ஊறா வறுமுலை

0
223

குதிரை கனைக்கும் அரவம் மிக அருகில் கேட்டது. பேச்சி உள்ளுக்குள் பதறி எழுந்தாள். எதிரில் எண்ணெயில் மினுங்கிய குதிரை நின்று கொண்டிருந்தது. ஆராட்டப்பட்ட மஞ்சள் நீர்த்துளிகள் இன்னும் அதன் மீது உலர்ந்திருக்கவில்லை. சந்தனமும், பூவுமாக உடலில் வாங்கியிருந்தது. பேச்சிக்கு கல் குதிரை கனைத்திருக்காது என்று தெரியும். ஆனாலும் அதையே பார்த்தாள். அது தன் முகத்தை எஜமானியின் திசை நோக்கி கொடுத்திருந்தது. செதுக்கப்பட்ட அதன் அகலக் கண்களின் ஒரு பகுதி தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாய் பேச்சி உணர்ந்தாள். மற்றொரு கண் சுற்றிலும் கிடந்த வனாந்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். கனவில் துல்லியமாய்க் கேட்ட குதிரையின் கனைப்பையும் கனவினையும் ஆராய்ந்தாள். அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அது குளிர்ந்த சதுப்பு நிலம் போன்றதான பகுதி. அவள் தன் முதுகு குளிரக் கீழே கிடந்தாள். எந்த ஒலியுமின்றி சற்று தூரத்தில் கருத்த நிறமுள்ள குதிரை அவளை நோக்கி வந்ததை அவள் அறிந்தாள். உடலில் சிறு அசைவுமில்லை. குதிரை அருகில் வருகையில் மெல்லிய ஓட்டம் கொண்டது. அவளைத் தன் நான்கு கால்களின் ஊடாகத் தாண்டி பாய்ந்தது. அப்படிப் பாய்ந்ததை பேச்சி கனவுக்குள் உணர்ந்திருந்தாள். கனவுக்குள் விழிக்கையில் அது அவளைக் கடந்து தூரமாய் ஓடியிருந்தது. அதற்குப் பிறகு தான் அதன் கனைப்பும் அவளது விழிப்பும்.

குதிரைகள் ஓடும் போது கனைக்குமா என்று அவள் அறிந்திருக்கவில்லை. கண்கள் தூக்கத்தில் செருகுவதற்கு முன்பு எதிரில் நின்ற இந்தக் குதிரை சிலையையே பார்த்ததால் இருக்கலாம் என்று முடிவு கொண்டாள். எதிர் வீட்டுக் குழந்தையை நினைத்தபடி தூங்கும் நாட்களில் பேச்சியின் கனவுகளில் தவறாமல் பல சாயல்களைக் கொண்ட  குழந்தைகள் வந்து போகும்.

சாமிநாதன் எங்கே போனான் என்று தேடினாள். கூட்டத்துக்கு இடையில் கண் அசந்த தன்னை விட்டுவிட்டு உடைமைப்பட்டவன் இப்படி தொலைந்து போனது பேச்சிக்கு எரிச்சலைத் தந்தது. அவனை கிறுக்கன் என்று மனதில் ஒருமுறை சொல்லிக் கொண்டாள். பிறகும் யாருக்கும் கேட்காத குரலில் முணுமுணுத்தாள். “கிறுக்கன்…கூட்டத்துல எவனாவது குறி சொல்றேன்..ஜோசியம் சொல்றேன்னதும் கேக்கப் போயிருப்பான்.”

சுற்றிலும் சோம்பிக் கிடந்த கூட்டத்தில் சாமிநாதன் காணக்கிடைக்கவில்லை. திருவிழாவின் அசதி கொண்ட கூட்டம். அசதி மறந்த குழந்தைகள் மட்டும் ஓடி ஆடிக் கொண்டிருந்தனர். எவருடைய பரிச்சயமுமற்ற அந்த வனாந்திரக் கோயிலுக்குள் பேச்சி மீண்டும் மீண்டும் கண்களை ஓடவிட்டாள். “இங்க எனக்கு யாரைத் தெரியும்னு துணையில்லாம விட்டுப் போயிருக்காரு இவரு?” என்றபடி கோயில் மணடபத்தின் தூணில் சாய்ந்து கொண்டாள். இப்போது அவளது குரல் அருகில் இருந்த ஒரு கிழவியைத் திரும்பிப் பார்க்க வைத்தது. பார்வை அத்தனை நட்பாக இல்லை. பேச்சியும் முணுமுணுப்பை நிறுத்திக் கொண்டாள். சுற்றிலுமுள்ள காட்டு மரங்களில் கண்ணில் தட்டுப்படாத கிளிகளின் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.

எதிரே நின்ற குதிரை மொத்தக் கண் கொண்டும் அவளையேப் பார்த்தது. பேச்சிக்கு உடல் சிலிர்த்தது. அதைப் பார்க்க பார்க்கவே உயிர் பெற்று அவளை அடைந்து விடும் போல பட்டது. கண்களை வேறு பக்கம் திருப்பினாள். அவள் திருப்பிய பக்கம் திரௌபதி அம்மனும் கூட அடைபட்ட கதவுக்குள் இருந்தபடி பேச்சியையே பார்த்துக் கொண்டிருந்தாள். பேச்சியும் திரௌபதியைக் கண்டாள். சிறிய திருமேனியாய் அமர்ந்திருந்தாள் திரௌபதி. விளக்குகளின் ஒளி மட்டுமே கொண்ட சிறிய கருவறை. அவள் முகம் சந்தனத்தால் நிரம்பியிருந்தது. இரத்தச்சிவப்பில் குங்குமமும் அதே நிறத்தில் புடவையும். புடைவைக் கட்டு வித்தியாசமாய் இருந்ததை பேச்சி அப்போது தான் பார்த்தாள். ‘வடக்கத்திகாரி இப்படித் தான் கட்டுவா போல’ என்றும் யூகித்தாள். புடவை திரௌபதியின் இடுப்பின் கீழ் அமிழ்ந்து பின் ஒரு அருவி போல் கீழே விழ்ந்து படர்ந்திருந்தது. ஒரு செவ்வருவி போல. ஒற்றைக் கால் மட்டும் காணக்கிடைத்தது. மற்றொரு காலை அகலத் தொடை மேல் மடித்திருந்தாள்.

‘தவமிருக்கா போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

“ஆம்பளைங்க மாதிரி எல்லாத்தையும் தூரப்போன்னு உதறிட்டா பொம்பளைங்க தவமிருக்க முடியும்..ஆளு அழகா சேலை கட்டி, நெத்தியில சந்திர சூரிய நெத்திசூட்டி எல்லாம் வச்சிட்டுல்லா தவம் இருக்கா” என்றபடிக்கு திரௌபதியின் நான்கு கைகளையும் கூர்ந்தாள்.

“சூலாயுதம் சரி..ஆபத்துக்கு உதவும்..அது என்ன இன்னொரு கையில வட்டமா..தோசை சட்டுவம் மாதிரி?” என்று உற்றுப்பார்த்தும் அவளுக்கு அது என்னவென்று விளங்கவில்லை.

மற்றொரு கையில் திரௌபதி நாகத்தைத் தூக்கிப் பிடித்திருந்தாள். அது படமெடுத்துக் கொண்டிருந்தது. “காட்டுல தவத்துக்கு போன இடத்துல கிடைச்ச ஐட்டமா இருக்கும்” என்று நாகத்தை விடுத்து திரௌபதியின் தோளுக்கு பார்வையைத் திருப்பினாள். தோளில் அமர்ந்திருந்த கிளி திரௌபதியின் காதில் நித்திய ரகசியம் சொல்லிக் கொஞ்சிய கோலத்தில் நின்றது. கிளியின் கழுத்தில் அப்படியொரு நளினமான வளைவு.  “அதானே..பொம்பளைங்கறது சரியா இருக்கு..எங்கப் போனாலும் கூட துணைக்கு கூட்டிப் போற பழக்கம் விட மாட்டேங்கே..இவளுக்கு கூட கிளி வேண்டியிருக்கு. அதான் இந்த காட்டுல கிளி சத்தம் கீச்சுகீச்சுங்குது” என்று அந்தக் காட்டுக்கிளிகளின் ரகசியம் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பேச்சி தன் புத்தியை ரசித்துக் கொண்டாள்.

“யாரையும் தெரியாத இடம்னு நினைச்சிட்டேனே…உன்னைப் பாக்கத் தான வந்தேன்..வேற யாரைத் தெரியனும் எனக்கு” என்றாள் திரௌபதியிடம்..

திரௌபதி சிரித்தாள். அது புன்னகையில் தொடங்கிராத பெருஞ்சிரிப்பு,

“மாயா என்னை அவளுக்குத் தெரியும் என்கிறாள்” என்றதும் திரௌபதிக்கு எதிரே நின்றிருந்த  மாயா தன் இடது  காதினைத் தூக்கி தன்னுடைய கவனத்தைக் காட்டியது. ஒருமுறை முன் இடதுகாலை சற்றுத் தூக்கி பின் கீழ் இறக்கியது.

திரௌபதி தன் காலை மாற்றி உட்கார்ந்தாள். “இந்தப் பேச்சி என்னைப் பார்க்க இங்கே முதல்முறையாக வருகிறாள். ஆனால் என்னைத் தெரியும் என்கிறாள். என்னை எனக்கே சில நேரங்களில் தெரிவதில்லை மாயா. பேச்சி எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாள் என்பது தெரியுமா மாயா?

மாயா தன் எஜமானியையே பார்த்தது. கிளி ரகசியம் கேட்கும் ஆவலில் இன்னும் தன் கழுத்தை திரௌபதியின் காதில் உரசியது. அங்கு வரும் பக்தைகளின் இரகசியங்களை எப்போதேனும் திரௌபதி வெளியிடுவாள். அதற்காகவே கிளி காத்திருக்கிறது. அதைக் கேட்டு தன் கூட்டுக்காரர்களிடம் சொல்ல, அவை ஓயாமல் அது குறித்து விசாரித்தபடியும், அங்கலாய்த்தும் கிடக்கும். இது அறியாதவர்கள் தான் கிளிகள் பேசும் தங்களது ரகசியங்களுக்கு நடுவில் கோயிலுக்குள் வந்து போகிறார்கள். இன்று பேச்சியின் இரகசியம்.

மாயாவுக்கு ரகசியங்களில் ஈடுபாடு இல்லை. மாயா தன்னை திரௌபதியின் நிழலென நினைத்துக் கொள்ளும். அதற்கு திரௌபதியின் மனதைத் தெரியும். தெரிந்ததில் வியப்பென்ன தோன்றும்?

“பேச்சிக்கு மடி நிறைய குழந்தைகள் வேண்டுமாம். எதற்காக ஒருவருக்கு குழந்தைகள் மாயா?”

மாயா திரௌபதி சொல்லப்போகும் அத்தனைக்கும் செவி கொடுக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது. நிழலின் கடமை தொடர்வது தானே..

பேச்சி எழுந்து போய் சாமிநாதனைத் தேடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள். போகலாம் தான், ஆனால் மீண்டும் இந்த வசதியான தூண்  உடலை சாய்க்கக் கிடைக்காது என்பதால் அப்படியே அமர்ந்திருந்தாள். எதிரில் நின்றிருந்த வன்னி மரத்தில் கட்டப்பட்டிருந்த சின்ன சின்ன பொம்மைத் தொட்டில்கள் ஆடிக்கொண்டிருந்தன. பேச்சி கட்டியத் தொட்டிலும் அதில் ஒன்று. இத்தனைத் தொட்டில்களும் பல கதைகளைக் கொண்டிருக்கும். ஏக்கங்களின் ஊஞ்சல்கள் அவை. தன்னைப் போல பெருமூச்சுகளின் ஒரே ஒலி கொண்ட பெண்களும் இந்தக் கூட்டத்தில் இருப்பார்கள் தானே..என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். தன்னோடு காலையில் தொட்டில் கட்டிய ரோஸ் நிற புடவைக்காரியைத் தேடினாள். இருவரும் தொட்டில் கட்டுகையில் ஒருவருக்கொருவர் நொடிநேரம் மற்றவர் கண்களுக்குள் பார்த்துக் கொண்டனர். இருவர் கண்களும் ஒரே போன்றதான பரிதவிப்பையும் ஏக்கத்தையும் கொண்டிருந்ததை இருவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பார்வைகளை விலக்கிக் கொண்டனர். அதன் பின் கூட்டத்தில் அந்தப் பெண் கண்ணில் தட்டுப்படவேயில்லை.

திரௌபதியும் பேச்சியைப் போலவே தொட்டில்கள் ஆடிய மரக்கிளைகளைப் பார்த்தாள். யுகந்தோறும் மனிதனை அலைக்கழிக்கும் ஏக்கங்கள் அவை என்று பெருமூச்செறிந்தாள். மூச்சின் வெப்பத்தில் கிளி தன் கழுத்தை ஓரடி பின்வாங்கி முன்வந்தது.

திரௌபதியின் பார்வை வெட்டவெளியில் நடப்பட்டிருந்த ஐந்து கற்களை நோக்கிக் கூர்ந்திருந்ததை மாயா பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பஞ்ச பாண்டவ கற்களுக்கு சந்தனமும், மாலைகளும் அணிவிக்கப்பட்டிருந்தன. பார்க்கையில் ஒன்று போல தோற்றம் தரும் கற்களே ஆனாலும் திரௌபதிக்கு அதன் உயரத்திலும், அகலத்திலும் கொண்டிருக்கும்  வேறுபாடுகளை துல்லியமாக அளக்கத் தெரியும்.

“இந்த உலகில் ஒரே மாதிரியான கற்களைக் கூட நம்மால் கண்டுவிட முடியாது இல்லையா மாயா? ஒவ்வொரு கல்லும் ஒரு வடிவம். மனிதனின் மனங்களைப் போல..நான் ஐந்து மனங்களைப் பார்த்திருக்கிறேன்..உடனிருந்து. அந்த மனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவாசம்”

தானறியா ரகசியம் திரௌபதியினுடைய மனதின் எந்த மூலையிலிருந்து பெருகுகிறது என்று யுகாந்திரமாய் யோசித்துக் கொண்டிருந்தது மாயா. தான் என்றும் நிழல் மட்டும் தானே என்று நினைத்தபோது அதன் இரு காதுகளும் விடைத்து நின்றன.

கிளி பேச்சியைப் பற்றி திரௌபதி சொல்லப்போகும் ரகசியத்துக்காகக் காத்திருந்தது.

திரௌபதி தன் வழக்கமான மௌனத்துக்குள் செல்லும் முன் கலைக்க எண்ணி அவள் காதில் மெலிதாய் முத்தமிட்டது கிளி.

“அந்த மனங்களின் சுவாசமே குழந்தைகளாய் பிறந்தது போலிருந்தது எனக்கு. ஒவ்வொரு குழந்தையும் பிறக்கையிலும் என்னை அவர்களிடத்தில் தேடினேன் மாயா. சுற்றம் பாண்டவர்களின் சாயலையும், குணத்தையும் குழந்தைகளிடம் கண்டுகொண்டிருந்தனர். குழந்தைகள் வளருகையில் அவர்களின் பராக்கிரமத்தைக் கொண்டு அவர்களது தந்தைகளை புகழ்ந்தார்கள். யுதிஷ்டிரரின் மகன் என்றும், நகுலனின் மகன் என்றுமே அவர்களுக்குப் பெயர்..என்னை எவரிடமாவது கண்டுவிட முடியுமா என்று நான் உணரும் முன்பே என்னை விட்டு நீங்கியும் போனார்கள் என் குழந்தைகள்.  குழந்தை வரம் வேண்டி என் முன் நிற்கும் அத்தனை பெண்களுக்கும் என் கதை தெரியுமா மாயா? என் மீதான அவர்களின் மதிப்பு தான் என்ன? பெண்கள் என்னைக் கண்டு வியக்கிறார்கள்..ஆண்கள் என்னைக் கண்டு அஞ்சுகிறார்கள், என் கணவர்கள் ஐவரும் என்னைப் பார்த்து அஞ்சியதைப் போல”

மாயா ஐவரின் சிலைகளையும் தலை திருப்ப அவசியமில்லாமல் கண்களை சுழற்றிப் பார்த்தது. அதன் பரந்த கண்களின் நடுவில் ஐவரும் கற்களாய் நின்றார்கள்.

“என் முகம் வாடினால் ஒவ்வொருவரும் மற்ற நால்வரின் முன்பும் தோற்றதாய் நினைத்தார்கள். என் மனமும் உடலும் தங்களால் சோரவில்லை என்பதை ஒவ்வொருவருமே நிரூபிக்க நினைத்தார்கள். போர்க்களத்தின் வேதனையைக் காட்டிலும் இப்படி நிரூபித்தபடி இருப்பது அவர்களைக் கடைசி வரை அலைக்கழித்தது. நான் ஐவரையும் வெல்ல நினைத்தேன் மாயா. எந்த ஒரு பெண்ணுக்கும் நேர்ந்திடாத விதி அது. அதனால் தான் இன்றும் நான் வியப்பாய் நிற்கிறேன். பேச்சி என்னை ஒரு தெய்வமாக நினைப்பதில்லை என்பதை அறிவாயா மாயா? அவளுக்குள் எழும் கேள்விகளுக்கு நான் ஒரு பதில்..அவள் வந்ததே ஒரு விடை காணத்தான்.”

பேச்சி தான் எதற்காக இந்த வனாந்திரக் கோயிலுக்கு வரவழைக்கப்பட்டோம் என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள். இது அவளது கோயில் அல்ல, அவளது ஊரும் அல்ல. சாமிநாதன் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றவிடங்களுக்கெல்லாம் பேச்சி போய்க் கொண்டே இருந்தாள். சாமிநாதனுக்கு எப்படியேனும் ஒரு வாரிசு வேண்டுமென்பதாக இருந்தது. பேச்சிக்கு பரிகாரத்துக்கு வேண்டி அலைகிற அலைச்சல் நின்றால் சரி எனப்பட்டது.

ஒவ்வொரு முறையும் தானே கைப்பட பரிகாரத்தை எழுதி பேச்சியிடம் தருவான் சாமிநாதன். வரிசையில் ஒன்றும் தப்பாது அவள் அதை நிறைவேற்றுகிறாளா என்பதை முன்னின்று பார்த்துக் கொண்டிருப்பான். பேச்சிக்கு இதெல்லாம் பழகிப்போனது என்றாலும் இன்று மரத்தில் தொட்டில் கட்டியபோது ஒரு எல்லைக்கு அப்பால் நின்றிருந்த சாமிநாதனைப் பார்த்தாள். கூட்டத்தில் சாமிநாதனும் அவன் பதற்றமும் அவளுக்குத் தனியாத் தெரிந்தது. இந்தத் தொட்டில் கட்டும் வேண்டுதலுக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவன் போல இருந்தது அவன் பார்வை. பேச்சி மட்டும் சடங்கினை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதாய் இருந்த அவன் மனநிலையை புரிந்து கொண்டாள் பேச்சி. கையசைத்து அவனை அழைத்தாள். சாமிநாதன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான், மீண்டும் அவனை அழைத்தாள். பெண்களின் கூட்டம் மட்டுமே இருக்கும் அவ்விடத்துக்கு வரத்தயங்கி அவன் அசையாமல் நின்றான். பேச்சி அவனை மீண்டும் அழைத்தாள். வேறு வழியில்லாமல் பேச்சியின் அருகில் சென்றான். “இன்னிக்கு நீங்க தொட்டில் கட்டுங்க” என்றாள். அவன் முகம் மாறியது. “கிறுக்கா உனக்கு” என்றான். “உங்களுக்கும் தான பிள்ள வேணும்..நீங்க கட்டுங்க” என்றாள். பேச்சியின் முகம் தீவிரமாக இருப்பதைப் பார்த்து, “நீ தான் கட்டணும்..அது தான் பரிகாரம்” என்றான். “வாங்க சேர்ந்து தொட்டில் கட்டலாம்” என்றாள். சாமிநாதன் எரிச்சலும் கோபமுமாக அங்கிருந்து போனான்.

சாமிநாதனின் கோபத்தைக் கண்டு அஞ்சாது இருந்ததை பேச்சியே நிதானமாக உள்ளுக்குள் பார்த்துக் கொண்டிருந்தாள். வன்னி மரத்தின் பீடத்தில் இருந்து இறங்கி தள்ளி வந்து நின்று திரும்பிப் பார்க்கையில் கிளைகளின் தொட்டில்கள் எல்லாம் அவளுடையதாகவே தோன்றின.

“உன்னையும் தேடி வந்துட்டேன்..இனிமேயும் ஊர் ஊராப் போவேன். மடி நிறைக்க ஒரு பிள்ளைக்கு வழியுண்டான்னு எனக்குத் தெரியல. உன்கிட்ட கேட்டுட்டுப் போனா பிள்ளைக்கு வழியுண்டாகும்னு எவனோ ஒரு ஜோசியன் சொல்லியிருக்கான்..உன் முன்னாடி வந்து உக்காந்துருக்கேன். மடி நிறைய புள்ளைகள பெத்த மகராசியாம் நீ..என் அலைச்சலை நிறுத்து தாயி” என்றாள் பேச்சி. கசிந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நானும் இந்த பேச்சியும் ஒருவர் தானே மாயா..பெறாத பிள்ளைகளுக்காக அவள் ஏங்குகிறாள். பெற்ற பிள்ளைகளை பலியிட்டு அவதாரமாக அமர்ந்திருக்கிறேன். எந்த சொல்கொண்டு அவளுக்கு வரம் அளிப்பேன். என் சொல் என்னையே காக்கவில்லையே! என் காலடியில் கிடத்தப்பட்டிருக்கும் கலசத்தை நீ அறிவாய் தானே மாயா? அதனை கர்ப்பப் பாத்திரம் என்கிறார்கள். அதன் மகிமைக்காகவே இத்தனை பெண்கள் இங்கு வருகிறார்கள். ஐந்து கணவன்களும், பிள்ளைகளுமாய் நிறைவாழ்வு வாழ்ந்த ஒருத்தியின் ஆசி வேண்டி வருகிறார்கள். நித்ய சுமங்கலியாய் வாழ்ந்ததாலேயே எனக்கு இந்த இடம் மாயா. போரில் மகன்களுக்கு பதில் கணவர்கள் இறந்திருந்தால் பல யுகங்களுக்கு முன்பே நான் மறைக்கப்பட்டிருப்பேன், குந்தியைப் போல. எனது தெய்வீக இருப்பு எனது குழந்தைகளால் அல்ல, எனது கணவர்களால். ஐந்து மாபெரும் வீரர்களின் மனைவி என்பதால். அவர்களின் பராக்கிரமத்தை தாங்கிய வலுகொண்ட ஒருத்தியாய் இருப்பதாலேயே எனக்கு வழிபாடு நடக்கிறது. அஞ்சும் எதையும் வழிபடும் மனம் இது” என்று திரௌபதி சட்டென்று நிறுத்திக் கொண்டாள். அவளுடைய ஆவேசத்தினை மாயா எப்போதும் பார்த்திருக்கிறாள். மாயாவுக்கு இது புதிதில்லை.

சாமிநாதன் வந்து சேர்ந்தான். அவனுடன் ஒடிசலாய் ஒருவன் பேசிக்கொண்டே வந்தான். இருவருமாக பேச்சியை நோக்கி வந்தார்கள். சாமிநாதனுடன் வந்தவனை பேச்சி இதற்கு முன்பு எங்கும் பார்த்ததில்லை. அவன் வந்ததும் சன்னதியை நோக்கி விழுந்து வணங்கினான். அங்கு எவர்சில்வர் கிண்ணத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தனத்தையும், குங்குமத்தையும் நெற்றியில் இட்டுக் கொண்டான். பேச்சியைப் பார்த்து சிரித்தான். “இவங்க தானா..உங்க வீட்டம்மா?” என்றான் பேச்சியை மேலும் கீழுமாகப் பார்த்து. சாமிநாதன் அவன் பெயர் சந்திரன் என்றான். சந்திரன் மீண்டும் பேச்சியைப் பார்த்து சிரித்தான். “அண்ணன் சொன்னாங்க..இங்க வந்துட்டீங்கள்ல..அடுத்த வருசம் பிள்ளையோட தான் திரும்ப இங்க வருவீங்க” என்றான். தன் அந்தரங்கத்தை எவனோ ஒருவன் சர்வசாதாரணமாக மீறுகிறான் என்று பேச்சிக்குப் பட்டது. “ஊருக்குக் கிளம்பலாமா? என்றாள் சாமிநாதனைப் பார்த்து.

“இராத்திரி வரைக்கும் இருக்கணும்னு சந்திரன் சொல்றான். கரகம் எடுத்துட்டு போவாங்களாம்..அந்த சடங்கையும் பாத்திருவோம்..எதையும் குறை வைக்கவேண்டாம்” என்றான் சாமிநாதன்.

“ம்..ஆமா..நீங்க பாக்க வேண்டிய சடங்கு..அதுக்குத் தான் இந்தக் கூட்டம் உக்காந்துருக்கு. நாப்பத்தியோரு நாள் விரதமிருந்து அம்மன் காலடில இருக்கற மண்கலசம் எடுத்துட்டு போய் பூசாரி குளத்துல கரைப்பாரு. அது சுடாத மண் கலசம். கர்ப்பக்கலசம். நீங்க கலசம் எடுத்துடப் போறவரு கால்ல விழுந்து குறி கேட்டா, பளிச்சுன்னு எப்ப பிள்ளை தங்கும்னு சொல்லிருவாரு..ஆனா அவருகிட்ட குறி கேட்க, கூட்டம் அலைபாயும். அதுக்கு நடுவுல உங்களுக்கு சொல்லிட்டாருன்னா, அதிர்ஷ்டம் தான்” என்றான் சந்திரன். சாமிநாதன் கண்களில் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கும் விருப்பம் தோன்றியது.

திரௌபதி தனது இடது காலுக்குக் கீழ் பூக்கோலத்தின் மீது வைக்கப்பட்டிருந்த கலசத்தை இமை தாழ்த்திப் பார்த்தாள். அதன் வாய் மெல்லிய துணியால் மூடப்பட்டிருந்தது. “மண் அது உருவாகி வந்த இடத்துக்கே சென்றுவிடும்” என்றாள். பின் அவளிடமிருந்து மற்றுமொரு பெருமூச்சு வெளிவந்தது. அவளது பின்னலில் கிடந்த பூக்கள் கீழே சிதறின.

சாமிநாதனிடம் பேச்சி மன்றாடிக் கொண்டிருந்தாள். ஊருக்குப் போய்விடலாம் என்றாள். அவன் பல்லைக் கடித்தான். இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஒரு நல்ல சொல்லைக் கேட்டுப் போகலாம் என்றான். பேச்சிக்கு இப்போதெல்லாம் சொற்களில் நம்பிக்கை இருப்பதில்லை. அவள் குழந்தைக்காக கேட்ட சொற்களின் கணம் அவள் மட்டுமே அறிந்தது. சாமிநாதன் அதன் அர்த்தத்தை மட்டுமே கண்டான். அதன் உணர்வை பேச்சி மட்டுமே உள்வாங்கினாள். “பிள்ளைப் பிறக்கும்னுட்டு ஒரு வார்த்தை பூசாரி சொல்லிடாருன்னா..பொறந்துரும்” என்றான் சாமிநாதன் தீர்க்கமாக. “நல்லா விசாரிச்சிட்டேன்..நிறைய பேருக்கு அவரு வாக்கி பலிச்சிருக்கு” என்றான்.

பேச்சி தூணில் மீண்டும் சாய்ந்தமர்ந்தாள். அந்த சந்திரன் வேறு எதோ வேலை எனக் கிளம்பிவிட்டான். சாமிநாதன் அங்கேயே ஒருக்களித்துப் படுத்தான். வெக்கை இறங்கிக் கொண்டிருந்தது. மாலை நேரத்துக்கான பூஜைக்கான அறிகுறிகள் தொடங்கின. அங்கங்கு கிடந்தவர்கள் எழுந்து அமர்ந்தார்கள். படுத்ததும் எழுந்துவிடவேண்டியிருந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு சாமிநாதனும் எழுந்தமர்ந்தான். “எனக்கொண்ணும் குறையில்லைன்னு டாக்டர் சொன்னானங்களே” என்றாள் பேச்சி.

“அதுக்கு?” என்றான் சாமிநாதன்.

“கண்டவங்க முன்னாடி நின்னு பிள்ளை கிடைக்குமானு கேக்க கூச்சமா இருக்கு” என்றாள்.

“நீ இந்த முடிவோடத் தான ஒவ்வொரு இடத்துக்கும் வர்ற..உன் மனசுல பிள்ளையப் பத்தின நினைப்பு இருக்கணும்ட்டி..ஊர் சுத்துத மாதிரி கூடவே வந்தா பிள்ளையா பொறக்கும்?” என்றான். இதைச் சொல்லும்போது அவன் முகம் பெருங்கோபத்தில் அல்லாமல் நெற்றியின் நரம்பு மட்டும் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் பேச்சி. மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வார்த்தைகளைக் காட்டிலும் சாமிநாதன் கடித்த பற்களின் வழியே வீசியெறியும் வார்த்தைகளை அவள் உள்வாங்கவும் செரிக்கவும் அஞ்சுவாள். இன்று அதுவும் தன்னை வீழ்த்தாது போனது கண்டு ஆச்சரியம் கூடத் தோன்றாமல் கிடந்தாள்.

திரௌபதியின் சன்னதி திறக்கப்பட்டது. மக்கள் சுறுசுறுப்பானார்கள். திரை போடப்பட்டது. திரௌபதி உள்ளிருந்து பேச்சியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

திரௌபதிக்கு வேறு சேலை அணிவிக்கப்பட்டது. பாண்டவர்களுக்கு திரை கட்டாமல் வேறு துண்டு வேட்டிகள் மாற்றப்பட்டன.

வேட்டு சத்தம் கேட்க, ஊர்வலத்துக்கு தயாரானாள் திரௌபதி. மாயா அவளை பூ அலங்காரங்களோடு தாங்கிக் கொண்டது. திரௌபதியின் கைகள் மாயாவினை தொட்டு மீண்டது. மாயா நிமிர்ந்து உறுத்துப் பார்த்தது. “ஆமாம்..மாயா..காய்ச்சல் கண்டது போல் இருக்கிறேன்” என்றாள்.  அவளுக்குப் பின்னால் சிறு சப்பரத்தில் பஞ்சபாண்டவர்களும் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தனர். பாண்டவர்கள் ஐந்து குழவிக் கற்களாய் அமர்ந்திருந்தனர்.

ஊர்வலம் தொடங்க, திரௌபதி சுற்றிலும் பார்த்தாள். பக்தியும், பயமும், பரவசமும் கொண்ட முகங்கள். இடையிலே எந்த உணர்வையும் காட்டாத முகங்களும் வந்து போயின. இரவு நேர மரங்களில் இலைகளுக்குப் பின்னே அமைதி காத்த கிளிகள் இவற்றை செருகிக் கொண்டிருக்கும் கண்களால் பார்த்தபடி இருந்தன. குளம் நோக்கிப் போனாள் திரௌபதி. கலசத்துடன் முன்னால் சென்றார் பூசாரி.

சாமிநாதன் கூட்டத்துக்கு இடையில் குறுகியும் தள்ளியும் பேச்சியை இழுத்துக் கொண்டு போனான். பேச்சிக்கு அப்போதும் தன மனம் கொண்ட விசித்திர அமைதி புரியாததாக இருந்தது. உடல்  குளிர்ந்து கிடந்ததை உணர்ந்தாள்.

கூட்டத்தின் இடையில் சாமிநாதன் பேச்சியை முன்னுக்கு இழுத்து வந்தான். பூசாரியின் ஒரு சொல்லுக்காக அவன் எந்த ஆவேசத்தின் எல்லைக்கும் செல்வான் என உணர்ந்துகொண்டாள் பேச்சி.

பூசாரி ஓரிடத்தில் நின்றார். அவர் உடல் சன்னதம் கொண்டிருந்தது. மெலிதாக ஆடியது. நடுவே உறுமினார். பெண்கள் முண்டியடித்தார்கள். “என் மகளுக்கு கல்யாணம் கூடி வரணும் சாமி” என்றாள் ஒரு பெண். அவள் தன சேலையின் முந்தானையை பிச்சை கேட்பது போல ஏந்தியிருந்தாள்.

பூசாரி கண்களைத் திறந்தார். ‘ம்’ என்று உறுமினார். அந்தப் பெண்ணின் மகளின் நெற்றியில் திருநீரை அப்பினாள். வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அந்த மகளின் அம்மா.

சாமிநாதன் பேச்சியை இன்னும் பலம் கொண்டு இழுத்தான். அவனுடைய இழுப்பு வீம்பு கொண்டதாய் மாறியது. பேச்சியை முன்னகர்த்தினான். இதற்குள் பேச்சியும் அவனுமாக நான்கு முறை கூட்டத்தின் பின்னகர்ந்து முன்னால் வர வேண்டியிருந்தது. பேச்சியை பூசாரியின் முன் தள்ளினான். “பிள்ளை வேணும் சாமி..எனக்கு ஒரு பிள்ளை வேணும்” என்றான். பூசாரி பேச்சியைப் பார்த்தார், கண்களை மூடினார், சன்னதம் கூடிக் கொண்டே போனது. மேளங்களின் ஒலி முன்னைக் காட்டிலும் ஒலித்து பரவியது. பூசாரி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.

பேச்சிக்கு கைகள் நடுங்குவதை திரௌபதி மட்டுமே கண்டாள். மாயாவும் பிறகு கண்டது. திரௌபதியின் கண்கள் யாவரையும் துளைத்து பேச்சிக்குள் நிலைபெற்றது. பூசாரி அதே இடத்தில் நிற்பதைப் பொறுக்காமல் உந்தித் தள்ள, நையாண்டி மேளக்காரர் இன்னும் தாளம் கூட்டினார்.

பேச்சிக்கு உடல் மேலும் நடுங்கியது. உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. பூசாரி கண்களைத் திறந்தார். அவருடைய சிவந்த விழியைப் பார்த்தது பேச்சி அலறினாள், அவள் குரல் அவளே கேட்டறியாததாகி இருந்தது. “எனக்குன்னு.. ஒரு பிள்ளை குடு தாயி.. எனக்குன்னு” என்றாள்.

பூசாரி அவளையேப் பார்த்தார். திரௌபதி கண் இமையை ஒருமுறை மூடித் திறந்தாள். பூசாரி “ம்’ என்றார். பேச்சியின் நெற்றியில் திருநீரை அப்பினார். பேச்சி தன் நிலை மறந்து அங்கேயே சரிந்தாள். மற்ற பெண்களும், சாமிநாதனுமாக அவளைத் தாங்க, திரௌபதி குருஞ்சிரிப்போடு பேச்சியைக் கடந்து போனாள்.

திரௌபதியின் உடல் வெம்மை தணிந்திருப்பதை மாயா கவனித்த்து. கிளி நிமிர்ந்து தனது கூட்டாளிகளைக் கரிய இலைகளுக்குள் பார்த்தது.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments