தமிழ் சினிமாவின் வரலாற்றில் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய ஒருவர் இயக்குநர் எஸ்.பாலசந்தர். எல்லோரும் ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கென ஒன்றினை உருவாக்கிக் கொண்ட முதல் இயக்குநர் என்று சொல்லலாம். இப்படிச் சொல்லக் காரணமுண்டு. தமிழ் சினிமா இன்றும் கூட காட்சிரீதியிலான கதை சொல்லலை முழுமையாகக் காட்டிக்கொள்ளவில்லை. அறுபது வருடங்களுக்கு முன்பு படங்களை இயக்கத் தொடங்கிய எஸ்.பாலசந்தர், ஒளியில் நம்மை வசியப்படுத்தியிருக்கிறார். அதைக் கொண்டு மிரட்டியிருக்கிறார், திடுக்கிட செய்திருக்கிறார், கதையும் சொல்லியிருக்கிறார்.
எஸ்.பாலச்சந்தரின் இயல்பே எதையும் வேறு கோணத்தில் பார்ப்பது தான். அவரின் பெரும் ஆளுமையைப் பெற்றிருந்த சங்கீதத்திலும் அவர் பரிட்சார்த்த முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார். அந்த புதுமைகளை அவர் தன் முன் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் முன்பாக மேடையில் தான் பரிசோதித்திருக்கிறார் என்பது தான் பாலசந்தரின் மேல் வைக்கப்படும் ஆராதனையும், விமர்சனமும். மரபான சங்கீதத்தில் தொழில்நுட்பத்தின் நுணுக்கத்தை புகுத்துவதில் அவர் மோகம் கொண்டிருந்தார். இவருடைய கச்சேரி இப்படித் தான் இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்து வருவதில்லை. எந்தவித முன்தீர்மானங்களையும் ஓரங்கட்டிவிட்டு புதுப் புது யுத்திகளைத் தன் கச்சேரி சபையில் வெளிப்படுத்துகிற ஒரு சக்கரவர்த்தி போல இருந்தார் பாலசந்தர்.
இதைத் தான் அவர் திரைப்படங்களிலும் செய்து காட்டியிருக்கிறார். பார்வையாளர்களுக்கு இது பிடிக்கும் என்று படமெடுப்பதைக் காட்டிலும், எதைத் திரையில் காட்டினாலும் பார்வையாளர்களுக்கு பிடிக்கும்படி செய்துவிடலாம் என்று நினைத்த அவரது தன்னம்பிக்கை சினிமாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
சினிமாவுக்குள் ஒரு நடிகராக அறிமுகமாகி, திரைக்கதைகள் எழுதி பின்னர் நடிகரானவர் எஸ்.பாலசந்தர். ஆங்கில படங்கள், புதினங்கள் மீது இவர்கொண்ட ஈர்ப்பே இவரது படங்களில் வெளிப்பட்டன. 1948ல் ‘இது நிஜமா’ படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார். இந்தப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த ‘WONDER MAN’ படத்தின் தழுவல். இரட்டை சகோதரர்களைப் பற்றிய கதை. லண்டனில் மாதவன் என்கிற ஒருவன் கொலை செய்யபப்டுகிறான். அவனுடைய ஆவி இந்தியாவிலிருக்கும் அவனுடைய சகோதரன் கோபாலின் உடலுக்குள் புகுந்து விடுகிறது. கோபால் இசைக் கருவிகள் விற்பனை செய்பவன். ஆவியும் உள்ளே புகுந்து கொண்டால் கேட்கவே வேண்டாம், கோபால் விதவிதமான இசை முயற்சிகளை தன்னுடைய இசைக்கருவிகள் மூலம் செய்து காட்டுகிறான். தன்னுடைய இசைத் திறமைக்கு ஏற்ற கதையாய் உருவாக்கி அதில் இரட்டையர்களாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
எஸ்.பாலசந்தருக்கு எல்லா விதமான இசைக்கருவிகளோடும் பரிச்சயம் உண்டு என்பது படத்தின் கதைக்கு பெரும் பலம் சேர்த்தது. இந்தப்படத்தின் பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன. 72 வருடங்களுக்கு முன்பு தமிழ் இசையில் இப்படியானதொரு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்து பெருமையடையாமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு பாடல்களின் தரம் அமைந்திருந்தது. லண்டன் ஆங்கிலத்தை சரளமாகப் பேசும் ஒருவன் இசை தெரிந்த ஒருவன் உடலுக்குள் புகுந்தால் பாடல்கள் எப்படியெல்லாம் வெளிப்படுமோ அப்படி அமைத்திருந்தார். இந்துஸ்தானியும், கர்னாடக சங்கீதமும், மேற்கத்திய இசையும் பாடலுக்குள் புகுந்து வெளிப்படுவதை ரசிகர்கள் கொண்டாடினர்கள்.. இந்தப் படத்தின் தழுவல் தான் பின்னாட்களில் கமல்ஹாசன் அவர்கள் நடித்து ‘ஜப்பானில் கல்யாணராமனாக’ வெளிவந்தது.
பாலசந்தரின் வருகைக்குப் பிறகு தான் கர்னாடக இசை மேடைகளில் பிரபலமாக இருந்த பாடகர்கள் சினிமாவிலும் நடிக்கலாம் என்று விருப்பம் கொண்டனர். இதில் பெண் பாடகிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவர்களும் சிறப்பாகவே திரையை ஆண்டனர், ஆனால் ஆண் பாடகர்களுக்கு கேமரா முன் நிற்பதன் பயிற்சியும் பக்குவமும் இல்லாததன் விளைவு, அவர்கள் திரும்பவும் மேடைக்கேத் திரும்பும்படி ஆனது. எஸ்.பாலசந்தர் இதில் வித்தியாசப்படுகிறார். எதை நோக்கி அடியெடுத்து வைத்தாலும் அதன் ஆழம் அவரை கண்டு உணர்ந்த பின்பே அதில் ஈடுபடுவார். நடிப்பில் அவருக்கென ஒரு பாணி இப்படித் தான் உருவாகியிருந்தது. அதனால் எதைக் கையாள முயுமோ அந்தக் கதாபத்திரங்களைத் தனக்காக வடிவமைத்துக் கொண்டார். அலட்டல் இல்லாத நடிப்புக்கு ஏற்ற பாத்திரம் அதே நேரம் அது சவாலானதாகவும் அமைந்திருக்கும்.
இவரது படங்களின் மாஸ்டர் பீஸ் என்று ‘கைதி’ படத்தைத் தான் அக்காலத்து விமர்சகர்கள் சொல்கிறார்கள். அதன் திரைக்கதை நேர்த்தியைப் பற்றி வியக்காத விமர்சர்கள் இல்லை. முதல் காட்சியிலேயே கிண்டி குதிரைப் பந்தயத்தினை கண் முன் காட்டியதில் பாலசந்தர் எல்லோரையும் ரசிக்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதை பின்னாட்களில் தமிழ் சினிமாவுக்கு பெருமளவு பயன்பட்டது. குற்றமே செய்யாத ஒருவன் கொலைக் குற்றத்துக்கு சிறைக்கு செல்கிறான். அவன் தன்னை நிரபராதி என்று நிரூபிப்பது தான் கதை. இந்தப் படங்களின் பாடல்களும் பெரும் வெற்றி. உலகத்தின் எந்த மூலையில் உள்ள நாடாக இருந்தாலும் அங்குள்ள இசைத் தன்மையைக் கேட்பதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் தான் அவரது படங்களின் பாடல்கள் நவீனத்தின் உச்சமாய் இருந்தது. ‘கைதி’ படத்தில் சிறைச்சாலையில் இடம்பெற்ற ஒரு பாடல் பால் ராப்சனின் ஆப்ரிக்க கருப்பினத்தவரின் பக்திப் பாடல்களின் பாதிப்பில் வெளிவந்திருந்தது. இதனை அவர் அப்போது தந்த பத்திரிகை நேர்காணலில் பேசியிருந்தார்.
இப்படி தன்னுடைய பாடல்களினாலும் பிரபலமடைந்திருந்த எஸ்.பாலசந்தர் அடுத்து எடுத்த முயற்சி யாரும் அத்தனை எளிதில் செய்து விட முடியாதது. இந்தியத் திரைப்படங்களில் பாடல்களுக்கு நடுவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வசனங்கள் பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்து வெகு வேகமாய் ஐந்து பாடல்கள் ஒரு படத்துக்கு என்று மாறியது. ஆனால் பாடல்களே இல்லாமல் படம் வெளிவரும் என்று யாரும் எதிர்பார்த்திருந்திருக்க முடியாது. எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்த நாள்’ படத்தில் பாடல்களே இல்லை. அந்தகக் குறையும் படத்தில் தெரிவதில்லை. “THE WOMEN IN QUESTION என்கிற ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் ஜாவர் சீதாராமன் அவர்களால் எழுதப்பட்ட கதைக்கு திரைக்கதை வடிவம் தந்திருந்தார் எஸ்.பாலச்சந்தர். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒவ்வொன்றையும் குறித்து பேச எத்தனையோ இருக்கின்றன.
கதாநாயகன் ஒரு ரேடியோ எஞ்சினியர். இப்படி சொல்வதற்கே முதலில் ஒரு தைரியம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் ரேடியோ இன்ஜினியரிங் என்பது எந்த மாதிரியான வேலை என்று முதலில் விலக்க வேண்டும். அதற்கொரு காட்சி படத்தில் இருக்கிறது. ஏனெனில் கதையே நாயகனின் வேலை தொடர்பானது தான். அதனால் தொழில்நுட்பத் தகவல்களுக்குள் போகாமல் அதே நேரம் எதை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை மட்டும் விளக்கிவிட்டு திரைக்கதையின் அடுத்த நகர்வுக்குள் சென்று விடுகிறார் பாலசந்தர். கதையின் ஒவ்வொரு காட்சியும் அது முடியும்போது அடுத்தடுத்தக் காட்சியைப் பார்க்கத் தூண்டியது. தமிழில் தொலைகாட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் பாக்கெட் நாவல்களை திரைக்கதையாக்கும் முயற்சி நடைபெற்று பெரும்பாலும் தோல்வியையே கண்டிருக்கிறது. ஆனால் ஒரு கதையை பாக்கெட் நாவல் போன்றதான அத்தனை சுவாரஸ்யங்களோடும் காட்டி வெற்றி பெற்றிருந்தது 1954ல் வெளிவந்த ‘அந்த நாள்’.
தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த பெண் கதாபத்திரங்கள் என்று சொல்லுகிறபோது ‘அந்த நாள்’ பண்டரிபாயை நாம் மறுத்துவிட முடியாது. ஒரு தெளிவான பெண் கதாபாத்திர வடிவமைப்பு. உலக அரசியல், இந்திய சிந்தனைகளை பேசுகிற ஒரு பெண்ணை அறுபது வருடங்களுக்கு முன்பு திரையில் பார்த்திருப்பது தமிழ்சினிமாவின் ஒரு சாதனையாகவே சொல்ல வேண்டும். அதே போல் ‘அந்த நாள்’ படத்தில் சென்னையில் ஜப்பானியர் குண்டு வீசும் அந்தக் காட்சி. காட்சியின் கோரத்தை சொல்ல விமானத்தைக் கூட பேருக்குக் காட்டவில்லை. வெறும் ஒளி, விமானத்தின் ஏறிக்கொண்டே போகும் ஒலி மட்டுமே. இவற்றோடு சிவாஜி என்கிற அசுர கலைஞனின் பாவனைகள். இவற்றை வைத்து மட்டும் ஒரு மாபெரும் சம்பவத்தை சொல்லிவிட முடியும் என்று நம்பியது ஒரு இயக்குநரின் பேராற்றல். இதப் படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது.
‘நடு இரவில்’ படம் பாலசந்தரின் மற்றுமொரு சிறந்த படம். முழுவதும் பெரும்பாலும் இரவில் நடைபெறும் காட்சிகள். குறைந்த ஒளியின் அழகும், விசாலமும் படம் முழுக்க நம்மை வசீகரிக்கும். இதன் பெருமை ஒளிப்பதிவாளருக்கு சேரும், என்றாலும் எஸ்.பாலசந்தரின் கற்பனையும், நேர்த்தியுமே ஒளிப்பதிவாளர் மாருதி ராவ் வழியே நமக்குக் கிடைத்திருக்கிறது.
‘நடு இரவில்’ படத்தில் ஒரு காட்சி. கஜானா அறைக்குள் இரவில் நுழையும் இருவர் திருடுவதற்காக ஒவ்வொரு அலமாரிகளையும் திறந்து பார்ப்பார்கள். டார்ச் லைட் மட்டுமே ஒரே வெளிச்சம். அங்குள்ள நகைகள், பணம் இவற்றைக் காட்டிக்கொண்டே அதைப் பார்ப்பவர்களின் பேராசை கொண்ட முகத்தையும் ஒளி காட்டும். அப்படியே ஒவ்வொன்றாய்க் காட்டிக்கொண்டே வந்து ஒரு அலமாரியைத் திறக்கும்போது அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் சடலத்தின் முன் நிற்கும் வெளிச்சம்.
அப்போதெல்லாம் இப்படியான ஒரு காட்சியை இருளில் மட்டுமே எடுக்க யோசிப்பதற்கே தனி துணிச்சல் வேண்டும். அதைத் திரையில் கொண்டு வர பெரும் நம்பிக்கை தேவை. அது பாலசந்தருக்கு ஏராளம் இருந்தது.
‘நடு இரவில்’ அகதா கிறிஸ்டியின் ஒரு நாவல். இந்தப் படத்தின் பாதிப்பில் தான் ‘அதே கண்கள்’, ‘நாளை உனது நாள்’ போன்ற படங்கள் பின்னாட்களில் தமிழில் வெளிவந்திருக்க வேண்டும்.
கச்சிதமான திரைக்கதை வடிவம் இவருடையது. இதனை அத்தனைப் படங்களிலும் பார்க்க இயலும். மிகவும் வியந்தது ‘அவனா இவன்’ மற்றும் ‘அந்த நாள்’ படங்களில்.
‘அவனா இவன்’ படம் கத்தி மேல் நடக்கும் வித்தையைக் கொண்டது. இரு குழந்தைகள் ஒரு கொலையைப் பார்த்து விடுகிறார்கள். அது கொலை என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் ஏதோ தப்பு என்று புரிகிறது. அந்தக் கொலையாளி தங்கள் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறார் என்று தெரிந்ததும் ஒவ்வொருவர் இடத்திலும் உண்மையைச் சொல்ல முயல்வதும் அது சரிப்படாமல் தாங்களே அதனை புலனாய்வு செய்வதுமான கதை. குழந்தைகள் தங்களுக்குள் மனிதர்களைப் பற்றிப் பேசிக்கொள்வதும், அப்பாவித்தனமான முடிவுகளை எடுப்பதுமென நேர்த்தியான கதை அது. குழந்தைகளை இது போன்ற படத்தின் கதைக்கு பயன்படுத்திக் கொள்ளும்போது அதன் எல்லைகளை உணர்ந்திருக்க வேண்டும். அதை சரியாக பாலச்சந்தர் செய்திருப்பார். பெரிய மனிதத் தோரணையோடு நடந்து கொள்ளாத குழந்தைகள் அதே நேரம் பெரியவர்களுக்கு பாடம் எடுக்கிற குழந்தைகளும் கூட.
ஒரு காட்சியின் தொடர்பு மற்றொன்றில் நம்மால் தொடர்புபடுத்த இயலும். எந்தக் கதாபாத்திரம் பற்றியும் ஒரே காட்சியில் மூச்சு விடாமல் சொல்லி விடுவதென்பதை இவர் எப்போதுமே செய்ததில்லை. ஒரு கதாபாத்திரம் போலிஸ் என்றால் அவரைப் பற்றி அறிமுகம் செய்கிறபோதே போலிஸ் என்று சொல்லிவிட மாட்டார். எப்போது தேவையோ அப்போது தான் அவர் யாரென்று தெரிய வரும். ஒன்றை உள்ளங்கையில் மறைத்து விரலிடுக்கு வழியே கசியவிட்டே முழுத் திரைக்கதையையும் வடிவமைத்திருக்கிறார்.
திகில் அல்லது மர்மப் படத்துக்கான அடிப்படை விதியே, ஒரு ஆபத்தின் வீரியத்தை சொல்லிவிட்டு அது எப்படியெல்லாம் கிளை பரப்புகிறது என்பது தான். இதனை ‘பொம்மை’ படத்தில் உணர முடியும். ஒரு பொம்மைக்குள் எப்போது வேண்டுமானலும் வெடித்துவிடும் அபாயமுள்ள வெடிகுண்டு இருக்கிறது. அது பலரின்கைகளுக்கு செல்கிறது. காத்சி ஒவ்வொன்றிலும் மானசீகமாய் நாம் வெடிகுண்டின் சத்தத்தை மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்த்துவிடுவோம். அப்படியான திரைக்கதை அது.
இசையின் மேதமையைப் பின்னணி இசையில் காட்டுவதற்கு திகில் படங்கள் நல்ல களம். பாலசந்தர் படங்களின் பின்னணி இசை கூட கதை சொல்லும். ‘நடு இரவில்’ படத்தில் மாடியிலிருந்து பண்டரிபாய் எதையோ ரசித்துக் கொண்டிருப்பார். அவரை யாரோ பின்பக்கமாக நெருங்குகிறார்கள். நீளமான ஷாட். அந்த நபர் நின்று நிதானித்து வருகிறார் என்பதை கேமராவின் நகர்வு சொல்லிவிடும். சில அடிகள் நடப்பது, பின் நிற்பது..பின் சில அடிகள்..இப்படி. அதன் முடிவாக பண்டரிபாய் மேலிருந்து தள்ளி விடப்படுவார். இதற்கு இசையையும் அப்படியே அதே லயத்தில் பயன்படுத்தியது தான் மேதமை.
இவரது படங்களைப் பற்றி எழுத வேண்டுமெனில் வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. ஆனால் ஒன்றை சொல்லாமல் இருக்கவும் இயலாது. டைட்டில் கார்டுகளில் இவர் கையாண்ட யுத்தி. டைட்டில் கார்டு என்பதையும் கதையோடு பொருத்திவிடுகிறார். டைட்டில் கார்டோடு இவரது எந்தப் படமும் நான் பார்த்த வரையில் தொடங்கியதே இல்லை.
‘அந்த நாள்’ டைட்டில் நினைவிருக்கிறதா! பட்டென்று பாயும் வெளிச்சத்தில் ஒருவர் புகுந்து புறப்பட்டு வருவது. ஓடுவது. இதிலிருந்தே கதை தொடங்கிவிடும்.
‘அவனா நீ’ படத்தின் டைட்டில் கார்டு நாம் யூகிக்க முடிந்திராத ஒரு காட்சியில் அதுவும் அப்போதைய எந்தப் படங்களிலும் பார்த்திருக்க முடியாத யுத்தியில்.
‘பொம்மை’ படத்தில் டைட்டில் கார்டே இல்லை. பெயர்களுக்கு பதிலாக மனிதர்களே நம் முன் அவர்கள் பேர் சொல்லி நிற்பார்கள்.
‘நடு இரவில்’ டைரக்டர் கார்டு வரும் இடம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்றில். அதிலும் நாம் திடுக்கிட்டு உறைந்து அமர்ந்திருக்கும் காட்சியில். ‘இது தான் நான்’ என்று எஸ்.பாலசந்தர் நமக்கு விடுக்கும் சொடக்கு அது.
அகிரா குரோசவா, ஹிட்ச்காக் தாக்கத்தில் இவர் படம் எடுத்தார் என்று சொல்வதுண்டு. அப்படித்தான் என்று பாலசந்தரும் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த மாஸ்டர்களை அவர் எங்கும் போலியாய் உரசவில்லை. நகல் எடுப்பதற்கும், உள்வாங்குவதற்குமான வித்தியாசம் கண்டிருந்தார்.
கற்பனையின் உச்சம் தொடுபவர்களே மற்றவர்களைக் காட்டிலும் படைப்பினை பல அடி தூரத்துக்கு உயர்த்த இயலும். அந்தக் கற்பனையை காட்சிக்கு கொண்டு வருவதில் சமரசம் செய்து கொண்டதில்லை பாலசந்தர். தமிழ் சினிமாவுக்கு இவருடைய பங்களிப்பு என்பது தரமான திரைப்படங்களைத் தந்ததில் மட்டுமல்ல, அடுத்தடுத்து சினிமாவை நோக்கி வரும் தலைமுறையினருக்கு தன் படங்கள் மூலமாக துணிச்சலையும் தான்.
எத்தனை பிரம்மாண்டமான அலசல். ஒவ்வொருன்றிலும் நுணுக்கங்களையும் சிறப்பான விஷயங்களையும் குறிப்பிட்டிருப்பதும், மற்ற படங்களின் ஒப்பீடுகளும் தேர்வும் வியக்க வைக்கிறது.
எஸ். பாலச்சந்தர் அவர்களின் பார்வையில் எப்படி ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பு இருக்கிறது என்பதை உங்கள் பார்வையில் யோசித்து எழுதியிருக்கிறீர்கள்.
”இந்த கட்டுரையின் திரைக்கதையே” வித்யாசமாக இருக்கிறது. ஒவ்வொரு படங்களின் டைட்டில் கார்டுகளை பற்றி எழுதியுள்ளீர்கள்.அ ப்படியென்றால் இது போல் எத்தனை படங்களின் டைட்டில் கார்டுகளை கவனித்திருக்க வேண்டும், நினைவு கொண்டு குறிப்பெடுத்து சேகரித்திருக்க வேண்டும்.
விரிவான பார்வைகளும் ஒப்பீடுகளும் ஒவ்வொன்றும் ஆழமானவை. அதற்கான உழைப்புகளும் படைப்புகளும் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. வாழ்த்துகள் மேம்
உங்களுடைய உழைப்பும் திரைப் பார்வைகளும் அசாத்தியமான திறமையுள்ள ஒருவரால் தான் சாத்தியம். ஒரே ஒரு குறை; ஏராளமான எழுத்துப் பிழைகள்;
I am not justifying typos but the contents are clear.
Veenai Blachnader and Ruthraiya were not successful in the cine field and it is sad.