நேற்று லலிதாதாம் அவர்கள் எழுதிய ‘காருகுறிச்சியைத் தேடி’ புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். இந்த நிகழ்வு அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து இந்த விழாவுக்காகக் காத்திருந்தேன். நாகஸ்வரக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஒரு காரணம். லலிதாராம் எழுதுகிற இசை தொடர்பான கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சொல்வனத்தில் அவர் எழுதிய கட்டுரைகளை அநேகமாக எல்லாவற்றையும் படித்திருப்பேன். அதுவும் ஒரு காரணம். எங்கள் ஊர்க்காரர் நாகஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசாலம் குறித்த புத்தகம். இது மிக முக்கியக் காரணம்.
என்னுடைய அப்பாவுக்கு காருகுறிச்சியாரை மிகப்பிடிக்கும். இளவயதில் நேரடியாக இவரது கச்சேரிகளைக் கேட்டிருக்கிறார் கோவில்பட்டியில் அப்பா இருந்தபோது சுற்றுவட்டாரத்தில் எங்கு இவரது கச்சேரிகள் நடந்தாலும் போய்விடுவது அவரது வழக்கம். கூட்டத்தில் நிற்கக்கூட இடம் இல்லாமல் ஒருமுறை மரத்தின் மீது அமர்ந்து இரவு முழுவதும் கச்சேரி கேட்ட அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்.
ஒருமுறை அப்பாவுக்கு எனது ஆரம்பகால சம்பளத்தில் காருகுறிச்சி அருணாச்சலத்தின் ஆடியோ சிடிக்களை மகிழ்ச்சியோடு வாங்கி வந்து தந்தேன். அவர் அந்த சிடி உரையைக் கூட பிரிக்கவில்லை. கேட்டதற்கு, “நேர்ல கேட்டதெல்லாம் இங்க இருக்கு” என்று தன் தலையைக் காட்டி சொல்லிவிட்டார். அத்தனை பிரேமை அப்பாவுக்கு இவரிடத்தில் அதில் கொஞ்சம் எனக்குள்ளும் சென்றிருக்கிறது என நினைக்கிறேன். இரவின் அடர்ந்த இருளில், மெலிதாய் நாகஸ்வரம் ஒலிக்க அதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே கண்களில் காரணமறியாத கண்ணீர் வந்திருந்தால், நீங்கள் பாக்கியவான்கள்! எனக்கும் காருகுறிச்சியாருக்கும் உண்டான தொடர்பு அந்தக் கண்ணீர்களில் உண்டு.
இதெல்லாம் தான் நேற்று புத்தகத்தை வாங்கி வந்ததும் இரவோடு இரவாக படித்து முடிக்க வைத்தது.. உடன் காருகுறிச்சியாரும் பின்னணியில் இரண்டு மணிநேரமாக வாசித்துக் கொண்டிருந்தார். லலிதாராம் தன்னை தஞ்சாவூர்க்காரர் என்றே சொல்கிறார். தன் மனம் தஞ்சாவூர்க்கானது என்கிறார். காருகுறிச்சி மாதிரியான ஒரு ஆளுமையான மேதை குறித்து எதற்கெடுத்தாலும் பெருமை பேசும் திருநெல்வேலிக்காரர்கள் பதிவு செய்யவில்லை என்று அங்கங்கு இடித்துரைக்கிறார். இதையெல்லாம் சேர்த்து தான் படித்துக் கொண்டிருந்தேன்.
காருகுறிச்சியின் நூற்றாண்டு விழாவிற்கான கட்டுரைத் தொகுப்புக்காக அவருடன் பழகியவர்கள், அவருடைய குடும்பத்தார், நாகஸ்வரக் கலைஞர்கள் என சிலரை சந்தித்த அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார். இவர்கள் எல்லோருக்குமே எழுபது வயதைக் கடந்திருக்கிறது. சிலருக்கு தொண்ணூறு வயது. இவர்களில் நாகஸ்வரக் கலைஞரான ராஜகோபாலக் கம்பரின் மகனான மகன் ராஜன் ஒன்றைச் சொல்கிறார். இவருடைய அப்பா மல்லாரி வாசிப்பதைப் பற்றி சொல்லிவிட்டு, “நான் சின்னப் பையனா இருக்கும்போது தாளம் போடுவேன். அப்ப தலையை மேலே எடுக்க மாட்டேன். அப்பா காலைப் பார்த்துட்டே தாளம் போடுவேன். அவர் பெருவிரல்ல தாளம் இருக்கும்” நினைத்துப் பார்த்தால் எத்தனை அற்புதமான அனுபவம் அவருக்கும், படிக்கும் எனக்கும்.
காருகுறிச்சியின் வீடு, அந்த ஊர் அவருக்கு அமைக்கப்பட்ட சிலை என இருபது வருடங்களுக்கு முன்பு நான் தேடித் போய்ப் பார்த்திருக்கிறேன். திருநெல்வேலிக்கும் காருகுறிச்சிக்கும் தும்மினால் சத்தம் கேட்கும் தூரம் தான். ஆனாலும் போய்ப் பார்க்க எனக்கு இருபது வருடங்கள் வேண்டியிருந்தது.
அதனால் காருகுறிச்சி, கோவில்பட்டி குறித்த புத்தகத்தின் பதிவுகள் இன்னும் நெருக்கமாக உணர வைத்தன. யாருமே அதிகம் சொல்லாத காருகுறிச்சியாரின் குருமார்களில் ஒருவரான குருமலை இலட்சுமி அம்மாள் பற்றிய தகவல்கள், காருகுறிச்சி அருணாச்சலத்துக்கு இரண்டாம் நாயனம் வாசித்த மற்றொருவரின் பெயரும் அருணாசலம் என்பது, காருகுறிச்சியார் இறந்ததில் இருந்து இந்தத் தலைமுறை வரை தீபாவளி கொண்டாடாத ஒரு குடும்பம் என இவர் தேடிக்கண்டைந்த அனுபவங்கள் ஒவ்வொனறுமே சுவாரஸ்யம். பெரும்பதிவு.
காருகுறிச்சி அருணாசலம் குறித்து லலிதா ராம் எழுதிய கட்டுரைகளும், அவரை மையப்படுத்தி இவர் எழுதிய சிறுகதைகளும் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு சபாவில் தஞ்சாவூர், திருநெல்வேலி ரசிகர்கள் இருவர் திருவாடுதுறை ராஜரத்தினம் , காருகுறிச்சி அருணாசலம் குறித்து போட்டுக் கொண்ட சண்டையை தந்திருக்கிறார். புன்னகைத்துக் கொண்டே படித்திருக்கிறேன்.
காருகுறிச்சியார் இசை குறித்த ரசனையும், ஆழமான விமர்சனமும் கொண்ட ஒரு கட்டுரை இருக்கிறது. ஒரு கலைஞனை எத்தனை உள்வாங்கியிருந்தால் இப்படி எழுத முடியும் என்று தோன்றச் செய்தக் கட்டுரை. குருநாதர் ராஜரத்தினம் பிள்ளைக்கும், சீடர் காருகுறிச்சி அருணாசலத்துக்குமான வாசிப்பு வித்தியாசத்தை சொல்வதற்கு ஒரு ஆழ்ந்த ஞானம் வேண்டும். அது இந்தக் கட்டுரையில் வெளிப்பட்டிருக்கிறது.
உசேனி ராகத்துக்கும் காருகுறிச்சி அருணாசலத்துக்குமான நேசத்தை சொல்லும் கட்டுரை..
கொஞ்சும் சலங்கை படத்தில் இவரது நாகஸ்வரத்தை அணுஅணுவாக ரசித்த கட்டுரை..
இப்படி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
லலிதாராம் மனதளவில் தஞ்சாவூர்க்காரராக இருக்கலாம். அவர் இரத்தத்தில் திருநெல்வேலி இருக்கிறது. இவரது அப்பா வழி சொந்தங்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். இது புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ளது. காருகுறிச்சியார் தன்னை மற்றவர் எப்போதும் கண்டடைய திருநெல்வேலிகாரரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.