மெய்யழகன் படம் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில் யாரேனும் என்னிடம் மிக உரிமையாகப் பேசுவார்கள். நானும் பேசுவேன். உள்ளுக்குள் எங்கோ பார்த்திருக்கிறோம் யார் இவர் என்று தோன்றிக் கொண்டே இருக்கும்..அவர்கள் அக்கறையுடன் பேசும் விதத்தினைப் பார்த்து ‘நீங்க யாருன்னு தெரியலியே” என்று கேட்கக் கூச்சமாக இருக்கும். இந்த சிறிது நேர தடுமாற்றத்தை படத்தின் மையக்கதையாகவே கொண்டு வந்திருக்கிறார்கள். பின்னோக்கி நினைவைத் திரும்பிப் பார்த்தலுக்கு எப்போதுமே ஒரு அழகுண்டு. அதுவும் இந்தப் படத்தின் பிரதானமாய் இருக்கிறது.
கதையில் எந்த ஏற்றமும் இறக்குமின்றி தருணங்களை வைத்து மட்டுமே படங்கள் வருவது தமிழில் எப்போதேனும் நிகழும் ஒன்று. இரண்டு கதாபத்திரங்கள் பழைய விஷயங்களை, அதுவும் அவர்கள் வாழ்க்கையில் தொடர்புள்ளவற்றைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏன் நம்மை ஈர்க்கின்றன என்றால், அவை எதோ ஒரு வகையில் நம்மோடு தொடர்புள்ளவையாக இருக்கின்றன. பழகிய ஊரை, வீட்டை விட்டு வேறு இடம் வருவதை அனுபவித்தவர்களுக்கு இந்தப் படம் நெருங்கிவிடும். தங்களை ஏமாற்றிய சொந்தங்கள் முகத்தில் விழிக்கவே கூடாது என்று நினைப்பவர்கள், இதற்காகவே விசேஷங்களுக்கு சென்று ‘தலை காட்டி’விட்டு வருபவர்கள், என சொந்த ஊரை விட்டு வெளியேறியவர்களின் மனநிலையை விலாவரியாகச் சொல்லிக் கொண்டே போனாலும் அந்த அனுபவங்களைக் கொண்டவர்களுக்கு அது எவ்வளவு தரப்பட்டாலும் அலுப்பு ஏற்படுத்துவதில்லை.
இந்தப் படம் இரு ஆண்களின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்லப்பட்டது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அனுபவங்களே இயக்குநர் சொல்ல நினைத்ததும். வேறு வழியே இல்லை போகத் தான வேண்டும் என்று ஊருக்குச் செல்லும் ஒருவர் அங்கு எதிர்பாராமல் சந்திக்கும் ஒரு நபரால் தன்னையே அறிந்து கொள்கிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன். ‘இப்படியெல்லாம் இருந்திருக்கேன்னு நீ சொல்லித் தான தெரியுது’ என்று அருள் திரும்பத் திரும்பச் சொல்கிறான்.
நம்முடைய பால்ய கால நண்பர்களை சந்திக்கிறபோது அவர்கள் மனதில் நம்மைப் பற்றிய சித்திரம் என்பது நாம் தொலைத்து விட்ட ஒன்றாக இருக்கும். நாமே மறந்ததாகவும் இருக்கும். ‘என்ன நடந்தாலும் சிரிச்சிட்டே இருப்பே’ என்று சொன்னால், அப்படியா என்று புன்னகைக்காமல் தீவிரமாகக் கேட்கும் நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருப்போம். எப்போது அந்த சிரிக்கும் மனதினை தொலைத்தோம் என்று நினைக்கத் தொடங்குவோம். சில மனிதர்களை, பொருட்களை, உடைகளை , ரசனைகளை என எவரேனும் நினைவுபடுத்துகிறபோது மனதில் ஒரு நெகிழ்ச்சி உருவாகும். அதைத் தான இந்த மொத்தப் திரைப்படத்தின் உணர்வாகக் காட்டியிருக்கிறார்கள். அது தான் நம்மை படத்தில் எது வேண்டுமானாலும் இறுதியில் சொல்லப்படட்டும், இந்தத் தருணத்தைப் பார்த்துவிடுவோம் என்று படத்தினைப் பார்க்க வைத்திருக்கிறது.
