எங்களுடைய ஊரில் ஒரு உப்பு வியாபாரியை அடிக்கடி பார்த்திருக்கிறேன். உமணர் என்கிற பண்பாட்டு பெயர் அவருக்கு உண்டு என்பதை சங்க இலக்கியத்தின் வழி தெரிந்துகொண்டேன். கல் உப்பு மட்டுமே விற்கக்கூடியவர். ஒற்றை மாடு பூட்டிய வண்டியில் வருவார். திருநெல்வேலி நகரின் சில பகுதிகளுக்கு மாதம் இருமுறை வருவது அவர் வழக்கம். உப்பு மிக அவசியமான ஒன்று. ஆனாலும்கூட அதனைக் கடைகளில் நாங்கள் வாங்கியதில்லை. சொல்லி வைத்தாற்போல உப்பு காலியாகும் முன் வந்துவிடுகிற இந்த உமணரிடம் தான் வாங்குவோம். தெருவில் அவர் நுழையும்போதே ‘உப்பேய்…’ என்று குரல் கொடுத்துவிட்டு தான் பயணித்த ஒற்றை மாட்டினை நிழலில் அமர்த்திவிடுவார். அங்கேயே உப்பு வியாபாரம் நடக்கும். கூடவே பக்கத்துத் தெருக்களிலும், ஊர்களிலும் நடக்கும் அத்தனை செய்திகளையும் சொல்லிவிட்டே கிளம்புவார். சுவாரஸ்யமான மனிதர். அவர் பேர் நினைவில் இல்லை அல்லது தெரிந்து கொள்ளாமலேயே காலங்கள் கடந்திருக்கலாம்.
“பாப்பா..அம்மாகிட்ட உப்பு வந்துருக்குன்னு சொல்லு” என்கிற அந்தக் குரல், இடுங்கிய கண்கள், உயரமான உருவம், தலைப்பாகை கட்டிய அந்தத் தோரணையுடன் இருந்த அவரை நேற்றிலிருந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
மல்லிகை மகள் ஆசிரியர் திரு ம.கா.சிவஞானம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் குறு வியாபாரிகள் குறித்த பேச்சு வந்தது. ஜிஎஸ்டி, கொரோனா, மழை வெள்ளம் போன்றவை முதலில் பழி வாங்குவது இந்த குறு வியாபாரங்களைத் தான் என்று வருத்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். அது குறித்து யோசித்தபடி இருந்ததால் ‘நான் இருக்கேம்ல..என்னை மறந்துடாத’ என்று உமணர் நினைவில் வந்திருக்கிறார்.
மலையில் வாழ்ந்த பழங்குடியினருக்கு உப்பு என்பது அரிதான பொருள். கடலைப் பார்த்திராத அவர்களுக்கு கடல் தரும் செல்வமான உப்பினை கொண்டு தருவதற்கென நுணுக்கமான வியாபாரச் சங்கிலி இருந்திருக்கிறது. உப்பு எடுத்து வரும் உமணர்கள் கடல் தொடங்கி பல்வேறு நிலவியல்களைக் கடந்து மலைக்குள் கொண்டு வருவது உப்பினை மட்டுமல்ல, நிலங்களின் அத்தனை செய்திகளையும் தான். அதன் தொடர்ச்சி ஈராயிரம் வருடங்கள் கடந்து என் கண் முன்னே நிகழ்வதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தான் உமணர் கொண்டு வந்த உப்பைப் போலவே அவர் சார்ந்த நினைவுகளும் என்னோடு கலந்துவிட்டிருக்கின்றன.
வெறும் ஒரு உப்பு வியாபாரியாக இல்லாமல் இன்றளவும் அவர் குறித்த நினைவுகள் என்னிடம் உள்ளன. அவர் குரலை இப்போதும் அப்படியே எனக்குள் கேட்க முடிகிறது. இன்று அவர் உப்பு விற்கிறாரா என்பது தெரியவில்லை. உப்புக்கு என தனியாக எப்போது விளம்பரங்கள் வெளியிடப்பட்டதோ அப்போதே அவருடைய வியாபாரம் என்னவாகியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
திநகரில் நான் வசித்தபோது எங்கள் குடியிருப்புக்கு அருகில் நாளிதழ்கள் விற்கும் பெட்டிக்கடை ஒன்று உண்டு. வியாழக்கிழமை தோறும் ஆனந்த விகடன் வாங்கியதில் கடைக்காரருடன் நட்பு உருவானது. அப்போது எழுத்தாளர், இயக்குனர் லீனா மணிமேகலை அவர்கள் ‘திரை’ என்கிற இதழ் நடத்தி வந்தார். தமிழில் திரைப்படங்கள் குறித்து வெளிவந்த தரமானதொரு இதழ் அது. அந்தப் புத்தகம் கிடைக்குமா என்று அந்தக் கடைக்காரரிடம் கேட்டதும், ‘ஒருநாள் பொருத்திருங்க’ என்றார். எங்கிருந்து வாங்கி வந்தார் எனத் தெரியவில்லை, மறுநாள் எனக்காக வாங்கிவைத்திருந்தார். அந்த இதழ் வெளியாவது நிற்பது வரை அவர் எனக்காக ஒரு பிரதியை எப்போதும் வாங்கி வருவார். இப்படி ஒரே ஒரு வாடிக்கையாளருக்காக அவர் மெனக்கிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஆனால் அவர் அதனை ஒரு கடமையென செய்தார்.
இந்தத் தொடர்பும், நட்பும் முக்கியமானது. சொல்லப்போனால் இந்த சமூகத்துக்கு இது அவசியமானது. இன்று அவர் அந்தக் கடையில் இல்லை. கடையே இல்லை. அங்கு வேறு எதோ கட்டடம் வந்துவிட்டது.
காலையில் செய்தித்தாளைக் கொண்டு சேர்க்கும் நபர் தொடங்கி காய்கறி, பூ, கீரை போன்றவறை வீடு வரை கொண்டு வந்து விற்பவர்கள் நமது அருமை தெரிந்தவர்கள். வாடிக்கையாளர்கள் என்பதைக் கடந்து அவர்களுக்கும் நமக்கும் ஒரு இணைப்பு உருவாகிவிடுகிறது. நம்முடைய நேரத்தினை மிச்சப்படுத்தி நமக்குத் தேவையான பொருட்களை வீடு தேடி வந்தும், நமது வீட்டருகிலேயும் நமக்குத் தரும் குறு வியாபாரிகள் மனித சமுதாயம் தன்னை பொருளியல் பயன்பாட்டுக்குப் பழக்கிக்கொண்ட காலத்தில் இருந்தே பயணிப்பவர்கள்.
சிறு, குறு வியாபாரிகளின் மற்றொரு அற்புதமான அம்சம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவது. எனது வாட்ச் ஒன்றின் பழுது நீங்கிட குறிப்பிட்ட ஒரு பொருள் தேவைப்பட்டது. அது கிடைக்க பல மணிநேரங்களையும், அலைச்சல்களையும் அந்த கடிகார கடைக்காரர் சந்தித்தார். அதற்கான கூலியாக அவர் வாங்கியது வெறும் நூறு ரூபாய். தன்னிடம் வந்த கடிகாரத்தினை சரிசெய்து தந்தோம் என்கிற திருப்தி மட்டுமே அவரிடம் இருந்தது. அதற்கான அலைச்சலையும், அதனால் ஏற்பட்ட நேரவிரயத்தையும் அவர் கணக்கில் கொள்ளவில்லை. கடிகாரம் பழுதாவது எனபது அடிக்கடி நேரக்கூடியதும் அல்ல. அதனால் தொடர்ந்து வாடிக்கையாளரைத் தக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கமெல்லாம் அவரிடம் இல்லை. தன்னிடம் வந்த வேலையை சரியாக செய்ய வேண்டும் என்கிற முனைப்பே அவரை செய்ய வைத்திருக்கிறது.
பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்காரர்கள் என்னுடைய பொறாமைக்கு உள்ளானவர்கள். புத்தகங்கள் குறித்த தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர்கள். இவர்களிடம் புத்தகத்தின் பெயரைச் சொன்னால் போதுமானது, தன்னிடம் இருக்கிறதா இல்லையா, இருந்தால் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் உள்ள அந்தக் கடையில் எந்த இடுக்கில் அந்தப் புத்தகம் வைக்கப்பட்டிருக்கும், ஒருவேளை அந்தப் புத்தகம் இல்லையென்றால் அது கிடைக்கக்கூடிய சாத்தியம் உண்டா என்பதையெல்லாம் சில நொடிகளில் நமக்கு சொல்லிவிடுவார். ஒரு புத்தகம் ‘best seller’ பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதை இவர்களை வைத்து தான் தீர்மானிக்க முடியும். ‘பிராண்டட்’ புத்தகக் கடைக்குள் எப்போது சென்றாலும் எந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேட்டாலும் இருக்கிறதா இல்லையா, அது எந்த அலமாரியில் இருக்கும் என்பதை கம்ப்யூட்டரைப் பார்த்து தான் ஒவ்வொரு முறையும் எனக்கு சொல்லியிருக்கிறார்கள் அந்தக் கடைகளின் பணியாளர்கள்.
