நினைவோ ஒரு பறவை – எல்.வி பிரசாத்

0
309

எல். வி பிரசாத் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழி திரைப்படத்துறையிலும் தன்னை
நிலைநிறுத்திக் கொண்டவர். இது எந்தக் காலத்திலும் அரிதான நிகழ்வு.
ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த பிரசாத்தை எல்லாக் குழந்தைகளையும் போல
படிப்பதற்கு பள்ளிக்கு அனுப்பினார்கள். அவர் பள்ளிக்கு செல்லவில்லை. பதிலாக,
துண்டு துண்டான ரீலில் லைட்டினை அடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை வளர்த்துக்
கொண்டார். அடுத்ததாக தானே சினிமா படத்தினை உருவாக்கி விட வேண்டும்
வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அந்தத் தகுதி தனக்கு இருப்பதாக அவர்
நம்பினார். அவர் தகுதியாக நினைத்தது பேரார்வத்தை. நூறு ரூபாயினை வறுமையுடன்
போராடி சேர்த்து வைத்திருந்த அவரது அப்பாவின் கடைசி சேமிப்பில் இருந்து திருடி
ரயிலேறி பம்பாய் போனார்.
அவருக்கிருந்த எண்ணம், நம்முடைய ஆர்வத்தைப் பார்த்து சினிமாவில் சேர்த்துக்
கொள்வார்கள் என்பது. இவரையே பார்க்க மறுத்த இயக்குனர்கள், ஆர்வத்தை எப்படி
கண்டு கொண்டிருப்பார்கள். ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால் போதும், மற்றதைப் பிறகு
பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். படப்பிடிப்பு அரங்கத்தை சுற்றி மூடியிருக்கும்
திரையில் ஓட்டை போட்டு எப்படி படம்பிடிக்கிறார்கள் என்று நாள் முழுவதும் நின்று
கொண்டு பார்த்தே திரைப்பட உருவாக்கத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
ஸ்டுடியோவின் கடைநிலை ஊழியனாக சேர்ந்தார். சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புக்
கிடைத்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒன்று, தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று
மொழிகளின் முதல் பேசும் படங்களிலும் பிரசாத் நடித்திருக்கிறார். அவை முறையே
காளிதாஸ், பக்த பிரகலாதா ஆலம் ஆரா படங்கள். அவருக்கென நேர்த்தியாய் அமைந்த
வாய்ப்பு அது. இந்த வாய்ப்பு சாதனையாகவும் மாறிப்போனது. பதினோரு வருடங்கள்
இப்படி சிறு ஊழியங்கள் செய்த பின்னரே ‘க்ருஹபிரவேசம்’ என்ற படத்துக்கு உதவி
இயக்குநர் ஆகிறார். இந்தப் படத்தின் ஒரு பகுதியை இயக்கம் வாய்ப்பும் கிடைக்கிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார்.
பிரசாத் சிறந்த இயக்குனர், நடிகர் என்பதோடு புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஆனது அவர்
திரைப்படக் கலையின் அத்தனை நுட்பங்களையும் ஒரு மாணவ மனநிலையில்
கற்றுக்கொண்டது தான். ஆங்கிலமும், இந்தியும் கொஞ்சமும் கைகூடாத நிலையில் தான்
பம்பாயில் அவர் திரைப்பட வாய்ப்புக்காக அலைந்தார். இந்தி , ஆங்கில மொழிகளை
அவர் தன் தேடலிலேயே கற்றுக்கொண்டார். திரைப்பட மொழியை தன்னுடைய
அசாத்திய உழைப்பினால் புரிந்து கொண்டார்.

இவரது படங்களை இன்று பார்த்தாலும் சலிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு காரணம்
இவருடைய கதை சொல்லலில் உள்ள நவீனத்துவம் தான்.
இவரது படங்களின் கதைகள் யாவும் எளிமையாய் ஒரே வரியில் சொல்லக்கூடியவை
தான். ஆனால் அதற்குள் அவர் பல முடிச்சுகளை வைத்திருப்பார். அந்த முடிச்சுகளை
அவர் திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்காக சேர்த்துக் கொண்டே போவார். ஒரு பொது
அம்சத்தை இவரது கதைகளில் காண இயலும். ஒரு பொய்யினை ஒரு கதாபாத்திரத்துக்கு
தெரியாமல் மற்றவர்கள் மறைப்பார்கள். அந்த பொய் என்னவென்று தெரிய வரும்போது
படத்தின் முடிவு வந்துவிடும். அப்போது கதை மாந்தர்களுக்குள் இருக்கும் சிக்கலும்
தெளிந்துவிடும். இப்படியான ஒரு அம்சம் தன்னுடைய படங்களில் தொடர்வதை நம்மால்
உணர முடியாமல் செய்துவிடுவதே பிரசாத்தின் திரைக்கதை யுத்தி.
தெலுங்கில் படங்கள் இயக்கிய பிறகே தமிழுக்கு வருகிறார் பிரசாத். ‘கல்யாணம் பண்ணி
பார்’ என்பது பிரசாத் தமிழில் இயக்கிய முதல் திரைப்படம். பிரசாத் ஒரே படத்தை தமிழ்
தெழுங்கு இரு மொழியிலும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடியவர்.. ‘கல்யாணம் பண்ணி பார்’
படத்தின் ஒரு சிறப்பம்சம் தமிழில் முதன்முறையாக கேவா கலரில் வெளிவந்த படம். சில
காட்சிகளை மட்டும் கேவா கலரில் எடுத்திருப்பார்கள்.
வரதட்சணைக்கு எதிரான படம் என்பது அக்காலத்தில் இந்தப் படம் பேசப்பட்டதற்கு
முக்கிய காரணம். அதை பிரச்சாரமாக சொல்லாமல் நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக
சொன்னதாலேயே மக்களிடையே எடுபட்டது. பெற்றோர் வரதட்சணைக்காக பிடிவாதம்
செய்தாலும் மணமகன்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றது கதை. ஒரு
தங்கையின் திருமணத்துக்காக அண்ணன் போராடும் கதையே ‘கல்யாணம் பண்ணி பார்’.
கிட்டத்தட்ட இதே பாணியிலான கதை தான் பிரசாத் இயக்கிய மற்றொரு படமான ‘கடன்
வாங்கி கல்யாணம்’. இதுவும் பண ஆசை உள்ளர்வர்களால் திருமணங்கள் எப்படிஎல்லாம்
நிச்சயிக்கப்படுகின்றன என்பதை சொல்லும் கதை தான. இதிலும் ஒரு அண்ணன்
தன்னுடைய தங்கையின் திருமண வாழ்க்கை சிறக்க போராடுவான். இரண்டு படங்களின்
கதை மற்றும் காட்சிகளிலும் அதிகளவு ஒற்றுமை இருந்தது.
பிரசாத்தின் படங்களில் இரண்டினைக் குறிப்பிட வேண்டும். ஒன்று மனோகரா,
மற்றொன்று மிஸியம்மா. மனோகரா படத்தின் கதை பம்மல் சம்பந்த முதலியாரின்
‘மனோகரா’ நாடகத்தில் இருந்து தழுவப்பட்டு திரைக்கதை வடிவம் பெற்றது. இதற்கு
திரைக்கதை வடிவமும், வசனமும் எழுதியவர் கலைஞர் மு. கருணாநிதி. பிரசாத்தின் மற்ற
படங்களில் இருந்து மனோகரா வித்தியாசப்பட்டதன் காரணம் இதன் திரைக்கதையிலும்,
கதையிலும் பிரசாத்தின் பங்கு இல்லை என்பது தான். சரித்திர கதை என்றபோதும் கூட
பிரசாத் எழுதிய வசனமாக இருந்திருந்தால் அது இத்தனை அடர்த்தியாக இல்லாமல்
யதார்த்தமாகவே அமைந்திருக்கும். ஆனால் மனோகரா படத்தின் பெரும் பலமே அதன்
வசனங்கள் தான். ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டல்களும் உணர்ச்சிக்
கொனதளிப்பையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டிருந்தன வசனங்கள். தெலுங்கிலும்,

இந்தியிலும் மனோகரா வெளிவந்தபோதும் வெற்றி பெறவில்லை. காரணம் தமிழின்
செறிவான வசனங்கள் போல் அவை அமையவில்லை என்பதே,
பிரசாத்தின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த படம் மிஸியம்மா. மிஸியம்மாவின்
பெரும்வெற்றிக்கு பிறகு அதே நடிகர்களோடு பிரசாத் இயக்கிய படம் தான் ‘கடன் வாங்கி
கல்யாணம்’.
மிஸியம்மா கதை பல்வேறு வடிவங்களில் இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டு விட்டன.
இனியும் எடுக்கப்படும். ஆண், பெண் ஈகோ தான் கதையின் மையம். அதன்
சுவாரஸ்யமான கதை சொல்லல் முறை, யதார்த்தமான வசனங்கள், கதாபாத்திரங்களின்
தன்மை இப்படியாக..முக்கியமாக சாவித்திரியின் பாத்திர வடிவமைப்பை சொல்லலாம்.
அந்தப் படத்தில் சாவித்திரி அப்போதைய காலகட்டத்தில் முதல் தலைமுறை வேலைக்குப்
போகும் பட்டதாரிப் பெண். ஆங்கிலோ இந்திய வீட்டின் பெண்ணாக வருவார். ஒருபக்கம்
வேலைக்குச் செல்ல ஊக்கம் கொடுக்கும் நவீன பெற்றோர், இன்னொருபுறம் சமூக
சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண் என இரண்டுக்கும் நடுவில் சிக்கும் ஒருவர் அவர்.
சமூகத்தை எதிர்கொள்ளும்போது இருக்கிற பாதுகாப்பு உணர்வற்ற ஒரு பெண் என்பதால்
இயல்பாகவே அது அவருக்கு சிடுசிடுப்பைக் கொடுத்திருக்கும்.
பிரசாத்தின் முந்தைய படங்களிலும் நடித்திருந்தாலும் அவற்றை விட தன் நடிப்பை
நிரூபிக்கும் கதாபாத்திரமாக சாவித்திரிக்கு அமைந்தது மிசியம்மா படத்தில் தான். இந்தக்
கதாபாத்திரத்தை தற்செயலாக பிரசாத் வடிவமைத்திருக்க வாய்ப்பில்லை என்றே
சொல்லலாம். ஒரு கதாநாயகியை இப்படிக் காட்டுவதற்கே முதலில் தைரியம் வேண்டும்.
படத்தின் இறுதி வரை சாவித்திரி சிடுசிடுவென , முன்கோபம் கொள்ளும் ஒரு
பெண்ணாகத் தான் இருப்பார். இத்தனைக்கும் நகைச்சுவைப் படங்கள் வரிசையில் தான்
இன்றும் மிஸியம்மா இருக்கிறது. ஆனாலும் ஒரு காட்சியில் கூட சாவித்திரி சிரித்த
நினைவு இல்லை.
பிரசாத்தின் ஒரு பலமென்பது ஒவ்வொரு படங்களிலுமே முதல் காட்சியில் ஒரு
கதாபாத்திரம் நம் மனதில் எப்படி பதிகிறார்களோ கடைசி வரை அவர்கள் அப்படியே
தான் நூல் பிடித்தது போல் இருப்பார்கள். அவர்களின் குணாதிசயத்தினால் ஏற்படும்
சிக்கல்களும், முரண்களும் தான் கதைகளை நகர்த்தும். ஓரிரு காட்சிகளில் வந்து போகும்
கதாபாத்திரமாக இருந்தாலும் கூட அவர்களுக்கென தனித்த குணாதிசயத்தைக் கொண்டு
வருவதில் பிரசாத் கவனமாக இருந்திருக்கிறார்.
ஒரு பெண் கதாபாத்திரம் இப்படித் தான இருக்க வேண்டும் என்கிற எல்லைக்
கோட்டினை சர்வசாதரணமாக கடந்து விடக்கூடிய இயக்குநராக எல்.வி பிரசாத்
இருந்திருக்கிறார்.

இதனை அவரது ஒவ்வொரு படத்தையும் முன்னிறுத்தி சொல்ல முடியும். மனோகரா
படத்தில் டி.ஆர் ராஜகுமாரியின் கதாபாத்திரம், மிக சாதுவாக இருந்து வெடிக்கும்
கண்ணாம்பா, சிடுசிடுவென வலம் வரும் ‘மிஸியம்மா’ சாவித்திரி, ‘மங்கையர் திலகம்’
எம்.என் ராஜம் இப்படி.
இவர்கள் இயல்பானவர்களாக இருப்பார்கள். இயல்பு என்று சொல்லுவது
பலவீனங்களையும் சேர்த்து கதாபாத்திரத்தை வடிவமைப்பதே.
பிரசாத். நாடகங்களின் மீது பெருங்காதல் கொண்டவர். சிறுவனாக இருந்தபோதே
நாடகத்தில் சேர வேண்டும் என்கிற தீவிரம் இருந்திருக்கிறது.
இதன் விளைவு இரண்டு விஷயங்களில் இவரது படங்களில் வெளிப்படும்.
ஒன்று, இவரது படங்களில் பெரும்பாலும் ஒரு நாடகக்காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த
நாடகத்தில் அந்தப் படத்தின் கதை என்ன என்பது சொல்லப்பட்டு விடும். மனோகரா
படத்தில் வருகிற ஒரு நாடகக் காட்சியை படத்தின் ஃப்ளாஷ் பேக் கதை சொல்லுகிற
யுத்தியாக பயன்படுத்தியிருப்பார்.


அதே போல் ‘கல்யாணம் பண்ணிப் பார்’ படத்தில் வருகிற நாடகக் காட்சியில் அந்தப்
படம் சொல்லுகிற வரதட்சணை குறித்த நாடகம் இடம்பெற்றிருக்கும்.
இரண்டாவது, பல படங்களிலும் சிறுவன் ஒருவனின் கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
அந்த சிறுவன் துறுதுறுப்பானவனாக, எதையும் சுலபமாக கற்றுக் கொள்கிறவனாக,
துடுக்கான பேச்சு கொண்டவனாக இருப்பான். ‘கல்யாணம் பண்ணி பார்’ படத்தில்
அப்படியான ஒரு சிறுவனுக்காக ஒரு சிறுமி காதலியும் கிடைப்பாள். சிறுவயது முதல்
காதல் பற்றி படத்தில் முதன்முதலாக சொன்னவர் அநேகமாக பிரசாத்தாகத் இருப்பார்.
இது அவரது சிறு வயது நினைவுகளின் பிரதிபலிப்பு என்றே கொள்ளலாம். அவரது
வாழ்க்கைக் குறிப்பினை வாசிக்கிறபோது அப்படித் தான் நினைக்க வைக்கிறது.
மற்றொரு விஷயமாக குறிப்பிட விரும்புவது சில நவீன யுத்திகளை படங்களில் அவர்
கையாண்ட விதம். கேமராவின் முன் வந்து நடிகர்கள் பேசிவிட்டுப் போவது என்பது தான்
அப்போதைய இயல்பான திரைமொழியாக இருந்தது. பிரசாத் சில படங்களில் ஒலியின்
மூலம் உணர்த்துவதை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
ஒரு கதாபாத்திரம் ஃபிரேமை விட்டு பேசிக்கொண்டே அகலும். தள்ளி நின்று பேசிவிட்டு
மீண்டும் ஃபிரேமுக்குள் வருகிறபோது அவர் கை கால் கழுவி விட்டு வந்தார் என்பதை
ஒலியின் மூலம் விளங்க வைத்திருப்பார்.

மிஸியம்மா படத்தில் இரு கதாபாத்திரங்கள் பள்ளிக்கூடம் அருகில் நின்று பேசுகிறார்கள்
என்றால், பின்னணியில் குழந்தைகளின் கூச்சல் கேட்டபடி இருக்கும். மனோகரா
படத்தில் காட்டினுடைய காற்று ஒலி கேட்டபடி இருக்கும். ‘பாக்கியவதி’ படத்தில்
திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை சொல்வதற்கு பின்னணி இசையை
அப்படியே தொடர்ந்திருப்பார். இப்படி சூழல் ஒலியை அவர் கணக்கில் நேர்த்தியாக
எடுத்துக் கொண்டிருந்தார்.
ஐம்பதுகளில் பாடல்களைக் குறைத்துக் கொண்டு கதையின் காட்சிகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் பாணி தொடங்க ஆரம்பித்தது. ஆனாலும் பிரசாத்தின் படங்களில் பத்துக்கும்
மேற்பட்ட பாடல்களை பார்க்க இயலும். பாடல்களின் பிரியராக இருந்திருக்கிறார்.
மிஸியம்மா’ படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதும் அதே சாயலில் சில் பாடல்களை
அடுத்து வந்த கடன் வாங்கி கல்யாணம் படத்திலும் பயன்படுத்திருப்பார்.
கதையமைப்பைப் பொறுத்தவரை கதையின் சிக்கல் முதல் ஒருமணிநேரத்துக்குப் பிறகே
சொல்லப்படும். அது வலுவான சிக்கலாக இருக்கும். அதன் பின் கதை அதை மட்டுமே
தொடரும். இது இன்றைய வணீகரீதியான படங்களின் முன்மாதிரியாக சொல்லலாம்.
முதல் பாதி படங்கள் நகைச்சுவை, காதல் காட்சிகளாக போய்க் கொண்டிருக்கையில்
கதையில் சிக்கல் வருகிற ஜனரஞ்சக சினிமாவின் ஃபார்முலா அது. அதனால் தான்
இப்போதும் இவரது படங்களின் கதைகளும், திரைக்கதை யுத்தியும் இளம் தலைமுறை
இயக்குனர்களால் கவனிக்கப்படுகிறது. முழுக் கதையையும் ப்ளாஸ்பேக்கில் சொல்லும்
முறையை ஐம்பதுகளிலேயே கையாண்டிருக்கிறார். ‘மங்கையர் திலகம்’ படம்
முழுக்கவுமே பிளாஸ்பேக் கதை தான்.


பிரசாத் உறவுகளுக்குள் இருக்கும் அன்பையும் கூட வெகு யதார்த்தமாக
சொல்லக்கூடியவர். தாய்ப்பாசம், தங்கை பாசம் போன்றவைஎல்லாம் பிரசாத்தின்
படங்களில் உருகும் அளவுக்கு அமைந்திருக்காது. அது ஒரு இயல்பான நிலையிலேயே
நின்று கொண்டிருக்கும். சற்று இந்த இடத்தைக் கடந்தது என்றால் ‘மங்கையர் திலகம்’
படத்தினை சொல்ல இயலும். கதையே தாய்மைப் போராட்டம் எனும்போது அதன்
எல்லைக்குள் நின்று கதை சொல்லியிருக்கிறார் பிரசாத்.
ஒரு குடும்பக் கதை போல தோற்றம் கொண்டிருக்கும் படங்கள் தான் எனினும் அதில்
சமூக சிக்கல்களையும், சமூகத்தில் ஏற்படுகிற பாதிப்பு குடும்பத்தை எப்படி
சிக்கலாக்குகிறது என்பதையும் தொடர்ந்து படங்களில் சொல்லிக் கொண்டே
வந்திருக்கிறார். வரதட்சனை பிரச்சனை குறித்து ‘கல்யாணம் பண்ணி பார்’ படத்திலும்,
வீண் கௌரவம் என்பது மனிதனை பைத்தியமாக்குகிறது என்பதை ‘கடன் வாங்கி
கல்யணம்’ படத்திலும், ‘வேலையிலலத் திண்டாட்டம் குறித்து மிஸியம்மாவிலும்,
‘குழந்தை இல்லாத ஒரு பெண் படும் துயரத்தை மங்கையர் திலகத்திலும், சமூகத்துக்கு
எதிரான குற்றங்களில் ஈடுபடுபவனுடைய குடும்பம் எதிர்கொள்கிற அவலங்களை
‘பாக்கியவதியிலும்’ பேசியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களின் முன்னணி இயக்குநராக இருந்தவர் எல்.வி பிரசாத்.
இவரிடம் நான் வியப்பது, சினிமாவின் மீது கொண்ட மோகத்தினால் ஊரை விட்டு ஓடி
வந்து சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு பின்னர்
தயாரிப்பாளராகி, ஒரு ஸ்டுடியோவையும் நிர்வகித்து பெருவாழ்வினை வாழ்ந்ததன்
பின்னணியில் உள்ள சினிமாவின் மீதுள்ள அவரது பேரார்வத்தைத் தான். அதனாலேயே
தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல கௌரவமான விருதுகள் அவரைத் தேடி
வந்தன.
சிலரை நினைக்கையில் நாம் பணியாற்றுகிற துறை மீது பெரிய மதிப்பு ஏற்படும் .
அப்படியானவர்களில் ஒருவராக எல்.வி பிரசாத் எப்போதும் இருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments