கற்றபின் நிற்க..

0
148

புகைப்படம் நன்றி : வினோத் பாலுசாமி

‘ஜேன் அயர்’ என்கிற ஒரு நாவல். இந்த நாவலைத் தழுவி ஹாலிவுட்டில் ஒரு படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் பெயர் Sound of Music. இந்தப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது தான் தமிழில் வெளிவந்த‘சாந்தி நிலையம்’.  காஞ்சனாவும் ஜெமினி கணேசனும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் நாயகியான காஞ்சனாஒரு ஆசிரியையாக கதாபாத்திரம் ஏற்றிருப்பார். மிகவும்பொறுமைசாலி என்பதான பாத்திரம். அன்பால்அனைத்தையும் நேர்செய்து விட முடியும் என்று நம்புபவர்.நம்பியதைசெய்தும் காட்டுபவர். இந்தப்படம் ஒரு காதல் கதை தான். இதோடு மர்மக் காட்சிகளும் சேர்ந்த படம்.இன்றும்தமிழில் ஆசிரியை கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்த படங்களுள் ஒன்றாக ‘சாந்தி நிலையத்தை சொல்லலாம்.

ஆசிரியர் என்பவர்கள் பொறுமைசாலிகள் என்று தான் மனதில் பதிந்திருக்கிறது. ஒரு வகுப்பில் வெவ்வேறு மனநிலைகள்அமையப்பெற்ற மாணவர்களை ஒரே அலைவரிசைக்கு மாற்றி வகுப்பெடுப்பதென்பது எவ்வளவு பெரிய செயல்! இதற்கு பொறுமை மட்டுமா தேவை, தன்னம்பிக்கை, தெளிவு, எளிமை இன்னும் பல நல்ல குணங்கள் அமையப் பெற்றவர்கள் தான் ஆசிரியர்களுள் சிறந்த ஆசிரியையாக முடியும்.

புத்தர் அரண்மனைக்குள்ளேயே வாழ்ந்துவிட்டு வெளியுலகம் பார்க்கச் செல்லும் போது வாழ்வின் மற்ற துன்பங்களை நேரடியாகத் தரிசிக்கிறார்.அன்றிலிருந்து அவர் புத்தராகும் பயணத்தைத் தொடர்கிறார். எப்போது நாம் பள்ளிக்கு செல்லத் தொடங்கினோமோ அன்றைய நாளிலிருந்து தான் நாமும் நம்மைத் தேடத் தொடங்கினோம். மூன்று வயதுக் குழந்தைகளுக்கு முதன்முதலில் மிக நெருக்கமான நபராக மாறும் வெளியுலக நபர் அவர்களின் ஆசிரியை தான். அந்த ஆசிரியை சிடுசிடுப்பு உள்ளவராக,கோபப்படுபவராக அமைந்துவிட்டால் அந்தக் குழந்தைக்கு கற்பதும் பள்ளியும் கசப்பாகி விடுகின்றன.

என்னுடைய நெருங்கியத் தோழி மிக நன்றாகப் படிக்கக்கூடியவள். பிரபலமானநிறுவனத்தில்நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அவள்ஒருநாள் சொன்னாள், ‘இந்த வேலை எனக்கு நிரந்தரமில்லை, சீக்கிரத்திலேயே விட்டுவிடுவேன். பிறகு சின்னக்குழந்தைகளுக்கு டீச்சராவேன்’ என்று. எங்கள் இருவருக்குமான நட்பு என்பது இருபது வருடங்களையும் தாண்டி கடந்து கொண்டிருக்கிறது. சேர்ந்தே படித்தோம், சென்னைக்கு வந்த பிறகு ஒரே அறையில் தங்கி வேலை பார்த்து வந்தோம். ஆசிரியையாகும் எண்ணம் அவளுக்கு இருந்ததைஅதற்கு முன்பு பகிர்ந்தது மாதிரியான நினைவேஎனக்கு இல்லை.ஆனால் அவள் மனதுக்குள் பல வருட காலங்களாகவே ஒரு தீரா இலட்சியமாகவே இருந்திருக்கிறது. தன்னுடைய திருமணத்தைத் தானே சம்பாதித்து செய்து கொள்ள வேண்டும், வீட்டின் கடனை அடைக்க வேண்டும், தம்பியின் கல்விச் செலவை ஏற்க வேண்டும் என்கிற காரணங்களால் பெரு நிறுவனத்தில் வேலைக்குச்சேர்ந்தாள். திருமணமானது. கடன்களை அடைத்து விட்டாள். அடுத்ததாக உடனடியாக வேலையையும் விட்டு விட்டாள்.இதுஎங்களுக்கெல்லாம் ஆச்சரியம் தான்.

இப்போது தனக்குப் பிடித்தமான ஆசிரியைப் பணியில் சேர்ந்துவிட்டாள். அதற்கான முறையான பயிற்சி எடுத்திருக்கிறாள். நிறுவனத்தில் அவள் வாங்கிய சம்பளத்தின் பத்தில் ஒரு பாகம் தான் இப்போது அவள் வருமானமாகப் பெறுவது. ஆனால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று உறுதியாக சொல்ல முடியும்.

எதனால் அவள் இப்படியொரு முடிவெடுத்தாள் என்று கேட்கும்போது சொன்னவை இதுவரை அவள் யாரிடமும் சொல்லாதது. முதன்முதலில் அவள் மூன்று வயதில் பள்ளிக்குச் செல்லும்போது அவளுடைய அம்மா கருவுற்றிருந்தாராம். தனக்கான போட்டியாகஇந்த வீட்டில் இன்னொரு குழந்தை என்ற எண்ணமே அவள் மனதில் பதிந்திருக்கிறது. அதனால் அம்மாவின் மேல் கோபமும் எரிச்சலும் ஏற்பட்டிருக்கின்றன. அதை வெளிப்படுத்தத்தெரியாமல்திடீரென்று வன்முறையாகி அம்மாவை அடித்திருக்கிறாள். பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் அடம்பிடித்திருக்கிறாள்.

பள்ளிக்குக் கொண்டு விட்டதும் வேண்டுமென்றே வகுப்பில் சிறுநீர் கழித்துவிடுவாள். இவை எல்லாவற்றையும் பொறுமையாக கவனித்து அவளுக்கு பிரியமான தோழியாக மாறியது அவளது வகுப்பாசிரியை. தினமும் அவள் வந்ததும் அவளிடம் கொஞ்ச நேரம் பேசி அவள் முக்கியமானவள் என்பதை புரிய வைத்து அவளுடைய அம்மாவிடம் அவளுக்கு எது பிரச்சனை என்பதையெல்லாம் சொல்லித் தந்தது அவளுடைய ஆசிரியை தான்.இவைபற்றியெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவளது அம்மா சொல்லியிருக்கிறார். ‘என்னோட தம்பி மேல நான் இந்தளவுக்கு அன்பா இருக்கேன்னா அதுக்கு அந்த மிஸ் தான் காரணம்..இல்லேன்னா அவன் பிறக்கறதே எனக்குப் பிடிக்காமப் போயிருக்கும்’ என்றாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த சம்பவங்களை அவள் மறக்காமல் நினைவுபடுத்திக் கொண்டே இருந்திருக்கிறாள். அதன்வெளிப்பாடு தான் அவள் ஒரு ஆசிரியை ஆனது. கற்றுத் தருதல் எனபது தாண்டி ஒரு ஆசிரியையின் பங்கு என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மிக அதி அவசியமாகிறது.

இருபது வருடங்களுக்கு முன்பு இந்தி கற்றுக் கொண்டிருந்தேன்.எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியை எங்கள் பகுதியில் பிரபலமானவர். ஆசிரியை என்பதைத் தாண்டி அவரது குணமே அவரை பிரபலமாக்கியிருந்தது. வயது எழுபதிருக்கும். எப்போதும் சிரித்த முகம், வாஞ்சையுடன் பழகுவார். ஐம்பது வயதுக்கு மேல் இந்தி படிக்கத் தொடங்கி ஆசியையானவர். ‘ஸ்டோர் வீடு’ என்று சொல்வார்களே..அதில் ஒரு வீடு தான் அவருடையது. இரண்டாள் மட்டுமே அமரக்கூடிய திண்ணை, நான்கு ஆள் அமரக்கூடிய கூடம் அதிலேயே சமையலறை. இப்படியான ஒரு வீட்டில் தான் இந்தி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். இப்போது நினைத்தாலும் அவரது வீடென்பது இத்தனை சிறிதென்பதை விட குழந்தைகளின் குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு இடமாகவே எனக்குள்  பதிந்திருக்கிறது.

ஐந்திலிருந்து ஐம்பது வயது வரை எல்லாத் தரப்பிலிருந்தும் அவரிடம் பாடம் படிக்க வருவார்கள். எல்லோரிடமும் ஒரே மாதிரியாகத் தான் பேசுவார்.எழுத்தாளர் பிரேம்சந்தின் கதைகள் என்றால் அவருக்கு இஷ்டம்.அவரது கதைகளை எத்தனை முறை வகுப்பெடுத்தாலும் முடிக்கையில் அழுது விடுவார். எந்தவொரு சந்தோஷச் செய்தியை நம்மிடம் பகிரும்போதும் உணர்ச்சியில் முகம் அழுகைக்குள் போய்விடும். இப்போதும் அவரது முகமென்றதும் பருத்த கண்ணாடிக்குள் உருளும் நீர் நிறைந்த கண்கள் தான் நினைவுக்கு வருகின்றன.

ஒரு ஆசிரியை தாயன்போடு எப்போதுமேஇருக்க முடியும் எனபதற்கு எடுத்துக்காட்டாக எனது இந்தி ஆசிரியைத் தான் சொல்லுவேன். அவர் வளமான வாழ்க்கை வாழவில்லை. ஆனாலும் பலரிடம் பணம் வாங்காமலேயே தான் வகுப்பெத்தார். ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது ‘இங்க இருக்கு கன்னியாகுமரி..நான் பார்த்ததே இல்லை’ என்றார். உடனே எங்களில் சில பேர் ஆசிரியையை கன்னியாகுமரிக்குஅழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம்.அவரிடம் சொல்லாமல் ஏற்பாடுகள் செய்துவிட்டு கடைசி நேரத்தில் சொன்னோம். அவருக்குஅப்படியொரு சந்தோசம்.

கன்னியாகுமரிக்கு போயாயிற்று. சூரிய உதயத்திற்காகக்காத்திருந்தோம்தன்னால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை என மேட்டில்இருந்த ஒரு கல்லில் அமர்ந்து கொண்டார் ஆசிரியை. சூரியன் கடலில் இருந்து வெளிப்படும் காட்சி அதி அற்புதமானது. அது தந்த உற்சாகத்தில் கீழே இறங்கி கடலில் கால் நனைத்து வரலாம் என்று எல்லோருமே கிளம்பினோம். அந்த இறக்கத்தில் ஆசிரியையால் இறங்க முடியாது என்று நாங்களே முடிவு செய்து கொண்டோம்.

நடுவேதிரும்பிப் பார்க்கும்போது மேலிருந்து ஆசிரியை கைகாட்டி எங்களை அழைத்தார்.‘திரும்ப வரச் சொல்கிறார் இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் போகலாம்’ என்று நாங்கள்அவர் பக்கம் பார்க்காமலேயே விளையாடிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்தில் அவரே யாரோ இருவரின் உதவியைக் கேட்டு அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டுநாங்கள் இருக்கும் இடத்திற்கே இறங்கி வந்துவிட்டார். ‘போச்சுத் திட்டப் போகிறார்’ என்று நினைத்திருந்தோம். ‘கன்னியாகுமரிவரைக்கும் வந்துட்டு சமுத்திரத்துல கால் நனைக்காமப் போலாமா..அதனால தான் என்னையும் கூட்டிட்டுப் போகச் சொல்லி உங்களைப் பார்த்து கையை ஆட்டினேன். நீங்க யாரும் என்னைக் கவனிக்கல’ என்றார் சாதாரணமாக. எங்களுக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அதன்பிறகு நீண்ட நேரம் நாங்களே போகலாம் என்று சொன்னபிறகும் கூட கடலை விட்டு அவர் வெளியேறவில்லை. ஒருகுழந்தையின் குதூகலத்தோடு அலையோடு விளையாடிக் கொண்டிருந்தார். அவர் சிரித்து பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படித் தொடர்ந்து அரை மணி நேரமாக பெருஞ்சிரிப்பை மட்டும் தக்க வைத்திருந்த முகத்தை அதற்கு முன்பும் பின்பும் நாங்கள் பார்த்திருக்கவில்லை.‘இப்ப தான் முதன்முதலா கடலைத்தொடறேன்’ என்றார் எழுபது வயதைக் கடந்த அவர்.

அவருக்கு என்னாலான ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டே இருப்பேன். சென்னையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் அவரைப் பார்க்கச் செல்வேன். ஏதாவது வாங்கிக் கொண்டு போனாலும் அப்போது அங்கே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விடுவார். அன்றைய தினம் மாணவர்களுக்குஎன்னை வகுப்பெடுக்கச் சொல்லி சுவரில் சாய்ந்தமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு ஆசிரியை தனக்கும் அந்த மாணவிக்குமான நினைவுகளை மீட்டெடுத்துக் கொள்கிற பார்வை.

ஆசிரியை இறந்து போன தகவல் கிடைத்ததும் முதலில் ஏற்பட்டது குற்ற உணர்ச்சி தான். அவருக்கு நான் எதுவும் செய்யாமல் விட்டேனே என்பது அலைக்கழித்துக் கொண்டே இருந்தது. மிகுந்த வலியின் வேதனையில் இறந்தார் என்றார் அவருடைய மருமகள்.முகத்தில் ஒரு விடுதலையுணர்வு தெரிந்தது. இந்த முகம் நூற்றுக்கணக்கான மாணவர்களின் மனதில் பதிந்து போயிருக்கிற முகம். அவர் வகுப்பெடுத்த அந்த வீடு இன்று இடிக்கபப்ட்டு விட்டது.அவருடைய நினைவு என்று சொல்லிக் கொள்ள ஸ்தூலமான பொருட்கள் எதுவும் அவருடைய மாணவர்களான எங்களிடம் இல்லை. ஆனாலஅந்த முகம் , சிரிப்பு அதனூடான கண்ணீர் இவற்றோடு அவர் பாடங்கள் கற்றுக் கொடுத்ததிற்கும் மேலாக வாழ்க்கையை சொல்லித் தந்து போயிருக்கிறார்.கன்னியாகுமரியில் அவரை நாங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது பற்றி அவருக்குத் தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் அதை அவர் கடந்த விதமும் எங்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்காமல் எங்களைக் கடத்தியதும் எங்களுக்கான அவர் தந்த வாழ்க்கைப் பாடங்கள்.

இன்றும் அவர் குறித்து அவருடைய மாணவர்களான நாங்கள் பேசிக் கொள்ளும்போது ஓரிரு வினாடிகளாவது பேச்சற்று போயிருக்கிறோம். அந்தநொடிகள் அவர் ஆசிரியை என்பதைத் தாண்டி ஒரு மாபெரும் மனுசியாக எங்களுள் நிரம்பியதன் வெளிப்பாடு.

சாந்தி நிலையம் படத்தில் ஒரு வசனம் வரும். ஜெமினி கணேசன்,“குழந்தைகளிடம் கொஞ்சங்கூட பாசமோ,பரிவோ இருக்கவே கூடாது. கண்டிப்பு மட்டுமே இருக்கணும். உங்களைக் கண்டாலே பயப்படணும்” என்று ஆசிரியையான காஞ்சனாவிடம் வலியுறுத்துவார். அதற்கு காஞ்சனா சொல்வது, “அவங்கள நீங்க இப்படி நடத்தறதுனால நீங்க வீட்டுல இல்லாத போது சுதந்திர உணர்ச்சில விஷமம் அதிகமா செய்யறாங்கன்னு நான் நினைக்கறேன். குழந்தைங்க எப்பவுமே மலரைப் போல மிருதுவானவங்க. மலர்ல உள்ள முள்ள நீக்க அதைத் தீயில போட்டா மலர் கருகிடுமில்லையா? நாம முள்ள வேறு விதமாத் தான எடுக்க முயற்சி செய்யணும். அது போல அவங்க போற வழிக்குப் போய் தான் அவங்கள நாம நம்ம வழிக்குக் கொண்டு வரணும்”.

இன்று நாம் பேசுகிற குழந்தை வளர்ப்பைப் பற்றிய மொத்த சாராம்சம் கொண்ட வசனம் அது. மேற்சொன்னவற்றில் இருந்தே நல்லாசிரியர்களை புரிந்து கொள்ள முடியும். கண்டிப்பை மட்டுமே கொடுத்த ஆசிரியர்களால் அவர் நடத்தும் பாடங்கள் கூட வாழ்நாள் முழுவதும் பிடிக்காமல் போன நிகழ்வுகள் நமக்கு நிகழ்ந்திருக்கும். காஞ்சனா போன்ற கதாபாத்திரத்தன்மை கொண்ட ஆசிரியைகளால் அவர் வழியாக நாம் கற்றவை எல்லாம் நம் ஆழ்மனதைத் தொட்டிருக்கின்றன. மாணவர்களின் மனதில் இருந்து ஒரு ஆசிரியர் நீங்காமல் இருப்பதென்பது தான் பெரிய கொடுப்பினை.

(மல்லிகை மகள் இதழில் வெளிவந்த கட்டுரை)

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments