‘சிற்பம் தொன்மம்’ புத்தகத்தைத் தொடர்ந்து ஒரு கதை போல வாசிக்கவியலாது. அதே நேரம் நம்மை ஈர்க்கக்கூடிய மதிப்புவாய்ந்த புத்தகம் இது. நூலின் ஆசிரியர் திரு. செந்தீ நடராசன்.
நெல்லையப்பர் கோயிலுக்கு எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து போய்க் கொண்டிருக்கிறேன். ஓவியர் சந்ரு நான் படித்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு அங்கு நான் படிக்கையில் வருகை தந்திருந்தார். அவர் அப்போது நெல்லையப்பர் கோயில் பற்றி சிறப்புரை ஆற்றிய பிறகுதான்நெல்லையப்பர் சன்னதிக்கு முன்பு, உயர்ந்து நிற்கும் அற்புதமான துவாரபாலகர் சிற்பங்களைப் போய் நிமிர்ந்தே பார்த்தேன்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கிறபோது நான் அடைந்த வியப்புக்கும், மகிழ்ச்சிக்கும் அளவில்லை. தமிழில் சிற்பங்களைப் பற்றி இத்தனை நுணுக்கமான அதே நேரம் எளிமையான விளக்கங்களோடு ஒரு புத்தகம் வந்திருப்பது எத்தனை நல்ல விஷயம்!
மிக அரிதான, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 28 சிற்பங்களைப் பற்றிய தனித்தனிக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த சிற்பங்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை, கலையழகு, அதன் உடல்மொழி, அதன் வரலாறு, சிற்பத்தை எப்படி அணுக வேண்டும், அவை தமிழ்நாட்டுக்கு வந்த வரலாறு, புராணத் தொடர்பு, முக்கியமாய் தொன்மம் சார்ந்த தகவல்கள், மற்ற நாட்டில் இதோடு தொடர்புடைய தொன்மக் கதைகள்.. இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாழ்நாள் தேடல்.
நீண்ட நாட்களாக எனக்குள்ளிருக்கும் பல சந்தேகங்களுக்கு பதில் தந்திருக்கிறது இதன் வாசிப்பு.
ராமர் ஏன் தமிழ்நாட்டு கோயில்களில் மூலவராக அதிகம் இடம்பெறவில்லை என்று பதினைந்து வருடங்களுக்கு முன் என் அம்மாவிடம் கேட்டேன்.. இத்தனைக்கும் கம்ப ராமாயணத்தில் பல நூற்றாண்டுகளாகத் திளைத்தவர்கள் தான் தமிழ்நாட்டினர். அம்மா எனக்கு என்ன பதில் சொன்னார்கள் என்பது நினைவில்லை. கேள்வி மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.
எனக்கான விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் கோயில் சித்திர சபை மண்டபத்தில் உள்ள ஸ்ரீராமர், அனுமர் சிற்பத்தை முன்னிறுத்தி விளக்கங்களைத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
அதோடு தாச அனுமன் – வீர அனுமன் ஆனதன் வளர்ச்சி…
யட்சிகள் குறித்த தகவல்கள்
சைவக் கோயில்களில் சண்டிகேசுவரர் சன்னதி முன்பு கைத் தட்டி விட்டுப் போகும் பழக்கத்திற்கு பின்னணியில் உள்ள சோழர் கால வரலாறு..
கோயிலில் பாவை விளக்காக நிற்கும் பெண் சிற்பங்களில் மாதிரிகளாக இருந்தவர்கள் பற்றிய செய்தி
ஆடல் அரசன் – ஆடலரசி என்கிற தலைப்பில் சொல்லப்பட்ட தகவல்கள்..
யோகினி
ருத்ர கணிகை
வேழச்செல்வி
பாகுபலி
கங்காளநாதரும், பிச்சாடனரும்
ரதி- மன்மதன்
மகிஷாசுரமர்த்தினி
இப்படி ஒவ்வொரு சிற்பத்தின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
புகைப்படங்கள் யாவையும் திரு.தமிழினி வசந்தகுமார் மற்றும் கோவில்பட்டி திரு.மாரிஸ் இருவரும் எடுத்திருக்கிருக்கிறார்கள் என்கிறார் இதற்கு அணிந்துரை எழுதியிருக்கிற ஆய்வாளர் அ.கா. பெருமாள்.
ஆழ்மனத் தேடலும், பயணமும், வாசிப்பும், விவாதமும், பேரார்வமும், ரசனையும், புராண, தொன்மங்கள் குறித்த பேரறிவும் ஒரு சேர பெற்றிருந்தால் மட்டுமே இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் எழுதும் சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
செந்தீ நடராசன் அவர்களின் உழைப்பும் , ரசனையும் இதனுள் செல்கையில் மட்டுமே உணரக்கூடியவை.
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்