ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் அப்போது தான் பெரும் செலவில் ‘North by northwest’படத்தை இயக்கியிருந்தார்.படம்பெரும் வெற்றி. அடுத்ததாக ஹிட்ச்காக் இயக்கப்போகும் படத்திற்கான எதிர்பார்ப்புகூடியிருந்தது. அந்த சமயத்தில் அவர் லண்டனுக்கு சென்றிருந்தார். அவர் கண்ணில் பட்டது ஒருநாவல். அதை ஒரே மூச்சில் படித்து முடித்ததும் தன்னுடைய அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். உதவியாளரை தொலைபேசியில் அழைத்து தனது அடுத்த படத்திற்கான பெயரைச் சொன்னார் – ‘Psycho’. உடனேயே அதை எழுதிய நாவலாசிரியர் ராபர்ட் ப்லாக்கிடம் பேசி உரிமையும் பெற்றாயிற்று.
அடுத்ததாக இந்த நாவலுக்கு ஏற்ற திரைக்கதை வடிவத்தை எழுத வேண்டும். அந்தப் பொறுப்பை ஹிட்ச்காக் ஒரு பிரபல திரைக்கதையாசிரியரிடம் தந்திருந்தார். ஆனால்அவர் எழுதித் தந்த ‘ட்ரீட்மென்ட்’ ஹிட்ச்காக்கிற்கு விருப்பமானதாயில்லை. அந்த சமயத்தில் தான்ஜோசப் ஸ்டிஃபானோ பெயர் ஹிட்ச்காக்கிடம் பரிந்துரைக்கப்படுகிறது. ஜோசப்பின்கவனம் முழுவதும் தொலைக்காட்சித் தொடருக்கு திரைக்கதை அமைப்பதிலேயே இருந்தது.ஹிட்ச்காக் படத்திற்கான திரைக்கதை வாய்ப்பு என்றதும் உற்சாகமானார் ஜோசப்.‘Psycho’ நாவலைப் படித்தார். அவரால் அதைக் கையாள முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.
ஹிட்ச்காக்குடனான முதல் சந்திப்பிலேயே அந்த நாவலை எப்படிக் கையாண்டால் நல்லதொரு திரைக்கதையாக மாறும் என்பதைப் பற்றிப் பேசினார். ஜோசப் சொன்ன அத்தனை கோணங்களும் ஹிட்ச்காக்கிற்குப் பிடித்திருந்தன.
அவர் சொன்ன கோணம் எது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு நாவலின் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நார்மன் பேட்ஸ் என்கிறவன்பயணியர் விடுதி ஒன்றை நடத்தி வருகிறான். எப்போதேனும் அபூர்வமாய்த் தான் அங்கே பயணிகள் தங்குவார்கள். பெரும்பாலும் தனிமையான பொழுதைக் கழிக்கும் அவன் தன்னுடைய அம்மாவின் கட்டுப்பாட்டில் வாழ்கிறான். ஒருநாள் அந்த விடுதியில் தங்குவதற்காக மேரி என்கிற பெண் வருகிறாள். அவள் தான் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில் இருந்து நாற்பாதாயிரம் டாலரைக் களவாடி தன்னுடைய காதலனிடம் தருவதற்காகவரும்போது வழிமாறியதால் நார்மன் நடத்தும் விடுதியில் தங்க நேரிடுகிறது. அன்றைய இரவு அவள் குளித்துக் கொண்டிருக்கும்போது நார்மனின் அம்மாவினால் கொலை செய்யப்படுகிறாள். மேரியின் மரணத்தின் பின்புலத்தை அவளது சகோதரி கண்டுபிடிப்பதே கதை.
நார்மனின் மனவோட்டம் தான் நாவலின் கதையை வெகுவாக நகர்த்திச் செல்கிறது.
நார்மன் யார் , அவனுக்கும் அவனுடைய அம்மாவுக்குமான பந்தம் எப்படிப்பட்டது போன்றவற்றை முதல் அத்தியாயத்தில் விளக்குகிறது நாவல்.
ஆனால் இப்படியே காட்டினால் அதில் சுவாரஸ்யம் ஒன்றும் இருக்காது என்பதால் மேரியிடமிருந்து கதையைத் தொடங்குவதே சரியாக இருக்கும் என்பது திரைக்கதையாசிரியர் ஜோசபின் கோணம். கதையின் முதல் காட்சியில் மேரி தன்னுடைய காதலனுடன் ஒரு சிறிய விடுதியில் தன்னுடைய மதிய உணவு இடைவேளையை கழிப்பாள். அந்த ஒரு காட்சியின் மூலமே நமக்கு அலுவலக இடைவேளையில் மேரி அங்கே வந்திருப்பதும், காதலனுக்கு பணத் தேவை இருப்பதும் அது சரியானால் தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதும் மேரி ஒரு விரக்தியான வாழ்க்கையை வாழ்கிறாள் என்பதும் புரிந்து விடுகிறது.
