சென்னை புத்தகக்கண்காட்சி 2025

0
241

புகைப்படம் நன்றி ஸ்ருதி இலக்கியம் டிவி திரு.கபிலன்

நேற்று நல்ல நாள். நிதானமாக போக வேண்டும் என நினைத்தபடி புத்தகங்கள் வாங்க முடிந்தது. வேலைகளுக்கு இடையில் இரண்டு மணிநேரங்கள் மட்டும் போய்விட்டு வந்துவிடலாம் என்று தான் போனேன். நேரம் போனதே தெரியவில்லை. நேற்று போனில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. ஒருவகையில் நல்லது. ஜிபே பக்கமே போகவில்லை.

அரங்கங்களுக்குள் நுழைவதற்கு முன்பு சடங்கு சாக்கியங்களில் ஒன்றான காபி குடித்தல் சம்பிரதாயத்தின் போது கவிஞர் சல்மாவை சந்தித்தேன். ‘இந்த முறை காபி நல்லா இருக்குங்க’ என்று சொல்லிக்கொண்டே முதல் ‘சிப்’ காபியைக் குடிக்கும்போது அவரிடம் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இப்படி ஒரேடியாய் கருத்து சொல்லக்கூடாது என்று எப்போதும் போல அப்போதும் புரிந்து கொண்டேன்.

சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. ஒருவர் எதிரில் வந்தார். பார்த்துக்கொண்டே வந்தவர் “ஜா.தீபா தானே?”

ஆமாங்க

அடுத்த நொடி தன் பையில் இருந்த புத்தகத்தை எடுத்தார். அது என்ன புத்தகம் என்பதைக் கூட அவர் பார்க்கவில்லை. கையில் கொடுத்துவிட்டு “நல்லா எழுதறீங்க..படிச்சிட்டு தான் இருக்கேன்..வாழ்க வளமுடன்” என்று சென்று விட்டார்.

அவர் என்னை சந்தித்தது தற்செயல் தான். அந்த நொடியில் எனக்கு புத்தகம் தரவேண்டும், எந்தப் புத்தகமாகவும் இருக்கலாம் என்று நினைத்த அவரது அன்புக்கு நன்றி. பெயர் சொல்லாமல் போய்விட்டார். மொத்தமே முப்பது வினாடிகள் தான் இது நடந்தது. அவர் இதை வாசிக்கக்கூடும். இதைப் படித்தால் இதன் மூலம் என் நன்றியை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தமுறை பலரும் தேடி வந்து பேசினார்கள். ஒரு பெண்மணி குடும்பத்துடன் வெளியூரில் இருந்து வந்திருக்கிறார். நான் கடந்து போகையில் என்னை அழைத்தவர் நான்..நான் தானா என்று உறுதி செய்து கொண்டார். சட்டென்று கையைப் பிடித்துக் கொண்டு குனிந்து தன் முகத்தை அதில் வைத்துக் கொண்டார். எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. ‘என் அம்மாவை..அக்காவை..நான் வாழ்ந்த வாழ்க்கையை எல்லாம் எழுதறீங்க. உங்க எழுத்துக்கு அடிக்ட் ஆயிட்டேன்” என்றார். இவை பெரியவார்த்தைகள். பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.  அழுத்தி கன்னத்தில் முத்தம் கொடுத்தார். எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. அவருடைய ஊருக்கு வந்தால் வீட்டுக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எங்கேனும் என்னைப் பார்த்துவிட முடியாதா என்று தேடிக்கொண்டிருந்ததாக அவரது கணவர் சொன்னார். அவரைப் பார்த்தது எனக்கு அற்புதமான சந்திப்பாக இருந்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

திருநெல்வேலியில் எம்.எம் தீனை தெரியாத வாசகர்கள் இருக்க முடியாது. அவர் எழுதிய ‘நீர்ப்பரணி’ நாவலை வாங்க வேண்டும் என்று நினைத்து போயிருந்தேன். அவரையே அங்கு சந்தித்தது மகிழ்ச்சி. வரலாற்றின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர். எனக்கு அவருடன் அதிகப் பழக்கமில்லை. நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய புதிய நாவலான ‘கிளைவ்’ வந்திருந்தது. பெட்டியைப் பிரித்து முதல் பிரதியை காட்டினார். மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டேன். அவர் கிளைவ் குறித்து சொன்னத் தகவல்களில் அங்கேயே ஓரமாக உட்கார்ந்து நாவலைப் படித்துவிடலாம் என்று தோன்றியது.

நினைத்த புத்தகத்தை வாங்கிவிட்டோம் என்கிற இறுமாப்புடனும் பெருமிதத்துடனும் வந்து கொண்டிருந்தபோது ‘அனாகத நாதம்’ என்கிற அற்புதமான சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் தம்பி செந்தில் ஜெகன்நாதனைப் பார்த்திருக்கக் கூடாது.

“புக்ஸ் எல்லாம் வாங்கிட்டீங்களாக்கா”

“ஆமா செந்தில்..முடிஞ்சது’

“ரெண்டு புக்குங்கங்கக்கா..ரா.கி ரங்கராஜனோட சுயசரிதையும், த.ந குமாரசாமி எடுத்த நேர்காணல் தொகுப்பும் அலையன்சில் கிடைக்குது..வாங்குங்க. நான் படிச்சிட்டேன். நல்லாருக்கு”

செந்திலின் வாசிப்பு பரவலானது. அவர் ஒரு புத்தகம் சொல்கிறார் என்றால் நிச்சயம் அது ஏற்புடையதாக இருக்கும். ஆனால், அவர் சொன்ன அலையன்ஸ் அரங்கில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டேன். களைப்பாக இருந்தது. அவர் சொன்ன புத்தகங்களை வாங்கவில்லை என்கிற ஏக்கமும் இருந்தது. ‘இதுக்குத் தான் உங்களையெல்லாம் பார்க்கவேகூடாதுன்னு சொல்றது..’ என்று நினைத்துக் கொண்டேன். குறித்துக் கொண்டிருக்கிறேன். வாங்கவேண்டும்.

‘இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு’ என்கிற புத்தகம் கண்ணில்பட்டது. சில பக்கங்களை வாசிக்கையில் வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாகத் தோன்றியது. வாங்கினேன். நியூ செஞ்சுரி புக் ஹவுசில் கிடைக்கிறது. வறிதையா கான்ஸ்தத்தின் ‘துறையாடல்’ வாங்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். கடைசியில் தான் நினைவுக்கு வந்தது. ஜிபே வேலை செய்யவில்லை. கார்டுகளையும் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். பையில் காபி குடிக்க மட்டும் சொற்ப சில்லறைகள் இருந்ததால் பிறகு என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அவருடைய ‘மூதாய் மரம்’ மட்டும் வாங்கியிருக்கிறேன்.

பிரெஞ்சில் இருந்து நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்களில் எனக்கு சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்புகள் பிடிக்கும். அவர் மொழிபெயர்ப்பில் அநேகமும் என்னிடமா உண்டு. ‘தண்டனை’ மொழிபெயர்ப்பு நாவல் இல்லை. வாங்கிவிட்டேன்.

நூல்வனம் வெளியிட்ட எல்லாப் புத்தகங்களும் என்னிடம் உள்ளன. அங்கு மட்டும் தான் புத்தகங்களைத் தேடாமல் “இரண்டு நாட்களுக்கு முன்னால வந்த புக்ஸ் எல்லாம் குடுங்க’ என்று வாங்கினேன்.

காபி குடிக்கப் போகும்போது செந்திலுடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். எங்கோ பார்த்திருக்கிறேன் என்று நினைவு. அவர் என்னிடம் சகஜமாகப் பேசினார். நானும் பேசினேன். மொழிபெயர்ப்பாளர்கள் குறித்தும், புத்தகங்கள் பற்றியும் அவர் பேசியது எல்லாமே சுவாரஸ்யமாக இருந்தன. பயனுள்ள  தகவல்கள். ‘திரையெல்லாம் செண்பகப்பூ’ குறித்துச் சொன்னார். அவர் சொன்னது மிக முக்கியமான கருத்துகள் என்பதால் யார் இவர் என்கிற ஆவல் அதிகமானது. அஜிதன் வந்தமர்ந்தார். அஜிதனிடம் ரகசியமாகக் கேட்டுவிடலாமா என்று நினைக்கையில் அவர் பெயர் சொல்லி ஒருவர் அழைக்க, ‘நீங்க கடலூர் சீனு தானா?” என்றேன். அவர் சிரித்தார். கடலூர் சீனுவை ஜெயமோகன் தளத்தின் கடிதம் வழியாக அறிவேன். இப்போது தான் முதன்முதலாக நேரில் சந்திக்கிறேன். அவர் எழுதுகிற விதத்தை வைத்து யாரையுமே ஒரு தீவிரப் பார்வையோடு பார்க்கிற, புருவத்தை எப்போதும் நெற்றிக்கு மேல் ஓட்ட வைத்திருக்கிற ஒருவராக கற்பனை செய்து வைத்திருந்தேன் போலிருக்கிறது. என்னுடைய சிறுகதைத் தொகுப்புக்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார். அதுவும் காரணம். ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியை அதிரும் சிரிப்பைக் கொண்டு நிரப்பியதால் அவர் கடலூர் சீனுவில் பகக்த்துவீட்டுக்காரராக கூட இருந்திருக்க வாய்ப்பில்லையே..எப்படி கடலூர் சீனுவாகவே இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

சூடாமணியின் நாவல்ல்களை போதிமரம் அரங்குக்கு அழைத்துச் சென்று பரிசளித்த விஜயகுமார் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. சூடாமணி எனக்கு எப்போதுமே பிடித்த எழுத்தாளர். அவர் பரிசளித்த எந்தப் புத்தகமுமே என்னிடம் இல்லை.

வெளியில் வருகையில் ‘வடசென்னைக்காரி’ எழுதிய ஷாலின் மரிய லாரான்சைப் பார்த்தேன். அவர் அப்போது தான் வந்திருக்கிறார். அவரது மகள் ஜாராவுக்கும் கணவருக்கும் ஆறாவது முறையாக என்னை அறிமுகம் செய்தார். அந்தக் குழந்தை தூக்கக் கலக்கத்திலும் புத்தகங்களைப் பார்க்கும் ஆர்வம் கொண்டிருந்தாள். “என்னவோ இன்னைக்கு உங்களைத் தான் முதல்ல பார்ப்போம்னு நினைச்சிட்டு இருந்தேன்..பார்த்துட்டேன்” என்று ஷாலின் சொல்லிவிட்டு நினைப்பதெல்லாம் நடப்பதால் எனக்குள் அற்புத ஆவி குடி கொண்டிருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன் என்றார் அவரது ட்ரேட் மார்க் சிரிப்போடு..   அந்த ஆவியோடு அவரை சேர்த்து அணைத்து விடைபெற்றேன். சில நிமிடங்கள் என்றாலும் நல்ல சந்திப்பு அது.

எனது அண்ணன் ஜா. ராஜகோபாலன் குடும்பத்துடன் வந்திருந்தார். என்னுடைய மருமகன் விஸ்வா, “அத்தை..நாங்க ஸ்டால் நம்பர் 114ல இருக்கோம்..ஓவர்..ஓவர்..” என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டே வர நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அவனும் நானும் புத்தகங்களைப் பற்றி அடிக்கடி பேசுவோம். ஒவ்வொரு முறையும் அண்ணன் வீட்டுக்கு செல்லும்போதும் வாங்கியதைக் காட்டுவான். நேற்றும் அங்கே வைத்துக் காட்டினான். அவன் காமிக்ஸ் ரசிகன். ‘அத்தை என்ன புக்ஸ் வாங்கினீங்க’ என்று கேட்டான். நான் என் பைகளைக் கட்டினேன்..வீட்டுக்கு அடுத்த முறை எடுத்துட்டு வாங்க பாக்கறேன் என்று பெரிய மனதுடன் எனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கிறான். அவன் வாசிப்பில் ஆர்வத்துடன் வளருவது எங்களுக்கெல்லாம் சந்தோசம்.

இன்டர்நெட் வேலை செய்தபிறகு தான் பார்க்கிறேன், வாட்ஸ்ஆப்பில் சிலர் ;இன்னைக்கு புக் பேர் வந்தா பாக்கலாமா” என்று கேட்டிருக்கிறார்கள். சங்கடமாகப் போய்விட்டது. எல்லோருக்கும் விளக்கப் பதில் அளித்திருக்கிறேன்.

எப்போதுமே அதிகமும் அபுனைவு வாங்குவேன். இந்த முறை நாவல்களும், மொழிபெயர்ப்புகளும் தான அதிகம் வாங்கினேன்.

எனக்கு புத்தகக் கண்காட்சிகள் கொண்டாட்டமானவை. அது ஒரு அந்தரங்க நிறைவு. ஓடிக்கொண்டே இருக்கும் காலத்தில் அனைவரையும் சந்தித்து சில நொடிகளாவது பேசக் கிடைக்கிற வாய்ப்பு. சென்னை வந்த புதிதில் யாரையும் தெரியாமல் எங்கு என்ன புத்தகம் கிடைக்கும் என்று மிரட்சியோடு சுற்றி வந்த நாட்களை நினைத்துக் கொள்கிறேன். நான் புத்தகக் கண்காட்சியில் ரசிப்பது என்னைப் போலவே அதே மிரட்சியோடு வரும் புதிய முகங்களைத் தான்.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments