மன்னாதி மன்னன்

0
361

அமெரிக்க இயக்குநர்களின் ‘மாஸ்டர்’ என விமர்சகர்கள் இவரைப் பற்றி ஒருமித்த கருத்தை சொல்கிறார்கள். ‘சினிமா இயக்குவதற்காகவே பிறந்தவர்’ என்கின்றனர் இவரது ரசிகர்கள். ‘இவரது பாதிப்பு இல்லாமல் திரைப்படம் எடுக்கமுடிவதில்லை’ என்கிறார்கள் இவரது சமகால படைப்பாளிகள்.

ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) – திரைப்பட நுணுக்கங்கள் அனைத்தையும் தன்வசப்படுத்தியவர். பெரும்பாலும் சிறுகதைகளையும், புதினங்களையுமே திரைப்படமாக மாற்றிய குப்ரிக்கின் ஆர்வம் கட்டுங்கடங்காமல் போனதன் நல்ல விளைவை உலகத் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடினார்கள். பதிமூன்று படங்களை இயக்கியுள்ள இவரின் ஒவ்வொரு படங்களுமே சினிமா உலகிற்கு புதிய யுக்திகளைக் கற்றுத் தந்திருக்கிறது. 1980ல் ‘The shining’ படத்தில் தான் ஸ்டெடிகாம் தொழில்நுட்பத்தை சினிமா உலகம் முதன் முதலில் கண்டுகொண்டது.

பனிரெண்டாவது வயதில் குப்ரிக்கின் அப்பா கற்றுக் கொடுத்த செஸ் விளையாட்டைப் பற்றி இப்படி சொல்கிறார் குப்ரிக், “செஸ்சுக்கும் திரைப்பட உருவாக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டு வாய்ப்புகள் உங்கள் முன் இருக்கும்போது சரியானதைத் தேர்ந்தெடுக்கும் பொறுமையையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும். அதே சமயம் உங்கள் உள்ளுணர்வு வேகமான முடிவை எடுக்கும்” என்கிறார். இவரின் பால்யகால நண்பர்கள் குப்ரிக்கைப் பற்றித் தவறாமல் குறிப்பிடுகிற ஒரு விஷயம் , ‘எந்த நேரமும் கதைப் புத்தகங்களை சுமந்தபடி திரிந்துகொண்டிருப்பார்’ என்பது.

நெப்போலியன் பற்றி திரைப்படம் எடுக்கவேண்டுமென்பது குப்ரிக்கின் கனவு. நெப்போலியனின் வாழ்க்கைச்சுவடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்காக இரண்டு வருடங்களை செலவு செய்தார். அதற்கான திரைக்கதையும் எழுதிமுடித்துவிட்டார். முன்தயாரிப்பு வேலைகளுக்காக மட்டும் ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்ட அவரது நிதானத்தையும் , அதுவரை ஏற்பட்ட பொருட்செலவையும் பார்த்து எம்ஜிஎம் தயாரிப்பு நிறுவனம் திடீரென பின்வாங்கிவிட்டது.

கடந்த மார்ச் 2013ல் குப்ரிக் எழுதிய நெப்போலியன் திரைக்கதையை தொலைக்காட்சித் தொடராக இயக்கப்போவதாக இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அறிவித்திருந்தார்.

குப்ரிக்கின் படங்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது உண்டு. ‘A CLOCKWORK ORANGE’ திரைப்படத்திற்கும் அதிகமான கண்டனங்கள் எழுந்தன. வெளிப்படையாகக் காட்டப்படுகிற வன்முறைகள் மக்களைத் திசைத் திருப்பும் என்கிற வாதத்திற்கு, ‘வன்முறைக் குற்றங்களை நினைத்தவுடனே எல்லாம் செய்துவிட முடியாது. அதற்கும் கூட நீண்ட நெடிய வன்முறை சரித்திர பின்னணி வேண்டும்’ என்றார் அழுத்தமாக. 

  • ‘அண்டர்கிரௌண்ட்’ படங்களில் உங்களுக்கு எப்போதாவது ஆர்வம் வந்திருக்கிறதா?

நான் நல்ல ‘அண்டர் கிரௌண்ட்’ படங்கள் பார்த்ததில்லை. அந்த மாதிரியான படங்களை உருவாக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். சரியான தொழில்நுட்பம் கொண்டு தான் அது ஒரு முட்டாள்தனமான படம் என்கிற சாயலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட முடியும்.

