தொலைத்த சொல்

0

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் ஒருநாள் மாலை நேரத்தில் உரை நிகழ்த்த அழைத்திருந்தார்கள், முதன்முதலாக திண்டுக்கல் சென்றேன். எப்போது சென்னையை விட்டு அகன்றாலும் எனக்கு இருக்கிற ஒரு விருப்பம், லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு போகக்கூடாது என்பது தான். செய்ய வேண்டிய வேலைகளை சென்னையிலே விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று போடுகிற திட்டமெல்லாம் நிறைவேறியதே இல்லை. திண்டுக்கல்லுக்கும் மடிக்கணினியோடு சென்றேன்.

அரசினர் விருந்தினர் மாளிகையில் தான் தங்குவதற்கான ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று பகல் முழுவதும் வேலை பார்க்க வேண்டும் என்பதான் எனது திட்டம். ஒன்பது மணிக்கு அறையின் காலிங்பெல் அடித்தது. ஒரு அரசு அதிகாரி வந்திருந்தார். “இன்னைக்கு உங்க கூடவே இருக்கணும்னு சொலியிருக்காங்க..” என்றார். “நான் எங்கேயும் போக மாட்டேன் மேடம்..பிராமிஸ்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவர் புன்னகையுடன் “தாடிக்கொம்பு கோயிலுக்குப் போகலாம் வாங்க” என்றார்.  எனக்குள் ஒரு குரல் வேலைப்பளு எங்கேயும் போகாத என்றது.

“அந்தக் கோயில் சிற்பங்களுக்கு ரொம்ப பிரசித்தியானது” என்றார். ‘வேலை கெடக்குது.. “போகலாம் மேடம்” என்று கிளம்பிவிட்டேன். அதற்கு முன்பு வரை தாடிக்கொம்பு என்கிற பெயரைக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. செல்லும் வழியில் அந்தக் கோயிலைப் பற்றி விவரித்தபடி வந்தார் அதிகாரி மேடம்.

பொதுவாக அந்தக் கோயிலில் எப்போதும் கூட்டம் இருக்கும் என்றார்கள். நாங்கள் போன அன்று அத்தனைக் கூட்டம் இல்லை. ஒவ்வொரு இடமாக அழைத்து வந்து ஒவ்வொரு சன்னதி குறித்தும் சொல்லிக் கொண்டே வந்தார்கள் அங்கிருக்கும் பணியாளர்கள். தசாவதார சன்னதி என்று தனியாக இருக்கிறது. அங்கு நான்காவது அவதாரமாக நரசிம்மரின் சிற்பம் இருக்க வேண்டிய இடத்தில் ஹயக்ரீவர் இருந்தார். அதை அந்தக் கோயிலின் தனித்துவமாக சொன்னார்கள்.

ஆனால், ஆச்சரியமாக அந்தக் கோயிலில் தசாவதார வரிசையில் தான் இல்லாத நரசிம்மர் , கோயிலில் பல இடங்களில் சிறுதும் பெரிதுமாக சிற்பங்களாக நிறைந்திருக்கிறார். இதற்கெல்லாம் பின்னணி காரணமாக ஏதோ இருந்திருக்க வேண்டும், கேட்டுப் பார்த்தேன். அது அந்தக் கோயிலின் அமைப்பு என்றார்கள். அதே போல வைணவக் கோயிலில் பைரவருக்கு தனிச்சன்னதி இருந்தது. சில கோயில்கள் சில இனக்குழுக்களின் முக்கிய தளமாக இருக்கும். இந்த பைரவர் அப்படித் தான் என்று புரிந்தது. காசு பணம் அதிகப் புழக்கத்தில் கொண்ட தொழிலைச் செய்பவர்கள் இந்த பைரவரை கொண்டாடுகிறார்கள். அவர் தான் தங்கள் உடமைகளுக்கு பாதுகாப்புத் தருகிறார் என்றார்கள்.  இந்தக் கோயிலை இன்னும் நின்று நிதானித்து அணுகினால் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று நினைத்துக் கொண்டேன்.

சிற்பக்கூடம் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நான் அங்கிருந்தேன். அற்புதங்கள் அவை.

