந்தார்.
“சரி..இப்பவே பேசலாம்” என்று லாப்டாப்பினை மூடிவைக்க, எனது சிறிய மகள் போல சிரித்தார். இருவருக்கும் ஒரே போன்றதான சிரிப்பு. நான் சொன்னதைக் கேட்டுட்டே தாங்க்ஸ் என்பது அந்தப் புன்னகையின் அர்த்தம். இதை நான் என்னுடைய மகளின் சிரிப்புக்கான அர்த்தமாக வைத்திருந்தேன். அதையே அப்பாவிடமும் பொருத்திப் பார்ப்பேன் என்று நினைத்திருக்கவில்லை. அப்பாவின் புன்னகை என்பது ஒரே மாதிரியான அர்த்தத்தைத் தான் இத்தனை வருடகாலங்களாக எனக்கு புரிந்து கொண்டிருந்தது. அதற்கும் அர்த்தங்கள் இருந்திருக்கின்றன. அதனைப் புரிந்து கொள்ள நான் அம்மாவாக வேண்டியிருந்திருக்கிறது. எனது மகள் என்னுடைய அப்பாவாக ஆகவேண்டியிருந்திருக்கிறது.
அறைக்குள் எதிரெதிரே அமர்ந்தோம். எனக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது. முன்னெப்போதோ இதே போல நானும் அப்பாவும் அமர்ந்திருந்தது போலத் தோன்றியது. அவர் என்னப் பேசப்போகிறார் என்பது கூடத் தெரியும் என்பதாகத் தீர்மானம் வந்தது. ஒரு சில நொடிகளில் எல்லாம் கரைந்து எதோ தயக்கமும், அச்சமும் சொல்லத்தெரியாத ஒரு உணர்வு உள்ளுக்குள். எதைப் பேசப்போகிறார்? நான் என்ன பதில் தரவேண்டும்?
“ஒரு கதை சொல்லணும்?”
“என்னப்பா?”
“ஒரு கதை..ரொம்ப நாளா மனசுல உருவாக்கி வச்சிருந்த ஒரு கதை..சொல்லட்டுமா? உனக்கு கேக்க டைம் இருக்குமா?”
“சொல்லுங்கப்பா”
யாரிடமோ பேசுவது போல சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பா தரையையே பார்த்துக் கொண்டிருந்தார். இதுவரை அவர் கதை சொல்லி நான் கேட்டிருக்கவில்லை. சாலாம்பூர் னு ஒரு ஊரு. அந்த ஊருக்கு இடையில ஒரு தண்டவாளம் கோடு கிழிச்சசது போல போகும். காலைல ஒரு ரயில், நைட்டு ஒண்ணு..அவ்வளவு தான்..அந்த ஊருக்கு ஒருநாள் ரயில்ல ஒருத்தன் வந்து சேர்ந்தான்”
முதல் சில நிமிடங்கள் என்னால் கதையில் ஒன்றமுடியவில்லை. அவர் கதை சொல்லும் விதத்தை ஆராய்ந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் கதை என்னை உள்ளிழுத்துக் கொண்டது. ஒரு கிராமத்தின் கதை அது. மூர்த்தி என்கிற ஒருவனின் அம்மா அப்பா இறந்து போக, ஒரே நாளில் ஊருக்குள் அனாதையாகிறான். யார் யாரோ வளர்க்க வளரும் அவன், ஒன்றாம் வகுப்பு படிக்கச் சேர்ந்த அதே பள்ளியில் நான்காம் வகுப்பில் கிழிந்த ட்ரவுசருடன் செல்கிறான். ஒவ்வொரு நாளும் கிராமத்தில் இருக்கும் வீடுகளில் இருந்து ஒருவேளை உணவு பெற்று அதையே தனக்கும் தன் தம்பி தங்கைக்குமாகக் கொடுக்கிறான். பள்ளி நாடகத்தில் பிச்சைக்காரனாக நடிக்க யாரும் ஒப்புக்கொள்ளாத போது மூர்த்தியை அழைத்து பிச்சைக்காரனாக நடிக்கச் சொல்கிறார்கள். நாடக ஒத்திகையின்போது கிடைக்கும் வேர்க்கடலைக்காக சேர்கிறான். அவனுடைய நடிப்பு அசலாக இருந்ததாக எல்லாரும் சொல்ல, தம்பி தங்கைக்கு முன்பாக அழ மனமில்லாமல் தனியே அழுகிறான். எப்படியும் சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறான். கண்ணாடியில் முகத்தைப் பார்க்குந்தோறும் அவனுக்கு அது சாத்தியமாகாது என்று தெரிந்து போகிறது. நன்றாகப்படித்து அரசாங்க வேலையில் சேர்ந்து தமி தங்கையை கரையேற்றுகிறான். ஒருநாள் ரயிலில் அதே ஊருக்குத் திரும்புகிறான்..இதற்லுள் அவன் பட்ட கஷ்டங்கள்..பாடுகள் என கதை ஒரு உருக்கொண்டிருந்தது.
அப்பா பேசப் பேச அந்த அறையின் ஒளி மங்கியது. அவர் முகம் இருட்டுக்குள் சென்று நிழலுருவமாய் அப்பா மாறிக் கொண்டிருக்க குரல் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. அவருக்குள் அற்புதமான கதை சொல்லும் ஆற்றல் இருந்தது அன்று தான் எனக்குத் தெரிய வந்தது.
“மூர்த்திக்கு ஒரே ஒரு ஆசை…அது நிறைவேறினா போதும்னு நினைச்சு தான் ஊருக்குள்ள திரும்ப வர்றான்” என்றார். கதையின் முக்கியமான கட்டம்.
அம்மா டீ எடுத்துக்கொண்டு வந்தார். இத்தனை நேரம் நாங்கள் பேசிகொண்டிருப்பது அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். “இன்னைக்கு இது போதும்..மீதியை இன்னொரு நாள் சொல்றேன்” என்றார். என்னுடைய அப்பாவின் முகத்தில் ஒரு தெளிவை அன்று பார்த்தேன். அவர் டீ டம்ப்ளரோடு எழுந்து போனார். அம்மா என்னிடம் “என்ன அதிசயமா அப்பாவும், பொண்ணும் என்ன பேச்சு? லைட் கூட போட்டுக்காம பேசணுமா”
“கதை சொன்னாரும்மா”
“அது வேறயா..” என்று எழுந்து போனார்.
நான் அப்பா சொன்ன கதையை யோசித்துக் கொண்டே நடைபயிற்சிக்குக் கிளம்பினேன். அவர் தன்னுடைய டூவீலரைத் துடைத்துக் கொண்டிருந்தார். பழைய மொபெட் அது. ‘ஒரு ரவுண்டு போகட்டுமா?” என்று கேட்டு அதை வாங்கி ஓட்டினேன். அப்பாவுடனான அதன் நெருக்கம் எங்களைக் காட்டிலும் அதிகம். என்னிடம் சொல்வதற்கு முன்பு இதே போன்றதான கதைகளை அதனிடம் அவர் சொல்லியிருக்கக்கூடும். தெருவோரத்தில் நிறுத்தி அதன் கைப்பிடிகளைத் தடவிக் கொடுத்தேன். வண்டியின் கண்ணாடியில் அப்பாவின் முகத்தைத் தேடினேன். அதில் என் முகம் தெரிந்தது. அன்றைக்கு ஒரு மணிநேரம் வண்டியில் சுற்றினேன். யோசிக்க யோசிக்க என்னென்னவோத் தோன்றியது. அந்தக் கதையின் சம்பவங்களை நான் எப்போதோ யார் மூலமாகவோ கேட்டது போன்ற உணர்வு இருந்தது. வீட்டுக்குள் வருகிறபோது அப்பா டீவி பார்த்துக்கொண்டிருந்தார். “அப்பா..நீங்க சொன்ன கதையை எழுத முடியுமா?”
”நான் சும்மா சொல்லிப் பார்த்தேன்..எழுதலாம், வேண்டாம்..”
“எழுதினா இன்னும் நாம மறந்து போனது எல்லாம் நம்மளையறியாம வந்துடும்..அதை யாரும் படிக்கணும்னு கூட இல்ல” என்றேன். “ஆமா..சொன்னா போதும்..யாரும் கேக்கணும்னு இல்லையே” என்றார்.
அன்று இரவு நான் எனது வீட்டுக்குச் செல்ல வேண்டும். வாசல் வரை வழியனுப்ப வந்தார். எப்போதும் வருவது தான். “பார்த்து போ..குழந்தைங்களை அழைச்சிட்டு வா..” எல்லாம் வழக்கமான வார்த்தைகள்.
எனது டூவீலர் முனை திரும்பும் வரை கண்ணாடியில் அப்பாவைப் பார்த்துக் கொண்டே போனேன்.
ஒருவாரமாய் அம்மாவிடம் மட்டும் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தேன். அப்பா என்ன பண்றாரு என்கிற எனது வழக்கமான கேள்விக்கு “எழுதிட்டு இருக்காரு” என்றார் அம்மா. “எந்த வேளைல சொல்லிட்டுப் போனியோ கிரிக்கெட் பாக்கறதில்ல..காய்கறி வாங்கக்கூட போக மாட்டேங்கறாரு..என்கிட்டே சண்டை போடக்கூட அவருக்கு நேரமில்ல. ஒரே எழுத்து தான் “ என்றார். எனக்கு அத்தனை சந்தோசம். அவர் என்ன எழுதியிருப்பார் என்பதைப் பார்க்கும் ஆவல் வந்தது. நாளை காலை கிளம்பிப் போயாக வேண்டும் என்று தீர்மானம் வந்தது. அன்றைய இரவு அப்பா கனவில் வந்தார். “முடிச்சிட்டேன்” என்றார் கையில் ஒரு கட்டு பேப்பருடன்.
மறுநாள் காலை. அம்மாவுக்கு போன் செய்தேன். “அம்மா அங்க கிளம்பி வர்றேன்.. அங்கிருந்து ஆபிஸ் போயிடுவேன்..அப்பாவைப் பாக்கனும் போல இருக்கு”
“வா..வா..இன்னும் தூங்கிட்டு இருக்காரு. நைட் ஒரு மணி வரைக்கும் எழுதிட்டு ..என்னை நடு ராத்திரி எழுப்பி கதையை எழுதி முடிச்சிட்டேன் உன்கிட்ட காலையில போன்ல சொல்லணும்னு சொல்லிட்டு தூங்கப் போனாரு.. நீயும் போன் பண்ற..அதிசயம் தான்” என்றாள்.
கனவில் வந்து முதலிலேயே தகவல் சொல்லிவிட்டார் என்பதை நேரில் போய்ச் சொல்லி ஆச்சரியம் தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன். டூவீலரை எடுக்கையில் அது கிளம்பாமல் உர்உர்ரென்றது. இன்று இந்த வண்டியை அம்மா வீட்டில் நிறுத்திவிட்டு, கொஞ்ச நாட்கள் அப்பாவின் வண்டியை எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று நினைக்க, என் வண்டி ரோஷம் கொண்டு ஸ்டார்ட் ஆனது.
அம்மா வீட்டின் வாசலில் சீதாக்கா நின்று கொண்டிருந்தாள். அந்தத் தெரு மருத்துவமனையில் வேலை செய்பவர். “எப்படி இருக்கீங்க?” என்றேன். அவர் என்னைப் பார்த்துவிட்டு கையைப் பிடித்துக் கொண்டார். “இப்பத் தான வர்றியா? யார் சொன்னா? அம்மாவா?” என்றாள். “உள்ள போ” என்று என் வீட்டுக்கு வழிகாட்டினாள்.
வீட்டுக்குள் போகும்போதே கால்கள் மரத்துப் போனது. அப்பாவைத் தரையில் கிடத்தியிருந்தார்கள். அம்மா என்னை வெறித்துப் பார்த்தாள்.
என்னால் நம்பமுடியவில்லை. மூளைக்குள் செய்தி போய்ச் சேருமுன்னரே யாரிடமோ போனில் பேசிக்கொண்டே வந்த அக்கா, என்னிடம் “அப்பா..” என்றாள் வெடித்து அழுதபடி..
அடுத்தடுத்து நடக்க வேண்டியவை நடந்தன. தூக்கத்தில் சென்றிருக்கிறார்.எல்லாம் முறைப்படி நடந்து கொண்டிருந்தன. நான் அப்பா எழுதிய கதையைத் தேடிக் கொண்டிருந்தேன். சட்டென்று தோன்ற அவரது கட்டிலில் தலையணையைத் தூக்க, செய்தித்தாளால் சுற்றி வைத்திருந்திருக்கிறார். அறுபது பக்கங்கள் எழுதியிருக்கிறார். அடித்தல் திருத்தல் இல்லை. எனக்குப் பிடித்த அவரது கையெழுத்தில் சீராக இருந்தது. அவரைப் போலவே நீள நீளமான எழுத்துகள். கதையின் கடைசி வரியை ஏனோ தேடினேன். “மூர்த்தி அந்தக் கிராமத்திற்கு எதற்காக வந்தானோ அது முடிந்திருந்தது. ரயிலேறினான்” என்று முடித்திருந்தார்.
என் தோளை அணைத்து என் அத்தை வாசலுக்கு அழைத்துப் போனார். அப்பாவின் வண்டி கிளம்பியது.
அப்பா-மகள் இருவருக்கிடையேயான தன்னுணர்வு ததும்பி பேசி,உணர்ந்து நகர்வது போல் கதையைக் கொண்டுச் சென்றிருப்பது அருமை.
‘அப்பாவைப் புரிந்து கொள்ள நான் அம்மா ஆக வேண்டியிருந்தது. என் மகள் அப்பா ஆக வேண்டியிருந்தது’ என்ற வரிகளில் நுண்ணுணர்வை நுழைத்து இழைத்திருக்கிறீர்கள்.
இந்தக் கதையை வாசிப்பதன் வாயிலாக, நற்பொழுதை தந்த உங்களுக்கு நன்றி.
மிக்க நன்றி
அருமையான கதை! பெண்பிள்ளைகளுக்கு அப்பா என்றாலே உயிர். அப்பாவை இன்ஞ் இன்சாக கவனித்த மகளின் தன்னுணர்வு வெளிப்பாடுகள் அபாரம்.
மிக்க நன்றி
♥️
இலக்கை நோக்கி எறியப்பட்ட அம்பு இலக்கினை துல்லியமாக அடைந்து அதன் முழுமையைப் பெறுதல் என்று இந்தக் கதையினை சுருங்கக் கூறலாம். இதனை எண்ணத்தில் இருத்தி கதை சொல்லி இருக்கிறார் ஜா. தீபா.
ஒரு இயல்பான குடும்பத்தை மிக அணுக்கமாக காட்டியிருக்கிறார். சௌமியாவின் ‘களிற்றடி’யின் தந்தையும், ஜா. தீபாவின் இந்தத் தந்தையும் ஏன் தங்களின் அந்திமக் காலங்களில் மட்டும் மகள்களிடம் கனிவை காண்பிக்கிறார்கள். அதற்கு முன்னரே இயல்பாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒருவேளை அப்படி வழக்கமான அப்பாவாக நடந்து கொண்டதால்தான் நமக்கு இத்தகுக் கதைகள் கிடைக்கிறதா?.
நாம் கேள்விப்படும்படி எல்லா அப்பாக்களும் தங்கள் மகள்களிடம் அவ்வளவு நெருக்கம் பாராட்டுவதில்லை. ஆனாலும் மகள்கள் அப்பாவை நினைக்காமல் அவரின் நடவடிக்கைகளை கவனிக்காமல் இருந்ததில்லை. ஏனெனில் மகள்கள் அப்பாவிற்கு மற்றொரு தாய் என்பதை சில தந்தைமார்கள் உணர்வதில்லை.
‘அப்பாவின் வண்டி’ எனும் இக்கதை உள்ளத்தை ஊடுருவக்கூடியது. ஜா.தீபா ஒரு கணமேனும் அப்பாவை விட்டு விலகவில்லை. நம்மையும் விலக விடவில்லை. கதை சொல்லும் நேர்த்தியில் விறுவிறுப்பையும் கவனக் குவிப்பையும் சேர்த்து இதனை படிப்போருக்கு ஒரு அலாதியான அனுபவத்தை தருகிறார். அப்பாவை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியுமா என்ன?.
வாழ்த்துக்கள் ஜா.தீபா.
பி. கு : தட்டச்சுப் பிள்ளைகள் சில இருக்கின்றன. அதனைக் களைய கவனம் கொள்ளலாம்.