சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து குடும்பத்தோடு நாகர்கோயில், கன்னியாகுமரி கேரளா பகுதிகளுக்கு சென்றிருந்தோம். பயணத்திற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மற்றும் நாகர்கோயில் நாகராஜா கோயிலும் இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்பு அங்கெல்லாம் சென்றிருந்தாலும் அந்த முறை நான் சென்றபோது கிடைத்த அனுபவம் வேறாக இருந்தது. காரணம் இந்த இரண்டு கோயில்கள் குறித்தும் நான் வாசித்திருந்த புத்தகங்கள் தான்.
தாணுமாலயன் கோயில் குறித்த வரலாற்று செய்திகளும், சமூக நிகழ்வுகளையும் வாசித்துவிட்டு அங்கு போனபோது ஒவ்வொரு கோயிலுக்கும் இப்படி வரலாறு எழுதப்பட்டால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கோயிலை மையப்படுத்தியே பல ஊர்கள் உருவாகின. அ.கா பெருமாள் கோயில்களைப் பற்றி எழுதுவதென்பது அந்த நகரத்தின் வரலாறையும் சேர்ந்து தான். தாணுமாலயன் கோயிலில் மார்கழி மாதம் நடக்கும் திருவிழாவில் வெண்கலப் பாத்திரக் கடைகள் திறக்கப்படுமாம். புதிதாய் திருமணமான பெண் தை மாதம் பொங்கல் வைப்பதற்கு புது வெண்கலப் பானை வாங்கித் தர இந்தத் திருவிழாவுக்காகக் காத்திருப்பார்களாம். இப்படி சிறு தகவல்கள் தொடங்கி கல்வெட்டுகள், கதைப்பாடல்கள் என மாபெரும் வரலாற்று ஆவணம் தாணுமாலயன் கோயிலைப் பற்றிய புத்தகம்.
அதே போல நாகராஜா கோயில் பற்றிய தகவல். கோயில் மிகச்சிறியது. ஆனால் அதன் வரலாறு பல கிளைகளைக் கொண்டது. அந்தக் கோயிலுக்கும் விஷக்கடி மருத்துவத்துக்கும் உண்டான தொடர்பினைப பற்றி பெரும் குறிப்புககைத் தந்திருப்பார். அங்கிருக்கும் புற்று மண்ணுக்கு எந்த தோல் நோயையும் ஆற்றும் ஆற்றல் உண்டு என்பது மூடநம்பிக்கை அல்ல என்பதை அவர் விவரித்த விதம் குறிப்பிட வேண்டியது. இதை வாசிக்கையில் நாம் எத்தகைய தாவர செல்வங்களை வளர்ச்சி என்கிற பெயரில் அழித்திருக்கிறோம் என்பது தெரிய வரும்.
நாஞ்சில் நாட்டுக்கரரான அ.கா பெருமாள் தென்குமரியின் வரலாறைத் தேடித் தேடி ஆய்வு செய்தவர். இந்தியாவின் மிக முக்கியமான ஆய்வாளர். ஆய்வாளர்கள் பலர் இருக்க, அ.கா பெருமாள் அவர்களைக் குறிப்பிடக் காரணம், அவர் எழுத்தின் எளிமை. தனக்குத் தெரிந்ததை, சிக்கலான ஒன்றை மிக எளிமையாக அவரால் வெளிப்படுத்த இயலும்.
கிராமங்களில் பல ஆயிரம் வருடங்களாக பொதிந்திருக்கும் பண்பாடுகளை அவர்களே மறந்த பிறகும் தேடித் தேடி ஆவணப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். வரலாறு என்பது கல்வெட்டுகளிலும், ஆங்கிலேயர் எழுதிய நூல்களில் மட்டுமில்லை அது மக்களின் வாய்மொழிப் பாடல்களிலும் பழமொழிகளிலும் சிறு தெய்வங்களிலும் உண்டு என்பதை நம்பியவர்களில் ஒருவர். இவரது பல கட்டுரைகளிலும் புத்தகங்ளையும் வாசிப்பவர் தமிழ்நாட்டின் முன்னோர்கள் மீது அன்பும், பிரமிப்பும், கோபமுமாக எல்லாம் சேர்ந்த உணர்வுகளைக் கொண்டிருப்போம்.
தகவல் சேகரிக்க கிராமங்கள் தோறும் அலைந்து திரியும் இவரது அனுபவங்களை எழுதினாலே பெரும் சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வந்துவிடலாம். ஒரு உதாரணம் ஒரு ஊரில் இராப்பாடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் வாழ்கிறார் என்று கேள்விப்படுகிறார் அ.கா பெருமாள். இராப்பாடி என்பவர்கள் எனக்கு விவரம் தெரிந்த போதிலும் கூட எங்களுடைய கிராமங்களுக்கு இரவு நேரத்தில் வந்து கொண்டிருந்தனர். “அம்மா…தாயே..” என்று அடிக்குரலில் இருந்து நீளமாக இறைஞ்சும் அவரகளது குரல்களைக் கேட்டு நான் பதறியிருக்கிறேன். பல வீடுகளில் “சேட்டை பண்ணா..இராப்பாடிகிட்ட பிடிச்சு குடுத்துருவேன்” என்று சொல்லித் தான் குழந்தைகளை மிரட்டுவார்கள். பெண்களும், குழந்தைகளும் அவர்களைப் பார்க்கவே கூடாது என்பது பொது நம்பிக்கையாக இருந்தது. இதனால் நான் குரல்களைக் கேட்டிருக்கிறேன், அவர்களைப் பார்த்ததில்லை. இராப்படிகள் குறித்த எனது மனதில் உள்ள சித்திரம் என்பது குரல்களும் எனது அச்சமும் தான். அவற்றை அ.கா பெருமாளின் கட்டுரை தான் மாற்றித் தந்தது.
நாகர்கோயில் பகுதியில் செல்லையா என்று ஒரு இராப்பாடி இருக்கிறார் என்கிற தகவல் கேள்விப்பட்டு ஒரு கார்த்திகை மாத இரவில் இரு சக்கர வாகனத்தில் காடும் மேடும் கடந்து பயணித்திருக்கிறார் அ.கா.பெருமாள். செல்லையாவை சந்திக்கிறார். பெருமாள் அவர்கள் சந்திக்கையில் செல்லையாவுக்கு வயது எண்பத்திநான்கு. தங்கள் வாழ்க்கை குறித்த தகவல்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் செல்லையா. இந்த இராப்படிகளுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய உறவு இருந்திருக்கிறது. இராப்படிகள் தான் அப்போதைய நடமாடும் வானிலை அறிக்கை மையமாகவும், வேளான் கல்லூரியாகும் இருந்திருக்கிறார்கள். காற்றைக் கொண்டும், நட்சத்திரப் பெயர்வுகள் கொண்டும் மழை வருமா, எப்போது வரும், எந்த அளவுக்கு பெய்து முடியும் என்கிற தகவல்களையும், பயிரை அழிக்க வரும் பூச்சி வந்தால் அதற்கு என்ன மருந்து உரம் இடவேண்டும் என்பதையும் சொல்கிறவர்களாக இருந்திருக்கிறார்கள். காடுகளுக்குள் வாழும் இவர்கள் இரவு மட்டுமே ஒவ்வொரு கிராமத்துக்கும் வருபவர்கள். ஊருக்குள் வரும்போது கையில் உள்ள சிறு உடுக்கையை ஒலிக்க விடுவார்களாம். பெண்கள் அரிசியை ஒரு முறத்தில் வைத்து வீட்டு வாசலில் வைத்துவிட்டு குழந்தைகளோடு உள்ளே போய்விடுவார்கள். இராப்பாடி இனப் பெண்கள் அந்த அரிசியை எடுத்துக் கொண்டு விடுவார்கள். இராப்படி ஆண்கள் திண்ணையில் படுத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்களாம். வெவ்வேறு கிராமங்களுக்கு செல்வதால் ஒவ்வொரு கிராமத்தின் வேளாண் தகவல்களையும் மற்றொரு கிராமத்துக்குக் கொண்டு போய் சேர்ப்பதையும் கடமையாக செய்திருக்கிறார்கள். இவர்களைத் தான் பின்னாட்களில் நாம் இராப்பாடி பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்திருந்தோம். செல்லையா அ.கா பெருமாளை சந்திக்கும்போது அவர் நினைவிலிருந்து நாஞ்சில் நாட்டில் மட்டுமே விளையக்கூடிய அறுபது விதமான நெல்வகைகளை சொல்லியிருக்கிறார். இதில் பத்து விதமான நெல்வகைகளைத் தவிர வேறு எதுவும் இப்போதுள்ள விவசாயிகளுக்குத் தெரியவில்லை என்கிறார் அ.கா.பெருமாள். இராப்பாடிகளைப் பார்த்து பயந்ததற்காகவும் அவர்களை வெறும் யாசகம் கேட்டு வருபவர்களாக நினைத்ததற்காகவும் வயக்காட்டு இசக்கி என்கிற இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்த பின்பு வெட்கப்பட்டேன்.
கிராமப்புறங்களில் இப்போதும் ஒரு நம்பிக்கை உண்டு. பச்சை பாம்பினை கையால் பிடித்த பெண்ணின் சமையல் அத்தனை ருசிமிக்கதாக இருக்கும் என்பார்கள். அப்படியான ஒரு பெண்ணை அ.கா பெருமாள் சந்தித்திருக்கிறார். தூரத்து சுற்றுவழி முறைக்கு இவரது பெரியம்மாவின் மகள் அவர். சின்னக் குட்டி என்கிற பெயருடைய அவரைப் பற்றி பல இடங்களில் குறிப்புத் தருகிறார். சின்னக்குட்டி, சுசீந்தரம் தாணுமாலயன் கோயிலுக்கு தேவதாசியாக நியமனம் செய்யப்பட்டவர். அ.கா பெருமாள், சின்னக்குட்டியை சந்திக்கும்போது அவருக்கு வயதாகிவிட்டாலும் பலவற்றை ஞாபகத்தில் இருந்து தொகுத்து சொல்லியிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த பச்சை பாம்பு பிடித்த கதை. அப்போதெல்லாம் கோயிலுக்கு பொட்டு கட்டிய பெண்ணைத் தேடி முக்கியஸ்தர்கள் வரவேண்டுமென்றால் அந்தப் பெண்ணில் சமையலும் நன்றாக அமைய வேண்டுமாம். அதனால் சின்னக்குட்டியின் அம்மா, இவர் சிறுமியாக இருந்தபோது ஒருநாள் கண்களில் துணியைக் கட்டி வீட்டின் பின்புறத் தோட்டத்துக்கு அழைத்துப் போய் கையில் எதையோ கொடுக்க, கையில் பிடித்திருப்பது பாம்பு என சின்னக்குட்டிக்குத் தெரிந்து போனதாம். ‘கீழே போடாம, ஒரு தடவு தடவி விடு’ என்றிருக்கிறார்கள். சின்னக்குட்டியும் அப்படியே செய்ய அதன்பிறகு அவருக்கு சமையல் அற்புதமாக வாய்த்ததாம். நாஞ்சில் நாட்டு கறுத்தக் கறி, எண்ணெய்க் கத்திரிக்காய்த் தீயல், மொச்சைத் தீயல், மீன் புளிமொளம், சக்கா புளிக்கறி என குழம்பு வகைகளையும், கூட்டவியல், இடிச்சக்கா துவரன்,வறுத்தரச்ச துவையல், எரிசேரி என்னும் கறிவகைகளை சாப்பிடுவதற்காகவே சின்னக்குட்டியைத் தேடித் தேடி வருவார்களாம்.
அ.கா பெருமாள் அவர்கள் எழுதிய நூல்கள் இன்று அநேகமும் கிடைக்கின்றன. அவற்றை ஒருசேர வாசிப்பவர்களுக்கு அவருடைய உழைப்பு புரியும். ஒரு சிறிய தகவலுக்காக பல நூறு கிலோமீட்டர் அவர் அலைந்தது, பல வருடக்கணக்கில் காத்திருந்தது என்பதையெல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடியும். எதற்காக ஒருவர் இப்படி கால்கடுக்க அலைய வேண்டும்? ஆர்வம் மட்டுமே காரணமாக இருக்க முடியுமா என்றால், அதைக் கடந்து சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைத் தான் சொல்ல வேண்டும். ஒரு நாகரீக சமூகம் வரலாறை மறக்கக்கூடாது என்கிற பார்வையில் தான் அவர் பயணங்களை மேற்கொள்கிறார்.
சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு எமர்ஜென்சி காலச் சட்டத்தினைப் பற்றித் தெரிந்திருக்கும். அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது நாம் அறிந்த வரலாறு. இவர்களில் பாதிக்கப்பட்ட வேறு பலரும் இருக்கிறார்கள். அவர்களில் கரகாட்டம் ஆடியவர்களும் உண்டு என்பது அ.கா பெருமாள் தேடி சேகரித்த தகவல். மதுரையைச் சேர்ந்த ஒரு கரகாட்டம் ஆடும் பெண்ணை சந்திக்கும்போது அவர் கால்களை இழுத்து இழுத்து நடந்து வந்திருக்கிறார். அதற்கு காரணம் எமெர்ஜென்சி சமயத்தில் அரசாங்கத்தை எதிர்த்து ஆடிய கப்பல் பாடல் என்றிருக்கிறார் அவர். இபப்டி அடியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துப் போய் அடித்திருக்கிறார்கள். கரகாட்டம் ஆடுபவர்களுக்கு கால்கள் தானே மூலதனம். அரசை எதிர்த்ததற்காக தனது வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் பற்றிய குறிப்புகளை எந்தப் பத்திரிகையிலும் செய்திகளிலும் நாம் பார்க்கவில்லை. இது வெளியுலகத்துக்கு தெரிய வந்தது இவரின் கட்டுரை மூலமாகவே.
நாம் தமிழ்நாட்டுக்காரர்கள் என்று சொன்னாலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும், சாதிகளுக்கும் உள்ள சடங்குகள், திருவிழாக்கள், அவர்களின் பழங்கதைகள் இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிவதில்லை. உலகில் எதோ ஒரு மூலையில் நடக்கும் விஷயங்களை எல்லாம் நாம் பிரமித்து போய்ப் பார்க்கிறோம். ஆனால் நம்மிடையே காலம்காலமாக இருந்து வருகிற பழக்கங்கள், சுவாரஸ்ய நிகழ்வுகளை நமக்கும் நம்முடைய அடுத்தத் தலைமுறையினருக்கும் சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்? இந்த இடத்தை நிரப்புவதைத் தான் அ.கா பெருமாள் போன்றவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
யார் இவற்றை வாசிக்கிறார்கள் , வாசிப்பார்களா என்கிற எந்த பலனையும் எதிர்பாராமல் இப்போதும் தொடர்ந்து எழுதி வரும் அ.கா பெருமாள் அவர்கள் நமக்குக் கிடைத்த பெரும் வரம். இப்போதைய தலைமுறையினருக்குத் தெரியாத பல நூறு சடங்குகளையும் வரலாறையும், தாவரங்களையும் ஊர்களையும், தொழில்களையும், சிறு தெய்வங்களையும் ஒரு மனிதர் தேடித் தேடி சேகரித்து நம்பகத்தன்மையோடு தந்திருக்கிறார் அதுவும் வாசிக்க எளிமையாக. இது வரும் தலைமுறையினருக்கு பெரிதும் பயன்படப்போகிறது என்பது உறுதி. புதையலும், வளங்களும் நம் முன்னே கிடக்க, அதை எடுப்பார் எடுத்துக் கொள்வார்கள். அதற்கு அ.கா பெருமாள் போன்றவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள்.
நாம் தவறவிடக்கூடாத சுவாரஸ்யமான கதைசொல்லி மற்றும் ஆய்வாளர் அ.கா பெருமாள்.
(மல்லிகை மகள் இதழில் எழுத்து வாசம் தொடருக்காக எழுதியது)
அற்புதமான கட்டுரை. அ.கா.பெருமாள் அவர்களின் உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.
சோழர் வரலாறு, கல்வெட்டு, போன்றவற்றினை இன்றும் என்றும் நாம் காண, சதாசிவ பண்டாரத்தார்,இராசமாணிக்கனார் போன்றோரின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் உழைப்பும்ஏராளம் ஏராளம் என்பது தாங்கள் அறிந்ததே.
கல்வெட்டுகளையும் தவ்வைத்தாயையும் தேடித்தேடி சென்று காணும் போது, மூத்த சில வரலாற்று எழுத்தாளர்களும் உடன் வந்திருந்தனர். ஒரு சொல் உதாரணம் சொல்ல.. அதிலுருந்து எத்தனை கிளைச்செய்திகளையும் வரலாற்றையும் அள்ளிக்கொட்டினர், எந்த எதிர்ப்பார்ப்புமில்லா எளிமையும் தெளிவுமாக அவர்களின் நடை இன்னும் கண்களிலேயே இருக்கிறது.
இந்த கட்டுரையை வாசிக்கும் , வாசிக்கும் போது, அ.கா.பெருமாள் அவர்களின் உழைப்பும் தொண்டும் கண்முன்னே பிரம்மிப்பாக நிற்கிறது.
பழக்க வழங்கங்கள் ஏன் வந்தது என்பதன் காரணங்களும், வழக்கொழிந்த அரிய தகவல்களையும் இவரின் படைப்புகளால், காலமும் நிற்கும் என உணர முடிகிறது. அவசியம் வாசிக்கிறோம். எடுத்துரைத்து,
பகிர்ந்தமைக்கு நன்றி மிக.