கடலோடி

0
68

நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம் ‘கடலோடி’. அச்சில் இல்லை என்றார்கள். கடந்த வாரம் விஷ்ணுபுரம் நிகழ்வுக்கு சென்றிருந்தபோது என்னுடைய அண்ணன் ஜா.ராஜகோபாலன் கையில் இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் “பார்த்துட்டு தர்றேன்’ என்று வாங்கினேன். தரும்போதே தயக்கத்துடன் தான் தந்தார். “பார்த்துட்டு தந்துரனும்..” சரி என்று சொன்னேன். புத்தகம் இப்போது வரை என்னிடம் தான் இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கிறார்கள். அரிய புத்தகங்களை அச்சுக்குக் கொண்டு வருவதை பணியாகக் கொண்டிருக்கிறார்கள்.

‘கடலோடி’ எழுதிய நரசய்யாவின் ‘மதராசப்பட்டணம்’ என்கிற புத்தகத்தை சில வருடங்களுக்கு முன்பு படித்தேன். இவருடைய மற்றொரு புத்தகம் ‘ஆலவாய்’. யார் பதிப்பித்திருக்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் சொல்லவும். அதைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.

நரசய்யா 1950களில் கப்பற்படையில் பொறியாளராக சேர்கிறார். அதற்கான நேர்காணல் நடக்கிறபோது “கப்பலைப் பற்றி என்ன தெரியும்?” என்று அவரிடம் ஆங்கில அதிகாரிகள் கேட்கிறார்கள். “கப்பலைப் படத்தில் பார்த்திருக்கிறேன்” என்கிறார். திரையில் பார்த்தது தான் இவருக்கும் கப்பலுக்குமான முதல் அறிமுகம். போர்க்கப்பல் என்பதால் அதற்கான பயிற்சி கூடத்தில் சேர்வதில் இருந்து நமக்கான வாசிப்புத் தொடங்குகிறது. அந்தப் பயிற்சிக் கூடத்தில் கடைபிடிக்கப்படுகிற ஒழுக்கம், ஊரைத் தேடுவது, எனத் தொடங்குகிறார். முதன்முதலாக பெரிய கப்பலைப் பார்க்கும்போது கொண்ட பிரமிப்பு, கடல் கொந்தளிப்பில் ஏற்படுகிற மன, உடல் கொந்தளிப்புகள் என  ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே போகிறார்.

என்னை மிகவும் ஈர்த்தது பயிற்சிக்காக வைக்கப்படுகிற சோதனைகளை அவர் விவரித்தப் பகுதி. இரண்டு கப்பல்கள் இடையே கயிறுகளைக் கட்டி, ஒரு கப்பலில் இருந்து மற்றொன்ருக்கு பொருட்களை எடுத்து வருவது. கீழே ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்க்கவே கூடாது என்பது தான் அந்தப் பயிற்சியில் முதலில் கற்றுத் தருவது. தேவைப்படும் நேரத்தில் அடுத்தக் கப்பலில் இருந்து எண்ணெயைக் கூட இப்படி கயிறில் தொங்கியபடி எடுத்து வருவார்களாம். இரவில் கப்பல்களில் இருந்து கயிற்று ஏணியை வெளியே தொங்கவிட, மற்றொரு கப்பலில் இருப்பவர்கள் அதைத் திருடிக் கொண்டு வரவேண்டும். இதில் எந்தக் கப்பலில் உள்ளவர்கள் வெற்றிபெறுகிறார்கள் என்பது பந்தயம். இவையெல்லாம் நடுக்கடலில் நடப்பவை. மாலுமிகள் விழிப்பாக இருக்கிறார்களா என்பதற்கான பயிற்சி இது. இப்படி ஒவ்வொன்ருமே ஆச்சரியம் தரக்கூடியவை.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இவர் இந்தத்துறையில் சேர்ந்ததால், நமது நாடு எப்படி இதில் அடுத்தடுத்த இடத்துக்குத் தன்னை மேம்படுத்திக் கொண்டது என்பதையுமே எழுதுகிறார். இந்தியாவில் கோவாவில்  பயணம் தொடங்கி வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறார். நாற்பது நாட்கள் கடலிலேயே இருந்துவிட்டுத் தரையில் இறங்கும்போது கொண்டிருக்கிற மனநிலை, தரையிறங்கியதும் வீட்டில் இருந்து அனுப்பபட்ட கடிதங்களை மொத்தமாகப் பெற்று  வாசிப்பது, ஒவ்வொரு நாட்டில் பழக்கவழக்கங்கள் என அருமையான டைரிக்குறிப்புகள்.

கடலையும், கடலோடிகளின் வாழ்க்கையைப் பற்றி சொல்லி சில வார்த்தைகளை சொல்கிறார். அந்த வகையில் அருமையான சுயமுன்னேற்ற புத்தகமாகவும் கருதலாம்.

போர்க்கப்பல்கலிலும், வணிகப்கப்பல்களிலும், அளவில் எப்போதும் பெரியதாக இருக்கும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் டாங்கர் கப்பல்களிலும் பணிபுரியும் வித்தியாசங்களை சொல்கிறார். டாங்கர் கப்பல்களில் வேலை செய்பவர்கள் மருந்துக்குக் கூட வேறு நாடுகளைப் பார்க்க முடியாது. கடலில் மட்டுமே பயணம் செய்த கொண்டே இருக்க வேண்டும். தரையில் இருந்து வெகு தூரத்துக்கு இந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டு எண்ணெயை கைமாற்றிவிட்டு மீண்டும் கடலுக்கே சென்றுவிடும்.

ஷிப்ட் சமயத்தில் புத்தகம் வாசிக்க நேரமும் இருக்காது, படிக்கவும் கூடாது என்பதால், படித்தவற்றை மனதுக்குள் ஓட்டிப் பார்க்கும் தருணம் என்கிறார். உடனிருக்கும் மற்ற நாட்டினரிடம் அவர்களது இலக்கியத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிற நேரமாக இதனை சொல்கிறார்.

நரசய்யாவின் அப்பாவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் தான யாவரை வெவ்வேறு அனுபவங்களைப் பெறுபவன் தான மனிதன் என்று இந்தப் பணிக்கு அனுப்பி வைக்கிறார். அவர் எழுதிய ஒரு கடிதம் பற்றி நரசைய்யா புத்தகத்தில்  குறிப்பிட்டிருக்கிறார். அத்தனை ஊக்கமானது அது.

கப்பல்களைப் பற்றி எழுதும்போது புரியாமல் போய்விடுமோ என்பதாலயே யாரும் எழுதுவதில்லை என்று சொல்லும் நரசைய்யா, எதுவொன்றையும் விளக்க எளிய மொழியையே கைகொள்கிறார். அதனாலேயே படிக்க சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

கடல் ஒரு மனிதனுக்குள் என்னவாகப் பதிவாகியிருக்கிறது என்பதாகவே இதனை புரிந்து கொண்டேன். ஒரு புத்தகத்தைத் திருடுவது தவறில்லை என்று உணர்த்திய புத்தகங்களுள் ஒன்று இது.

பதிப்பகம் ” சிறுவாணி வாசகர் மையம்

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments