பலிபீடத்தின் மீது மோதும் வலிகள்

0
521

 

பிரச்சனைகள் என்பது தேசங்கள் தோறும் பலவிதங்களில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் கவனிக்கப்படாது மறைந்து போன ஏதோ ஒரு சம்பவத்தினை யாரோ, எங்கோ உலக மனசாட்சியில் பதிவதின் விளைவாக தனிக்கவனம் பெறுகிறது. அதுபோன்று மதத்தின் அடக்குமுறையினால் காணாமல் போயிருந்திருக்க வேண்டிய மாபெரும் சோகம் ‘The Magdalene Sisters’ (2002) திரைப்படம் மூலமாக வெளிவந்திருக்கிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வாடிகன் நகர் வரை அசைத்துப் பார்த்திருக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குனர் பீட்டர் முல்லன் ஸ்காட் நகரத்தைச் சேர்ந்தவர். நடிகராக தனது திரைப்பட வாழ்வைத் தொடங்கிப் பிறகு இயக்குநரானவர். சேனல் 4 –ல் ஒளிபரப்பட்ட இந்த மாக்தேலின் பெண்களின் ஆவணப்படத்தைப் பார்த்ததிலிருந்து அவருக்கு இந்த பிரச்னையை எந்த வழியிலாவது அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்கிற எண்ணம் உருவாகி இருக்கிறது. “ அந்த ஆவணப்படத்தில் பேசிய பெண்கள் எல்லோரிடமும் உண்மை இருப்பது தெரிந்தது. இன்னும் அதிக மக்கள் இந்த விஷயம் குறித்து விழிப்புணர்வுப் பெற வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் திரைப்படமாக எடுக்க முடிவு செய்தேன்” என்கிறார் பீட்டர் முல்லன்.

ஒரு திருமண வீட்டிற்குச் சென்ற இடத்தில் தனது உறவினன் ஒருவனால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறாள் மார்கரெட். விஷயம் அன்றைய தினமே திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மத்தியில் வேகமாகப் பரவிச் சென்று விடுகிறது. தவறு செய்த ஆணை நோக்கி யாரும் பார்வையைத் திருப்பாமல், அனைவரும் மார்கரெட்டையே குற்றத்தோடுப் பார்க்கின்றனர். மறுநாள் காலை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல் அவளது மாமா மார்கரெட்டை எங்கோ அழைத்துச் செல்கிறார்.

வேறு ஒரு இடம். மருத்துவமனை ஒன்றில் சற்று முன்பு தனக்குப் பிறந்த ஆண் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள் ரோஸ். இறுக்கமான முகத்துடன் தன் அருகில் அமர்ந்திருக்கும் தன அம்மாவிடம் குழந்தையைப் பார்க்கச் சொல்லி கெஞ்சுகிறாள். அம்மாவின் முகம் உறைந்து போன இறுக்கத்துடனேயே இருக்கிறது. அப்போது அங்கு வருகிற பாதிரியார் ஒருவர் பாவத்தின் சாயல் படிந்த அந்தக் குழந்தையை வேறொரு தம்பதியினருக்கு தத்துக் கொடுத்துவிடும்படி ரோஸை நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார். தனக்கு நேர்வதை அவள் உணரும் முன்னரே அவளது குழந்தை அங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டு விடுகிறது. கதறுகிற ரோசை அவளது அப்பா எங்கோ அழைத்துப் போகிறார்.

மற்றொரு இடம். பெண்பிள்ளைகள் படிக்கும் ஒரு கான்வென்ட்டின் மாணவி பெர்னெட். ஒருநாள் அவள் ஆண்களிடம் பேசிக் கொண்டிருப்பதைத் தலைமை ஆசிரியர் பார்த்து விடுகிறாள். உடனே எந்த விசாரணையுமின்றி அவள் எங்கோ அனுப்பி வைக்கப்படுகிறாள்.

மார்கரெட், ரோஸ், பெர்னெட் மூவரும் ஒரே நாளில் மாக்தெலின் சலவைத் தொழிற்சாலைக்கு வந்து சேருகின்றனர். அயர்லாந்து கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவில் கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படுகிற அந்தத் தொழிற்சாலைக்கு மக்களின் மத்தியில் மற்றுமொரு பெயரும் இருக்கிறது. ‘வழிதவறிய பெண்களின் ரட்சிப்புக்கூடம்’ என்று கூறப்படுகிற அந்த இடத்தில் நடப்பது எதுவும் வெளி உலகத்திற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டே வருகிறது. அதன் உள்ளே சம்பளமில்லா பணிப்பெண்களாக ஒருமுறை நுழைந்த பெண்கள் மீண்டும் தங்கள் உறவுகளை சந்திக்கவோ வீட்டிற்குச் செல்லவோ அனுமதிக்கப்படுவது  இல்லை.

இந்த மூன்று பெண்களும் தலைமை கன்னியாஸ்திரி பிரிகெட் முன்பு நிறுத்தப்படுகிறார்கள். பிரார்த்தனைகளின் போது பயன்படுத்தப்படும் தனது சாந்தமான குரலில் பேச்சைத் துவங்குகிறார் சிஸ்டர் பிரிகெட். “பாவங்களில் வீழ்ந்து கர்த்தரால் புனிதப்படுத்தப்பட்ட மாக்தெலின் பெயரால் இந்த இரட்சிப்பு மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. அவளைப் போலவே இங்கே வருகிற இளம்பெண்கள் பிரார்த்தனையாலும், கடின உழைப்பாலும் புனிதப்பட வேண்டுமென்பதே எங்களின் கொள்கை” என்று சொல்லி அவர்களை வேலை செய்யும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

மூவரும் சலவை செய்கிற இடத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கு இவர்களைப் போன்றப்  பெண்கள் புதிதாக வந்திருக்கும் இவர்களை ஏறிட்டும் கூடப் பார்க்காமல் தங்கள் வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

வந்த முதல் நிமிடத்திலிருந்தே பெர்னெட்டுக்கு அந்த இடம் பிடிக்காமல் போய் விடுகிறது. அதிகாலையில் எழுந்திருப்பது, சாப்பிடுவது, பிரார்த்தனை செய்வது, தூங்குவது போன்ற நேரம் தவிர மீதி நேரங்களில் வேலைச செய்து கொண்டேயிருப்பது என அலுப்பூட்டுகிற அந்தத் தொழிற்சாலையை அவர்கள் வெறுக்கத் துவங்குகிறார்கள்.

மெல்ல மெல்ல அங்கு நடக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றாக பெர்னெட், ரோஸ், மார்கரெட் மூவரின் கவனத்திற்கும் வர அவர்கள் அதிர்ச்சியினை அடைகிறார்கள். ஒருசமயம் கிரிஸ்பினா என்கிற பெண் கன்னியாஸ்திரிகளின் கண்காணிப்புகளுக்கு நடுநடுவே மார்கரெட்டிடம் பேசத் தொடங்குகிறாள். துணிகளைத் துவைக்கையில் பாதிரியார் ஒருவரின்  அங்கியை மார்கரெட்டிடம் கொடுத்து, “இவரின் துணியைத் தவிர நான் எதை வேண்டுமானாலும் துவைக்கிறேன்” என அடிக்குரலில் சொல்லிவிட்டு மாதவிடாயின் ரத்தம் தோய்ந்த யாரோ ஒரு பெண்ணின் துணியை அருவருப்பு எதுவுமில்லாமல் துவைக்கிறாள். மார்கரெட்டுக்கு கிரிஸ்பினாவின் செயல் புதிராகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

எந்த நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த இல்லத்துப் பெண்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டால்கூட தண்டனைகளாய் கிடைக்கிற அடிகளும், அதுபோல தப்பிச் செல்ல முனைகிற  பெண்களைப் பிடித்து சிஸ்டர் பிரிகெட் தலை முடியை மழிப்பதையும் கண்டு அங்குள்ள பெண்கள் இயந்திரங்கள் போல வெற்று சாட்சியாக மட்டுமேப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் ரோஸ் மட்டும் ஒவ்வொரு நாளும் அங்கிருந்து தப்பித்துச் செல்லவேண்டும்  என்கிற தனது வைராக்கியத்தை விட்டுவிடாமல் அடைகாத்துக் கொண்டிருக்கிறாள். ஒருநாள் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. தப்பித்துப் போகும் தருணத்தில் மற்றவர்களைப் போலத் தானும்  மாட்டிக் கொள்கிறாள். சிஸ்டர் பிரிகெட் ரோஸின்  தலைமுடியை அவள் கதறலையும் பொருட்படுத்தாது கத்தரிக்கிறாள். “தலைமுடி வெட்டப்பட்டதால் உன் அழகு பறிபோகும்….உன் அகங்காரம் நாசமாய்ப் போகும்” என்கிறாள்  எப்போதும் போல அமைதியான தனதுப் பிரார்த்தனைக் குரலில் சிஸ்டர் பிரிகெட். மழித்தத் தலையுடன் ரத்தம் வழிந்த முகத்துடன் இருக்கும் பெர்னட்டிடம் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைக் கொடுத்து பார்த்து ரசித்துக் கொள்ளும்படி தனக்குத் திருப்தியான புன்னகையுடன் கூறுகிறாள்.   

இந்தக் கொடுமைகளின் அதீதமாக, ஒருநாள் அத்தனைப் பெண்களையும் நிர்வாணமாக நிற்கவைத்து அவர்களின் உடல்கள் குறித்து மோசமான, கீழ்த்தரமான மதிப்பீடுகளை சொல்லிச் சொல்லி  கன்னியாஸ்திரிகள் அனைவரும் மகிழ்கின்றனர். எந்த எதிர்ப்பும், மறுப்பும் தெரிவிக்க முடியாது  அனாதவராய் கூசிப் போய் நிற்கிற பெண்கள் யாவரும் வழியில்லாமல் பொம்மைகள் போலத் தங்களத வேலைகளுக்குத் திரும்புகின்றனர்.

நான்கு வருட இந்தத் தனிமையின் கொடுமைக்குப் பிறகு ஒருவழியாக மார்கரெட்டின் தம்பி கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார் ஒருவரிடம் விடுதலைக் கடிதத்தினைப் பெற்று தன் சகோதரியை மாக்தெலின் சலவைத் தொழிற்சாலையை விட்டு அழைத்துச் செல்ல வருகிறான். அங்கிருந்துக் கிளம்புகிற அவளை அடிமைகளாய் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பெண்களும் ஏக்கமாகப் பார்த்தபடி நிற்கின்றனர். அவர்களின் அந்தப் பார்வை விடுதலைக்கான சந்தோசத்தை தருவதை விட அவளுக்குக் குற்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.

ஒருநாள் காலை ரோஸ் தன்னுடைய குழந்தையின் பிறந்தநாளுக்காக ஒரு வாழ்த்து அட்டையை குழந்தைக்கு அனுப்பும்படியும் அதில் தன பெயரினைக் கூட போடத் தேவையில்லை எனவும் சிஸ்டர் ப்ரிகெட்டிடம் கெஞ்சுகிறாள். அவளது கோரிக்கையை தீவிரமாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், ரோஸின் மனம் வேதனைப்படும்படியும் பேசிவிடுகிறாள் பிரிகெட்.

அன்றைய தினமே அங்கிருந்து தப்பித்துச் செல்ல முடிவெடுக்கிறார்கள் ரோஸும், பெர்னெட்டும். மறுநாள் அதிகாலையில் அங்கிருந்து தப்ப முயல அவர்களைத் தடுக்க வருகிறார்கள் கன்னியாஸ்திரிகள். அவர்களைக் கத்தியைக் காட்டி அடக்கிவிட்டு ஓடுகின்றனர். தப்பித்ததும் உள்ளூரில் இருக்கும் ஒரு பெண்ணிடம் தங்களது நிலைமையை எடுத்துச் சொல்லி உடைகளை மாற்றிக் கொண்டு இருவரும் புதிய வாழ்க்கையைத் தேடி பிரிகின்றனர்.

விடைபெறுகிற அச்சமயத்தில் பெர்னெட்டிடம் ரோஸ், “நம்மை அவர்கள் பிடித்து விட்டால் என்ன செய்வது என்று கேட்கிறாள். “சுயமரியாதையுடன் வாழத்தொடங்கும் யாரையும், எவரும் நெருங்க முடியாது. தைரியமாகப்  போ” எனத் தீர்மானமானக் குரலில் சொல்லி பெர்னெட் அனுப்பி வைக்கிறாள். மார்கரெட்டும், ரோஸும், கிரிஸ்பினாவும், பெர்னெட்டின் வாழ்க்கை எதிர்காலங்களில் எப்படி அமைந்தன என்பதைச் சொல்ல முடிகிறது திரைப்படம்.

சமூகம் தங்களை ‘விபச்சாரிகள்’ என்று அழைப்பதை பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களில் பலரும் தாங்கள் ஏன் அங்கு அடைக்கப்பட்டுளோம் என்பதையே அறியாதவர்கள்.

ஒரு பெண் மீது பாலியல்ரீதியான தாக்குதல் நடைபெறுகிறபோது அதனைப் பெண்ணின் குற்றமாகவே பாவித்து அவளுக்கு தேவைப்படாத தண்டனையைக் கொடுத்து ஆண்டவனால் இரட்சிக்க சொல்லி மன்றாட வைப்பதன் அவலமான பாரபட்சத்தை பல காட்சிகள் சொல்லிச் செல்கின்றன.

‘நாங்கள் என்ன தவறு செய்தோம்?’ என ரோஸ் கேட்கிறபோது, எந்த உறுத்தலுமில்லாமல் ‘ஆண்களைக் கவரும் வகையில் நீங்கள் ஈர்ப்புடன் இருந்திருக்கிறீர்கள்’ என்கிற பிரிகெட்டின் மனது தொழிற்சாலை அவளுக்கு ஈட்டித் தருகிற லாபத்திலேயே நிறைந்து இருக்கிறது.

பணத்தின் மீதும், சினிமாப்படங்களின் மீதும் பிரிகெட் வைத்திருக்கிற ஆசையின் முன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியாத அவ்விளம்பெண்களின் எதிர்காலம் அற்பமானதாகவே இருக்கிறது.

அந்தத் தொழிற்சாலையை விட்டு தப்பித்துத் தனது வீட்டிற்கு வரும் மற்றொரு பெண்ணை அவள் தகப்பனே அடித்து, இழுத்துத் திரும்பவும் அங்கேயேக் கொண்டுவிடும் போது இறைவனின் கருணையைப் போதிக்கிற பிரிகெட் மென்சிரிப்புடன் பார்த்தபடி  நிற்கிறாள். தனது மகளை நோக்கி அவளது தகப்பனே வார்த்தைக்கு வார்த்தை விபச்சாரி என்று காறி உமிழும் போது, மற்றப் பெண்கள் ஏன் அங்கிருந்து தப்பிக்க நினைக்கவில்லை என்பது சொல்லப்படாமலே புரிகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் கண்காணிப்பிலாத ஒரு பொழுதில் மார்கரெட் வெளியே வந்து நிற்கிறாள். வெகு காலம் கழித்து வெளி உலகத்தை அப்போது தான் அவள் பார்க்கிறாள் என்பது தெரிகிறது. அப்போது அந்தப் பாதை வழியாக ஒரு கார் வருகிறது. அவள் அதனை நிறுத்தும்படி கைக்காட்டுகிறாள். காரில் உள்ளவன் அவளது சீருடையையும், அவள் நிற்கும் இடத்தையும் கணித்து விட்டு, அவளிடம் கேட்கிற கேள்வியை சந்திக்க இயலாமல் கூசிப் போகிறாள். தப்பிக்கிற சந்தர்ப்பம் அமைந்தும் சமூகம் எழுப்பும் முதல் கேள்வியின் தாக்குதலால் நிலைகுலைந்து திறந்திருந்த கதவின் வழியே திரும்ப அவள்  விடுதிக்கே வந்து சேருகிறாள்.

படம் முழுவதும் இடம்பெறுகிற சம்பவங்கள் அதிர்ச்சிகளை ஏற்படுத்தினாலும் உண்மை மிக வலுவாக இருப்பதால் படத்திற்கு எதிராக கட்டப்பட்ட விமர்சன , எதிர்ப்புக் குரல்கள் ஒரு நிலைக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் வலுவிழந்துபோனது.

கன்னியாஸ்திரிகளாக இருப்பவர்கள் ஆபாசமாக பேசுவதையும், பாதிரியார் ஒருவர் ‘கடவுளின் பிள்ளை’ எனத் தன்னை சொல்லிக் கொண்டு கிரிஸ்பினா போன்ற அப்பாவித்தனமான பெண்களைத் தங்களது கீழ்த்தரமான பாலியல் இச்சைக்கு உபயோகப்படுத்திக் கொள்வதையும் எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் காட்டப்பட்டதற்கும் மேலான மோசமான செயல்பாடுகள் அங்கு நடைபெற்றதாக பின்னர் அங்கிருந்து வெளியேறிய பெண்கள் கூறினார்கள்.

1880களில் தொடங்கிய இந்த மாக்தேலின் சலவைத் தொழிலகம் 1996ம் ஆண்டு மூடப்பட்டது. அந்த ஆண்டுகள் முழுக்க 30000 பெண்கள் கொத்தடிமைகளாக அங்கு இருந்தனர். அங்கிருந்து தப்பித்து வெளியேறிய பெண்கள் சொன்ன விஷயங்கள் வழியாகவும், அந்த தொழிலகத்தின் ஒரு பகுதியை கட்டுமான முதலாளி ஒருவருக்கு விற்றதன் மூலமாகவும் அங்கு நடக்கும் அதிர்ச்சியான , திரைமறைவு அவலங்கள் வெளி உலகத்திற்கு தெரியவந்தன . ஆனாலும் கூட தொடர்ந்து செயல்பட்டுக்  கொண்டிருந்த அந்த சலவைத் தொழிற்சாலை ‘வீட்டிற்கு ஒன்று அவசியம்’ என்ற விளம்பர வாசகங்களோடு சந்தையில் அறிமுகபடுத்தப்பட்ட துணி துவைக்கும் இயந்திரத்தின் வருகையைத் தாக்குபிடிக்க முடியாமல் நஷ்டத்தில் இயங்கி பின்னரே மூடப்பட்டது.

மாக்டலின் சலவைத் தொழிற்சாலை விடுதியில் இருந்து மீட்கப்பட்டவர்கள்

வெனிஸ் திரைப்பட விழாவில் படம் பங்கேற்கப் போகிறது என்றதும் இந்தத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்குகளுக்கு சில பாதிரியார்கள் சென்று படம் பார்க்க செல்லும் மக்களிடத்தில், ‘இதைப் பார்க்கும் நீங்கள் நரகத்திற்குத் தான் செல்வீர்கள்’ என்று பிரசாரம் செய்தார்கள். அதையும் மீறி மக்களிடத்தில் கிடைத்த வரவேற்பினால் எதிர்ப்புகள் அடங்கி நரகம் காணாமல் போனது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனிலிருந்து  வெளிவருகிற L’Osservatore Romano  என்கிற ஒரு செய்தி பத்திரிகை மாக்தேலின் விடுதியில் நடந்த சம்பவங்களுக்குத் தனது கண்டனத்தை வெளியிட்டது.

இளமைக் காலங்களில் அங்கு சேர்க்கப்பட்ட பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் திரும்பவும் பார்க்க முடியாமல் நாற்பது, ஐம்பது வருடங்கள் வரை அங்கேயே வாழ்ந்தும், இறந்தும் போனார்கள். அவர்களில் ஒருவரான மார்கரெட் புல்லன் என்பவரின் மகள் சமந்தா, மாக்தேலின் அமைப்புக்கு எதிராக ஒரு வழக்கினைத் தொடர்ந்தார்.

சமந்தாவின் அம்மா மார்கரெட் புல்லன் திருமணத்திற்கு முன்பே சமந்தாவைப் பெற்றெடுத்ததால் தனது பாவத்தைக் கழுவ அங்கு சேர்க்கப்பட்டவர். 37 வருடங்கள் எந்த உறவினரையும் பார்க்க அனுமதிக்கப்படாமல் பாவங்களைக் கழுவியும் அவர் சிறுநீரக, நுரையீரல் பிரச்சனையால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டு அங்கேயே இறந்தும் போனார். அங்கு சலவைக்காக உபயோகபடுத்தப்பட்ட வீரியம் மிகுந்த ரசாயனப் பொருட்கள் தான் தனது தாயின் மரணத்துக்கு காரணம் என்றும் அதற்குத் தக்க சிகிச்சைத் தராத மாக்தேலின் நிர்வாகத்தின் மீது சமந்தா வழக்குத் தொடர்ந்தார். இது அயர்லாந்து செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றவுடன் , பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்ல முன்வந்தனர்.

ஒரு கீழ்த்தரமான அடிமை வாழ்வை சுமந்திருக்கும் யோக்யதையைப் பெற்றிருக்கும் பெண்களின் அத்தனைத் துயரங்களையும் காட்டிய இந்தப் படம் கனமான உண்மைகளை முழுவதுமாக தாங்கிக் கொண்டிருக்கிறது.

இறைவனின் திருப்பெயரால் நடத்தப்படுகிற இதுபோன்ற அத்தனை சடங்குகளிலும், பரிகாரங்களிலும் திரும்பத் திரும்ப பெண்கள் மட்டுமே பாவங்களை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். சந்திக்கு வராதவைகளில் இன்னமும் மிச்சமுள்ளன.

(எனது ‘பெண்ணென்று சொல்வேன்’ புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரை)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments