நினைவோ ஒரு பறவை – A.T கிருஷ்ணசாமி

1
228

தமிழில் அதிகம் கவனிக்கப்படாத, அதே நேரம் நவீன சிந்தனையுடன் படங்களை இயக்கியவர் A.T கிருஷ்ணசாமி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

‘சபாபதி’ என்கிற படம் 1941ல் வெளிவந்தது. எண்பது வருடங்களை படம் கடந்துவிட்டது. இப்போதும் தொலைகாட்சியில் அந்தப் படத்தினை ஒளிபரப்பும்போது ரசிக்கபப்டுகிற வரிசையில் உள்ளது சபாபதி. தமிழின் முதல் முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக சபாபதியை சொல்ல முடியும். இப்போது பார்த்தாலும் சபாபதி நம்மை சிரிக்க வைக்கும் என்பது தான் முக்கியமானது.

டேனியல் டேஃபோ எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு அதில் வரும் Friday என்கிற ஒரு  பணியாள் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு நாடகத்தை உருவாக்குகிறார் பம்மல் சம்பந்த முதலியார். அந்த நாவலில் வருகிற பணியாளரின் பெயர்  Friday கதாபாத்திரம் ஒரு அப்பாவி. அதைப் போல சபாபதி என்கிற வேலையாள் கதாபாத்திரத்தை படைக்கிறார் சம்பந்த முதலியார். அந்தப் பணியாள் வேலை செய்யும் அந்த வீட்டின் ஜமின்தார் பெயரும் சபாபதி தான். இரண்டு சபாபதிக்களும் அடிப்படையில் விவரம் தெரியாதவர்கள். முட்டாள்கள் என்றும் சொல்லலாம். இருவருமே சுயமாய் சிந்திக்கும் திறனற்றவர்கள். இதில் ஜமின்தார் சபாபதி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக் கொள்வதில்லை.  பணியாளோ எதைச் செய்தாலும் புத்திசாலித்தனமாக யோசித்து செய்வதில்லை. ஜமின்தார் சபாபதிக்குத் திருமணமாகிறது. மாமனார் வீட்டில் இருக்கும் தன் மனைவியைப் பார்க்க, பணியாள் சபாபதியுடன் கிளம்புகிறார் ஜமின்தார். இருவரின் பயணமும் அதில் நடக்கும் சம்பவங்களும் அவர்கள் மாமனார் வீட்டுக்குப் போவதும் அங்கு பணி செய்யும் பெண்ணின் மீது பணியாள் சபாபதிக்கு காதல் வருவதும் ஒரு கதை.

ஜமின்தார் சபாபதியின் மனைவி பள்ளிக்கூட பரிட்சையில் அந்த வருடம் தேறியவர். சபாபதியோ தோற்றவர். மனைவியின் மேற்பார்வையில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என முயற்சி செய்கிறார். அவருக்கு ஆங்கிலம் உட்பட பாடங்களை சொல்லித் தருகிறார் மனைவி. இருவரும் சேர்ந்து கல்லூரிக்குப் போக வேண்டும் என்பது இரு வீட்டுப் பெற்றோரின் முடிவாக இருக்கிறது. இப்படி  ஒரு கதைக்களனைக் கொண்டு சபாபதி படம் வெளிவந்தது.

இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. படத்தில் கூட ஒரு காட்சி உண்டு. மனைவி சபாபதியிடம் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்பார். “இரண்டாம் உலக யுத்தம் நடைபற்ற ஆண்டு?” என்றதும், “இதோ இப்பக் கூட யுத்தம் முடியலியே” என்பார் சபாபதி. மக்களுக்கு பொழுதுபோக்கவும் அவர்கள் மனம்விட்டு சிரிக்கவும் ஒரு நகைச்சுவைப் படத்தினை எடுக்கலாம் என்று ஏ.டி கிருஷ்ணசாமி ஏ.வி மெய்யப்ப செட்டியாரை அணுகுகிறார். அப்போது ஏவிஎம்  தயாரிப்பு நிறுவனம் உருவாகாத காலம்.  இந்தப் படத்தினை மெய்யப்ப செட்டியார் தயாரித்தார். அவர் இந்தப் படத்தின் சில பகுதிகளை இயக்கினார் என்றும் சொல்லப்படுவதுண்டு. A.T. கிருஷ்ணசாமி எதிர்பார்த்தது போலவே மக்கள் சிரிப்பதற்காக ஒரு படம் வந்திருகிறது என்று தொடர்ந்து திரையரங்குக்கு வந்தனர். படம் பெரும் வெற்றி.

சில நகைச்சுவைகள் வசனங்களில் வெளிப்படும், சில நகைச்சுவைகள் தருணங்களாலும், சூழலாலும் வெளிப்படும். இந்தப் படம் இரண்டுமே கலந்தது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த பத்மா அப்போதைய லக்ஸ் சோப் நிறுவனத்தின் பிரபல மாடலாக இருந்தவர்.

A.T கிருஷ்ணசாமி தன்னுடைய அனைத்துப் படங்களிலுமே நகைச்சுவைக்கு சரியான விகிதத்தில் இடம் கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்து அவரால் முழு நீள நகைச்சுவைப் படங்கள் இயக்கியிருக்க முடியும். அதற்கான திறமை கொண்டவராகவே இருந்திருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு படங்களையும் வெவ்வேறு வகை மாதிரிகளில் முயன்றிருக்கிறார்.

இவருடைய இயக்கத்தில் டி.ஆர் மகாலிங்கம் நடித்த ‘மோகன சுந்தரம்’ த்ரில்லர் வகையிலானது. அப்போதைய மிக பிரபலமான சிஐடி கதாபாத்திரமும், மாறுவேஷத்தில் கொலை ஒன்றினைத் துப்பு துலக்கும் சாகச காட்சிகளும் கொண்ட படம். ஆள் மாறாட்டத்தினை வைத்து சஸ்பென்சை சுவாரஸ்யமாகக் கொண்டு போன படமும் கூட. நாவல் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஒருவரான ஜே.ஆர் ரெங்கராஜூ ‘மோகன சுந்தரம்’ என்ற பெயரில் எழுதிய நாவலையே படமாக எடுத்திருந்தனர்.

ஆள் மாறாட்டம் என்பது நாவலில் எழுதிவிட முடியும். அதையே திரையில் காட்டும்போது நம்பகத்தன்மை வேண்டும். அதை சரியாகி இந்தப் படத்தில் கையாண்டிருந்தார் ஏ.டி கிருஷ்ணசாமி. படத்திற்கு திரைக்கதையும் இவரே.

பிறகு வந்த ‘அறிவாளி’. ‘அறிவாளி’ கதை ஷேக்ஸ்பியரின் The Taming of the Shrew நாடகத்தின் அடிப்படையிலேயே திரைக்கதையாக்கப்பட்டிருக்கிறது.

ஷேக்ஸ்பியரின் நாவலில் கேதெரீனா என்கிற கதாபாத்திரம் யாருக்கும் அடங்காமல் திமிர்பிடித்த பெண்ணாக வருவார். அவளுக்குப் பிடிக்காமலேயே திருமணம் நடந்துவிடும். கேதெரீனாவை வழிக்கு கொண்டு வர அவளது கணவர் பெட்ருசினோ அவளுக்கு தண்ணீர் கூட தராமல் தானும் பிடிவாதம் செய்து பட்டினிபோட்டு வழிக்குக் கொண்டு வருகிறார் என்பதாக அமைந்திருக்கும். சிரிக்க சிரிக்க சொன்னாலும் இது ஒரு ஆணாதிக்க நாவல் என கடுமையான விமர்சனமும் உண்டு.

‘அறிவாளி’யில் கிருஷ்ணஸ்வாமியும் பானுமதியை சிவாஜி தன வழிக்குக் கொண்டு வர பாடாய்ப் படுத்துகிறார் என்றாலும் அவை ஒரே காட்சியில் முடிந்து விடுகிறது. அதன்பிறகு சிவாஜியும், பானுமதியும் மனமொத்து எல்லா முடிவுகளையும் எடுக்கிறார்கள் என்பதாக படத்தினைக் கொண்டு போயிருக்கிறார். கணவன், மனைவி உறவென்பது நட்பின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை அந்தக் காலத்தில் தெளிவாக எடுத்துச் சொன்ன படமாக இருந்தது. அந்த வகையில் இந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியத் திரைப்படம் என்று கொள்ளலாம்.

???????????????????????????????????????????????????????????????????????????

அதன் பின் ‘மனம் ஒரு குரங்கு’ என்கிற படத்தினை சோ.ராமசாமி அவர்கள் திரைக்கதை, வசனம் எழுத இயக்கியிருக்கிறார் கிருஷ்ணசாமி. ஒவ்வொரு காட்சியும் அத்தனை சுவாரஸ்யமானது. படத்தின் டைட்டில் கார்டில் தொடங்கி வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள். ஒரு குரங்கினை பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்புகிறார்கள். அது கிரகத்தினை அடையப்போகும் நேரம், அங்கு ஒரு இதய வடிவிலான மற்றொரு கிரகத்தினைப் பார்கிறது குரங்கு. உடனேயே அதை நோக்கி ராக்கெட்டினைத் திருப்புகிறது. இதயத்துக்குள்  ராக்கெட் புகுந்ததும் ராக்கெட்டும்  உடைந்து, இதயமும் உடைகிறது. குரங்கு தொங்கிக் கொண்டிருக்கிறது.‘மனம் ஒரு குரங்கு’ என்று டைட்டில் அதன் மேல் வருகிறது.

சோ, ‘துக்ளக்’ போன்ற நேரடி அரசியல் நையாண்டிகளைப் பேசுவதற்கு முன்பு எழுதிய படம் இது. இந்தப் படத்தின் கதையினை ‘ஏணிப்படிகள்’ , ‘ரங்கீலா’ படங்களில் காண முடியும். பெர்னார்ட் ஷாவின் Pygmalion நாடகத்தின் தழுவலே இந்தப் படம். ஷாவின் நாடகத்தை பலர் ஆங்கிலத்தில் படமாக எடுத்துள்ளனர். இதில் பிரபலமானது ஆட்ரே ஹெப்பர்ன் நடித்த ‘My fair Lady’. இந்தப் படம் வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘மனம் ஒரு குரங்கு’ வெளியானது. சுய அடையாளத்தைத் தொலைப்பது தான் இந்தப் படங்களின் மையம்.

அந்த நேரத்தில் இருந்த அரசியல் சூழலைக் காட்சிகளாகவும் வசனங்களாகவும் சோ தனது திரைக்கதையில் கொண்டு வந்திருந்தார். பொதுவாக, சில படங்களில் சமூகக் கருத்துக்களை சொல்ல வேண்டுமானால் படத்துக்குள் ஒரு நாடகக் காட்சியை வைப்பார்கள். அந்த நாடகக் காட்சியில் சமூகத்துக்கு சொல்ல வேண்டிவற்றை பிரசாரம் போல சொல்லுவார்கள். இதனைப் பல படங்களில் பார்க்க முடியும். இந்தப் படத்தில் நேரடியாகவே அரசியலைத் தொட்டிருந்தனர். கூடுதலாகப் படத்தில் ஒரு நாடகக்காட்சியையும் கொண்டு வந்திருந்தார். ரசியல் குறித்த நக்கலையும் நையாண்டியையும் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்கள். படத்தில் சோவின் அப்பாவாக வரும் வி.கே ராமசாமி அரிசி மண்டி வைத்திருப்பார். சோவுக்கும் அவரது அப்பாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் ரசிக்கலாம். அதே நேரம், இன்காம் டாக்ஸ், அரசி பதுக்கல், கள்ளச்சந்தை போன்றவற்றைப் பற்றியும் பேசும் வாய்ப்பாக அமைத்துக் கொண்டனர்.

படத்தின் நாயகி கே.ஆர் விஜயா காய்கறி விற்கும் பெண்ணாக வருவார்.

“என்னம்மா கிலோ கத்திரிக்கா முக்கால் ரூவாயா? அநியாயமா இருக்கே?”

“அரிசி பற்றாக்குறை இருக்கற காலம்..காய்கறிய திண்ணுன்னு மந்திரியே சொல்லிட்டாங்க.. இல்லேனா குடுத்துருக்காங்களே ரேஷன் கார்டு அதத் திண்ணு”

என்று வசனங்கள் அன்றைய அரசியல், சமூக நிலவரத்தை சொல்லிக் கொண்டே வருகின்றன. இந்தப் படத்தின் வசனம் சோ என்றாலும் , ஏ.டி கிருஷ்ணசாமி அப்போதைய அரசியல் நடப்புகளைத் தொடந்து தனது எல்லாப் படங்களில் விமர்சித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

அதே போல் தொடர்ந்து இவரது கதாநாயகர்கள் விவாசாயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

கூட்டுப் பண்ணை, கிராமப் பொருளாதாரம், நகரமயமாதலில் வரும் சிக்கல்கள் போன்றவற்றை இவரது கதாநாயகர்கள் தெளிவாய்ப் பேசுகிறார்கள்.

பிரசங்கிக்கவில்லை என்பது சொல்லப்பட வேண்டியது. நகரத்துக்கு போய் பொறியியல், விவசாயப் படிப்பு போன்றவற்றைக் கற்றவர்கள் கிராமங்களுக்கு வந்து களத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதும் இவர் தனது படங்களின் மூலம் வலியுறுத்துவது. காந்தியின் கொள்கை மீது பெரும் பற்றுக் கொண்டவர் என்பது இவரது படங்களைப் பார்ப்பவர்களால் சொல்லிவிட முடியும். படத்தில் ஒரு கிராமத்தின் பெயரே காந்திகிராமம்பட்டி தான்.

திருக்குறளை முன்மொழிந்து திருமணம், ஆண் பெண் சம்மதம் இருந்தால் மட்டுமே  வாழ்க்கையில் ஒன்றிணைதல் போன்றவற்றை தன்னுடைய படங்களில் வலியுறுத்தியிருக்கிறார் கிருஷ்ணசாமி.

பெண் கதாபத்திரங்களை பொறுத்தவரை நாணிக் கோணாமல் கதவுக்குப் பின் ஒளியாமல் நாற்காலிகளில் ஆண்களுக்கு முன்பு கம்பீரமாக அமர்ந்திருப்பவர்களாக இருக்கிறார்கள். எந்த பெண்ணும் படத்தில் நின்று கொண்டு பேசுவதில்லை. “உக்காரும்மா..உக்காந்து பேசு..ஆணுக்கு பெண் சமானம்னா முதல்ல சமானாமா உக்காரணும்..” என்று தொடர்ந்து கதாபாத்திரங்கள் வெவ்வேறு படங்களின் ஒரு காட்சியிலாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

சில பெண் கதாபாத்திரங்களைக் காட்டுகிறபோது அவர்கள்  புத்தகங்கள் வாசிப்பது போலவே காட்டியிருக்கிறார்.

படங்களில் வாசகசாலை என அழைக்கபப்ட்ட நூலகத்தினைக் காட்டுவது என்பதே அபூர்வமான காட்சி. ‘அறிவாளி’ படத்தில் வாசகசாலை காட்டப்படுகிறது. ஆச்சரியமாக அதில் பெண்கள் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆண்கள், பெண்களின் ஆலோசனகளைக் கேட்டு செயல்படுவது போல் அனைத்துப் படங்களிலும் அமைத்திருப்பது மிக ஆச்சரியம்.

‘அறிவாளி’ படத்தின் பானுமதி கதாபாத்திரம் ஒரு உதாரணம். இதே படத்தில்  ஒரு பெண் தன கணவனிடம் இப்படி சொல்லுவார், “இந்தக் காலத்துல எதுக்கு ஒருத்தருக்கு ஆயிரம் வேலி, ரெண்டாயிரம் வேலி நிலம். அதை நீங்க தரலேனா சர்க்கார் எடுத்துக்கப் போகுது. அதை கூட்டுறவுப் பண்ணையா மாத்திடுங்களேன்” என்பார்.

“நீயே சொல்லிட்டே..இனிமே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. அப்படியே செய்துடுவோம்” என்பார் கணவர்.

“குடும்பங்கற ஒரு இதுல..கணவன் ராஜா”

“ம்ஹும்..இந்த ராஜா ராணியெல்லாம் பழசு. ஜனாதிபதி மாதிரி பெண்கள் சம்சாராதிபதி”

இப்படி தொடர்ந்து பாலின சமத்துவம் குறித்து பேசியிருக்கிறார்.

நாற்பது , ஐம்பதுகளின் சென்னையைப் பார்க்க விரும்புபவர்கள் இவரது ‘சபாபதி’, ‘மோகன சுந்தரம்’ படங்களின் ஆரம்பக் காட்சிகளைப் பார்க்கலாம். ‘மோகனசுந்தரம்’ படத்தில் டி.ஆர் மகாலிங்கம் வரலக்ஷ்மியிடம் காதலைச் சொல்லும் இடம், நேப்பியர் பாலத்தின் பின்னணியில் கூவம் கடலில் கலக்கும் இடத்தின் அருகில் பாறைப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணசாமி காட்டும் படங்களில் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமே அநேகமாக கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களின் கதையையே சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையினை எந்த பேதமுமின்றி சொல்ல முயற்சித்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஆங்கிலத்தின் மீது இயக்குநருக்கு அதிக ஈடுபாடு இருந்திருக்க வேண்டும். அது அவரது வசனங்களிலும் தேர்ந்தெடுக்கும் கதைகளிலும் தெரிகிறது. ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என கதாபாத்திர பேதமின்றி எல்லோருமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்கள்.

இவருடைய அட்டகாசமான திறமை என்பது வசனங்கள். அத்தனை இயல்பாக கதாபத்திரங்கள் பேசுகிறார்கள். அப்போதைய படங்களில் வழக்கு மொழியில் பேசும் கதாபாத்திரங்கள் உணர்ச்சிவசப்படும்போது செந்தமிழுக்கு மாறுவதை பார்க்க முடியும். இவரது படங்களில் கதாபாத்திரங்கள் எந்தச் சூழலில் பேசினாலும் ஒரே போல் இயல்பு குறையாமலேயே பேசுகிறார்கள்.  அந்தக் காலகட்டத்தில் கல்லூரி படித்தவர்கள், விவசாயம் செய்தவர்கள், பெண்கள் தங்களுக்குள் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்று சொல்லும் படங்கள் அரிது. அவை சினிமாவுக்கென உள்ள மொழியிலேயே அமைந்திருக்கும் . ஏ.டி கிருஷ்ணசாமியின்படங்களில் நம்மால் அப்போதுள்ள பேச்சு வழக்குகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என பேதமின்றி எல்லோருமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்கள்.

இவருடைய படங்களின் சில வசனங்கள் உதாரணங்களுக்காக,

//நம்ம கல்யாணம் நகமும் சதையும் போல ஏக பொருத்தம்

அது பழைய உவமானம். பேசும் படம் மாதிரி பிக்ச்சரும், சவுண்டும் மாதிரி கன பொருத்தம்னு சொல்லு//

//எப்பதேலேருந்து ரேஷன்ன்னு ஒண்ணு அரசாங்கம் கொண்டு வந்தது தெரியுமா? என்னை மாதிரி கிராமத்து பண்ணைல வேலை செஞ்சவங்கள நகரத்துக்கு கூப்பிட்டுக்கிட்டதுலேருந்து உணவு உற்பத்தி குறைஞ்சு போச்சு..ரேஷனும் அறிமுகமாச்சு//

//பலரை ஏமாத்தி பணம் பண்ணுற முதலாளிங்க கூட்டத்துக்கு அவன் தான் பிரசிடென்ட்//

ஒரு வயதான அலுவலர் மேனேஜரிடம் சொல்வது :

//சாருக்கும் ஐயாவுக்கு ஒரே அர்த்தம் தான். நான் உங்களை சார்னு கூப்புடலாம். ஆனா நீங்க என்னை ஐயான்னு தான் கூப்பிட முடியும், சார்னு கூப்பிட முடியாது. கூப்பிட்டு பாருங்களேன். உங்களுக்கு மென்னிய புடிக்கும். அது தான் ரெண்டு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம்//

நவீன சிந்தனையும், அரசியல், சமூகம் குறித்த பார்வையும் கொண்ட இயக்குநராக ஏ.டி.கிருஷ்ணசாமி இருந்திருக்கிறார். தனது பெயருக்குப் பின்பு பட்டப்படிப்பை சேர்த்துக் கொண்ட சொற்ப இயக்குநர்களில் ஒருவரும் கூட. பி.ஏ படித்திருக்கிறார்.

தொடர்ந்து இயக்குநர் ஏ.டி.கிருஷ்ணசாமி படங்களைப் பார்கையில் அவருக்கென ஒரு கனவு இருந்திருக்கிறது என்பது புரியும். அந்தக் கனவு எல்லாரும் சமமானவர்கள் என்பதும், அனைவருக்குமான கல்வி, குறப்பாக பெண்களுக்கான மரியாதை என உள்ளடக்கியது. இவரது கடைசித் திரைப்படம் உயிர்களிடத்தில் சமநிலை கடைபிடிக்க வேண்டும்  என்று சொன்ன வள்ளலாரின் வாழ்க்கை வரலாறாக இருந்தது. ‘அருட்பெருஞ்சோதி’ எனபது படத்தின் பெயர். அதறுப் பிறகு அவர் படம் இயக்கியதாக எந்த ஆவணமும் இல்லை. இவரது படங்களில் சில மட்டுமே காணக்கிடைக்கின்றன. ‘வித்யாபதி’, ‘பொன்வயல்’ போன்ற படங்கள் நமக்குக் கிடைப்பதில்லை.

படைப்பாளிகள் அனைவருமே கனவு காண்பவர்கள் தான என்றாலும் எந்த மாதிரியான கனவு என்பதில் வேறுபட்டவர்களாகிறார்கள். கிருஷ்ணசாமியின் கனவு எல்லாருக்குமானது. இன்று நாம் திரைப்படங்களில் முன்வைக்கும் அரசியலை அவர் ஐம்பது வருடங்களுக்கு முன்பே காட்டியிருக்கிறார். பேசியிருக்கிறார். விளக்கமும் தந்திருக்கிறார். எந்த வகையில் பார்த்தாலும் A.T கிருஷ்ணசாமி தவிர்க்கவே கூடாத இயக்குநர்.

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
RjGopaalan
RjGopaalan
11 months ago

இடைச்செருகலாக நீங்கள் இணைக்கும் விஷயங்களை, அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடிவதில்லை.
பத்து நொடியேனும் நின்று யோசிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு,

பெர்னார்ட் ஷாவின் Pygmalion நாடகத்தின் தழுவலே இந்தப் படம்”

“மனம் ஒரு குரங்கு’ என்று டைட்டில் அதன் மேல் வருகிறது.”

“அப்போது AVM ஆரம்பித்திருக்கவில்லை”

” அந்த சமயம் சோ. துக்ளக் ஆரம்பிக்காத காலம்”

இப்படி சொல்லச்சொல்ல.. நிற்க வைத்து விடுகிறது.
சில சமயங்களில் ஏதேனும் ஒரு திரைப்படத்தின் பெயர் சொல்லியிருப்பீர்கள்., தேடி அதை ஒரு காட்சிகளாவது பார்த்துவிட்டு, பிறகு கட்டுரையை தொடங்குவதெல்லாம் நடக்கும்.
சபாபதி திரைப்படம் எனது பள்ளிப்பருவத்தில் பார்த்த படம் என எழுதலாம் என கட்டுரையை படிக்கும்போதே நினைத்தேன். ஆனால்
” டேனியல் டேஃபோ எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு அதில் வரும் Friday”
என்பதை படித்ததும், பார்வையின் கோணம் வேறாகிவிட்டது.

” அப்போதைய லக்ஸ் சோப் நிறுவனத்தின் பிரபல மாடலாக இருந்தவர்”
இதுவெல்லாமும் கூட ஒரு உதாரணம்.இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. பதிவை விட கருத்து நீளமாக இருக்குமென்பதால், பிரம்மிப்போடு மீண்டும் படிக்கச்செல்கிறேன்.