தலபுராணம் புத்தகம்

0
224

தல புராணம் என்கிற இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன் வாசிக்கத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள். ஒன்று முழுவதும் சென்னையைப் பற்றிய வரலாற்றைச் சொல்கிறது என்பது. மற்றொன்று இதனை எழுதிய பேராச்சி கண்ணன். தகவல் தொடர்பியல் படிக்கையில் என்னுடைய சீனியர் அவர். படிக்கிற காலத்தில் பேராச்சி கண்ணனுடன் எங்கள் தொடர்பியல் துறை நடத்திய பத்திரிகைக்காக செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறேன். ஒரு தகவலுக்காக எத்தனை பேரை சந்திக்க வேண்டுமென்றாலும் அசராமல் அலைவார். அதனால் பேராச்சி கண்ணன் சென்னை குறித்து எழுயிருக்கிறார் என்றால், நிச்சயம் தகவல்களுக்காக கடுமையாக உழைத்திருப்பார் என்பது வாசிக்க இரண்டாவது காரணம்.
சென்னையின் அடையாளங்கள் எனப்படுகிற அத்தனை இடங்கள் குறித்தும் மிக விவரமான வரலாறுகள் இருக்கின்றன. அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எழுத்தாளர்கள் திரு நரசய்யா, திரு அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதிய சென்னை பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகங்களை, கட்டுரைகளை வாசித்திருக்கிறேன், இவர்களோடு சென்னை குறித்து பல வருட ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பற்றிய குறிப்பும், அவர்களின் கருத்துகளும் இடம் பெறுவது முக்கியமானதாக இருக்கிறது.
இசைக்கருவிகளை விற்க வந்த ஒருவரால், இன்று சென்னை இசைப் பள்ளிகளின் மையமாக மாறிய இருநூறு வருட வரலாறு உண்டு. பழமையான கோயில்கள் பற்றிய தகவல் இடம்பெற்றிருக்கின்றன. அத்தனையும் ஆய்வு நோக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வடசென்னையின் சென்னை மல்லீஸ்வரர் கோயில் முன்பு இருந்த இடம் எது என்று சொன்னால், கடப்பாரையோடு வந்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் எழுத வேண்டியிருக்கிறது. இந்த சென்னை மல்லீஸ்வரர் கோயில் இருந்த இடத்தில் தான் உயர்நீதிமன்றம் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது பாதுகாப்பு கருதி அருகில் உள்ள தெருவுக்கு கோயில் மாற்றம் பெற்றுள்ளது. இது மாதிரி ஏராளமான தகவல்.
என்னை ஈர்த்தது மருத்துவமனைகள் பற்றிய கட்டுரைகள். கோஷா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், எழும்பூர் மருத்துவமனை , இராயப்பேட்டை மருத்துவமனைக்கு பின்னணி வரலாறுகள் வாசிக்க ஆச்சரியம் கொண்டவை. 97 வயதான டாக்டர் சாரதா மேனனின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. இவர் தமிழகத்தின் முதல் பெண் மனநல மருத்துவர். மகப்பேறு, பெண்கள் நலம் போன்ற துறைகளை அப்போதைய பெண் மருத்துவர்கள் உயற்படிப்புக்குத் தேர்ந்தெடுக்க, இவர் மனநலத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான சம்பவத்தை சொல்லியிருக்கிறார் இவரின் அரிய முயற்சியினால் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை விரிவாக்கப்பட்டுள்ளது.
இப்படியாக ஸ்டூடியோக்கள், திரையரகுகள், சென்னை நகரின் வரைபடம், அச்சுத்தொழில், பத்திரிகைகள், பிராட்வே பகுதியில் ஏராளமான விறகுக்கடைகள் இருப்பதற்கான காரணங்கள், 1955வரை மாம்பலத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லாத தகவல்கள், மெட்ராஸ் பாஷை பற்றிய வரலாறுகள், ஆவணங்கள், புத்தகங்கள், மனிதர்கள் என கவனமாக சேகரிக்கப்பட்ட ஒரு புத்தகம்.
சென்னையில் ஒரு இடத்துக்கு அது ஹிக்கின்பாதம்ஸ், துறைமுகம், கடற்கரை, திநகர், சாந்தோம், பர்மா பஜார், அண்ணாநகர், அசோக் நகர், ஆயிரம் விளக்கு, ராயபுரம்,பல்லாவரம், கடற்கரையை ஒட்டி மணல்மேடாய் இருந்து இன்று தலைமைச் செயலகம் உள்ள இடம், என எங்கு போவதாக இருந்தாலும் அதற்கு முன்பு அதற்கான தலைப்பை வாசித்துவிட்டால் நாளடைவில் நாம் சென்னையையும், நகரத்தை உருவாக்கிய ஆயிரக்கணக்கானவர்களின் உழைப்பையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
பதிப்பகம் : சூரியன் பதிப்பகம்

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments