கல்லூரியில் தொடர்பியல் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். ஒவ்வொரு புதன்கிழமையும் மதியம் ஒரு படத்தைத் திரையிடுவார்கள். எந்தப் படம் என்பது திரையிடலுக்கு முந்தைய நிமிடம் தான் தெரியும்.பெரும்பாலும் அயல் நாட்டு திரைப்படங்கள் அலல்து வங்காள மொழிப் படங்களாகவே இருக்கும். படத்தை சீனியர் மாணவர்களில் ஒருவர் தேர்ந்தெடுத்து திரையிட வேண்டும். ஏன் அந்தப் படத்தைத் திரையிடலுக்குத் தேர்ந்தெடுத்தேன் என்பதையும் அவர் ஒரு நிமிட நேரத்தில் சுருக்கமாக விவரிக்க வேண்டும்.
அன்றைய தினம் எங்களது சீனியர் தன்னுடைய தேர்வாக வைத்திருந்த படம் ‘முதல் மரியாதை’. தமிழ்படம் என்றதும் எல்லோருக்கும் உற்சாகம். கைதட்டி ஆரவாரம் செய்தது இப்போதும் நினைவிருக்கிறது. படத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக அவர் சொன்னதில் ஒன்று, ‘தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் இனி வருமா என்று தெரியாததாலேயே மீண்டும் இந்தப் படத்தை நினைவுபடுத்தத் திரையிடுகிறேன்’ என்றார்.
அதற்கு பிறகும் கூட ‘முதல் மரியாதை’ படத்தை இதுவரை கணக்கேயில்லாமல் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையுமே ஒரு புதிய கோணத்தைக் காட்டிவிடுகிறது படம். நிச்சயமாக மிகச் சிறந்த படைப்பாக்கங்களில் இந்தப் படத்திற்கு ஒரு இடமுண்டு.
இந்தப்படத்தில் வடிவுக்கரசி ஏற்றிருக்கும் பொன்னாத்தா கதாபாத்திரம் போல இதுவரை தமிழில் ஒரு பாத்திரம் அமைந்ததில்லை. எப்போதும் சிடுசிடுத்த முகத்துடனும் யாரையேனும் திட்டியபடி வாய்கொள்ளாத சாபத்தை மற்றவர்கள் மேல் தூவியபடி வளைய வருகிற ஒரு பெண். யோசித்துப் பார்த்தால் படத்தில் யாருக்கும் இவரது குணம் பெரிய உறுத்தலாய் இருக்காது. பொன்னாத்தா கத்திக் கொண்டே இருந்தாலும் அவரவர் தங்களுடைய வேலைகளைப் பார்த்தபடி இருப்பார்கள். அவளது இயல்பே அப்படித் தான் என்பது போல.
மேம்போக்காகப் பார்க்கையில் கணவனை வெறுக்கிற ஒருத்தியாகவும், அவரை நிம்மதியாக வாழவிடாத ஒரு மனைவியாகவும் நமக்குத் தெரிவார். ஆனால் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் எனபதைப் புரிந்து கொண்டோமானால் தெரிந்த பல முகங்கள் நமக்கு வந்து போகும்.
வெளியில் சொல்ல முடியாத மனபாரத்தை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் ஒருகட்டத்தில் அதன் கணம் தாங்காமல் எல்லாவற்றிலும் வெடித்துக் காண்பிப்பார்கள் இல்லேயேல் வாழ்வை முடித்துக் கொள்வார்கள். பொன்னாத்தா எல்லாவற்றிலும் தனது கோபத்தைக் காட்டுகிறாள். தனது இளவயதில் திருவிழாவில் ஒருநாள் ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொண்டதில் கரு உருவாகிறது. அதனை வெளியில் சொல்லாமல் தன் வீட்டு வேலைக்காரன் மலைச்சாமிக்கு பொன்னாத்தாவின் அப்பா மனமுடிக்கிறார். மலைச்சாமி தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்காக பொன்னாத்தாவை மணக்கிறார். ஆனால் அவளை ஒருபொழுதும் தீண்டியதில்லை,அவளிடம்ஒரு வார்த்தைப் பேசியதில்லை.
இப்படியான ஒரு சூழலில் பொன்னாத்தாவின் மனம் என்னவாகியிருக்கும். ஒருபக்கம் குற்ற உணர்ச்சி, மற்றொருபக்கம் ஒரு குடும்பத் தலைவியாக இல்லாமல் வீட்டு வேலைக்காரி போல வாழ நேர்ந்த அவலம். தனது அப்பாவிடமிருந்து பெற்றுக் கொண்ட சொத்தினால் கண் முன்னே கணவன் மரியாதையாக நடமாட, தான் மட்டும் இப்படி உள்ளுக்குள் மாய்ந்து போகக்கூடிய இடத்தில் இருக்கிறோமே என்கிற ஆற்றாமை.‘தவறு செய்துவிட்டேன் அதற்கு வாழ்நாள் முழுக்கவுமே தண்டனையா?’ என்று ஒரு காட்சியில் பொன்னாத்தா கேட்பாள். அது அவள் இத்தனை வருடங்களாக மனதில் வைத்திருந்த ஆதங்கம். மலைசாமியைப் பொறுத்தவரை அவர் செய்தது தியாகம். பொன்னாத்தாள் இந்தத் தியாகத்தை விரும்பவேயில்லை. அவளது விருப்பமில்லாமல் மலைச்சாமி ஏற்றுக்கொண்ட தியாகம். பொன்னாத்தாளுக்கும் எல்லாவற்றையும் மறந்து விட்டு மலைச்சாமியோடு வாழலாம் என்கிற எண்ணம் இருந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் விலகும்போது அது பொன்னாத்தாளுக்கு எத்தனை பெரிய தண்டனையாக இருந்திருக்கும்? அதோடு தனது மகளைத் தன் மகள் போல மலைச்சாமி நினைத்து அவளிடம் மட்டும் அன்பாக இருப்பது பொன்னாத்தாளுக்கு பெரும் வலி
இந்த ஏக்கம் நிராசையாகி போனதால் தான்‘”என்னை ஒன்னும் நீ சும்மாக் கல்யாணம் செய்துக்கல, எங்கப்பா கொடுத்த சொத்துல தான் இன்னிக்கு ஊருக்குள்ள பெரிய மனுஷனா இருக்கே’ என்பதை அவள் தன் பக்க நியாயமாகக் கொண்டிருக்கிறாள். மிக ஜாக்கிரதையுடன் உருவாக்கபப்ட்ட கதாபாத்திரம்.அதனால் தான் ஏதோ ஒரு நியாயம் பொன்னாத்தாளிடம் இருப்பதினாலேயே நாம் அவளை வெறுப்பதில்லை.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஆவணப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த ஆவணப்படம் மாநில அரசாங்கம் உலக வங்கியின் ஆதரவோடு மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வுப் பயிற்சி அளிப்பது தொடர்பானது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டவர்களும் உண்டு. இதற்காக மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தோம். எங்களுடன் மறுவாழ்வு பயிற்சி தரும் ஒரு பெண் ஊழியர் வந்திருந்தார்.அவர் அந்தக் கிராமத்தில் ஒரு பெண்ணை எங்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் செய்து வைத்த பெண் உள்ளூர் பால்வாடி ஒன்றில் வேலைப் பார்ப்பதாகவும் இப்போது தன்னுடைய மகளைத் தானே பராமரிப்பதாகவும் மிக மகிழ்ச்சியுடன் சொன்னார். இந்த மகிழ்ச்சி அவருக்குக் கிடைப்பதற்கு அவர் சந்தித்த கொடுமைகள் அநேகம்.
அந்தப் பெண்ணின் பெயரை வசதிக்காக செல்வி என்று கொள்வோம். செல்விக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகிறது. கணவனுக்கு வெளிநாட்டில் ஓட்டுனர் வேலை. திருமணத்திற்குக் கூட ஒரு மாதம் மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அதிலும் திருமணம்முடிந்து ஒருவார காலம் மட்டுமே செல்வியுடன் வாழ்ந்திருக்கிறார். இரண்டு வருடங்களில் திரும்பி வருவேன் என்று போன கணவன் மாரடைப்பால் அங்கே காலமாக, சடலத்தைக் கூட இங்கே எடுத்து வர வசதியில்லாத நிலைமை. அப்போது செல்வி நிறைமாத கர்ப்பம். குழந்தை பிறக்கிறது. கணவனின் முகம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக புகைப்பட ஆல்பத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பாராம். குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை அம்மா வீட்டில் இருந்திருக்கிறார். பிறகு கணவன் வீட்டில் செல்வியையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அழைத்து சென்றிருக்கிறார்கள். அங்கே சுற்றியுள்ள உறவினர்கள் எப்போதும் பரிதாபத்துடன் செல்வியை அணுகுவதும், திரும்பத் திரும்ப கையறு நிலையான அவளது வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதுமான சூழல். இதோடுஅதே வீட்டில் அடுத்தடுத்து கணவனின்இரண்டு தம்பிகளுக்குத் திருமணம் என செல்விக்கு அங்கிருக்கப் பிடிக்காத நிலை. யாரிடமும் மனம் விட்டுப் பேசமுடியாத தொடர்ந்த பொழுதுகளில் ஒருநாள் இரவு தனது திருமண ஆல்பத்தை எரித்திருக்கிறாள்.
பதறிய குடும்பத்தினர் அவளது பிரச்சனையைப் புரிந்து கொள்ளாமல் ‘உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு.. என்று கோபத்தில் சொல்ல அடுத்தடுத்து செல்வி நடந்து கொண்ட விதம் அவள் பைத்தியமாகவே மாறிவிட்டாள் என்று மற்றவர்களை நம்பச் செய்திருக்கிறது.
குழந்தை அவளிடத்தில் இருந்தால் ஆபத்து என்று குழந்தையை தங்கள் வசம் வைத்துக் கொண்டு செல்வியை மட்டும் தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.குழந்தையும்இல்லாத அந்தத் தனிமை அவளை பெரும் மனவேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஊரில் எங்கேனும் மேளச்சத்தம் கேட்டால் ஆவேசமாகிவிடும் செல்வியை அறையில் வைத்துப் பூட்டியிருக்கிறார்கள். அடம்பிடிப்பவளை அடிக்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் செல்வியிடம் திரும்பத் திரும்ப சொன்னது, “புருஷன் வீட்டுலேயே கெடக்க வேண்டியது தானே!” என்பது.தவறு முழுவதும் செல்வியாக ஏற்றுக் கொண்டது நாம் என்ன செய்ய முடியுமே ன்று எல்லோருமே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான ஒரு சமயத்தில் தான் அந்த ஊருக்கு இது போன்ற மனநிலை பிறழ்ந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்புக்கு வந்த அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு செல்வி பற்றி சொல்லபப்ட்டது. அவர்கள் அவளிடம் பேசி, மருந்தை ஒழுங்காக சாப்பிட வைத்து தன் வசத்திற்கு அவள் வந்ததும் மறுவாழ்வுப் பயிற்சியும் அளித்திருக்கிறார்கள்.பிறகு பால்வாடியில் பணி வாங்கித் தந்திருக்கிறார்கள். இந்தசந்தர்ப்பத்தில் தான் மகிழ்ச்சியான செல்வியை நாங்கள் சந்தித்தோம்.
சமீபத்தில் மருத்துவ சிகிச்சை முறை பற்றி ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். Art of Healing எனபது புத்தகத்தின் தலைப்பு. அதை எழுதிய மருத்துவர் பெர்னி எஸ். சீகல். மருத்துவத்துறையில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டவர். தான் சிகிச்சை அளித்த நோயாளிகள் பற்றி புத்தகத்தில் சொல்கிறார். அவர் சொல்வது, நூற்றுக்கு தொண்ணூறு சதவீத நோய் மனப் பிரச்சனையால் ஏற்படக்கூடியது தான். ஒருவர் தொடர்ந்து கைவலி, கால்வலி என்று மருத்துவரிடம் வருகிறார் என்றால் அதற்கான சாத்தியங்கள் இல்லாத சூழலில் கை வலி என்பது சொல்ல விரும்பாத ஏதோ ஒரு மனபிரச்சனையின் வெளிப்பாடு என்று புரிந்து வைத்திருக்கிறேன் என்கிறார்.
எந்த ஒரு மனிதருக்குமே உள்ளுணர்வு என்பது அசாத்திய சக்தி கொண்டது. தொடக்கத்திலேயே நமக்கு இது தான் பிரச்சனை என்று தெரிந்துவிடும். அதை“இதுநம் குடும்பப் பிரச்சனை, நமது அந்தரங்கப் பிரச்சனை’ இதைப் போய் மருத்துவரிடம் சொல்வதா?என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்தாமல் எந்த மருந்து தந்தாலும் அது நோயை முற்றிலுமாக குணப்படுத்தாது என்கிறார் புத்தகம் எழுதிய மருத்துவர்பெர்னி எஸ். சீகல்.
இப்போது பொன்னாத்தாவையும், செல்வியையும் இதன் பின்னணியில் யோசித்துப் பார்த்தோமானால் இருவருக்குமே அடக்கப்பட்ட ஆசைகள்,பாலியல் தேவைகள் இருந்திருக்கின்றன. அதை எப்படி வெளிக்காட்டுவது? என்கிற தயக்கம் தான் அவர்களை மீறிய வெடிப்பாக வெளிவந்திருக்கிறது.
வடிவுக்கரசி கதாபாத்திரமான பொன்னாத்தா நமக்கு மிக வேண்டப்பட்டவள்.நமது நம்பிக்கைக்காகக் காத்திருப்பவர்கள்.ஆனால் அவளைப் போன்றவர்களைத் தான் வில்லியாகவே வைத்திருக்கிறோம்.பெண்களை இயல்பாய்க் காட்டும் தமிழ் இயக்குநர்களில் பாரதிராஜாவுக்கு முக்கிய இடமுண்டு. அவர்களில் ‘முதல் மரியாதை’ பொன்னத்தாவும், குயிலியும், ‘கிழக்கு சீமையிலே’ விருமாயி, ‘புதிய வார்ப்புகள்’ ஜோதி, கருத்தம்மா என்று பட்டியலிடலாம்.
ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் எந்தவொரு கலை வடிவமும் மாறுதல் அடைந்து கொண்டே இருக்கும். திரைப்படங்களும் அதன் கதாபாத்திரங்களும் கூடஅதற்கு விதிவிலக்கல்ல.
வெகு காலத்திற்கு நமது தமிழ்த்திரைப்படங்கள் இரண்டு விதமான பெண் கதாபாத்திரங்களை மட்டுமே அதிகம் நமக்குக்காட்டிக்கொண்டிருந்தன. ஒன்று மிகத் துல்லியமான நேர்மைத்தனம் கொண்டபெண் கதாபாத்திரம். மற்றொன்று வில்லத்தனங்களை செய்கிற ஒன்று. திரைப்படங்கள் கூட இவற்றை விட்டு எப்போதேனும் வெளிவருவதுண்டு. இயக்குநர்களைப் பொறுத்து இயல்பான பெண் கதாபாத்திரங்களை அவர்கள் நமக்குக் காட்டுகிறார்கள். அவர்களில் சிலரைத் தான் நாம் பார்த்திருக்கிறோம்.
திரையில் காட்டப்பட்ட நாயகிகளைக் காட்டிலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை வசீகரித்திருப்பார்கள்.அவர்களில் அதிகம் பேர் இன்னும் திரையில் நமக்குக் காட்டப்படவில்லை. அதற்கு இன்னும் காலமும், நேரமும் எண்ணிக்கைகளும் தேவைபபடும்.
This article reminds me porali movie.
அருமை. பொன்னாத்தா , செல்வி போன்று, உடனிருப்பவர்களை ஆக்கிவிடாமல் காக்கும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நற்புரிதல் அனைவருக்கும் சென்றடையட்டும்.!
சில கதாப்பாத்திரங்களை வெறுமனே கடந்துவிடுவதுண்டு. இனி, நிஜமாகவே இப்படி இருந்திருப்பார்கள்தானே என்ற நினைவும் வரக்கூடும். நன்றியும் வாழ்த்துகளும் மேம் !!!