ரதி மன்மதன், வேணுகோபாலன், உலகளந்த பெருமாள் இராமனைத் தூக்கிக்கொண்டு பரசவசப்படும் அனுமார் என ஒவ்வொரு தூணுக்கும் ஒரு சிற்பம். ஒன்றைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒருவரால் கண்களைத் திருப்பவே முடியாது. நான் நின்று கொண்டிருப்பது திண்டுக்கல்லா கிருஷ்ணாபுரமா என்று ஒரு நொடி குழப்பம் வந்தது. திருநெவேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் இருக்கும் கிருஷ்ணாபுரம், நெல்லையபப்ர் கோயில்  சிற்பங்களும், தாடிக்கொம்பும் ஒரே மாதிரியான பாணியைக் கொண்ட சிற்பங்கள். நாயக்கர் காலத்தவை.

இரண்ய வதத்தினை இரண்டு தூண்களில் எதிரெதிரே செதுக்கியிருக்கிறார்கள். எத்தனை நுட்பங்கள். நாம் வாய்விட்டு அலறிப் புடைத்துக் கத்தும்போது நமது நாக்கு எப்படி இருக்கும் என்று யோசித்திருப்போமா? அந்த சிற்பத்தில் நரசிம்மரின் நாவினைப் போலத் தான இருக்கும்..வாயினை அகலத்திதிறந்து இரண்யனை வதம் செய்யும் சிற்பத்தில் நரசிம்மரின் பற்களை எண்ணினால், சிங்கத்துக்கு எத்தனை இருக்குமோ அப்படியே செதுக்கப்பட்டிருக்கலாம்..பற்களுக்கு சிற்பிகள் கொடுத்திருக்கும் முக்கியத்துவம்…அதோடு இரண்யனை மடியில் போட்டு குடலை உருவும் சிற்பத்தில் இரண்யனின் முகபாவமும், உடலமைப்பும் … இரண்யனை ஒரு கையால் பிடித்து மறுகையால் பிடித்திழுக்கும்போது இரண்யன் உடலுள் தெரிகிற நரம்புகள் என…போய் வந்து போய் வந்து பார்த்துக் கொண்டிருந்தேன்..

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடும் சிற்பம் ஒன்றுண்டு. பார்த்துவிட்டு  கண்கொள்ளாமல் திரும்ப வந்து நின்று பார்த்து, மீண்டும் வந்து பார்த்து என வியந்த ஒன்று அது. அத்தனை பெரிய பெருமாளின் முன் ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து’ என்று ஊருக்காகத் தான் வேண்டிக்கொள்ள முடியும்..ஒருநாளும் நமக்கான சின்னப் பிரார்த்தனைகளை முன்வைக்கவே இயலாது.

அந்த சிற்பக்கூடாரத்தில் ஒரு சிற்பத்துக்கு அத்தனை மரியாதை.. தூணில் இருந்து முன்பக்கமாய், ஆக்ரோஷக் கரங்களுடன் முறுக்கு மீசையோடு நிற்கும் கார்த்த விரியாச்சுனனுக்கு..

கார்த்த விரியாச்சுனன் தற்போது மத்தியபிரதேசத்தில் இருக்கிற ஒரு பகுதியினை ஒருகாலகட்டத்தில் ஆண்ட ஒருவர்.. 1800 ஆண்டுகள் ஆண்டு, பரசுராமரால் தோற்கடிக்கப்பட்டவர் என்கிறது புராணம்.. அசகாய சூரன். அவருக்கென்று உஜ்ஜையினியில் ஒரு கோயில் இருக்கிறது என்றார்கள். ஏதேனும் பொருகள் தொலைந்தால் இவரிடம் வேண்டிக்கொள்வார்களாம். அது கிடைத்ததும் வேண்டியபடி வந்து  மாலை சார்த்திவிட்டு செல்வார்கள் என்றார் அங்கு பணிபுரியும் ஊழியர். ‘சக்தி வாயந்ததுங்க..ஒருமுறை கோர்ட்டுக்கு எடுத்துப் போக வேண்டிய ஆபிஸ் ஃபைல் தொலைஞ்சு போய்  இந்த சாமிக்கிட்ட தான்  வேண்டிகிட்டேன்..அரைமணி நேரத்துல கிடைச்சது  என்றார் ஒரு ஊழியர். “நீங்களும் ஏதாவது தொலைஞ்சிருந்தா வேண்டிக்கங்க..கிடைச்சிடும்” என்றார்.

