ஒரே ஒரு திரைப்படம். அது காலங்கள் கடந்தும் பேசப்படுகிறது. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க லைப்ரரி காங்கிரசில் இருந்த அதன் பிரதி டிஜிட்டல்மயமாக்கப்பட்டு மீண்டும் பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டது. எந்த ஒரு ஆப்ரிக்க அமெரிக்க திரைப்பட இயக்குனரிடம் அவரை பாதித்த படங்கள் என்று கேட்டால் அவர்கள் இந்தப் படத்தினை சொல்வார்கள். Daughter of the Dust என்பது படத்தின் பெயர். இயக்கியவர் ஜூலி டாஷ். முழு நீளத் திரைப்படத்தை இயக்கிய முதல் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்மணி இவர். Daughter of the Dust படத்திற்கு முன்பு டீவி தொடர்களை எழுதியும் இயக்கியும் வந்தார். குறும்படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இப்போதும் அமெரிக்கர்களுக்கு ஜூலி டாஷ் என்றால் நினைவில் இருப்பது இந்தத் திரைப்படம் தான்.
இந்தப் படம் கடந்தகாலத்தின் ஒரு அழிக்கவே முடியாத பகுதி. ஒரு இயக்குனராக மனதின் ஆழத்தில் இருந்து ஒரு படத்தினை எதற்காக இயக்குகிறோம் என்று தெரிந்து இயக்கும்போது வெளி வந்த உத்வேகமான படைப்பு.
இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்பு சற்று அதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. படத்தின் களம் ஒரு தீவு. ஜார்ஜியா பிரதேசத்தில் உள்ள செயின்ட் ஹெலேனா என்பது தீவின் பெயர். 1903ஆம் ஆண்டு இந்தத் தீவில் நடந்த ஒரு நிகழ்வினைக் கொண்டே கதை எழுதப்பட்டுள்ளது. இதோடு மற்றொரு இடம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் பெயர் இபோ லேன்டிங். இன்று இந்த இடம் குறித்தும் அங்கு நடந்த மறக்க முடியாத சம்பவம் குறித்தும் ஜார்ஜியா நகரப் பள்ளிகளில் கற்றுத் தருகிறார்கள். இது செயின்ட் ஹெலினா தீவுக்கு அருகில் உள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து 1803 ஆம் வருடம் ஆப்ரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் இக்பூ எனப்படும் நைஜிரியப் பழங்கூடியினரும் உண்டு. இவர்களைக் கப்பலில் அழைத்து வரும் வழியில் இந்தப் பழங்குடியினர் ஒன்றிணைந்து கப்பலைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் தங்களின் விடுதலையைப் பெற முடியவில்லை. இவர்களை சங்கிலியால் பிணைத்து ஒரு தீவில் இறக்க முயற்சிக்கும்போது அனைவருமே இணைந்து சங்கிலிகளுடன் கடலில் இறங்கியிருக்கிறார்கள். அதன் பின் நடந்ததை ஆப்ரிக்க அமெரிக்க நாட்டுப்புறப் பாடல்கள் சாகசமாய் வர்ணிக்கின்றன. இவர்கள் இறங்கியதும் கடலே அவர்களுக்கு வழிவிட்டது என்கின்றன பாடல்கள். இன்றும் கூட இந்த இன மக்கள் தீவிரமாக நம்புகிற ஒரு நிகழ்வு தங்கள் மூதாதையர் கடலில் நடந்தார்கள் என்பது. ஆனால் இறங்கிய அனைவருமே கடலுக்குள் மறைந்து போனதாக நேரில் பார்த்த ஆப்ரிக்க அடிமை விற்பனையாளர்கள் தங்களது குறிப்பில் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் சிலருடைய சடலங்களையும் மீட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டவர்களைக் கண்டதும் சுட்டுக் கொள்ளும்படி உத்தரவு இடப்பட்டிருந்தது. கப்பலில் எஞ்சிய மற்ற இக்பூ பழங்குடியினரை ஒரு தீவில் இறக்கியிருக்கிறார்கள். அந்தத் தீவு இக்பூ லாண்டிங் பிரதேசம் என்றே பெயர் பெற்ற்றிருக்கிறது. இந்தப் பிரதேசம் இன்று வரலாற்று சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.
அங்கிருந்து அருகில் உள்ள தீவான செயின்ட் ஹெலினாவுக்கு இக்பூ அடிமைகளைக் கொண்டுவருகின்றனர். அந்தத் தீவில் இண்டிகோ மை தயாரிக்கும், சாயம் பூசும் வேலைகளை அவர்களுக்குத் தந்திருக்கிறார்கள். நாள் முழுவதும் சாயங்களை அலசி வெடித்துப் போன கைகளோடு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னர் , எவரும் எங்கும் செல்ல முடியும் என்கிற நிலை வந்ததும் அந்த தீவில் வாழ்ந்த சிலர் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவின் வடக்குப் பகுதிக்கு செல்ல முடிவு செய்கின்றனர். இவர்கள் யாவரும் பேஜென்ட் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இதன் பின்னணியில் உருவாக்கப்பட்டது தான் Daughter of the Dust படம். இந்தப் படத்தில் இந்தத் தீவில் இருந்து வெளியேறி அமெரிக்காவின் வடபகுதிக்கு செல்ல வேண்டும் என்று சில குடும்பங்கள் முடிவு செய்கின்றன. அதற்கான பிரிவு உபசார விருந்து தீவில் நடைபெறுகிறது. இந்த விருந்தில் கலந்து கொள்ள எல்லோ மேரி என்கிற பேஜென்ட் இனப் பெண்ணும், அவரது காதலியும் தீவுக்கு வருகிறார்கள். இவர்களுடன் ஏற்கனவே நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வயோலா பேஜென்ட் என்கிறவரும் அவருடன் இந்தத் தீவை புகைப்படமெடுக்க வரும் ஸ்நெட் என்பவரும் வருகிறார்கள். கிறித்தவ மதத்துக்கு மாறியிருக்கும் வயோலாவுக்கு எல்லோ மேரியைப் பார்த்ததும் பிடிக்காமல் போகிறது. எல்லோ மேரி ஓரினச் சேர்க்கையாளர் என்பதும் அவள் பாலியல் தொழில் செய்கிறாள் என்பதும் காரணமாக மாறுகிறது.
தீவில் நானா என்கிற வயதான் மூதாட்டி இருக்கிறார். இந்தக் கதையைத் தாங்கும் தூண் இவர். தன்னுடைய மூதாதையர்கள் மீதும் தங்களது வேர்களின் மீதும் கடும் பற்றுக் கொண்டவர். முன்னோர் வழிபாட்டினையும் சடங்களையும் விடாமல் கடைபிடிப்பவர். இவருக்குத் தன் இனமக்கள் தனது தீவில் இருந்து கிளம்பிப் போவதில் இஷ்டமில்லை. ஆனால் தடுக்கவும் முடியாமல் இருக்கிறார்.
மற்றொரு தம்பிதியினர் யூலா மற்றும் ஏலி. யூலா கர்ப்பமாக இருக்கிறார். அந்தத் தீவில் இருந்த வெள்ளையர் ஒருவர் யூலாவைப் பாலியல் ரீதியாக தாக்கியிருப்பார். அதனால் பிறக்கப்போகும் குழந்தை தன்னுடையது தானா என்கிற குழப்பம் ஏலிக்கு இருக்கும்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவும், கதையும் உண்டு. இவர்களில் கடைசியாக யார் தீவில் இருந்து வெளியேறுகிறார்கள் யார் அங்கு தங்குகிறார்கள் என்பதே படத்தின் கதை . ஆனாலும் வெறும் கதை சொல்லலாக இல்லாமல் பெரும் வரலாற்றையும், ஒரு இனத்தின் அத்தனை வெளிப்பாடுகளையும் சொன்ன விதம் தான் படத்தினை இன்றளவும் பேச வைத்திருக்கிறது.
எந்தவொரு திரைக்கதை வடிவத்துக்குள்ளும் அடங்காத ஒரு பெரும் பாய்ச்சல் இந்தப் படத்தின் கதை சொல்லும் முறைக்கு இருக்கிறது.
படத்தின் பின்னணியில் அங்கங்கே பின்னணிக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதில் ஒன்று யூலாவுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் குரல், மற்றொன்று நானாவின் குரல். பிறக்கப்போகும் குழந்தை எதிர்காலத்தில் என்ன நடந்தது என்பதையும், நானாவின் குரல் மறைந்து போன காலத்தின் நினைவுகளையும், கூற கதை நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும்.
ஜூலி டாஷ் ஆய்வில் கவனம் செலுத்துபவர். ஒரு தீவு உருவானதையும், அதன் மக்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதுமான நூற்றாண்டு கால வாழ்க்கையினை அவர் சொல்லியிருக்கிறார். அதை நேர்கோட்டில் சொல்லாமல் தேவைப்படும் இடங்களில் மட்டும் வசனங்களைக் கொண்டு வந்திருக்கிறார். பேஜன்ட் இன மக்களான இவர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் பேஜன்ட் என்று சேர்த்துக் கொள்வதை பெருமையாகக் கருதுகிறார்கள். பேஜன்ட் இனத்தின் மூன்று தலைமுறையினரின் மனஓட்டங்களைப் பதிவு செய்கிறபோது எதையும் ஜூலி நியாயப்படுத்தவில்லை. இது சரி என்றும் தவறு என்றும் ஆய்வு செய்யவில்லை. எல்லாருக்குமே அவரவர் தரப்பு நியாங்களை சொல்ல இடமளித்திருக்கிறார். இந்தப் படம் வெளியானது 1991ஆம் ஆண்டு. கதை நடப்பது 1903ல். கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டு காலம் முன்னோக்கி சென்று இதைப் பதிவு செய்வது அத்தனை சாதாரணமானது அல்ல.
பல சடங்குகள், சைகை மொழியில் சண்டை செய்வது, வேர்களைப் பற்றிப் பேசுவது, அவர்களின் பாரம்பரிய மொழி போன்றவை புரியாவிட்டாலும் அதன் உணர்வு நம்மை வந்தடைகிறது. இந்த இன மக்களே காலப்போக்கில் மறந்து போனதை ஆய்வு மூலமாகத் தேடிக் கொண்டு வந்து தந்திருக்கிறார் ஜூலி.
“நானே முதலும், கடைசியும். நானே ஆராதிக்கவும் தூற்றவும் படுகிறேன். நான் விபச்சாரி, புனிதமானவளும் கூட. நான் ஒரு மனைவி, கன்னியும் தான். நான் தரிசு; பல மகள்கள் எனக்குண்டு. நான் மௌனம். உங்களால் என்னை புரிந்து கொள்ள முடியாது. நானே எனது பெயர்”
இப்படி ஒரு குரல் பின்னணியில் ஒலிக்கத் தொடங்குகிறது படம். இதனை பேசியவர் நானா என்பது தெரிகிறது. இந்தக் குரலின் அத்தனை அடையாளமாகவும் நானா இருக்கிறார். இந்தத் தீவினை விட்டு புது வாழ்க்கைத் தேடிப் போகும் ஒவ்வொருவரும் மூதாதையை மறந்து விடுவார்களோ என்கிற அவரது ஏக்கம் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுகிறது. “நம் உடலில் ஓடுவது சரிபாதி இந்த உப்பு நீர். நாம் இந்த உப்புக் காற்றால் ஆனவர்கள்” என்கிறார்.
நானா அற்புதமான கதாபாத்திரம். யூலா பாலியல் ரீதியாக பலவந்தம் செய்யப்பட்டதை பெரும் துக்கத்துடன் ஏலி நானாவிடம் சொல்லும்போது அவர் அதற்கு முன்பு தங்களின் இனம் கண்ட பெரும் வலியை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். அவர்களின் உறுதியில் இருந்தேன் நாம் இன்று வாழ்கிறோம் என்கிறார். ஆனால் ஏலியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கசப்புடனும் ஆவேசத்துடனும் ஏலியிடம் அவன் தீவில் இருந்து கிளம்பி வெள்ளை இன மக்களுடன் வாழப்போவது கொண்டுங்கனவு போல மாறப்போகிறது என்பதை மறைமுகமாக சொல்கிறாள். ஏலிக்கு இது கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இதே நானா தான் தனது வம்சாவழியினர் தீவில் இருந்து கிளம்பும் அன்று அவர்களுக்கு ஆசிர்வாதமும் செய்து அனுப்புகிறாள். அந்த நேரத்தில் நானா பேசும் ஒவ்வொன்றும் ஒரு முதுதாயின் வார்த்தைகள்.
எல்லோ மேரி தீவுக்குள் வந்ததும் அவளை எல்லோரும் ஒதுக்குகிறார்கள். அதை அவள் கம்பீரமாக எதிர்கொள்கிறாள். என்னுடைய வேரினைத் தேடி வந்தேன் என்கிறாள். அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் எது ‘வேசித்தனம்’ என்கிற கேள்வி இருக்கிறது. அலைகழிக்கப்பட்ட நாட்களை நினைவுகூருகிறாள். எல்லோ மேரிக்காக ஆதரவு தரும் ஒரே பெண்ணாக யூலா இருக்கிறாள். “எல்லோ மேரியை தூற்றுபவர்கள் என்னையும் தூற்றுங்கள்”: என்கிறாள். தீவுக்கு கடைசி விடைகொடுக்க வரும் எல்லோ மேரி நானாவுடன் அங்கேயே தங்குகிறாள். அவளது காதலி மட்டும் ஏக்கப் பார்வையுடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.