அதன் பிறகு மேரியின் முதலாளி நாற்பதாயிரம் டாலர் பணத்தைத் தந்து வங்கியில் போடும்படி சொல்லுகிறார். அதை அவள் வங்கியில் போடாமல் வீட்டுக்கு எடுத்து வருகிறாள். அதைத் தனது காதலனுக்குக் கொடுப்பதற்காக காரில் தனியாக பயணம் செய்கிறாள்.
இந்த இரண்டு காட்சிகளை மட்டும் சொல்லிவிட்டு கதைக்குள் வந்திருக்கலாம். ஆனால் படம் இதற்குப் பின்பு காட்சிகளை வளர்க்கிறது. நாவல் சொல்லாத செய்திகளை திரைக்கதையில் இணைத்திருக்கிறது. தொடர்ந்து கார் ஒட்டி வந்த களைப்பில் மேரி சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி தூங்கி விடுகிறாள். அவளை ஒரு போலீஸ்காரர் எழுப்பி விசாரிக்கிறார். மேரியின் அவசரமான பதில்களால் சந்தேகம் கொள்கிறார். அவளைப் பின்தொடர்கிறார். மேரி தன்னுடைய காரினை விற்று வேறொரு கார் வாங்குகிறாள். அங்கும் அவள் அங்கு நடந்து கொள்ளும் விதத்தினால் கார் விற்பவர் சந்தேகப்படுகிறார். கார் விற்கும் இடத்திற்கும் அந்த போலிஸ்காரர் வருகிறார்.அங்கிருந்து செல்லும் மேரி மழை வந்த காரணத்தால் இரவு நார்மன் பேட்சின் விடுதியில் தங்குகிறாள். எதற்காக இத்தனை விவரிப்புகள்? நாவலில் உள்ளது போலவே வழி மாறி மேரி நார்மனின் விடுதியில் தங்குகிறாள் என்றே இருந்திருக்கலாம். ஆனால் மேரி எந்த நேரமும் போலிசிடம் மாட்டிக் கொண்டுவிடுவாள் என்கிற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு படத்தை நகர்த்தத் தேவைப்பட்டது.
படத்தில் இந்தக் காட்சியில் நார்மன் நமக்கு அறிமுகமாகிறார். மிகச் சாதாரணமான கனிவான ஒருவராய் நமக்குத் தெரிகிறார். நார்மனின் அம்மா நரர்மனை கண்டபடி வசை பாடுவதை மேரியைப் போல பார்வையாளர்களும் கேட்கிறார்கள். மேரியைப் போலவே நார்மனின் மேல் பரிதாபம் கொள்கிறார்கள். இங்குதான் திரைக்கதை மிக முக்கியப் பங்கினை எடுத்துக் கொள்கிறது.
ஏனென்றால் நாவலில் நார்மனின் கதாபாத்திரம் என்பது எந்த நேரமும் மனோவியல் புத்தகங்களைப் படித்துக் கொண்டு , அம்மாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வியாபாரத்தை முன்னேற்றாமல் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் சோம்பேறியாக நமக்குக் காட்டப்படுகிறது. அதோடு பெண்கள் என்றாலே கீழ்த்தரமானவர்கள் என்கிற எண்ணமும் நார்மனுக்கு உண்டு. தான் ஆண்மையற்றவன் என்பதனால் அதைப் பெண்கள் எப்படியோ தெரிந்துகொண்டு தன்னிடம் பழகாமல் அவமதிக்கிறார்கள் என்று பாவித்துக் கொள்ளும் ஒரு நபராக நார்மன் இருக்கிறார். தன்னுடைய தோற்றத்திலும் கூட மந்தத்தன்மை கொண்டவராகவே நமக்குக் காட்டப்படுகிறார்.
அதனால் நார்மன் மேல் நமக்கு பரிதாபம் தோன்றுவதில்லை. திரைப்படத்திலோ ஒரு அப்பாவித்தனமான இளைஞன் போல நார்மன் இருக்கிறான். அதனால் மேரியிடம் பேசும்போது நமக்கு அவன் மேல் பச்சாதாபம் ஏற்படுகிறது. ‘நாம் அனைவருமே சில நேரங்களில் பைத்தியமாகத் தான் மாறுகிறோம்’ என்றுநார்மன் சொல்லும்போது மேரி பணம் திருடிய தானும் ஒரு பைத்தியகாரத்தனமான மனநிலையில் தான் அந்த முடிவை எடுத்தோம் என்று நினைக்கிறாள். அவள்மனமும் கூட மாறுகிறது. இந்த இடத்தில் நார்மன் மீதும், மேரியின் மேலும் நமக்கு நல்ல மதிப்பு ஏற்படுகிறது.
இதன் பின்பு திரைக்கதை தனது அடுத்த கட்டத்திற்கு பார்வையாளர்களைக் கொண்டு செல்கிறது. மேரி ஷவரில் குளிக்கும்போது அதைத் தன்னுடைய அறையில் போட்டிருந்த ஒருதுளை வழியாகப் பார்க்கிறான் நார்மன். அதுவரைநார்மன் மேல் கொண்டிருக்கும் பச்சாதாபம் உடைபடுகிறது. இந்த அதிர்ச்சியிலிருந்துநாம்மீள்வதற்குள் குளித்துக் கொண்டிருக்கும் மேரியை ஒரு பெண்ணின் உருவம் கொலை செய்கிறது.
“அவள் மேரியைக் குத்துகிறாள் பிறகு தலையை வெட்டுகிறாள்” என்றுஇரண்டே வரிகளில் அந்தக் கொலையின் கொடூரத்தை சொல்கிறது நாவல். எந்தவொரு முன்னறிவுப்புமில்லாத இந்தக் கொலையின் உச்சபட்ச அதிர்ச்சியை காட்ட வேண்டி ஹிட்ச்காக் மேற்கொண்ட ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு யுத்தி எப்போதும் திரைப்பட ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.
இந்தக் கொலைக்காகத் தான் இத்தனை நேரமும் பார்வையாளர்களுக்கு பல்வேறுவிதமான யூகங்களைக்கொடுத்திருந்தது திரைக்கதை. ஹிட்ச்காக் தன்னுடைய திரைக்கதை யுத்தியைப் பற்றி இப்படி சொல்லுவார், “பார்வையாளர்கள்படம் பார்க்கும்போது எப்போதுமே கதையின் அடுத்தக் கட்டத்தைப் பற்றி யூகித்தபடியே இருப்பார்கள். அவர்களுக்கு நாம் ஆச்சரியத்தையும், பயத்தையும் தர வேண்டும்” என்பார். இந்தப்படத்தில் அவரது விதி மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேரி என்கிற கதாபாத்திரம் இறந்து போகும் என்று யாரும் நினைத்திருக்கவே மாட்டார்கள். அதிலும்அப்போது பிரபலமாக இருந்த நடிகை ஜானெட் லெய் மேரியாக நடித்திருந்தவர். அந்தக் கதாபாத்திரம் பாதியில் மறைந்து போகும் என்று பார்வையாளர்கள் நிச்சயம் யூகித்திருக்க மாட்டார்கள்.
இந்த நாவலைப் படமாக்குவதில் இருந்த சவால்களுள் ஒன்று நார்மனின் அம்மா கதாபாத்திரம். நாவலின் தொடக்கத்தில் நார்மன் புத்தகம் படித்துக் கொண்டிருப்பான். அவனுடைய அம்மா அவனது அருகில் வந்து நிற்பார், பேசுவார். புதினம்எழுதுகிறபோது நமது கற்பனையை எப்படி வேண்டுமானாலும்வளைத்துக் கொள்ளலாம். ஆனால்காட்சிப்படுத்தும் போது நார்மனின் அம்மாவைக் காட்டியே ஆக வேண்டும். ஏனெனில் இரண்டு கொலைகளை செய்பவர் அவர். அதோடு அடிக்கடி நார்மனிடம் உரையாடுகிறார். இந்த சிக்கலையும் சரி செய்துவிடுகிறது திரைக்கதையும், ஹிட்ச்காக்கின் இயக்கமும்.நார்மன் அவனது அம்மாவுடன் பேசுவதை மேரி கேட்கிறாள். அவர்களின் பேச்சு தருகிற அதிர்ச்சியை மேரியின் முகத்தில் காண்கிறோம். மேரி கொலையாகும்போது சில வினாடிகள் மட்டுமே நார்மனின் அம்மா உருவம் நமக்குக் காணக் கிடக்கிறது. அதன் பின்பு துப்பறிவாளர் நார்மனின் அம்மாவைத் தேடி வீட்டுக்கு வரும் காட்சி ஹிட்ச்காக்கின் புத்திசாலித்தனத்துக்கு எடுத்துக்காட்டு. கதவைத் திறந்து துப்பறிவாளன் உள்ளே வந்து மாடிப்படிகளில்ஏறுவதும், நார்மனின் அம்மா கத்தியோடு வந்து நிற்பதும் வரையிலான நீண்ட காட்சி ஒரே ஷாட் கொண்டது. அதுவும்‘டாப் அங்கிள்’. இதிலும் நார்மனின் அம்மாவின் முகம் காட்டப்படுவதில்லை.
இறுதி காட்சி வரை நாம் நார்மனின் அம்மா முகத்தைப் பார்ப்பதற்காகவே காத்திருக்கிறோம். நார்மனின் அம்மாவைப் பார்க்கும்போது அடையும் அதிர்ச்சி படத்தின் உச்சம்.
அதோடுஇந்தத் திரைப்படத்தில் மிகுந்த கவனத்துடன் ஒரு விஷயத்தை கையண்டிருக்கிறார்கள். அதாவது நார்மன் மேல் பார்வையாளர்களுக்கு பரிதாபம் மட்டுமே இருக்க வேண்டும்என்பது.மேரியின் சடலத்தைப் பார்த்ததும் அசூயைப்படும் நார்மன் சடலத்தை அப்புறப்படுத்துவதும், காருக்குள் எடுத்துப் போவதும், பின்பு அறையை சுத்தம் செய்வதும் முக்கியமாக நாற்பதாயிரம் பணத்தை அப்படியே காருக்குள் போட்டு எடுத்துப் போவதுமான காட்சியைத் தொடர்ந்து காரோடு சேர்த்து புதைகுழிக்குள் சடலத்தைத் தள்ளும்போது ‘அய்யோ பாவம்..மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா செய்த கொலைக்காக மகன் சிரமப்படுகிறான்’ என்றே நினைக்கத் தோன்றுகிறது. இது நிச்சயம் திரைக்கதையின் வெற்றியே.
ஏனெனில் நார்மன் மீதானபரிதாப உணர்வு நாவல் படிக்கையில் இந்த அளவுக்கு நமக்கு ஏற்படுவதில்லை. படத்தின் இறுதி காட்சி நாவலில் இல்லாதது. நார்மனின் மனோவியாதி பற்றி மருத்துவர் தரும் விளக்கத்தோடு நாவல் முடிகிறது. ஆனால் இதற்கு ஒருபடி மேலே போய் நார்மன் தனித்து சிறையில் இருக்கும் போது ‘அம்மாவாக’ இருப்பதாகக்காட்டியிருப்பதுதான் முக்கியம். இது மிகப்பெரிய நம்பகத்தன்மையை அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்படுத்தி விடுகிறது.
நாவல் முழுக்கவே நார்மனைப்பற்றி நாம் புரிந்து கொள்ள யூகங்களைத் தந்திருக்கிறார் ராபர்ட் ப்லாக். சில உதாரணங்களாய் அவன் எப்போதும் மனோவியல் புத்தகங்களைப் படிக்கிறவன் என்பதும், அம்மாவைத் திட்டிக் கொண்டிருக்கும்போதே அம்மாவை வெறித்தனமாக நேசிப்பதுமான அவனது மனோவோட்டம். ஆனால் இவை எதையும் விளக்கமாகக் காட்டாமலேயே நார்மன் கதாபாத்திரத்தின் தன்மையை விளக்க முடிந்திருக்கிறது என்பதும் இந்தப் படத்தில் நாம் வியக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது.
ஒரு திரைப்படம் யாரோ ஒருவரிடம் தொடங்கி வேறு ஒருவரின் கதையோடு முடிக்கப்படுவது என்பதும் திரைக்கதையின் மேல் இயக்குநர் கொண்டிருந்த அபார நம்பிக்கைதான்.
‘Psycho’ நாவலில் உள்ளது போலவே அதே போக்கில் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியும் தான். அப்படியான விறுவிறுப்பு கொண்ட நாவல் தான். ஆனால் நாவலின் சாராம்சத்தை உள்வாங்கி அதைப் பின்தொடர்ந்ததாலேயே இப்படியான கச்சிதமான திரைக்கதையை உருவாக்கி விட முடிந்திருக்கிறது. அது தான் இன்றளவும் ‘கிளாசிக் த்ரில்லர்’ வரிசையில்‘Psycho’ படத்தினைக்கொண்டாடவும் வைத்திருக்கிறது.
(கதை to திரைக்கதை புத்தகத்தின் ஒரு கட்டுரை இது. புத்தகம் வாங்க 9042887209)
https://www.commonfolks.in/books/d/kathai-to-thiraikkathai-mayoo-veliyeedu