சன்டான்ஸ் விருதினைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இயக்குனர்..
சிறந்த இயக்குனருக்கான கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கபப்ட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்..
சிறந்த படத்திற்கான விருதுக்காக போரிந்துரைக்கபப்ட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்..
இவை எல்லாவற்றுக்கும் ஒரு பெயர் ஏவ டூவர்னே
அம்மா, சித்தி பாட்டி என பெண்கள் சூழ்ந்த வீட்டில் வளர்ந்தவர். ஏவ டூவர்னேவின் குடும்பத்தில் யாரும் திரைப்படத்தோடு நேரடி தொடர்பு கொண்டவர்கள் அல்லர். இவரது சித்திக்கு மட்டும் திரைப்படங்கள் பார்ப்பதென்றால் அத்தனை ஆர்வம், படம் பார்க்க போக வேண்டும் என்றால் முதல் ஆளாகத் தயாராவது, எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலும் அதன் அத்தனை நுணுக்கங்களையும் பற்றிப் பேசுவது என ஒரு திரைப்பட கலைக் களஞ்சியமாக இருந்திருக்கிறார். ஏவ டூவர்னேக்கு பள்ளிக்கூடம் முடிந்ததும் அப்படியே திரையரங்குக்கு அழைத்து சென்று விடுவாராம், புத்தகங்கள் வாசிப்பதிலும் திரைப்படங்கள் பார்ப்பதிலும் சித்திக்கு இருந்த ஆர்வம் ஏவ டூவர்னேயுடன் உரையாடும் போது ஒரு வெள்ளமென பாய்ந்திருக்கிறது. தன்னையறியாமல் அத்தனையையும் பெற்றுக்கொள்ளும் ஒரு சேமிப்புக் கிடங்காக இருந்ததை ஏவ டூவர்னே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
அப்போதெல்லாம் கூட தான் ஒரு திரைப்பட இயக்குனராவோம் என ஏவ டூவர்னே நினைத்ததில்லை. அவரின் கவனமெல்லாம் ஆங்கிலத்தில் புலமை பெறுவதும், அமெரிக்க ஆப்ரிக்க இனத்தவர் குறித்து ஆய்வு செய்வதிலுமாக இருந்திருக்கிறது.
இப்படியாக இருந்தவர் தான் விளம்பரத் துறைக்கு பணியில் சேர வருகிறார். ஃபாக்ஸ் திரைப்பட நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் வேலை கிடைக்கிறது. ஒரு படத்தினை எவ்வாறெல்லாம் விளம்பரம் செய்யலாம் எனக் கற்றுக் கொள்கிறார். குறிப்பாக இளைஞர்களிடம் எப்படி சினிமாவைவைக் கொண்டு சேர்ப்பது என்பதை புரிந்து கொள்கிறார். இரண்டு வருடங்கள் அங்கு பணி செய்தபின் சொந்தமாக விளம்பர நிறுவனம் தொடங்குகிறார். அப்போது ஏவ டூவர்னேக்கு வயது 27.
இந்த விளம்பர நிறுவனத்தை அவர் படம் இயக்கத் தொடங்கிய சில வருடங்கள் வரை தொடர்ந்து நடத்திருக்கிறார் இப்போதும் கறுப்பினத்தவர் தயாரிப்பில் வெளிவருகிற சுயாதீன படங்களுக்கு மட்டுமே விளம்பர ஆலோசகராக பணி செய்கிறார்.
ஒரு படத்திற்கான விளம்பரம் என்பது அதில் நடிக்கும் பிரபலமான நடிகர் நடிகைகளை மட்டும் சார்ந்தது அல்ல என்பது டூவர்னேக்கு விளம்பரத்துறை கொடுத்த அனுபவம். முதல் படம் தொடங்கி இவரது தற்போதைய தொடர்கள் வரை பிரபல நடிகர்கள் அவர் தனது படைப்புகளின் முகங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்ததில்லை.
டூவர்னேக்கு முதன்முதலாக திரைபபட இயக்கம் மீதான ஆர்வம் வருவதற்கு ஒரு நொடி தான் காரணமாக இருந்தது. பலருக்கும் வாழ்க்கையைத் திசைமாற்றும் நொடி மின்னற்பொழுதே நிகழும்.
மைக்கேல் மான் இயக்கிய COLLATERAL படத்தின் படப்பிடிப்பில் பணி நிமித்தமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் டூவர்னே. லாஸ் ஏஞ்சல்ஸின் ஒரு தெருவில் காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சுற்றிலுமுள்ள தெருக்களை, மக்களைப் பார்க்கிறார். “இவர் இந்தத் தெருவில் படம் எடுக்கிறார். நாம் ஏன் இந்தத் தெரு குறித்த படத்தினை எடுக்கக்கூடாது” என்பது மின்னல் நேர யோசனையாக வந்துபோனது. அதுவே அவரை முதல் படமான I WILL FOLLOW நோக்கித் தள்ளியது.
ஏவ டூவர்னே அதற்கு முன்பு திரைக்கதை எழுதியதில்லை. அதற்கான பயிற்சி வகுப்புகளோ, கல்லூரிக்கோ சென்றதில்லை. யாரிடமும் உதவியாளராகவும் பணியாற்றியதில்லை. அவர் செய்ததெல்லாம் திரைக்கதைகளை வாசித்துக்கொண்டே இருந்தது தான். சிறந்தவை என பட்டியலிடப்பட்ட திரைக்கதைகளை வாசித்தார். அவருக்கு திரைக்கதையின் வடிவம் எப்படி அமைந்திருக்க வேண்டும், ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் எப்படி வேறுபடுத்த வேண்டும், ஒரு கதாபத்திரத்தை அறிமுகம் செய்கையில் எதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் பின்னணிக்காக எவையெல்லாம் திரைக்கதையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்கிற தெளிவு ஏற்படுகிறது.
இனி கதை தானே சொல்ல வேண்டும். அந்தக் கதையை அவர் கற்று வைத்திருக்கிற சட்டத்தில் சரியாய் பொறுத்த வேண்டும்.. திரைக்கதை அவருக்கு அத்தனை சந்தோசம் ஏற்பட்டிருந்தது. தனக்கு திரைக்கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட தன்னுடைய படத்தைப் பற்றிய கதையைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் எடுத்துக் கொண்டது ஒரு எளிமையான கதையை. ஆனால் அது எல்லாருக்குமான கதையாக இருந்தது. மாயே என்கிற ஒரு பெண் தனனுடைய பிரியத்திற்குரிய உறவுக்கார பெண்ணை இழக்கிறார். அந்த வயதான பெண் இறந்த அன்று நடக்கிற சம்பவங்களே கதை. ஒரே வீடு தான் படம் முழுவதும் மாயேவை சந்திக்க, துக்கக் விசாரிக்க வருபவர்கள் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வீட்டுக்குள் அழைத்துவந்து கதை சொன்னது திரைக்கதை.
திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு ஒவ்வொரு படத்தயாரிப்பு நிறுவனத்தையும் தொடர்பு கொண்டார். எல்லாருமே கதை நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே பிரச்சனை இந்தப் படத்தின் கதாநாயகியும் பின்னணியும் கறுப்பினத்தவராக இருநிதாது தான். ஏவ டூவர்னேவுக்கு இது திகைப்பை ஏற்படுத்தியது. “நான் பார்த்த மனிதர்களை, என்னுடைய அனுபவங்களை, என் உணர்வுகளை வெளிப்படுத்த இவர்கள் தானே சரியாக இருக்க முடியும்..நான் ஏன் என் கதையை வேறு யாருக்கோ நடந்ததாக சொல்ல வேண்டும்” என்று கேள்வி கேட்டார். பதில் இல்லை.
படத்தின் திரைக்கதையை அப்படியே விட்டுவிட்டு ஆவணப்படம் எடுக்கப் போய்விட்டார்.