“நான் எதைத் தொலைத்தேன்?” என்று யோசித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பிராக்டிகல் நோட்டை வைத்த இடம் தெரியாமல் வீடு முழுவதும் அழுதுகொண்டே தேடிய நினைவுக்கு வந்தது. வாழ்க்கையே அந்த பிராக்டிகல் நோட்டில் தான் என்றும் அதை எடுத்துப் போகாமல் இருந்தால் பேபி மிஸ் திட்டுகிற ‘எருமை மாடே’ என்கிற வார்த்தையை எபபடித் தாங்குவேன் என்று அழுதழுது முகம் வீங்கிப்போய் அப்படியே பூமி என்னை உள்வாங்கிக் கொள்ளாதா..ஏதேனும் தலைவர் மரணமடைந்து பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை வராதா என்று நினைத்த நாள் துல்லியமாய் அங்கு நினைவுக்கு வந்தது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு சம்பாதிக்கத் தொடங்கியபோது மாதமொரு தொகையை முதன்முதலாக நகைச்சீட்டுக்காகக் கட்டி ஒரு தங்க நாணயம் வாங்கி அதை வைத்த இடம் தெரியாமல் தேடித் தொலைத்தது…

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தது..

இப்படி வரிசையாக நினைவுக்கு வந்தது.

இப்படித் தொலைத்து நின்றபோதெல்லாம் அந்தக் கணங்களைக் கடக்கவே முடியாது என்று தோன்றியிருக்கிறது. குற்ற உணர்ச்சியா? கையாலாகாத   இயலாமையா..நம் மேல் நமக்கு வருகிற பெருங்கோபமா? நம்மை நினைத்து நாமே அவமானப்படும் பரிதவிப்பா..என எல்லாம் கலந்த மனநிலை இழப்பின் போது ஏற்படுகின்றன. தொலைந்தால் தான் இருப்பினுடைய அவசியமும், அர்த்தமும் தெரிய வருகிறது. தொலைத்த மனிதர்கள், தொலைத்த ஊர், தொலைத்த பொழுதுகள், தொலைத்த வார்த்தைகள், தொலைத்த பொறுமை..தொலைத்த அன்பு..இதில் எதை உன்னிடம் கேட்பது என்று கார்த்தவிரியாசுனனைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..

மன்றாடல்களின் தேவனாய் நின்றிருந்தார். தொலைந்தது தொலைந்ததாக இருக்கட்டும்..கால் கட்டை விரலை அழுத்திக் கொண்டு வீராவேசமாக தொலைந்ததைத் தேடி செல்லத் தயாராக நிற்கும் அவர் முன்பு அவரை மட்டுமே பார்த்துப் போகும் ஒருத்தியாய் நின்று விட்டு வந்திருக்கிறேன்…

கோயிலுக்குள் சென்றதில் இருந்து வெளிய வரும்வரை கூடவே வந்த ஒருவர் அங்கேயே தங்கியிருப்பாவர் என்றார்கள். அவருக்கு வாய் பேச முடியவில்லை. சைகையில் ஒவ்வொன்றையும் விளக்கினார். புரிந்தது என்று தலையாட்டும் வரை அவர் எப்படியேனும் சொல்லி புரிய வைத்துவிட வேண்டும் என்று சைகை மொழி பேசிக்கொண்டே இருந்தார். கிளம்புகையில் திரும்ப வரவேண்டும் என்றார்..

“எதற்கு?” என்றேன்.

நான் எதிர்பார்க்காமல் கிபுரத்தின் முன் பட்டென்று தரையில் விழுந்து எழுந்து நின்றார். அதற்கு எத்தனை அர்த்தங்கள்….நான் முட்டாள்தனமாக என்ன செய்வதென்று தெரியாமல் பணம் கொடுத்தேன். அவர் வேண்டாம் என்று கைகாட்டிவிட்டு  மிக வேகமாகச் சென்றுவிட்டார்.

சொல் தொலைத்து நின்றேன்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments