லப்பர் பந்து

2
576

லப்பர் பந்து பார்த்தேன். எனக்குப் படம் பிடித்திருந்தது. ஒரு படத்தினைப் பார்ப்பதற்கு முன்பு எந்த விமர்சனத்தையும் படித்துப் பார்ப்பதில்லை. படத்தின் ஒரு வரி கதை கூட எனக்குத் தெரிந்திருக்க வேண்டாம் என்று நினைப்பேன். இந்தப் படம் கிரிக்கெட்டினை மையமாகக் கொண்ட படம் என்பது மட்டும் தெரியும். சில மாதங்களுக்கு முன்பு ‘ப்ளூ ஸ்டார்’ படம் வந்திருந்தது. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு சென்னை 26. எல்லா விளையாட்டுப் படங்களுக்கும் உண்டான பொதுத் தன்மை என்பது ஜெயிப்பது, தோற்பது தான். யார் ஜெயிக்க வேண்டும் என இயக்குநர் முடிவு செய்கிறாரோ , அவர் தான் ஜெயிக்க வேண்டும் என பார்வையாளர்களையும் முடிவெடுக்க வைத்துவிடுவார். இந்தப் படத்தில் இது சற்று மாறுபாடு கொண்டுள்ளது. எவரெல்லாம் ஜெயிக்க வேண்டும் என இயக்குநருக்கு ஒரு தீர்மானம் இருந்திருக்கிறது அதே போல எதில் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்கிற தீர்மானமும். இரண்டையும் ஒரு நல்ல திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்.  எங்கும் தொய்வில்லாமல் காட்சிகள் செல்வதால் கடைசி வரைக்கும் ரசிக்க  முடிகிற திரைப்படம் இது.

எங்கள் ஊரில் மாலை நேரங்களில் அறுவடை முடிந்த வயக்காடுகளில் கிரிக்கெட் விளையாடுவார்கள். எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நின்று பார்த்தால், தனித்தனி குழுவாக வயக்காடு முழுவதும் பையன்கள் ஆடிக் கொண்டிருப்பது தெரியும். அறுவடைக் காலங்களில் ஆற்றங்கரை ஓரம் ஆடுவார்கள். ஒருமுறை நெல்லையப்பர் கோயிலுக்குள் சில பையன்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததையும் பார்த்திருக்கிறேன். கிரிக்கெட் என்பது ஆண்களுக்கான ஒரு உலகம். அவர்கள் அங்கு சண்டையிட்டுக் கொள்வார்கள். கட்டிப் பிரண்டு உருளுவார்கள், பெட் கட்டுவார்கள், சீண்டிக் கொள்வார்கள்..இவையெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டே தெருக்களில் கடந்து போகும்போதும், நண்பர்கள் எங்களிடம் சொல்லும்போதும் தெரிந்து கொண்டவை. சில நேரங்களில் விளையாட்டு கைகலப்பிலும் முடிந்திருக்கிறது. காவல் நிலையம் வரை சென்று பஞ்சாயத்து முடித்துக் கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இப்படி ஒரு விளையாட்டை ஏன் விளையாட வேண்டும் என்று அப்போதெல்லாம் தோன்றும், இந்தப் படத்தில் ‘கெத்து’ பூமாலையின் மனைவி யசோதைக்குத் தோன்றுவதைப் போலவே. அவள் கடைசி காட்சி வரை கிரிக்கெட்டினை வெறுப்பவளாகவே இருக்கிறாள். எப்படி அரசியலில், ரசிகர் மன்றங்களில் ஈடுபட்டு வாழ்க்கையின் அங்கமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அது போலவே கிரிக்கெட்டுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களுக்கு ஊருக்கு ஊர் உண்டு.  அவர்களுக்கு ‘டெடிகேட்’ செய்தப் படமாகவும் இதனைப் பார்க்கலாம்.

சனி ஞாயிறுகளில் வீடுகளில் தங்காமல் வெயில் குடித்து கிரிக்கெட் மைதானத்தில் பழியாய்க் கிடந்த பலருக்கும் இந்தப் படம் பல நினைவுகளைத் தந்திருக்கும்.

இரு நபர்களின் ஈகோ தான் கதையை நகர்த்திச் செல்கிறது. அதுவும் ஒருகட்டத்தில் நின்று, அது பூமாலையின் ஈகோவாக மட்டுமே நிற்கிறது. இந்தப் படத்தில் வில்லன் என்று தனியாக யாரும் இல்லை. ஆனால், வார்த்தைகள் தான் வில்லன்கள். சாதரணமாய் சொல்லப்படும் வார்த்தைகள் ஒவ்வொருவரின் ஈகோவையும் கிளறிவிடுகின்றன. “மூத்திரச் சந்துல பேசிக்கிட்டு இருக்கிற சின்னப்பையன்க..”, “என்ன போன்லயா பேசற..ஹலோனு மரியாதை இல்லாம”, “விருந்தாளி”, “வாடகை சைக்கிள்” , “உன்னை விட நல்லா விளையாடுவான்பா” – இதுபோன்ற வார்த்தைகளே கதையை அடுத்தடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்றன. ஈகோவும், மனதில் காயமும் கொண்ட ஒருவருக்கு இது போன்ற வார்த்தைகளே வெறுப்பை ஏற்படுத்த் போதுமானதாக இருக்கின்றன. இதனைக் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

மற்றொரு அம்சமாக, இந்தப் படத்தில் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஜாலி கிரிக்கெட் அணியில் இருந்து பிரிந்து தனியாக ஒரு கிரிக்கெட் அணி அமைவது என்பது கதையின் முக்கியக் கட்டம். அடுத்த இடத்துக்கு எடுத்துச் செல்லும் காட்சி அது. அது எப்படி முடிவாகிறது என்பது முக்கியம். அந்தக் காட்சிக்கு முந்தைய காட்சியில் பாலசரவணனும், காளி வெங்கட்டும் பேசிக்கொள்வார்கள். “தம்பின்னு சொல்லு..அது என்ன தம்பி மாதிரின்னு….வெங்கடேஷ் உனக்கு தம்பி..அன்பு உனக்கு தம்பி மாதிரி” என்று பாலசரவணன் பேசும் அந்தக் காட்சியில் முக்கிய அரசியல் வசனமும் உண்டு. ஒரு காட்சி மிக முக்கியமான வசனத்துடன் அமைந்தால், அதை கதாநாயகன் தான் பேச வேண்டும் என்கிற போக்கையே மாற்றியமைத்திருப்பது பாராட்டுக்குரியது.  ஏனெனில் இதற்குப் பிறகு தான் ஜாலி டீமில் அன்பினை சேர்க்க வேண்டும் என்று தைரியமாக காளிவெங்கட் தன தம்பியிடம் பேசுகிறார். இங்கு வெங்கடேஷ் சொந்தத் தம்பி அல்ல என்றே நினைக்கிறேன்..சொந்த ஜாதியால் தம்பி என்று உணரலாம். அதைத் தான் பால சரவணன் சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டு இடங்களில் ‘இன்டர்கட்’ சரியாக வேலை செய்திருக்கின்றன. பெண் பார்க்க அன்பு வீட்டார் துர்கா வீட்டுக்கு செல்லும்போதும், மேட்ச் நடக்கும் காட்சியைக் காட்டியதும், அன்பும், பூமாலையும் ஒரே மேட்சில் ஆடுகிறபோது பூமாலையின் மனைவியைத் தேடி அவரது வீட்டுக்கு வரும் பூமாலையின் அம்மாவைக் காட்டிய இடமும்..நேர்த்தியாக கோர்க்கப்பட்ட இடங்கள்.

ஒவ்வொருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் பலமே வசனங்கள் தான். அதை உணர்ந்து வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. இன்றைய நிலையில் தனிழ் சினிமாவுக்கு நட்சத்திரங்களை விட நடிகர்கள் தான் தேவை. தினேஷ் சரியாக அதை உள்வாங்கி செய்திருக்கிறார். சுருக்கென்று தைக்கிற கோபமும், உள்ளுக்குள் புகைச்சலை வைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதும் என அசத்தியிருக்கிறார். ஹரிஷ் கல்யாணுக்கு சரியான படம் இது. பாலசரவணன், காளி வெங்கட், ஜென்சன், தேவதர்ஷினி , கீதா கைலாசம் எல்லாரையுமே தனித்தனியாக குறிப்பிட வேண்டும். வெங்கடேஷ் கதாபாத்திரத்தில் வருகிற நடிகரின் பெயர் தெரியவில்லை..அத்தனை இயல்பு. தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரர் போல களமிறங்கி கடைசி காட்சியில் வந்த நின்று ஜாலி தீமை ஜெயிக்க வைத்த பையன்..என கதாபாத்திரங்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டார்கள்.

இதுவரை வந்த அனேக விளையாட்டுத் துறையைப் பற்றிய படங்களிலும் சாதாரண நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றம் அடுத்ததாக கடைசி வரி என்பது ஒரு ஒற்றுமையை சொல்வதாகவே இருக்கும். இந்தப் படத்திலும் அதே தான். காலனியில் இருந்து வருகிறவர்களை விளையாட அனுமதிக்காத ஒரு டீமில், காலனியில் இருந்து விளையாட வந்த பையன் அடித்து ஆடும்போது எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேர்வார்கள். விளையாட்டுக்கு அந்த சக்தி உண்டு. INVICTUS என்றொரு படம். நெல்சன் மண்டேலா தேன் ஆப்ரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றபின் இன வெறியை அழிப்பதற்காக விளையாட்டையே கையில் எடுப்பார். விளையாட்டு என்பது எல்லாருக்கும் பொதுவானது என்பதைச் சொன்ன படங்களே ஜெயித்திருக்கிறது. இந்தப் படத்திலும் தான்.

பிறகு விஜயகாந்தைக் கொண்டாடிய விதம். அருமை.

கடைசி காட்சிகள் முழுக்கவும் வர்ணனையாளர் அதகளம் செய்திருந்தார். வேறெந்த வசனங்களும் இல்லாமல் அவர் குரலிலே பரபரப்பையும் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த ரிக்கி பெயிண்டிங்..செம.

சில உறுத்தல்கள் உண்டு. பெண் கதாபாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. ‘கெத்து’ பூமாலையை விட அவரது மனைவியே கெத்தாக காட்டப்படுகிறார். ஸ்வாசிகா சிறப்பு செய்திருக்கிறார். துர்கா கதாபாத்திரமும் நன்றாக வந்திருக்கிறது. சஞ்சனா அருமையாக நடித்திருக்கிறார். காளி வெங்கட்டின் மகள் கதாபத்திரத்தில் நடித்த அகிலாவை பிரமாதமாக அறிமுகம் செய்கிறார்கள். பெண்ணும் களத்தில் இறங்கி ஆடவேண்டும் என்கிறார்கள். ஆனால அந்த ஒரு காட்சியில் மட்டும் அந்தப் பெண் அடித்து ஆட்டுகிறார். “யப்பா..இந்தப் பொண்ணு ஸ்ட்ரெயிட்டுல ஆடுதேப்பா..அவ்வளவு நல்ல ஆடற பொண்ணாப்பா” என்று வியந்து சொல்லப்பட்ட பெண், அடுத்தடுத்து உள்ள ஆட்டங்களில் அப்படியே இறங்கி சோர்ந்து விடுகிறா. பெண்ணியம் உயர்த்திக் காட்டப்பட வேண்டும் என்று ஒட்டவைத்தது போல இருந்தது.

அதே போல, ஜாலி டீம் ஜெயித்தது அந்தக் காலனி பையனால் என்பது தான் யதார்த்தம். ஆனால், அன்பு விட்டுக் கொடுத்து ஜெயித்தார்கள் என்பது கதையின் நாயகனை உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள். யாராக இருந்தாலும் விட்டுக் கொடுக்கத் தேவையில்லாமல், திறமையினால் முன்னேறுகிறோம் என்று சொல்லக்கூடிய இடத்தில் அந்த விட்டுக் கொடுத்தல் காட்சி உறுத்தல் தான். அன்பு டீம் தோற்றது யாரிடம் என்பது தானே முக்கியமாக இருந்திருக்க வேண்டும். அன்பு போல வாய்ப்பு மறுக்கபபட்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது அடித்து ஆடி நிற்கிறபோது அங்கு தோற்றாலும் பெருமையாக அன்பு ஏற்றுக்கொண்டிருந்தால், அது இன்னும் பல படிகளுக்கு அந்தக் கதாபாத்திரத்தையும் படத்தையும் தூக்கி நிறுத்தியிருக்கும். விட்டுக் கொடுத்தல் என்பது சறுக்கலாகவேத் தெரிந்தது.

தொய்வில்லாத வசனங்கள் கொண்ட திரைக்கதை, கடைசி வரை நம்மை ரசிக்க வைக்கும் எதிர்பாராத காட்சிகள் என எனக்குப் பிடித்த படமாக இருந்தது லப்பர் பந்து.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Thilak
Thilak
20 days ago

அருமையான விமர்சனம்.
வெங்கடேஷ் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் TSK, கலக்கப்போவது யாரு Season 3யில் வின்னர். சரியான திரமையாளர்.
வசனங்களில் ஒரு முக்கியமான வசனம் பிரச்சினையைத் தீவிரப் படுத்தியது.. கெத்து மற்றும் அன்பு விளையாடும் முதல் போட்டியில் அன்பு Bowling கெத்து batting. அப்போது பாலை அடிக்காமல் விடவே பாலசரவணன் கூட்டுறதுக்கு விளக்குமாறு குடுங்கன்னு சொன்னதும் கெத்துவின் நண்பர் உச்ச கட்ட கோவம் கொண்டு ரியாக்ட் செய்வார். அது ஒரு முக்கியமான இடம்.

Jadeepa
Deepa
16 days ago
Reply to  Thilak

மிக்க நன்றி. நீங்கள் சொல்லும் காட்சியில் தான் பிரச்சினையின் தீவிர மே தொடங்கும்