திரேந்திர ஜா மற்றும் கிருஷ்ண ஜா எழுதிய புத்தகம் AYODHYA THE DARK NIGHT – The secret history of Rama’s appearance in Babri Masjid.
“இந்துக்களின் நம்பிக்கை காரணமாக ராமஜென்மபூமி இந்துக்களுக்கே தரப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த நம்பிக்கை எப்படி உருவாக்கப்பட்டது என்று சொல்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாக இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு வருடத்துக்குப் பிறகு 1948ஆம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவு பாபர் மசூதியில் ராமர் சிலர் நிறுவப்பட்டது. ராமர் சிலையை மசூதிக்குள் வைத்தது யார் என்பதில் தொடங்குகிறது புத்தகம். ஒரு ரகசியம் போல தன்னை மறைத்துக் கொண்ட இரவு அது. அந்த ரகசியத்தின் பின்னால் மறைந்திருந்த உண்மைகளை ஆதாரத்தோடு விளக்குகிறது இந்தப் புத்தகம். உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமே கொண்ட புத்தகம் என்பது தவறாமல் குறிப்பிடப்பட வேண்டியது.
டிசம்பர் 22 இரவு பாபர் மசூதியில் ராமர் சிலையை வைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அபிராம் தாஸ். இந்த அபிராம் தாஸ் என்பவர் அங்குள்ள ஒரு கோயிலின் தலைமை அர்ச்சகர். தலைமை அர்ச்சகர்களை மகந்த்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த மகந்த் அபிராம் தாஸ் துறவறம் மேற்கொண்ட ஒரு சாது. இவரின் பால்ய கால வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குத் தகுந்த காரணம் உண்டு. அபிராம் தாஸ் ஒரு குக்கிராமத்தில் இருந்து அயோத்திக்கு வந்து சேர்ந்ததும், தன்னை தீவிர இந்துத் துறவியாக மாற்றிக்கொண்டதையும் அதற்கு அவருடைய உடல் பலம் மட்டுமே காரணமாய் இருந்தத் தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன.
அபிராம் தாஸ் மாபெரும் மதப்பற்றாளர்களை இணைக்கிற ஒரு கண்ணி மட்டுமே. அவரைப் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் யார் என்பது முக்கியம். அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள். தங்களை முன்னிறுத்த ‘தெய்வங்களை’ துணைக்கு பயன்படுத்தியவர்கள். இதற்காக அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு திட்டமும் நிகழ்கால அரசியலின் முன்மாதிரி.
அயோத்தியை ஏன் தங்களின் மத அரசியலுக்குக் களமாக எடுத்துக் கொண்டனர் என்பதனைப் பற்றி விரிவாகவே சொல்கிறார்கள் புத்தக ஆசிரியர்கள்.
மகாத்மா காந்தி இறந்த பிறகு நாடு முழுவதும் இந்து மகாசபையினரின் மீது மக்களுக்கும், நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் ஒரு நம்பிக்கையின்மை ஏற்பட்டிருந்தது. தங்களது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய தேவை இந்து மகாசபையினருக்கு இருந்தது. அயோத்தியில் ராமர் சிலையை நிர்மாணம் செய்வதை இதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தச் சிலையை மசூதிக்குள் வைத்ததும் அது தொடர்பாக சர்ச்சைகளும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் எழும் என்று இந்து மகாசபையினர் அறிந்திருந்தனர். அவர்களுக்கும் அதுவே தேவைப்பட்டிருந்தது. இந்த சிலை நிர்மாணத்துக்கு ஒரு நாளைக்குப் பிறகு கொல்கத்தாவில் இந்து மகாசபை மாநாடு நடைபெற இருந்தது. தேசத்தில் உள்ள அத்தனை மதத்தலைவர்களும் இந்த மாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு காந்தியின் மரணத்துக்குப் பிறகு இழந்த அவர்களது செல்வாக்கைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் நடைபெற்றது. வெறும் மாநாடாக மட்டும் இல்லாமல் இதனை உணர்ச்சிப் போராட்டமாகவும் மாற்ற நினைத்தார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது தான் ‘ராம ஜென்ம பூமி ‘ விவகாரம்.
இந்து மதத்தின் மீது தீவிர பற்றாளர்களாக இருந்த ஒவ்வொருவருக்குள்ளும் உள்நோக்கம் இருந்தது. இதில் அனைவரையும் ஒன்றிணைத்தது நில ஆக்கிரமிப்பே. பாபர் மசூதி போன்ற நகரின் மையமான வழிபாட்டுத்தலத்தினை ஆக்கிரமித்து அதற்கு புனிதம் ஏற்றி, ஒரு புனிதப்போர் போல் கைப்பற்றி ராமர் கோயிலாக மாற்றினால் அது இந்து மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என இந்து அமைப்புகள் அறிந்திருந்தனர்.
இதனால் இந்து சுயராஜ்ஜியம் போன்ற கோஷங்கள் வலுப்படும் அதே சமயம்’ அரசியல் மைய அதிகாரத்தைக் கைப்பற்றிவிடலாம் எனப்தெல்லாம் ஒருபக்கம். அதே சமயம் பாபர் மசூதியில் கட்டப்படுகிற ராமர் கோயிலை முக்கியத்தலமாக மாறிவிட்டால் இலாபம் யாருக்கெல்லாம் இருந்ததோ அவர்களெல்லாம் ஒன்றிணைந்திருந்தனர். இந்த இருமுனைத் தாக்குதலில் சிக்கியிருந்தது பாபர் மசூதி.
ராமர் பிறந்த இடம் என்பதால் நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் வருவார்கள். இதனால் அயோத்யா முக்கிய நகரமாகும். நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும். கோயிலை வைத்து எந்தெந்த வகையில் வருவாய் பெருக்க இயலுமோ அதை அவரவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
இதில் கே.கே.கே நாயர் என்பவரின் பங்கு மிக முக்கியமானது. ஃபைசாபாத்தின் மாஜிஸ்திரேட்டாகவும் டெப்யுடி கமிஷனராகவும் பணியாற்றிய நாயர் அந்தப் பகுதியில் மிக செல்வாக்கானவராக இருந்தார். இந்த ராமர் சிலை வைக்கப்பட்ட சம்பவத்திற்கும் அதற்குப் பிறகு ஏற்பட்ட விளைவுகளுக்கும் நாயர் தனது செல்வாக்கினை அதிகபட்சமாக பயன்படுத்தியிருந்தார். இதற்கு பலனை நாயருக்கு ஏக்கர் கணக்கான நிலம் நாயரின் பெயருக்கு மாற்றப்பட்டது. அதில் ஒன்று ஒருலட்சம் மாமரங்கள் உள்ள தோட்டம். இப்படி கணக்கில் அடங்காத நிலச் சொத்துக்களை கே.கே நாயர் தன வசமாக்கிக்கொண்டார். மற்றொன்று இஸ்லாமியர் ஒருவர் நடத்திய உணவகத்தைக் கைப்பற்றியது. அந்த இஸ்லாமியர் மேல் தீவிரவாதி முத்திரைக் குத்தப்பட்டு அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்படுகிறது பிறகு அந்த உணவகத்தை நாயர் தன் வசமாக்குகிறார். இந்து மகாசபையின் தலைவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். பணக்காராரான அந்த உணவகத்தின் உரிமையாளர் மீதமிருந்த நாட்களை தலையில் பிஸ்கட் டின்களை சுமந்து தெருத்தெருவாக விற்றார். தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க நீதிமன்றத்துக்கு அலைந்தார்.
இப்படியாக ஒவ்வொரு நிலத்தையும் நாயர் எப்படிப் பெற்றார், எந்த வகையில் எல்லாம் அபகரித்தார் என்கிற விவரங்களும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
ராமர் பிறந்த தினமாக சொல்லப்படுகிற ராமநவமியை மிகப் பிரமாண்டமாக இந்து சங்கங்கள் நடத்திக் கொண்டிருந்தன. இது ராமரோடு தொடர்புடைய பெரிய விழாவாக இருந்தது. ஆனால் இந்து மகாசபை மாநாடுக்கு முன்னதாக ராமருக்கான ஒரு விழா நடத்தி அதற்குக் கூட்டத்தைக் கூட்டி அதில் ‘ராம ஜென்ம பூமி’ கோரிக்கையை பெரிய அளவில் தொடக்கி வைக்கலாம் என்று இந்து சபையினர் முடிவெடுத்திருந்தனர். ராம நவமியோ ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படக்கூடிய விழாவாக இருந்தது. அதனால் ராமர் கல்யாண உற்சவத்தைக் கையிலெடுத்தனர். அதில் அங்குள்ள வைராகிகள் மற்றும் நாகிகள் குழுவினருக்கு கருத்து வேற்பாடுகள் ஏற்பட்டன. அந்த கருத்து வேறுபாடு குறித்து முழு விவரமும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. சிறிய அளவில் அதிகக் கவனத்தை ஏற்காமல் நடைபெற்றுக்கொண்டிருந்த ராமர் திருமணம் அந்த வருடம் பெரும் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. நவம்பர் 13, 1949 அன்று பாபர் மசூதி அருகில் உள்ள இஸ்லாமியர்களின் இடுகாடுகள் இந்த விழாவுக்காகத் தோண்டப்பட்டன. அந்த இடுகாட்டின் நடுவில் கனதி மசூதி என்று சிறிய அளவிலான ஒரு மசூதி அமைந்திருந்தது. தங்களுடைய இடத்தை அதிலும் இடுகாட்டைத் தோண்டுவதென்பது இஸ்லாமியர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ராமர் தினத்துக்காகத் தான் இத்தனை ஏற்பாடென்றும் என்பதும் அன்றைய தினம் ராமர் எழுந்தருளவிருக்கிறார் என்பது போன்ற பிரசாரங்கள் பரப்பப்பட்டன. நகர மாஜிஸ்ட்ரேட்டான கே.கே.கே நாயரிடம் நில ஆக்கிரமிப்பினை எதிர்த்து இஸ்லாமியர்கள் மனு அளித்தனர். அந்த மனு முற்றிலும் கண்டுகொள்ளப்படவேயில்லை.
இந்த ராமர் திருமண விழாவினை தவிர்க்க இயலாத கொண்டாட்டமாக மாற்றுகிறார்கள். வைராகிகள், சாதுக்கள், சாக்திகள் என அனைவருக்கம் அழைப்பு விடப்படுகிறது.
நாள் நெருங்குகையில் அயோத்தி இந்துக்களால் திக்குமுக்காடிப்போகிறது. அன்றைய தினத்தை ஆன்மீக நிகழ்வாக இல்லாமல் இந்து மகாசபையினரின் கூட்டமாக மாற்றுகிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் இந்து தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அனைவருமே ‘பாபர் மசூதியை ராமர் கோயிலாக மாற்ற வேண்டியதைப் பற்றி பெறுகிறார்கள். கோஷமிடுகிறார்கள். இது காங்கிரஸ் அரசின் மத்தியில் சலசப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிர்ப்புக் குரல்களும் வெளிப்பட்டன.
ராமர் தனது சக்தியால் மீண்டும் அவர் பிறந்த இடத்துக்கு எழுந்தருள்வார் என்பதான கோஷங்கள் வெளிப்பட்டன. மக்களும் ஏதோ நடக்கவிருக்கிறது என்கிற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மகாபையினர் திட்டமிட்டபடி ராமர் சிலையை ‘எழுந்தருள’ வைக்க இயலவில்லை. இதனால் அவர்களின் வெற்றுக் கோஷமாக மாற ஆரம்பித்தது. மக்களும் இந்த விழாவினை நன்கொடை வசூலிக்கும் விழாக்களில் ஒன்றாக நினைக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது ராமர் எழுந்தருளியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு மகாசபையினர் தள்ளப்பட்டனர்.
இந்தப் பின்னணியில் தான் இந்து மகாசபையின் மூன்று நாட்கள் மகாநாடு நடைபெற்றது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாடு முழுவதும் இந்து சபையினர் ஒடுக்கப்பட்டிருந்தனர். வெளிப்படையான கூட்டங்கள், பயிற்சிகள் போன்றவற்றை செயல்படுத்த முடியாமல் போனது, இழந்த செல்வாக்கினை மீட்க வேண்டி நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பம்பாயில் இருந்து வி.டி.சவார்க்கர் கல்கத்தாவிற்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் நாக்பூர் ரயில் நிலையத்தில் கூடியிருந்த மகாசபையின் தொண்டர்களிடையே ரயிலில் இருந்தவாறு ஒரு சிற்றுரை நிகழ்த்துகிறார்.
“நமது இலட்சியமான அகண்ட பாரதம் அருகில் நெருங்குகிறது. இரண்டு வருடங்கள் மிகுந்த துயரங்களையும் தடைகளையும் சந்தித்து வந்த இந்து மகாசபை தற்போது வலுவான கொள்கையுடன் தழைத்துள்ளது என்பதை தொடர்ந்து நடைபெற்று வருகிற சம்பவங்கள் சொல்கின்றன. மதச்சார்பற்ற நாடு என்பது இந்த நாட்டைப் பொறுத்தவரை பொருந்தாத ஒன்று,. இங்கு பெரும்பான்மை இந்துக்களே. அதனால் இந்து இந்து ராஜ்ஜியத்தை நிறுவுவதே பெருமைக்குரிய நிகழ்வாக இருக்கும்” என்றார்.
இந்த உரை நிகழ்த்தப்பட்ட அன்று நாளிரவு பாபர் மசூதியில் ராமர் சிலை வைக்கப்பட்டது
ராமர் சிலை வைக்கப்பட்டதின் விளைவாக அயோத்தியில் பெரும் பரபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் மாநாட்டின் இரண்டாவது நாளின்போது அப்போதைய இந்து மகாசபையினரின் தலைவர் என்.பி. கரே உரை நிகழ்த்துகிறார். அவர் அப்போது தான் புதிதாக அந்தப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அந்த உரையின் ஒரு பகுதி இது”
“85 விழுக்காடு இந்துக்களைக் கொண்ட இந்தத் தேசம் இந்து கலாசாரத்தின் அடிப்படியிலேயே அமைய வேண்டும். இந்து ராஜ்ஜியம் அமைவதை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இந்த நாட்டில் பிரச்சனைகள் தீர வேண்டுமெனில் அரசியலமைப்பில் மாற்றம் வந்தாக வேண்டும். முஸ்லிம்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்பட வேண்டும். அவர்களே எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரத்தைத் தரலாம், வர்த்தகம் செய்யலாம். அவர்கள் தங்கள் கலாசாரத்தைப் பிம்பற்றலாம். அவர்களின் பணத்தையும், சொத்தையும் கூட பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் அரசியலில் இருந்து அவர்கள் ஒதுங்கியே இருக்க வேண்டும். இந்தநாட்டின் எந்தவொரு அரசியல் செயல்பாடுகளிலும் அவர்களை அனுமதிக்கக்கூடாது. இந்துமதத்தை அரசியலமைப்பில் கொண்டு வர வேண்டும். இதைச் செய்யாதத வரை இந்த நாடு வளர்ச்சி அடையாது. அதுவரை இந்த நாடு குழப்பங்களின் தேசமாகவே இருக்கும்”
மொத்தத்தில் இந்து மகாசபை மாநாடு இந்துக்களின் உணர்ச்சியனைத் தூண்டும் வகையில் செய்யமுடிந்ததவற்றை சரியாய் செய்தது. உடனடியாக இந்தத் தீயை அணைத்து விடாதபடிக்கு தொடரவேண்டிய பணியும் சபையினருக்கு இருந்தது அதனால் ஏற்கனவேத் திட்டமிட்டபடி அயோத்தியை நோக்கி தங்களைத் திருப்பிக் கொண்டனர்.
அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்ட அந்த இரவு நடந்த சம்பவத்தினை சாத்தியங்களைக் கொண்டும், நபர்களை நேரில் சந்தித்தும் பதிவு செய்திருக்கின்றனர். அபிராம் தாஸ் இரவுக் காவலாளில் மாறுகிற அந்தத் தருணத்தை பயன்படுத்தி உள்ளே சென்றுள்ளார். பெரும் அச்சத்துடன் கையில் குழந்தை ராமர் சிலையை ஏந்தியபடி அமர்ந்திருக்கிறார். அதிகாலையில் அபிராம் தாஸும் அவருடன் வந்தவர்களும் திடிரென்று உள்ளிருந்து ராம கோஷத்தையும் மந்திரங்களையும் சொல்லத் தொடங்கியிருக்கின்றனர்.
ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தது போல அந்த விடியல் நேரத்தில் சாதுக்களும், வைராகிகளும், நாகிகளும், இந்து மதப் பற்றாளர்களும் மசூதியின் முன்பு கூடுகின்றனர். அதன் பின் ஓயாமல் தொடர்கிறது ராமநாம கோஷங்கள். மசூதிக்குள் இஸ்லாமியர் சென்றுவிடக்கூடாது என்பதற்காக முழு நேரமும் ராம நாம ஆராதைனை நடத்த ஏற்பாடு செய்யபப்ட்டது. இந்த யோசனையைக் கூறி கடைசி அவரை அதை வழிநடத்தியவர் கே.கே.கே நாயரின் மனைவி சகுந்தலா நாயர். ஊர் முழுவதும்’ ராமர் அற்புதத்தினை ஏற்படுத்தினார்’ என்று பரபரப்பட்டது. முன்னரே அச்சடிக்கப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்கள் அதுவும் அதிகாலையிலேயே விநியோகிக்கப்பட்டன. மக்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் நம்பினார்கள். கடும் அச்சத்தில் இஸ்லாமியர்கள் இருந்த காலகட்டம் அது. பலரும் இந்த நிகழ்வுக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானை நோக்கி இடம்பெயர்ந்தனர்.
இதற்குப் பிறகு நடைபெற்ற அரசியல்ரீதியான அணுகுமுறை மிக விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொல்வதானால் கே.கே.கே நாயர் போன்ற அதிகாரத்தின் மையத்தில் இருந்த ஒருவரும் அன்றைய உத்தரபிரதேசத்தின் முதல்வரான கோவிந்த வல்லப பாண்ட்டும் அயோத்தி விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக எப்படியெல்லாம் சரியாய்ப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதனை புத்தகம் விளக்குகிறது.
இவர்கள் தவிர இந்து மகாசபையின் தலைமையில் இருந்த மகந்த் திக்விஜய் நாத், வி.ஜி. தேஷ்பாண்டே, தேஜ் நாராயன், பிஷன் சந்திர சேத்போன்றவர்களின் பங்கும் முக்கியமானது.
இவர்களோடு ஆர்ய சமாஜம் தன்னை இணைத்துக் கொண்டது. அங்கங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த இந்துக் குழுக்கள் தங்களை இந்த விவகாரத்தில் ந்து சபையினருடன் இணைத்துக் கொண்டன. அவர்களுக்கு இது அரிய நிகழ்வாக அமைந்தது.
இவர்களை எதிர்த்து சில குரல்கள் மட்டுமே தொடர்ந்து எழுந்தபடி இருந்தது. காந்திஜி நடத்திய ஹரிஜன் இதழின் பொறுப்பாசிரியரான மஷ்ருவாலா தொடர்ந்து தனது பத்திரிகை மூலமாக எதிர்ப்பினை தெரிவித்தார். அயோத்தியின் நிலையை தேசத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு கொண்டு சேர்த்திருந்தார்.
பிறகு, வரலாறு மறக்கக்கூடாத ஒரு நபரும் உண்டு. அவர் அக்ஷய் பிரமச்சாரி. தீவிர காந்தியவாதியான அக்ஷய் கே.கே.கே நாயரை சந்தித்து இஸ்லாம்யர்களின் நிலம் அபகரிகக்பப்டுகிறது என்பதை சொல்கிறார். மன்றாடுகிறார். அதைத் தடுக்குமாறு கூறினார்.
அன்றைய நாள் இரவு (15, நவம்பர் 1949) அன்று ஒரு கும்பல் அவர் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தாக்குகிறது. அவர்கள் யாவரும் தானும் நாயரும் பேசியதை சொல்லித் தாக்கியிருக்கின்றனர்.
ராமர் சிலை வைக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட பின்பு இஸ்லாமியர்களின் உரிமைகளும், நிலங்களும் பறிக்கப்படுவதை வேதனையுடனும், உறுதியுடனும் மத்திய மாநில அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுவதன் மூலம் அழுத்தம் கொடுத்தபடி இருந்தார். ஒருகட்டத்தில் எதுவும் சரியாகவில்லை எனும்போது நாற்பது நாட்கள் தனிமனித உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடக்கத்தில் அவரது உண்ணாவிரதம் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. நாளாக ஆக அதன் தீவிரத்தன்மை உணரப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு இருந்த ஒரே பற்றுக்கொலாக அக்ஷயின் உண்ணாவிரதம் இருந்தாலும் நேரடியாக அவருக்கு அவர்களால் ஆதரவு தர இயலாமல் இருந்தது. அந்தளவுக்கு நெருக்கடிக்குள் அவர்கள் இருந்தனர்.
உடல்நிலை மிகவும் சீரற்ற நிலையானபிறகே மாநில அரசு கண்துடைப்புக்காக சிலரை கைது செய்தது. நாயர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கமிஷனர் குருதத் இருவரையும பணிநீக்கம் செய்தது. அதற்குள் இருவரும் பெரும்பான்மை நிலங்களை கையகப்டுத்தியிருந்தனர். இருவருமே பினாட்களில் இந்துமகா சபை சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்.
அபிராம்தாஸ் மேல் இந்த சம்பவத்துக்குப் பின் நாற்பது நாட்களுக்குப் பிறகு (பிப்ரவரி 1, 1950) அன்று முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. இவருக்குப் பின்னணியில் இயங்கிய இந்து மகாசபையினரின் தலைவர்கள் , நகரத்தின் அதிகாரிகள் யாவரும் இந்த தகவல் அறிக்கையில் இணைக்கப்படவேயில்லை.
அப்போதைய பிரதமரான ஜவகர்லால் நேருவுக்கு ‘ராமஜென்ம பூமி’ விவகாரம் தீராத வலியைத் தந்திருந்தது. மாநில நிர்வாகமும், உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலும் நிலைமையைத் தன்னிடம் மறைத்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டார். வல்லமை கொண்ட பிரதமராக இருந்தபோதும் தன்னால் மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் அதிரடியாக செய்ய இயலாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்து பலருக்கும் கடிதம் எழுதுகிறார்.
காங்கிரசுக்குள் இந்து மதத்தின் தீவிர பற்றாளர்கள் பிரிவினை உருவாவதை வர் காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுப்புக் கூட்டத்தில் பேசினார். இந்த உரை பலரையும் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு பட்டேலிடமிருந்து நேருவின் பக்கம் திரும்ப வைத்தது. பட்டேலின் மரணத்துக்குப் பிறகு காங்கிரசில் இந்து மத பற்றாளர்களின் செல்வாக்கு அப்படியே குறைந்து போனது.
தேசம் சாட்சியாக நின்ற ராமஜென்ம பூமி விவகாரம் குறித்து மிகச்சரியான பார்வையை வெறும் தகவல்களாக இல்லாமல் தொகுத்து எழுதியதில் திரேந்திர ஜா மற்றும் கிருஷ்ணா ஜா வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். ஒரே ஒரு தகவல் என்றாலும் அதற்காக அவர்கள் தூரம் தூரமாய் பயணப்ப்பட்டிருக்கிறார்கள். பலரை சந்தித்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் நமக்கு அதைச் சொல்கின்றன. உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு முன்பு வரை ராமஜென்ம பூமி விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புத்தகம் விளக்குகிறது.
எந்த உணர்ச்சித் தூண்டுதலும் இன்றி நம்மை சிந்திக்க வைக்கிறது இந்தப் புத்தகம். கடிதப்போக்குவரத்து, நாளிதழ்களின் செய்திகள், தொடர்புள்ள நபர்களை சந்தித்து கேட்டவை , பல புத்தகங்கள் , ஆய்வுக்கட்டுரைகளை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது புத்தகம்.
இதனை வாசித்து முடிக்கையில் நமக்கு வரலாறு எப்படி சிதைக்கப்பட்டு தற்போது அதே நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்று உணரவைப்பதே இந்தப் புத்தகம் நமக்குத் தருகிற பெரும் பரிசாய் இருக்கிறது.