Thursday, August 28, 2025
Homeகட்டுரைகள்ஆளுக்கொரு தனிமை

ஆளுக்கொரு தனிமை

ஈரானியத் திரைப்படங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளே அந்நாட்டு இயக்குநர்களின் கதைகளுக்கு புதிய வடிவையும், வலுவையும் வழங்குகின்றன. உள்நாட்டு அரசியலை அப்பட்டமாக திரையில் சித்தரிக்க முடியாமல் போனாலும் கூட மனித உறவுகளுக்குள் இருக்கும் முரண் மற்றும் நெருக்கங்களை பதிவு செய்துகாட்டுவதின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தங்கள் பக்கம் திருப்புகின்றனர் படைப்பாளிகள்.  அந்தத் தலைமுறையைச் சேர்ந்த இயக்குனர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக அஸ்கர் பர்ஹதியும் இருக்கிறார். சுமுகமாகப்  போய்க் கொண்டிருப்பதாய் நம்பப்படும் வாழ்வில் ஏற்படுகின்ற சிறுசிறு சறுக்கல்கள் எப்படியெல்லாம் மனித உறவுகளையும், மனங்களையும் மாற்றியமைக்கின்றன என்பதைத் தனது ஒவ்வொரு படங்களிலுமே முன்னிருத்தி சொல்கிறவர் இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹதி. இவருடைய படங்களின் காட்சிகள் அனைத்துமே நாம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அனுபவிக்கின்ற சம்பவங்களாகவே இருக்கின்றன. அதனாலேயே எளிதில் மனதின் வரவேற்பையும் பெற்று விடுகின்றன.

இவரின் மிகச் சிறந்த இயக்கத்தில் வெளிவந்து, வெளியிடப்படும் இடங்களில் எல்லாம் விருதுகளை பெற்று வந்த ஒரு படம் ‘A Seperation’ (2011).

நதீரும், சிமின்னும் விவாகரத்திற்காக விண்ணப்பிக்கின்றனர். பதினான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, பதினோரு வயதுடைய ஒரு பெண்ணுக்கு பெற்றோராக இருக்கும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரக் காரணம் நீதிமன்றத்தால் கேட்கப்படுகிறது. சிமின் தன்னுடைய பெண்ணை சுதந்திரமாக வளர்க்க வேண்டி வெளிநாடு செல்லத் திட்டமிட நதீரோ அல்ஜிமீர் என்கிற ஞாபகசக்தி குறைபாட்டு வியாதியால் அவதிப்படும் தனது அப்பாவைத் தனியாக விட்டுவர மனமில்லாமல் தெஹ்ராணிலேயே இருக்க விரும்புகிறான். தம்பதிகளின் இந்தக் காரணம் நீதிமன்றத்தால் ‘சாதாரண பிரச்சனை’ என முடிவுசெய்யப்படுகிறது. விவாகரத்து வழக்கும் தள்ளுபடி ஆகிறது.

ஏமாற்றம் அடைகிற சிமின் தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்லும் முடிவினை எடுக்கிறாள். இவர்களின் மகள்  தெர்மா நதீருடன் இருக்கிறாள்.  இதுவரை தனது பராமரிப்பில் இருந்த மாமனாரை கவனிக்க ரசியா என்கிற பெண்ணை வேலைக்கு வரச் சொல்கிறாள் சிமின். மதத்தின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் ரசியாவுக்கு ஆண்கள் இருக்கும் வீட்டில் வேலை செய்வது தயக்கத்தை ஏற்படுத்துகிறது. நதீர் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டிற்கு வந்து நதீர் வருவதற்குள்யேப் போய் விடலாம் என சிமின் அவளை சமாதானப்படுத்துகிறாள்.

மறுநாள் தன்னுடைய ஐந்து வயது மகளுடன் வேலைக்கு வருகிறாள் ரசியா. நதீரின் அப்பாவைப் பார்த்துக் கொள்வதோடு வீட்டையும் சுத்தப்படுத்துகிறாள். வேலை நடுவே ஒருசமயம் ரசியா தனது மகளை அழைத்து தன் வயிற்றில் காதை வைத்துக் கேட்கச் சொல்கிறாள். ‘அம்மா பாப்பா பேசுகிறதா? எனக்கு ஒன்றும் கேட்கவில்லையே’ என்று சொல்லும் தன் மகளைத் தன்னோடு அணைத்துக் கொள்கிறாள் ரசியா. 

நோயாளியான நதீரின் அப்பா தனது அறையை விட்டு வெளியே வருகிறார். அவர் உணர்வில்லாமல் தன்னுடைய உடையிலேயே சிறுநீர் கழித்திருப்பதைக் கவனிக்கும் ரசியாவின் மகள் தன் அம்மாவிடம் அதனை சொல்கிறாள். அவரை அழைத்துக் கொண்டு குளியலறைக்குப் போகும் ரசியா, அவரிடம் உடையக் கழற்றி வேறொரு உடையை மாற்றச் சொல்கிறாள். அவள் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லாத அவர் எதுவும் செய்ய இயலாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறார். ரசியாவுக்கு இது இக்கட்டான சூழலாகிவிடுகிறது. என்ன செய்வதென்று என யோசித்து  அவள் மத சம்பந்தமான சந்தேகங்கள் கேட்கும் தொலைபேசி சேவையை அழைக்கிறாள். ‘தன்னுணர்வு அற்ற வயதான ஆண் ஒருவரின் உடைய மாற்றலாமா?’ என அவள் சந்தேகம் கேட்க, அங்கிருந்து வந்த பதில் அவளைத் திருப்திபடுத்தவில்லை என்பதை ரசியாவின் மகள் புரிந்து கொள்கிறாள். யோசனையுடன் நிற்கும் ரசியாவிடம், ‘அம்மா, நான் அப்பாவிடம் ஒன்றும் சொல்ல மாட்டேன்’ என்கிறாள் மகள். ‘உண்மையிலேயே நீ ஒரு தேவதை’ என்று சொல்லிவிட்டு அவருக்கு உடைகளை மாற்ற செல்கிறாள்.

மறுநாள் நதீர் வரும்வரைக் காத்திருந்து மதத்திற்கு எதிரானதாக இருக்கும் இது போன்ற வேலைகளைத் தன்னால் இனி செய்யமுடியாது, தனக்குப் பதிலாக தன்னுடைய கணவனே இனி வருவான் எனக் கூறி விட்டு ஒரு கோரிக்கையையும் வைக்கிறாள். ‘தான் வேறு ஒரு ஆணுக்கு பணிவிடை செய்ததை என் கணவன் ஒத்துக் கொள்ள மாட்டான். அதனால் என் கணவனிடம் நான் தான் அவன் வேலைக்கு சிபாரிசு செய்தேன் என்பதையும் உங்களை நான் சந்தித்தேன் என்பதையும் சொல்ல வேண்டாம் ‘ என்கிறாள். நதீரும் அரைமனதாக அதனை ஒத்துக் கொள்கிறான்.

ஆனால் மறுநாளும் ரசியாவே வருகிறாள். வேலை இழந்த தன்னுடைய கணவனை கடன்காரர்கள் காவல்துறையினரிடம் பிடித்துத் தந்துவிட்டனர். அதனால் அவன் திரும்பி வரும்வரை பணத்திற்காக தானே வேலைக்கு வருவதாக கூறுகிறாள். அன்றைய தினம் ரசியாவின் மகளும், நதீரின் மகளும் நன்றாக பழகி விடுகின்றனர்.

மறுநாள் வேலையில் மூழ்கியிருந்த ரசியா கவனிக்காத ஒரு பொழுதில் நதீரின் அப்பா வீட்டில் காணாமல் போய்விடுகிறார். பயந்து போகிற ரசியா அவரைத் தேடுகிறாள். சாலைக்குள் ஓடுகிறாள். கடைசியில் தூரத்தில் ஒரு பேப்பர் கடையின் வாசலில் அவர் நின்றுகொண்டிருப்பதைக் கண்டுபிடித்து அழைத்து வருகிறாள்.

