‘ஜமா’ படம் பிரைமில் வெளிவந்திருக்கிறது. திரையரங்குக்குச் சென்று பார்க்க விரும்பிய திரைப்படம். பார்த்திருக்க வேண்டும். தெருக்கூத்துக் கலைஞர்கள் குறித்த கதை. இதற்கு முன்பும் தமிழிள் கலைஞர்கள் குறித்தத் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் கலைஞர்களுக்குள் நிகழும் போட்டி, பொறாமை என்பது உண்டு. காதல் உண்டு. கலைஞர்களின் பாடுகளும் உண்டு. இவை அனைத்தும் ‘ஜமாவில் இருக்கின்றன. அதே நேரம் ‘ஜமா’ தன்னை வேறுபடுத்திக் கொண்டும் காட்டுகிறது.
கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள் தான் இந்தப் படம் என்கிற அளவுக்கு குறுக்கிவிட முடியாத கதையாக இருக்கிறது. அப்பாவின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ஒரு மகனின் கதை. கலை ஒருவருக்குள் புகுந்து கொண்டால், அவரை சாட்டை கண்ட மிருகம் போல எப்படி சுழற்றிப் போடும் என்பதாகவும் கதையின் அடிநாதம் இருக்கிறது.
புகழும், பேரும் , பணமும் கிடைக்கப்பெறும் எந்தத் துறையிலும் போட்டியும், பொறாமையும் சகஜமாக மேலெழும். தெருக்கூத்திலும் அப்படியே. யார் எந்த வேஷம் கட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கான தகுதியும், இடமும் தீர்மானிக்கப்படுகின்றன. ‘ராஜபாட்’ வேஷம் போடும் எவரும் மற்றவர்களைக் காட்டிலும் அந்தக் கூத்தில் அந்தஸ்து கொண்டவர்கள். அவர்கள் மனதிலும் தன்னை ராஜாவாகவே நினைத்துக் கொள்கிறார்கள். வேறொருவர் அந்த வேஷத்தைக் கட்டுவதென்பது நாட்டின் அரசன் இருக்கையில் அந்தப் பதவியைத் தூக்கிக் கொடுப்பது போலத் தான். இந்த மையம் தான் கதையை நகர்த்திச் செல்லும் ஒரு புள்ளியாக இருக்கிறது.
அர்ச்சுனன் வேசத்தைக் கட்டுபவர் யார்? படத்தில் சொல்வது போல ‘அர்ச்சுனர் என்ன சாதாரண ஆளுன்னு நினைச்சியா..அவன் வீரன்..’ இந்த வீரனை ஏற்கும் ஒருவர் நிமிர்ந்து நின்றால் மலையை இன்னும் உயர்த்தியது போலத் தெரிய வேண்டும். ‘ஸ்திரிபாட்’ வேஷம் இடும் ஒருவர் தன்னைக் குறுக்கிக் கொண்டு, நடையிலும் தோற்றத்திலும் பெண்ணாய் உருவகித்துக் கொண்டபின் அந்தக் கம்பீரம் கைகூடாது என்பதாலேயே அர்ச்சுனருக்கான வேஷம் கல்யாணத்துக்கு மறுக்கப்படுகிறது. ஜமாவின் நாயகன் கல்யாணத்துக்கு ஸ்திரிபாட் வேஷம் பொருந்தியதால், அவன் பெண்மையின் சாயலுக்குச் செல்கிறான். அதில் இருந்து மீள முடியாமல் போய்விடுவானோ என அவனது அம்மா கவலை கொள்கிறாள். இதனால் அவனுக்குத் திருமணம் ஆகாமல் போய்விட்டால் என்னவாகும் என்கிற அவஸ்தை அவளை அலைகழிக்கிறது.
இந்தப் படம் பார்க்கையில் Black Swan படம் நினைவுக்கு வந்து போனது. மென்மையான குணமுள்ள ஒரு பாலே நடனம் ஆடும் பெண், தன்னை கருப்பு அன்னப்பறவை எனும் கதபாத்திரத்துக்காக வஞ்சமும், வன்மமும் நிறைந்த ஒருத்தியாக எப்படி உருமாருகிறாள் என்பதைச் சொன்ன படம். கல்யாணத்தின் நிலையும் இப்படியானதாகவே மாறுகிறது. கல்யாணத்துக்கு திரௌபதி வேடம் மிகப் பிடித்திருக்கிறது. தன்னுடைய அப்பாவுக்குத் துரோகம் செய்த ஒருவரைத் தேடிப்போய் கூத்து கற்றுக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு அந்தக் கலையின் மீது ஈடுபாடு. அப்பாவித்தனமும், மென்மையும் கொண்ட கல்யாணம் தனக்கு நேரடியாக அவமானம் நேரும்போது வேறோருவனாக மாறுகிறான். தனக்கு வாத்தியாராக இருக்கிற தாண்டவத்தின் வீட்டுக்குள் சென்று பணிவாகவும் தயக்கமாகவும் அப்பாவித்தனத்தோடும் தனக்கு அருச்சுனன் வேஷம் வேண்டும் என்று கேட்கும் கல்யாணம், அவர் மறுத்து திட்டியதும் அழுகிறான். கல்யாணத்துக்கே தன்னால் அருச்சுனன் வேஷம் கட்ட முடியும் என்கிற நம்பிக்கை இல்லாமல் போகிறது. இபப்டியான் அமேன்மனம் கொண்டவனால் அருச்சுனனாக தன்னை உருவகித்துக் கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் படம் பார்க்கும் நமக்கு வருகிறது. தாண்டவத்துக்கு இது தெரியும் என்பதாலேயே அழுதுகொண்டும் ஒப்பாரி வைத்துக் கொண்டும் இருக்கிற பெண் கதாபத்திரங்களை கல்யாணத்துக்குத் தந்து கொண்டே இருக்கிறார். கம்பீரமான கல்யாணமாக இருந்திருந்தால் அவர் அவனை எதிர்த்திருப்பார், ஆனால் மட்டம் தட்டியிருக்க மாட்டார்.
கல்யாணத்துக்கு அடுத்தடுத்து நடக்கிற ஏமாற்றங்கள், துரோகங்கள் எல்லாம் அவனை செலுத்தும் விதமும், கையறு நிலையில் நிற்கிற அவனுக்கு ஏற்படுகிற வலியும் அவனை தாண்டவத்துக்கு எதிரானவனாக மாற்றிவிடவில்லை என்பது தான் முக்கியம். யாருடைய தயவும் இல்லாத ஒருவன் என்னென்னவோ செய்து பார்த்து தனக்கென்று ஒரு ஜமாவை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறான். தாண்டவம் சொல்வது போல அது அத்தனை சுலபமல்ல. ‘நம்மள புக் பண்றதுக்கு வர்றவங்கிட்ட அடிச்சுப் பேசி ரூபா வாங்கத் தெரியுமா” என்கிறார். இங்கு தான் கல்யாணம் பிந்தங்குகிற இடமாக இருக்கிறது. கல்யாணத்தைப் பொறுத்தவரை தன்னால் அருச்சுனர் வேஷம் கட்டமுடியும் என்பது மட்டுமே உச்சப்பட்ச ஆசை. அதற்குத் தனியாக ஒரு ஜமா வேண்டும்..இவ்வளவு தான். ஆனால் தாண்டவனுக்குள் இருப்பது வேஷத்தின் மீது உள்ள கௌரவம் மட்டுமல்ல, அவருக்கு அந்த ஜமாவை காப்பாற்றியாக வேண்டும். அவரைப் போல உறுதியான ஒருவரால் தான் அதை எடுத்துச் செல்ல முடியும் என்று நினைக்கிறார். அதுவும் போக, அந்த ஜமாவை அவர் தன்னுடைய நெருங்கிய நண்பனிடமிருந்தே பறித்திருக்கிறார். நண்பனின் மகனே வந்து நின்று தனக்கு அர்ச்சுனர் வேஷம் வேண்டும் என்றால், அதை மறுக்கும் அவருக்குள் இருக்கும் குற்ற உணர்வே வன்மமாக மாறி நிற்கிறது. ‘நண்பனின் மகனாகவே இருந்தாலும் நீ என் காலுக்குக் கீழ் தான்..உன் அப்பாவைப் போல நீ ஒண்ணும் பெரிய ஆளெல்லாம் இல்லை’ என்பதையே அவர் கல்யாணத்துக்கு சொல்லிக் கொண்ட இருக்கிறார். கல்யாணம் அவனுடையா அப்பாவைப் போல இல்லாததும் தாண்டவத்துக்கு வசதியாகப் போகிறது. கடைசி வரைக்கும் அவன் அப்பாவித்தனத்தோடு இருக்க வேண்டுமெனில் ஸ்திரிபாட் வேஷம் ஒன்று தான் ஒரே வழி என்று தீர்மானிக்கிறார்.
ஆனால், தாண்டவத்’துக்குள் இருப்பதும் ஒரு கலைஞன் தான். புகழ், பொறாமை, பணம் எல்லாவற்றையும் கடந்து ஒரு உச்சபட்சமான கலையின் தருணம் கலைஞனை தூய்மைப்படுத்திவிடும் என்பது தான் படம் எல்லாவற்றையும் விட மேலாக சொல்ல நினைத்தது. குந்தி வேஷத்திலும் ஒருவன் தன்னை கரைத்து நிலைபெற்றிருக்க முடியும் என்பதை தாண்டவன் புரிந்து கொள்ளும் அந்த இடம்.. இந்தப் படத்தின் சிறந்த காட்சிகளுள் ஒன்று.
கல்யாணமாக நடித்த பாரி இளவழகன் தான் படத்தின் இயக்குநரும். அற்புதமான உடல்மொழி. நடிகர் சேத்தன் பற்றி தனியாகவே எழுத வேண்டும். அவருடைய கண்களைப் பயன்படுத்திக் கொண்ட படம் இது. அட்டகாசம் செய்திருக்கிறார்.
படத்துக்கென ஒரு ஆன்மா இருக்கிறது அது தன்னை என்ன செய்கிறதோ அதை பார்ப்பார்களிடமும் கடத்த வேண்டும் என்பதை இளையராஜா எல்லாப் படங்களிலும் செய்துவிடுகிறார். அப்பாவின் குரலோடு, கல்யாணம் கிரீடத்தைத் தலையில் வைத்துக் கொள்ளும் காட்சி, தாண்டவம் கூத்து முடிந்து இறுதியில் உட்கார்ந்திருந்து எழுந்து கல்யாணத்திடம் வந்து நிற்கும் காட்சி, கல்யாணம் தாண்டவத்திடம் அவமானப்பட்டு கொண்டே அம்மாவுடன் நடந்து வரும் அந்தக் காட்சி…எத்தனை அடுக்குகள் இந்த மனிதரின் இசையில்! அவதாரம் படமும் தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு இடையேயான மன உணர்வுகளைப் பேசுவது தான்..அதில் இளையராஜா வித்தைகள் காட்டியிருப்பார். அதன் பிறகு அப்படியான ஒரு கதைக்களம். இளையராஜவுக்கென வடிவமைத்துக் கொடுத்த காட்சிகள் சில இந்தப் படத்தில் உண்டு. கலசத்தைத் தூக்கிக் கொண்டு கல்யாணம் நடந்து செல்லும் அக்காட்சியின் பின்னணி இசையில் ஒரு வேகம் இருக்க வேண்டும் என்று நினைத்து இசைத்தால் அவர் இளையராஜாவாக எப்படி இருக்க முடியும்..இளையராஜா அதில் ஒரு மேன்சோகத்தைத் தருகிறார். ‘இது உனக்கு வெற்றியில்ல கல்யாணம்..இன்னும் போகனும்டா நீ” என்பதான குரல் அது.
படத்தின் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் கதையின் முக்கிய சிக்கலைச் சொல்ல வேண்டும் என்பதை திரைக்கதையின் அடிப்படையான விதி என்பார்கள். இந்தப் படத்தில் டைட்டில் கார்ட் தொடங்கும்போதே கதையின் மையத்தினைத் தொட்டு விடுகிறார்கள். பிறகு எல்லாமே, அதை விரித்து விரித்துச் சொல்வது தான். ஒரு கதைக்குள் ஒரு குடும்பத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும், கதாபாத்திரங்களும், நிலமும், துரோகங்களும், வன்மமும், காதலும் வீரமும், கலையும் எழுந்து வந்திருக்கின்றன.
இயக்குநர் பாரி இளவழகனுக்கும் அடக்கமான, ஆழமான ஒளிப்பதிவைத் தந்த கோபால் கிருஷ்ணனுக்கும் , படத்தொகுப்பாளர் பார்த்தாவுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துகள்.