இந்தப் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள், அவர்களுக்கென பிரத்யேக வாழ்க்கை வாழுகிறார்கள் போன்றவை கொஞ்சம் ஆர்வம் தரக்கூடியது என்றாலும் ஒரே மாதிரியான சம்பவங்களைக் கொண்டவை தான்.

  • கொப்பலோ, ஸ்க்ரடர், ஸ்பீல்பெர்க், ஸ்கார்சி, டி பால்மா போன்றவர்கள் புதிதாக ஹாலிவுட்டில் முயற்சிகள் செய்து வருகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு அமெரிக்க படம் பார்த்தேன். கிளாடியா வெய்ல் இயக்கிய அந்தப் படத்தின் பெயர் ‘GIRLFRIENDS’. அமெரிக்காவின் தீவிரமான, புத்திசாலித்தனமான உணர்வுப்பூர்வமான திரைப்பட படைப்புகளில் வெகு அரிதான படம் இது. இந்தப் படத்தை நான் மிகச் சிறந்த ஐரோப்பிய படங்களோடு ஒப்பிடுவேன். ஏனோ இந்தப் படம் அமெரிக்காவில் வெற்றி பெறவில்லை. கதையின் உள்ளார்ந்த உண்மைத் தன்மையோடு எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காத படம்.

மிகப்பெரும் இலக்கியங்களில் காணக்கிடைக்கிற உண்மைத்தன்மையோடும், பார்வையோடும் பெரும்பான்மையான மக்களைக் கவர்வது போல் எடுப்பது சிரமமானது. லாபம் இல்லாமல் அமெரிக்காவில் உங்களால் படம் எடுக்கவே முடியாது.
ஏனென்றால் செலவு செய்தால் தான் அங்கு படமே எடுக்க முடியும். அங்குள்ள பார்வையாளர்களை என்ன செய்தால் ஈர்க்கலாம் என்று தான் இயக்குநர்கள் நினைப்பார்கள். ஏதாவது புதிதாக முயற்சி செய்யலாம் தான். ஆனால் அது கஷ்டம்.

  • உங்களுடைய பெரும்பாலான படங்கள் நாவலில் இருந்து உருவாக்கப்பட்டவை. இலக்கியத்தில் இருந்து கையாள்வது உங்களுக்கு சுலபமானதாக இருக்கிறதா?


ஒரு கதையை நீங்களாக யோசிக்கத் துவங்கினால், அது நன்றாக வருமா, மோசமாக இருக்குமா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் உருவாக்க ஆரம்பித்து விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் கதையைப் படிக்கும்போதே முதன் முதலில் ஒரு உள்ளுணர்வு தோன்றும். முதல் தடவைப் படிக்கும்போதே நாம் எப்படி உணர்ந்தோம், என்ன நினைத்தோம் என்பதெல்லாம் ஞாபகத்தில் இருக்கும். மற்றவர்களின் கதையை படிக்கும்போது நமக்கு இருக்கிற உணர்வு தான் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கும் என்கிற பெரிய சாத்தியம்  இலக்கியத்தைக் கையாளும்போது கிடைக்கிறது.

  • Nobokov-ன்  ‘Lolitha’, Fastனுடைய ‘Spartacus’, Thackerayவினுடைய ‘Barry Lundon’ Kingன் ‘The Shining’ என திரைப்படங்களாக எடுத்த இந்தப் புதினங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன. ஒரு படத்தை உருவாக்குவதற்கு ஏற்ற புத்தகம் என எப்படி தீர்மானிக்கிறீர்கள்?


