எமி வாடா அற்புதமான உடை வடிவமைப்பாளர். நவம்பர்2021 ல் அவர் காலமானபோது அவருக்கு வயது 83. ஆசியாவிலிருந்து பல்வேறு கண்டங்களுக்கு பயணம் செய்து திரைப்படங்கள், இசை நாடகங்கள் போன்றவற்றிற்கான உடைகளை வடிவமைத்த முதல் ஆசியப்பெண். ஓவியக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஜப்பானின் கலாசார நகரமான கியாட்டோவின் வீதிகளையும், கட்டடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் தன் ஓவியத்திற்குள் கொண்டு வந்திருந்தார். இவரது கணவர் மேடை நாடக இயக்குனராக இருந்தார். எமி வாடா தான் வரைந்த ஓவியங்களை இந்த ஓவியங்களை பின்னாட்களில் தனது கணவரின் நாடகங்களுக்கு மேடை அரங்கத்தையும் உடைகளையும் உருவாக்குவதற்கு உந்துதலாய் அமைத்துக் கொண்டார்.
நாடகத்தைக் காண ஒருமுறை வருகை தந்திருந்த இயக்குனர் அகிரா குரோசவாவிடம் அவரின் படங்களில் பணி செய்ய விருப்பமாகயிருப்பதாகத் தெரிவித்திருந்தார். தனக்கு ஓவியம் வரைவதில் மட்டுமல்ல, உடை வடிவமைப்பிலும் ஆர்வம் இருப்பதை அகிரா குரோசவாவிடம் சொன்னார் எமி. சில வருடங்களுக்குப் பிறகு எமியை தனது Ran படத்தின் உடைவடிவமைப்பாளராக நியமித்தார் குரோசவா. முதல் படத்திலேயே அதீத உழைப்பைக் கோரிய படமாக அமைந்தது. சளைக்காமல் தனது கற்பனைத் திறனை அதில் எமி வெளிக்காட்டினார். அதற்காக அவருக்கு அந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
அதன்பின் தொடர்ந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘House Of Flying Daggers’, ‘Hero’ படங்கள் இவரின் திறமைக்கு எடுத்துடுக்காட்டான படங்கள்.
மரணமடைவதற்கு முன்பான சில வருட காலங்கள் எவரிடமும் தொடர்பு கொள்ளாமல் பெரும்பாலும் தனிமையாகவே இருந்தார். “அப்படியும் சொல்லி விடமுடியாது . சதா நேரமும் உலகத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் அப்போதைய ஒரு நேர்காணலில் .
My Life in the Making என்பது இவருடைய சுயசரிதப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பே கூட ஆச்சரியமானது. தனது சுயசரிதத்தை அவர் துணி போல் தோற்றமளிக்கும் காகித வடிவமைப்பில் எழுதியிருந்தார். ஒவ்வொரு பகுதியிலும் எமியின் ரசனை செறிந்த சுயசரிதப் புத்தகம் அது.
உடை வடிவமைப்பு ஒரு படத்திற்கு எந்தளவுக்கு இன்றியமையாதது என்பதை சொல்ல முடியுமா?
ஒரு கதாபாத்திரத்தினுடைய குணாதிசயத்தை ஒரு படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை உடை வடிவமைப்புக் கொண்டே சொல்லிவிடமுடியும். என்னை ஈர்க்கிற ஒரு கதாபாத்திரத்திலிருந்தே ஒவ்வொரு படைப்பிலும் எனது பணியைத் தொடங்குகிறேன். அந்தக் கதாபாத்திரம் வில்லனாக இருக்கலாம் அல்லது அந்தப் படைப்பில் அதிக முக்கியத்துவம் அல்லாதவர்களாகக் கூட இருக்கலாம். எப்போதும் என்னை ஈர்த்தவர்களிடமிருந்து தான் என்னுடைய உலகத்தைத் தொடங்குகிறேன்.
எப்போது உடை வடிவமைப்புத் துறைக்குள் வந்தீர்கள்?
எனக்கு இருபது வயதாக இருக்கும்போது என்னுடைய கணவர் பென் வாடாவை மணந்தேன். அப்போது அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர். நாடகங்களையும் இயக்கிக் கொண்டிருந்தார். அவர் இயக்குகிற நாடகங்களுக்கான அரங்க வடிவமைப்பு, உடை அலங்காரங்கள போன்றவற்றில் என்னை ஈடுபடச் சொன்னார். நான் ஒரு நுண்கலை மாணவி. ஒரு ஓவியராக வேண்டுமென ஆசைப்பட்டேன். அரங்க நாடகங்களில் ஈடுபடுவதென்பது எனக்கு ஆர்வத்தைத் தந்திருந்தது. என்னுடைய கணவரின் மேடை நாடகங்களைப் பார்ப்பவர்கள் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தந்தபடி இருந்தனர். அதனால் எனக்கும் தொடர் பணிகள் இருந்தன. அப்படி தொடங்கியது தான்.
சரித்திர கால நாடகங்களை உருவாக்குகிறபோது எந்த மாதிரியான சவால்களை சந்திக்கிறீர்கள்? அதற்குத் தேவைப்படும் பொருட்களை எங்கு பெறுகிறீர்கள்?
இசை நாடகங்கள், திரைப்படங்கள், நாடகங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் நாம் பயன்படுத்துகிற பொருளினுடைய இழைவு (texture) அதாவது அதன் அமைப்பு முக்கியம். பெரும்பாலும் நானே எனக்கான பொருட்களை உருவாக்கிக்கொள்வேன்.
ஏற்கனவே நான் பயன்படுத்திய பொருளை மறுஉபயோகம் செய்யப்போகிறேன் என்றால் அவற்றில் புதிதாக எதையாவது சேர்த்துக் கொள்வேன் அல்லது எதையாவது நீக்கி விடுவேன். சில நேரங்களில் என்னுடைய ரசனைக்குத் தகுந்தவாறு வண்ணங்களைக் கூட மாற்றியதுண்டு. சரித்திரக் கால திரைப்படங்கள் அல்லது நாடகங்களுக்கு வடிவமைக்கும்போது நாம் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் சமகாலத்தில் இருப்பவர்கள். அதனால் நூறு வருடங்களுக்கு முந்தைய சரித்திர பதிவுகளைக் காட்ட வேண்டுமென்றாலும் நவீன வண்ணங்களை அதில் சேர்த்துக் கொண்டால் தான் பார்வையாளர்களால் தங்களை அதனோடு தொடர்பு கொள்ள முடியும்.
வரலாற்று காலத் திரைப்படங்களில் பணியாற்றுகிற போது அந்தக் காலகட்டத்தின் நம்பகத்தன்மையையும் அதோடு நம்முடைய கற்பனைத் திறனையும் வெளிக்காட்ட வேண்டும்.
நீங்கள் பணியாற்றியது அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள். அதிகமான நடிகர்களுக்கு உடை தயார் செய்ய வேண்டியிருக்கும்ம். எப்படி கையாண்டீர்கள்?
மிகப்பெரிய அளவிலான படைப்புகளுக்கு பணியாற்றும்போது சில பிரச்சனைகள் வரும். உதாரணத்துக்கு ஒரு இசை நாடகத்தில் 160 பேர் பங்கேற்கிறார்கள் என்றால் அவர்களுக்கான துணி மட்டும் பத்தாயிரம் மீட்டருக்குத் தேவைப்படும். இவற்றைத் தயாரிக்க வேண்டுமென்பது தான் சவால். இது போன்ற சமயங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கான உடைகளுக்கு கடைசியாகத் தான் கவனம் செலுத்துவேன்.
படங்களைப் பொறுத்தவரை படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து எடுக்கப்படும் காட்சிகளுக்கான உடைகளைத் தயாரித்தபடி இருப்பேன். Ran படத்தின்போது முன்தயாரிப்புக்கு எனக்கு போதுமான நேரம் கிடைத்திருந்தது.
ஆனால் பணப்பிரச்சனைக் காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே இருந்தது. நான் 2,00,000 டாலர் மதிப்பிலான உடைகளுக்கு கியோட்டோவில் இருந்த நான்கு தொழிற்சாலைகளுக்கு முன்பணம் கொடுத்து வைத்திருந்தேன். உடைகளும் தயாராகிவிட்டன. இந்தச் சூழலில் அவற்றை ரத்து செய்யவும் முடியாது. அதனால் அகிரா குரோசவாவும், நானும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தோம். நங்கள் இருவருமாக சேர்ந்து செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம் என்றிருந்தோம்.
நான் அந்தத் தொழிற்சாலைகளுக்கு சென்று அதன் முதலாளிகளிடம் பேசினேன். “ஒருவருடம் பொறுத்துக் கொள்ளுங்கள்..படம் தொடங்காவிட்டால் என்னுடைய சொந்த பணத்தைகத் தந்துவிடுகிறேன்’ என்றேன்.
இது நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் காலை ஆறுமணிக்கு குரோசவா என்னை தொலைபேசியில் அழைத்தார். “நமக்கு பணம் கிடைத்துவிட்டது, படத்தினை தொடங்கிவிடலாம்” என்றார். என் கண்களிலிருந்து ஒரு புனல் போல கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.
நல்லவேளையாக பணம் கிடைத்து படமும் முடிவடைந்தது. என்னுடைய வீடும் அடமானத்திலிருந்து தப்பித்தது!
Ran படம் தொடங்கும்போதே அத்தனை உடைகளும் தயார்நிலையில் இருந்தன. குரோசவாவின் Dreams படத்தின் போதுதான் போதுமான நேரம் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தேன்.
உடை வடிவமைப்பதற்கான உந்துதலை எவ்வாறு பெறுகிறீர்கள்?
என்னுடைய நினைவுகளும், அனுபவங்களுமே உந்துதல். நான் கியட்டோவில் வளர்ந்தவள். அங்கு மரத்தாலான சிற்பங்கள், மரங்கள், தரையில் பதிக்கப்பட்டிருக்கும் விதவிதமான அலங்கார வடிவங்கள், தோட்டங்களில் வைக்கப்படுகிற கற்கள், மூங்கில், செடிகள் என கியாட்டோவின் அத்தனை அம்சங்களையும் நான் ஸ்க்ரிப்ட்டுக்கு ஏற்றவாறு பொருத்திக் கொள்கிறேன். நான் வாழ்ந்த காலங்களின் அத்தனை நினைவுகளையும் அனுபவங்களையும் ஒன்று சேர்க்கிறேன்.
என்னுடைய மனமானது கியாட்டோவின் சஞ்சுசான்கெண்டோ கோயிலில் இருந்து ரோமில் நான் பார்த்த விஸ்டேரியா பூக்களுக்குத் தாவும். இப்படித் தான் உந்துதல் பெறுகிறேன். என்னுடைய பணிக்காக நான் உலகம் முழுவதும் சுற்றி வருகிறேன். நான் எங்கெல்லாம் பயணிக்கிறேனோ அங்கெல்லாம் நினைவுகளை சேகரிக்கிறேன். அவற்றை என்னுடன் தக்கவைத்துக் கொள்கிறேன். நான் போகுமிடங்களில் என்னைக் கவர்கிற எந்தவொரு அம்சத்தைப் பற்றிய புத்தகங்கள் இருந்தாலும் உடனே வாங்கி படித்துவிடுகிறேன். அந்த நேரங்களில் என்னைக் கவர்கின்ற எதுவொன்றையும் நான் வடிவங்களாகவும், வண்ணங்களாகவும் மாற்றுகிறேன்.
உதாரணமாக Ran படத்தில் வருகிற ட்சூவை எடுத்துக் கொள்ளுங்கள், அந்தக் கதாபாத்திரத்தின் உடைக்குக் கொடுக்கபப்ட்ட நிறமென்பது இத்தாலிய ஓவியரான போட்டிசெல்லியின் ஓவியங்களிலிருந்து பெறப்பட்டவை. அவற்றை ஜப்பானிய கிமோனோவுடன் (பாரம்பரிய உடை) கலந்தேன். In House of Flying Dagger படத்தில் மூங்கில் காட்டின் காட்சியில் நடிகர்கள் அணிந்திருந்த மூங்கில் தொப்பிகான யோசனை என் தலைக்குள் திடீரென்று உதித்தது. கியோட்டோ பாணியிலான தொப்பிகளின் வடிவமைப்பை வேறுமாதிரி மாறினேன். சீனாவிலும் உக்ரைனிலும் தான் படப்பிடிப்பு நடந்தது. அங்கு இது போன்ற தொப்பிகள் புழக்கத்தில் இல்லை. அதனால் கியோட்டோவில் ஒரு மூங்கில் கலைஞரிடம் தொப்பியைத் தயாரிக்கச் சொல்லி அதனை சீனாவில் உள்ள கலைஞர்களிடம் காட்டி தொப்பிகளை தயாரித்துக் கொண்டேன்.
Ran படத்திற்காக ஆயிரம் உடைகளை வடிவமைத்திருக்கிறேன். அறநூறு வருடத்திற்கு முன்பான ஜப்பானிய இசை நாடக உடைகளை மேற்கத்திய தாக்கத்தோடும் நாஜி சீருடை மற்றும் ஐரோப்பிய பெண்கள் மறுமலர்ச்சி காலகட்டத்தில் இருந்த உடைகளின் தோற்றத்தோடும் கலந்து பெற்றேன்.
என்னுடைய பணி உலகமெங்கிலும் என்னை அழைத்துச் செல்கிறது. என்னுடைய கற்பனைகள் யாவுமே ஜப்பானிய வடிவமைப்புகள் தந்த கொடை. குறிப்பாக என்னுடையவை எனது சொந்த ஊரான கியாட்டோவின் பாணி.
உங்களது கற்பனைத்திறன் எனும்போது அதில் வண்ணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது பற்றி சொல்லுங்கள்..
புதியதான வண்ண சேர்க்கைகளை நானே உருவாக்கிக் கொள்கிறேன். ‘Hero’ படத்திற்காக சிவப்பு நிறத்திலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட நிற பேதங்களை உருவாக்கியுள்ளேன். பழுப்பு நிறத்தில் பதினான்கு வகையான நிற பேதங்களை கொண்டுவந்துள்ளேன்.
பீஜிங்கில் உள்ள அத்தனை வண்ணச்சாய தொழிற்சாலைகளில் வேலைப் பார்ப்பவர்கள் அனைவருமே என் நண்பர்கள் தான். Hero படத்திற்காக ஜாங் ஜியி உடையில் ஒரு சிறிய பூவின் வடிவத்தை நெய்து சேர்த்திருந்தேன். படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் பாயலிடம் , “இந்தப் பூவின தயவுசெய்து தெளிவாக படம்பிடியுங்கள் “ என்றேன். ஏனெனில் சிறிய விஷயமாக இருந்தாலும் அந்தக் காட்சிக்கு அது ஒருவித அர்த்தத்தை சேர்த்துவிடும் என நம்புகிறேன். மேகி சீயங் மற்றும் ஜான் ஜெயி இடையிலான சண்டைக்காட்சியில் சுற்றிலும் பூக்கள் அவர்கள் மேல் விழும். அவை யாவும் தங்க நிறத்தில் இருந்தன. இயக்குநர் ஜாங் யிமூவிடம் அவற்றை சிவப்பு நிறத்துக்கு மாற்றமுடியுமா என்று கேட்டேன் அவரும் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு ஜாங் ஜயி அணிந்திருந்த சிவப்பு உடைக்கு பொருத்தமானதாக மாறி அந்தக் காட்சிக்கே ஒரு தனித்த அழகைக் கொடுத்தது.
பெரும் ஆளுமைகொண்ட இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். அவர்களது ரசனைக்கேற்ப உங்களது கற்பனையை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்குமே..
நாம் எப்படியான திறனோடு இருக்கிறோம் என்று தெரிந்து கொண்ட பின் தான் பணி செய்ய அழைக்கிறார்கள். அதனால் நமது கற்பனையையும், கருத்துகளையும் முற்றிலும் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. அதே சமயம் இயக்குநர்களுக்கென்று ஒரு கற்பனை இருக்கும். அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வண்ணங்களைக் கையாள்வதில் எனக்கும் ஜாங் யிமூவிற்கும் ஒத்த ரசனை இருந்தது. குரோசவா அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என விரும்புவார். Ran படம் தொடங்கப்பட்டபோது நான் எது மாதிரியான உடையை வடிவமைத்துக் கொண்டு போனாலும், ‘இதை விட கொஞ்சம் மேம்பட்டதாய் முயற்சி செய்யலாமே’ என்றே சொல்வார். அவரின் எதிர்பார்ப்பை திருப்தி செய்வது என்பது எனக்கு சவாலானதாக இருந்தது. கோடைகாலத்தில் கூட குளிர்காலம் போல ஜாங் யிமூவால் படம்பிடித்து விட முடியும். ஆனால் குரோசவா இப்படி ஒப்புக் கொள்ள மாட்டார்.
Ran படத்தில் ஒரு காட்சியைப் படம்பிடிக்க குறிப்பிட்ட மேகத்தின் பின்னணி தேவைப்பட்டது. தினமும் காலையில் நான்கு மணிக்கு நானூறு துணை நடிகர்களும் படப்பிடிப்புத் தளத்திற்கு முழுமையான ஒப்பனையுடன் வந்துவிடுவார்கள். பின்பு மேகத்திற்காகக் காத்திருப்போம். இப்படி ஒரு வார காலம் காத்திருந்த பின்னர் தான் குரோசவா எதிர்பார்த்திருந்த மேகம் கிடைத்தது. குரோசவா போல இந்தக் காலத்தில் படமெடுக்க முடியும் என்கிற சாத்தியம் இல்லை.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரித்த Memoirs of Geisha திரைப்படத்தில் பணிபுரிய என்னை அழைத்தபோது மறுத்துவிட்டேன். ஏனெனில் ஜப்பானியர்கள் அந்தப்படத்தை ‘அமெரிக்க பார்வையில் ஜப்பானிய படம்’ என்றே நினைத்தனர். எனக்கும் கூட அந்தப்படம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இல்லை. சூழல், மக்கள், உடைகள், ஜாப்பானிய கலாசாரத்தை சொன்ன விதம் இவை அனைத்தையுமே என்னால் ஏற்றுக்கொளல் முடியவில்லை.
படம், இசை நாடகங்கள் , மேடை நாடகங்கள் என பலவற்றிலும் பணி செய்திருக்கிறேன். இவை ஒவ்வொன்றுமே ஏதோ ஒருவகையில் ஈர்த்திருந்தன. இவற்றில் எளிமையான நாடகங்களும் இருக்கின்றன. மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்களும் உண்டு. திரைக்கதை அல்லது கதைக்களம் என எதுவோ ஒன்று என்னை ஈர்க்க வேண்டும். பிடிக்காத ஒன்றை என்னால் செய்யவே இயலாது. ஏனெனில் காற்றில் கோட்டை கட்டுபவள் அல்ல நான்..
மிக அற்புதமான கட்டுரை