இது போன்ற படங்கள் கிளைமாக்ஸ் நோக்கி பரபரப்பாக நகர்த்தப்படுவது அல்ல. சமீப காலங்களில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களின் அதிக பட்ஜெட் படங்களில் கூட கதைக்குத் தேவைப்படுகிற க்ளைமாக்ஸ் ஆக இல்லாமல், பரபரப்புக்காக ஒட்ட வைக்கப்பட்டதாகவே மாறி வருகின்றன. கதையின் முடிவு என்னவாக சொல்லபடப்போகிறது என்று எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதே ஒரு க்ளைமாக்ஸ். மெய்யழகன் படத்தில் கூட அருளுக்குப் பேர் தெரிந்ததா இல்லையா என்கிற பதற்றம் கூட ஏற்படவில்லை. இவன் யாரென்று தெரியாமல் அருள் பழகியது இவனுக்குத் தெரிய வந்தால் அவன் அதை எப்படிக் கொள்வான் என்கிற இடம் தான் முக்கியமாகப்பட்டது.
அருளைப் பொறுத்தவரை எத்தனையோ வாய்ப்புகள் அவனுடைய பெயரையும் யாரென்ற அடையாளத்தையும் தெரிந்து கொள்ள இருந்தன. ஃபோன் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தங்கை புவனாவையோ, சொக்கு மாமாவையோ அழைத்துக் கேட்டிருக்கலாம். ‘கூடவே இருந்தே..அதனால தான் யார்கிட்டையும் கேக்க முடியல’ என்று சொல்வதெல்லாம் சும்மா பார்வையாளர்களுக்குத் தான். நான் இப்படி புரிந்து கொள்கிறேன். “பேர் தான…மெதுவாக் கேட்டுப்போம்” என்று அருள் நினைத்திருக்கலாம். ஆனால், “என் பேரை நீங்க சொல்லவேயில்லை” எனும்போது தான் அருளுக்கு குற்ற உணர்வு வருகிறது. அதன் பிறகு ஒருவரிடம் அழைத்துக் கேட்பதென்பது சந்தர்ப்பவாதம் என்று நினைத்திருக்கலாம்.
அத்தனை அன்பையும், மகிழ்ச்சியையும் ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு திருப்பிச் செய்ய வழியில்லாமல் போகையில் ஏற்படும் குற்ற உணர்வு அது. அன்பைப் போல குற்ற உணர்வைக் கூட்டுவது வேறொன்றும் இல்லை.
சில மிகைப்படுத்தல், உணர்ச்சியை வலியத் திணிக்கும் காட்சிகள் உண்டு தான். சில கேள்விகளும் உண்டு. தன் குழந்தைக்கு அத்தான் பெயரை வைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவன் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட அருளை சந்திக்கவோ, குறைந்தபட்சம் தொலைபேசியிலோ பேசாமல் ஏன் இருக்க வேண்டும் என்கிற அடிப்படைக் கேள்வி எழுகிறது. அற்புதமான தருணங்கள் என நினைத்து அதை மட்டுமே கூட்டிக் கொண்டே போவதும் சற்று அலுப்பாயத் தான் இருக்கிறது. “ஒரு படத்துல எத்தனை நல்லவங்களைத் தான் பாக்கறது’ என்று பூக்காரப் பெண் நெற்றியில் குங்குமம் வைக்கும்போது தோன்றியது.