தனிப்பட்ட முறையில் அந்தக் கதைகளுக்கு நான் பொறுப்பாளி என்பதை உணர்ந்திருக்கிறேன். இதுவே என்னை பலவிதங்களில் எளிமையாக்கிவிடுகிறது. இரண்டாவது கேள்வி என்னவென்றால், அந்தக் கதை என்னை பரவசப்படுத்துமா என்பதும், இரண்டு வாரங்கள் கழிந்த பின்னும் அதே பரவச மனநிலையைத் தக்கவைக்குமா என்பதும். இதற்கு நேர்மறையான பதில் கிடைத்துவிட்டால், ‘இந்தக் கதையை என்னால் திரைப்படமொழியாக்க மாற்ற முடியுமா’ என்று யோசிப்பேன்.. ஏனென்றால் சில புதினங்கள் நன்றாக இருக்கும். ஆனால் கதாபத்திரங்கள் செய்கிற செயல்களை விட அவற்றின் உள்மன ஆழங்களை அதிகமாக பேசிக் கொண்டிருக்கும். ஒரு நாவலின் மையத்தையோ, கதாபாத்திரத்தையோ தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டு எளிமைப்படுத்துவது தான் பெரிய சவால். நல்ல வரவேற்பைப் பெறாத நாவல்கள் கூட திரைப்படமாக மாறும்போது வெற்றி பெற்றிருக்கின்றன. அதில் நடிகர்களுக்குத் தேவையான சாத்தியங்கள் இருக்கின்றதா? நாம் திரைக்கதையாக மாற்றியபின் வேறொருவரும் இதற்கான முயற்சியில் இருப்பாரா போன்ற கேள்விகள் தோன்றும். மொத்தத்தில் ஒரு கதை உள்ளுணர்வைத் தொட வேண்டும். நான் அந்தக் கதையோடு ஒன்றாய் இணைய வேண்டும்.

  • ‘THE SHINING’ நாவலில் உங்களை எது ஈர்த்தது?

வார்னர் பிரதர்ஸின் செயலரான ஜான் கெய்லி தான் அந்த நாவலை எனக்கு அனுப்பிவைத்தார். எனக்கும் பிடித்திருந்த ஒரு நாவலை அவர்கள் எனக்கு அனுப்பியது அது தான் முதல் முறை. பல நாவல்களை நான் சில பக்கங்கள் கடந்த பிறகு நேரத்தை இனி இதில் வீணாக்கக் கூடாது என மூடி வைத்திருக்கிறேன். ‘THE SHINING’ என்னைப் படிக்கும்படி தூண்டியது. கதை, சிந்தனைகள், கதையமைப்பு எல்லாமே கற்பனைச் செறிவோடு இருந்தன. சிறந்த திரைப்படத்தை அதிலிருந்து உருவாக்கிவிடமுடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது.

இதற்கு முன்பு அவர் எழுத்தில் ‘CARRIE’ படம் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரது நாவல்கள் எதுவும் படித்ததில்லை. கிங்கின் பெரிய பலமே கதையை அமைக்கும் விதத்தில் தான் இருக்கிறது. எழுதுவதற்கு அதிக நேரம் அவர் எடுத்துக் கொள்வதில்லையோ என்று தோன்றும். ஒரு முறை எழுதுகிறார், அதை முழுவதுமாக படிக்கிறார் சில நேரங்களில் திரும்ப எழுதிப்பார்க்கிறார். பிறகு பதிப்பாளரிடம் கொடுத்துவிடுகிறார். புதுப்புது கண்டுபிடிப்பில் அவர் காட்டுகிற அக்கறையும், அதில் அவர் தெளிவாகவும் இருப்பதும் தான் அவரது பரந்துபட்ட கற்பனைகளுக்குக் காரணம்.

  •  ‘THE SHINING’ நாவலை வாசிப்பதற்கு முன்பு ஒரு திகில் படம் எடுப்போம் என நினைத்திருந்தீர்களா?

ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே இன்னொரு கதையை நான் தேர்ந்தெடுத்துக் கொள்வதில்லை. நான் ஏற்கனவே இயக்கிய என்னுடைய மற்ற படங்களில் சாயல் வந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் தான் நான் தீவிரமாக இருப்பேன். அடுத்த படம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பற்றிய முன்தீர்மானம் எதையும் நான் உருவாக்கிக் கொள்வதில்லை. இது எனக்கு நேரத்தை மிச்சப்படுத்தும்.

இந்த வகையான படங்களுக்கு ஒத்துப் போகிற விதி என்னவென்றால், நீங்கள் எதையும் விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவே ஒருவித அமானுஷ்யத் தன்மையை ஏற்படுத்திவிடுகிறது. அமானுஷ்யத்தன்மைப் பற்றி ஃபிராய்ட் ஒரு கட்டுரையில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். “அமானுஷ்யத்தன்மை என்பது ஒரு உணர்ச்சி மட்டுமே. நிஜ வாழ்க்கையைக் காட்டிலும் கலைகளில் தான் மிகத் தீவிரமாக எடுத்தாளப்படுகிறது”. என்றிருக்கிறார். இந்த வார்த்தைகள் என்னைக் கவர்ந்தன. இந்த வகையான படங்களுக்கே உள்ள ப்ரத்யேக பார்வை இது. அதே போல் மேதையான ஹெச்.பி. லவ்கிராஃப்ட் சொன்ன விஷயமும் முக்கியமானது. ‘என்ன நடந்தது என மக்களுக்கு விவரிக்க வேண்டியதில்லை. என்ன நடந்திருக்கும் என்பதை மக்களே தங்களின் பயத்தையும், பதட்டத்தையும் கொண்டு கற்பனையில் தீர்மானிக்கட்டும்’ என்கிறார் அவர். இது போன்ற கதைகளை மக்கள் நன்றாக ரசிப்பார்கள். படம் முடிகிறபோது அவர்களின் கற்பனையே அவர்களுக்கு திருப்தியைத் தந்துவிடும். அவர்களை ஏமாற்றவோ, முட்டாளாக்கிவிடவோ கூடாது அவ்வளவு தான்.

  • சாதாரணப் படங்களிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் வித்தியாசமாக திகில் படங்களை இயக்குகிறீர்களா?

ஒரு புத்தகத்தில் இருந்து திகில் பக்கங்களை மட்டும் எடுத்து திரைப்படமாக எடுக்கிறேன் என நினைக்கிறீர்களா? அது தவறு. ஒரு குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சுவற்றில் எல்லா இடங்களிலும் ரத்தம் தெளிக்கிறது என்பதும், உறைபனியில் விளையாடிக்கொண்டிருக்கும்போது, பக்கத்தில் எங்கேயோ பெரிய குழாயிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்கிறது போன்றவையும் புத்தகத்தில் படிப்பதை விட காட்சியாக பார்க்கும்போது கூடுதலான திகிலாக இருக்கும்.  
புத்தகத்தில் இல்லாத எத்தனையோ விஷயங்களை திரைக்கதைக்காக சேர்த்திருக்கிறேன்.

  • ‘DR.STRANGELOVE’ வசனங்களை அதிகம் கொண்ட படம். 2001 படமோ இதற்கு முந்தைய உங்களது படங்களை விட முழுக்கவே மாறுபட்டதாய் இருந்தது…

ஆமாம். நானும் அதை உணர்ந்தேன். ‘DR.STRANGELOVE’படத்தில் வசனங்கள் அதிகமாய் இருந்தததினால் வேறு மொழிகளில் தப்புத்தப்பாய் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ‘2001’ படமோ இதற்கு நேர்மாறாய் அமைந்திருந்தது. அது காட்சிரீதியிலான அனுபவம் கொண்டது. அறிவார்ந்த வசனங்களைப் புகுத்தாமல் இருந்ததினால் பார்வையாளர்களின் ஆழ்மனதினை ஒரு இசை பரவுவது போல, ஒரு ஓவியம் நுழைவது போல தத்துவார்த்தமாக அடைய முடிந்தது. ஒரு கலாசாரத் தடுப்பை உடைத்து நம்முடைய மனதின் உணர்வுகளை உலுக்கக் கூடியது.

வார்த்தைகளைக் கொண்டு நிரப்பாமல் எந்த ஒரு சிக்கலான கருத்துகளையும் நம்மால் காட்சிப்படுத்திவிட முடியும். இரண்டு மணி நாற்பது நிமிடங்களில் , மொத்தமே நாற்பது நிமிடங்கள் தான் வசனங்கள் வருகின்றன.

மனிதனின் விதியும், பிரபஞ்சத்தில் அவனுடைய பங்கு குறித்து சொல்வதன் மூலம் சாதாரண வாழ்க்கை முறையை அமைத்திருக்கும் மக்களின் மனதுகளைத் தொட்டுப் பார்த்தது தான் ‘2001’ படத்தினுடைய வெற்றி என நம்புகிறேன்.  உதாரணத்திற்கு மற்றவர்களின் பார்வையில் மிகக்குறுகிய கோணத்தைப் பெற்றிருக்கிற அலபாமாவில் ட்ரக் ஓட்டுகிற ஒரு ஓட்டுனரும், கேம்ப்ரிட்ஜில் படித்த ஒரு அறிவாளியும் பீட்டில்ஸ் இசையை ஒரே விதமான மனநிலையில் தான் ரசிக்கிறார்கள். ஏனென்றால் மனிதர்களின் ஆழ்மனதிற்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த இடத்தைத் தான் படம் எடுத்துக் கொண்டது.

பேசும் படங்கள் வந்த காலந்தொட்டே சினிமாத்துறை கட்டுப்பெட்டிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. மூன்று அடுக்கு திரைக்கதை மட்டுமே நம்முடைய மாதிரியாக இருக்கிறது. அந்த மரபை விட்டு வெளியே வர வேண்டும். முப்பது வயதிற்கு மேல் உள்ள அநேகம் பேர் இது போன்ற மரபுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில பேர் திரைப்படத்தை வெறிக்கிறார்களே தவிர அதில் கவனத்தைத் திருப்ப மாட்டேன் என்கிறார்கள். திரைப்படம் என்பது கண்களால் மட்டும் பார்ப்பது அல்ல என்பதே அதனைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை பாடம்.

  • ‘DR.STRANGELOVE’ தீவிரத் தன்மை கொண்ட நாவல். எப்படி அதனை நகைச்சுவையான படமாக மாற்ற முடியும் என்று நினைத்தீர்கள்?

அணு ஆயுதப் போரின் பாதிப்புகளைச் சொல்லக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்று தான் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். எந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும் என்று கற்பனை செய்கிறபோது அவை எதோ பொருந்தாத் தன்மையோடு இருந்தன. இதை என்னால் செய்யவே முடியாது… மக்கள் என்னைப் பார்த்து சிரித்து விடுவார்கள்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து தான் புரிந்தது எதையெல்லாம் வேண்டாமென்று தூக்கிப் போட்டேனோ அவையெல்லாமே உண்மையானவை என்று. நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பது தெரிந்தது. அதனால் ஒரு பயங்கரத்தை சொல்லுகிற நகைச்சுவைப் படமாக மாற்ற முடிவு செய்தேன். அதாவது நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கும்போதே அதன் ஆபத்துகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • திரைப்படம் வெளிவந்தும் கூட ஏன் சில காட்சிகளை நீக்குகிறீர்கள்?

ஒரு படம் முழுமையடைந்துவிட்டால், திரும்பவும் புதிதாகப் பார்ப்பது போல பார்ப்பேன். தனியாகவோ, பார்வையாளர்களுடனோ சில வாரங்கள் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துவிடுவேன். இப்படிப் பார்க்கிறபோது படத்தின் நீளம் எங்கெல்லாம் குறைக்கப்படவேண்டும் என்று தெரிந்துவிடும்.

  • எப்படி நடிகர்களிடமிருந்து அவர்களது திறமையை வெளிக் கொண்டு வருகிறீர்கள்?

இயக்குநரின் வேலை என்பது கதாபாத்திரம் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை ஒரு காட்சியில் கொண்டு வரவேண்டுமென்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது. அதை நடிகர்கள் வெளிப்படுத்தும்போது அதைச் சரியாக உள்வாங்கி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஒரு நடிகரின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வதன் மூலம் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு இயக்குநர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இது மட்டும் தான் இயக்குனரின் முக்கியமான வேலை என்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு இயக்குனரின் ரசனையும், கற்பனை சக்தியும் ஒரு படத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இது அர்த்தமுள்ளதா? இது நம்பக்கூடியதா? இது ஆர்வம் தரக்கூடியதா? போன்ற கேள்விகளுக்கு ஒரு நாளில் பல நூறு முறை இயக்குநர் தனக்குள்ளேயே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

ஒரு திரைப்படம் படைப்பாக்கத்தோடு, தொழில்நுட்பமும் இணைந்தது. இங்கு வேகம் மிக முக்கியம். சரியான முடிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும். படப்பிடிப்பு என்பது ஒரு இயக்குனருக்குப் பெரிய தடை. மனிதன் கண்டுபிடித்ததிலேயே மோசமான கலை படப்பிடிப்பு நடத்துவது தான். ஒரே சத்தமாக, படப்பிடிப்பு கருவிகளுக்கு நடுவில் நம்முடைய கவனப்படுத்துதலை சிதைத்து ஒரு நாளைக்கு காலை எட்டரை மணிக்குத் தொடங்கி, இரவு வரைத் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். கற்பனைத் திறன் கொண்ட எந்தக் கலைஞனும் இந்த மாதிரி சூழலில் வேலை செய்ய முன்வரமாட்டான். ஆனால் இயக்குநர் எதையும் தள்ளிப்போடாமல் செய்தேயாக வேண்டும்.

ஒரு நடிகர் இயக்குநர் சொல்லும் எல்லாவற்றையும் மறுத்தார் என்றால் மோசமான நடிப்பைத் தரப்போகிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் படப்பிடிப்பின்போது பல மாதங்களாக அந்த நடிகரின் தனித்த பார்வையாளராக இயக்குநரே இருக்கிறார். அதனால் மோசமான நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் அந்த நடிகர் மட்டுமல்ல, இயக்குனருக்கும் அதில் பங்கு இருக்கும்.

  • சில இயக்குநர்கள் நடிகர்களை ‘ரஷ்’ பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என கேள்விபட்டிருக்கிறோம். நீங்கள் எப்படி?

சிலரை மட்டும் அனுமதிப்பேன். சில நடிகர்கள் நடித்த காட்சிகளைப் பார்த்துவிட்டு மிக மோசமான மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். சொற்ப நடிகர்கள் தான் நடித்ததிலிருந்து எப்படி மேம்படுத்தலாம் என யோசிப்பார்கள். ஒரு நல்ல நடிகன் தான் நடித்து முடித்ததைக் கொண்டு எந்த பாதிப்பையும் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ள மாட்டான். என்னுடைய படப்பிடிப்பில் ‘ரஷ்’களை மதிய உணவு இடைவெளியின் போது தான் பார்ப்பேன். உண்மையிலேயே ஆர்வம் உள்ள நடிகர்களைத் தவிர மற்றவர்கள் அரைமணிநேரத்தை அந்த இடைவெளியின் போது வீணாக்க விரும்பமாட்டார்கள்.

  • மூன்று மாதங்களாவது குறைந்தது நடிகர்களுடன் பணி செய்ய  வேண்டுமென்கிற சூழலில் முதல் நாள் அவர்களை எப்படி உங்களது மனநிலைக்குள் கொண்டு வருவீர்கள்?

நாம் அவர்களின் திறமையை மதிக்கிறோம் என்பதை வெளிப்படுத்திவிட்டாலே போதுமானது. நீங்கள் அவரை உங்கள் படத்தில் நடிக்க அழைக்கும்போதே மனதளவில் தயாராகிவிடுவார்கள். நம்மைப் பற்றி விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வார்கள்.

  • நடிகர்களுடன் ஒத்திகை பார்த்துக் கொள்வீர்களா?

ஒத்திகைப் பார்ப்பது பயனுள்ளது தான். ஆனால் படப்பிடிப்புத் தளம் இல்லாமல் ஒத்திகைப் பார்ப்பது அத்தனை சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். துரதிருஷ்டவசமாக நமக்கு படப்பிடிப்புத் தளம் கடைசி நிமிடம் வரைக் கிடைப்பதில்லை. சில நடிகர்களுக்கு ஒத்திகைத் தேவைப்படும். நடிகர்கள் உணர்ச்சிகளைக் கொட்டும் கருவிகள். சிலர் எப்போதும் தயாராக இருப்பார்கள். சிலரால் முதன்முறை காட்டும் உணர்ச்சிகளைப் பின்பு எத்தனை முறை முயற்சி செய்தாலும் திருப்பித் தர இயலாது.

  • இந்த ‘டேக்’ஐ உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என எப்படி முடிவு செய்கிறீர்கள்?

பல நேரங்களில் யோசிக்காமலேயே தெரிந்து போய்விடும். ஆனால் வசனப்பகுதிகளைப் பொறுத்தவரை திரும்பத் திரும்பப் பார்த்து வெவ்வேறு ஷாட்களில் இருந்து எடுத்துக் கொள்வேன். இப்படித் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து அதை கவனித்து , நோட்ஸ் எடுத்துக் கொண்டு அதோடு போராடுவதினால் தான் எடிட்டிங்கில் நேரம் அதிகமாகிறது. வசனமற்ற காட்சிகளில் இந்தப் பிரச்சனைக் குறைவு.

நான் இல்லாமல் ஒரு ‘ஷாட்’ கூட எடிட்டரை ‘கட்’ செய்ய விடமாட்டேன். ஒவ்வொரு நொடியும் எடிட்டரோடு இருப்பேன். ஒவ்வொரு ஃபிரேமையும் நான்தான் குறித்துக் கொடுப்பேன். நான் என்ன விரும்புகிறேனோ அதைத் தான் கொண்டு வருவேன். எழுதுவது, படம்பிடிப்பது , எடிட்டிங் இது மூன்றும் தான் திரைப்படம் எடுப்பதென்பது.

  • புகைப்படக்கலைஞராக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.. பிறகு எங்குத் திரைப்பட எடிட்டிங் கற்றுக் கொண்டீர்கள்?

1950களில் ஐந்து வருடங்கள் புகைப்படக்கலைஞராக வேலைப் பார்த்தேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும் திரைப்படம் எடுக்க வேண்டுமென்கிற கிறுக்குப் பிடித்துக் கொண்டது. இரண்டு ஆவணப் படங்களை அப்போது இயக்கினேன். என்னுடைய முதல் இரண்டு திரைப்படங்களுக்கும் நான் தான் இயக்குநர், உதவி இயக்குநர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் ஒலிப்பதிவாளர் எல்லாமே. அது விலைமதிக்க முடியாத அனுபவம். திரைப்படத்தின் அனைத்துத் துறைகளைப் பற்றிய அனுபவமும் கிடைத்தது அதில் தான். அப்போது எனக்கு வயது இருபத்தி ஒன்று தான்.

புகைப்படக்கலையில் எனக்கு இருந்த அனுபவம் தான் அப்போது கைகொடுத்தது. முதல் இரண்டு ஆவணப்படத்திற்கும் 35mm கையடக்க Eyemo கேமரா உபயோகித்தேன். இது கையாள்வதற்கு எளிதான கேமரா. முதன் முதலில் மிட்செல் கேமராவை ‘FEAR AND DESIRE’ படத்தில் கையாண்டேன். கேமரா கருவிகளை விற்கும் பிராட்வே கடைக்குப் போனேன். அதன் உரிமையாளர் பெர்ட் ஒரு சனிக்கிழமை காலை முழுவதும் எப்படி ‘லோட்’ செய்யவேண்டுமென்பதையும், கையாள வேண்டுமென்பதையும் சொல்லித் தந்தார்.

  • தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டீர்கள். ஆனால் எப்படி நடிகர்களிடம் ஆரம்பகாலப் படங்களில் வேலை வாங்கினீர்கள்?

ஆரம்ப காலகட்டங்களில் சிறந்த நடிப்பை அவர்களிடம் இருந்து பெறவில்லை.முதல் இரண்டு படங்களான‘FEAR AND DESIRE’ மற்றும் ‘KILLER’S KISS’  சராசரிக்கும் கீழான திரைப்படங்கள் தான். ஆனால் அதில் கிடைத்த அனுபவம் தான் முக்கியமானது. கற்றுக்கொள்வதற்கு சிறந்த வழி வாய்ப்பு கிடைக்கும்போது செய்யத் தொடங்குவது தான் சரியானது. Stanislavski-ன் புத்தகம் எனக்குப் பெரிய அளவில் கைகொடுத்தது. அவர் எப்படி நடிகர்களைக் கையாள்வார் என்பதை அதன் மூலம் தெரிந்துகொண்டேன். அவரின் புத்தகங்களும், எனது தவறுகளிலிருந்து கிடைத்த வலி மிகுந்த பாடங்களுமே இதுவரை எனக்கு அனுபவங்களாக இருக்கின்றன.

  • திரைப்படங்கள் பற்றிய எந்தப் புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள்?

ஐசன்ஸ்டீன் எழுதிய புத்தகங்களை ஒரேடியாக வாசித்தேன். ஆனால் அப்போது எனக்கு எதுவுமே புரியவில்லை. புடோவ்கினுடைய ‘Film Technique’ புரிந்து கொள்வதற்கு ஏற்றதாக இருந்தது. எடிட்டிங் மற்ற கலைகளை விட எப்படி வேறுபட்டது என்பதை விளக்கமாக சொல்கிற புத்தகம் அது. புடோவ்கின் அந்தப் புத்தகத்தில் நிறைய உதாரணங்களோடு விளக்கி இருக்கிறார். சினிமா நுட்பங்களைக் கற்றுக்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன்.

(இயக்குநர்களின் நேர்காணல் அடங்கிய மேதைகளின் குரல்கள் புத்தகத்தில் இடம்பற்ற ஒரு மேற்காணல் இது)

மேதைகளின் புத்தகம் வாங்க 9042887209

https://www.commonfolks.in/books/d/methaigalin-kuralgal-mayoo

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments