ஒரு கதை எழுதப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்தபோதும் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஆழமான அர்த்தங்களைத் தந்து கொண்டிருந்தால் அதனை சிறந்த கதை என்று சொல்ல முடியும். ஆர்.கே நாராயண் எழுதிய selvi கதையை இந்த வரிசையில் வைக்கலாம். இவர் எழுத்துகளில் ஒரு வசீகரம் உண்டு. மால்குடி என்கிற கற்பனை நிலம் என்றாலும், கதை மாந்தர்கள், சம்பவங்கள் எல்லோருமே நமக்கு அறிமுகமானவர்களாக இருப்பார்கள். இவர் படைத்த சிறுவன் சுவாமி இருட்டுக்குப் பயப்படும்போது நாமும் அவனுடன் அச்சப்படுவோம், அவன் பாட்டியிடத்தில் கேட்கும் கேள்விகளை நாம் நமது பாட்டியிடம் கேட்டிருப்போம். ஆர்.கே நாராயணின் பலமே இந்த நம்பகத்தன்மை தான். ஒருமுறையேனும் அந்த மால்குடியைப் பார்த்துவிட வேண்டுமென்கிற ஆவலை அவரால் எழுத்தில் கொண்டு வந்துவிட முடியும். மால்குடி டேஸ் படித்தவர்களுக்கு மால்குடி என்கிற ஊரின் புவியியல் தெரிந்துவிடும். அந்த மாய உலகின் அத்தனைத் தெருக்களிலும் நாம் பலமுறை பயணம் செய்து வந்த ஒரு உணர்வினை அவர் எழுத்தில் கொண்டு வந்துவிடுவார்.
இவருடைய Selvi கதை வெளிவந்த காலம் தொடங்கி இப்போது வரை சர்ச்சையை ஏற்படுத்திகொண்டு இருக்கிறது. அந்த சர்ச்சையை நேரடியாக ஆர்.கே நாராயன் எதிர்கொள்ளும்போது தான் எழுதிய கதையில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார். செல்வி ஒரு பாடகி. அற்புதமான பேராற்றல் கொண்ட பாடகி. செல்வியை மோகன் திருமணம் செய்து கொள்கிறார். மோகன் காந்தியவாதி. எப்போதுமே கதராடை உடுத்துவதில் விருப்பமுள்ளவர். செல்வி போன்ற ஒருவர் நன்றாகப் பாடினால் மட்டும் போதுமா, உலகத்துக்கு முன் அவர் எப்படிப்பட்டவராக அறியப்பட வேண்டும் என்பது முக்கியமில்லையா! அதனால் செல்வியை முன்வைத்து மோகன் சில திட்டங்கள் வகுக்கிறார்.
செல்விக்கு அவருடைய அம்மா தான் இசை கற்றுத் தந்த குரு. விநாயக முதலி தெருவில் ஒரு சாதாரண வீட்டில் செல்விக்கு இசை கற்றுத் தந்து கொண்டிருந்தவர், மகளை அழைத்துக் கொண்டு அந்தத் தெருவில் இருக்கும் ஒரு போட்டோ ஸ்டுடியோ செல்கிறார். அந்த ஸ்டுடியோவில் தான் மோகன் செல்வியை முதன்முறையாக சந்திக்கிறார். இந்தப் பெண்ணிடம் திறமை இருக்கிறது என்பதைக் கண்டு கொள்கிறார். அடிக்கடி செல்வியின் வீட்டுக்கு செல்கிறார். செல்வியை நான் உருவாக்கிக்காட்டுகிறேன் என்கிறார். முதலில் ஒரு வீடு வாங்குகிறார். மெத்தை வீடு என்று அந்தக் காலத்தில் சொல்லப்படும் மாடி வீடு. செல்வியின் அம்மாவும், சகோதர சகோதரிகளும் அந்த வீட்டுக்கு வருகிறார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம். இங்கேயா இருக்கப்போகிறோம் என்று, மோகன் எல்லோரையும் அனுப்பிவிட்டு செல்வியுடன் மட்டும் அங்கு இருக்கிறார். செல்வி இப்போது விநாயக முதலித் தெருப் பெண் அல்ல, தெய்வீகமும், அருளும் கிடைக்கப்பெற்ற ஒரு பேருருவம். இதனை மற்ற கண்கள் நம்பவேண்டும் இல்லையா..! அதனால் மைசூரில் இருந்து அழகு சாதனப் பொருட்களை வரவழைக்கிறார். காந்தியவாதியான மோகன் ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துவது தவறு என்று விமர்சனம் எழும் என்பதால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செல்வியை ஒப்பனைப் பொருட்கள் பயன்படுத்த வைக்கிறார். மேடையில் அமர்ந்து செல்வி பாடுகையில் குரலுக்கு நிகராக முகமும் தெய்வீகக்களை கொள்ள வேண்டும் என்று மோகன் முடிவெடுத்து அதனை சாதிக்கவும் செய்கிறார்.
நாட்டைகுறிஞ்சியா, சங்கராபரணமா கச்சேரியில் எந்த வர்ணம் பாடுவது என்கிற கேள்வி செல்விக்கு எழுந்திருக்குமா என்று தெரியாது. ஆனால், எழ வேண்டிய அவசியமில்லாமல் “இன்று கல்யாணி ராக வர்ணம்..அதற்குப் பிறகு பேகடையில் தியாகராஜ கிருதி..மெயினுக்கு தோடி..” என்று பட்டியல் தயாராகிவிடும். செல்வியின் பணியெல்லாம் அதனை அப்படியே கண்ணை மூடி இலயித்துப் பாடி விடுவது மட்டுமே.
நாட்கள் செல்கின்றன. செல்விக்கு தன்னுடைய அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. தயங்கித் தயங்கி மோகனிடம கேட்கிறார். “நாமே வீட்டில் வாரத்தில் ஒருநாள் தான் இருக்கிறோம்…உன் அம்மாவை எப்படி அழைத்து வருவது” என்று மறுத்துவிடுகிறார். அதன்பிறகும் ஒவ்வொருமுறையும் கேட்க நினைத்து எப்படியும் மோகன் மறுத்துவிடப்போகிறார் என்று செல்வி அமைதியாகிவிடுகிறார்.
அப்போது ஒரு வெளியூர்ப்பயணம். செல்வியின் அம்மா உடல்நலம் சரியில்லாம இறந்த செய்தி வந்தடைகிறது. அந்தப் பயணம் முழுவதும் செல்வி அமைதியாகிவிடுகிறார். திரும்ப தனது ஊருக்கு வரும் வழியில் ரயிலில் ஜன்னலை விட்டு பார்வையை எங்கும் நகர்த்தவில்லை. மோகன் ஏதேதோ பேசிப்பார்க்கிறார். ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார் செல்வி. ஊருக்கு வந்ததும் தன் அம்மா வீட்டுக்குச் செல்கிறார். பிள்ளைகள் யாரும் அருகில் இல்லாததால் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவரே இறுதி காரியத்தை செய்த விஷயம், தெரிய வருகிறது. மோகன் செல்வியிடம் :சரி..வா வீட்டுக்குப் போகலாம்’ என்கிறபோது..வர மறுக்கிறார் அங்கேயே வாழப்போவதாக முடிவெடுத்து தங்குகிறார். மோகனால் முதலில் நம்ப முடியவில்லை, பின்னர் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமர், வெளிநாட்டுத் தூதர்கள், தொழிலதிபர்கள் முன் பாடிய ஒரு குரல் தினமும் யாருடைய வரவுக்காகவும், அங்கீகாரத்துக்கும் காத்திருக்காமல் மணிக்கணக்காகப் பாடத் தொடங்குகிறது. இந்தப் பாடலைக் கேட்க சாமானிய மக்கள் கூட்டமாக வரத் தொடங்குகிறார்கள். மோகனால் இதனை ஜீரணிக்க முடியாமல் போகிறது.
கல்யாணியும், பேகடையும், அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகளையும் தனக்காக, தன் உள் உறங்கும் ஆன்மாவுக்காக செல்வி பாடுகிறாள். அம்மா எனும் குருவிடம் கற்றுக்கொண்டவற்றை அவர் சன்னதியில் பாடிப் பாடிக் கரைகிறார். எதைப் பாட நினைக்கிறாரோ அந்த ராகமும், பாவமும் அவருக்குள் நிறைகின்றன. யாருடைய கண்ணசைவுக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. தெய்வீகக் குரல் என்கிற கேட்டுப் பழகிய வார்த்தை ஜாலங்கள் இல்லை. தூரத்து வானில் மின்னும் நட்சத்திரம் போல தள்ளி நிற்க மட்டுமே வாய்ப்பிருந்தவர்கள் அலுப்பிலாமல் அந்தக் குரலைக் கேட்கத் தொடங்கினர். குயில் பாடுவதெல்லாம் தனக்காக என்பது போல, பாடிக் கொண்டே இருக்கிறார் செல்வி.
கதையை முடித்து வைத்த இடம் முக்கியமானது. ஒருநாள் நடு இரவில் குடையின் கதவைத் தட்டுகிறார் மோகன்..’நான் உன்னிடம் பேச வேண்டும்..கதவைத் திற செல்வி” என்கிறார். “இந்த நேரத்தில் நீங்கள் வந்திருக்கக்கூடாது..கிளம்புங்கள்” என்று சொல்ல, “நன்றிகெட்ட……” என்கிறார் மோகன். கதை முடிகிறது.
ஆர். கே நாராயண் இந்தக் கதையினை திரு.எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்தே எழுதினார் என்றே புரிந்து கொள்ளப்பட்டது. படிக்கும் யாவருக்கும் இது அப்படித் தான் என்று உறுதியாகத் தோன்றும். எம் எஸ் என்பது ஒரு பெயராக மட்டுமில்லாமல், ஒரு ‘பிராண்ட்’ ஆக இன்று வரை நிலைத்திருப்பதன் காரணம் திரு சதாசிவம் அவர்களே. இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருந்துவிட முடியாது. ஆனால், ஆர். கே நாராயன் போன்ற எழுத்தாளர் எம்எஸ் என்கிற பிம்பத்தின் மறுசாயலைக் காண நினைத்திருக்கிறார். வசீகர, தெய்வீகக் குரல் என்று புகழப்பட்ட ஒருவர் தனக்கென ஒரு குரலைக் கொண்டிராமல் இருந்ததாக ஆர்.கே நாராயண் நினைத்திருக்கலாம்.
சங்கீதத்தில் மேதமையும், அபரிதமான ஆற்றலும் கொண்ட ஒரு பெண் உயர்குடியில் பிறக்காமல் போனதால் அடையாளத்தையே மாற்றி உயர்குடியின் முகமாக மாற்றுவதென்பது சாதாரணமே அல்ல. ஒருவர் இங்கு மதம் மாறக்கூடும், ஆனால் ஜாதி மாறியதாக சரித்திரம் இல்லை. அந்த சரித்திரத்தையும் எம்எஸ் சுப்புலட்சுமியைக் கொண்டு சாதிக்க முடிந்திருந்தது. இந்தக் கதையில் செல்வி தன அம்மாவின் வீட்டைத் தேடித் போய் அங்கு அடைக்கலமாவது என்பதை எல்லாக் குறியீடுகளுக்கும் ஒப்புமை செய்யலாம். சாதி இங்கு யாருக்கும் அடையாளம் ஆக வேண்டியதில்லை. தனது சுய அடையாளத்தோடு அவரால் அடுத்தக் கட்டத்துக்கு தனனுடைய திறமையை எடுத்துச் செல்ல முடியாமல் போனதென்பது துரதிருஷ்டம் தான். மாறுவேடப்போட்டியில் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற பாடலை பாரதியார் வேடம் தாங்கித் தான் ஒரு குழுந்தை பாட முடியும் என்பது போன்றதான வாழ்நாள் மாறுவேடப் போட்டிக்குத் தன்னை அவர் ஈடு கொடுத்திருந்தார். இது அவருக்கு விருப்பமாக இருந்ததா இல்லையா என்பதை அவர் மட்டுமே சொல்லக்கூடும். ஆனால் அவர் அது குறித்து பேசியதாக செய்தியில்லை. பிம்பத்தை உருவாக்கியது மட்டுமே சதாசிவம் என்றால், அந்த பிம்பத்தை துளி கூட சிதையாமல் பார்த்துக் கொண்டது எம்எஸ்சின் ரசிகர்கள்.
எம்எஸ் சுப்புலட்சுமியின் பெயரில் வழங்கப்படும் விருதினை இந்த வருடம் பாடகர் டி,எம் கிருஷ்ணா பெறவிருக்கிறார் என்றதும் எதிர்ப்புகள் கிளம்பின. எம்.எஸ் சுப்புலட்சுமியை டி.எம் கிருஷ்ணா அவமானப்படுத்தினார் என்பது காரணமாகச் சொல்லப்பட்டது. ஆர்.கே நாராயண் தன்னுடைய செல்வி கதையில் எழுதியதை விடவும் டி.எம் கிருஷ்ணா பேசிவிடவில்லை. எம்.எஸ்சின் உயரம் இன்னும் அளப்பரியது. துக்கடா பாடல்களிலும், தெய்வீகக் குரல் என்கிற அடைப்புக்குரியிலும் மட்டுமே அவரது விஸ்வரூபத்தினை அடைத்துவிட்டோம் என்கிற கவலையை டி.எம் கிருஷ்ணா பதிவு செய்திருக்கிறார்.
இசைக்கலைஞர்கள், படைப்பாளர்கள் என கலைத்துறையினருக்கு இருக்க வேண்டிய ஒன்று, சுதந்திரம். தங்களது கலை குறித்த ஆளுமையை அவர்கள் சுதந்திரத்தில் இருந்தே பெறுகிறார்கள். நிஜவாழ்வில் எம்எஸ் போன்றவர்கள் சுதந்திரமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தைத் தான் ஆர்.கே நாராயண் தந்து கதை வழியாக சொல்லிச் செல்கிறார். அப்படி சுதந்திரமாக செயல்படுவதால் அவருக்குக் கிடைத்திருக்கக்கூடிய ‘நன்றிகெட்ட’ என்கிற பட்டத்தினையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு ஆண் கலைஞர் தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திரமான கலைஞனாக செயல்பட முடிந்திருக்கிறது. அவருடைய மனைவி அவருக்காக எல்லாக் கடமைகளிளையும் செய்து கொண்டிருக்கிறார் என்பதே அந்த ஆண் கலைஞருக்கான சுதந்திரமாகிறது. அதற்காக எத்தனை பேர் அந்த மனைவியருக்கு நன்றியோடு இருந்தார்கள் என்பது சந்தேகமே. ஆனால், இங்கு ஒரு பெண் தன்னளவில் ஒரு முடிவினை எடுக்கையில், அது நன்றி மறப்பது என்றாகிறது. ஒரு பெண்ணுக்கு மனஉளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்திவிடுவது சுலபம். அந்த ஆயுதத்தைத் தான் கதையில் மோகன் கையில் எடுத்தது. செல்விக்கு அது தெரியுமாகையால், அவர் தன் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தார
Selvi கதையினைக் குறித்து ஆர்.கே நாராயன் அவர்களிடம் கேட்கப்பட்டப்போது அவர் இப்படி சொல்லியிருக்கிறார், “கதையிலாவது செல்வி சுதந்திரமாய் முடிவெடுக்கட்டும்’ என நினைத்தேன். யோசித்துப் பார்த்தால், இந்த பதிலே கூட ஓராயிரம் வார்த்தைகளுக்கு சமமான ஸ்டேட்மெண்ட் தான்.
Painting Courtesy : Bushra Rauf