உறங்கா நிறங்களின் ஓவியம்

2
208

உலகப் புகழ் பெற்றத் தன்மையுடைய இலக்கியங்களோ, ஓவியங்களோ இன்னபிற கலைகளோ அதனதன் படைப்பின் அந்தரங்கத்திற்குள்  வெளித்தெரியாத, அறிந்துகொள்வதற்குப் பழக்கப்படாதவொரு வாழ்க்கை நிலையை பொதிந்து வைத்திருக்கின்றன. இலக்கியங்கள் தத்தம் கருப்பொருளைத் தேடிக்கொண்டே இருப்பதுபோல, ஓவியங்களும் தமது மகாத்மியங்களை வெளிப்படுத்த விதவிதமான முகங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டே இருக்கின்றன. டாவின்சி ஓவியத்தின் மோனலிசாவின் முகம், உப்பியக் கன்னங்களைக் கொண்ட ரவிவர்மா பெண்களின் முகங்கள், சற்றே ஆண்மைத்தன்மையைக் காட்டுகிற கொண்டையாராஜூவின் பெண் கடவுளர்களின் ஓவியங்கள், என ஓவியர்களின் தேர்வு முகங்கள் நம்மைக் கடப்பதும் வருவதுமாகத் தான் இருக்கின்றன. வண்ணக் குழைவுக்குள் தன்னைத் தோய்த்து உரு நிறுத்திக் கொள்ளும் வரை நமக்கு அவை சாதாரண முகங்கள் தான்.

இப்படித் தூரிகையால் அற்புதங்கள் படைத்த ஒரு கலைஞனின் உருவாக்கத்தில், உயிரோட்டமுள்ள ஓவியமாக மாறிய பெண்ணின் கதையை சொல்கிறது ‘A girl with pearl ear ring’ திரைப்படம்.இதன் கதை ஹாலந்து நாட்டில் 1665 ம் ஆண்டு பின்னணியில் நடைபெறுகிறது.

க்ரீட் பதினெட்டு வயதான கூச்ச சுபாவமுள்ள பெண். அவள் தனது வீட்டில் சமையலுக்கான வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து அங்கு வரும் அவளது அம்மா, அவள் செய்த வேலை போதும் எனச் சொல்லி அவளை எங்கேயோக் கிளம்பச் சொல்கிறாள். உடனே க்ரீட் நேராகத்  தனது அப்பாவின் அறைக்குள் வருகிறாள். அவருக்கு பார்வை தெரியவில்லை அவர் க்ரீட்டின் கையில் ஒரு மார்பிள் துண்டினைத் தருகிறார். சதுரமான அந்த மார்பிள் துண்டின்  மீது சிறியதான ஓவியம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது. ‘நான் இந்த ஓவியத்தை வரையும்போது ஒரு  சிறியப் பெண்ணாக நீ என் அருகிலேயே இருந்தாய்.. அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?’ எனக் கேட்கிறார் அப்பா. க்ரீட் அதனை ஆமோதிக்கிறாள்.

‘நமது குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமை வரும் என நினைத்துக் கூட பார்த்ததில்லை’ என்னும் க்ரீட்டின் அம்மாவின் துயர வார்த்தைகளுடன் அன்றே தனது வீட்டிலிருந்து கிளம்புகிறாள் க்ரீட்.

ஓடைக் கரையில் அமைந்திருக்கிற வீடுகளின் முன் வந்து நிற்கும் க்ரீட் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளிடம் ‘ஓவியர் வெர்மியர் வீட்டு முகவரி எது என விசாரிக்கிறாள். அவர்களில் மூத்த பெண் க்ரீட்டை மேலும் கீழும் பார்த்துவிட்டு தனது தங்கையிடம், ‘வீட்டிற்கு புது வேலைக்காரி வந்து விட்டாள் என டான்னக்கியிடம் சொல்லு’ என்கிறாள்.

க்ரீட்டை வரவேற்கும் மூத்த வேலைக்காரப் பெண்ணாண டான்னக்கி, க்ரீட் அங்கு செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடுகிறாள். வீட்டைச் சுற்றிக் காட்டி மாடிக்கு அழைத்துச் சென்று குறிப்பிட்ட ஒரு அறையினைக் காண்பித்து அந்த அறையை சுத்தப்படுத்தும் வேலை க்ரீட்டினுடையது என்கிறாள். க்ரீட் அந்த அறைக்குள் நுழையப் போகிறாள், அவளைத் தடுக்கும் அப்பெண் ‘வெர்மியர் வரைந்து கொண்டிருப்பார் வேண்டாம் ’ என சொல்லித் திரும்ப அழைத்துக் கொண்டுப் போகிறாள். க்ரீட் அந்த அறையைத் திரும்பத் திரும்பப் பார்த்தபடி செல்கிறாள்.

க்ரீட் அன்றைய தினமே தன்னுடைய பணிகளைத் தொடங்கி விடுகிறாள். அவள் துணிகளைக் காய வைக்கும் சமயம் வீட்டு எஜமானி அங்கு வருகிறாள். மரியாதை செய்யும் விதமாக, க்ரீட் தனது காலை வணக்கத்தினைத் தெரிவிக்க, எஜமானியின் முகம் சிவந்து போகிறது. ‘உன்னிடம் கேட்கப்படும் வரை நீயாக எதுவும் பேச வேண்டியதில்லை’ என்கிறாள் கடுமையாக. எதிர்பாராத இந்தப் பதில் க்ரீட்டினைத் திகைக்க வைத்து விடுகிறது. அதன் பிறகு ஒரு சமயம் வீட்டின் எஜமானி ஐந்தாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை டான்னக்கி மூலம் க்ரீட்டிற்கு தெரிய வருகிறது.

இரவில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு தூங்கச் செல்கிறாள் . அது ஒரு பாதாள அறையைப் போல இருக்கிறது. வேண்டாத பொருட்களைப் போட்டு வைக்கும் அந்த அறையின் ஓரமாக துலங்கிய ஒரு பகுதியில் தனக்கான இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள் க்ரீட். தனது தந்தைக் கொடுத்திருந்த மார்பிள் ஓவியத்தை அறையின் ஓரமாக வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்கும் அவள் கண்களுக்கு ஆச்சரியம் காணக் கிடைக்கிறது. விழி விரிய கையில்  விளக்குடன் சென்று அவள் பார்க்கின்ற ஒரு இடத்தில் ஓவியம் ஒன்று வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசுவை மரியா தாங்கிக் கொண்டிருக்கும் ஓவியமாக அது இருக்க அவள் அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மறுநாள் பொழுது விடிகிறது. வீட்டின் எஜமானி க்ரீட்டை தனது கணவன் ஓவியம் வரைகிற அறைக்கு அழைத்து வருகிறாள். அறையின் வாசலில் அவளை நிறுத்தி, எந்தப் பொருளையும் கலைத்து விடாமல் சுத்தம் செய்யுமாறு சொல்கிறாள். கிரீட் ஆவலுடன் உள்ளே செல்கிறாள்.  எஜமானிக்கும் அவளது மூத்த மகளுக்கும்  அறையின் உள்ளே இருப்பதை காணும் ஆவல் இருப்பினும் அவர்கள் உள்ளே செல்லாமல் அறையின் வாசலிலேயே நிற்கின்றனர். அவர்கள் போனதும் அறையை சுற்றிப் பார்க்கும் கிரீட், ஓவியப் பலகையில் மீது ஓவியம் ஒன்று வரையப்பட்டு வைக்கப்பட்டிருப்பதைப் காண்கிறாள். அந்த ஓவியத்தைப் பார்வையிடும் நேரத்தில் திடீரென அங்கு வருகை தரும் வீட்டு எஜமானியின் அம்மாவான ஒரு வயதான பெண்மணியினைக் கண்டு திடுக்கிட்டு விடுகிறாள். ‘அது  முடிவதற்கு இன்னும் மூன்று மாத காலம் ஆகும்…’என்கிறாள் அந்த வயதான பெண் எந்தத் தொடர்புமின்றி. கிரீட் அமைதியாக நிற்கிறாள். ‘சும்மா பார்த்துக் கொண்டிருப்பதற்காக உனக்கு சம்பளம் தரவில்லை… வேலையைப் பார்’ என்று அதட்டிவிட்டு செல்கிறாள்.

அடுத்த நாள் வழக்கமாக தான் இறைச்சி வாங்குகிறக் கடைக்கு கிரீட்டினை அழைத்துச் செல்கிறாள் டான்னக்கி. அந்தக் கடையில் பீட்டர் என்கிற இளைஞன் வேலை செய்கிறான்.

அன்றைய இரவு கிரீட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது எஜமானியும் அவளது கணவரான ஓவியர் வெர்மியரும் வாக்குவாதம் செய்வதைக் கேட்கிறாள். வெர்மியர் வரைந்து முடிக்கப் போகிற ஓவியத்தைக் கொண்டு தான்  அந்த வீட்டின் பொருளாதாரம் இருக்கிறது என்பது அவ்வாக்குவாதத்தின் மூலம் தெரிய வருகிறது. வெர்மியரின் மனைவி ஓவியத்தை சீக்கிரமாக வரையச் சொல்லி அவரை வற்புறுத்துகிறாள்.

‘ஒரு வருட காலம் நகைகளை விற்றுத் தான் சமாளித்தார்கள். அந்த கோபத்தில் ஒருதடவை வெர்மியரின் ஒரு ஓவியத்தை அழிக்கப் போய்விட்டாள் எஜமானி. அன்றிலிருந்து வெர்மியர் தன மனைவியை ஓவியம் வரைகிற அறைக்குள் வருவதற்கு தடை விதித்து விட்டார்’ என்கிறாள் டான்னக்கி.

வந்ததில் இருந்து தென்படாமல் இருந்த ஓவியர் வெர்மியரை ஒருநாள் சந்திக்கிறாள் க்ரீட். அவரைக் கண்டு மரியாதையுடன் நிற்கும், அவளிடம் அவர் ஒன்றும் பேசாமல் சென்று விடுகிறார்.

அன்றைய இரவு எஜமானிக்கு பிரசவவலி ஏற்பட்டு மறுநாள் காலையில் குழந்தையும் பிறக்கிறது. எஜமானியின் அம்மா, க்ரீட்டிடம் ஒரு கடிதத்தினைக் கொடுத்து வெர்மியரின் ஆதரவாளரும், அவருடைய ஓவியங்களைத் தொடர்ந்து வாங்கிக் கொள்பவருமான பீட்டர் வான் ருஜிவனிடம் கொடுக்கும்படி கூறுகிறாள்.

பீட்டர் வான் ருஜிவன் வயதானவராகவும், கம்பீரம் கொண்டவராகவும், செழிப்பு மிகுந்தவராகவும் காணப்படுகிறார். தன்னை சந்திக்கும் க்ரீட்டிடம் குழந்தைப் பிறந்ததற்காகவும், புதிய ஓவியத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருப்பதைத் தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். அத்துடன் வெர்மியரின் ஓவியத் திறன் குறித்து பாராட்டி தன்னை வெர்மியர் வரைந்த ஒரு ஓவியத்தினையும் அவளிடம் காட்டுகிறார். அதில் அவருடன் உள்ள பெண்ணைப் பற்றி அவர் சொன்ன வெளிப்படையான கருத்துக்கள் க்ரீட்டை தர்மசங்கடப்படுத்துகின்றன.