கோயம்பேடு காய்கறி சந்தை மிகப்பெரியது. அங்கு கிடைக்காத காய்கறிகளே இல்லை. மொத்தமாகவும், சில்லறையாகவும் அனுதினமும் கோடிக்கணக்கில் வியாபாரமாகும் சந்தை. நூற்றுக்கணக்கான கடைகள். ஆனால் சந்தைக்கு வெளியேவும், காய்கறிகள் விற்பவர்கள் சிலர் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் முன்பு கூறுகட்டி காய்கறி வைக்கப்பட்டிருக்கும். நீண்டநாட்களாக எனக்கிருந்த சந்தேகம், இத்தனை பெரிய சந்தையில் இவர்களிடம் யார் வாங்குவார்கள் என்று இப்படி வெயிலில் ஒரு குடைக்குள் அமர்ந்து விற்கிறார்கள் என்பது. ஒருநாள் அரைமணிநேரம் நின்று யார் தான் இவர்களிடம் வாங்குகிறார்கள் என்று பார்த்தபோதும் அவர்களிடம் பேச்சு கொடுத்தபோதும் தெரிந்தது, இந்தக் காய்கறிகளுக்கென தனி வியாபாரம் உண்டு. எல்லாக் காய்கறிகளும் தலா ஒரு கிலோ மட்டுமே இவர்களிடம் இருக்கும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் வியாபாரம் முடிந்துவிடும். இவர்களிடம் காய்கறி வாங்குபவர்கள் தினக்கூலி பெறும் மக்கள். தினமும் காய்கறிகளை லோடு ஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்காக உருவாகிவிட்ட தனிச்சந்தை அது. சந்தைக்குள் குறைந்தபட்சம் கால்கிலோ மட்டுமே தரப்படும். தினக்கூலி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கால்கிலோ காய்கறியை வாங்க வேண்டிய சூழல் இருக்காது. நூறு கிராம் அளவு காய்கறி போதும் என்றாலும் கூட அதற்கானத் தீர்வாக இந்த நடைபாதை சந்தை அமைகிறது.
இப்படி வாடிக்கையாளர்கள் தேவையைக் கருத்தில் கொண்டு உலகம் முழுவதும் இந்த குறுவர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சிறு, குறு வியாபாரிகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் என்கின்றன புள்ளி விவரங்கள்.. அதிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகுந்த பாதிப்பினை அடைந்திருக்கின்றன இந்தத் தொழில்கள். இது சமூக வளர்ச்சிக்கு ஆபத்தானதாக மாறும் என்கின்றனர் பொருளாதாரம் அறிந்தவர்கள்.
திநகரில் ஒரு மணிநேரத்தில் ஐம்பது ரூபாய்க்கு சுடிதார் தைத்துத் தரும் கடைகள் எத்தனை பேருக்கு உதவியிருக்கிறது இல்லையா? திருப்பூர் தொழிற்சாலைகளில் இருந்து second sale என்று வருகிற உள்ளாடைகள் பிளாட்பார்மில் விற்கப்படும்போது அது பலருக்கும் பெரிய உபயோகமாய் இருந்தது.
ஆச்சரியம் என்னவெனில் இதனை முறைசாரா தொழில் என்று ஒதுக்கி இப்படி விற்பது சட்டப்படி குற்றம் என்பதாகவே சட்டம் இருந்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் தான் நடைபாதை, தள்ளுவண்டி தெரு வியாபாரங்கள் போன்றவை முறைபடுத்தப்பட்ட, சட்டத்துக்கு உட்பட்ட தொழில் என சட்டமியற்றப்பட்டிருக்கிறது.
நமது நாட்டுக்கு இந்தத் தெரு வியாபாரங்கள், பெட்டிக்கடை, தள்ளுவண்டிக் கடை போன்றவை ஈட்டித்தரும் பொருளாதார இலாபம் மிக அதிகம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அதேபோல் மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தனிமனிதர் வருமானத்துக்கு இந்த குறு வியாபாரங்கள் பெருமளவில் உதவுகின்றன என்கின்றனர்.
இந்த சந்தை பொருளாதாரம் குறித்து தெரிந்து கொள்ள நினைத்தபோது ராம்நாத் ஜா என்கிறவரின் ஒரு ஆய்வுக் கட்டுரை வாசிக்கக் கிடைத்தது. அதில் அவர் பலவற்றை சொல்கிறார். “ஒரு நகரத்துக்காக திட்டமிடும்போது அரசாங்கம் இந்த நடைபாதை வியாபாரிகளுக்காகவும் சேர்த்தே நகரத்தைத் திட்டமிட வேண்டும். இவர்கள் எளிய மக்களின் நம்பிக்கைக்கான தூதுவர்கள். ஆதலால் அரசாங்கம் மூளையில் இருந்து இல்லாமல் இதயத்தில் இருந்து நகரத்தை உருவாக்கவும் விரிவுபடுத்தவும் நவீனமயமாக்கவும் வேண்டும்’ என்றிருந்தார். அந்த ஆய்வுக்கட்டுரையில் நான் மிகவும் உணர்ந்து ரசித்த வரிகள் இவை.
தெருவியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குரலும், ஒரு ‘ரிதமும்’ இருப்பதைக் கண்டிருப்போம். தங்களுடைய பொருளுக்காக அவர்களே விளம்பரத் தூதுவர்களாக மாறியபின் கண்டடைந்த வழி அது. ஒரு பாடகரின் குரலை எங்கு கேட்டாலும் அடையாளப்படுத்திக் கொள்வது போல, இவர்களையும் நாம் குரல்வழி அடையாளம் காண்கிறோம். சில குரல்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் தேவை. ஆகையால், இந்தக்குரல்கள் எப்போதும் ஒலிக்கப்பட வேண்டும்.
Nice