ரேச்சல் மாரிஸன்

1
480

Mudbound என்றொரு படம். 2017ம் வருடத்தில் ஆஸ்கருக்காக பல்வேறு பிரிவுகளுக்குக் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் இயக்குநர் டீ ரீஸ். இந்தப் படத்திற்காக டீ ரீஸ் , ரேச்சல் மாரிஸனை ஒளிப்பதிவாளராக்கியிருந்தார். இரண்டு பெண்கள் சேர்ந்து உருவாக்கிய படம் என்பதும் காத்திருந்து இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது. படம் பார்த்து முடிந்ததும் ஒளிப்பதிவு செய்திருந்த  ரேச்சல் மீது பெரும் மதிப்பு உருவாகியிருந்தது. ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் இது. அந்தக் கிராமம்தில் இரண்டே குடும்பங்கள். அவர்களுக்கு இடையில் இருப்பதெல்லாம் நிலமே தெரியாத சேரும் சகதியும்..இந்தக் கதையில் முழுவதுமாக நம்முடன் சேறும சகதியும்  பயணிக்கும், கதாபாத்திரங்கள் மீது எப்போதும் படிந்திருக்கிற சேறு தான் கதையே. இதனை நம்மை உணரவைக்க ரேச்சல் எடுத்துக் கொண்ட பொறுப்பு தான் அவரை எனக்குப் பிடிக்க வைத்தது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது இன்னும் அவர்  ஆச்சரியங்களைத் தந்து கொண்டே இருந்தார். எனக்குப் பிடித்த படமான Black Panther படத்துக்கும் ஒளிப்பதிவு அவரே. அதோடு, What Happened MissSimone?” என்கிற ஆவணப்படத்தினை நெட்ஃப்ளிக்சில் பார்த்தபோது அதன் ஒளிப்பதிவாளர் ரேச்சல் மாரிசன் என்று தெரிய வந்தது. இதற்காக அவர் எம்மி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து அவரது பணிகள் பெருமை கொள்ளதக்கவையாக இருக்கின்றன. Dope, Fruitvale Station படங்களுக்கும் ஒளியமைப்பு செய்திருக்கிறார்.

சிறு வயது ரேச்சல் வீட்டில் ஒரு புகைப்பட கேமரா இருந்திருக்கிறது. அவரது அம்மா வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை அந்தக் கேமராவினால் புகைப்படமெடுக்கும் போது உடனிருந்து பார்த்த ரேச்சலுக்கு  அதன் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தனது எட்டாவது வயதில் புகைப்படம் எடுக்கத் தொடங்குகிறார். அந்த ஆர்வத்தில் நியூயார்க் பல்கலைகழகத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை முடிக்கிறார். ஒன்று ஒளிப்பதிவுக்கானது மற்றொன்று இயக்குநருக்கானது. இரண்டில் எதைத் தனது தொழிலாக மாற்றுவது என்று யோசித்தபோது அவருக்கு ஒளிப்பதிவின் மீதே ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

ஆவணப்படங்களை இயக்குகிறார். இதற்காக நாடு நாடாகச் சுற்றுகிறார். இப்படி சுற்றி சுற்றிப் படமெடுப்பதில் அவருக்கு ஒரே மகிழ்ச்சி. ஆனால் 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பினனர் அவருடைய ஆவணப் படப் பயணத்தில் தொய்வு ஏற்பட்டுவிட்டது. அந்த நேரம் ஒரு தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு வருடம் அதில் வேலை பார்த்து சீசன் 1ஐ முடித்தபோது தொடர்ந்து அடுத்த சீசனையும் ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகள் இல்லை, நல்ல வேலை வாய்ப்பு , சம்பளம் நேரத்துக்கு வந்துவிடும், வசதியான வாழ்க்கை எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாக ரேச்சலுக்குத் தோன்றுகிறது. அந்தக் குறை என்பது அந்த வேலையில் சவால் இல்லை என்பது தான் என ரேச்சலுக்குப் புரிகிறது. ஒரே மாதிரியான லைட்டிங்.. கேமரா கோணங்கள் என எல்லாம் சொல்லி வைத்தாற்போல் இருப்பது அவருக்கு ஒரு அலுப்பைத் தந்திருக்கிறது. ஒரு கதையை ஒளிப்பதிவு செய்வதற்காகத் தான் பட்டப்படிப்பினைப் படித்திருக்கிறோம். ஒரு ஸ்டுடியோவுக்குள் ஒரே விதமான வேலையைச் செய்ய எதற்கு பல்கலைகழகத்தில் படித்திருக்க வேண்டும் என்று தோன்ற அதே நேரம் ஒரு விளம்பரப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு ரேச்சலுக்கு வருகிறது. அது ஒரு பெரிய நிறுவனத்தின் விளம்பரப்படம். ரியாலிட்டி ஷோவின் தயாரிப்பாளரிடம் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு அந்த விளம்பரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று கேட்டிருக்கிறார். அவர் “அதெல்லாம் முடியாது..போறதுன்னா ஒரேடியா போயிடு “என்று சொல்ல, ஏற்கனவே சலிப்பில் இருந்த ரேச்சல் “சரி..வேலையை விடறேன்..மீதி வேலையை வேற ஆளை வச்சு முடிச்சுக்கோங்க..வாழ்த்துகள்” என்று வந்துவிட்டார்.

அந்த விளம்பரப்படமும் முடிகிறது. அடுத்து வேலை வரப்போகிறது என்று காத்திருந்தால் எதுவும் வரவும் இல்லை. யாரிட்ம் எப்படி வேலைக்காக அணுகுவது என்றும் தெரியவில்லை. ஒரு வருட காலம் எந்த வாய்ப்பும இல்லாமல் இருந்திருக்கிறார். கையிருப்பு கரைகிறது. நாம் சென்று ஒவ்வொரு இயக்குநரையும் தயாரிப்பாளரையும் தேடிப்போய் வாய்ப்பு கேட்கலாமா என்று நினைத்தபோது முந்தைய வேலையாக ரியாலிட்டி ஷோவில் ஒளிப்பதிவு செய்தேன் என்று சொன்னாலே ‘நீ வேலைக்கு ஆக மாட்டே”என்று அனுப்பி விடுவார்கள்..வேறு என்ன செய்வது? என்று யோசித்தபோது தான் முதல் வாய்ப்பு கிடைக்கிறது.

ரேச்சலின் அடையாளம் என்று சொல்லப்படுவது அவருடைய ஒளிப்பதிவில் அவர் காட்டுகிற இயல்புத்தன்மை. ஆவணப்படம் எடுப்பதில் தேர்ந்தவராக ரேச்சல் இருப்பதால் அதே பாணியை அவர் படங்களுக்கும் கொண்டு வந்துவிடுவார். அது பார்ப்பதற்கு அத்தனை யதார்த்தமாக இருக்கும். தான் ஒளிப்பதிவு செய்யும் படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும் மக்கள் படத்தின் உணர்வுகளையும், அது சொல்ல வந்ததையும் தான் பேச வேண்டுமே தவிர படத்தின் ‘மேக்கிங்’ அருமை என்று சொன்னால், தான் தோற்றுப் போனதாக உணர்வதாகச் சொல்கிறார். ஒளியமைப்பு என்பது கதை சொல்லலின் ஒரு பகுதி அல்ல, அது தான் அதன் கண்ணாடி என்பது ரேச்சல் பின்பற்றும் விதி. “என்னுடைய அப்பாவுக்குக் கடைசி வரை நான் சினிமாவில் எந்த மாதிரியான வேலையைப் பார்க்கிறேன் என புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர் இறப்பதற்கு முந்தைய நாள் கூட நான் என்ன செய்கிறேன் என்று தான் என்னிடம் கேட்டார். நான் சொன்னேன், ‘இயக்குநரின் கனவுகளுக்கு வடிவம் தருகிறேன்’ என்று”. ஒளிப்பதிவென்பது இயக்குநரின் கனவுக்கு வடிவம் தருவது என்று தான் ரேச்சல் எப்போதும் நம்புவது. 

இது தான் அவருக்கு முதல் பட வாய்ப்பினைப் பெற்றுத் தந்திருக்க்கிறது. படத்தின் பெயர் Sound of My voice” இந்தப் படம் இரு ஆவணப்பட இயக்குநர்கள் சந்திக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் பற்றியது. த்ரில்லர் வகைப் படம். இது ரேச்சலுக்கு பெயர் பெற்றுத் தந்தது. அதன் பின் அவரே எதிர்பாரத வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. Friutvale station  படத்தின்  இயக்குநருக்கு தன்னுடைய படம் ஆவணப்படம் போல அமைய வேண்டும் என தீர்மானம் இருந்தது. ரேச்சலைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர் தனது படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய அவரை அணுகினார். ஒரு மெட்ரோ ஸ்டேஷனில் நடைபெறும் சம்பவம் தான் கதை. அந்த மெட்ரோ ஸ்டேஷனில் இரவு நான்கு மணிநேரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதி இருந்தது. அந்த நேரத்துக்குள் படத்தின் காட்சிகளை எடுப்பதென்பது சவாலானது. முன்னேற்பாடுகளும் துல்லியமானத் திட்டமும் தேவை. ரேச்சல் மிகச் சிறப்பாக அதை சாத்தியப்படுத்தினார்.

அடுத்து அவருக்கு பெரும் பேரைப் பெற்றுத தந்தது Black Panther. ஆவணப்படம் போல் எல்லாம் எடுக்க முடியாது. விஷுவல் எபக்ட்ஸ் அதிகமுள்ள படம். இதுவரை ரேச்சல் செய்திராத களம். அதிக பட்ஜெட். இதற்கும் முறையாகத் திட்டமிட்டுக் கொண்டார். படம் பேசப்பட்டது. வசூலும் அதிகம் கிடைத்தது.

ரேச்சலின் இந்த விடாப்பிடியான குணம் தான் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அவருக்கு உருவாக்கிக் கொடுக்கிறது. Mudbound படத்துக்கான ஆஸ்கர் பரிந்துரை வரை ரேச்சல் பயணித்தது சாதனையே. ரேச்சலின் தனிச்சிறப்பு என்பது எந்த வகையான படங்களாக இருந்தாலும் தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்வதாக முடிவெடுத்திருப்பது. 

ஒருவர் தனது கனவுக்காகவும் இலட்சியத்துக்காகவும் காத்திருக்கத் தான் வேண்டும் என்பது ரேச்சல் எப்போதும் சொல்வது. இதற்கு காரணமாக அவர் சொல்வது “வெற்றி ஒரே இரவில் வந்துவிடுவதில்லை, குறிப்பாக இதைச் சொல்ல முழுத் தகுதியும் அவருக்கு உண்டு. வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று சொல்லும் அவர் தான், வாய்ப்புக் கிடைத்த பின் தனது உடல்நிலையைக் காரணம் காட்டாமல் வேலை செய்தார். Black Panther படத்தின் போது ரேச்சல் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமுற்ற வயிறுடன் கேமராவை அவர் தோளில் தூக்கிக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் மிகப் பிரபலமானது. அது சொன்ன செய்திகள் ஏராளம்.

ரேச்சல் இயக்கத்தில் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிறது. “எதை நம்மால் சொல்ல முடியாதோ, அதை மௌனத்தால் சொல்லிவிடுகிறோம்” இது Mudbound படத்தில் வருகிற வசனம். ரேச்சல் மாரிஸனுக்கு மிகப் பிடித்த வசனமும் கூட. அது அவருக்கும் பொருந்துகிறது என்பது தான் அவரது ஒற்றை வரி வாழ்க்கைக் குறிப்பு..

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rjgopaalan
Rjgopaalan
8 months ago

Excellent mam.படம் ரிலீஸ் ஆனதும் கூட ஒரு பதிவு போடுங்க. காத்திருக்கிறோம்.