கடந்த காலத்தின் ஒரு சாட்சியாக இருக்கும் முஹம்மது பிலால் என்கிற முதியவர் மெதுவான குரலில் சொல்கிறார், “தண்ணீருக்குள் எங்கள் மூதாதையர் நடந்து போனதாக சொல்கிறார்கள். யாராலும் தண்ணீருக்குள் நடக்க முடியாது. அவர்கள் தணீருக்குள் மூழ்கினார்கள். திரும்ப எவரும் திரும்பவேயில்லை”. அதிகமும் பேசாத அவர் தன் மூதாதையரின் வார்த்தையாக சொல்வது “பெண்கள் மட்டுமே வாழ்க்கையின் இனிமையைத் தரமுடியும்.அவர்களை ஒருபோதும் கைவிடவேண்டாம் என்றார்கள். இது மட்டும் தான் அவர்கள் சொற்களில் இருந்து எனக்கு நினைவிருப்பது” என்கிறார்.
அழிந்து போன தங்களை தாய்மொழியை அறியாத ஆங்கிலத்தைப் பேசும் ஒரு இனம் எதைத் தீவில் இருந்து எடுத்துப் போவது, எதை விட்டுச் செல்வது என திணறுகிறது. “என்னிடமிருந்து எனது ஆவியை எடுத்துச் செல்லுங்கள்..அது உங்களுக்கு வழிகாட்டும்” என்கிறார் நானா. தான் மட்டுமே இனி எஞ்சி நிற்கப்போகும் பழமையின் சாட்சி என்பதால் இந்த வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. கிறித்தவத்தைத் தீவிரமாக பின்பற்றி மற்றவர்களையும் அதை நோக்கி ஈர்க்கும் வயோலா கூட இறுதியில் தன்னுடைய மூதாதைக் கடவுளர்களிடம் தஞ்சம் அடைகிறாள்.
புதுக் கடவுள், புது மதம், புது நிலம், புது மொழி, புது கடல் என புறப்படும் தனது விழுதுகளை நானா பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியோடு படம் நிறைவுபெறுகிறது.
இந்தப் படத்தினைப் பார்ப்பது என்பது ஒரு அனுபவமே. ஜூலியின் குறும்படங்களிலும். இந்தப் படத்திலும் ஒளிப்பதிவு வேறு ஒரு இடத்தினைப் பெற்றுவிடுகிறது. வண்ணங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார் ஜூலி. கடற்கரையில் ஸ்நெட் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் அதற்கு வைக்கப்பட்டிருக்கிற கோணங்களும் வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டிவிடுகிறது.
ஜூலி டாஷ் இரண்டு நாவல்களை எழுதியிருக்கிரா. ஒன்று இந்தத் திரைப்ப்[டம் எடுக்கபப்ட்டதன் பின்னணியை வைத்து ஒரு நாவல். அதன் பின் இங்கிருந்து கிளம்பிப் போனவர்கள் இருபது வருடங்களுக்குப் பிறகு எத்தகைய வாழ்க்கை வந்தார்கள் என்பது பற்றிய ஒரு நாவல்.
இதற்குப் பிறகு ஜூலி முழுநீளத் திரைப்படம் எதையும் இயக்கவில்லை. மீண்டும் தொலைகாட்சித் தொடர்கள், இசை ஆல்பங்கள் இவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் என்ன சொல் அவேண்டுமோ அதைச் சொல்கிறார். இவருடைய அத்தனை படைப்புகளுமே வரலாறினை ஆழப் புரிந்து கொண்டு வெளிப்படுபவையாக இருக்கின்றன.
ஒரு இயக்குனராக இருப்பதாய் விட சுலபமானது ஆய்வாளராக இருப்பது. ஆய்வாளர்களின் பணியை நான் திரையில் காட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால் தான் என்னுடைய படைப்புகளில் மானுடவியல் குறித்த ஆய்வுகள் மேல்நோக்கியிருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் வேரினை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு நான் சற்று உதவுகிறேன். எதற்காக இயக்குகிறார் என்பதற்கு ஜூலி தந்த பதில் இது.
இவருடைய பதில் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கிறது, படைப்பாளர்களை உத்வேகப்படுத்துகிறது.
இவருடைய எல்லாப் படைப்புகளையும் பார்க்கையில் நானா பேஜன்ட்டும், ஜூலி டாஷும் வேறல்ல என்றேத் தோன்றுகிறது.
(நீலம் இதழில் கறுப்புத் திரைத் தொடருக்காக எழுதியது)