அடுத்த நாள் நதீரும், தெர்மாவும் வீட்டுக்கு வரும்போது அவர்களின் வீடு பூட்டப்பட்டிருகிறது. ரசியா இல்லாதது அறிந்து மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போன அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கின்றது. நதீரின் அப்பாவின் அறையில் அப்பா தரையில் சுய நினைவின்றி தாறுமாறாக விழுந்து கிடக்கிறார். தரையில் கிடக்கும் அவருடைய ஒரு கை கட்டிலோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. அப்பாவும் மகளும் பதைபதைத்துப் போகின்றனர். நதீர் அப்பாவுக்கு உயிர் இருப்பது அறிந்து பெரும்பாடுபட்டு அவரை சுயநினைவுக்குக் கொண்டுவருகிறான். ரசியாவால் தான் இப்படி நடந்திருக்கிறது என்னும் கோபம் கொள்ளும் நதீருக்கு தன் அறையில் வைத்திருந்த பணம் வேறு காணாமல் போனது தெரிய வர சினம் கூடுகிறது. பணத்தை எடுத்துக் கொண்டு ரசியா ஓடிவிட்டதாக நினைத்துக் கொள்கிறான்.

ஆனால் அவன் எதிர்பாராத விதமாக சற்றுநேரம் கழித்து கலங்கிய முகத்தோடு தனது மகளுடன் அங்கு வருகிறாள் ரசியா. அவளைப்பார்த்த கணத்தில் ஆத்திரத்தில் வெடித்தே விடுகிறான் நதீர். தான் ஒரு அவசர காரியமாக வெளியில் போனதாக சொல்லி ரசியா மன்றாடுகிறாள். தனது அப்பாவை அவள் துன்புறுத்தி விட்டதாகக் கத்துகிறான் நதீர். பதில் சொல்ல முடியாமல் கெஞ்சியபடி நிற்கிறாள் ரசியா. புதியக் கூட்டாளிகளான அவளது மகளும், தெர்மாவும் ஒன்றும் செய்யத் தோன்றாமல் திகைத்து நிற்கின்றனர். ‘என் அப்பாவைக் கட்டிப் போட்டதோடு இல்லாமல் என் பணத்தை வேறு திருடிப் போய் விட்டாய்’ என்கிறான் நதீர். இந்த வார்த்தைகள் ரசியாவை காயப்படுத்துகின்றன. ‘கடவுள் மேல் ஆணையாக நான் திருடவில்லை, குரான் மீது சத்தியம் செய்கிறேன்’ என்றெல்லாம் சொல்கிறாள். அவன் நம்பவில்லை. திரும்பத் திரும்பத் தான் திருடவில்லை என்பதை சொல்லிக் கொண்டே இருக்க, கோபத்தில் அவளைப் பிடித்துக் கதவிற்கு வெளியே தள்ளுகிறான் நதீர். படியில் விழும் அவளை பக்கத்து வீட்டுக்காரர்கள் தாங்கி பிடித்து அனுப்பி வைக்கின்றனர். அழுது கொண்டே போகிறார்கள் ரசியாவும் அவளது மகளும்.

மறுநாள் சிமின் நதீரைப் பார்க்க வேண்டுமென அழைக்கிறாள். ரசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை சிமின்  சொல்கிறாள். திகைத்து போகிறான் நதீர். ‘அவளுடைய கருகலைந்துள்ளது’ என்று அடுத்த அதிர்ச்சியான தகவலையும் சொல்கிறாள் சிமின். அவளுடைய பேச்செல்லாம் நதீரைக் குற்றம் சொல்வதாகவே இருக்கிறது.

இருவருமாக ரசியாவைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அங்கு வைத்து ரசியாவின் கணவனை சந்திக்கிறார்கள். இவர்கள் சந்தித்தப் பிறகு, ரசியாவின் கணவனுக்கு சில விசயங்கள் ஒவ்வொன்றாக தெரிய வருகிறது. வேறு ஒரு ஆடவனுக்குக் கீழ் தன் மனைவி வேலை செய்தது, ஒரு வயதான ஆணைத் தன் மனைவி பராமரித்திருப்பது, நதீர் தள்ளி விட்டுத் தான் தன்னுடைய மனைவியின் வயிற்றிற்குள்ளிருந்த தன் குழந்தையை கொல்லப்பட்டிருக்கிறது என்பது. கோபத்தில் அவன் நதீரை அடித்து சண்டைக்கு வருகிறான்.

சிமின் நதீரை வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. ஆனால் தான் அவளிடம் அவ்வளவு மோசமாக நடந்துகொள்ளவில்லை என மருத்துவமனையில் இருந்து திரும்புகிற வழியில் நதீர் சொல்லிக் கொண்டே வருகிறான். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவளாகிறாள் சிமின்.

ரசியாவின் கணவன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறான். தன்னுடைய மனைவியை அடித்ததோடு, கருவில் இருந்தக் குழந்தையையும் கொன்றிருக்கிறான் என நதீர் மேல் குற்றம் சுமத்துகிறான். கருவில் இருந்தக் குழந்தை இறந்ததால் அது கொலைகுற்றமாக கருதப்படும் என நீதிபதி சொல்கிறார். நதீர் நீதிபதியிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறான். ரசியா கர்ப்பமாக இருந்தது அவள் தோற்றத்தை வைத்து தன்னால் கணிக்க முடியவில்லை என்கிறான். ரசியா இதை மறுக்கிறாள். கொலைக் குற்றத்திற்காக குருதிப் பணம் தந்தாக வேண்டுமென சொல்கிறார் நீதிபதி. நதீர் ஜாமீன் பெற்று வெளிவருகிறான்.

ரசியாவின் கணவன் நதீரின் மகள் தெர்மா படிக்கும் பள்ளிக்கூடம் போய் அங்கிருக்கும் மாணவிகளிடம் ‘இவளுடைய அப்பா தான் என்னுடைய குழந்தையைக் கொலை செய்தவன்’ என்கிறான். இதனைக் கேள்விப்படுகிற சிமின்  ரசியாவின் கணவனால் தன் மகள் தெர்மாவுக்கு ஆபத்து வருமென பயப்படுகிறாள். எப்படியாவது குருதிப் பணத்தைத் கொடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்யச் சொல்லி நதீரிடம் கேட்கிறாள். ‘பணம் தந்தால் அந்தக் குற்றத்தைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டது போலாகிவிடும் என மறுக்கிறான் நதீர். இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றுகிறது. நதீரிடம் தெர்மா வளர்வது பாதுகாப்பில்லை எனத் தன்னுடன் அழைத்துப் போகப்போவதாக கூறுகிறாள் சிமின். இருவரையும் சேர்ந்து வாழச் சொல்லி கெஞ்சுகிறாள் தெர்மா. அவரவர் பிடியிலிருந்து நழுவாமல் அமைதி காக்கின்றனர் இருவரும். வேறு வழி இல்லாமல் அம்மாவுடன் புறப்பட்டுப் செல்றாள் தெர்மா.

நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருப்பதால் குருதிப்பணத்தைத் தர முன்வருகிறான் நதீர். இந்தக் கட்டத்தில் ரசியா சிமினைத் தேடி வருகிறாள். அவள் சொல்லுகிற சில செய்திகள் சிமினுக்கு திகைப்பையும், அதிர்ச்சியையும் தருகின்றன. ‘உங்கள் மாமனார் ஒருநாள் வீட்டை விட்டு வெளியே போய் விட்டார். அவரைக் காப்பாற்றி அழைத்து வரும் வழியில் ஒரு கார் என்னை இடித்துவிட்டது. அன்றைய இரவு எனக்கு வலி ஏற்பட்டது. மறுநாள் குழந்தை வயிற்றில் அசையவே இல்லை. இந்த நேரத்தில் தான் உங்கள் கணவர் என்னைக் கீழே தள்ளிய சம்பவம் நடந்தது’ என்கிறாள். ‘அப்போது எனது கணவரால்…’ என்று சிமின் சொல்லி முடிக்கும் முன்பு,’எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. அதனால் தான் குருதிப்பணம் வேண்டாமென சொல்ல வந்தேன். அந்தப் பணத்தை நான் பெற்றுக் கொண்டால் எனது மகளுக்கு பாவம் வந்து சேரும்’ என்கிறாள் ரசியா. ‘அப்படி என்றால் உன்னுடைய கணவனால் என்னுடைய மகளுக்கு பாதிப்பு வராது என்று உன்னால் உறுதித் தர முடியுமா?’ எனக் கேட்கிறாள் சிமின். ரசியாவால் ஒன்று சொல்ல முடியவில்லை.

அடுத்த காட்சியில் நதீர், சிமின், தெர்மா மூவரும் ரசியாவின் வீட்டில் இருக்கிறார்கள். தெர்மா ரசியாவின் மகளுடன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த வீட்டின் கூடத்தில் கடன்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். நதீர் காசோலையில் கையெழுத்து இட்டுக் கொண்டிருக்கிறான். அவற்றை வைத்து கடன் அடைக்கும் நோக்கத்தில் ரசியாவின் கணவன் காத்திருக்கிறான். எல்லாம் சரியாக நடக்கப்போகிற நம்பிக்கை அனைவர் முகத்திலும் தெரிகிறது ரசியாவைத் தவிர. அப்போது நதீர் ஒரு நிபந்தனையை வைக்கிறான். அந்த கோரிக்கையைப் பற்றி பேசும்போது தன்னுடைய மகள் தெர்மா அங்கிருக்க வேண்டுமென கூறுகிறான். தெர்மா வரவழைக்கப்படுகிறாள். கூடவே ரசியாவின் மகளும் வருகிறாள். காசொளைத் தருவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லும் நதீர், காசோலையைப் பெறுவதற்கு முன்பாக ரசியாவின் குழந்தை இறந்தது தன்னால் தான் என குரான் மீது ரசியா ஆணையிட்ட  வேண்டும் எனச் சொல்கிறான் நதீர். ரசியா அதிர்ந்து விடுகிறாள். குரான் கொண்டு வரும் சாக்கில் உள்ளே போய்விடுகிறாள் ரசியா.  நீண்ட நேர காத்திருப்புக்கு பின் ரசியாவைத் தேடி உள்ளே வருகிறான் அவளது கணவன். அழுதுகொண்டிருக்கும் ரசியா அவனது கணவனிடம் மெல்லிய குரலில் ரகசியத்தைக் கூறிவிடுகிறாள். ‘வீட்டுக் கூடத்தில் கடன்காரர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.. நமது குழ்னதையின் பெயரால் கேட்கிறேன் …சத்தியம் செய்து விடு இல்லாவிட்டால் மானம் போய் விடும்’ என்கிறான் அவளது கணவன். ‘அந்தக் குழ்னதையின் எதிர்காலத்தை நினைத்து தான் கள்ள சத்தியம் சியாத் தயங்குகிறேன் என்கிறாள் ரசியா. இருவருக்குள்ளும் விவாதம் மாறி மாறி நடக்கிறது. உச்சக்கட்டத்தில் கோப வெறியில் தன்னைத் தானே அடித்துக் கொள்கிறான் ரசியாவின் கணவன். அவனைத் தடுக்க முடியாமல் போக ரசியா அனைவர் முன்னிலையிலும்,  சிமினிடம் ‘உங்களை யார் இங்கு வரச் சொன்னது? நான் வரவேண்டாமென கெஞ்சினேனே?’ எனக் கதறுகிறாள்.

இப்போது மீண்டும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோருகிறார்கள் நதீரும், சிமினும். இருவரும் மனமொத்துப் பிரிய முடிவு செய்ததால் தெர்மா யாரிடம் இருக்க விருப்பப்படுகிறாள் என்பதை அறிய அவளைத் தனிமையில் அழைக்கிறார் நீதிபதி. நீதிபதி முன்வரும் தெர்மா ‘தான் யாரிடம் இருக்க வேண்டுமென’ முடிவு செய்து விட்டதாக சொல்கிறாள். ஆனால் முடிவை சொல்ல முடியாமல் அழுகையும் , பெருமூச்சும் அவளிடமிருந்து வெளிப்படுகிறது. அதோடு அவள் தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் அவள் முகம் காட்டுகிறது. நீதிபதி நதீரையும், சிமினையும் தர்மாவின் சம்மதத்தோடு வெளியே அனுப்பி வைக்கிறார். அறைக்கு வெளியே கண்ணாடித் தடுப்பின் இருபுறங்களிலும் தனித்தனியாய்  நதீரும், சிமினும் காத்திருக்கிறார்கள். அவர்களது வெகு நேர காத்திருப்பின் தனிமையைக் காட்டி விட்டு படம் முடிகிறது.

எளிமையாக போய்க் கொண்டிருக்கும் கதையில் எதிரபாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்த விதத்தில் இயக்குனர் நம்மை ஈர்க்கிறார். கதையின் இயல்பைப் போலவே அமைந்திருக்கிறது நடிப்பவர்களின் பங்களிப்பும். அப்பா, அம்மாவுக்குள் நடக்கும் ஈகோ மோதல் தாங்க முடியாமல் வெடித்து சிதறுகிற தெர்மா தான் கதையின் போக்கைத் தீர்மானிப்பவளாக இருக்கிறாள். அவளது அப்பாவுக்கு தன்னுடைய பெண் தன்னைக் குற்றமற்றவன் என நம்பவேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. அதனாலேயே சிமின் அவனை குற்றம் சொல்லும்போதெல்லாம் ‘நீ என்னை நம்புகிறாயா?’ என தெர்மாவிடம் ஆறுதல் தேடுகிறான் நதீர்.

நதீரின் மேல் கோபமும், சகிப்பின்மையும் இருந்தாலும் கூட தன்னுடைய மகளின் நலனுக்காக ஒன்று சேர்ந்து வாழும் முடிவினை ஒருகட்டத்தில் எடுக்கிறாள் சிமின். ஆனால் அவளது பிடிவாதமும், நதீரின் புரிந்து கொள்ளாத் தன்மையும் அவளைத் திரும்பவும் குடும்பத்தில் இருந்து பிரித்து விடுகிறது. தெர்மாவிடம் சிமின் பழகும்போதெல்லாம் அவர்களிடையே தோழமை உணர்வுத் தெரிகிறது. அதனாலேயே அவளால் தெர்மாவின் சந்தோசத்திற்காக அவளை அவளது அப்பாவுடன் விட்டுப் போக முடிகிறது.

கட்டுங்கடங்காத முன்கோபமும், எதையும் புரிந்து கொள்ளாத பொறுப்பற்ற  ஒரு கணவனிடம் வாழும் ஒரு பெண்ணாக இருக்கிறாள் ரசியா. இருவேறு சூழலில் அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கும் பெண் இரு பெண்குழந்தைகளையும் படத்தின் மையப்புள்ளியாக வைத்து கதை நகர்த்தியிருக்கிறார் அஸ்கர் பர்ஹதி.

இதனாலேயே ‘பெண்கள் பற்றி பேசிய சிறந்த படம்’ என பெண்கள் பட விமர்சனக் குழுமம் இதற்கு விருது வழங்கியது. இது தவிர ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை இந்தத் திரைப்படம் பெற்றிருக்கிறது. அதில் முக்கியமானவை , 2011ம் ஆண்டு வென்ற ஆஸ்கர் விருதும், பெர்லின திரைப்பட விழாவில் ‘தங்கக் கரடி’ விருதைப் பெற்ற முதல்  ஈரானியத் திரைப்படம் என்கிற கௌரவமும். ஒட்டுமொத்த திரைப்பட விமர்சகர்களும் படம் பார்த்துவிட்டு சொன்ன ஒரே கருத்து, ‘இது தவிர்க்கவே முடியாத திரைப்படம்’ என்பது.

Previous article
RELATED ARTICLES
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

Most Popular