அவர் எடுத்தது ஹிப்ஹாப் பாடகிகளைக் கொண்ட இசைக்குழு பற்றியது. ஆவணப்படம எடுக்கையில் அவருக்கு யோசனை தோன்றியது, “நாமே ஏன் படத்தினை தயாரிக்கக் கூடாது?” இந்த யோசனையே பிறகு செயலாக மாறியது. ஒரு நண்பர் மட்டும் உதவுவதாக சொல்ல, படத்தினைத் தொடங்கினார். யாருமே தெரிந்த முகங்கள் கிடையாது. ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்தார். பணம் இருக்கும்போது படப்பிடிப்பு நடைபெறும். பிறகு விளம்பர நிறுவனத்தில் ஒரு வேலையைப் பிடிப்பார். அந்த வேளையில் இருந்து பணம் கிடைத்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும்..இப்படியே அவர் படத்தினை எடுத்து கொண்டிருந்தார். முழு நீள படத்துக்கு அவர் எடுத்துக்கொண்டது வெறும் பதினாறு நாட்கள் மட்டுமே.
நல்ல வசனங்கள், தேர்ந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு என முதல் படத்தில் ஒவ்வொன்றையும திட்டமிட்டார். அத்தனை திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பினார். விமர்சகர்களின் கவனத்தை படம் ஈர்த்தது. அவர் பெயர் தெரிய ஆரம்பித்தது.
உடனடியாக அவரை நம்பி தயாரிப்பளர்கள் முனவரவில்லை. அப்படியே வந்தாலும் உன் கதையை, உன் மக்களை முன்னிறுத்தாதே என்றார்கள். “நான் திரைபபடம் இயக்க வந்ததே எங்கள் கதையைப் பேசத்தான்..” என்று வந்தவர்களையும் வழியனுப்பி வைத்தார்.
டூவர்னேயின் அப்பா அலபாமாவில் வசிப்பவர். அவரைப் பார்க்க அங்கு செல்லும்போதெல்லாம் அவருக்கு அலபாமாவில் நடந்த ‘இரத்த ஞாயிறு’ வரலாற்று நிகழ்வு நினைவுக்கு வரும், இதே ஆற்றுப்பாலத்தில் தானே உரிமை அமைதி ஊர்வலம் சென்ற என் மக்களை அடித்தார்கள் என ஏவ டூவர்னே நினைத்துக் கொண்டே பயணித்தார். அப்பவும் பல கதைகளை அது குறித்து சொல்ல, “எவரேனும் தயாரிக்க முன்வைத்தால் இரத்த ஞாயிறு குறித்த படத்தினை எடுக்க வேண்டும்” என்று உறுதி கொண்டிருந்தார். ‘வரும்போது வரட்டும், நமக்கென்ன? நாம் திரைக்கதை எழுதுவோம்’ என்று திரைக்கதை எழுத அதற்கு SELMA என்றும் பெயரிட்டார். படத்திற்கு சிறந்த தயாரிப்பாளர் கிடைத்தார். அவர் படத்தில் காத்திரமான ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். படப்பிடிப்பின்போது எதிர்பார்ப்பை கூட்டத் தொடங்கியது அந்தத் தயாரிப்பளர் பிரபல தொகுப்பாளர் ஓபரா வின்ஃபிரே.
டூவர்னே பற்றிப் பேசும்போது SELMA பற்றிப் பேசியே ஆகவேண்டும். 1964ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங் ஜூனியருக்கு அமைதிக்கான நோபில் பரிசு அளிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து பெரும் கலவரத்தையும் வன்முறையையும் அமெரிக்க வெள்ளை இனத்தவரின் ரகசியக் கும்பல் ஒன்று ஏற்படுத்தியது. ஒரு தேவாலயத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த, அங்கு பிரார்த்தனை பாடல் பாடுவதற்காக தயாராகிக் கொண்டிருந்த சிறுமிகள் இறந்து போகிறார்கள். இது கறுப்பின மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதே நேரம் தங்களுக்கு வாக்குரிமை வேண்டும் என அங்கங்கு பொதுமக்கள் சிலர் குரல் எழுப்புகின்றனர். அவர்களைத் தொடந்து துன்புறுத்துகிறது அரசாங்கம். இவையெல்லாம் ஒன்றிணைய அமைதிப் பேரணியை நடத்தில் நமது போராட்டத்தை தெரிவிப்போம் என முடிவு செய்கின்றனர் கறுப்பின மக்கள்.
