தொடர்ந்து இந்தியா முழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நொடி கூட இந்தியாவின் தலைநகரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குரல்கள் அடங்கியிருக்கவில்லை. குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டுக்குமான எதிர்ப்பு குரல்கள் இளைஞர்களிடமிருந்து வலுவாக வெளிவந்திருக்கிறது. குறிப்பாக பெண்களிடமிருந்து வெளிப்படும் குரல்கள் தேசத்தை அதிரவைக்கின்றன. மிக அழுத்தமான வாசகங்களைக் கொண்ட பதாககைகளுடன் அவர்கள் நீண்ட நேரம் தங்கள் குரல்களை அரசின் அவசரமான சட்டத்துக்கு எதிராகக் கொடுக்கின்றனர். இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இத்தனைப் பெண்கள் வீதிக்கு இறங்கிவந்து போராடிய சம்பவங்கள் சமகால இந்தியா இரண்டு முறை பார்த்தது.
ஒன்று டெல்லி நிர்பயாவுக்கு நடந்த கொடுமைக்கு எதிரான போராட்டத்தின் போதும், தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுத் தடைக்கு எதிரான காலத்திலும். அதன் பின்பு நாடு காண்கிற கிளர்ச்சி இது. இதில் பெண்களின் குரல் மறுக்க முடியாத அளவுக்கு எழுந்துள்ளது.
பொதுவாகவே பெண்கள் போராட்ட குணம் கொண்டவர்களே. அது அவர்களின் சிறப்பு இயல்பும் கூட. சுதந்திர போராட்டத்தின்போது பெண்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தைத் தொடங்கியபோது தான் நாடு முழுவதும் விடுதலைக்கான வேட்கை முழுமையாகப் பற்றிக் கொண்டது. அதன் பின்பு சமூக, அரசியல் பிரச்சனைகள் எழும்போதெல்லாம் பெண்கள் தங்களின் குரல்களைப் பதிவு செய்ய முடியாமல் இருந்தது. நீண்ட நெடிய வருடமாக வீடுகளில் வருகிற செய்தித்தாள்கள் ஆண்களுக்கானதாய் இருந்திருக்கிறது. மடிப்பு கலையாமல் அதனை எடுத்து வைக்கும் வேலையயை மட்டுமே சில தலைமுறைப் பெண்கள் செய்து வந்தனர். குடும்பத்தின் ஆண்கள் பேசுவதும், சொல்வதும், மறைப்பதுமே அரசியலாக கேட்டு வாழப் பழகிக்கொண்டவர்களாக இருந்தனர். இன்று தகவல்களும், செய்திகளும், கருத்துகளும் பரவலாகி வருகின்றன. பெண்கள் எதையும் காதாலும், வாயாலும் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தத் தலைமுறைப் பெண்கள் நேரடியாக எதையும் உள்வாங்குகிறார்கள். இது மிகப்பெரிய மாற்றம். யாருடைய குறுக்கீடும் இல்லாமல் முடிவுகளை எடுக்கின்றனர். அதன் வெளிப்பாடே இந்த எழுச்சி.
தண்ணீர்ப் பிரச்சனை,. ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்படும் ஊழல் போன்றவற்றுக்கு குரல் கொடுப்பவர்கள் போராடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். நான்கு வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளுக்கான எதிர்ப்பில் ஒவ்வொரு ஊரிலும் தங்களின் எதிர்ப்பை வலுவாகவும், ஆவேசமாகவும் காட்டியது பெண்களே. நேரடியாகத் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதிக்கிற பிரச்சனகள் ஒவ்வொன்றிலும் பெண்களின் குரல் தவறாமல் ஒலித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறது.
இன்றைய காலத்தில் அவர்களின் எதிர்ப்புணர்வு மேலும் வலுவடைந்திருக்கிறது. தங்களுக்கு நேரடியாக ஏற்படும் பாதிப்பிற்காக மட்டுமல்லாமல் தங்களைச் சார்ந்தவர்கள், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்பு என சமூகத்தை அச்சுறுத்தும் அனைத்துக்கும் எதிராகப் போராடத் தொடங்கியுள்ளார்.
இந்தப் போராட்டத்தினைப் பற்றி பாஜக மற்றும் இதனை ஆதரிப்பவர்களின் கருத்து ஒன்று போலவே இருக்கிறது. காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் தூண்டுதலினாலேயே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லிக் கொண்டே இருகிறார்கள். ஆனால் போராட்டக் களத்தில் நிற்கும் ஒவ்வொருவரும் யாருக்காக எதற்காக குரல் கொடுக்கிறோம் என்பதைத் தெளிவாகவே முன்னிறுத்துகிறார்கள்.
தேசிய குடியுரிமை சட்டம் என்பது யாருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் இது போன்ற அவசர சட்டங்கள் இந்தியாவை அச்சுறுத்தும் என்பது தெரிந்தே தங்கள் முழக்கங்களை வைக்கின்றனர்.
டிசம்பர் 12ஆம் தேதி குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்கங்கே குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருந்தன. புது டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழகத்திலும் எதிர்ப்பு போராட்டம் தொடங்கியிருந்தது. போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தபோதே வரப்போகும் தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டும் இருந்திருக்கின்றனர். அமைதிப் போராட்டமாக இருந்ததை டிசம்பர் பதினைந்தாம் தேதி அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் வன்முறைக் களமாக மாற்றத் தொடங்கினர். வளாகத்துக்குள் இருந்த ஜாகிர் உசேன் நூலகத்தில் உள்ள புத்தகங்களுக்கு நெருப்பு வைப்பது, கண்ணில் கண்டவர்களை அடித்து காயப்படுத்துவது, பெண்களை அடிப்பது, இதோடு ஐம்பது பேரை கைது செய்தது (மறுநாள் விடுவிக்கப்பட்டனர்) என்று அதிரடியாக காவல்துறை இறங்கியதும் மாணவர்கள் மத்தியில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. தேர்வுக்குத் தயாராவதற்காக தங்களின் ஊர்களுக்கு சென்ற மாணவர்களை அவர்கள் பெற்றோரே திரும்பவும் போராடுவதற்கு பல்கலைகழகத்துக்கு அனுப்பி வைப்பதும் தொடங்கியது. பொதுவாகவே இஸ்லாமிய சமூகம் தங்களின் பெண் பிள்ளைகளை மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கும் பழக்கம் கொண்டது. இந்தப் போராட்டதில் தங்களின் பெண் பிள்ளைகளை பெற்றோரே களத்துக்கு அனுப்பியிருக்கின்றனர். மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் பெரும்பாலும் மாணவ மாணவிகளின் தாய்மார்களே. “நாங்கள் இந்தத் தேசத்தின் குடிமக்கள் என்பதை யாருக்கு நிரூபிக்க வேண்டும்? எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலம் இது..” என்பதை அவர்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.
அரசும் இது இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டமல்ல இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிரான தங்களின் எதிர்ப்பைத் தொடரவில்லை என்றால் அடுத்தடுத்து என்னவெல்லாம் நடைபெறும் என்பதன் சாத்தியங்களை உணர்ந்தே அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நிற்கின்றனர்.
“இதற்கு முன்பு ஜேஎன்யூ உட்பட பல்வேறு பல்கலைகழகங்களில் வெவ்வேறு போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அதன் வளாகத்துக்குள் நுழைய காவல்துறை தயங்கியிருக்கிறது. ஆனால் நாங்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்துகையில் எங்கள் வளாகத்துக்குள் காவல்துறை அத்துமீறி நுழைந்து எங்களை அடிக்கிறது” என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவி நர்கிஸ். நர்கிஸின் இந்தக் குரல் மொத்தக் கொந்தளிப்பின் அடையாளம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கும் ஒரு பல்கலைக்கழகம் என்பதாலேயே தங்களின் குரல் வெளிப்படக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருந்திருக்கிறது என்பதே அவர்கள் வாதமும்.
இதுவரை தங்களின் முக அடையாளத்தைக் கூட வெளியில் காட்டாத பெண்கள் இவர்கள். வீதிக்கு இறங்கி தங்களை நோக்கி அச்சுறுத்த வரும் காவலர்களை ஆவேசமாக எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள அரசு முயற்சி செய்யத் தான் வேண்டும்.
டில்லியில் போராட்டத்தில் பங்கு கொண்ட ஒரு பெண் அத்தனை நிதானமாக பேசுகிறார். “நான் ஒரு குடும்பத்தலைவி. வீட்டை விட்டு வெளியே வருவதற்குக் கூட நான் பலரிடம் அனுமதி பெற்றாக வேண்டும். இன்று நான் வீதியில் இறங்கியிருக்கிறேன். எனது நாட்டினை விட்டு நீங்கள் துரத்துவீர்கள் என்றால் நான் வேறு நாட்டுக்குப் போக முடியாது. அதானால் வீதிக்கு வந்திருக்கிறேன். என்னுடைய வீட்டில் நான் வேலை செய்து கொண்டிருக்கும்போது அந்நியன் புகுந்து ‘வெளியே போ. இது இனி உன் வீடு இல்லை’ என்று சொல்லும்போது நான் அதிர்ச்சியடையத் தானே செய்வேன்..இது போன்ற அதிர்ச்சியை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..என்னுடைய சகோதர சகோதரிகளுடன் நான் இப்போது கைகோர்க்க வேண்டும்” என்கிறார் ஒரு பெண். இந்த நிதானம் அவர் ஐந்து நாள் போராட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்ட பின் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆவேசத்தை விட வலிமையானது ஒன்றை நிதானமாய் அணுகுவது.
இருபது வயதான ஷாஹிதா முதன்முறை தனது வாழ்நாளில் போராட்டத்தில் கலந்து கொள்வதாக சொல்லியிருக்கிறார். “எது உங்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது?” என்கிற ஒரு தனியார் நிறுவன நெறியாளரின் கேள்விக்கு பதில் அவரிடமிருந்து இப்படியாக இருந்தது “சூழல் தான் எங்களை போராட வைக்கிறது. குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது என்று செய்திகள் வரத்தொடங்கியதும் எங்களை அச்சம் சூழந்து கொண்டது. உண்மையிலேயே என்னசெய்வதென்று தெரியவில்லை. ஒரு பெண்ணாகநான் என்ன செய்துவிட முடியும் என்றே தோன்றியது. பிறகு எல்லோரும் போராட்டத்துக்கு வருகிறபோது என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? இதுவரை காவல்துறையினர் எங்களது பாதுகாப்புக்காக என்றே நினைத்திருந்தேன். ஆனால் இன்று அப்படியல்ல.. எங்களை தாக்குவதற்காக என்று தெரிய வந்திருக்கிறது. என்னுடைய நாட்டில் எனது அடுத்த தலைமுறைக்கு இந்த நிலைமை வரக்கூடாது என்றால் நான் போராடத் தானே வேண்டும்”. என்கிறார் ஷாஹிதா.
“என்னுடைய அப்பா இராணுவத்தில் வேலை செய்கிறார். கார்கில் போரில் பங்கு கொண்டார். எதிர்காலத்தில் எங்களை இஸ்லாமியர் என்று இந்த பாஜக அரசு வெளியேற்றி, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு இங்கு குடியுரிமை கொடுக்குமென்றால் அதை எப்படி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? இப்படி நடக்காது என்று அரசு தெரிவித்திருகிறது. ஆனால் அதை எப்படி அவர்களால் உறுதி செய்ய முடியும்? இதுவரை எங்களுக்கு எதிராகவே தான் இயங்கியுள்ளது” இப்படி சொல்லு பெண் சுமர் கலித் போராட்டத்தின் தொடக்கத்தில் இருந்து தீவிரமாக குரல் கொடுப்பவராக இருக்கிறார்.
இந்தப் போராட்டங்களை அரசும் எதிர்பார்த்திருக்கவே செய்யும். ஆனால் அரசும், இந்தநாடும் எதிர்பாராத ஒன்று பெண்கள் இந்தப் போராட்டத்தை முற்றிலுமாக தங்கள் வசப்படுத்துவார்கள் என்பது. பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்போதெல்லாம் ஏறப்ட்டிருக்கிறதோ அப்போதெல்லாம் முன்னணியில் பெண்களே நின்றிருக்கின்றனர். இதோடு நாட்டின் நிலவரத்தினை மௌன சாட்சியாகக் கண்டு கொண்டிருந்தவர்கள் தான் வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள் அவர்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் அத்தனைக் கூர்மையானவை. அவர்கள் கேள்விக்கு அரசிடமிருந்து பதில் கிடைக்காது எனும்போது தாங்களாகவே அரசுக்கு எச்சரிக்கையும் தந்துள்ளனர். “இந்து ராஜ்ஜியாக இந்தியாவை மாற்ற பெண்கள் விடமாட்டோம்” என்பது அவர்கள் பதிலாக இருக்கிறது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜிஈஎஸ் மாநாட்டில் ‘பெண் முன்னணியில் எல்லோருக்குமான வளம்’ என்கிற தலைப்பில் மோடி ஆற்றிய உரையில் சில வாக்கியங்களை சொல்லியிருந்தார். “பெண்கள் பல போராட்டங்களைக் கடந்து எல்லா நிலைகளிலும் முன்னேறி வருகின்றனர். பெண்கள் முன்னேற்றம் என்பது இந்தநாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது. இந்திய புராணப்படி, பெண்கள் சக்தியின் உருவகம்” என்றிருந்தார். இன்று சக்தின் உருவகமான பெண்கள் தான் நாட்டின் மையத்தை நோக்கி கேள்வி கேட்கின்றனர். நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சப்படுகின்றனர். குடியுரிமை சட்டம் குறித்து சரியான புரிதல் இல்லதவர்கள் என்று அரசும் பாஜக ஆதரவாளர்களும் அவர்களை நோக்கி சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன்வைக்கும் அடிப்படைக் கேள்வியினைக் கூட அவர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை.
உஜ்வாலா திட்டம் போல பெண்களை சமையலறைக்குள் திருப்திபடுத்தும் திட்டங்களினால் இனி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை அரசு உணரத் தான் வேண்டும். இந்தப் பெண்கள் கற்றவர்கள், அறத்தினை எதிர்பார்ப்பவர்கள் அதனாலேயே கோபம் கொண்டிருப்பவர்கள். தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்து ராஜ்ஜியம் என்கிற ஒற்றைக் கொள்கையோடு ஆட்சியைப் பிடிக்க சங்கம் அமைக்கும் முன்பே தங்கள் மூதாதையர்களின் வேர் பிடித்து இந்த மண்ணில் வாழும் பெண்கள் இவர்கள். தங்கள் அடையாளமாக இந்த மண்ணை நினைப்பவர்கள்.
இந்தப் பெண்களின் கோபம் வெற்றுக் கூச்சல் இல்ல…கையறு நிலைக்குத் தங்களை ஆளாக்காமல் இருக்க வேண்டி உரிமையை நிலைநிறுத்தும் குரல்கள். இந்தக் குரல்களுக்கு நடுஇரவில் இயற்றப்பட்ட சட்டத்தைக் காட்டிலும் வலிமை அதிகம்.