நினைவோ ஒரு பறவை – ஏ. சி திருலோகசந்தர்

0
204

ஒரு இயக்குநரைப் பற்றிய குறிப்பு எழுதுகிறபோது அவரது உயரத்தின் அளவையும்
விக்கிபீடியா எழுதியது ஏ. சி திருலோகசந்தருக்காகத் தான் இருக்கும். மனிதர், ஆறடி,
மூன்று அங்குலம்.
பழைய திரைப்படங்கள் எனும்போது அது குறித்து நமக்குள் இருக்கிற பிம்பத்தை
மாற்றியமைக்கும் இயக்குநர்களில் ஒருவர் திருலோகசந்தர்.இவருடைய படங்கள் நம்மை
ஏமாற்றாதவை. ஒரு படத்தின் கதை போல் அவர் மற்றொன்றைக் கையாண்டதில்லை.
எல்லாப் படங்களிலும் நாம் எதிர்பார்க்காத பலவற்றை வைத்திருப்பார்.
படம் பார்க்க வருபவர்கள் ஒவ்வொருவரும் திருப்தியுடன் திரும்ப வேண்டும் என்று
நினைத்து ஒருவர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைந்த படங்கள்
இவருடையவை. இவர் படம் இயக்க வந்த காலகட்டத்தில் தமிழ் சினிமா பல்வேறு
தரப்பட்ட இயக்குநர்களால் இயங்கிக் கொண்டிருந்தது. குடும்பத்தை மையமிட்ட
கதைகள், சமூகப் புரட்சி செய்பவை, ராஜா ராணி கதைகள் என ஒவ்வொரு ரகம்.
இவற்றில் திருலோகச்சந்தரின் பாணி முற்றிலும் வேறானது. அவர் எது மாதிரியான
கதையை சொல்லப்போகிறார் என்பதை யாரும் எதிர்பார்த்து விட முடியாது.
இதற்கு காரணம் இவரது வாசிப்புப் பழக்கமும், தேடலும் தான். அந்தக் காலகட்டத்தில்
படித்தவர்கள் சினிமாத்துறைக்கு வருவது என்பது அபூர்வமான நிகழ்வாக இருந்தது.
திருலோகசந்தர் எம்ஏ படித்தவர். இதுவே அவருக்கு பெரும் அடையாளத்தைத்
தந்திருந்தது. அதோடு அவருக்கிருந்த ஆங்கில அறிவும், உலக இலக்கியங்கள் குறித்த
பார்வையும் வெகு விரைவில் அவரை பிரபலப்படுத்திவிட்டது. ஆங்கிலத்திலும், உலக
மொழிகளிலும் வெளிவரும் இலக்கியங்கள் மேல் அவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது.
வெவ்வேறு விதமான உளவியல் கொண்ட மனிதர்களை கதை மாந்தர்களாக
திருலோகசந்தர் இலக்கியங்களில் கண்டார். இதன் தாக்கம் இவருடைய படங்களில்
வெகுவாக வெளிப்பட்டன.
திருலோகசந்தர் இயக்கியதில் ‘இரு மலர்கள்’ திரைப்படம் தமிழில் வெளிவந்த முக்கியத்
திரைப்படம். இது மாதிரியான கதையைக் கையாள முதிர்ச்சி வேண்டும். சற்றுப்
பிசகினாலும் சறுக்கி விடக்கூடிய அபாயம் உள்ள கதை. தீவிரமாகக் காதலித்த இருவர்
பிரிகிறார்கள். நாயகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிறது. மிக
மகிழ்ச்சியான வாழ்க்கை. காதலி ஒருநாள் நாயகன் கண்ணில் பட்டுவிடுகிறாள். என்ன
நடக்கிறது என்பது கதை. இந்தக் கதையை எப்படி வேண்டுமானாலும்
சொல்லியிருக்கலாம். முதிர்ச்சி என்பது, ஒரு எட்டு வயது பெண் குழந்தை தன்னுடைய
அப்பா தடம் மாறுவதைக் கண்டுபிடிக்கிறாள் என்பதைக் கையாண்டதில் இருக்கிறது.

இன்று இந்தப் படத்தை எடுத்தாலும் நமக்கு பல சந்தேகங்கள் வரும். குழப்பங்கள்
ஏற்படும். இவை எதுவும் இந்தப் படத்தை தீண்டவில்லை என்பது இதன்
திரைக்கதையாசிரியரும், இயக்குநருமான திரிலோகசந்தரின் திறமை.
திருலோகசந்தரின் படங்களின் கதையை கொஞ்சம் திருப்பினால் அது மென்சோக
காவியமாகிவிடும். ஆனால் அந்தக் கதைகளைத் தான் மிக ஜனரஞ்சகமாகத் தந்திருப்பார்.
அடுத்து என்ன காட்சி என்று யூகிக்க முடியாத திரைக்கதையைத் தந்திருக்கிறார்.
‘தெய்வ மகன்’ படமெல்லாம் எவ்வளவு பெரிய சாதனை!! ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்ற
முதல் தமிழ்த் திரைப்படம். உணர்வுகளின் குவியல் இந்தப் படம். வங்காளத்தில் புகபெற்ற
எழுத்தாளரான நிகர் ரஞ்சன் குப்தா எழுதிய ‘உல்கா’ நாவலின் தழுவலே தெய்வ மகன்.
இந்தியிலும் வங்காளத்திலும் இந்த நாவல் படமாக்கப்பபட்டன. எதுவுமே தெய்வ மகன்
படத்துக்கு இணையான வெற்றியைப் பெறவில்லை. மூன்று முறை இந்த நாவலைப்
பாடமாக்கி வெற்றிப் பெறவில்லை என்றபோதிலும் திருலோகசந்தர் இந்தப் படத்தை
எடுத்ததன் காரணம் அவர் தன்னுடைய திரைக்கதையையும், சிவாஜி கணேசன் எனும்
கலைஞனையும் நம்பியது தான்.
நாவலின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை அபப்டியே காட்சிப்படுத்தாமல்
எந்த இடங்களில் எல்லாம் உணர்ச்சிகளைக் கொண்டு வர சாத்தியமுள்ளது என்பதை
தெரிந்து திரைக்கதை எழுதியதாலேயே தெய்வ மகன் எப்போதும் மறுக்க முடியாத ஒரு
படமாக இடம்பெற்றிருக்கிறது. நாவலின்படி விகாரமாக பிறந்த குழந்தையை
பணக்காரன் ஒருவன் இஸ்லாமியத் தம்பதி ஒருவரிடம் தந்துவிடுவார். அவர்கள் தங்களின்
குழந்தை போல வளர்ப்பார்கள். குழந்தை இளைஞன் ஆனதும் அவனிடம் பிறப்பின்
இரகசியத்தை சொல்லிவிடுவார்கள். அந்த இளைஞன் தன்னுடைய அம்மா அப்பாவைத்
தேடித் போவான் என்பதாக இருக்கும் கதை. இந்தியிலும், வங்காளத்திலும்
நாவலின்படியே படமாக்கினார்கள். இஸ்லாமியப் பின்னணியில் வளரும் இந்துக்
குழந்தை என்பது கூடுதல் உணர்ச்சியினை நாவலுக்குத் தந்திருந்தது. திருலோகசந்தர்
இதனை மாற்றுகிறார். இந்து முஸ்லிம் என்பது தமிழ் படங்களுக்கு அத்தனை வலு
சேர்க்காது என்பதால் அந்தப் பின்னணிக்குள் திருலோகசந்தர் செல்லவில்லை. பணக்கார
தகப்பனால் கைவிடப்பட்ட குழந்தை ஒரு அநாதை விடுதியில் வளருகிறது. இளைஞன்
ஆனதும் தன்னை விடுதியில் சேர்த்த மருத்துவர் ஒருவருக்குத் தன் பிறப்பின் இரகசியம்
தெரியும் என்பது தெரிந்து அவரைத் தேடி வருகிறான் இளைஞன். பின்பு தன் தாய்
தந்தையை அறிந்து கொள்கிறான். தன் முன்னே தன் குடும்பத்தைப் பார்த்து ஏக்கமும்,
ஆசையும், நிராசையும், பரிதவிப்பும் கொள்கிறான். இப்படியான உணர்வினைக்
கதைக்குள் கொண்டு வந்ததாலேயே படம் தன்னை மேம்படுத்திக் கொண்டது. நாவலை
எழுதிய நிகர் ரஞ்சன் குப்தா சரும நோய் மருத்துவர். தன்னுடைய நாவல்களிலும்,
கதைகளிலும் அவர் சரும நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் மாற்றத்தை
சொல்லிக் கொண்டே இருந்தார். மிகச் சரியாக எழுத்தாளரின் மற்ற நாவல்களையும்
உள்வாங்கி சிவாஜி அவர்களின் பாத்திரப்படைப்பை வடிவமைத்திருப்பார்
திருலோகசந்தர்.

சிவாஜி கணேசன் தன்னுடைய மூத்த மகன் உயிரோடு இருக்கிறான் என்பது தெரிந்து
மேஜர் சுந்தர்ராஜனிடம் பேச வருகிற காட்சி இன்றளவும் தமிழ் சினிமாவின் மகத்தான
காட்சிகளுள் ஒன்று. கோபத்தில் வரும் ஒருவர் தன் நிலை தாழ்ந்து குற்ற உணர்வுக்கு
உட்பட்டு சரணாகதி அடைந்து உற்சாகம் கொண்டு, நெகிழ்ந்து பின் உணர்வுவயப்பட்டு
நிற்கிற அந்தக் காட்சி, ஒரு தேர்ந்த எழுத்தாளர், இயக்குநர், நடிகர்களின் அருமையான
சேர்க்கைக்கு எடுத்துக்காட்டு. இந்தக் காட்சியின் வடிவமைப்பைத் தான்
திருலோகசந்தரின் அத்தனைத் திரைக்கதைகளும் கொண்டிருந்தன. அடுத்த கணம் என்ன
நிகழும் என்று யூகிக்க முடியாத திரைக்கதைகள்.
உருவத்தைக் கொண்டு ஒருவரை மதிப்பீடு செய்வதில் உள்ள உளவியலை இவர் ‘நானும்
ஒரு பெண்’ படத்திலும் பேசியிருக்கிறார். இதுவும் கூட ‘போது’ என்கிற ஒரு வங்காள
மேடை நாடகத்தின் தழுவலே. கருப்பு நிறம் கொண்ட, அதிகம் படித்திராத ஒரு பெண்
எதிர்கொள்ளும் சிக்கலே படம். இன்றளவும் இப்படியானாதொரு கதை என்பது இந்திய
சினிமாவுக்கே அரிது. கதாநாயகி அழகாக இருக்க வேண்டும் என்றே எழுதப்படாத
இலக்கணமாக உள்ள இடத்தில் நாயகியின் பாத்திரத்தை இதற்கு நேர்மாறானதாக
வடிவமைத்து அதை மக்களிடயே சரியாய்க் கொண்டு சேர்ந்திருந்தார். படம் குறிப்பாய்
பெண்களிடையே அமோகமாக வரவேற்பைப் பெற்றிருந்தது.
திருலோகசந்தரின் திரைக்கதை இயக்கத்தின் வெற்றிக்கு மற்றொரு உதாரணம்
எஸ்.எஸ்.இராஜேந்திரன் நடித்திருந்த ‘காக்கும் கரங்கள்’. இந்தப் படம் பிரபலமான
நாவலாசிரியர் சாமர்சட் மாமின் the painted veil படத்தின் கதையை ஒத்தது. நாவலின்
நாயகி ஒருவித மனவெழுச்சியில் மருத்துவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வாள்.
திருமணத்துக்கு பின்பு அவளுக்கு கணவரின் நண்பனுடன் காதல் ஏற்படும். இது தெரிந்த
கணவன் அவளை பிரிட்டனில் இருந்து சீனாவுக்கு அழைத்துப் போவான். அங்கு
ஊரெல்லாம் காலரா பரவியிருக்கும். சுற்றிலும் மரண ஓலம். நாயகிக்கு கடும் மன
அழுத்தம் ஏற்படும். கணவன் அங்கேயே இறந்து போவான். மீண்டும் பிரிட்டனுக்கு தன்
காதலனைத் தேடி வருவாள் நாயகி. இது தான் the painted veil நாவலின் கதை.
இந்த நாவலின் கதை தமிழ் சினிமாவுக்கு களத்துக்கு ஏற்றது அல்ல. இங்கு இந்தக்
கதையை யாரும் யோசித்துப் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள். இந்தப் படத்தை
ஆங்கிலத்தில் மூன்று முறை தழுவி எடுத்து, நான்காவது முறை தான் வெற்றி கண்டது,
அதிலும் பத்து வருடங்களுக்கு முன்பு. இப்படி இருக்க, இதைத் தமிழில் எடுக்கலாம் என்று
திருலோகசந்தருக்குத் தோன்றிய காரணம், நாவலின் உணர்வுப்பூர்வமான இடங்கள்.
அவர் நாயகியின் கதாபாத்திர வடிவமைப்பத் தவிர்த்து, நாயகனுக்கும், நாயகிக்கும்
மனபிணக்கு இருந்ததையும் நாயகன் தன்னலம் பார்க்காத மருத்துவன் என்கிற சாரத்தை
மட்டும் எடுத்துக்கொண்டார். நாவலில் அந்தப் பகுதியில் விவரிக்கபப்ட்ட அத்தனை
உணர்வுகளையும் தன் திரைக்கதையில் கொண்டு வந்துவிட்டார். திருலோகசந்தரின்
பலமே இது தான். எந்தக்கதையின் தழுவலாக இருந்தாலும் தமிழுக்காக
சுவாரஸ்யப்படுத்தி விடுவார்.

அடுத்து ‘அன்பே வா’. இந்தக் கதையை எப்படி எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டார் என்பது
வியப்பு. கதை கேட்டவுடனேயே சம்மதித்துவிட்டார் என்று திருலோகசந்தர் தனது
நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு ஏழை பங்காளனாக, தொழிலாளியாக மட்டுமே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த
எம்ஜிஆருக்கு முற்றிலும் புதுமையான பாத்திரம். “ஒரு மனுஷன் ஏழையாக் கூட
இருக்கலாம்..ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது’ என்று சோர்ந்து போய்
அழுத்தத்தில் உள்ள கதாபாத்திரம். மற்றொரு ஆச்சரியமாக ஒரு பெண்ணைக் காதலிக்க
வைப்பதையே தனது குறிக்கோளாக கொண்ட ஒருவராக வேறு நடித்திருந்தார்.
இவையெல்லாம் எம்ஜிஆர் என்கிற இமேஜுக்கு மாற்றானது. படமோ மாபெரும் வெற்றி.
காரணம் படம் எடுக்கப்பட்ட விதம் தான். அதோடு எம்ஜிஆரை ரசிகர்கள் விரும்புவது
போல ஒரு ராஜகுமாரனாகக் காட்டிய படமும் கூட. இதனை ரீமேக் செய்ய வேண்டிய
அவசியமொன்றுமில்லை. துண்டு துண்டாய் பல படங்களில் செய்துவிட்டார்கள்
என்றாலும் முழு படத்தையும் எப்போது வேண்டுமானாலும் ரசிக்கலாம். அசலான
கமர்ஷியல் பேக்கேஜ்.
1968ஆம் ஆண்டு கீழ்வெண்மணி கிராமத்தில் தலித் சமூகத்தினரை தீயிட்டு கொளுத்திய
துர்சம்பவம் திருலோகசந்தரைக் கடுமையாக பாதித்திருந்தது. அவரைப் பொறுத்தவரை
பிரிட்டிஷ் நம்மை ஆண்டபோது தேச விடுதலை என்பதற்காக இந்தியா போராடியது.
அவர்கள் நாட்டை விட்டு சென்றதும், சொந்த மக்களை சொந்த நாட்டினரே கொல்லத்
தொடங்கியிருக்கிறார்கள். சாதி, மதம், இனம் எப்படி ஒரு நாட்டுக்குள் பிரிவினை
ஏற்படுத்துகிறது என்பதை அவர் யோசித்ததன் விளைவே பாரத விலாஸ் திரைப்படம். ஒரு
பெரிய வீட்டுக்குள் வெவ்வேறு மாநிலத்தவர்கள் வாழ்கிறபோது ஏற்படும் சிக்கல்களும்,
ஒற்றுமையே பலம் என்பதும் திருலோகசந்தர் எடுக்க நினைத்தார். இந்தப் படத்தை
தயாரிப்பதற்கு அவருக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம், இது
போன்ற கதையினை எடுக்க வேண்டாம் என்று அவரை பின்னுக்கு இழுத்தவர்கள்
மறுபுறம். இத்தனைக்கும் எந்த ஒரு குறிப்பிட்ட பிரச்சனையையும் இந்தப் படம்
பேசவில்லை. நகைச்சுவைத்தன்மையும், பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட படம்
அது. இந்தப் படத்தின் மூலம் ஒரு இயக்குநராகவும், திரை எழுத்தாளராகவும்
திருலோகசந்தரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. அது, எந்தக் கதைக்
கருவையும் எடுத்துக் கொண்டு சுவாரஸ்யமாகக் கதை சொல்லிவிட முடியும் என்பது
தான்.
இன்றும் தமிழின் திரில்லர் வகைப் படங்களின் முன்னணியில் இருக்கும் ‘அதே கண்கள்’.
சஸ்பென்ஸ் வகைப் படங்களின் முன்மாதிரி இந்தப் படம். அதே கண்களின் களம் வேறு
‘பத்ரகாளி’யின் களம் வேறு. ஆனால் இரண்டும் குரிப்பிடத்தக்க இடங்களைப்
பெற்றுள்ளன,
பெரும்பாலும் சிவாஜி கணேசனே இவரது இயக்கத்தில் நடித்திருக்கிறார். நடிகர்
தேர்விலும் கவனமாக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவை ‘எங்க மாமா’ படத்தைத் தவிர

வேறு எதிலும் அப்படிக் கண்டதில்லை. நடு ஹாலில் இலையை விரித்து சோற்றை அள்ளி
உண்பதும், கட்லெட்டில் கெட்சப்பை பிசைந்து உருட்டி சாப்பிடுவதாகட்டும்…மனுஷி
அசத்தியிருப்பார்.
அதன் பின், முக்கியமாக லொகேஷனை இவர் தேர்ந்தெடுக்கிற விதம்.
பாரத விலாஸ் வீடு, அன்பே வா கெஸ்ட் ஹவுஸ், டாக்டர் சிவாவின் மலைப் பாங்கான
இடங்கள், அதே கண்கள் அரண்மனை, பைலட் பிரேம்நாத்தின் இலங்கைக் காட்சிகள்
என கதைக் களத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் ரசனையோடு இருந்திருக்கிறார்.
அந்த ரசனை எல்லாவற்றிலும் வெளிப்பட்டிருக்கிறது. அதனால் தான இன்றும் இவரது
படங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments