தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம்

2
783

இது 115 வருடத்துக்கு முன்பு கேரளாவில் நடந்த சம்பவம். இப்போது வரை அதன் பாதிப்பு கேரள மக்களின் மனங்களில் தங்கியிருக்கிறது. இன்றைக்கும் கூட பெண்கள் தனக்கு நேர்ந்த சாதாரண பிரச்சனைகளைக் கூட வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவம் நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும். பிரமிப்பையும் தந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் உள்ள அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பெயர் தாத்ரி குட்டி.

தாத்ரிகுட்டி நம்பூத்ரிக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். தாத்ரியின் கதையை சொல்வதற்கு முன்பு அப்போதைய நம்பூதிரி இனப் பெண்களின் வாழ்க்கையைப் பார்த்தாக வேண்டும். வாழும்போதே நரகத்தில் சிக்கிக் கொள்வதை அப்போதைய நம்பூதிரிப் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இனத்தில் பிறந்த பெண்களுக்கு அந்தர்ஜனம் என்று பெயர். அந்தர் என்றால் சமஸ்கிருதத்தில் உள்ளே என்று அர்த்தம். வீட்டினுள்ளே வாழும் பெண்கள் என்பது இவர்களது அடைமொழி. வீட்டில் உள்ளே வாழ்வது என்பதை விட எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதே வேதனையளிக்கும் விஷயம். வீட்டினுள் சமையலறையில் மட்டுமே இருக்க வேண்டும். தனியாக வெளியில் எங்கும் செல்லக்கூடாது. அப்படியே கூட்டமாக சென்றாலும் கையில் ஒரு பனையோலை வைத்துக் கொள்ள வேண்டும். கொதிக்கும் வெயில் காலம் என்றாலும் வெள்ளை துணியைப் போர்வை போல் தலையில் இருந்து கால் வரை இழுத்துப் போர்த்திக் கொள்ள வேண்டும். வேறு ஆண்கள் எதிரில் வந்தால் குடையால் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். சரி, இதையெல்லாம் கூட சகித்துக் கொள்ளலாம். அவர்கள் சகித்தும் போனார்கள். அடுத்தடுத்து இந்தப் பெண்கள் மேல் வைக்கப்பட்ட அழுத்தங்கள் தான் இன்னும் கொடூரமானது.

நம்பூதிரிப் பெண்கள் எல்லோருக்கும் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள். அதற்கான முயற்சி கூட எடுக்க மாட்டார்கள். நம்பூதிரி குடும்பங்களில் மூத்த ஆண் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். மூத்த ஆண் மகனை மூசாம்பூரி‘’ என்பார்கள். ஒருவேளை மூசாம்பூரிக்கு உடல் நிலை சரியிலாமல் போனாலோ, வாரிசு தருவதில் சிக்கல் இருந்தாலோ தம்பிகளுக்கு தனது மனைவியை அவர் விட்டுத் தரலாம்.

அதே போல் மூசாம்பரி எத்தனைத் திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதனால பல நம்பூதிரி இன மூத்த ஆண்கள் எண்பது வயதான பின்னும் கூட பதினான்கு வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வது சகஜமாக இருந்தது.

நம்பூதிரியின் மனைவிகள் பலரும், நம்பூதிரி இல்லத்தில் திருமணம் செய்து கொடுக்காத பெண்களும் ஒரே இடத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்வதற்கே கஷ்டமாய் இருக்கும் விஷயங்களும் அரங்கேறின. அதில் ஒன்று நீச கர்மம் எனபது. திருமணமாகாத நம்பூதிரிப் பெண் வயதாகி, தோல் சுருங்கி இறந்து போன பின் ஒரு சடங்கை நிகழ்த்தினார்கள். சாதியில் தாழ்த்தப்பட்டவர் என ஒதுக்கியிருக்கும் இனத்தில் இருந்து ஒரு ஆணை அழைத்து இறந்த பெண்ணின் உடலுடன் உறவு வைத்துக் கொள்ள சொல்வார்கள். இதற்கு நீச கர்மம்என்று பெயர். இப்படிச் செய்வதால் அவளது ஆன்மா கரையேறும் என்றும் சொல்லப்பட்டது.

இப்படியான அவலங்களை சகித்துக் கொண்டு தான் நம்பூதிரிப் பெண்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர். தங்களுக்கென குரல் கொடுக்க ஒருவர் கூட இல்லையே என்று ஆற்றாமையிலும், விதியே என்றும் வாழ்க்கை அவர்களுக்குப் போய்க் கொண்டிருந்தது. வெளியுலகில் மற்றப் பெண்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுகூட தெரியாத் நிலையில் தான் ஆண்களும் அவர்களை வைத்திருந்தார்கள்.

நம்பூதிரிப் பெண் வேறு ஒரு ஆடவனோடு பழகுகிறாள், முறை தவறி நடந்து கொண்டால் என்ற விஷயம் தெரிய வந்தாலே போதுமானது உடனே வரிந்து கட்டிக்கொண்டு விசாரணையைத் தொடங்கி விடுவார்கள். விசாரணைக்கு வெறும் வதந்தியே கூட போதுமானது. இந்த விசாரணைக்குப் பெயர் ஸ்மார்த்த விசாரம்’. ஒவ்வொரு பகுதியிலும் இதற்கென்று ஒரு வழக்கு விசாரிப்பவரை அப்போதைய மகாராஜா நியமித்திருந்தார். வழக்கு விசாரிப்பவருக்கு ஸ்மார்த்தர் என்று பெயர். அவருக்குக் கீழ் வழக்கை விசாரிக்க ஒரு குழு உண்டு. இந்தக்குழுவினர் குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணிடம் எப்படி வேண்டுமானாலும் கொச்சையாக கேள்வி கேட்கலாம். விசாரணை என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாம். அவள் குற்றமே செய்யாவிட்டாலும் முறை தவறியதாக ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும். அப்படி ஒப்புக் கொள்ள வைப்பது அது ஸ்மார்த்தக் குழுவினரின் வெற்றியாகக் கருதப்பட்டது. ஒவ்வொரு நாளும் விசாரணை முடிந்ததும் குடம் சாட்டப்பட்ட பெண்ணின் வீட்டினர் விசாரணைக் குழுவுக்கு விருந்தளிப்பார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவுடனேயே அந்தப் பெண்ணை இருளான தனியறையில் அடைத்து விடுவார்கள். தண்ணீர். உணவு எதுவும் அவளுக்குத் தரக்கூடாது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களை அவள் இருக்கும் அறையில் விடுவார்கள். அது அவளை ஒன்றும் செய்யவில்லை என்றால் அவள் குற்றமற்றவள். அதே போல் ஜமுக்காளத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றி மாடியிலிருந்து கீழ் போடுவார்கள். காயம் ஏதுமின்றி உயிர் பிழைத்தால் அவள் நிரபராதி. இந்த விஷப் பரிட்சையில் மாட்டிக்கொள்ளும் பெண் குற்றவாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்படித் தப்பிக்க முடியும்? ஆனாலும் தொடர்ந்து பல வருடங்கள் இதை நடைமுறைப்படுத்தியே வைத்திருந்தது அந்த இனம். குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ, கனத்த சந்தேகம் ஏற்பட்டாலோ அந்தப் பெண்ணை சாதனம்என்று தான் அழைக்கப்படவேண்டும். குற்றம் நிரூபணமானால் உறவினர்கள் அவளை வீட்டைவிட்டு வெளியேத் தள்ளி, தலை மூழ்கி, பிண்டம் வைத்து விடுவார்கள். அதன் பின் அவள் இறந்ததற்கு சமானம். அந்த சாதனத்தையார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அவளைப் பற்றி சமூகம் அதன் பின் கவலைப்படாது.

இந்த மாதிரியான ஸ்மார்த்த விசாரணைகள் மாதக்கணக்கில் , வருடக்கணக்கில் எல்லாம் கூட நடந்திருக்கின்றன. கவளப்பாறை என்ற ஊரில் இருந்த ஒரு நம்பூதிரிப் பெண் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தால் அதன் விசாரணை முப்பத்தைந்து வருடங்கள் நீட்டிக்கபட்டன. கடைசியில் அவள் குற்றமற்றவள் என்று தீர்ப்பு சொன்னது விசாரணை சபை. ஆனால் அந்த முப்பத்தைந்து ஆண்டுகளும் அவள் தனிமையில் இருளறையிலேயே தான் கிடத்தப்பட்டிருந்தாள்.

இந்த நேரத்தில் தான் தாத்ரிகுட்டியின் மேல் விசாரணை எழுந்தது. தாத்ரி குட்டி குன்னங்குளம் ஊரில் பிறந்த பெண். அவளுடைய வீடு கல்பகச்சேரி மனை என்று அழைக்கப்பட்டது. சாவித்திரி என்பது அவளுக்கு வைத்த பெயர். மிக அழகி. அவளுக்கு குறியேடத்து ராமன் நம்பூதிரி என்பவருடன் திருமணம் நடந்தது. ராமன் நம்பூதிரிக்கு நம்பியாத்தான் என்று ஒரு அண்ணன் இருந்தார். வீட்டுக்கு மூத்தவரான நம்பியாத்தானுக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால் திருமணம் தம்பிக்கு நடந்தது. ஆனால் திருமணத்தின் முதல் நாள் இரவின்போது தாத்ரியின் அறைக்கு வந்தது அண்ணனான நம்பியாத்தான். வெறுத்துப் போனாள் தாத்ரி. தொடர்ந்து தாத்ரிக்கு அந்த வீட்டில் பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கின. இதற்கு பழிவாங்க சந்தர்ப்பம் எதிர்பார்த்திருந்தாள் தாத்ரி. அவளது அழகையே ஆயுதமாக்கினாள். வீட்டுக்கு வருகிற வெளி ஆண்களிடம் தானாகவே போய்ப் பழகத் தொடங்கினாள். அவர்களிடம் நெருங்கிப் பழகி ஞாபக சின்னமாக அவர்களின் பொருளை வைத்துக் கொண்டாள்.

விஷயம் வேகமாகப் பரவியது. தாத்ரி குட்டியின் நடத்தை சரியில்லை என்பதாக புகார் ஸ்மார்த்த சபைக்கு வந்தது. விசாரணை ஆரம்பமானது. மொத்தம் நாற்பது நாட்கள் விசாரணை நடந்தது. முப்பத்தி ஒன்பது நாட்களும் தாத்ரி மௌனமாகவே இருந்தாள். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நாற்பதாவது நாள் தாத்ரி குட்டி மௌனத்தைக் கலைத்தாள். அந்த மௌனக் கலைப்பு தான் இன்று வரை கேரளாவில் முக்கிய சம்பவமாக, வரலாற்றைத் திருப்பிப் போட்ட நிகழ்வாக பதிவாகியிருக்கிறது.

தன்னை மட்டும் குற்றவாளி என்று சொல்லும் ஸ்மார்த்த சபையின் முன்பு அவளிடம் தவறாக நடந்து கொண்ட, தான் விரும்பி ஏற்றுக்கொண்ட ஆண்களின் பெயர்களை வரிசையாக சொன்னாள். ஸ்மார்த்த சபை அதிர்ந்தது. காரணம் தாத்ரி சொன்ன பெயர்களில் பெரும்பாலும் சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தனர். இன்னும் மோசமானதாக அந்தப் பட்டியலில் தாத்ரியின் அப்பா மற்றும் சகோதரன் பெயரும் கூட இருந்தது. சபையின் முன்பு ஆதாரங்களை எடுத்து வீசினாள் தாத்ரி. இப்போது சபை மௌனமானது.

தாத்ரி  சொன்ன ஆண்களின் பெயர் மொத்தம் அறுபத்தி நான்கு. இது தவிர அறுபத்தி ஐந்தாவதாக ஒரு ஆண் இருக்கிறான். அவன் பெயரையும் நான் அறிவிக்க வேண்டுமா என்று சபையை நோக்கி கேள்வி கேட்கிறாள் தாத்ரி. சபை இப்போதும் மௌனம் கலைக்கவில்லை. தன்னுடைய பணிப்பெண்ணிடம் ஒரு முத்திரை மோதிரத்தைக் கொடுத்து சபையினர் முன் வைக்கச் சொல்கிறாள். அந்த மோதிரத்தைப் பார்த்து சபை அதிர்கிறது. அந்த மோதிரத்திற்கு சொந்தக்காரர் பெயரை தாத்ரி அறிவிக்கவில்லை. ஆனால் மோதிரமே எல்லாவற்றையும் சொல்லியது. அது அப்போதைய மகராஜாவின் மோதிரம் என்றும் இல்லை மந்திரியினுடையது என்றும் பல்வேறு ஊகங்கள் இருக்கின்றன. இன்று வரை அது யாருடைய மோதிரம் என்பது புதிராகவே இருக்கிறது.

தாத்ரிகுட்டி மீதான ஸ்மார்த்த விசாரணை தான் கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட கடைசி விசாரணை. அதன் பின் இப்படியொரு விசாரணை சபையை ஏற்படுத்த யாருக்கும் தைரியம் வரவில்லை. காரணம், நாற்பதாவது நாள் தாத்ரி சபையினரை நோக்கி எழுப்பிய கேள்விகளும், அவளிடம் நெருங்கிய ஆண்களின் பெயர்களும் தான்தாத்ரி அன்றைய தினம் எழுப்பிய மிக முக்கியமான கேள்வி, “விசாரணை, வழக்கு என்பதெல்லாம் குடும்பப் பெண்ணின் தகுதியை நிரூபிக்கத் தான். எப்போது இங்கே வரும் எங்களை தாசியாக முடிவெடுத்துவிட்டீர்களோ, ஒரு தாசியின் தகுதியைத் தீர்மானிக்கும் அருகதை சபைக்கு எப்படி வரும்?” என்று அவள் கேட்டபோது அந்தக் கேள்வியின் உக்கிரம் தாங்காமல் அனைவரும் அமைதியானார்கள். அதன் பிறகு அவர்கள் விசாரணை என்ற பெயரில் எந்தக் கூத்தையும் நிகழ்த்தவில்லை.

தாத்ரி அதன் பின் ஒதுக்கி வைக்கப்பட்டாள். ‘சாதனமானதாத்ரி என்ன ஆனாள் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் இருக்கின்றன. தற்கொலை செய்துகொண்டாள் என்றும், தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு ஒரு ஆங்கிலோ இந்தியரைத் திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் உலாவுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட அறுபத்தி நான்கு ஆண்களும் நாடு கடத்தப்பட்டார்கள்.

ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் தாதிரியின் மீதான விசரரனை அவள் மேல் வெவ்வேறு விவாதங்களை எழுப்பியது. ஆண்களை மயக்கியப் பெண் என்று ஒருகாலகட்டத்தில் பேசப்பட்டாள்அந்தர்ஜனப் பெண்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவள் என்று கொண்டாடப்பட்டாள், அத்தனைப் பேரின் முன்பும் துணிச்சலுடன் கேள்வி கேட்டப் பெண் என்று பாராட்டப்பட்டாள். இன்று வரை தாத்ரியின் வாழ்க்கை பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாத்ரியின் வாழ்வை முன்வைத்து தொடர்ந்து மலையாளத்தில் எழுதப்பட்டு வருகிற ஏராளமான கவிதைகளும், நாவல்களும், சிறுகதைகளும், நாடகங்களுமே அதற்கு சாட்சி.

நாடு கடத்தப்பட்ட அறுபத்தி மூன்று ஆண்களில் பெரும்பாலானவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. சிலரைப் பற்றிய தகவல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதில் இருவரின் வாழ்க்கை மட்டும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒருவர் கதகளிக் கலைஞரான காவுங்ஙல் சங்கர பணிக்கர். இவருக்கும் தாத்ரிகுட்டிக்கும் உடல் கடந்த காதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. தான் தவறு எதுவும் செய்யவில்லை என்பதால் எந்த அரசர் தன்னை நாடு கடத்தினாரோ அதே அரசரிடம் கதகளிக் கலைக்காக விருது பெறுவேன் என்று சபதம் செய்தார்.

அறுவடை முடித்த வயல்களைத் தேடித் தேடி கதகளியை அரங்கேற்றினார். அதுவரை கோயில்களிலும், அரண்மனைகளிலுமே நிகழ்த்தப்பட்ட கலையை ஒரு மனிதன் தங்களுக்காக பொதுவெளியில்  நிகழ்த்துகிறார் என்பது மக்களிடையே அவருக்கு செல்வ்வாக்கைப் பெருக்கியது. ஆரம்பத்தில் அவருக்கு குடிக்கவும், சாப்பிடவும், தூங்கவும் ஏற்பாடு செய்து தராமல் முகம் திருப்பிய மக்கள் அவரை மெதுவாக ஏற்றுக்கொண்டனர். தவிர்க்க முடியாத கலைஞராக மக்கள் மத்தியில் மாறிய சங்கர பணிக்கர் அவர் சபதமிட்டப்படியே மகாராஜாவிடம் விருது பெற்றார். அப்போதிலிருந்து தான் கதகளி பொதுமக்களின் கலையாக மாறியது.

இராண்டாவது நபர் ஒரு மாஜிஸ்ட்ரேட். திருச்சூரைச் சேர்ந்த அவர் திருமணமானவர். தாத்ரியின் விசாரணையில் இவர் பெயரும் இருந்ததால் குடும்பம் அவரை விலக்கி வைத்தது. பாலக்காட்டில் ஒரு பெண்ணை மணந்துகொண்டு இலங்கைக்கு குடியேறுகிறார். அங்கு சாதாரண வேலையே கிடைக்கிறது.  அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள். சில  வருடங்களில் இறந்தும் போகிறார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் தமிழ்நாட்டுக்கு வருகிறார். மிகவும் சிரமப்பட்டு பிள்ளைகளை வளர்க்கிறார். இருவருமே திரைப்படத்துறைக்கு வருகிறார்கள்.. அதில் ஒருவர் கதாநாயகனாக ஆகிறார்.  தமிழக அரசியலின் மையமாகவும் மாறுகிறார். இந்த சம்பவத்தை மலையாள இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளரான, அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த எம். கோவிந்தன் பதிவு செய்திருக்கிறார்.

‘தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம் ஏற்டுத்திய மிகப்பெரிய மாற்றம் கேரளாவில் இப்போது வரை தொடர்கிறது. தாத்ரிகுட்டியை கலாசார குறியீடாக மாற்றியது வி.டி பட்டத்திரிபாடு தான். இவர் தாத்ரிகுட்ட்டியை மையமிட்டு அந்தர்ஜனங்களின் பிரச்சனைகளை முன்வைத்து எழுதிய நாடகங்கள் அப்போதைய இளைஞர்களை நம்பூதிரிகளை நோக்கி முதன்முதலாக கேள்வி கேட்க வைத்தன. பெண் முன்னேற்றம் போன்றவை மட்டுமல்ல, மனுநீதிக்கு எதிரான குரலாகவும் அது மாறியது. ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் போன்ற அரசியல் ஆளுமைகள் இந்த நேரத்தில் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள்.

கேரளா தன் முகத்தை மாற்றிக் கொண்ட தருணம் இது. ஒரு பெண்ணின் கேள்வி என்ன செய்ய முடியும் என்றால், அது வரலாற்றை மாற்ற முடியும். நீதியின் முகத்தை நேராக்க முடியும். முக்கியமாக தவறுகள் திரும்பி நடக்காமல் இருக்க சமூகத்தையே திசை மாற்ற இயலும். தாத்ரிகுட்டி என்ன ஆனார் என்கிற கேள்விக்கு பதிலாக தோன்றுவதெல்லாம், அவர் வரலாறு ஆனார் என்பதாகவே சொல்ல இயலும்.

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
சாவித்திரி கண்ணன்
சாவித்திரி கண்ணன்
1 year ago

பெண்களுக்கான விடுதலை ஒரு பெண்ணாலே சாத்தியமாகி உள்ளது. அற்புதமான பதிவு. கடைசியாக சொல்லப்பட்டது யார் என்பதும் புரிந்தது.