முந்தைய படமான 96 மற்றும் மெய்யழகன் இரண்டிலுமே இயக்குநர் பிரேம்குமார் ஒரே விதமான கதை சொல்லல் முறையையே கொண்டிருக்கிறார். அவரது பலமும் அதுவே தான். கதாபாத்திரங்கள் வழியே அவர்களின் நினைவுகளை மீட்டெடுத்து அதில் அவர்களை உணர்வது என்கிற யுத்தி இரண்டு படங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது.
எளிமையான கதை என்று சொல்லிவிடலாம் தான. ஆனால் இந்த எளிமை என்பது தான் திரைப்படமாக மாறுகையில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும். எந்த நாடகத்தனமும் இல்லாமல் உணர்வுகளை மட்டுமே நம்பி கதை சொல்கையில் அது ஒட்டாமல் போய்விட்டது என்றால், மொத்தமும் வீணாகிவிடும். வழக்கமான திரைப்படங்களுக்கான திரைக்கதை கட்டமைப்பும் இல்லை என்பதால் எளிமையான கதை சொல்லல் என்கிற வகைக்குள் இது போன்ற படத்தை வைக்க இயலாது.
அரவிந்த்சாமி, கார்த்தி இருவருமே பொருத்தமாக செய்திருக்கிறார்கள். கார்த்தி கதாபாத்திரம் நான் சந்தித்த சிலரை நினைவுபடுத்திவிட்டது. மிக அற்புதமாக கார்த்தி நடித்திருக்கிறார். தமிழ் சினமாவில் ஒரு குறை உண்டு. வட்டார மொழியைப் பேசும் கதாநாயகர்கள் குறைவு. இந்தப் படத்தில் தஞ்சை மாவட்ட வட்டாரமொழியை நன்றாகப் பேசியிருக்கிறார் என்றே நம்புகிறேன். ஆனாலும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சொன்னால் தான் சரியாக இருக்கும்.
திரைப்படம் என்பது இப்படித் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை சில படங்கள் மாற்றி அதை வெற்றி பெறவும் செய்கிறபோது ஒரு நம்பிக்கை ஏற்படும். இந்தப் படத்தில் அந்த நிறைவு கிடைக்கிறது.
மனதில் உள்ளதை அப்படியே எழுதிட்டிங்க தீபா
மிக்க நன்றி லாந்தர்
Perfect..
முதல் வெர்ஷன் மெய்யழகன் கொஞ்ச நேரத்துல திகட்ட ஆரம்பிச்சது.
ஆனா காட்சிகள் ல அந்த காலத்துக்கு கூட்டிட்டுப் போன உணர்வு லீவ் நாள் ல பாட்டி வீட்டுக்கு போற மாதிரியான ஒரு உணர்வை கொடுத்தது.
குறிப்பா அந்த தெருவிளக்கு.. கார்த்தியோட அம்மா அந்த மொத்த வீட்டுல இருந்து பேத்து எடுத்திட்டுப் போற அந்த அம்மின்னு கார்த்தி அரவிந்த் சாமி இரண்டு பேரையும் தாண்டியும் அந்த படத்தை நம்ம நினைவை கிளறிவிடுறது வழியாகவும் பிடிக்க வைக்குது.
குறிப்பா அந்த சைக்கிள் ல ஒட்டுன ஸ்டிக்கர்.. சார் ரம்பா சார்.. ன்னு விவேக் சார் பேசுற மாடுலேசன் ல மைண்ட் வாய்ஸ் பேசவும் செஞ்சது
ரொம்ப நல்லா இருக்கு உங்களோட விமர்சனம் தீபா…
<3
மிக்க நன்றி ரேவா
அருள் நிலை எனக்கு பலமுறை ஏற்பட்டுள்ளது. சில உறவினர்கள் உரிமையாக முறை சொல்லி அழைத்து கொண்டாடுவார்கள். கடைசிவரை அவர்களிடம் நீங்கள் யார் என சங்கோஜத்தில் கேட்காமல் இருந்த அனுபவங்களும் உண்டு…. அருமையான கட்டுரை சகோதரி ..
மிக்க நன்றி