அந்தப் போராட்டமும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தில் தெளிவாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
அதன் பின்பும் தொடர்ந்து உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளையே டூவர்னே இயக்கினார். அவற்றில் சில வணீகரீதியான தோல்வியை சந்தித்தாலும், விமர்சகர்களின் பார்வையில் திரைப்படங்கள் புகழப்பட்டன.
டூவர்னேயின் மிகப்பெரிய பலம், கச்சிதமான திரை மொழி. அனாவசியமான எந்தக் காட்சியுமற்ற அடர்த்தியான கதை சொல்லல் முறையினைக் கொண்டிருக்கிறார். ஒரு திரைக்கதையை அவர் எழுதி முடித்ததும், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பார்வையிலும் அந்தக் கதை திரைக்கதையாக எப்படி கதை நகரும் என்பதை எழுதுகிறார். இதனால் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்த தெளிவும் அவரிடத்தில் இருக்கும். திரைப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்குக் கூட அவர்களின் முன்கதையும், கதாப்பாத்திரத் தன்மையும் அவசியம் என நினைப்பவர். அதே போன்று குழந்தைகளுக்கும், பெற்றோருக்குமான உரையாடலையும் உறவில் ஏற்படுகிற
சிக்கல்களையும், உரையாடல்களையும் அவரின் பெரும்பாலான் படங்களில் பார்க்க முடியும்.
பிறகு இயல்பான உரையாடல்கள் இவரின் தனித்துவம், I will follow படத்தில் ஒரு உரையாடல் இப்படியாக அமைந்திருக்கும்.
“என்னுடைய சித்தி அமன்டா தான் எனக்கு ஒப்பனை மீது ஈர்ப்பு வரவைத்தது. குறிப்பாக கண்களுக்கான ஒப்பனையை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.அவர் சொல்வார், “உன் கண்கள் தான் சிறப்பானதாக தெரிய வேண்டும், அப்போது தான் மகிழ்ச்சியானவளாக தெரிவை. ஏனெனில் அப்போது தான் கண்களின் ஒப்பனை அழிந்துவிடும் என்று அழ மறுப்பாய்…இது எத்தனை நலல் விசயம் இல்லையா?’ என்பார்”
மிக சாமானியமான ஒரு கதாபாத்திரத்துக்கு ஏற்படுகிற சிக்கல்களும், எதிர்பாராத சம்பவங்களுமே இவரது கதையின் அடிப்படையாக இருக்கின்றன
.திரைப்படத் துறையில் ஆர்வமிக்க ஒருவருக்கு ஏவ டூவர்னேயிடம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு. சுற்றிலும் புயலும், சுழலும் சுற்றியடித்தாலும் தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருக்கும் ஒருவருக்கு, எல்லாம் தானாக வந்து அமையும் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இந்த வார்த்தைகளை அநேகமாக முன்னேறிய ஒவ்வொருவரும் சொன்னார்கள் என்றாலும் கூட டூவர்னே சொல்கிறபோது கூடுதல் மதிப்பு இருக்கத் தான் செய்கிறது.
ஒரு கிணற்றுள்ளுள் இருந்து உலகத்தைப் பார்க்க முடியாமல் கிடைக்கும் வெளிச்சதைப் பற்றி மேலேறி கண் கூசி, பிறகு பிரகாசத்தை தன நோக்கித் திருப்பிய ஒருவரின் வாழ்க்கை தான் டூவர்னேக்கு.
அந்தப் பிரகாசத்தை அவர் இன்றளவும், எப்போதும் தனக்காக அல்ல தன மக்களுக்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அவர் சொல்வது “உன்னுடைய வளர்ச்சி உன்னை மட்டுமே உள்ளடைக்கியதாக இருந்தால், அது எத்தனை அற்பமான வளர்ச்சி..”
இவரது வளர்ச்சி அமெரிக்காவைத் திரும்பிப் பார்த்த வளர்ச்சி. ஏனெனில் அதில் அவர் மானுடம் மீது கொண்டிருந்த கரிசனமே .எஞ்சியிருந்தது. அவை இன்னும் பரவும்..