வெர்மியரின் வீட்டு விருந்து தயாரிப்பில் க்ரீட் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது டான்னக்கி அந்த வீட்டினைக் குறித்த தகவல்களை அவளுக்குக் கூறுகிறாள். அவள்மூலம் பீட்டர் வான் ருஜிவன் அனுப்பிய பெண் தான் இந்த வீட்டின் எஜமானி என்பதும், அவளை வைத்து வெர்மியர் படம் வரைவதற்குள்ளாகவே இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டு விட்டதெனவும் , பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் அவளுக்குத் தெரியவருகிறது.

விருந்து துவங்குகிறது. வெர்மியரின் புதிய ஓவியத்தினை எஜமானியின் அம்மா அறிமுகப்படுத்துகிறாள். பீட்டர் வான் ருஜிவனுக்கு அந்த ஓவியம் மிகவும் பிடித்துவிடுகிறது. இதனால் குடும்பம் மகிழ்வடைகிறது. தங்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதால் அவரின் மனம் கோணக் கூடாது என்பதில் வெர்மியர் குடும்பத்தினர் கவனமாக இருக்கின்றனர். அவர்களின் உரையாடல்களில் ஆர்வம் இன்றி விருந்து முழுவதும் அமைதியாகவே இருக்கிறார் வெர்மியர்.

இதற்கிடையில் இறைச்சி கடை ஒன்றில்  வேலை செய்யும் பீட்டர் அங்கு வரும் க்ரீட்டை நேசிக்கத் துவங்குகிறான். அவளை சந்திக்கும் ஒவ்வொரு கணத்திலும், ‘நீ எனக்காக வைத்திருக்கும் புன்னகையைத் தா’ எனக் கேட்பான். மற்றொரு சந்தர்ப்பத்தில் எப்போதும் மூடி இருக்கும் அவள் கூந்தல் என்ன நிறம், எத்தனை நீளமானது என்றெல்லாம் கேட்பான். அவனுடைய நேசம் பரிசுத்தமாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கிறது.

மறுநாள் ஓவிய அறையை சுத்தம் செய்யப் போகும் கிரிட் , எஜமானியின் அறைக்குச் சென்று ஓவிய அறையின் ஜன்னல்களைத் துடைப்பதற்கு  அனுமதி வேண்டுகிறாள். ‘அந்த அறையைப் பற்றி ஏன் என்னிடம் கேட்கிறாய்? எதுவேண்டுமானாலும் செய்து கொள்’ என்கிறாள் எஜமானி விரக்தியாக. ‘ஜன்னலைத் துடைத்தால் லைட்டிங் மாறி விடுமே…’ என்கிறாள் க்ரீட். அவளிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத எஜமானியும், அவளது அம்மாவும் ஒருவரை ஒருவர் புதிராகப் பார்த்துக் கொள்கின்றனர். எஜமானி சுத்தம் செய்ய உத்தரவிடுகிறாள்.

க்ரீட் ஜன்னலைத் துடைக்க நேர்கையில் அவளின் செய்கைகளை  தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் வெர்மியர். ஒரு தூண்டுதல் போல அவளிடம் நெருங்கிவரும் அவர் ,‘ஜன்னல் பக்கத்தில் அப்படியே நில்லு’’ என்கிறார். அவள் தயங்கியபடி நிற்க, பார்வையின் வெகு நேரத்திற்குப்  பிறகு அவளைப் போக அனுமதிக்கிறார்.

அவள் நின்றுகொண்டிருந்த அந்த கோணத்தை வைத்து புதியதாக ஒரு ஓவியத்தினை வரைய வெர்மியர் முடிவு செய்கிறார். இந்த விஷயத்தை எஜமானியின் அம்மா க்ரீட்டிடம் சொல்கிறாள். தனது மருமகன் உடனே அடுத்த ஓவியத்திற்கான கருவை முடிவு செய்தததில் மிகுந்த சந்தோசம்  அவளுக்கு. ஒவ்வொரு நாளாக ஓவியம் தன் வடிவத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. சுத்தம் செய்ய வரும்போதெல்லாம் ஓவியத்தைப் அருகில் இருந்து பார்க்கிறாள் கிரீட். அவளுடைய பகடற்ற ஆர்வம் வெர்மியரை ஈர்க்கிறது. நிறத்தைக் கலக்குவதற்கும், புதிய நிறங்களை உருவாக்குவதற்கும் கூட அவர் அவளுக்கு சொல்லித் தருகிறார். வெர்மியரின் நூதனமான கேள்விகளுக்கு கிரீட்டிடமிருந்து வரும் புத்திசாலித்தனமான பதில்கள் வெர்மியரைக் கவர்ந்து விடுகிறது. ஆரம்பத்தில் வெர்மியரிடம் இருந்த கூச்சமும், பயமும் நீங்கி தன்னுடைய யோசனைகளையும் கிரீட் சில சமயங்களில் பகிர்ந்து கொள்ள அதனை ஏற்றுக் கொள்கிறார் வெர்மியர்.

மிக விரைவிலேயே வெர்மியரின் ஓவியம் நிறைவு பெறுகிறது. அதனைக் கொண்டாடும் விதமாகவும், புதிய ஓவியத்தைக் காண்பிக்கப்படுவதற்காகவும் மீண்டும் பீட்டர் வான் ருஜிவன் வரவழைக்கப்படுகிறார். இந்த முறை விருந்தில் அனைவரின் முன்பும் வைத்து கிரீட்டினைப் பிடித்து தன்னோடு அணைத்துக் கொண்டு, ‘என்னை க்ரீட்டுடன் சேர்த்து ஒரு ஓவியம் வரைய வேண்டும். அந்த நேரங்களில் கிரீட் எனக்குத் துணையாக என்னுடனே இருக்க வேண்டும்’ என்கிறார் கள்ள சிரிப்புடன். வெர்மியருக்கு கோபம் வருகிறது. அடக்கிக் கொள்கிறார். யாராலும் பதில் சொல்ல முடியாமல் போக கிரீட் ஒன்றும் பேச முடியாமல் கலங்கி நிற்கிறாள்.

மறுநாள் வெர்மியர் அவளுக்கு சந்தோஷச் செய்தி ஒன்றினைச் சொல்கிறார். தான் பீட்டர் வான் ருஜிவனுக்கு அவளுடைய ஒரு படத்தை வரைந்துத் தருவதாக வாக்குறுதி தந்திருப்பதாக சொல்கிறார். வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்கிறாள் கிரீட். அந்த ஓவியத்திற்காக தன்னுடைய மனைவியின் முத்துக் கம்மலை அணிந்துக் கொள்ளும்படி சொல்கிறார். தனது நகைகளின் மேல் மிகவும் பிடிப்புடன் இருக்கும்  எஜமானிக்குத் இது தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் எனப் பயப்படுகிறாள் கிரீட். எப்படியாவது ஓவியம் மூலம் பணம் சேர்க்க வேண்டும் என நினைக்கும் எஜமானியின் அம்மா தனது மகளுக்குத் தெரியாமல் கம்மலைப் போட்டுக் கொள்ளும்படி வற்புறுத்துகிறாள். காது குத்தப்படாத க்ரீட்டுக்கு காதினை துளையிடுகிறார் வெர்மியர். சந்தர்ப்பங்கள் சம்பவங்கள் காரணமாக அவள் மேல் அவருக்கு மேலும் கரிசனம் ஏற்படுகிறது.

காதில் முத்துக் கம்மலோடு இதுக்கும் க்ரீட்டினை வரையத் தொடங்குகிறார் வெர்மியர். இந்த விஷயம் எஜமானிக்குத் தெரிந்து விட நேர்கிறது. அவள் கொதித்துப் போகிறாள். வெர்மியரிடம் சண்டைப் போடுகிறாள். அவள் அம்மாவின் சமாதானம் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவளுக்கு இல்லை. தன்னுடைய கம்மலை தன கணவன் வேறொரு பெண்ணுக்குத் தந்திருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் போகிறது. தனது உரிமையை ஏதோ ஒரு வகையில் கிரீட் பறித்துக் கொண்டு விட்டதாகவே அவள் நினைக்கிறாள். க்ரீட்டினை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறாள். க்ரீட்டும் அங்கிருந்து வெளியே செல்கிறாள்.

தன் முன்பில் ஒரு அற்புதமாக வரையப்பட்டிருக்கும் க்ரீட்டின் ஓவியத்தைப் பார்த்தபடி  அமர்ந்திருக்கிறார் பீட்டர் வான் ருஜிவன்.

அதே சமயம் தன்னுடைய வீட்டில் இருக்கும் க்ரீட்டைத் தேடி வந்து டான்னக்கி எதையோ கொடுக்க, அதைப் பிரித்துப் பார்க்கிறாள் கிரீட். அதற்குள் அழகான அந்த முத்துக் கம்மல்கள் இருக்கின்றன. கிரீட்டின் மனம் ததும்புகிறது. அதனையே விடாது பார்த்துக் கொண்டிருக்கிறாள் கிரீட்.

வெர்மியருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த அந்த ஓவியத்தை காட்டியபடி படமும் முடிவடைகிறது.

ஒரு நீரோட்டம் போல அமைந்திருக்கிற கதையில் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி வந்து போகிறார்கள் கதாபாத்திரங்கள். தனது கணவன் வரையும் ஓவியத்தை வைத்து தான் தானும் தன் குழந்தைகளும் பிழைததாக வேண்டுமென்கிற சூழலில் தனது கணவனின் கவனம் க்ரீட்டிடம் செல்லும்போது இயல்பாகவே வருகிற சுயபாதுகாப்பின்மையும், தன்னிரக்கமும் வெர்மியரின் மனைவியை கோபம் கொள்ள செய்கிறது. விளையாட்டு மும்முரத்தில் சத்தம்போட்டு விடுகிற தங்களை அதட்டும் அப்பாவை கிட்டத்தட்ட ஒரு எதிரியாகவே பாவிக்கிறாள் வெர்மியரின் மூத்தப் பெண். அந்த வீட்டில் நடக்கும் எல்லா விஷயங்களையும் அவள் கவனிக்கிறாள். தனது மருமகனின் படைப்புகளை பணமாக மாற்றும் ‘வெற்று’’ படங்களாகவே நினைக்கிறாள் எஜமானியின் அம்மா. இவர்களுக்கு நடுவில் தனது அப்பாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஓவிய ரசனையோடு  பீட்டர் வான் ருஜிவன் தரும் தொல்லைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் முயற்சி செய்து கடைசில் எந்தத் தவறும் செய்யாமலே தண்டிக்கப்பட்டவளாக கிரீட் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

‘A Girl with Pearl ring ‘ எனப் பெயரிடப்பட்ட இந்த ஓவியத்திற்கு பிண்ணனியாக சொல்லப்படுகிற இந்தக் கதையை இயக்கியவர் பீட்டர் வெப்பர். இந்த ஓவியத்தின் அசலை இன்றும் தெற்கு ஹாலாந்தில் ஒரு கண்காட்சியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

ஒரு ஓவியம் உருவான கதை என்பதை விட அதற்காக தன்னைத் தயார்செய்துகொண்டு வேதனையும் அவமானமும் பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணுடைய கதையாகவே நம்மைப் பாதிக்கிறது.

(நான் எழுதிய ‘பெண்ணென்று சொல்வேன்’ புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரை)

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Nawin Seetharaman
Nawin Seetharaman
4 days ago

அற்புதம் 👏👏 வாழ்த்துகள் 💐