திருநெல்வேலி தாண்டி கருங்குளம் தொட்டதும் ஒருபக்கம் தாமிரபரணி உடன் வந்து கொண்டே
இருந்தது. அகலம் குறைந்த பொருநை அங்கு. அந்த நதியின் சிறப்பே உபரி நீர் மட்டுமே கடலில்
சேரும் என்பதும் தான். பயன்பாட்டுக்கு பிறகான நீரே கடலடையும். கடைசி அணையான
ஸ்ரீவைகுண்டத்துக்கு முன்பு செய்துங்கநல்லூருக்குப் பிறகு இடதும் வலமுமாக விரிந்திருக்கும்
நிலம் ஆதிச்சநல்லூர். அங்கு பாண்டிராசா கோயிலும் சுட்ட செங்கற்களால் உருவாக்கப்பட்ட பல
நூற்றாண்டு படித்துறையும் தான் கட்டடங்கள். மற்றவை எல்லாம் பெரும் சரளைக்காடு.
குத்துசெடிகளும் பொடிக் கற்களும் கொண்ட பூமி. மொத்தம் 114 ஏக்கர். அதைச் சுற்றிலும்
தொல்லியல் துறையினர் வேலி அமைத்திருக்கின்றனர்.
அதன் நடுவில் ஓயாமல் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வரலாற்றின் தொடக்கத்தினை
ஆய்வு செய்யும் பணி சலிப்பில்லாமல் நடக்கின்றன. எந்த நொடியில் எந்த அற்புதம் கிடைக்கும்
என்று யூகிக்க முடியாத அளவு ஆழம் கொண்டிருக்கிற பூமி அது.
அந்த ஆதிச்சநல்லூர் மேட்டுப் பரப்பினை சுற்றிலும் நீர்நிலைகள். நான் கார்த்திக் புகழேந்தி,, ஜீவ
கரிகாலன் மூவரும் அகழாய்வு செய்யப்படும் பகுதிக்கு செல்வதற்கு முன்பே அனுமதி
பெற்றிருந்தோம். எங்களுக்கு அனுமதி பெற்றுத் தந்தது திரு. முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள்.
காமராசு அண்ணனை பதினைந்து வருடங்களாகத் தெரியும். திருநெல்வேலி தூத்துக்குடியின்
ஒவ்வொரு சதுர கிலோமீட்டரையும் அறிந்தவர். ஆதிச்சநல்லூர் இன்று சர்வதேச கவனம்
பெற்றதில் அவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கும் ஒரு காரணம். அதன்படியே இன்று
அங்கு on site museum தொடங்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் மேட்டுக்கு நாங்கள் சென்றிருந்தபோது பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்
கொண்டிருந்தன. சொற்பமானவர்கள் மட்டுமே பணி செய்ய முடிகிற வேலை அது. எங்களை
வழிநடத்தியவர் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் திரு. அருண்குமார் என்பவர்.
எங்களுக்கு கேள்விகள் பல இருந்தன. சங்கப் பாடல்களில் பரிச்சயம் கொண்ட கார்த்தி புகழேந்தி
பேசப்பேச அருண்குமாரிடம் பேசப்பேச இருவருக்குமான உரையாடலில் ஆர்வம் கூடிக்
கொண்டே போனது.
முதலில் அது ஒரு இடுகாடு மட்டுமே தானா என்கிற சந்தேகம் தோன்றியது. அருண்குமார்
எதையும் தன் அனுபவம் கொண்டும் ஆதாரங்கள் வைத்தும் மட்டுமே முன்வைத்தார். அதனால்
பதில்கள் சிறப்பாக அமைந்திருந்தன. கிமு 3000 முதல் கிபி 3000 வரையிலான காலகட்டத்தை
சங்ககாலம் என்று வரையறை செய்திருப்பதால் இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை
சங்ககால பொருட்கள் என்று பொதுவாக சொல்கிறோம் என்றார்.
இதற்கு முன்பும் சில முறை சென்றிருக்கிறேன். தொல்லியல் துறையின் நேரடி கட்டுப்பாட்டுக்கு
வந்த பிறகு இது தான் முதன்முறை பயணம். அங்கு நிற்கும்போதெல்லாம் ஜெர்மனில் இருந்து
2
1876 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு ஆதிச்சநல்லூரின் பரம்பில் வந்து நின்ற ஜாகோரை
நினைக்காமல் இருந்ததில்லை. அவர் தான் இந்த இடத்தை முதலில் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
அடுத்ததாக அலெக்சாண்டர் ரீ நடத்திய ஆய்வுகள். இவை 1899 முதல் 1904 வரை
நடத்தப்பட்டன. அப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் யாவையும் மூவாயிரம் வருடப்
பழமையைச் சொன்னது.
இவை குறித்து வாசிக்க ஆர்வமுள்ளவர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள்
ஆதிச்சநல்லூரைக் குறித்து எழுதிய மூன்று புத்தகங்களை வாசிக்கலாம்.
திரைப்படங்களில் கூட அகழாய்வுகள் செய்யப்படும் இடங்கள் குறித்து பெரிதாகக்
காட்டப்பட்டதில்லை. ஒன்றிரண்டு அயல் நாட்டுத் திரைப்படங்களில் பார்த்ததுண்டு. இந்திய
நிலத்தில் அகழாய்வு செய்பவர்கள் குறித்து ‘ஹே ராம்’ காட்டியிருக்கிறது. ஆனால் அகழாய்வு
செய்யப்படும் இடத்துக்கு நேரடியாக சென்று என்ன மாதிரியான பணிகள் செய்யப்படுகின்றன
என்பதைப் பார்ப்பதற்கு சிலிர்ப்பாகத் தான் இருந்தது. வரலாறினை ஆய்ந்து எடுக்கும் ஒரு
காலகட்டத்தில் அதன் ஒரு நாள் சாட்சியாக நாங்கள் இருந்திருக்கிறோம் என்பதே காலம் முழுக்க
நினைக்கத் தகுந்த நினைவு.
ஆதிச்சநல்லூரிலும் கொற்கையிலும் அகழாய்வு மேற்கொண்டு கண்டெடுத்த பொருட்களையும்
அதன் மாதிரிகளையும் திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் பெரிய அரங்கில்
அமைத்திருந்தனர்.
அருண்குமார் அவர்களிடம் பேசியதில் அவர் சொன்ன தகவல்கள் முக்கியமானவை. இந்த இடம்
வெறும் இடுகாடாக மட்டுமே இருந்திருக்க வாய்ப்பில்லை. முதுமக்கள் தாழிகள்
கிடைத்திருக்கின்றன. அதே சமயம் வீடுகளில் பயன்படுத்தும் ஜாடிகளும் இங்கு கிடைத்துள்ளன.
முதுமக்கள் தாழி என்பது பொதுவாக நம்முடைய அறிதலின்படி இறந்தவர்களை ஒரு பெரிய
தாழிக்குள் வைத்து அவர்களுக்கு மறுஉலகிற்கு எடுத்துச் செல்ல தேவைப்படுகிற பொருட்களை
உடன் வைப்பது என்பது தான். அதை இன்றளவும் நாம் இறந்தவர்களுக்கான் படையலாக
தொடர்கிறோம். ஆனால் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கும் தாழிகளுக்குள் முழு மனித எலும்பு
வைக்கப்பட்டிருக்கவில்லை. மண்டையோடுகள் எல்லா தாழிகளிலும் கிடைத்திருக்கின்றன. அதே
போல் கை மற்றும் கால் எலும்புகள். சரி, ஒருவேளை எரித்தபிறகு கிடைத்த எலும்புகளாக
இருக்குமா என்றால், அதுவும் இல்லை. ஏனெனில் அந்த எலும்புகள் எரிக்கப்பட்டதற்கான சுவடு
இல்லை. புதைக்கப்பட்டபின் விலங்குகள் உண்டது போக மீதமுள்ள எலும்புகளாக இருக்கலாம்
என்பதும் இல்லை. ஏனெனில் எந்த எலும்புகளிலும் விலங்குகள் கடித்ததற்கான தடைகள்
இல்லை. பின் எப்படி குறிப்பிட்ட சில எலும்புகள் மட்டும் உள்ளன என்கிற கேள்விக்கும் விடை
காண வேண்டியிருக்கிறது என்றார் அருண்குமார்.
இத்தனை மண்பாண்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றால். அருகிலேயே மக்கள் குடியேற்றப்
பகுதியும் இருந்திருக்க வேண்டுமல்லவா என்கிற கார்த்திக்கின் கேள்விக்கு யோசிக்கும்படியான
3
விடையைத் தந்தார் அருண்குமார். “சுற்றிலும் பாருங்கள்..நீர்நிலைகள் இருக்கின்றன”. என்று
அவர் காட்டிய இடங்களிலும் வரும் வழிகளில் நாங்கள் பார்த்த நிலத்தின் தன்மைக்கும் நீர் சூழ்
பகுதியின் ஒரு மேட்டுப் பகுதி தான் ஆதிச்சநல்லூர் என்பது புரிந்தது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பாக சுற்றிலுமுள்ள இந்த நிலம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செயது பாருங்கள்.
எத்தனையோ இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆறுகள் இடம் மாறியிருக்கும்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும். ஏனெனில் அணைகள் கட்டப்படாத காலகட்டம். ஊருக்குள்
நீர் வந்திருக்கலாம். நாம் பார்க்கும் நீர்நிலைகள் ஒருகாலத்தில் ஊராக இருந்திருக்கலாம்.
அங்கிருந்து கூட பானை செய்யப்பட்டிருக்கலாம்..” என்றார். ஒரு வினாடி அவர் சொன்னதை
நினைக்கையில் நீருக்குள் அமிழ்ந்த மூதாதையர்களின் நிலம் கற்பனைக்குள் எழுந்து வந்தது.
இதை உறுதிபடுத்திக்கொள்ளும் ஆய்வினை செய்வதற்கு இயற்கையாகவே சாத்தியம் இல்லை
என்றார். ஒரு காரணம், தாமிரபரணி வற்றாத ஜீவநதி என்பதும்.
மேட்டுப் பகுதியின் மேல்பகுதியில் இருக்கும் முதுமக்கள் தாழியின் அளவு மேட்டு நிலத்தின் கீழே
செல்லச் செல்ல அளவில் குறைந்திருப்பதையும் சொன்னார். அதற்கு சரியான காரணம்
தெரியவில்லை. ஒருவேளை இந்த ‘தாழி’ சடங்கின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்திருக்கலாம்
அல்லது நம்பிக்கை பெருகி பிற்காலத்தில் முதுமக்கள் தாழியின் அளவு பெரிதாகியிருக்கலாம்.
ஆனால் எதையும் உறுதியாகக் கூற இயலவில்லை. ஆய்வின் முடிவுகள் ஒவ்வொன்றும் சரியான
ஆதாரத்துக்குப் பிறகே சொல்ல முடியும் என்றார்.
ஆதிச்சநல்லூர் என்பது நம் வசதிக்காக அடுத்து உள்ள ஊரின் பெயரோடு வைத்திருக்கிறோம்.
இதன் அசலான பெயர் என்னவாக இருந்திருக்கும் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை
ஏதேனும் ஒரு பானையில் குயவர் ஊரின் மேல் கொண்ட பிரியத்தால் செதுக்கியிருக்கலாம். அது
என்றேனும் கிடைக்கவும் செய்யலாம்.
அந்த நிலம் யூகங்களின் பொக்கிஷமாக இருந்ததை உணர முடிந்தது. கற்பனைகளின் வழி
உண்மையைக் கண்டைவதற்கான பொருத்தமான நிலம் அது. ஒரு இடத்தைத் ஐந்து
சென்டிமீட்டர் தோண்டுவதற்கு அத்தனை கவனகுவிப்பும் நுணுக்கமும் தேவைப்பட்டதை
நேரிலேயே பார்க்க முடிந்தது. சிறிய பிரஷ் ஒன்றினைக் கொண்டு மண்ணினை விலக்கிக்
கொண்டே இருக்கிறார்கள். அசாத்தியமான பொறுமை தேவைப்படுகிற பணி. தோண்டப்பட்ட
இடங்களில் ஒருபக்கம் வெள்ளை மண்ணும், தொட்டெடுத்தாற்போல செம்மண்ணும்
கலந்திருப்பத்தைக் காட்டினார். இந்த மண்ணை வைத்து காலத்தைக் கணக்கிட மாதிரிகளை
அனுப்பியுள்ளோம். இன்னும் அதன் ‘ரிசல்ட்’ வரவில்லை என்றார்.
“எந்த நொடி வேண்டுமானாலும் உங்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய அல்லது நீங்கள்
எதிபார்க்கிற எதோ ஒன்றை நீங்கள் அடையலாம் இல்லையா? இதற்கு முன்பு அப்படியானதோரு
தருணம் வைத்திருக்கும். எப்படி இருக்கும் மனநிலை?”: என்று கேட்டதற்கு அருண்குமார்
புன்னகைத்தார். நீண்ட புன்னகை அது.
தாழியினை மூடியிருந்த மூடி ஒன்றினைக் காட்டினார். மிகுந்த அகலமும் உயரமும்
கொண்டிருந்தது. அருங்காசியகத்தில் மாதிரிக்கு வைக்கப்பட்டிருக்கும் டைனோசர் முட்டை
4
போன்ற வடிவம் கொண்ட மூடிகள் அவை. இதனை உடையாமல் எடுப்பது ஒரு சவால் என்றால்,
தாழியைச் சுற்றி அடுக்கப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு ‘படையல்’ பானைகளை சிறிய சேதாரம் கூட
மீட்பது என்பது இன்னும் கடுமையான சவால் என்றார்.
அதனாலேயே யாரையும் அவர்கள் அந்தப் பகுதியில் அனுமதிப்பதில்லை.
பதினைந்து கோடி ரூபாய் செலவில் இன்னும் சில வருடங்களில் அங்கு ஒரு அருங்காட்சியகம்
தயாராக இருக்கும்.
மூவாயிரம் வருடங்களுக்கு முன்பான கதைகளை , வாழ்க்கையை நம்மிடம் சொல்வதற்கு நம்
மூதாதையர் மூச்சடக்கிக் காத்திருக்கிற இடம் அது. அவர்களின் கதைகளும், இருப்பும் இப்போது
நமக்குத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. பானை செய்த குயவரையும் செங்கற்களை சுட்ட
பணியாளர்களையும், வீடுகளைக் கட்டிய கலைஞர்களையும் சங்கு அணிகலன்கள் செய்து தந்த
விற்பன்னர்களையும் நினைத்தபடி இருந்தேன்.
பல நூறாண்டுகள் கடந்து அவர்களின் படைப்புகள் வரலாறினை சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அவர்களைத் தேட வைத்திருக்கின்றன. ஒரு காதலன் காதலிக்கு அணிவித்த சங்கு மாலையாக
இருக்கலாம். கண்ணாடிப் பெட்டகத்திற்குள் அதைப் பார்க்கையில் அணைந்திருந்த பெண்ணின்
கழுத்தினை கற்பனை செய்யாமல் இருக்க இயலவில்லை. “இதை நீ தொலைக்கவே கூடாது”:
என்று அணிவித்தவன் சொல்லியிருந்தால் அந்தப் பெண் எத்தனை வன்மையாக வாக்கினைக்
காப்பற்றியிருக்கிறாள் என்று தோன்றியது.
அங்கிருந்து கிளம்பும் முன் மூச்சினை ஆழ இழுத்துக் கொண்டு கிளம்பினேன்.
3500 ஆண்டுகாலத்தின் பரிசு அது.